
அன்று பார்கவி வெளியில் சென்றிருக்க, மாடிப்படி ஏற போனவளை அழைத்தான் பதினொன்றாம் வகுப்பில் இருந்த வசீகரன்.
அன்று அவளை கீழே தள்ளியதில் இருந்தே இழை அவனிடம் எந்த பேச்சும் வைத்திராத நிலையில், இன்று அவன் அழைக்கவும் உடனே செல்லாமல் அவள் தயங்கி நிற்க,
“ஹே பப்ளி, உன்னைதான். இங்க வா” என்று மீண்டும் அழைக்கவும், வேறு வழியில்லாமல் அவன் முன் சென்று நின்றாள்.
“எங்க போற”
“மாடிக்கு, ஸ்வேதா அக்காகிட்ட மேத்ஸ் டவுட் கேட்க”
“சரி, நான் இப்போ உன்கிட்ட ஒன்னு கொடுப்பேன். அதை நீ ஸ்வேதாகிட்ட கொடுத்துடுறியா”
“என்ன கொடுக்கணும், புக்கா இல்ல பென்சில் பாக்ஸா” என்றவள், உடனே தன் கையிலிருந்த புத்தகங்களை காம்பவுண்ட் மீது வைத்துவிட்டு கையை நீட்டினாள்.
பின்னே அவன் பொருட்களுக்கு ஏதேனும் சிறு சேதாரமானால் யாரையும் பிடித்து கத்தி தீர்த்துவிடுவான். ஒருவேளை ரெக்கார்ட் நோட்டாக இருந்து அது கீழே விழுந்துவைத்தால் என்ன செய்வது என்பதால் இந்த எச்சரிக்கை.
“அதெல்லாம் இல்ல. இதோ இந்த கார்ட்டை ஸ்வேதாகிட்ட கொடுத்துடு. போதும்”
கார்ட் என்றதுமே, “இன்னைக்கு ஸ்வேதா அக்கா பர்த்டே கிடையாதே. அப்புறம் எதுக்கு” என்று கையில் இருந்த கார்டை இழை முன்னும் பின்னும் திருப்பி பார்க்க,
“பப்ளிமாஸ், ஒரு வேலையை சொன்னா கேள்வி கேட்காம அமைதியா செய்ய கத்துக்கோ”
“அப்போ நீங்களே கொடுக்க வேண்டியது தானே” என்று இழை இதழ் சுழிக்க,
“அது எனக்கு தெரியாதா. தேவையில்லாத கேள்வி கேட்காம சொன்னதை செய்” என்றான் கட்டளையான தோரணையில்.
எதற்கு வம்பு என்று நினைத்த இழை, சரி கொடுத்துடுறேன் என்றவள் கார்டோடு மாடிக்கு செல்ல, அங்கே புதிதாக ஒரு நபர் அமர்ந்திருந்தார்.
அவரை கண்டு தேங்கி நின்ற இழை, “அங்கிள், ஸ்வேதா அக்கா இல்லையா” என்றாள்.
“உள்ள இருப்பா பாரும்மா” எனவும் அவள் அறைக்குள் செல்ல, அங்கே என்றும் போல வசீகரா பாடல் ஒலித்து கொண்டிருந்தது. ஆனால் ஸ்வேதாவை காணோம்.
“அக்கா, அக்கா”
“ஃபைவ் மினிட்ஸ்ல வரேன். வைட் பண்ணு பிங்கி” என்று ஸ்வேதா பாத்ரூமில் இருந்து குரல் கொடுக்கவும், ஹாலுக்கு வந்த பிங்கி காத்திருக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் வீட்டிற்கு திரும்பியிருந்த பார்கவி, “பிங்கி” என்று கீழேயிருந்து குரல் கொடுத்திருந்தார்.
அன்னை அழைக்கவும் உடனே புதிதாக அமர்ந்திருந்தவரிடம், “அங்கிள், ஸ்வேதா அக்காகிட்ட இந்த கார்ட் கொடுத்துடுறீங்களா” என்றாள்.
“கார்டா? எதுக்குமா? யார் கொடுத்தா?”
“ஜித்துவோட அண்ணா..”
“ஜித்து அண்ணனா, அது யாரு” என்று அவர் கேட்டதும் தான் தாமதம்.
“உங்களுக்கு தெரியாது” என்றவள், “அதோ பாருங்க, அதுதான் ஜித்துவீடு” என்று வசீகரனின் வீட்டை ஜன்னல் வழியே சுட்டிக் காண்பித்தவள், அவள் அறிந்த வரையிலான வசீகரனின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்திருந்தாள்.
சரியாக சொல்ல வேண்டுமானால், ஸ்வேதாவின் தந்தையிடம் வசீகரனை மிகத் தெளிவாக போட்டு கொடுத்திருந்தாள்.
அன்று ப்ரணவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக திருவேங்கடத்தின் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருக்க, அங்கே ஆவேசமாக நுழைந்தார் ஸ்வேதாவின் தந்தை.
கார்டை சுட்டிக்காட்டி கேட்கவும், மறுக்காமல் ஒப்புக்கொண்ட வசீகரன், “எனக்கு ஸ்வேதாவை பிடிச்சிருந்தது. அதை சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு” என்று நிமிர்வாக கேட்க, அங்கே வந்த ஸ்வேதா, கோபமாக நின்றிருந்த தந்தையிடம்,
“வசீயை அவளுக்கு யாரென்று தெரியவே தெரியாது. ஒரே பள்ளியாக இருக்கலாம், ஆனால் அவன் வேறு செக்ஷன், நான் வேறு. எங்களுக்குள் அறிமுகமே இல்லை” என்று அடித்து கூற, அங்கு பிரச்சனை மேலும் பெரிதாகி போனது.
அன்று தன்னை யாரென்றே தெரியாது என்று சொன்ன ஸ்வேதாவை குறையாத அதிர்ச்சியோடு வசீகரன் பார்த்திருந்தான் என்றால், இழையோ வசீகரனை குறையாத அச்சத்தோடு பார்த்து நின்றாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் இழை … நீ விளையாட்டுத் தனமா சொல்லிட்ட … ஆனா வசீகரன் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டான் … ஆமா எனக்கும் அந்த டவுட் இருக்கு … ஏலகிரி போகும் போது அந்த போனை உடைக்கும் போது இழையை வசீகரன் பார்த்தான் … ஆனா ஏன் கோபப்பட்டான் … இன்னும் நிறைய கதை இருக்கும் போலயே