
அகம்-17

இரவு பதினோரு மணியாகி அரைமணி நேரம் கடந்திருந்தது. மெல்ல மெல்ல அந்த இரும்புக் கேட்டை தள்ளி திறந்தபடி உள்ளே நுழைந்தான் காத்தவராயன்.
“அழகு! உங்க அப்பத்தா இருக்கான்னு பார்த்துச் சொல்லு. கிழவி என்னைப் பார்த்தால் கல்லைக் கொண்டே அடிக்கும்.!” அலைபேசியில் கிசுகிசுப்பாய் நண்பனிடம் பேசியபடியே உள்ளே நடந்து வந்தான் அவன்.
“அதெல்லாம் ஒருத்தரும் இல்லை! சொன்ன எல்லாத்தையும் வாங்கிட்டே தானே?”
“வாங்கியாச்சு.. வாங்கியாச்சு!” என அலைபேசியை அணைத்தவன், வீட்டின் பின்புறமாய்ப் பூனை போல் நடந்து மாடியேறிப் போனான்.
“உசிரு போய்ட்டு உசிரு வருது. ஏழு மலை எழு கடலைத் தாண்டி வர்ர மாதிரி இருக்கு டா.. வாரத்தில் ஒரு நாள் சந்தோஷமா இருக்க விட மாட்டேங்கிறாய்ங்க!” எனப் புலம்பியடியே வாங்கி வந்தவற்றைக் கடை பரப்பினான் அவன்.
“புலம்பாமல் வையிடா. உன் தொங்கச்சி வேற நடு ராத்திரியில் பேய் மாதிரி எழுந்து வந்தாலும் வந்துருவா.!”
“விழிக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் அழகர்?” அழகரின் அருகே அமர்ந்திருந்த நெடுமாறன் கேட்கவும்,
“ஹலோ இன்ஜினியர் சார், நீங்களும் இங்கணத் தான் இருக்கீங்களா? இன்ஜினியரிங் படிச்சுட்டு வீடு கட்டுவீங்கன்னு பார்த்தால், கம்ப்யூட்டரை லொட்டு லொட்ன்னு தட்டிட்டு கிடக்குறீங்க! என்னத்தைச் சொல்ல.?” காத்தவராயன் சொல்ல,
“அது தான் எனக்குச் செட் ஆகும். ஏசி ரூமில் உட்கார்ந்தோமா வேலையைப் பார்த்தோமான்னு சொகுசா இருக்கலாம்.! நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு விழிக்கு எப்படி நாம சரக்கடிக்கிறதெல்லாம் தெரியும்?” பதில் தந்து கேள்வியும் கேட்டான் நெடுமாறன்.
“உங்க அத்தை மவ தானே? ஆண்டவன் வால் இல்லாமல் படைச்சுப்புட்டான். வால் மட்டும் இருந்திருந்தால் மரத்துக்கு மரம் தாவி வேவு பார்த்திருக்கும். என்னைக்கோ ஒருநாள் ராத்திரியில் நாம பண்ணுறதை ஒளிஞ்சிருந்து பார்த்திருக்கு பக்கி.!”
“அழகர் தான் பாவம்! வாயாடியைக் கட்டிக்கிட்டு என்ன பாடு படப் போறானோ?” நெடுமாறன் சொன்ன அதே நேரம், மதுபானமும் சிற்றுண்டி வகையறாக்களும் பரிமாறபட்டு உள்ளே சென்று கொண்டிருந்தது.
“அவ குழந்தை நெடுமாறா! இந்த உலகமே தெரியாத குழந்தை! நிராகரிப்பு, ஏமாற்றம் எதையுமே பார்க்காமல் வளர்ந்த குழந்தை.! உங்க யாரையும் விட எனக்கு மட்டும் தான் அவளைப் பத்தி தெரியும்.!” பேச்சில் பெருமிதம் வழிய, அத்தை மகளின் நினைப்பில் அழகரின் முகம் மென்மையானது.
“நீ தான் மெச்சிக்கணும் அழகு! ஒத்தை பொம்பளப்பிள்ளைன்னு செல்லம் வெல்லம் எல்லாம் கொடுத்து கெடுத்து வச்சுட்டீங்க! அந்த ரோஹன் விஷயத்தில் கூறுகெட்ட தனமா தானே தங்கச்சி நடந்துக்கிச்சு..!” என ஏதோ சொல்ல வந்த காத்தவராயன் அழகரின் கண்டனப் பார்வையில் அப்படியே வாயை மூடினான்.
“எந்த ரோஹன்? ரோஹன் யாரு?” நெடுமாறனிடமிருந்து கேள்வி அழகரை குறிப்பார்த்தே வந்தது.
“அது ஒண்ணுமில்லை நெடுமாறா! காலேஜில் ஒரு பையன், அவகிட்டே கொஞ்சம் வம்பு பண்ணிட்டான்.!” பட்டும் படாமல் பதில் சொன்னான் அழகர்.
“ஓ! ரோஹன்னு சொன்னதும், சென்ட்ரல் மினிஸ்டர் பையன் ஒருத்தன் நம்ம விழி காலேஜில் தான் படிக்கிறான். அவனைச் சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன்.!”
“சென்ட்ரல் மினிஸ்டர் பையனா?” நெடுமாறனின் பதிலில் அதிர்வுடன் கேட்டான் காத்தவராயன்.
“ஆமா! டெல்லியில் பெரிய காலேஜில் படிச்சவன், அங்கே ஏதோ பொண்ணு விஷயத்தில் பிரச்சனை ஆகிருச்சுன்னு இங்கே வந்து சேர்த்திருக்காங்க! சும்மா டைம்பாஸ்க்குக் காலேஜ் வர்ர கேஸ் அவன். ஏதோ பெரிய பிரச்சனை போல, வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணி முடியலைன்னு இங்கே சேர்த்திருக்காங்க! அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.!” நெடுமாறன் சொல்ல, காத்தவராயனும் அழகரும், ஒருவருக்கொருவர் அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“உன் அத்தை மவ குழந்தைன்னு சொல்றே? எப்படிபட்ட ஏழரையை இழுத்து வச்சிருக்கா பாரு! அந்தப் பய வேற இவ பின்னாலேயே சுத்திக்கிட்டுத் திரியறான். சூதானமா இருக்கச் சொல்லு!” அழகரின் காதைக் கடித்தான் காத்தவராயன்.
“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது! அவ தான் ஃப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டாளே..!” சாமாதானமாய்ச் சொல்லிக் கொண்டாலும் கூட, விபரீதமாய் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதென்ற தவிப்பு அவனிடம் இருந்தது. சில நிமிடங்கள் மௌனமாய்க் கழிய, மதுபானம் நெகிழிக் கோப்பைகளில் நிரம்பி நிரம்பி காலியாகிக் கொண்டிருந்தது.
“ஏன்டா எல்லாரும் அமைதியாய் இருக்கீங்க? எதாச்சும் பேசுங்க!” நெடுமாறன் சொல்லவும்,
“என்னத்தைப் பேச, நீயே சொல்லு உனக்கும் மதுவுக்கும் எப்படிச் செட் ஆச்சுன்னு சொல்லு! நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.!” பதில் கேள்வி கேட்டான் காத்தவராயன்.
“அதுவா..?” புன்னகையுடன் கேட்டவனின் முகத்தில் லேசான வெட்கத்தின் சாயல்.
“அது ஸ்கூல் படிக்கும் போதே லவ் தான். நம்ம விழி கூடத்தானே எப்போவும் அலைவா, அப்போவே பேசி பேசி லவ் ஆகிடுச்சு. என் மது ரொம்பத் தெளிவானவ. ஒரு சூழ்நிலையை எப்படி ஹேண்டில் பண்ணணும்ன்னு அவளுக்குத் தெரியும். கல்யாணத்துக்குப் பின்னாலேயும் வேலைக்குப் போய் அவங்க அப்பா அம்மாவைப் பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறா! தாத்தா கிட்டே தான் எப்படிப் பேசி சம்மதம் வாங்கறதுன்னு தெரியலை. அவர் சம்மதிக்கலைன்னா கூட, இந்த ஜென்மத்துக்கு எனக்குன்னு பிறந்தவ என் மது தான்.!” அவன் பேச்சின் முதிர்விலேயே அவர்களின் நீண்ட காலக் காதலை அழகரால் உணர முடிந்தது.
“அப்பறம் அழகரு, உன் கதை என்ன? நாங்களாச்சும் தாத்தாவுக்குப் பயந்து ஒளிஞ்சு ஒளிஞ்சு லவ்விக்கிட்டு திரியறோம்.. ஆனால் நீங்க கல்யாணம் வரை போனவங்களாச்சே.. தாத்தா மட்டும் அன்னைக்கு வரலைன்னா கல்யாணம் பண்ணிருப்பிங்க தானே?” நெடுமாறன் கேட்கவும், காத்தவராயன் வாயை மூடிக் கொண்டு சிரிக்கத் துவங்கியிருந்தான்.
“கல்யாணம் நடந்திருக்கும் தான்! ஆனால் யாருக்குன்னு தான் தெரியலை!” காத்தவராயன் சொல்லி சிரிக்க, கிட்டத்தட்ட மூவருமே அரைப் போதையில் இருந்தனர்.
“டேய் காக்காவிரட்டி! ஏன் நாங்களெல்லாம் லவ் பண்ண மாட்டோமா? நாங்க ரொம்ப அட்வான்ஸ் தெரியுமா..?” லேசான குழறலுடன் தாய் மொழியையே தப்பு தப்பாய் உச்சரித்தான் துடிவேல் அழகர்.
“உன் தொங்கச்சி அந்த முட்டைக்கண்ணி பிறக்கும் போது எனக்கு ஒன்பது வயசு. அப்போ இருந்து இப்போ வரை அவளை இங்கே தான் சுமந்துட்டு இருக்கேன். முதலில் பாசத்தோட சுமந்துட்டு இருந்தேன். இப்போ காதலா நேசமா எல்லாமா அந்தக் கிறுக்கச்சி மட்டும் தான் இருக்கா! உள்ளே கெடந்துட்டு உசிரை எடுக்குறா! அவ மேல நான் வச்சிருக்கிற நேசம் என்னை அறியாமல் வெளிப்பட்டுடுமோன்னு உள்ளே போட்டு புழுங்கி தவிக்கிறேன். அவள் இல்லாமல் ஒரு நொடியைக் கூட என்னால் கடக்க முடியலை. சொல்லவும் முடியலை சொல்லாமல் இருக்கவும் முடியலை. படிக்கிற புள்ளை மனசு சலனப்பட்டுடக் கூடாதேன்னு உயிர்க்கூட்டுக்குள்ளே புதைச்சு வச்சுருக்கேன் டா! அவ மேல் நான் வச்சிருக்கிற நேசத்தைச் சொல்லும் முன்னமே.. இன்னொருத்தனை பிடிச்சிருக்குன்னு வந்து நிக்கிறாடா! நான் என்ன செய்யட்டும் சொல்லு?ஒவ்வொரு நாளும் உயிரோட செத்துட்டு இருக்கேன் டா. ஒரு தாயின் கருவில் இருக்கிற குழந்தைக்குக் கூட, காத்திருப்பு வெறும் பத்து மாசந்தேன். நான் வருஷக்கணக்கா காதலை சுமந்துட்டு திரியறேன் டா..!”
இடையிடையே குழறலாய் அழகர் சொன்ன சங்கதியில் ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போயிருந்தான் காத்தவராயன்.
உள்ளே சென்ற மதுவின் உபயத்தால் அவன் மனதில் பூட்டி வைத்திருந்த அனைத்தும் உடைந்து போன உண்டியலிலிருந்து சிதறும் சில்லறைக் காசுகளாய் சிதறி வெளிவந்திருந்தது.
நெடுமாறன் மது போதையில் மாடியிலேயே படுத்து உறங்கியிருக்க, நல்ல வேளையாய் அழகர் சொன்னவற்றை யாரும் கேட்டுவிடவில்லை என்பதில் காத்தவராயனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.
ஆனால் மாடிப்படியின் மறைவில் இருளில் நின்று இத்தனை நேரம் அழகர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நிழலுருவம் சத்தமே எழுப்பாமல் மெல்ல நடந்து வீட்டினுள் சென்று மறைந்தது.
*****
என்ன அழகு, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ பதிலே பேசாமல் உட்கார்ந்து கிடக்க?” சுவற்றில் தலை சாய்த்து, கண்கள் சிவக்க, தலை கலைந்து என்னவோ போல் அமர்ந்திருந்த அழகரைப் பார்த்துக் கேட்டான் காத்தவராயன்.
“என்னத்தைச் சொல்லணும்ங்கிற? தலையை வலிக்குது! கொஞ்ச நேரம் சத்தமில்லாமல் இரு!” அழகரின் குரலில் சலிப்பு தெரிந்தது.
“நீ ராத்திரி சொன்னதெல்லாம் நெசந்தானான்னு எனக்குத் தெரியணும்!”
“போதையில் என்னத்தையாவது உளறியிருப்பேன். அதைப் போய் பெருசா பேசிக்கிட்டு..!”
“அழகு! என்னைப் பார்த்து சொல்லு! தங்கச்சி மேல உனக்கு பாசம் மட்டும்தேன் இருக்கு. அதைத் தாண்டி ஒண்ணும் இல்லைன்னு சொல்லு!” எங்கோ பார்த்து பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான் காத்தவராயன்.
“ம்ப்ச்! விடு காத்தவராயா! சோலி நிறைய கிடக்கு அதைப் போய் பார்ப்போம்!” நண்பனின் கரம் விலக்கி எழ முயன்றான்.
“சோலி நெதமும் தான் இருக்கும். இது முக்கியமான வாழ்க்கை பிரச்சனை! நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு!” சொல்லாமல் விடப் போவதில்லை என்ற உறுதி தெரிந்தது அவனிடம்.
“ஆமா! நெசந்தேன்! உன் தொங்கச்சி மேல நான் வச்சிருக்கிற நேசம் நெசந்தேன்.! இப்போ அதுக்கு என்ன செய்யணும்ங்கிற? நான் கிட்டேயே இருக்கிறதாலோ என்னவோ என் மனசு அந்தக் கிறுக்கச்சிக்கு புரியலையே? அவளுக்கு அந்த ரோஹனைத்தானே பிடிச்சிருக்கு!”
“அழகு! தங்கச்சி மேல மட்டும் தப்பு இல்லை! உன் மேலேயும் தப்பு இருக்கு! உன் மனசில் இப்படி ஒண்ணு இருக்குன்னு நீ அவ கிட்டே வெளிப்படுத்தி இருக்கணும் தானே?”
“படிக்கிற புள்ளை கிட்டே என்னத்தை சொல்ல சொல்றே? என் மனசை வெளிப்படுத்தின பிறகு, அவளை விட்டு விலகி இருக்க முடியும்ன்னு எனக்கு தோணலை. சொல்லாமல் சுமந்துக்கிட்டே திரிஞ்சிடலாம். ஆனால் சொல்லிப்புட்டு எட்டத்தில் வச்சு பார்க்க முடியாது. நான் என் மனசை வெளிப்படுத்திட்டா மனசும் உடம்பும் அவ வேணும்ன்னு அடம்பிடிக்குமே.. நான் என்ன செய்வேன்.? என் மனசை வெளிப்படுத்தாமல் எனக்கு நானே வேலியைப் போட்டுக்கிட்டேன். அது முள் வேலியா மாறிப் போகும்ன்னு நான் நினைக்கலை.! நெசமா அவ சின்னப் புள்ளைன்னு தான் நான் நினைச்சேன். காதலிக்கும் அளவு வளர்ந்துட்டான்னு எனக்கு தான் புரியலை.” நண்பனின் வேதனையில் காத்தவராயனின் மனமும் சுணங்கியது.
“அப்போ அந்த ரோஹன் கூட சேர்த்து வச்சிட்டு நீ என்ன செய்யப் போற அழகு? நெடுமாறன் நேத்து சொன்னதைக் கேட்டியா இல்லையா? அந்த ரோஹன் நல்லவனாய் எனக்குத் தெரியலை.!”
“அதுக்குன்னு ரோஹன் நல்லவன் இல்லை. நீ என்னைக் கட்டிக்கன்னு அவ கிட்டே கேட்க சொல்றியா? காதல் கட்டாயத்திலேயோ, சூழ்நிலையாலோ வரக் கூடாது காத்தவராயா! அதை அவங்க அவங்க தான் உணரணும்!”
“சரி, ரோஹனை விடு அழகு.. அவ வேற யாரையாச்சும் கடட்டிக்க உனக்கு சம்மதமா? தாத்தா உனக்கும் அவளுக்கும் தானே கல்யாணம் முடிவு பண்ணியிருக்கார். இப்படி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காமல் ஒரு வாழ்க்கைக்குள்ளே நுழைஞ்சா அது சரியா இருக்குமா?” தன் மனதில் உள்ள கேள்விகளை வார்த்தையாய் தொடுத்தான் காத்தவராயன்.
“தாத்தாவோட நம்பிக்கையை உடைக்கிற தைரியம் எனக்கு இல்லை! தாத்தாவுக்காக அவ கழுத்தில் தாலி கட்டினாலும், அதன் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு எனக்கு சத்தியமா தெரியலை டா. இல்லை அவ வேற யாரையாவது கட்டிக்கிட்டாலும், அவ விருப்பத்துக்கு வழிவிட்டு விலகி நிற்கிறது தானே சரி. நான் நேசிச்சேன்னு அவளைக் கட்டாயப்படுத்துறது தான் தப்பு!” என சொன்ன அழகரின் குரலில் உணர்ச்சிகள் இல்லை.
“அப்போ உன் வாழ்க்கை..?” குரல் கமறக் கேட்டான் காத்தவராயன். பதிலேதும் சொல்லாமல், கண்ணெதிரே தெரிந்த சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தான் துடிவேல் அழகர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எம்புட்டு வருஷ லவ் அழகரு … எங்களுக்கும் தெரிஞ்சுடுச்சு உன் மனசுல இருக்கிறது … விழிக்கும் உன்னை பிடிச்சிருக்கு …
ஆமா.. ஆமா.. ஆனால் அழகர் அவக்கிட்டே சொல்லணுமே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💛💜
சண்டே சரக்கு day யா சொக்கேசன் குடும்பத்து வாரிசுகளுக்கு.
போதை ஆனதும் ஆழ் மனதில் இருப்பதெல்லாம் வெளியே வருது.
நெடு மது காதல் ரொம்பவே matured da இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் பேசி புரிந்து குடும்பத்தினர் சம்மதத்திற்காக காத்திருக்கின்றனர்.
அழகர் மனதில் இருக்கும் காதலை முன்னவே தெரியப்படுத்தி இருக்கலாம்.
“ஏமாற்றம் நிராகரிப்பு எதுவுமே தெரியாமல் வளர்ந்த குழந்தை”. அதனால் தான் நிதர்சனம் புரியாமல் தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அது நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல் அழுத்தமா இருக்கா.
மனதை மறைக்க போட்ட வேலி முள்வேலியாகும் என்று நினைக்கல. 👏🏼
நன்றிகள் டியர் 💜 உங்களுடைய கமெண்ட் ஒவ்வொண்ணும் இரசிக்க வைக்குது. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் 💜💜