
“சரி அப்போ அவரோட சொந்த அத்தை பொண்ணே, போன் பண்ணி என்கிட்ட கதறி அழுதுச்சே, அதோட இன்னைக்கு என்னை ஆத்தங்கரையில பார்க்க வர்றதாகவும் சொல்லி இருக்கு.”
“சரி விடு அந்த பொண்ணு தான், உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கு இல்ல, அது பேசறதை வெச்சே இது உண்மையா பொய்யான்னு நாம கண்டுபிடிச்சுக்கலாம்.
பயப்படாத தன்யா, கண்டிப்பா உன் வாழ்க்கை தப்பா போக, நான் விட மாட்டேன். இது ஒரு உயிர் தோழியா என்னோட ப்ராமிஸ். ஒருவேளை அந்த மாப்பிள்ளை கெட்டவரா இருந்தா, இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியது என்னோட பொறுப்பு.
சரி நீ சாப்பிட்டு கிளம்பு, அடுத்து ஆத்தங்கரைக்கு போகணும்னு, இப்ப தான் அம்மா சொல்லிட்டு போனாங்க. நானும் உன் கூட வரேன், அந்த மாப்பிள்ளையோட அத்தை பொண்ணு கிட்ட நானே பேசி பார்க்கறேன்.”
அதற்குள் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ரிதன்யாவின் தாய், ஒரு பட்டு சேலையை நிலாவின் கைகளில் கொடுத்து உடை மாற்றி வரச் சொன்னார்.
“எதுக்கும்மா இதெல்லாம்?”
“என்ன இப்படி சொல்லிட்டே நிலா, நாங்க ரிதன்யாவையும் உன்னையும் வேற வேறயா பிரிச்சுப் பார்க்கல.
அவளுக்காக கல்யாணத்துக்கு புடவை எடுத்த போது கூட, அதே மாதிரியே உனக்கும் சேர்த்து தான் எடுத்தோம். நாளைக்கு முகூர்த்த புடவையும் ஒரே கலர்ல தான் எடுத்திருக்கோம் சரியா, சீக்கிரமா டிரஸ் மாத்திட்டு ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.
மாப்பிள்ளையோட அத்தை ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. என்னன்னு தெரியல வந்ததுல இருந்தே அவங்க முகம் கோவமா தான் இருக்கு. லேட் பண்ணாம சீக்கிரம் கிளம்பி வாங்க.”
வேறு வழி இன்றி அதை மாற்றிக் கொண்ட நிலா, உணவை முடித்துக் கொண்டு ரிதன்யாவோடும் அவள் உறவுகளோடும் ஆற்றங்கரைக்கு புறப்பட்டாள்.
ஆற்றில் மூழ்கி எழுந்து வருமாறு நிலாவையும், ரிதன்யாவையும் அனுப்பி வைத்தவர்கள், விநாயகர் கோவிலில் காத்திருந்த மணமகன் வீட்டாரை கவனிக்கச் சென்று விட, தோழிகள் இருவரும் ஆற்று நீரில் மூழ்கி எழுந்து விட்டு, கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
சற்று தூரம் சென்ற பிறகு, ரிதன்யாவிற்கு கரையில் தனது போனை வைத்தது நியாபகத்திற்கு வர, அவள் தானே எடுத்து வருவதாகக் கூறிச் சென்றாள். நிலா மெதுவாக நடந்து ஒரு ஆலமர நிழலில் தோளில் டவளோடு நின்று கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென ஒரு பெண், அவளது கால்களில் விழுந்து கதறி அழத் தொடங்கினாள்.
நிலா ஆற்றங்கரைக்கு வரும் வழியில் ஊர்க்காரர்கள் பேசிக் கொள்வதையும், விஜயா தன் உறவுகளிடம் புலம்பிக் கொண்டிருந்ததையும் கேட்டபடியே தான் இருந்தாள்.
ரிதன்யா கூறியது போல அவன் அந்த பெண்ணை தங்கையாக நினைத்து, திருமணத்திற்கு மறுத்ததாக கிடைத்த தகவல் உண்மை தான் என்று தெரிய வர, ஒருவேளை மாப்பிள்ளையை பற்றி கேள்விப்பட்ட விஷயங்களும் உண்மையாக இருக்குமோ என்ற ஐயம் தோன்றியது.
திருமணத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், மாப்பிள்ளையை பற்றி ஊராரிடமும் உறவுகளிடம் விசாரித்தால், அது வேறு வகையில் பிரச்சனையை திசை திருப்பி விடும் என்பதால், எப்படி உண்மையை கண்டறிவது என்ற சிந்தனையோடு நிலா மரத்தின் அடியில் நின்று கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு பெண் அழுது கொண்டே அவளது கால்களில் விழ, பதறிப் போய் பின்னால் நகர்ந்தாள்.
“என்னமா பண்ற நீ? முதல்ல எழுந்திரு, எதுக்காக இப்படி என் காலப் பிடிச்சுட்டு அழுதுட்டு இருக்க?”
“எனக்கு வாழ்க்கை கொடுங்கக்கா, என் வயித்துல வளர்ற குழந்தைக்கு அடையாளத்தை கொடுங்க.”
நிலாவிற்கு புரிந்து விட்டது இவள் தான் ரிதன்யா சொன்ன, மாப்பிள்ளையின் அத்தை மகளாக இருக்க வேண்டும், தன்னை மணமகள் என்று நினைத்து விட்டாள் போல,
“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? கல்யாணத்துக்கு முன்னாடி சொந்தக்காரனே ஆனாலும், எவ்வளவு லிமிட்ல பழகணும்னு உனக்கு தெரிய வேணாம், இப்ப என் முன்னாடி வந்து நின்னு, அதுவும் கல்யாணத்துக்கு முன்னத்த நாள் இப்படி அழுதா ஆச்சா?”
“அவர் இந்த ஊர்ல இருக்க நிறைய பொண்ணுங்களோட பழகி இருக்காரு, அதை எல்லாம் மறந்துட்டு என் கூட உண்மையா வாழ்வேன்னு, அவங்க அம்மா மேல சத்தியம் பண்ணினாரு. அதை நம்பி நான்…நான்…அவரோட ஆசைக்கு இணங்கிட்டேன்.
ஆனா இப்போ பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க போறார். என் வயித்துல வளர்ற குழந்தைக்கு வாழ்க்கை கொடுங்கக்கா. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னா, இதோ நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன்னு டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்.”
அதை கைகளில் வாங்கியவளோ படித்துப் பார்த்து விட்டு,
“இதை நீ உன் மாமாகிட்ட காமிச்சு அவரை பிளாக்மெயில் பண்ணியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தலாமே? சரி அவர் ரொம்ப மோசமானவர்னாலும், அவரோட பேரண்ட்ஸ் உன்னோட சொந்தம் தானே, அவங்க கிட்ட சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்தலாமே?”
“எங்க அத்தை சிவகாமி அவர ரொம்ப நல்லவர்னு நினைச்சிட்டு இருக்காங்க, என் மாமாக்கு மட்டும் அவங்க அம்மா கிட்ட அவரைப் பத்தி நான் தப்பா சொன்னேன்னு தெரிஞ்சதுன்னா, என்னையும் என் குடும்பத்தையும் கொன்னுட்டு தான் மறு வேலை பார்ப்பார்.
ஏன்னா அவருக்கு அவங்க அம்மான்னா உயிர், அவங்க அம்மா பேச்சை மீறவே மாட்டார்.”
ரிதன்யா அவர்களின் அருகே வர, அவளைக் கண்டு மிரண்டு போய் அங்கிருந்து ஓட பார்த்தவளை கைப்பிடித்து நிறுத்திய நிலா,
“அட கொஞ்சம் நில்லும்மா, நீ என்கிட்ட இப்ப சொன்னது எல்லாமே அவகிட்ட சொல்ல வேண்டிய விஷயங்கள். ஏன்னா உன் மாமாவை நாளைக்கு காலையில கல்யாணம் பண்ணிக்க போற கல்யாணப் பொண்ணே அவ தான், நான் அவளோட ஃப்ரெண்ட்.”
அந்த சிறு பெண் திரு திருவென்று விழிக்க, ரிதன்யாவிற்கும் அவள் யார் என்று புரிந்து விட்டது.
“எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்ற, சரி என்ன காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நான் நிறுத்தறது? என்னோட அம்மா அப்பா கிட்ட உன் மாமா குணம் சரியில்ல மோசமானவர்னு எத்தனையோ முறை எடுத்து சொல்லிட்டேன், அவங்க நம்ப மாட்டேன்னு சொல்றாங்க. அதோட இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்கலைன்னா, தற்கொலை பண்ணிக்குவேன்னு என்னை பிளாக் மெயில் பண்றாங்க, இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்.”
அந்த சிறு பெண் சோர்ந்து போய் தலைக்குனிந்து நிற்க, நிலாவே பேசத் தொடங்கினாள்.
“மாப்பிள்ளையை பத்தி உன்னோட அப்பா அம்மா கிட்ட சொன்னா தான் நம்ப மாட்டேங்கிறாங்க, அவரோட அம்மா கிட்ட நம்பற மாதிரி எடுத்து சொன்னா? ஒருவேளை இந்த கல்யாணம் நிக்கறதுக்கு சான்ஸ் இருக்கு இல்லையா?”
“என்ன சொல்ல வர்ற நிலா புரியலையே?”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இந்த பொண்ணு சொன்னா, மாப்பிள்ளை அவங்க அம்மா பேச்சை தட்ட மாட்டாருன்னு, அவங்க அம்மாவுக்கு அவங்க பையனோட லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்கி காட்டினா, அவங்களே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க இல்லையா?”
“ ஆனா இந்த பொண்ணு தான் தன்னோட விஷயத்தைப் பத்தி, வெளியே சொல்ல கூடாதுன்னு சொல்லுதே.”
“சரி தான் ஆனா அவங்க அம்மா கிட்ட, நான் அவங்க பையனால ஏமாத்தப்பட்ட பொண்ணுன்னு பொய்யா நடிச்சு, அவங்கள நம்ப வச்சா இந்த கல்யாணம் நிற்க சான்ஸ் இருக்கு இல்லையா?
அதுக்கு நான் அவங்களை தனியா சந்திக்கணும் அந்த வாய்ப்பை எனக்கு நீ தான் ஏற்படுத்திக் கொடுக்கணும்.
இதுவும் உன்னால முடியாதுன்னு சொன்னா, கண்டிப்பா நாங்க உன்னோட மேட்டரை வெளியே சொல்லித் தான், இந்த கல்யாணத்தை நிறுத்தணும்.
எங்களுக்கும் இதுக்கு மேல வேற வழி தெரியல . என் ஃப்ரெண்டோட வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம், இந்த கல்யாணத்தை நிறுத்த என்னால முடிஞ்ச முயற்சியை நான் எடுத்து தானே ஆகணும்.”
“நிலா நீ பெரிய ரிஸ்க் எடுக்கறேன்னு தோணுது, அவரோட அத்தை பொண்ணே அவங்க மாமாக்கு பயந்துகிட்டு அமைதியா இருக்கு, நீ அவங்க அம்மாகிட்ட பேசுற விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சா, உன்னை சும்மா விடுவாரா?”
“அதுக்காக தான் சிவகாமி அம்மாகிட்ட தனியா பேச வழி செஞ்சு குடுன்னு, இந்த பொண்ணுகிட்ட சொல்லிகிட்டு இருக்கேன். என்னம்மா அதையாவது செய்வ இல்லையா?”
அவள் எல்லா திசையிலும் தலையை ஆட்டி வைக்க,
“சரி நீ ஏற்பாடு பண்ணிட்டு ரிதன்யாவோட போனுக்கு கூப்பிடு, முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா அவங்களை பாக்குறது தான் நல்லது.”
மணப்பெண் வெகு நேரமாகியும் வராததால், கோவிலில் இருந்த உறவினர்கள் ஆற்றங்கரையை நோக்கி வரத் தொடங்கினர், உடனே தோழிகள் இருவரும் வேகமாக முன்னே நடந்தனர்.
கல்யாணத்திற்கான சடங்குகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்தது. நிலாவும் ரிதன்யாவும் எப்போது அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தன் கையில் இருந்த அந்த பெண்ணின் டாக்டர் ரிப்போர்ட்டை, நிலா தனது ஹேன்ட் பேக்கில் இருந்த புத்தகத்திற்கு இடையில் வைத்தாள்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அதே அன்னௌன் நம்பரில் இருந்து ரிதன்யாவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.
“அக்கா இப்போ சிவகாமி அத்தை வீட்ல தனியாத் தான் இருக்காங்க, மத்தவங்க எல்லாரும் மண்டபத்துக்கு போயிட்டாங்க. நீங்க இப்பவே பாண்டியன் இல்லம் வந்தா, அவங்ககிட்ட தனியா பேசலாம். நான் வாசலிலேயே உங்களுக்குக்காக வெயிட் பண்றேன்.”
ஒரு வாரமாகவே கல்யாண வேலைகளில் அலைந்து கொண்டிருந்ததால், சிவகாமி அம்மாவுக்கு சற்று உடல்நிலை மோசமாக இருந்தது. அதனால் உறவுகள் அனைவரும் மண்டபத்திற்கு சென்று விட, சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு வருமாறு தன் அன்னையிடம் கூறி, அவருக்குத் துணையாக செல்லம்மாவையும் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றிருந்தான் விஷ்வேஸ்வர்.
முக்கியமான பொருள் ஒன்று வீட்டிலேயே விடுபட்டுப் போக, சிவகாமி மண்டபம் வரும் போது அதை மறவாமல் எடுத்து வருமாறு அவருக்கு போனில் அழைத்து கூறி இருந்தார் ராஜலட்சுமி.
அதனால் சிவகாமி செல்லம்மாவிடம், அதை உடனே சென்று கொடுத்து விட்டு வருமாறு கூற, அவரும் பொருளோடு மண்டபத்திற்கு கிளம்பினார். அதே நேரத்தில் தான் பாண்டியன் இல்லத்தின் முன்பு வந்து நின்றாள் நிலா.
என்ன பேச வேண்டும் என்று தனக்குள் ஒத்திகைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தவளை, வாசலிலேயே எதிர் கொண்ட அந்த பெண், நிலாவின் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
“அக்கா நீங்க சொன்னபடி வீட்ல யாரும் இல்ல, அத்தை அந்த ரூம்ல இருக்காங்க, நான் வெளியே காவலுக்கு நிக்கிறேன், அப்பறம் இந்த செயினை பிடிங்க, இது என் மாமாவோட பரம்பரை செயின்.
இதை வேற ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாத்தும் போது, காதல் பரிசா மாமா அவளுக்கு குடுத்திருக்காரு. அந்த பொண்ணு இதை அடமானத்துல வெச்சிடுச்சு, குடும்ப மானம் போகக் கூடாதுன்னு, நான் தான் அதை மீட்டு பத்திரமா வச்சிருக்கேன்.
ஒருவேளை அத்தை உங்களை நம்பலைன்னாக் கூட, இந்த செயின் அவங்களை நம்ப வைக்கும்.”
என்ன தான் வெளியே தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நிலாவின் மனமெங்கும் பதட்டமும் பயமும் சம அளவில் இருந்தது.
அறைக்குள் மண்டபத்திற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த சிவகாமி, அறை வாசலில் ஒரு புதியவள் வந்து நிற்பதைக் கண்டு,
“யாரும்மா நீ? இங்க என்ன பண்ணறே?”
“உங்க பிள்ளையோட மனைவி, உங்க கிட்ட நியாயம் கேட்க தான் வந்திருக்கேன்.”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிலா என்னம்மா இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்க … ரிதன்யா எல்லாம் உன்னால தான் … அப்போ நிலா ஈஸ்வரை பார்க்காமலே அவன் வாழ்க்கையை கெடுத்துட்டு போயிட்டா … அழகான குடும்பத்துல பஞ்சாயத்து ஆக போகுது …
ஒருத்தரை பத்தி வெளில இன்னும் நல்லா விசாரிக்காம எப்படி நீ இந்த மாதிரி பண்ணலாம் … அப்போ நிறைய பேர் வாழ்க்கை போயிருக்கும் போலயே … இனி விஷ்வேஸ்வரன் வச்சு செய்வார் … வாங்கிக்கோ மா …
இப்ப சொல்லுங்க சிஸ் நம்ம ஹீரோ நல்ல பையன் தானே
ஈஸ்வரை முதல் தடவை நிலா பார்க்கும் போதே … அவன் நல்லவனா தான் தெரிஞ்சான் … அதுவும் விஷ்வா கேரக்டர் சான்சே இல்ல … ரொம்ப பிடிச்சது … ஆனா இந்த நிலா தான் நல்ல பொண்ணுன்னு நினைச்சேன் … நல்ல பொண்ணு தான் … சேர்க்கை சரியில்ல … ரிதன்யா இருக்கே … இந்த மாதிரி ஒரு ஃப்ரெண்ட் இருந்தா போதும் …