
அத்தியாயம் 41
“என்ன செல்லம்மா இப்படிப் பண்ற. உன் அத்தான் இவ்வளவு தூரம் மாறி வந்திருக்கேன், அதை நினைச்சுப் பெருமைப்படுவியா. அதை விட்டுட்டு ஏன் மாறினேன், எப்படி மாறினேன் என்கிற ஆராய்ச்சி எல்லாம் முக்கியமா.” தப்பிக்கப் பார்த்தான் நாகா.
“கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க.” விடாப்பிடியாகக் கேட்டாள் ஊர்மி.
நீ வேண்டாம் போடி என்று அவன் சொன்னால் தனக்கு அதில் பெரிய நஷ்டம் ஒன்றும் இல்லை என்று வீரப்பாய் நினைத்தாலும், மனதின் ஒரு ஓரம் அக்காக்கள், தங்கைகள், மாமனார் ஆகியவர்களுக்காக இல்லாமல் தனக்காகவும் இந்த வாழ்க்கை நிலைக்க வேண்டும் என்கிற ஆசை அவளுக்குள் இருந்தது உண்மை. எப்போது பார் கரித்துக்கொண்டிருக்கும் இவன் உடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் மனதைக் காரித்துப்பத் தோன்றினாலும் தடுக்க முடியவில்லை ஊர்மியால்.
“என்னோட க்ளயன்ட் பேசினதையும், நீ பேசினதையும் கேட்டதால மட்டும் தான் மாறினேனான்னு கேட்டா அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா நான் அந்த மாதிரி ஆளும் கிடையாது.” நாகா சொல்ல, “அது தான் ஊர் அறிந்த விஷயமாச்சே.“ என்றாள் ஊர்மி.
“நீ அரசுகிட்ட பேசினதைக் கேட்ட பிறகு வந்த சுவடே தெரியாம நான் நகர்ந்து போயிட்டேன். தனியா உட்கார்ந்து நிறைய யோசிச்சேன். எல்லா வகையிலும் நீ சிறந்தவ தான் என்னும் போது உன்னை விட்டுடத் தோணல.
அம்மா இல்லாம அப்பா எப்படித் தவிக்கிறாருன்னு எனக்குத் தெரியும். முன்னாடியெல்லாம் பொண்ணுங்க மேல நம்பிக்கை இல்லாம கல்யாணத்தைப் பத்தின ஆசையில்லாம சுத்திக்கிட்டு இருக்கும் போது, என்னைக் கூப்பிட்டு வைச்சு அத்தனை பேசுவார் அப்பா.
தனியா வாழ்வதற்காக இயற்கை நம்மைப் படைக்கலன்னு ஆழமா என் மனசுக்குள் பதிய வைச்சுட்டார்.” தன் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தவனை உற்றுக் கவனித்தாள் ஊர்மி.
“இன்னும் ஒரு வருஷத்துக்கு நீ தப்புப் பண்ணா நான் தட்டிக் கேட்பேன். நல்லது பண்ணா பாராட்டுவேன். நீ செய்யும் செயல்களைப் பொறுத்து எதிர்வினை ஆற்றிக்கொண்டே என்றாலும் நான் உன்கூடவே தான் இருப்பேன்னு சொன்னியே. ஆயுளுக்கும் அப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் னு தோணுச்சு.” என்க, “அப்ப கடைசி வரை தப்புப் பண்ணாத நல்லவனா இருக்கணும் என்கிற ஐடியா இல்ல.” அப்படித்தானே நக்கலடித்தாள் ஊர்மி.
“தப்பே பண்ணாம இருக்க நான் ஒன்னும் கடவுள் இல்ல. அப்படிக் கூடச் சொல்லிட முடியாது. கடவுள் கூட சில தப்புகள் செய்யுறார் தான். நான் கொஞ்சம் மண்டைச்சூடு உள்ளவன் தான். அவசரப்பட்டு ஏதாவது செய்து வைக்கக் கூடியவன் தான். ஆனால் உன்னளவு யாரும் என்னால் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாங்க. இனிமேல் நீயும் என்னால் பாதிக்கப்பட மாட்ட.
ஒருவேளை நான் தெரியாம ஏதாவது தப்புப் பண்ணிட்டா அதை எனக்குப் புரியவை. நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். ஆரம்பத்தில் அடிபிடியா போனாலும் காலப்போக்கில் பிரச்சனையே இல்லாத நல்ல மனிதனா உனக்குப் பிடிச்ச மாதிரி மாறிடுவேன்.” உறுதியாகச் சொன்னான் நாகா.
“மனசு மாறினீங்க சரி, ஆனா இந்த மானங்கெட்ட எண்ணம் எதுக்கு வந்தது.” என்றாள் தன் தலையில் முக்கால்வாசி உதிர்ந்திருந்த மல்லிப்பூவை எடுத்து அவன் முகத்தில் அடித்தபடி.
“நான் சொல்லுவேன் ஆனா நீ என்னைத் தப்பா நினைக்கக் கூடாது.” பீடிகை போட, “அது நீங்க சொல்ற பதிலில் இருக்கு.” என்றாள்.
“அது வந்து, நீ என்ன தான் என்கூட தான் இருப்பேன்னு சொன்னாலும், அது உண்மையிலே நம்ம கல்யாணத்துக்கு கொடுக்கிற மரியாதையால் தானா? இல்ல உன் அக்கா தங்கச்சிங்களோடவே இருக்கலாம் என்கிற ஆசைக்காக தானான்னு கொஞ்சமே கொஞ்சம், இங்க பாரு சின்ன எறும்பு அளவு மனசுக்குள்ள சந்தேகம் வந்தது.
அந்தச் சந்தேகமும் முழுசாப் போயிடுச்சுன்னா என் தங்கத்தை இனி எதுக்காகவும் நான் உரசிப் பார்க்க மாட்டேன் இல்ல. அதுக்குத் தான் இப்படி. காட் ப்ராமிஸ் ட்ரை மட்டும் பண்ற ஐடியாவில் தான் வந்தேன். பட் நீ முரண்டு பிடிக்காம அமைதியா என்னை ஏத்துக்கவும் நானும் கவிழ்ந்துட்டேன்.” என்றுவிட்டு அசடுவழிந்து சிரித்தான்.
“ரொம்ப வழியுது துடைச்சுக்கோங்க.” புடவை முந்தானையை நீட்டினாள் ஊர்மி. இவன் பதிலுக்கு ஏதோ சொல்ல வரும் நேரத்தில் கீழே, “லீலாக்கா” என்று தேவகியின் அலறல் சத்தம் கேட்டது.
என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக்கொண்டு எழுந்த ஊர்மியின் கரம் பற்றிய நாகா, “ஏய் இப்படியே கீழ போய் உன் மானத்தோட சேர்த்து என் மானத்தையும் வாங்காத. ஒழுங்கா புடவையை சரிபண்ணிட்டு வா. நான் போய் என்னன்னு பார்க்கிறேன்.” என்றவன் அவசரமாக முகத்தைக் கழுவி, தன்னுடைய சட்டையைத் தேடிப் போட்டுக்கொண்டு கலைந்திருந்த முடியை கைகளால் சரிபடுத்திக்கொண்டே கீழே இறங்கினான்.
“ருக்குக்கா, ஊர்மிக்கா யாராவது வாங்களேன்.” கத்திய தேவகி, தங்களின் அறைக்குள் தரையில் குப்புற விழுந்து கிடந்த லீலாவைப் பிரட்டிப் போட்டு, சுயநினைவு இல்லாமல் கிடப்பவளைப் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.
கல்லூரி அட்மிஷனிற்கு இண்டர்வியூவிற்கு செல்ல வேண்டும் என்று வெகுசீக்கிரமாகவே எழுந்து தயாராகி இருந்தவள், வீலாவிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என அவள் இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே வர லீலா தரையில் தாறுமாறாக விழுந்து கிடந்தாள்.
இவள் போட்ட சத்தத்தில் மற்ற அனைவரும் வந்து சேர, “தேவகி இந்தத் தண்ணீயை அவங்க முகத்தில் தெளிச்சுப் பாருங்க.” தர்மா தான் முதலில் சுதாரித்து இருந்தான்.
அவன் கொடுத்த தண்ணீரை வாங்கி, தேவகி தன் பலம் மொத்தத்தையும் ஒன்று திரட்டி அடித்த பின்னரும் அது லீலாவின் விழித்திரையை சிறிதும் அசைக்கவில்லை.
“அக்கா கண்ணைத் திறந்திடுங்க, எனக்குப் பயமா இருக்கு.” என்று லீலாவைக் கட்டிக்கொண்டு அழுபவளுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை தர்மாவிற்கு. அவனும் அதிர்ச்சியில் தான் இருந்தான்.
அப்போது தான் வந்த ருக்கு தேவகிக்குச் சற்றும் குறையாத பதற்றத்துடன், “அக்கா என்னாச்சு” என்று லீலாவிடம் நெருங்க, “ஏன் ருக்குக்கா இப்படிப் பண்ணீங்க. நேத்து நான் அக்கா கூட தூங்கிக்கிறேன்னு சொன்னதுக்கு அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்னு என்னை அனுப்பிட்டு, ஏன் லீலா அக்காவை தனியா விட்டீங்க. கூட யாராவது இருந்திருந்தா அக்காவுக்கு இப்படி ஆகி இருக்காது தானே. எனக்கு என் அக்கா வேணும், அவங்களை எழுப்புங்க.” ருக்குவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு தேவகி அழ, ருக்குவின் ஒட்டுமொத்த கோவமும் ஊர்மியின் புறம் திரும்பியது.
தேவகி கடைக்குட்டி என்பதால் அவளை எப்போதும் செல்லமாக தான் வளர்த்தார்கள் அவள் தமக்கைகள். மற்ற ஜோடிகளை விட அவளுக்கும், அவள் கணவனுக்கும் தான் புரிதல் அதிகமாகத் தெரிகிறது. அவர்கள் எப்படியும் தங்கள் வாழ்வை ஆரம்பித்து இருப்பார்கள். அதனால் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து ருக்கு செய்த காரியம் இப்படி எதிர்வினையாற்றும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.
“சாதாரண மயக்கம் அதுக்கு போய் ஏன் இவ்வளவு பில்டப்.” என்ற நாகா, லீலாவின் புஜத்தில் இருந்த இரத்தக்கறையைப் பார்த்ததும் துணுக்குற்றான்.
புஜத்தில் இரத்தம் வடிந்து, அவள் அணிந்திருந்த சந்தன நிற ஜாக்கெட்டின் சில பகுதிகள் மட்டும் அடர் சிவப்பாக்கி இருந்தது. லீலாவை மடியில் வைத்துக்கொண்டு அவளை எழுப்புகிறேன் பேர்வழி என்று அழுது புலம்பிக் கொண்டிருந்த தேவகி இரத்தம் படிந்த கையைக் கவனித்திருக்கவில்லை.
என்ன காயமாக இருக்கும் என்று நாகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “என்னாச்சு அக்கா தேவகி எதுக்கு கத்துனா.” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ஊர்மி.
அவளைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டடாள் ருக்கு. தங்கையின் இரண்டு புஜங்களையும் தன் இரண்டு கரங்களால் பிடித்தவளிடத்தில் அத்தனை வேகம். மென்மையே உருவான ருக்குவிற்குள் எப்படி அத்தனை பலம் வந்தது என்று ஊர்மிக்குத் தெரியவில்லை. அவள் பிடித்த இடத்தில் நல்ல வலி.
“ஏன்டி இப்படிப் பண்ண. உன்னால அக்கா கூட இருக்க முடியாதுன்னு சொல்லி இருந்தன்னா, நான் என் புருஷன்கிட்ட சண்டை போட்டாவது இங்க வந்து தங்கி இருப்பேனே.” நடந்தததிற்கு அவள் தான் காரணம் என்பது போல் பேச, ஊர்மிக்கு அழுகை விக்கிக்கொண்டு வந்தது.
“ஏங்க இப்ப எதுக்கு அவளைக் கோச்சுக்கிறீங்க. உங்க அக்கா என்ன சின்னப்பொண்ணா. அவங்களுக்குத் துணைக்கு ஆள் பார்த்து வைக்க.
என் பொண்டாட்டி நேத்து அவங்க கூட இருந்து, அவங்களுக்கு ஏற்பட்டது இவளுக்கு ஏற்பட்டு இருந்தா என் நிலைமை என்ன ஆகுறது. அதோட இவ மட்டும் தான் அவங்க கூடப்பிறந்தவங்களா. ஏன் நீங்க இரண்டு பேர் இல்ல. நீங்க இரண்டு பேரும் சாமர்த்தியமா உங்க உங்க புருஷன் கூட இருந்துப்பீங்க. நாங்க மட்டும் தனித்தனியா இருக்கணுமா?” சூழ்நிலைக்கு சம்மந்தம் இல்லாமல் பேசும் நாகாவின் வாயைப் பொத்தினாள் ஊர்மி.
“ஐயோ இரத்தம், அக்கா இங்க பாருங்க. லீலா அக்கா கையில் இவ்வளவு இரத்தம்.” தேவகி லீலாவை சற்று பிரட்ட அனைவரும் மிரண்டு போயினர். லீலாவின் காலடியில் நின்று விலகி இருந்த அவள் புடவையை இழுத்துச் சரிசெய்து கொண்டிருந்த தர்மாவும் அப்போது தான் அதைக் கவனித்தான்.
வீட்டில் வழக்கத்திற்கு மாறான அதீத சத்தம் கேட்டு வந்த தெய்வா நிலைமை உணர்ந்தவனாக கோபித்தான். “அறிவில்லை உங்களுக்கு. இக்கட்டான நிலையில் அடுத்து என்ன பண்ணலாம் னு யோசிக்கிறதை விட்டுட்டு, சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க. ருக்கு நீங்களுமா, சீக்கிரம் அவங்களைத் தூக்குங்க. ஹாஸ்பிடல் கொண்டு போகலாம்.” எனச் சூழ்நிலையைக் கையில் எடுத்தான்.
துரிதகதியில் லீலாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மருத்துவர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர் அனைவரும். காரில் ஏறும் நேரத்தில் ஏதோதோ சொல்லி நழுவிக்கொண்ட தெய்வா, லீலா இருந்த அறையை நோட்டம் விட ஆரம்பித்தான். அவன் கணிப்பு பொய்யாகவில்லை. அந்த அறையின் பாத்ரூம் ஜன்னலைக் கழட்டி யாரோ உள்ளே வந்து சென்றதற்கான தடயங்கள் அங்கே இருந்தது. அதோடு மட்டும் இல்லாமல் பாத்ரூம் தரையில் இருந்து சிரன்ஜ் ஒன்றையும் கண்டெடுத்திருந்தான்.
யாரோ அறைக்குள் வந்து லீலாவிற்கு ஏதோ மருந்தை ஊசி மூலம் ஏற்ற முயன்ற வேளையில், லீலா விழித்து கைகலப்பாக புஜத்தில் ஓங்கிக் குத்தி மருந்தைச் செலுத்திவிட்டு, வந்த அதே பாத்ரூம் ஜன்னல் வழியாக அவன் ஓடும் போது சிரன்ஜ் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று கணித்தான் தெய்வா.
முந்தைய நாள் ருக்கு சொன்ன கைலாஷ் கதை நினைவு வந்தாலும் அதை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, இது உண்மையில் லீலாவிற்கு வைத்த குறிதானா இல்லை செல்வாவிற்கு வைத்து அவன் இல்லாத காரணத்தால் லீலாவிற்கு கிடைத்ததா என்று இரண்டு பக்கமும் யோசித்தான். அவன் போலீஸ் புத்தி அவனை அப்படி சிந்திக்க வைத்தது.
அப்பா வந்தால் அவருக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்பதால் தான் அவன் இதைக் கையில் எடுத்தது. அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவனை இதில் வேகமெடுக்க வைக்க, அடுத்த நிமிடமே கிளம்பினான் செல்வா வேலை செய்யும் மருத்துவமனை நோக்கி.
அங்கு செல்வாவைப் பற்றியும், சமீபத்தில் அவனுக்கு யாருடனாவது சண்டை ஏற்பட்டதா என்பதையும் விசாரிக்க அனைவரும் அவன் நல்லவன், வல்லவன், அமைதியானவன் என்று மட்டுமே சொல்ல தெய்வாவிற்குக் குழப்பம் மேலோங்கியது.
சிந்தனையில் இருந்தவனின் அலைபேசி சப்தமெழுப்ப முன்பின் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து அழைப்பு என்றாலும் எடுத்துப் பேசினான்.
“என்னங்க நான் தான். அவ்வளவு சொன்னேனே எங்க கூட வாங்கன்னு. அக்காவுக்கு யாரோ விஷ ஊசி போட்டுட்டாங்களாம். போலீஸ் கேஸ், போலீஸ் கம்ப்ளைண்ட் காபி இருந்தா தான் நாங்க அடுத்து ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்போம் னு சொல்றாங்க. எனக்கு என் அக்கா வேணும், ஏதாவது பண்ணுங்க.” அழுதாள் ருக்கு.
“ருக்கு அழாதீங்க, இது ஹாஸ்பிட்டல் வழக்கம். அவங்க செக்யூரிட்டிக்காக இதெல்லாம் கேட்பாங்க தான். நான் இப்பவே அங்க பேசுறேன். உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சிடுவாங்க.” தைரியம் சொன்னவன் சொன்னது போல் செய்தும் முடித்தான்.
லீலாவின் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. தகவல் கேள்விப்பட்டு இருப்பு கொள்ளாமல் விரைந்து வந்து கொண்டிருந்தார் வடிவேலு, உடன் அரசுவும்.
அனைவருக்கும் பச்சைத் தண்ணீர் கூட இறங்கவில்லை. தேவகி அழுகையில் கரைய, அவளை மடியில் தாங்கியவண்ணம் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள் ருக்கு.
ஊர்மிக்குத் தன்னை நினைத்தே கோவம் கோவமாக வந்தது. தான் மட்டும் நேற்று அக்காவுடன் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்னும் எண்ணம் அவள் மனதை வைரமாய் அறுத்தது.
இன்னொரு புறமோ என் அக்காவைக் கொல்ல நினைத்தவன் எவனோ அவன் நன்றாகவே இருக்க மாட்டான். நடுரோட்டில் லாரியில் அடிபட்டு, கை, கால் எல்லாம் விழுந்து துடிதுடித்து உடம்பு புழுத்துப் போய் தான் சாவான் என்று தீவிரமாக சாபம் வேறு கொடுத்தாள். அதைத் தவிர தன்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்பு அவளுக்குள் ஒருவித அவமானத்தைத் தோற்றுவித்தது.
“ஊர்மி டீ சாப்பிடுங்க” என்று இதோடு நான்கைந்து முறை நாகா சொல்ல, அவன் மீது காரணமே இல்லாமல் எரிச்சல் பட்டாள் ஊர்மி.
கணவன் தன்னிடம் மென்மையாக அன்பாகப் பேசமாட்டானா என அவள் ஏங்கித் தவித்த நேரம் உண்டு. இப்போது அவனே தன்னுடைய தவறான குணங்களை எல்லாம் சிரமப்பட்டு மாற்றிக்கொள்ள நினைக்கும் போது, இப்படி இவள் கண்டதையும் செய்து வைக்க என்னவாகுமோ யாரும் அறியார்.
காலை எட்டு மணிக்கு வந்தவர்கள் நேரம் மதியம் இரண்டைத் தொட்ட பின்னாலும் சாதகமான பதில் கிடைக்கவில்லையே என்னும் பயத்திலும், பதற்றத்திலும் இருந்தனர்.
லீலா அவர்களின் சல்லிவேர் கூட்டத்தின் ஆணிவேரைப் போன்றவள். அவள் இல்லாது போனால் ஒவ்வொருவருக்கும் ஒரு கை வேலை செய்யாதது போல் என்பதால் உயிர் வரை துடித்தது தங்கைகளுக்கு.
மூவரும் வேண்டாத சாமி கிடையாது, வைக்காத வேண்டுதல் கிடையாது. ருக்கு எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய லீலா அக்கா எந்தவித சேதாரமும் இல்லாமல் நலம்பெற்று வந்துவிட்டால் மொட்டை அடிப்பதாய் வேண்டிக்கொண்டாள். ஆண்களுக்கு அது பெரிதாகத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அது சற்றே பெரிய விஷயம் தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தார். அந்த நேரம் தன் காவல் உடையில் தெய்வாவும் அங்கே வந்து சேர்ந்தான். அந்த உடைக்கே உரித்தான மரியாதை அங்கே வேலை செய்தது. மருத்துவர் அனைவரையும் விடுத்து நேரே அவனிடம் தான் வந்தார்.
“எனக்குப் புரிந்த வரை அந்தப் பெண்ணைக் கொலை பண்ண வந்தவங்க, நிச்சயம் மருத்துவமனை சம்பந்தப்பட்ட யாரோ ஒருத்தரா தான் இருக்கணும். அவங்க உடம்பில் செலுத்தப்பட்ட மருந்து அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே கிடைக்காது.
அது நரம்பில் அதிகளவு நுழைஞ்சா மொத்த நரம்பு மண்டலத்தையும் பாதிச்சு பேஷண்ட்டை படுத்த படுக்கையா மாத்திடும். இரத்தத்தில் கலந்தா உடலின் மொத்த இரத்தத்தையும் உறைய வைத்து இதயத்தைச் செயலிழக்க வைத்திருக்கும்.” டாக்டர் சொல்ல அதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஊர்மி திரும்பி நாகாவின் மேல் சாய்ந்து கொண்டாள்.
தெய்வாவிற்குக் கூட கலக்கமாகிவிட்டது. அன்பு, பாசமெல்லாம் இன்னும் வரவில்லை. பதிலாகத் தங்களின் கூரைக்கு கீழ் வசிக்கும் பெண். கண் முன் நன்றாக நடமாடிக்கொண்டிருந்த பெண் என்பதால் வந்த இரக்கம்.
“லக்கிலி இந்தப் பொண்ணோட உடம்பில் விஷம் அதிகளவு கலக்கல. ஊசி குத்தும் போது இவங்க ரொம்ப திமிறி இருப்பாங்க போல. விஷம் அவங்க உடலுக்குள்ள அவ்வளவா இறங்கல. அதிர்ச்சியில் இவங்க மயங்கவும், இதயம் துடிப்பை கம்மியாக்க, ப்ளட் பம்பிங் லெவலும் கம்மியாகிடுச்சு. சம்பவமும் அதிகாலை நேரம் தான் நடந்திருக்கும் போல. மொத்தமா சொல்லப்போனா இவங்க பிழைச்சிருப்பது முழுக்க முழுக்க கடவுளோட கருணையில் தான்.
மொத்த ப்ளட்டையும் மாத்தியாச்சு. ஒரு நாலு நாள் அப்ஷர்வேஸனில் வைச்சு, விஷத்தோட ட்ரேஸஸ் கூட இல்லைன்னு உறுதியானதுக்கு அப்புறம் இவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.” என்றுவிட்டு மருத்துவர் நகர அடித்துப் பிடித்து ஓடி வந்து சேர்ந்தார் வடிவேலு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன இப்படி ஆகிடுச்சு … செல்வா க்கு தகவல் சொல்லலையா … ஆமா அவளை ஹாஸ்பிடல்ல சேர்க்காம நல்லா சண்டை போடுறாங்க அக்கா தங்கச்சிங்க … ஒரு பிரச்சனை அப்படின்னதும் அண்ணன் தம்பிங்க ஆளுக்கு ஒன்னு பண்ணுறாங்க என்னமோ போங்க பா …
தர்மா புடவையை சரி செய்தது சூப்பர் …