Loading

    நேற்று இந்த ஊருக்கு வந்தவுடன் ரிதன்யாவின் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்களை வரவேற்று உபசரித்து, இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி வீட்டில் மணப்பெண்ணின் குடும்பமும் உறவுகளும் தங்க வைக்கப்பட்டனர்.

   உணவு உண்பதற்காக மட்டும் அருகில் இருந்த மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கே கை கழுவச் செல்லும் போது ரிதன்யாவிற்கு அலைபேசி அழைப்பு வர, பேசி விட்டு வருவதாகக் கூறி, அதில் வந்த வாழ்த்து செய்திக்கு பதில் கூறி விட்டு திரும்பும் நேரத்தில் தான், இந்த வார்த்தைகள் இவள் காதுகளில் வந்து விழுந்தது.

   “நம்ம ரவுடி பயலுக்கு அமைஞ்ச வாழ்வை பார்த்தியா? மகாலட்சுமி மாறி ஒரு பொண்ணு இவன் கையில வந்து மாட்டிக்கனும்னு இருக்குது.”

   “அட ஆமாக்கா அவன் ஒன்னா நம்பர் பொம்பள பொறுக்கின்னு இந்த ஊருக்கே தெரியுமே, அதனால தானே அவனுக்கு யாருமே பொண்ணு கொடுக்க முன் வரல, எதோ சிவகாமி அம்மா முகத்துக்காக தான் அவனோட அத்தை, தன் பொண்ணை அவனுக்கு கொடுக்க மனசே இல்லாட்டியும் சம்மதிச்சாங்க, நிச்சயம் வரைக்கும் போன கல்யாணத்தை நிறுத்திட்டு, இந்த சம்பந்தத்தை வெளியூர்ல இருந்து புடிச்சிட்டு வந்திருக்காங்களே என்ன காரணமா இருக்கும்?”

    “அடியேய் அது தான் இப்ப ஏதோ புதுசா ப்ராஜெக்ட் புடிச்சிருக்கானாமே, அதுக்கு தொழில் பங்குதாரரா இந்த பொண்ணோட அப்பாவைத் பிடிச்சு இருக்கான். காசுக்காக சொந்த குடும்பத்துல இருக்கிற அந்த பொண்ணையே கழட்டி விட்டுட்டு, இந்த பொண்ண புடிச்சிருக்கான். ஆனா வெளிய யாரு கேட்டாலும் தங்கச்சி போல பார்த்தவளை எப்படி கட்டிக்கிறதுன்னு உருட்டிட்டு இருக்கான்.”

    “ஆனா பாவம் க்கா, அந்த பொறுக்கி பயலை பத்தி தெரியாம பொண்ணை கொடுக்கறாங்களே, இந்த பொண்ணோட வாழ்க்கை தான் நாசமாகப் போகுது.”

   “ஆமா ஆமா இப்படி காசுக்காக  சொந்தத்தையே விட்டுட்டு இன்னொருத்தியை புடிச்சவன், இன்னொரு பெரிய பார்ட்டி வந்தா இந்த புள்ளைய விட்டுட்டு, அதை பிடிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?

   சரி சரி நமக்கு எதுக்கு ஊர் வம்பு, அதோட இந்த பெரிய இடத்து பொல்லாப்பு எல்லாம் நமக்கு வேண்டாம். நாம போய் வேலையை பார்க்கலாம் வா.”

    அதோடு அந்த பேச்சுவார்த்தை நின்று விட, கேட்டுக் கொண்டிருந்த ரிதன்யாவின் மனதிற்குள் பயம் சூழத் தொடங்கியது.

    மாப்பிள்ளையை பற்றியும் மாப்பிள்ளையின் குடும்பத்தை பற்றியும் உயர்வாகவும் நல்லவிதமாகவும் தன் தந்தை கூறி இருக்க, உள்ளூர்காரர்கள் இப்படி பேசிக் கொள்வதை கேட்டவள் குழம்பி நின்றாள்.

     குழப்பத்தோடு இருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க, ஒரு அலைபேசி அழைப்பும் வந்தது.

   முதலில் அழுகுரலாக கேட்ட ஒரு பெண்ணின் குரல், தொடர்ந்து பேச ஆரம்பித்தது.

      “அக்கா எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுங்க, நீங்க முடியாதுன்னு சொன்னா நான் சாகத் தான் வேணும்.”

    “என்னமா சொல்ற? போன் பண்ணி ஏதேதோ பேசிட்டு இருக்க? முதல்ல நீ யாரு? எதுக்காக இந்த நேரத்தில் எனக்கு கூப்பிட்டு இருக்க?”

   “நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவரோட வாரிசை சுமந்துட்டு இருக்க, அபலை பொண்ணு நான்.”

    “என்னம்மா சொல்ற?”

    “ஆமா நான் அவரோட அத்தை பொண்ணு, என் மாமாவை பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும், என் தாத்தாவும் பாட்டியும் சொன்னதால தான், அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.

    நிச்சயம் கூட எங்களுக்கு நடந்தது  அந்த தைரியத்துல நான்… நான் என்னையே அவருக்கு கொடுத்திட்டேன். ஆனா திடீர்னு கம்பெனியில ஒரு பிராப்ளம் வரவும், என்னை கழட்டி விட்டுட்டு இப்போ உங்களை கல்யாணம் பண்ணிக்க பார்க்குறாரு. அவர் இப்படி என்னை ஏமாற்றுவார்னு நான் கனவுல கூட நினைக்கல.

    நீங்க இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி நிறுத்துனீங்கன்னா, அடுத்த நிமிஷமே குடும்ப மானத்தை காப்பாத்த, என்னையே அவருக்கு கட்டி வைப்பாங்க. ப்ளீஸ் எனக்கு வாழ்க்கை கொடுங்க.”

    “உனக்கு என்ன பைத்தியமா? இந்த விஷயத்தை நீ உன் குடும்பத்துக்கிட்டயே சொல்லலாமே? அவங்களே இந்த கல்யாணத்தை நிறுத்தி, உனக்கும் உன் மாமாவுக்கும் கல்யாணம் பண்ணி வைப்பாங்க இல்ல.”

     “ இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா என் மாமா அப்படியே பிளேட்ட மாத்திடுவாரு, யார்கிட்டயோ கெட்டுப் போனவளை நான் எதுக்கு கட்டிக்கணும்னு, என் வாழ்க்கையவே பாழாக்கிடுவாரு.

  அதோட இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா, என் குடும்பத்தை பத்தி தான் எல்லாரும் தப்பா பேசுவாங்க. அப்படி நடந்தா குடும்பத்தோட நான் தற்கொலை தான் பண்ணிக்கணும்.  எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்துங்களேன் ப்ளீஸ்.”

   “நீ சொல்லறதெல்லாம் உண்மையா பொய்யான்னு கூட எனக்கு தெரியல, அதோட நேருல வராம, இப்படி போன்ல பேசற உன் பேச்சை நான் எப்படி நம்பறது?”

     “சரி நாளைக்கு உங்களுக்கு சடங்கு முடிஞ்சுட்டு ஆத்துக்கு கூட்டிட்டு போவாங்க, அங்க நானே வந்து உங்களை சந்திக்கிறேன். நான் சொன்ன விஷயம் மட்டும் வெளியே தெரிஞ்சா, என் மாமா என்னை கொலை பண்ணக் கூட தயங்க மாட்டாரு.”

   என்ற படி அந்த அழைப்பு நின்றிருக்க, அதன் பிறகு சிந்தனையோடு இருந்தவள், அடுத்த நாள் சடங்கிற்கு முன்பு, தன் தாய் தந்தையரிடம் மணமகனின் குணம் சரியில்லை என்று ஊரார் அவனைப் பற்றி பேசியதை அவர்களிடம் கூற,

    “ரிதன்யா நீ கேள்வி பட்டது இல்லையா? காதால் கேட்பதும் பொய் தான், நான் அந்த பையனை பத்தி பிஸ்னஸ் சர்க்கிள்ல நல்லா விசாரிச்சுட்டேன், ரொம்ப டேலண்ட்டானவரு, இவ்வளவு சின்ன வயசுலயே தொழில்ல முன்னுக்கு வந்திருக்காரு. அதோட அவங்க குடும்பம் எவ்வளவு பாரம்பரியமானது தெரியுமா ம்மா? அங்க நீ வாக்கப்பட கொடுத்து வச்சிருக்கனும். ஊர் வாய் ஆயிரம் பேசும் அதை எல்லாம் எதுக்கு நம்பற?”

   “நீங்க எதுக்கு அவளுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்கீங்க, என்னடா ரொம்ப வருஷமா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு, அடம் பண்ணிகிட்டு இருந்தவ, இப்போ உடனே சரின்னு சொல்லிட்டாளேன்னு நான் அப்பவே சந்தேகப்பட்டேன்,   ஆரம்பிச்சுட்டியா? இந்த கல்யாணம் மட்டும் நடக்காம போச்சு, என்னையும் உங்க அப்பாவையும் நீ பொணமாத் தான் பார்ப்ப, ஒழுங்க கல்யாண பொண்ணா லட்சணமா சடங்கு செய்ய வெளியே வா.”

    என்றபடி அவர்கள் வெளியேறி விட, வேறு வழியின்று அலங்கரிக்கப்பட்ட சேரில் வந்தமர்ந்த ரிதன்யாவின் முகம், தனது வருங்காலம் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் வெளிறி போய் இருந்தது.

   ஆற்று நீரில் நீராடி அருகில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, புதிய உடைக்கு மாறிய நண்பர்கள் இருவரும், மண்டபத்தில் அலங்கார வேலைப்பாடுகள் எப்படி நடக்கின்றது, என்று பார்த்து விட்டு வருவதற்காக, அங்கு சென்றனர்.

   நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க, இன்னும் பாதி வேலைக்கு மேலாக அங்கு பாக்கி இருப்பதைக் கண்டு, ஏற்பாட்டாளரிடம் சூர்யா காரணத்தை கேட்டுக் கொண்டிருந்தான்.

    “சார் ஒரு சில திங்ஸ் மட்டும் தேவைப் பட்டது, அதை வாங்கறதுக்காக பையன் டவுன் வரைக்கும் போயிருக்கான்.  இப்போ பஸ் வர்ற நேரம் தான், நானே போய் அவனையும் கூட்டிட்டு, பொருளையும் பத்திரமா கொண்டு வந்திடறேன்.”

   “எதுக்கு? இப்போ இங்க செஞ்சிட்டு இருக்க வேலை பாதியில நிக்கறதுக்கா? நீங்க வேலையை கவனிங்க, நாங்களே போய் கூட்டிட்டு வரோம்.”

   என்றபடி நண்பர்கள் இருவரும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி, தங்கள் வண்டியை செலுத்தினர்.
  
  பேருந்து நிறுத்தத்திற்கு சற்று முன்பாகவே வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்தவர்களும் சுற்றி இருந்த கடைக்காரர்களும், வண்டியை சுற்றி நின்றிருக்க, என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு தங்கள் வண்டியை விட்டு இறங்கி ஓடிய நண்பர்கள் இருவரும், அங்கிருந்தவர்களிடம் என்ன விஷயம் என்று விசாரிக்க,

   “நம்ம ஞானத்தை பத்தி தெரியுமில்ல தம்பி, இப்பத் தான் ஊருக்குள்ள வந்திருப்பான் போல, வந்தவுடனே பஸ்ல இருக்க ஒரு புள்ளகிட்ட வம்பு பண்ண இருக்கான், பெரிய பிரச்சனை ஆகிடுச்சு அது தான் இப்படி கூட்டமா நிக்கிறாங்க.”

    “இவனுக்கு இதே வேலையா போச்சு அன்னைக்கே அவன் பல்லை அடிச்சு  ஒடச்சு இருக்கணும். அவன் இப்படி தறிகெட்டு திரியிறதுக்கு முக்கிய காரணமே, அவங்க அப்பன் கந்தசாமி தான். அம்மா இல்லாத பிள்ளையாச்சே, அவனுக்கு அடுத்து தங்கச்சி வேற இருக்கேன்னு, பாவம் பார்த்து விட்டு வெச்சது தான், ரொம்ப பெரிய தப்பா போயிடுச்சு. இப்ப மறுபடியும் அவன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான், அவன…”

    “டேய் மாப்ள நீ எங்க போற? நாளைக்கு கல்யாணத்தை வெச்சுகிட்டு அவன்கிட்ட  போய் மல்லுக்கட்டப் போறியா? நீ இரு நான் போய் என்னன்னு பாக்குறேன், டேய் டேய்…சொல்ல சொல்ல கேட்காம எங்கடா போற?”

   கூட்டத்தை விலக்கிக் கொண்டு விஷ்வா முன்னேறிச் செல்ல, சூர்யாவும் அவன் பின்னே கத்தியபடி வந்து நின்றான். அப்போது அவர்கள் காலடியில் பறந்து வந்து விழுந்தான் ஞானம்.

    தனது துப்பட்டாவை உதறி கழுத்தை சுற்றிப் போட்டபடியே நடந்து வந்த நிலா, அவனது முடியை பற்றித் தூக்கி கண்ணங்கள் இரண்டிலும் பளார் பளார் என்று அறையத் தொடங்கினாள். இடையில் அவனது நண்பர்கள் அவளைத் தாக்க வர, அவர்களையும் பறக்க விட்டுக் கொண்டிருந்தாள்.

    சூர்யா வாயை பிளந்தபடி நின்று கொண்டிருக்க, விஷ்வாவோ அவளை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விட்ட குத்தில் ஞானத்தின் பற்கள், அவர்களின் கண் முன்னே தெறித்து வந்து வெளியே விழுந்தன.

   “ஆமா என்னவோ பஸ்ஸுக்குள்ள  சொன்னயே அதை திரும்ப சொல்லு.”

    “யக்கா யக்கா உங்களைப் பத்தி தெரியாம பண்ணிட்டேன் வுட்டுடுக்கா.”

   “எதே அக்காவா? ஏன்டா எரும மாடு, என்னை பார்த்தா வயசான மாதிரியா இருக்கு, அப்பறம் அதென்ன என்னைப் பத்தி தெரியாம…ஒருவேளை தெரிஞ்சிருந்தா வேற பொண்ணுகிட்ட உன் வேலையை காட்டி இருப்பயா?

   என்னைய நீ கிண்டல் பண்ணியதைக் கூட மன்னிச்சிடுவேன், பச்சக் குழந்தைக்கு அம்மாவான அவங்ககிட்ட, அவ்வளவு கேவலமான நடந்துகிட்ட பார்த்தியா, உன்னை இந்த பஸ்ஸை விட்டு ஏத்திக் கொன்னா கூட என் ஆத்திரம் தீராது .”

   மீண்டும் அவள் அவனை புரட்டி எடுக்கத் தொடங்க, அப்போது வேகமாக பைக்கில் வந்து இறங்கிய ஞானத்தின் தந்தை கந்தசாமி,

    “ஐயோ ஐயோ என் புள்ளய மாட்டை அடிக்கிற மாதிரி, இப்படி போட்டு அடிக்கிறாளே? ஏ பொண்ணு யார் நீ? எவ்வளவு தைரியம் இருந்தா என் பையன் மேலே கைய வைச்சிருப்ப?”

   “வாங்க வாங்க இந்த தருதலையப் பெத்த மகராசர் நீங்க தானா? உங்க பையன் என்ன வேலை பார்த்தான் தெரியுமா? அதோட வயசு வித்தியாசம் கூட பார்க்காம, பொண்ணுங்க கிட்ட எவ்வளவு கேவலமா பேசறான்னு உங்களுக்கு தெரியுமா?”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்