Loading

யான் நீயே 17

வீரன், “மீனாள் எங்க?” என்று கேட்டிட… அங்கை அவளின் அறையை கை காண்பித்தாள்.

மேலே இருந்தது அவளது அறை. படிகளில் தாவி ஏறினான். வேட்டியை மடித்துக் கட்டியவனாக.

“ஏதும் பெரும் பிரச்சினையா அமிழ்தா? வசந்தி வூட்டுக்கு பத்திரிகை கொடுக்க போனவைய்ங்க கெளம்பியிருப்பாய்ங்களே! அவிங்களுக்கு போன் போடட்டுமா?” என்று கைகளை பிசைந்தபடி கேட்டார் மகா.

மருதனும், பாண்டியனும் நல்லானுக்கு பத்திரிகை வைப்பதற்கு, முன் அதிகாலையில் தான் சென்னைக்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.

“போனு போட்டா… உடனே வந்திடுவாய்ங்களா? சாயங்காலம் நாலு மணிக்குத்தேன் புறப்படுறதா ட்ரைவரை கேட்கும்போது சொன்னாரு. கெளம்பி ஒன்றை மணி நேரந்தேன் ஆவும். நீங்க இப்போ ஏதும் சொன்னாக்கா, என்னவோ ஏதோன்னு தவிச்சிகிட்டே வருவாய்ங்க” என்று படியேறியபடி பதில் கொடுத்த வீரன் “நானு என்னேன்னு கேக்குறேன்” என மீனாளின் அறை கதவை தட்டிட, கையை வைத்ததும் கதவு திறந்து கொண்டது.

மகாவும், அங்கையும் அவன் பின்னோடு வந்து நின்றனர்.

மீனாள் படுக்கையில் சுருண்டு படுத்திருக்க… அவளின் உடல் குலுங்கியதில் அழுகிறாள் என்பது தெரிந்ததும், மகாவை திரும்பி பார்த்தவன், பட்டென்று உள்ளே நுழைந்திருந்தான்.

“தங்கம்…”

வீரனின் குரல் கேட்டது தான் தாமதம், பாய்ந்து அவனின் இடையோடு அழுத்தமாகக் கட்டிக்கொண்டு அவனது வயிற்றினிலே முகம் புதைத்து சத்தமிட்டு அழத் தொடங்கிவிட்டாள்.

மகா பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.

“ஆத்தா மீனாளு…” மகாவின் குரலுக்கும் அவள் அசையவில்லை.

“ஐயோ என் கொலை நடுங்குதே. இப்புடி என்னன்னு சொல்லாமா அழுதாக்கா, நானு என்னத்தன்னு நெனக்க… கண்டதும் தோணுதே” என்று அவரும் கண்ணீர் உகுக்க… மீனாளின் அழுகை அதிகமாகியது.

“அச்சோ… அத்தை!” என்ற வீரனின் அதட்டலில்,

“ம்மா… நீயி கொஞ்சம் கம்மின்னு இரு. அதேன் மாமா கேட்டுக்கிறேன் சொன்னுதுல. செத்த வாப்பெட்டியை சாத்து” என்று மகாவை அமைதியுற செய்தாள் அங்கை.

மீனாளின் முதுகை தட்டிக்கொடுத்த வீரன்,

“மீனாம்மா… இங்க பாரு” என்று அவளின் தலையை உயர்த்த முற்பட, அவளின் பிடி இறுகியது. மாட்டேனென்று தலையை அசைத்து, முகத்தை இன்னும் அழுந்த புதைத்தாள்.

“நானு ஆத்தாவை வர சொல்லுறேன். எனக்கு வெதுக்குன்னு வருது” என்று மகா அறையை விட்டு வெளியே வந்து கீழே வர, மீனாட்சியும், அபிராமியும் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர்.

“என்னட்டி மொவம் வாட்டமா தெரியுறாப்ல இருக்கு?”

“உடம்புக்கு சொவமில்லையா மதினி?”

மீனாட்சியும், அபிராமியும் மாற்றி மாற்றி நலன் விசாரித்தனர்.

“புள்ளைக்கு செய்ய சொல்லியிருந்த நகையை இப்போதேன் ஆசாரி கொண்டாந்து கொடுத்திட்டு போனியான். உன்கிட்ட காட்டலான்னு அபி வந்தா(ள்). நாச்சியா தச்சி வந்த துணி சரி வரலன்னு, அவ வேலை பாக்குற கடைக்கே மருதைக்கு கெளம்பிப்போனா இன்னுமாட்டி வரல. வூட்டுல நா என்னத்த தனியா உட்கார்ந்திருக்கிறதுன்னு கூடால வந்துப்புட்டேன்” என்ற மீனாட்சி அப்படியே கால் நீட்டி தரையில் அமர,

“அமிழ்தன் வண்டி இங்குட்டு வெளிய நிக்குது. ஆளை காணுமாட்டிக்கு” என்றார் அபி.

மகா மீனாளின் அறையை மேல்நோக்கி பார்த்து… “அங்க அறையில இருக்கியான்?” என்று கூறியதோடு கண்ணீர் சிந்த…

“ஏய் என்னாட்டி… என்னத்துக்கு சொணங்குற?” என்று பதறி எழுந்தார் மீனாட்சி. அதற்குள் அபி மீனாளின் அறை வாயிலுக்கு சென்றார்.

அங்கை நின்றிருக்க, வீரனை கட்டிக்கொண்டு மீனாள் இருந்த தோற்றம் அவருக்கு தவறாக தோன்றவில்லை… மீனாளுக்கு என்னவோயென்று பதைபதைக்க வைத்தது.

“என்னாச்சு அமிழ்தா?”

“கொஞ்சம் கம்மின்னு இருங்கம்மா” என்ற வீரன், முரண்டு பிடித்து அழுது கொண்டிருப்பவளிடம் என்னவென்று கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“தங்கம்… இங்க பாரேன். என்னைய பாருடா! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடே… நான் பார்த்துக்கிடுதேன்” என்று வீரன் பலவாறு கேட்டும் அவளிடம் பிரதிபலிப்பு இல்லை.

வீரன் கேட்டுக்கொண்டிருக்க, மகாவும், மீனாட்சியும் அமைதியாக வந்து நின்றனர்.

“பிரிச்சு விலக்கி நாலு கன்னத்துலே கொடுத்து என்னமாட்டின்னு கேளு அமிழ்தா. நம்ம பயம் எங்குட்டு அவளுக்கு வெளங்குது” என்ற மாகாவை, “செத்த சும்மா இருங்க. இல்லை வெளிய போயி நில்லுங்க அத்தை” என்றுவிட்டான் வீரன்.

“என்னாச்சோ எதாச்சோ அவளே வெம்பிக்கிட்டு இருக்கா… நீயும் பேசி வைக்குற” என்ற மீனாட்சி தன் மகளை அமைதியாக இருக்க வைத்தார்.

“தங்கப்பொண்ணு… நிமிர்ந்து பாரேன்” என்று அவளின் தாடையை பிடித்து முகம் உயர்த்தி தன் முகம் காண வைத்தவன்,

“என்னன்னு சொல்லுடே… நீ இப்படி உக்கி அழுவுறது உள்ளுக்க என்னவோமாட்டி இருக்குடி…” என்றவன் சுற்றி இருப்பவரை அக்கணம் தன் கருத்திலே கொள்ளவில்லை.

வீரனின் உரிமையான டி என்ற விளிப்பை மூத்த பெண்கள் மூவரும் அர்த்தமாக ஆராய்ந்தனர். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டனர்.

வீரன் எப்போதும் அவளை தங்கம், தங்கப்பொண்ணு என்று தான் அழைத்து கேட்டிருக்கிறார்கள். இப்போது அவன் சொல்லி முதல்முறை கேட்ட டி விளிப்பில் அத்தனை உரிமை இருப்பதை அவனது வார்த்தையில் விளங்கிக்கொண்டனர்.

தன் இடையிலிருந்து மீனாளின் கையை பிரித்து விட்டவன், மெத்தைக்கு கீழே அவள் முன் குத்திட்டு அமர்ந்து… அவளின் கையை இறுகப்பற்றி,

“நம்மள பத்தி ஏதும் நெனச்சு வெசனப்படுறியா?” இருக்காதென்று தெரிந்தும் கேட்டிருந்தான்.

அவனது கேள்வி அவர்களுக்குள் என்னவோ இருக்கிறது என்பதை அங்கைக்கு புரிய வைத்திருந்த போது பெரியவர்களுக்கு புரிந்திருக்காதா என்ன?

“வேறென்ன?” என்றவன் தன் உள்ளங்கை கொண்டு அவளின் முகத்தை அழுந்த துடைத்து விட்டான். அழுததினால் முகம் முழுக்க முன்னுச்சி கேசம் கலைந்திருக்க, இரு பக்கமும் காதோரம் ஒதுக்கி விட்டவன், அங்கு மேசையிலிருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சமாக பருக வைத்தான்.

“காலேஜூல ஏதும் பிரச்சினையா?”

அவளின் அமைதியே அங்குதான் என்னவொயென்று எண்ண வைத்தது.

“பரீட்சை சரியா எழுதலயா?”

இல்லையென தலையசைத்தவள்,

“பிரண்ட்ஸ்க்குள்ள ஏதும் சலம்பலா?” என அடுத்து கேட்டிருந்தான்.

“இப்போ என்னன்னு சொல்லப்போறியா இல்லையா மீனாள்? மொக்கு பாப்பாவா நீயி. அவென் கேட்டுட்டே இருக்கியான். நீயி உம்முன்னே உட்கார்ந்திருக்க” என்று மகா சத்தம் போட,

“என்னன்னு சொல்லு கண்ணு, என்னேன்னவோ நெனைக்க தோணுதல?” எனக் கேட்டார் அபிராமி.

“நீயி நவுரு அமிழ்தா நானு கேக்குறேன்” என்று மகா முன்னே வர, வேகமாக வீரனின் தோளில் கை வைத்த மீனாள்,

“மாமா” என்று கேவிட…

“என்னன்னு சொல்லுடி… உள்ளுக்குள்ள ஒரே கொடைப்பா இருக்குது. மொத கண்ணுல வர தண்ணியை நிறுத்து. என்னவோ பண்ணுது என்னைய” என்று தன் நெஞ்சினை நீவியபடி சத்தமில்லாது அதட்டினான்.

வீரனின் முக வருத்தமும், அவனின் செய்கையும் அவனது மனதை பெண்களுக்கு படமாக்கிக் கொண்டிருக்க, அதனை உணரும் நிலையில் வீரன் இல்லை. மொத்தமாக மீனாளின் அழுகையில் தன் சுயம் தொலைத்திருந்தான்.

அத்தனை நேரம் அவனின் கெஞ்சலுக்கு இல்லாத பலன் அவனது அதட்டலுக்கு இருந்தது.

ஒரே மூச்சில் அனைத்தையும் வேகமாக அழுகையோடு சொல்லி முடித்தவள் வீரனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.

“அங்குட்டு அவென் பேசும்போதே அமிழ்தனுக்கு போன போட்டிருக்க வேண்டியதுதானே மீனாள். அவென் ரெண்டு நிமிசத்துல அங்கன வந்து அந்தப்பயல பொளந்து கட்டியிருப்பியான்ல” என்று அபிராமி கோபப்பட…

“இது ஆத்திரப்பட வேண்டிய விசயமில்லட்டி” என்றார் மீனாட்சி.

“இம்புட்டுதானே… இதுக்கா இம்புட்டு அழுவ? ஒண்ணுமில்லை, நானு பாத்துகிடுதேன்” என்ற வீரன், அவளின் கையில் தட்டிக் கொடுத்தவனாக…

“இனி இதைக்கேட்டு அவளை தொந்தரவு பண்ணக்கூடாது” என்றான்.

“அந்தப்பய யாரு என்னான்னு விசாரிக்க வேண்டாமா? காலேஜுல எல்லாரும் பார்க்க பேசியிருக்கியான். கைய வேற புடிச்சிருக்கியான். அங்கிருந்த வாத்தியெல்லாம் என்ன பண்ணுச்சு. இதுங்களை நம்பி புள்ளைவளை எப்படி அனுப்புறது” என்று மகா தன்போக்கில் புலம்பிட, வீரன் அபிக்கு கண் காட்டினான்.

“அதேன் அமிழ்தன் பார்த்துகிடுதேன் சொல்லிப்புட்டானே. பொறவு என்னத்துக்கு பொலம்பிட்டு இருக்க. அவென் பார்த்துப்பியான் மதினி” என்று அபி மகாவை வெளியே கூட்டிச்செல்ல…

மீனாட்சி பேரனின் முகத்தையே அவதானித்தபடி நின்றிருந்தார்.

‘புள்ளைங்க விருப்பம் தெரியாம தப்பா முடிவெடுத்துபுட்டோமோ?’ என்று தீவிர சிந்தனையில் இருந்தார்.

“சின்னக்குட்டி டீ வாங்கியா?” என்றவன், “என்னாச்சு அப்பத்தா?” எனக் கேட்டான்.

“ஒன்னுமில்லைப்பு… நீயி புள்ளைய பாரு” என்றவர் அங்கையுடன் வெளியில் செல்ல… செல்லும் அவரின் முகத்தில் விழுந்திருந்த சிந்தனையை கவனித்த வீரன் அதனை ஒதுக்கி வைத்தான்.

“அச்சமா இருக்கு மாமா!” என்று மீனாள் மீண்டும் அழுதிட தயாராக…

“இன்னொருவாட்டி கண்ணுல தண்ணீ தேங்குச்சு… சப்புன்னு ஒன்னு வச்சிப்புடுவேன்” என்று வீரன் அவளின் அருகில் அமர்ந்தான்.

அவனது மடியில் தலை வைத்து உடலை குறுக்கிப் படுத்தவள்,

“அவென் என்னையவே…” விசும்பியவள் “அவென் கையை புடிக்க வச்சிபுட்டான் மாமா. அருவருப்பா இருக்கு” என்றவள், கண்களை மூடிக்கொள்ள…

அங்கை வந்து தேநீரை கொடுத்துச் சென்றாள்.

“அழுதது மொவமெல்லாம் செவந்துப்போச்சு. தலை வலிக்கும், எந்திரிடாம்மா. இதை குடி” என்று மெல்ல அவளை எழுப்பி குடிக்க வைத்தான். மீண்டும் அவன் மடியிலே தஞ்சம் புகுந்தாள்.

மீனாளின் உடல் வெளிப்படையாகவே நடுங்கிக் கொண்டிருந்தது.

மெல்ல தட்டிக் கொடுத்து அவளை சமன் செய்தான்.

“அவென் அப்பா யாருன்னு சொன்ன?” எனக் கேட்டான் வீரன். அவளின் தலையை கோதி விட்டபடி இருந்தான்.

“சிமெண்ட் பேக்டரி வச்சிருக்காரே” என்றவள்,

“அவென் பொண்டாட்டினு சொன்னியான் மாமா. அவன்பாட்டுக்கு என்னென்னவோ பேசுறியான். கழுத்தை புடிச்சு தூக்குறான்” என்று நடந்ததையே அரற்றியபடி இருந்தவளின் சத்தம் மெல்ல குறைந்தது.

வீரனின் அருகாமையில் பாதுகாப்பை உணர்ந்தவள் தன்னையறியாது உறங்கியிருந்தாள்.

மீனாளின் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்தவன், அவளின் தலையை தலையணைக்கு மாற்றிவிட்டு படுக்கையிலிருந்து இறங்க…

அவனின் கையை பட்டென்று பிடித்திருந்தாள்.

வீரன் அவளின் முகத்தை பார்க்க, நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

“என்னையவுட்டு போவாத மாமா. பயமா இருக்கு.

“நான் உன் தங்கப்பொண்ணுதேன மாமா?” என தூக்கத்தில் பிதற்றிட,

மீண்டும் அருகில் அமர்ந்து அவளின் முன்னெற்றி கோதியவன் அவள் அமைதியாகியதும், நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து வெளியில் வந்தான்.

“அப்பு… மீனாள்?”

“உறங்கிட்டா(ள்) அப்பத்தா” என்ற வீரன், “வரவரைக்கும் இங்கயவே இருங்க” என்றவனாக, அவர்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லாது வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்திருந்தான்.

வீரன் செல்லும் வேகத்தை கண்ணுற்றவர்கள்,

“புள்ளைங்க மனசை புரிஞ்சிக்காம இருந்துட்டமோ?” கேட்டவாறு மீனாட்சி வீட்டு திண்ணையில் தூணில் சாய்ந்தவராக அமர,

“எனக்கு உங்க முடிவுல விருப்பமில்லைன்னு சொன்னேன். மீனாளுக்கும் வீரனுக்குந்தேன் பொருத்தமின்னு சொன்னாக்கா எம் பேச்சை யாரு கேட்டீய்ங்க!” என்று அபிராமி அங்காலாய்ப்பாக பேச,

“ஆறுதலுக்கு அவனை தேடியிருந்தாலும், உரிமையா ஒட்டிக்க மனசுல விருப்பம் இருக்கணுந்தேனே ஆத்தா. ரெண்டும் ஒன்னுமண்ணா நிக்கும் போது என் கண்ணே நெறைஞ்சுபோச்சு ஆத்தா. அவிங்க வந்ததும் பேசணும்” என்று மகா கூறினார்.

“அவசரப்படாத மகா. மருதன் அமிழ்தன்கிட்ட கேட்டுப்போட்டுதேன் வசந்திக்கு முடிவு சொன்னியான். அப்படியொரு எண்ணமிருந்தாக்கா, அமிழ்தனுக்கு நேரடியாவே கேட்க தைரியமிருக்கு. புள்ளைவளுக்கு அமிழ்தன்தேனே எல்லாம். அந்த பாசத்துல ரெண்டும் மருகினதை நாம தப்பா புரிஞ்சிக்கிட்டதா ஆகிப்புடக்கூடாது” என்று பொறுமையாக எடுத்துக்கூறிய மீனாட்சிக்கு பேரனின் மனம் நன்கு தெரிந்துதான் இருந்தது.

*************

நேரம் இரவு பதினொன்றை கடந்திருந்தது.

வீரன் எங்கு சென்றான்? லிங்கம் ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை? காரணம் தெரியாது பெண்கள் அமர்ந்திருக்க…

“இம்புட்டு நேரமாச்சே. எல்லாரும் உறங்குங்க. வர நேரம் வரட்டும்” என்று மீனாட்சி சொல்ல, அவரவர் அப்படியே கூடத்திலே படுத்துக்கொண்டனர்.

“அண்ணே ஏதோ கோபமா வந்தமாறி இருந்துச்சு அப்பத்தா. அண்ணே என்னைய பஸ் ஏத்திவுட்டு வூட்டுக்கு போனதும் மெசேஜ் பண்ணுன்னு சொன்னாய்ங்க. நான் பண்ண மெசேஜும் பார்த்துட்டாய்ங்க. நம்ம மருதையில தானே இருக்காய்ங்க, வெசனப்படமா இருங்க” என்று அனைவருக்கும் திடமாக பேசிய நாச்சி, மீனாளை சென்று பார்த்துவிட்டு வந்து, முற்றத்தில் வான்வெளியை பார்த்தவாறு படுத்திருந்த அங்கையுடன் படுத்துக்கொண்டாள்.

“உறங்காம என்னட்டி வானத்தை வெறிச்சிட்டு இருக்க?”

“மதினி… வீரா மாமாக்கும் அக்காவுக்கும் கல்யாணம் ஆச்சுதுன்னா நல்லாயிருக்கும்ல?” என்று அங்கை கேட்டது அந்த நிசப்தமான இரவில் கூடத்தில் படுத்திருந்த மூத்த பெண்களுக்கும் கேட்கவே செய்தது.

தலையை உயர்த்தி பெரியவர்களை கவனித்த நாச்சி…

“இதை நீயோ நானோ முடிவு பண்றது இல்லை சின்னக்குட்டி. நீயி உறங்கு” என்று கண்களை மூடிக்கொண்டாள்.

பிரேமிடமிருந்து அழைப்பு வர,

வேகமாக அலைப்பேசியை எடுத்து அழைப்பை துண்டித்தவள்,

“உங்க வூட்டுலதேன் எல்லாரும் ஒட்டுக்கா படுத்திருக்கோம். இன்னைக்கு பேச முடியாது” என்று தகவல் அனுப்பி வைத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.

“ராவுலாம் ஒரே லவ்சூதானே மதனி?”

அங்கை போர்வைக்குள் சென்று நாச்சியின் காதில் கிசுகிசுக்க…

“நிலைம புரியாம நீப்பாட்டுக்கு வெளாடிட்டு இருக்க அங்கை” என்றாள் நாச்சி.

“வீரா மாமா பாத்துக்கும். என்னத்துக்கு எதையும் நெனச்சு வெசனப்படனும்?” அங்கை கேட்டது அனைவருக்கும் கேட்டிட, வீரன் என்ற பெயர் அமைத்திக்கொள்ளச் செய்ய கண்ணயர்ந்தனர்.

*****

வீரன் அதிவிரைவாக வந்து சேர்ந்தது அவர்களது தலைமை ரெசிடன்ஷியல் ஹோட்டலிற்குதான். இந்த வேகம் எதனால் என்பது, சில நிமிடங்களுக்கு முன்னால் நடந்த ஒன்றென்று அவன் மட்டுமே அறிவான்.

அந்நேரத்திலும், உணவு பகுதி கூட்டம் நிரம்பி வழிந்தது.

கொண்டாட்டம் நடைபெறும் ஹாலில், யாரோ ஒருவரின் திருமண வரவேற்பு விமர்சையாக நடந்து கொண்டிருக்க… ஹோட்டல் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது.

மாலை போல் மற்ற கிளை ஹோட்டலிற்கு மேற்பார்வைக்கு சென்ற லிங்கம், நாச்சியின் அழைப்பில் தான் அங்கு வந்தான்.

நாச்சி ஆடை அலங்கார தையல் கடைக்கு சென்றிருந்தாள். அவளுக்கு சொந்தமாக கடை ஆரம்பிப்பதற்கு முன், முன் அனுபவம் வேண்டுமென வீரன் பேச்சைக் கேட்டு அதே கடையில் வேலைக்கும் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அழைத்த வீரன் வேலை முடிந்ததும் ஹோட்டலிற்கு வரக் கூறினான்.

அவர்களது ஹோட்டலுக்கு பக்கத்தில் தான் அந்த கடை என்பதால் நாச்சி விரைந்து தன் வேலையை முடித்துக்கொண்டுவர,

“இந்நேரம் வரணுமின்னு என்ன அவசியம் நாச்சியா. நாளைக்கு லிங்கு கூட வந்திருக்கலாமே?” என்று கடிந்துகொண்டான் வீரன்.

“சாரிண்ணே… இன்னும் அஞ்சாறு நாலுதேன் இருக்கு. இப்போ குடுத்தாதேன் சரியா இருக்குமின்னு வந்துபுட்டேன்” என்று திணறி பதில் வழங்கியவள்,

“ஏதும் சலம்பலாண்ணே?” என்று கேட்க, வீரன் பார்த்த பார்வையில் கப்சிப்.

அதன் பிறகு வீரன் மணியை பார்ப்பதும், பாண்டியனுக்கு அழைத்து எங்கு வருகிறார்கள் என்று விசாரிப்பதுமாக, அலுவலக அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, நாச்சி லிங்கத்திற்கு தகவல் அனுப்பினாள். அங்கு வருமாறு. அவனும் சில நிமிடங்களில் வந்திருந்தான்.

லிங்கம் வந்ததும் ஒரு பார்வை பார்த்தானே தவிர வீரன் எதுவும் பேசவில்லை. யாருக்கோ அழைப்பதும் பேசுவதுமாகவே இருந்தான்.

“எனக்கு எந்நேரமானாலும் இந்த நைட்டுக்குள்ள பார்க்கணும்.” வீரனின் குரலில் அத்தனை கட்டளை.

அவன் பேசி முடித்து வைத்ததும்.

“யாரண்ணே பார்க்கணும்?” என்ற லிங்கத்தின் கேள்விக்கு, அவனிடம் பதிலில்லை.

அவனின் கோபம் எதனால் என்பது தெரியாமல், லிங்கமும், நாச்சியும் விழித்தபடி நின்றனர்.

“என்னண்ணே வந்ததுலேர்ந்து விறைப்பா உட்கார்ந்திருக்க? ஒன்னும் பேசமாட்டேங்கிற?” லிங்கம் கேட்டிட,

“நாச்சியை பஸ் ஏத்தி வுட்டுப்போட்டு… ட்ரைவர்கிட்ட சொல்லி அனுப்பிட்டு வா” என்று லிங்குவிடம் கூறினான் வீரன்.

“அத்தை வூட்டுக்கு போ நாச்சியா” என்ற வீரன், “போனதும் ஒரு மெசேஜ் போடு. எல்லாரையும் உண்க வச்சிப்புடு” என்று தங்கையிடம் சொல்லி அனுப்பினான்.

வீட்டிற்கு வந்து தகவல் அறிந்த பின்னர் தான், வீரனின் கோபம் நாச்சிக்கு புரிந்தது.

ஆனால் லிங்கம் மணி பத்தாகியும் என்ன விடயமென்று தெரியாது, வீரனின் முன் அவன் முகம் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“பெரிய சம்பவமாண்ணே?” லிங்கத்தால் விடயம் என்னவென்று தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

வீரன் இந்தளவிற்கு கோபம் கொண்டு முதன் முதலில் பார்த்தது, பிரேம் நாச்சியிடம் நடந்துகொண்ட முறைக்குத்தான். அதன் பின் இன்று தான். இன்று அதைவிட அதீத கோபமென்றே லிங்கத்திற்கு தோன்றியது.

சிறிது நேரத்தில் வீரனுக்கு ஒரு அழைப்பு வந்திட, எடுத்து பேசியவன் அடுத்து யாருக்கோ அழைத்தான்.

“முழு டீட்டெயில் எனக்கு வேணும். வித் இன் வன் ஹவர்” என்று அழுத்தமாகக் கூறிய வீரன் “லீகள், இல்லீகள் எல்லாம் வேணும்” என்றான்.

“அண்ணே என்னன்னு சொல்றியா? நீயி பேசுறதை பாக்க அச்சமா வருது” என்ற லிங்கத்திடம்,

“சொல்றேன். மாமா, ஐயா வந்திடட்டும்” என்றான்.

உடனே லிங்கம் பாண்டியனுக்கு அழைத்து “இன்னும் எம்புட்டு நேரமாவும்?” எனக் கேட்டான்.

“ஒரு மணி நேரமாவும் போல லிங்கு” என்று அவர் சொல்ல…

“ஒரு மணி நேரமா?” என்றான் அதிர்வாய்.

“நேரா இங்கன வர சொல்லு” என்று வீரன் கூற, அவன் சொன்னதை செய்தான் லிங்கம்.

“நீயி போயி உண்கிட்டு வாடே!” என்ற வீரனிடம் மறுக்க முடியாதென்று முறைத்துக்கொண்டு சென்று உண்டுவிட்டு, வீரனுக்கும் உணவு கொண்டு வந்திருந்தான்.

“நான் கேட்டனாடே?”

“என்னமோ பெருசா நடக்குமாட்டி தோணுது. சமாளிக்க தெம்பு வேணாமா. உண்குண்ணே” என்று அவன் முன் உணவினை எடுத்து வைக்க, எதுவும் சொல்லாது சாப்பிட்டு முடித்தான்.

அந்நேரம் அங்கு வந்த மேனேஜர்,

“பார்ட்டின்னு புக் பண்ணியிருந்த பசங்க… ஏதோ சலம்பிக்கிட்டு இருக்கானுவ சார்” என்று கூற, லிங்கம் அங்கு விரைந்தான்.

நேரம் சென்றும் லிங்கம் வரவில்லையென வீரன் இருக்கையிலிருந்து எழ, அவனுக்கு தகவல் வந்திருப்பதற்கான சத்தமிட்டது அலைப்பேசி. மீண்டும் அமர்ந்தவன், தகவலை திறந்து பொறுமையாக பார்த்திட்டான்.

அவன் பார்த்து முடிக்க,

“சார்… லிங்கம் சார் உங்களை கூப்பிடுறார்” என்று வந்தார் சிப்பந்தி ஒருவர்.

விரைந்து அங்கு சென்ற வீரன், அவ்வறை இருந்த தோற்றம் கண்டு…

“ஒன்பது மணிக்கு மேல ட்ரிங்க்ஸ் பார்ட்டி நம்ம ஹோட்டலில் அலோவ்ட் இல்லையே லிங்கு?” என கோபமாகவே கேட்டான்.

“பரீட்சை முடிஞ்சு, படிப்பும் முடிஞ்சுது. பிரண்ட்ஸ் செலபிரேஷன்… இனி எப்போ மீட் பண்ணுவோம் தெரியாது. ஃபேர்வெல் மாதிரின்னு சொல்லி மினி ஹால் கேட்டானுவண்ணே. கேக்கும்போதே எல்லாம் சொல்லித்தேன் வச்சேன்… பொண்ணுங்களாம் போயாச்சு போல. பசங்களும் கொஞ்சம் பேர் போயிட்டானுவ. இவன் குருமூர்த்தி பையனாம்” என்று லிங்கம் அந்த பையனை கைகாட்டிட வீரன் அவனை கூர்ந்து நோக்கினான்.

“கெளம்பாம அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கியான். அவனோட நாலஞ்சு சில்வண்டும் சலம்பிட்டு நிக்குது” என்ற லிங்கம், “பொறுமையா எம்புட்டோ சொல்லிப்புட்டேன் கேக்க மாட்டேங்கிறானுவ… இவென் ஐயா பெரிய ஆளாம். அரசியல் சப்போர்ட் இருக்காம். அந்தல சந்திலி ஆக்கிப்புடுவோம் பார்த்துக்கன்னு இதுங்கலாம் அவனை கொம்பு சீவி வுடுதுங்க” என்றான்.

“அவென் அதுக்கு மேல… பின்னாடி இந்த ஹோட்டலே அவனுக்கு உரிமை உள்ளதா ஆவப்போவுதுன்னு ஓவரா துள்ளுறான்” என்ற லிங்கம், “அதேன் உன்னைய கூட்டியாற சொன்னேன்” என்றான்.

“இவரு என்ன பெரிய இஸ்க்கா… இவரு வந்தாக்கா அஞ்சி ஓடிப்போவோமா நாங்க” என்று ஒருவன் தெனாவெட்டாகக் கேட்டு வீரனின் முன்வர, வீரன் சப்பென்று வைத்த ஒரு அறைக்கு பல சுற்று சுற்றி சுருண்டு விழுந்தவனின் நிலை கண்டு மற்றவர்கள் அவனை இழுத்துக்கொண்டு தெறித்து ஓடினர்.

அந்த ஒருவன் மட்டும் வீரனை உற்று நோக்கினான்.

“உன்னையத்தேன் அவளுக்கு ரொம்ப புடிக்குமாமே!” என்று வீரனிடமும், “நீயிதேன அவ கையை புடிச்சிக்கிட்டு கடைவீதியை சுத்தி வந்தது?” என்று லிங்கத்திடமும் வினவினான் அவன்.

“உம்ம குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிச்சிட்டேன்.”

“தெளிவா இருக்கியா நீயி?” வீரன் கேட்டிட,

“எனக்கென்ன… இன்னும் நாலு லார்ஜ் உள்ளப்போனாலும் ஸ்டெடித்தேன் நானு” என்ற அவன், “ஒன்பது மணிக்கு மேல ட்ரிங்க்ஸ் இல்லைன்னு கொடுக்கமாட்டேன்னுட்டானுவ. என்ன ஹோட்டல் நடத்துறீங்க?” என்று கேட்டு முடிக்கும் முன் அவன் மூக்கிலே ஓங்கி குத்தியிருந்தான் வீரன்.

ரத்தம் கொட்டியது.

“அய்யோ ரத்தம்!” அவென் பயந்து அலற,

“நானே உன்னைய தூக்கலான்னு பிளான் போட்டாக்கா… நீயே தொக்கா வந்து மாட்டிக்கிட்டியே பங்கு” என்ற வீரன், அவனின் கையை பிடித்து முறுக்க…

“அண்ணே என்ன பண்றீய்ங்க?” என்று வீரனை தடுக்கப்பார்த்தான் லிங்கம்.

“பொம்பளை புள்ள கழுத்தை புடிச்சு எத்துவியோ நீயி?” என்று லிங்கத்தின் மறுப்பை கண்டு கொள்ளாது, அவனை சுவற்றில் சாய்த்து மேலே தூக்கியிருந்தான் லிங்கம்.

அவன் விழிகள் பிதுங்கி இறும்பிட…

“அண்ணே விடுண்ணே. அவென் கண்ணு சொருகுது” என்று பதறினான் லிங்கம்.

லிங்கத்தின் பதற்றத்தில் அவனை கீழேவிட்ட வீரன்,

“இந்த கையைத்தானே புடிக்க சொல்லி சொன்ன” என்று அவனது வலது கை விரல்களை பின்னோக்கி வளைத்தான்.

அவன் வலியில் துடிக்க…

“அவ… எம் பொண்டாட்டிடே, இப்போ இல்ல, அவ பொறந்ததும் முடிவானது. அது தெரியாம இந்த வாயி என்னவெல்லாம் சொல்லிருக்கு” என்று அவனது வாயிலேயே சரமாரியாக நாலைந்து குத்து விட்டான் வீரன்.

வீரன் சொல்லியதில் அதிர்ந்த லிங்கம்,

“மீனா கிட்ட என்ன வம்பு பண்ணியான் இவன்?” என்று கோபமாகக் கேட்க,

“சாரு நாளைக்கு பொண்ணு பார்க்க வாராறாம். நாம ஒத்துகிடனுமாம்” என்று வீரன் மேலோட்டமாக அனைத்தையும் கூற, லிங்கத்திடம் நாலு வாங்கிக்கொண்டான் கோகுல்.

ஆம் அவன் கோகுல். நண்பர்களுக்கு கல்லூரி படிப்பை முடித்ததற்காக பார்ட்டி என்று அங்கு அழைத்து வந்திருந்தான். வசமாக வீரனிடம் தானாக மாட்டியும் கொண்டான்.

அந்த ஹாலில் மேனேஜருடன் சேர்த்து அவர்கள் நால்வரை தவிர்த்து யாரும் இல்லாது போக,

“இவனை இங்குட்டே கட்டி போடுங்க பிரசாத் சார். நான் சொல்லும்போது விடுங்க. இப்போ இந்த ஹாலுக்கு பூட்டை போடுங்க. யாரையும் உள்ளே விடாதீங்க. இவனை வச்சு ஆட்டம் ஒன்னு இருக்கு” என்றான்.

அந்த ஹாலில் சர்வீஸ்க்கு இருந்த அனைத்து ஊழியர்களையும், வீரன் அங்கு வந்ததுமே பார்வையால் வெளியேற்றியிருந்தான்.

மேனேஜர் பிரசாத், வீரன் சொல்லியதை செய்திட, லிங்கத்தைக் கூட்டிக்கொண்டு அலுவலக அறைக்கு வந்த வீரனிடம்…

“இன்னும் வேறென்னவோ நடந்திருக்குமாட்டிருக்கேண்ணே?” என்று சந்தேகமாக கேட்டான் லிங்கம்.

வீரன் இந்த கேள்விக்கு தன் தம்பியை ஆழ்ந்து நோக்கினான். அவனது கண்களில் ஜூவாலையின் தகிப்பு.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 36

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
37
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. பழையதை நினைத்து எவ்வளவு வீராப்பு காட்டினாலும் –

    தாங்காத பிரச்சினையின்போது அவனை மட்டுமே தேடுது தங்கப்பொண்ணு !!!

    1. Author

      அதுதானே காதல் 😍😍😍

  2. அதான யார் கிட்ட வீரா கிட்டயேவா … வச்சு செஞ்சான் பாரு … இன்னும் வேறென்ன பிரச்சனை இருக்கு தெரியலையே … ஒரு டவுட் இருக்கு … பார்க்கலாம் …

    1. Author

      கணிக்க முடியாத பிரச்சினையா இருக்கும் sis

    1. Author

      என்னவா இருக்கும் 😁😁

  3. பெரியவங்க, சின்னவங்க எல்லோருக்கும் வீரன் மனசு தெளிவா புரிஞ்சிடுச்சு.

    மீனாளுக்கும் கஷ்டமா இருந்தாலும் வீரன் அரவணைப்பில் தான் தனக்கு நிமம்தினு புரிஞ்சிடுச்சு.

    வீரன் மனசு புரிஞ்சாலும், “அவன்கிட்ட கேட்டபிறகு தானே மருதன் முடிவு சொன்னான். அப்போ எதனால தன் மனச வீரன் சொல்லாம இருக்கான்?” என்ற யோசனையில் மற்றவர்களையும் எதையும் கேட்டுக்கவோ சொல்லவோ வேணாம்னு சொல்லிட்டாங்க.

    “வீரன் பார்த்துப்பான்” எல்லோரோட தைரியம் வீரன் தான்.

    உனக்கு சொந்தமாக போற ஹோட்டலா கோகுல்? நீயாவே வந்து வகையா மாட்டிக்கிட்டியே!

    யாருக்கும் மன சங்கடம் ஆகாம இந்த பிரச்சனை முடியுமா? இல்லை மீனாளின் கல்யாணத்தை விரைவாக செய்ய எண்ணுவார்களா?

    1. Author

      கல்யாணம் சீக்கிரம் சிறப்பாவே நடக்கும்