
அகம்-15

துடிவேல் அழகர் கிளம்பியதும், தன் அறையை நோக்கி நடந்தவள், ஏதோ தோன்றியவளாய், தன் அன்னையின் அறையில் விளக்கெரியவும், அவரின் அறையை நோக்கிப் போனாள்.
அறையில் அத்தனை விளக்குகளும் ஒளிர்ந்துக் கொண்டிருக்க, தன் போக்கில் எதிரிலிருந்த சுவற்றில் பார்வையைப் பதித்தபடி வெறித்துக் கொண்டிருந்தார் தங்க மீனாட்சி.
“ம்மா! என்னத்துக்குமா இப்படி உட்கார்ந்திருக்கிறே? என்ன ஆச்சு?” என அவள் தாயை உலுக்கிய போதும், அவரிடம் எந்த பதிலும் இல்லை.
“எம்மா! என்ன ஆச்சுமா? பதில் சொல்லு! ம்மா!” தொடர் உலுக்கல்களுக்குப் பின்,
“ஹான்..!” எதோ கனவிலிருந்து விழித்தவர் போல், திடுக்கிட்டு விழித்து அவளைப் பார்த்தவர்,
“என்னை மன்னிச்சுரு டி தங்கம்! ஏதோ கோபத்தில் உன்னை அடிச்சுட்டேன் ராசாத்தி! அம்மாவை மன்னிச்சுரு தங்கம்!” மகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் துவங்கியிருந்தார்.
“ம்மா! என்னத்துக்கு தூங்காமல் இப்படி சுவற்றை வெறிச்சுட்டு உட்கார்ந்து கிடக்க? இப்போ உறங்கு எதுவா இருந்தாலும் காலையில் பேசலாம்.!” தன் அன்னையைக் கட்டிலில் படுக்க வைக்க முயன்றாள் அவள்.
“இதுவரை நான் உன்கிட்டே எதுவும் சொன்னதே இல்லைடி விழி! நான் பண்ணின தப்பை நீ பண்ணிடாதே டி விழி!” எனச் சொன்னவரின் கண்களில் நீர் தளும்பி நின்று, விழுவதற்கு நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.
“இங்கே பாரும்மா! இப்படியெல்லாம் அழாதே! நீ அழறதைப் பார்த்தால் எனக்கு என்னமோ பண்ணுது! ஏம்மா இப்படியெல்லாம் பேசறே?” இத்தனை நாள் சிரித்த முகத்துடனும், கண்டிப்புடனுமே பார்த்துப் பழகிய அன்னையின் துவண்ட முகமும் புதிரான பேச்சும் அவளை ஏதோ செய்தது.
“நீயும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்டி விழி! இன்னும் சின்னப்பிள்ளைத் தனமா நீ இருக்கக் கூடாது டி! பெத்தவங்க பேச்சைக் கேட்காமல், என் வாழ்க்கை நான் தான் முடிவெடுப்பேன்னு நானாக எடுத்த முடிவு தான், என்னை இந்த நிலையில் நிறுத்தியிருக்கு.
அவங்க சொல்லும் போது கேட்டிருந்தால், நான் இப்படி தனி மரமா நின்னிருக்க மாட்டேன். விதை ஒண்ணு போட்டால், சுரை ஒண்ணா முளைக்கும்? நீயும் என்னை மாதிரி படுகுழியில் விழுந்திருவியோன்னு நெஞ்சு அடிச்சுக்குதுடி விழி!” என அவர் கண்ணீருடன் சொல்லவும், புரியாமல் அன்னையைப் பார்த்தாள் கருவிழி.
“நான் உன்னைப் பெத்தவடி, என் புள்ளை என்ன செய்யறான்னு எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? கொஞ்ச நாளாய் உன் போக்கு சரியில்லைன்னு எனக்கு தெரியும் டி! ஆனால், இந்த வயசு புரியாத புதிரான வயசு. எதை வேணாம்ன்னு நாம சொல்றோமோ, அதைத் தான் கெட்டியா பிடிச்சுக்கும்ன்னு எனக்குத் தெரியும் டி! அதனால் விட்டுப் பிடிப்போம்ன்னு தான் உன்னைக் கண்டிக்காமல் இருந்தேன். ஆனால், இப்போ காலேஜில் அந்தப் பையனோட உன்னை சேர்த்து வச்சு பேசும் போது, எனக்கு வேதனையாய் இருக்குடி விழி!”
“ம்மா..! நான்.. அது..!” வார்த்தைகள் தடுமாறியது கருவிழிக்கு. இத்தனை நாளாய் தன் சங்கதி யாருக்கும் தெரியாது என நினைத்திருக்க, தன் அன்னைக்கே தெரிந்திருக்கிறது என்பதே அவளுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது.
“எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேட்கிறியா?” மகளின் பார்வையையே வார்த்தைகளாய் மொழிபெயர்த்து கேள்வியாய் திருப்பினார் தங்க மீனாட்சி.
அவரின் கேள்விக்கு கருவிழியின் தலை சம்மதமாய் ஆடியது.
“நீ அன்றைக்கு பாண்டிச்சேரி போகும் முன்னே எழுதி வச்சிட்டு போனியே லெட்டரு, அதை அழகர் எடுக்கும் முன்னமே நான் படிச்சுட்டேன்.! நானும் பனிரெண்டாவது வரை படிச்சிருக்கேன்டி! உன் ஆத்தாளுக்கு படிக்க தெரியாது, கூமுட்டை சிறுக்கின்னு நினைச்சியோ?” மகள் மீதான கோபத்தில் கொஞ்சம் குரலுயர்ந்தது அவருக்கு.
“ம்மா! நான் தப்பு எதுவும் பண்ணலை மா! என்னை நம்ப மாட்டியா நீ?”
“நீ தப்பான முடிவை எடுத்துடக் கூடாதுன்னு தானே இம்புட்டையும் இந்த நேரத்தில் உன் கிட்டே சொல்லிகிட்டு கிடக்கேன்.!” பதில் சொல்லாது, தன் அன்னையை நிமிர்ந்துப் பார்க்க திராணியற்று கூனிக்குருகி அமர்ந்திருந்தாள் கருவிழி.
“இந்தாரு டி! நானும் உன் வயசையெல்லாம் கடந்து வந்தவ தான். நானும் ஸ்கூல் படிப்பை முடிச்சுட்டு உன்னை மாதிரியே காலேஜெல்லாம் போனேன். எங்க அப்பனுக்கு நான் ஒத்தைப் பொண்ணு. உன் மாமனுங்களை விட அவருக்கு எம்மேல பாசம் கொஞ்சம் கூடுதல்தேன். இந்த வீட்டோட இளவரசியாகத்தான் வளர்ந்தேன். காலேஜ் போனப்போ படிப்பு வந்துச்சோ இல்லையோ, கண்ணு மண்ணு தெரியாமல் காதல் வந்துச்சு. பெத்தவங்களை என் அண்ணேங்களை, அம்புட்டு பேரையும் எதிர்த்து நிக்க சொல்லுச்சு. அந்த வயசில், என்னைப் பெத்தவங்களே எனக்கு எதிரியாய் தெரிஞ்சாங்க! உங்க தாத்தனை மீறிப் போய் நான் விரும்பினவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ எனக்கு வயசு பதினேழு!” உயர் மின்னழுத்தம் தாக்கியதைப் போன்ற அதிர்வுடன், அன்னையை நிமிர்ந்துப் பார்த்தாள் கருவிழி.
“என்னடி பார்க்கிறே.? நெசந்தேன். நான் சொல்றது அம்புட்டும் சத்தியம்! அவசரத்திலும், உணர்ச்சி வேகத்திலும் எடுக்கிற முடிவுகள் நம்மளை நிரந்தரமா புதைக்குழியில் தள்ளிடும் விழி. இப்படி ஆசைப்பட்டு கல்யாணம் கட்டி நாங்க எத்தனை வருஷம் வாழ்ந்துட்டோம்ன்னு நினைக்கிறே? வெறும் ரெண்டே மாசந்தேன் என் கல்யாண வாழ்க்கை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாளுன்னு என் ஆத்தா சொல்லும். அப்போவெல்லாம் எனக்கு அதோட அர்த்தம் விளங்குனதே இல்லை. எப்போ வெளங்குச்சு தெரியுமா? உன்னை ரெண்டு மாசக் கருவா வயிற்றில் சுமந்துக்கிட்டு அநாதையாட்டம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நின்னப்போ தான் அதோட அர்த்தம் புரிஞ்சுச்சு. உன் சின்ன மாமன் தான் பஸ் ஸ்டாண்டில் நின்னவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துச்சு. யார் முகத்தையும் என்னால் நிமிர்ந்து பார்க்கவே முடியலை. அம்புட்டு அசிங்கமா இருந்துச்சு. போக்கிடமும் இல்லை. உயிரை மாய்ச்சுக்கிட்டு செத்துப் போக தைரியமும் இல்லை. ஒரு பெரிய பாவத்தைப் பண்ணிட்டு, அந்தப் பாவத்துக்கு சம்பளமா என் வயிற்றில் உன்னையும் சுமந்துட்டு வந்துட்டேனேன்னு ரொம்ப குத்தவுணர்ச்சியா இருந்துச்சு. நீ எனக்கு பாவத்தின் சம்பளமா தான் தெரிஞ்சடி! நீ பிறந்தப்போவெல்லாம் உன் மேல் எனக்கு ஒட்டுதலே இருந்தது இல்லை. பெத்து போட்டது மட்டும்தேன் நான். உன்னை தூக்கியெடுத்து வளர்த்ததெல்லாம் உன் உன் அத்தைங்கதேன். அதிலேயும் அழகருக்கு சின்னதில் இருந்தே உம்மேல் ரொம்பப் பாசம். உன்னை ஒத்த சொல்லு சொல்ல விட மாட்டான். இப்போ வரை அவன் மாறவே இல்லை.!”
அண்ணன் மகனைப் பற்றிச் சொன்னதும் அவரின் முகம் மென்மையாய் மாறியது.
தங்க மீனாட்சி சொன்ன நிகழ்வுகளின் கனம் தாங்காது, கண்களில் நீர் திரையிட்டு பார்வையை மறைக்க, தன்னையே அருவருத்துப் போனவளாய் கற்சிலையாய் அமர்ந்திருந்தாள் கருவிழி.
“எம்மேல் இருந்த பாசத்தில் என் அப்பனும், ஆத்தாளும் அப்போதைக்கு வஞ்சாலும், எனக்கு தோள் கொடுத்து துணையாய் நின்னாங்க! ஒருவேளை அவங்க என்னை ஏத்துக்கலைன்னா நம்ம நிலையை கொஞ்சம் யோசிச்சு பாரு. அப்போ முடிவு பண்ணினேன், என்னைக்கு எனக்கு தாலி கட்டினவன் என்னை விட்டுட்டு போனானோ, அன்னைக்கே அவன் செத்துட்டான்னு முடிவு பண்ணி, தாலியைக் கழட்டி வீசிட்டேன். நீ எம் மவளா மட்டும் தான் வளரணும். எம் மவளா மட்டுந்தேன் இந்த ஊரு உன்னைப் பார்க்கணும்ன்னு தான், இந்த தங்க மீனாட்சியோட மவளாகத்தான் உன்னை வளர்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா உன், சிரிப்பும் மழலைப் பேச்சும் என்னை மாத்திச்சு. அப்போ இருந்து இப்போ வரை, உனக்காக மட்டும் தான் இந்த உயிரைப் பிடிச்சு வச்சிருக்கேன்.! நான் பண்ணின மாதிரி முட்டாள்தனமாய் முடிவெடுத்து, வாழ்க்கையைத் தொலைச்சுப்புடாதே டி விழி! இந்த ஊரும் உலகமும் என்னென்னவோ பேசிச்சு. எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு இந்த நிமிஷம் வரை உயிரோட இருக்கேன்னா, அது உனக்காகவும் என் அப்பனுக்கும் ஆத்தாவுக்காகவும் மட்டும்தேன்.! எம் மூலமா அவங்க பட்ட அவமானமும் வேதனையும் போதும்டி விழி! இன்னொரு அவமானத்தை தேடி தந்துடாதே..!” மகளின் கரத்தை தன் கரத்திற்குள் பொதிந்தபடி கேட்டார் தங்க மீனாட்சி.
கண்கள் கலங்க தேகம் நடுக்கம் கொள்ள, உண்மையின் கனத்தைத் தாங்க முடியாதாவளாய் அமர்ந்திருந்தாள் கருவிழி. தன் தந்தை செத்துப் போய்விட்டார் என்ற பொய் கூட, அவளுக்கு இதுவரை வேதனையையோ, வலியையோ தந்ததில்லை. ஆனால் உண்மை வலித்தது. உள்ளத்தை சுட்டுப் பொசுக்கியது. உண்மை சுடும் என்பது இது தானோ? தன் தாயின் வார்த்தைகளால் தெரிந்துக் கொண்ட உண்மை சுமக்கவே முடியாத அளவிற்கு ரொம்பவே கனமாய் இருந்தது.
ஆசை ஆசையாய் சுமந்து பெற வேண்டிய பிள்ளையைப் பாவத்தின் சம்பளமாய் எண்ணியிருக்கிறார் என்றால் எத்தனை வேதனையை அவர் அனுபவித்திருக்கக் கூடும்? வேதனையில் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது கருவிழிக்கு.
‘மாமா எங்கே இருக்கே? உன் தோளில் சாய்ஞ்சு கதறி அழணும் போல் இருக்கு!’ அவள் மனம் அழகரைத் தேடியது. ஆனால் அவள் மனம் ஏன் இந்த இக்கட்டான சூழலில் அவனை மட்டும் தேடுகிறதென யோசிக்க மறந்துப் போனாள் கருவிழி.
“என்னடா இவ பாவத்தின் சம்பளம்ன்னு சொல்றாளேன்னு யோசிக்கிறியா விழி? அவனை நான் மனசாரத்தான் விரும்பினேன். அவனைக் கல்யாணம் பண்ணினப்போ பெருசா எதையோ சாதிச்சுட்ட மாதிரிதேன் இருந்துச்சு. ஆனால் அதெல்லாம் வயசுக் கோளாறுன்னு அப்போ விளங்கவே இல்லையே? அதுக்காக என்னை ஏமாத்தி வயித்துப் பிள்ளையோட விட்டுட்டு போனவனை நினைச்சுக்கிட்டு காலம் முழுசும் காத்திருக்க எனக்கு மனசு ஒப்பவே இல்லை. என்னை விட்டுட்டுப் போனவன் மேல வெறுப்பும் கோபமும் தான் அதிகமா இருந்துச்சு. இது ஒண்ணும் கதை இல்லையே துரோகம் பண்ணிட்டு போனவன் திரும்பி வந்து திருந்தி வந்து ஏத்துப்பான்னு நினைச்சு காத்துட்டு இருக்கிறதுக்கு. இது நிஜம்.! இது உண்மை.! அவன் மேல் இருந்த ஒட்டுமொத்த கோபமும், நான் பெத்த குழந்தையாய் இருந்தாலும் அது உம்மேல் தான் திரும்பிச்சு. குழந்தையில் உன்னை தூக்கறதுக்குக் கூட எனக்கு தயக்கமா பயமா இருக்கும். எங்கே நீயும் அவனை மாதிரியே என்னை பழி வாங்கிடுவியோன்னு பயமா இருக்கும். என் குடும்பம் மட்டும் எனக்கு ஆதரவா இல்லாமல் இருந்திருந்தால், அவன் மேல் இருந்தக் கோபத்தில், நான் உன்னைக் கொன்னுருந்தால் கூட ஆச்சரியப்படுறதுக்கில்லை.!” என அவர் சொன்னதும், தாயின் நிலையைப் புரிந்துக் கொள்ள முடிந்தாலும் கூட, சுத்தியில் ஓங்கி அடித்தது போன்ற வலியை உணர்ந்தது மனம். அந்த வலி அவள் உயிரையும் ஊடுருவி துளைத்தது.
“ம்மா! இப்போவும் என்னை உனக்குப் பிடிக்காதாம்மா?” தொண்டை அடைக்க, வார்த்தைகளைக் கோர்க்க முடியாது கேட்டாள் கருவிழி.
‘ஆம்’ எனச் சொல்லிவிடுவாரோ, என்ற பயம் அவள் விழிகளில் தெரிந்தது.
“காலம் தான் பெரிய மருந்து விழி! காலம் எல்லாத்தையும் மாத்திச்சு. என்னை உனக்காக வாழ வச்சிச்சு. ஆனால் அது ஒரே நாளில் நடக்கலை.!” எனச் சொன்னவர்,
“நீயும் என்னை ஏமாத்திட மாட்டியே டி? இன்னொரு ஏமாற்றத்தை தாங்கற வலு இல்லை டி!” குரல் கமற அவர் சொல்ல,
“மாட்டேன் மா! மாட்டேன்! நான் உம் மவம்மா! நான் அழகரையே கட்டிக்கிறேன்ம்மா!” என அன்னையின் கரம் பிடித்து சத்தியம் வைத்தவள், தாயின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேட, மகளை அரவணைத்துக் கொண்ட மீனாட்சியின் பார்வை, அறையின் கதவு நிலைக்கருகே நின்றிருந்த சொக்கேசனைத் தொட்டு நின்றது.
சொக்கேசன் கண்களை மூடித் திறந்து ‘எல்லாம் நன்மைக்கே..!’ என்பதுபோல் சைகை செய்ய சம்மதமாய் தலையசைத்தவர், மகளின் முதுகை ஆதரவாய் வருடிக் கொடுத்தார்.
தன் இரகசியங்கள் வெளியே வந்திருந்தாலும், தன் மகளை நல்வழிப்படுத்திவிட்ட நிம்மதி அந்தத் தாயின் முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்பாடா ஒருவழியா கருகரு ஒரு முடிவுக்கு வந்திடுச்சு … எவ்வளவு அழகான குடும்பம் … இந்த குடும்பத்து மேல அவ்வளவு மரியாதை வருது …
உண்மை தான் டியர்.. ஆனால் இது முடிவு இல்லை. ஆரம்பம் தான்.😂
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💜
மீனா அம்மாவின் கடந்த காலம் மனதை கனக்க வைக்கின்றது.
வயது கோளாறில், உணர்ச்சிவசப்பட்டு தான்தோன்றிதனமாக அவர் எடுத்த ஒரு முடிவின் பயனாக, பாவத்தின் சம்பளமாய் ஒரு பிள்ளை பேறு, விதியே என்றொரு வாழ்வு.
பெற்றவர்களுக்கும், உடன் பிறந்தோருக்கும் தான் தேடி தந்த அவமானத்தை, தனது பிள்ளையும் அவர்களுக்கு தந்து விடுவாளோ என்ற பயம்.
பொய் அளிக்காத வலியை உண்மை அளித்து விட்டது. 👏🏼
கருவிழி மனம் தெளிந்து இருந்தாலும், அவள் இன்று அறிந்து கொண்ட உண்மைகளால் வாழ்வை இன்னமும் நன்றாக புரிந்து கொள்வாள்.
உண்மை தான் டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 💜