
விடியும் முன்..!
அத்தியாயம் 10
“ஹலோ மிஸ்டர்.ரிஷி..”
“………….”
“தலைவரேஏஏஏஏ..”
“…………..”
“என்னாச்சு இவனுக்கு..இப்டி இருக்கான்..கிறுக்குப்பய..யோவ் கிறுக்கு..”
“ஹான் என்ன சொன்னடி பைத்தியம்..?”
“கிறுக்குன்னு சொன்னேன்டா கிறுக்கு..பைத்தியம்னு சொன்ன உன் வாய ஒடச்சிருவேன்..”
“என்னடி மரியாத இல்லாம பேசற..வாங்குன அறயெல்லாம் மறந்துருச்சோ..”
“ஆமா..மறந்துட்டாலும்..நாலு நாளு வீங்கி இருந்தது எல்லாம் மறக்குமா..? ஆனா சத்தியமா சொல்றேன்..உங்களுக்கு மனசாட்சியே இல்ல..பொண்ணுன்னு கூட பாக்காம அறஞ்சி தள்றீங்க..?” கோபமாய் இருந்தவளின் தொனி திடீரென சாந்தமாய் மாறியது.
“என்ன பண்ண..பொண்ணுன்னா அமைதியா இருக்கலாம்..ஆனா நீ பொண்ணே கெடயாதே..அப்றம் எதுக்கு அறயாம இருக்குறது..ஆமா ரொம்ப நாளா உன் கிட்ட ஒரு டவுட் கேக்கணும்னே இருந்தேன்..நீ நடந்துக்குறத பாத்தா உனக்கு பீலிங்கஸ் இருக்குதான்னே எனக்கு டவுட்டா வரும்..ஆமா நீ யாரயாச்சும் லவ் பண்ணி இருக்கியா என்ன..?” புருவம் சுருக்கி அவன் கேட்ட கேள்வியில் ஒரு நொடி அவளுள் பெரும் தடுமாற்றமொன்று உருவெடுக்க இமைகள் படபடத்து அடித்துக் கொண்டது.
சாதாரணமாக அவள் பொய் சொன்னாலே அவள் முகம் அதை காட்டிக் கொடுத்து விடும்.இதில் பையனின் முன்..?
அவனிடம் பொய் சொன்னால் நிச்சயம் எடுபடாது என்கின்ற உண்மை புரிய பெருமூச்சொன்றை இழுத்து விட்டவளோ ஆமென்பதாய் தலையசைக்க அவனுக்குள் மெல்ல ஊடுருவி உலுக்கிப் போட்டது,சிறு வலியொன்று.
“வாட்ட்ட்..ஆர் யூ சீரியஸ்..? நீ லவ் பண்றியா..?” குரலில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் பார்வை யன்னலுக்கு வெளியே அலைபாய்ந்திட அவன் மனம் அவளிடம் எதைத் தேடுகிறது என்று அவனுக்குமே புரியவில்லை.
தன் கூர்ப்பார்வை கொண்டு அவளின் விழிகளை ஒரு நொடி ஸ்பரிசித்து இருந்தாலும் அவள் காதலிப்பது அவனைத் தான் என்று பையனுக்கு புரிந்திருக்குமோ என்னவோ..?
வெளியில் பார்வையை அலைய விட்டதை மதியின் பிழை என்பதா..?இல்லை,
விதியின் வலை என்பதா..?
“ஏன் நா எல்லாம் லவ் பண்ணக் கூடாதா..?” தன் இயல்பை மீட்டெடுத்தவளாய் இரு புருவமுயர்த்தி அவள் கேட்ட கேள்வியில் மென்மையாய் கடையிதழ் விரித்தான்,
பையன்.
எள்ளல் கலந்த புன்னகையா..?
விரக்தியின் சாயலில் துளிர்த்த மென்னகையா..?
அவனுக்கும் அந்த கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்.
“எதுக்கு சிரிக்கிறீங்க மிஸ்டர்.ரிஷி..?”
“நீயே ஒரு பைத்தியம்..இதுல நீ லவ் பண்றன்னா அவன் அத விட ஒரு பைத்தியமா தான் இருப்பான்..அதான் யோசிச்சி பாக்கும் போது சிரிப்பா வருது..” சமாளிப்பாய் சொன்னவனின் கூற்றில் அவளுக்குத் தான் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“ஆமா..நெஜமா பாக்கறது நல்லா தான் இருப்பான்..ஆனா பக்கா பைத்தியம்..எனக்கு அவன் பலமுற மெண்டல் ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டியவனோ டவுட் வந்துருக்கு..” பையனில் பார்வையை படரவிட்ட படி அவள் சொல்ல அவளைப் பாராது தன் எண்ணவோட்டங்களில் சிக்கியிருந்தான்,அவள் காதலுக்கு சொந்தமானவன்.
அவள் அருகில் பையன் அவனாகவும் இல்லை.அதற்கான காரணம் பையனுக்கும் புரிவதாகவும் இல்லை.
சிலருக்கு காதலில் முரண் இருக்கும்.
பையனுக்கு அவள் மீதான காதலே முரணாகவல்லவா இருக்கிறது..?
அவளுக்கென மட்டும் அலையடிக்கும் அவனின் உணராக் காதலை உணரும் தருணம் அவனின் எண்ணப் போக்கு..?
●●●●●●●●●
அலுவலக வாயிலில் நின்று கொண்டிருத்த வீரய்யாவுக்கு அழைப்பு வர திரையில் தெரிந்த “பாண்டி” எனும் பெயரைக் கண்டதும் தாமதியாமல் அழைப்பை ஏற்றான்,அவன்.
“ஹலோ பாண்டி என்ன விஷயம்..? நா ஆபிஸ்ல இருக்குற நேரம்னு தெரிஞ்சும் போன் பண்ற..?”
“அண்ணே..நா உன் ஆபிஸ்கு பக்கத்துல இருக்குற மால் கிட்ட தான் இருக்கேன்.அவசரமா அங்க வாண்ண..”
“என்னடா ஏதாச்சும் ப்ரச்சனயா..?”
“அட ஆமாண்ண..அது தான் உன்ன நேர்ல வர சொல்லி சொல்றேன்..சீக்கிரம் வா..சின்ன கொழப்பம் ஒன்னு ஆகிப்போச்சு..”
“சரி இரு வர்ரேன்..” என்றவரோ அழைப்பை துண்டித்து விட்டு சிறிது யோசனையுடன் நடக்க அடுத்த பத்து நிமிடங்களில் அடைந்திருந்தான்,பாண்டி இருக்கும் இடத்தை.
தன்னை நோக்கி வந்த வீரய்யாவின் கரத்தை பற்றி இழுத்து அவசரமாக மறைவான அந்த மாலின் இடது புறம் இருக்கும் மறைவான இடமொன்றுக்கு அழைத்து நகர்ந்தான்,பாண்டி.
அவன் முகத்தில் பதட்டம் பரவியிருக்க விழிகளில் பயம் மின்னியது.
“என்னடா..என்ன ஆச்சு..?எதுக்கு இப்டி இழுத்துட்டு வர்ர..ஏன்டா இப்டி பயந்துகிட்டு இருக்க..?”
“அண்ணே..நேத்து சின்ன ப்ரச்சன ஆயிருச்சுன்ன..?” சொன்னவனின் பார்வை தழைந்து நிலத்தை தொட்டுக் கொண்டிருக்க சாதாரண விடயமல்ல என்பதை ஊகிக்க முடிந்திருந்தது,வீரய்யாவினால்.
“டேய் என்னாச்சுடா..? இப்டி நடந்துக்குற..? விஷயம் என்னன்னு சொல்லு..?”
“நேத்து நாம குடோன்ல இருந்து ஒருத்தன தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனோம்ல..”
“ஆமா..இப்போ அதுக்கு என்ன..? அவன தான் இன்னிக்கு நைட் வாசு சார் வந்து பாக்கறாதே இருந்துச்சே..ஆமா நீ அவன தான சொல்ற..?”
“ம்ம்..ஆமாண்ணா..நாங்க ரெண்டு பேரும் அவன வண்டில கூட்டுப் போய் இருக்கும் போது திடீர்னு வண்டி பன்சர் ஆயிடுச்சு..சரின்னு ரெண்டு பேரும் எறங்கி என்னான்னு பாக்கறதுக்குள்ள யாரோ ரெண்டு பேர் வந்து அமுக்கி புடிச்சி அடி பின்னிடாங்க..சாக்குப் பைய போட்டு அடிச்சானுங்க..அப்றமா அவனுங்க விட நாங்களும் சுத்தி தேடிப் பாத்தோம் யாரும் இல்ல..சரின்னு வண்டிய கெளப்பிட்டு போவோம்னு பாத்தா வண்டிக்குள்ள மயங்கி கெடந்த அந்த ஆள காணோம்ன..”
“டேய் என்னட சொல்ற..” கோபமும் அதிர்ச்சியும் ஒருமிக்க அவன் மனதை சூழ பாண்டியின் சட்டைக்காலரை பற்றி இருந்தன,வீரய்யாவின் கரங்கள்.
“ஆமாண்ணா..என்னாச்சுன்னு எங்களுக்கே தெரியல..நேத்து ராத்திரி முழுக்க எல்லார் கிட்டயும் சொல்லி தேடிப் பாத்துட்டோம்..உன் கிட்ட சொல்லலாம்னு பாத்துட்டும் தேடிப் பாத்துட்டு அப்றம் சொல்லலாம்னு தான் இருந்தோம்..இப்போ பாத்தா அவன எங்கயும் காணோம்..” என்றவனின் விரல்களோ சட்டைக்காலரை பற்றி இருந்த கரங்களை மெதுவாய் தளர்த்தி விட்டது.
“என்னடா சொல்ற..முக்கியமான பார்ட்டி டா அவன்..இது மட்டும் வாசு சார்கு தெரிஞ்சா நம்மள கொன்னோ போட்ருவாரு..எரும மாடே..கொஞ்சம் கவனமா நடந்துகிட்டு இருக்கலாம்ல..ஐயோ இப்போ என்ன பண்றதுன்னே புரியலியே..” தலையில் அடித்துக் கொண்டவனுக்கு உலகமே எதிர்த்திசையில் சுழலும் உணர்வு.
●●●●●●●●●
அந்தக் காட்டு வீதியில் ஓரமாய் அந்த வேன் நிறுத்தப்பட்டிருக்க அதனருகே நெற்றியில் குருதி வழிய அமர்ந்திருந்தான்,ஆகாஷ்.
அவனைச் சுற்றி என்ன நடக்கிறதென்று துளியும் ஊகித்துக் கொள்ள இயலவில்லை.
அத்தனை குழப்பமாய் இருந்தது.
அவனருகே அமர்ந்து தன் கையில் ஏற்பட்டிருந்த காயத்துக்கு மருந்திட்டவாறு ஆகாஷை ஒரு கணம் ஏறிட்ட சகாவின் விழிகள் மீண்டும் அவன் காயத்தில் படிந்தன.
“எனக்கு ஒன்னுமே புரியல சகா..ஏன் இப்டி ஆச்சுன்னு..நாம ஆர்யாவோட பாடிய எடுத்து வர்ர விஷயம் யாருக்குமே தெரியாது…அப்றம் எப்டி கண்டுபுடிச்சாங்க..அதுவும் இல்லன்னா பொணத்த கொண்டு போய் அவனுங்க என்ன தான் பண்ணப் போறாங்க..? ஒன்னுமே புரியல எனக்கு..” தன் பாட்டில் புலம்பியவனுக்கு பதிலேதும் சொல்லவில்லை,சகா.
இருவரையும் பார்த்தவாறு முகம் முழுக்க கலக்கம் விரவியிருக்க கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தனர், மகிழினியும் அவளுடன் பணிபுரியும் தென்றலும்.
சகா அழைத்த ஒரே காரணத்துக்காக அவனுடன் வந்தவர்களுக்கு இடையில் நடந்த சண்டையும் கடத்தலும் ஒரு வித பயத்தை விதைத்திருந்தது.
வந்த ஆட்கள் பெண்கள் இருவருக்கும் எந்த வித அநியாயமும் செய்யா விடினும் ஆகாஷையும் சகாவையும் வெளுத்துக் கட்டியிருக்க அதில் மிரண்டு தான் போயிருந்தனர்,இருவரும்.
“இப்போ என்ன பண்றது சகா..? யார் கிட்ட சொல்றது..?”
“அதான் எனக்கும் புரியல..இப்டி நடந்து போனா எங்க கெஸ்ட் ஹவுஸ் வந்துரும்..பர்ஸ்ட் உன் காயத்துக்கு அங்க போய் மருந்து போட்டுட்டு யோசிக்கலாம்..ப்ளீட் ஆனா மயக்கம் வர்லாம்..வா..” என்ற படி கரத்தை நீட்ட பற்றிக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்தவனுக்குள் இன்னும் இன்னும் கேள்விகள் உதிக்கத் தான் செய்தது.
“யார் சகா அது..? எதுக்கு அவனுங்க நம்மள அடிச்சிப் போட்டுட்டு நம்மள தூக்கனும்..? ஆர்யாவுக்கு ட்ரீமன்ட் பாத்தது கூட கன்பிடன்ஷலான விஷயம் தான்..அது கூட அவனுங்களுக்கு தெரிஞ்சுருக்கு..இப்போ நாம இந்த வழியா வர்ரது கூட அவனுக்கு தெரிஞ்சிருக்குன்னா..சம்திங் ராங்..ஏதோ தப்பா இருக்கு சகா..”
●●●●●●●
பேரூந்து நகர்ந்து கொண்டிருக்க தர்ஷினியோ ரணதீர வம்சத்தை பற்றிய யோசனையில் மூழ்கியிருக்க அவளைக் கலைத்தாள்,தோழி ஒருத்தி.
“என்ன தர்ஷினி சத்யா கிட்ட திட்டு வாங்குனத நெனச்சு இன்னும் பீல் பண்ணிட்டு இருக்கியா..விட்டுத் தள்ளுபா..எப்பவும் நடந்துக்குறது தான..”
“ச்சே..நா அதப்பத்தி யோசிக்கல பா..ரணதீர வம்சம் பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்..”
“எத சொல்ற நீ..இந்து சொன்ன அந்த கத தான..தளபதி ரணதீரன்..அவரோட வைப்..அனழேந்தி பாடிக்குள்ள புகுந்து உயிரோட வர்ரது அது தான..”
“ம்ம்..அதே தான்..”
“அத உண்மன்னு நம்பறியா தர்ஷினி..அப்டிலாம் இருக்காது..அதுவும் இந்த காலத்துல பியான்ட் தி ரியாலிடில இப்டி இரு கத..இருக்கும்னு நம்பறியா நீ..?”
“நீ சொல்றது சரி தான்..ஆனா என்னால பட்டுன்னு உண்ம இல்லன்னு ஒத்துக்க முடியாது..ரணதீரபுரத்துல ஒரு கோயில் இருக்காம்..அந்த கோயில்ல இவங்களோட ஹிஸ்ட்ரிய ஒரு கல் வெட்டுல படிக்கலாம்னு சொல்றாங்க..கல்வெட்டுல இருக்குறது உண்மன்னா அந்த வரம் உண்ம தான அந்த வம்சத்துக்கு..அப்போ இந்த ஜெனரேஷன்ல யாராச்சும் இருந்தா அவங்களுக்கும் அந்த வரம் கெடக்கத் தான செய்யும்..”
“ம்ம்..ஆனா நம்ப முடியலியே..?”
“இதுல இந்த வரம் மட்டும் கெடயாது..இன்னொன்னும் இருக்கு..ரணதீரன் அந்த கோயில்ல ஸ்பெஷலான டைம்ல பொறந்து இருக்கறதால அவருக்கு கொன்னவனோட பாடிக்குள்ள போற வரம் மட்டும் தான்..ஆனா அவருக்கு அடுத்து வர்ர அவரோட வம்சத்துல பொறக்குற மூத்த பையனுக்கு இன்னொரு வரமும் இருக்கு..”
“வாட்ட்..என்னடி இது..? புதுப் புது கதயா சொல்ற..?”
“ஆமாடி..எனக்கு கூட நேத்து தான் தெரிஞ்சிச்சு..இந்த ஊர்ல தெரிஞ்சவங்க ஒருத்தங்க சொன்னாங்க..ரணதீர வம்சத்தோட மூத்த ஆண் வாரிசு எறந்தா அவங்க சாக முன்னாடி யார பாத்தாங்களோ அவங்க கண்ணுக்கு செத்து ஒரு நாள் மட்டும் கண்ணுக்கு தெரிவாங்களாம்..”
“எதே என்னடி சொல்ற..?”
“ஆமா டி..சாகறதுக்கு முன்னாடி யார பாக்கறாங்களோ அவங்க கண்ணுக்கு மட்டும் தான்..இந்த வரம் ரணீதரனுக்கு அப்றமா வர்ர அவரு வம்சத்துக்கு தான்..அதுவும் அனழேந்தியா அவரு பண்ண பூஜ எல்லாத்துக்கும் கெடச்சுதாம்..”
“சரி.நீ சொல்றத நம்பறேன்னு வச்சுக்கோயேன்..அதுக்கென்ன ப்ரூப்..சப்போஸ் அந்த வேல் விழியனுங்குற பேர் இருந்தாலும் அது எப்டி ரணதீர வம்சம்னு கன்பார்ம் பண்றது..?”
“அது தான் எனக்கும் புரியல..ஆனா கண்டிப்பா ரணதீர வம்சத்தோட மூத்த வாரிசுன்னா அவரோட பேர் வேல்விழியன்னு தான் முடியும்..இந்த காலத்துல யார் தான் இப்டி பேர் வப்பாங்கன்னு எனக்கும் ஒரே கொழப்பமா தான் இருக்கு..பாக்கலாம் அந்த ஊருக்கு போனதுக்கு அப்றம்..ஏதாச்சும் ஒன்னு நடந்து தான ஆகனும்..” என்றபடி நேரத்தைப் பார்க்க பத்தரை மணி எனக் காட்ட அலுப்பாய் உணர்ந்தவளுக்கு மண்டையைக் குடைந்து கொண்டிருக்க எழுந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தோழியருடன் இணையவும் மனம் வரவில்லை.
ஏதோ தோன்ற அலைபேசியை எடுத்து மித்ரஸ்ரீக்கு அழைக்க இம்முறையும் ஏற்காதவளின் செயலில் கடுப்பாகியது.
“இவ வேற எதுக்கு தான் போன வச்சிகிட்டு இருக்காளோ..எத்தன தடவ அடிச்சாலும் அட்டன்ட் பண்ண மாட்டா..” இதழ்களுக்குள் திட்டியவளை புருவம் சுருக்கி பார்த்தாள்,தோழி.
“யாருக்கு திட்ற..நம்ம மித்ராக்கா..?”
“ஆமா..அந்த வாசு சைக்கோ வேற இந்த பக்கமா வர்ரான்..அவளும் ரணதீரபுரம் தான் வர்ரா..அதான் எதுக்கும் சொல்லிடலாம்னு..”
“எதே..அந்த பைத்தியம் வாசு..இங்கயும் வர்ரானா..? இனி நம்ம பாடு திண்டாட்டம் தான்..சும்மாலே அவன் பண்ற டார்ச்சர் தாங்க முடியாது..இதுல இங்க வந்து என்ன பண்ணப் போறானோ..ஆனா வாசு எவ்ளோ ஸ்மார்டா இருக்கான்..ஆனா மித்ராக்கு அவன் மேல ஒரு இன்பாக்ஷுவேஷன் கூட வர்லங்குறது ஷாக்கிங் தான்..”
“அவ கட்ர புருஷன தான் லவ் பண்ணுவேன்னு சுத்திட்டிருக்குற ஆளு..அவ எப்டி வாசு வ பாப்பா..? அதுவும் பொண்ணுங்க பின்னாடி சுத்தறவன..”
“ஆனா எனக்கு அவ யாரயாச்சுவ் லவ் பண்றாளோ தோணும்..நீ வேணுன்னா பாரு ஷாக்கடிக்கிற மாதிரி இது தான் என் லவ்வர்னு அவ இன்டர்டியூஸ் பண்ணி வக்கப் போறா யாராயாச்சும்..”
“ம்ம்க்கும்..மித்ராவா சான்ஸே இல்ல..” என்றவளின் குரலில் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது.
தொடரும்.
🖋️அதி..!
2024.03.14
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கரெக்ட்டா ஃப்ரெண்ட் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கீங்க… மித்ரா லவ் தான் பண்றா அது ரிஷி தான் போல …
ஆர்யா பாடியை யார் தூக்கிட்டு போனாங்க …