Loading

யான் நீயே 14

காலை எழுந்ததுமே தொழிற்சாலையின் உரிமம் பதிவதற்கான முக்கிய பேப்பர்கள் அனைத்தையும் சரி பார்த்து எடுத்து வைத்த பின்னரே வீரன் தன் அன்றாட பணிகளை கவனித்தான்.

வீரன் கிளம்பி வரும்போது லிங்கமும், பாண்டியனும் தயாராக இருந்தனர்.

மருதனுக்கு அழைக்க அவர் வீட்டு வாயிலுக்கு வந்துவிட்டதாகக் குரல் கொடுக்கவும், உண்டு விட்டு நால்வரும் புறப்பட்டனர்.

லிங்கத்தின் பெயரில் உரிமம் பதிந்தாலும், ஆலைக்கு மீனாட்சி என்று தான் பெயர் பதிந்தனர். அனைத்தும் சரியாக இருக்க, பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு வேலை விரைந்து முடிந்தது. இங்களிக்கப்படும் பத்திரத்தை, தொழிற்சாலை செயல்பட உரிமம் வழங்கும் அலுவலகத்தில் கொடுத்து பதிய வேண்டும். அதன் பின்னரே எவ்வித சட்ட சிக்கலுமின்றி தொழிற்சாலை கட்டி முடிய இயக்க முடியும்.

ஆலை பணிகள் முடிந்ததும், அதற்குரிய துறையிலிருந்து ஆட்கள் வந்து பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்கிய பின்னரே தொடங்கிட முடியும். அனைத்திற்கும் இன்றே காகிதங்களை பதிவிட்டால் தான், விரைந்து வேலையாகுமென, பெரியவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, லிங்கத்துடன் அந்தந்த துறை அலுவலகர்களை சந்தித்துவிட்டு மாலை போல் வீடு வந்து சேர்ந்தனர்.

“வேலையெல்லாம் ஆச்சா அப்பு?”

“முடிஞ்சுது அப்பத்தா” என்ற வீரன் மாடியேற, “செத்த இரு அப்பு. உம்மகிட்ட பேசணும்” என்றார் மீனாட்சி.

“சொல்லுங்க அப்பத்தா?” என்ற வீரன் அபி கொடுத்த பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சை சாற்றினை வாங்கி பருகியவனாக அப்பத்தாவின் அருகில் அமர்ந்தான்.

“சுந்தரேசன் போன் போட்டிருந்தியான்” என்ற மீனாட்சி, அபிராமியை ஒரு பார்வை பார்த்தார்.

“அண்ணே பேசுச்சுங்களா? எப்போ அத்தை?” என்ற அபிராமியும் அவர்களது பேச்சினை கவனித்தார்.

“வூட்டு பெரிய மனுஷின்னு என்கிட்ட பேசுனியான்” என்ற மீனாட்சி, “சுபாவுக்கு உன்னைய முடிக்கலான்னு எண்ணமின்னு கேட்டியான்” என்றார்.

வீரன் கையிலிருந்த தம்ளரை இறுக்கி பிடித்தான்.

“மீனாள்… வாய்ப்பே இல்லையா அத்தை?” அபிராமி வருத்தமாகக் கேட்டிட, அன்னையை ஏறிட்டான் வீரன்.

“சுபா உன் அண்ணே மவ தானே அபி. பொறவு என்ன வெசனம்?” மீனாட்சிக்கு விருப்பம் என்பது அவரது கேள்வியிலேயே தெரிந்தது.

“சுபா வறதுல வருத்தமோ பிடித்தமின்மையோ இல்லையாட்டுக்கு அத்தை. மீனாளை அமிழ்தன் பக்கத்துல நிக்க வச்சு கற்பனை பண்ணிப்புட்டனே. புள்ளை படிக்குதுன்னு அமைதியா இருந்துபுட்டேன். அந்த வசந்தி முந்திக்குவான்னு நெனக்கலை. அமிழ்தனுக்குத்தேன் கொடுக்கணுமின்னு நானும் நின்னாக்கா மருதன் அண்ணே என்ன செய்யுமாம். பேசமா மல்லுக்கு நின்னுபுடுவோமான்னு தோணுது. என் கைக்குள்ள வளந்த புள்ள… வுட மனசில்லையே” என்ற அபிராமி, “சுபாவை லிங்கத்துக்கு முடிக்கலாம் அத்தை. பெரியவனுக்கு மீனாளுதேன். உள்ளுக்க சொல்லிக்கிட்டே இருக்கு” என்று அபிராமி நகர,

“எம்மோவ் செத்த நில்லு” என்றிருந்தான் லிங்கம்.

“என்னடே?”

“சுபா மேல எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லை” என்றிருந்தான் பட்டென்று.

முன்பென்றால் சரியென்றிருப்பானோ!

இப்போது அவனது மனமே அவனுக்கு எதிராக இருக்கிறதே!

“என் அண்ணே மவளை கட்டிக்க உனக்கு என்னடே வீராப்பு?” என்ற அபிராமியிடம், “மனசு ஒப்பாமா பண்ணிக்கிட்டாக்கா கஷ்டம் ரெண்டு குடும்பத்துக்குந்தேன்” என்று சொல்லி லிங்கம் சென்றுவிட்டான்.

அவனின் பதிலில் அபிராமி மட்டுமல்ல மீனாட்சியும் வாயடைத்துப்போனார்.

“அவென் கதைக்கு பொறவு வருவோம். இப்போ நீயி என்ன சொல்லுற அமிழ்தா?” எனக் கேட்டார் மீனாட்சி.

“இப்போ எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை அப்பத்தா. ஆலையை ஆரம்பிச்சு அது நல்லாமாறி ஓட ஆரம்பிச்சுதுன்னாதேன் மத்ததுல கவனம் போவுமாட்டிக்கு” என்று எழுந்து கொண்டான்.

“சுந்தரேசனுக்கு என்னடே பதில் சொல்லுறது?”

“நான் பேசிக்கிறேங்க அப்பத்தா” என்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மீனாள் அங்கு வந்தாள். அபிராமியும், மீனாட்சியும் ஊருக்குள்ளிருக்கும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

லிங்கம் உணவு கூடத்தில் போடப்பட்டிருக்கும் மேசையில் அமர்ந்து ஏதோ உண்டு கொண்டிருந்தான்.

“போன வேலை என்னாச்சு மாமா?” எனக்கேட்டபடி அவனருகில் சென்ற மீனாள், அவனது தட்டிலிருந்த முந்திரி பக்கோடாவை எடுத்து தன் வாயில் நிரப்பினாள்.

“வீரா மாமா செஞ்சாருக்கும்?” என்று அதன் ருசியை வைத்தே கண்டுகொண்டவளாக வினவியவள், “என்ன சொல்லு மாமா… வீரா மாமா செஞ்சாவே இந்த முந்திரி பக்கோடாவுக்கு தனி ருசிதேன்” என்று மீண்டும் ஒன்றை எடுத்து வாயில் போட்டு “காரமா இருக்கு” என்க, மடித்து கட்டிய வேட்டியும், கையில்லா பனியனும், தலையில் சுற்றி கட்டிய துண்டுமாக, கையில் கண் கரண்டியுடன், மற்றொரு கையில் பக்கோடா நிரம்பிய தட்டுமாய் வந்து நின்றான் வீரன்.

வேகமாக லிங்கத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவள்,

“நான் கேட்டதுக்கு நீயின்னும் பதில் சொல்லல மாமா?” என்று மென் குரலில் கிசுகிசுத்தாள்.

“எல்லாம் நல்லபடியா ஆச்சு மீனுக்குட்டி” என்ற லிங்கம், “உன் ஆள பார்த்தாக்கா தொண்டையில காத்துதேன் வருதாக்கும்?” என்று அவளைப்போலவே பேசி கேலி செய்தான்.

கொண்டு வந்த தட்டை மீனாளின் முன் வைத்த வீரன், அடுக்கலைக்குள் சென்று தனக்கும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.

தலையிலிருந்த துண்டை அவிழ்க்க…

லிங்கம் மீனாளின் தட்டில் கை வைத்தான்.

தம்பியின் கையை தட்டிய வீரன்,

“என்னுதுல எடுத்துக்கோடே” என்று தன்னுடைய தட்டினை அவன் பக்கம் நகர்த்தினேன்.

“ஏன் இதுல எடுத்தாக்கா என்ன? அப்படி அந்த தட்டுல மட்டும் என்ன ஸ்பெஷலு? முந்திரி நிறைய போட்டிருக்கிங்களோ?” என்று ஆராய,

“அதுல காரம் குறைச்சி போட்டிருக்குடே” என்ற வீரன் அலைபேசியை நோண்டியபடி பக்கோடாவை உண்ண ஆரம்பித்தான்.

“ம்க்கும்… ரொம்பத்தேன் தாங்குற அண்ணே” என்று லிங்கம் வேண்டுமென்றே சீண்ட,

“டீ போடுறன்னு சொன்னியே போயி போடுடே…” என்று தம்பியை விரட்டினான்.

லிங்கம் எழ,

“மசாலா டீயி” என்றான் வீரன்.

“எதே” என்று திரும்பிய லிங்கம் மீனாளை பார்த்தான்.

“சரித்தேன்… போடுவோம்” என்றவனாகச் சென்றான்.

மசாலா தேநீர் மீனாளுக்கு விருப்பமானது.

லிங்கம் அடுக்கலைக்குள் நுழைய, அடுப்பில் தேநீரில் எல்லாம் கலந்து கொதித்துக் கொண்டிருந்தது.

வீரனே எல்லாம் தயார் செய்து கொதிக்க வைத்திருந்தான்.

“அவளுக்குன்னு ஒவ்வொண்ணும் செய்வாறாம். இவரு பெரியவங்க பேச்சைக்கேட்டு அவளை கௌதமுக்கு கட்டி வைக்கப்போறாராம்!” லிங்கம் முணுமுணுத்தவனாக சிரித்துக்கொண்டான்.

“இப்படி சின்ன சின்ன விடயத்துலக்கூட எப்புடி இம்புட்டு லவ்வை காட்டுறண்ணே” என்ற லிங்கம், “நானும் உன்னைய மாறியே சின்னக்குட்டியை லவ் பண்ணுவனாண்ணே?” என்று தன்னைப்போல் தன்னைத்தானே கேட்டிருந்தான்.

தேநீரை தம்ளரில் நிரப்பிக் கொண்டிருந்தவனின் கையில் ஆட்டம்.

கேட்ட பின்னரே தன்னுடைய வார்த்தையின் பொருள் புரிந்து மனதில் திடுக்கிட்டான்.

“லிங்கு… சாட்சிபுட்டாளாடா?” அவனின் மனசாட்சியே அவனை கேலி செய்தது.

அப்போதும் இல்லையென்று தலையை வேகமாக உலுக்கிவிட்டு கவனத்தை மாற்றினான்.

வீரன் அலைபேசியிலேயே கண்ணாக இருக்க… அவனது இருசக்கர வாகனத்தின் சாவியை மேசையில் அவன் முன் நகர்த்தி வைத்தாள்.

என்னவென்று விழி உயர்த்தி பார்த்த வீரன் மீண்டும் அலைப்பேசியை நோக்கிட…

“முந்தாநா ராத்திரி நீங்க பேசுன பேச்சுக்கு அர்த்தம் வெளங்குச்சு” என்றாள். மெல்லிய ஒலியில்.

“புரிஞ்சா சரித்தேன்” என்ற வீரன் மீண்டும் அலைப்பேசியில் தலையை கவிழ்க்க, வெடுக்கென்று பறித்திருந்தாள்.

“எனக்கு சம்மதமில்லை. ஐயாகிட்ட என்னால வேணாமின்னு சொல்ல முடியாது. நீயி சொன்னா கேப்பாய்ங்க. சொல்லு மாமா” என்றிருந்தாள்.

“என்னன்னு சொல்லணும்?”

“ஏன் மாமா தெரியாதமாறியே கேக்குற?”

“நெசமா என்ன சொல்லணும் தெரியல தங்கம்” என்றான் வீரன். உண்மையில் சொல்லு என்றவள், என்னவென்று சொன்னால் தானே அவனால் கூறிட முடியும்.

“என்னால கௌதமை கட்டிக்க முடியாது!” என்றாள். மிக மிகக் கூர்மையாய்.

“ஏன்?”

மீனாள் வீரனை முறைக்க…

“அப்படின்னு மாமா கேட்பாங்க” என்றான்.

அவளுக்கு ஆயாசமாக வந்தது. மனசு முழுக்க நீயி இருக்கும்போது இன்னொருவனை எப்படி கட்டிக்க முடியுமென அவனிடம் மனதை வெளிக்காட்டிட முடியாது தடுமாறினாள்.

“எனக்கு படிக்கணும்!”

“படிச்சிட்டு தானே இருக்க?”

“இன்னும் மேல படிக்கணும்.”

“வசந்தி பெரிம்மாவே உன்னைய கல்யாணத்துக்கு பொறவு படிக்க வைக்கிறேன்னு சொன்னாய்ங்களாம். நல்லான் பெரிப்பாவும் ஒத்துகிட்டாராம்” என்றான்.

“யோவ்… உனக்கு வெளங்குதா இல்லையா?” என்று மேசை மீது இருந்த பழக்கூடையில் வீற்றிருந்த கத்தியை நொடியில் எடுத்து அவன் முன் குத்துவதைப்போல் வைத்து, இருக்கையிலிருந்து எழுந்து கத்தியிருந்தாள்.

மீனாளின் சத்தத்தில் லிங்கம் ஓடி வந்திருந்தான்.

வீரன் அவளின் செயலுக்கு அசரவெல்லாம் இல்லை.

“அப்போ தங்கத்துக்கு என்னையத்தேன் பிடிச்சிருக்கு. நாங்க ரெண்டேறும் விரும்புறோம். தங்கம் என்னையத்தேன் கட்டிக்கிடும். சொல்லட்டா?” என்று அழுத்தமாகக் கேட்டிருந்தான்.

கத்தியை மேசையில் வைத்தவளாக தொய்ந்து அமர்ந்தவள், முகத்தை மூடி தோள் குலுங்க அழுதாள்.

அவளின் தலை வீரன் கேட்டதற்கு மறுப்பாக இரு பக்கமும் அசைந்தது.

“வேண்டாமின்னு சொல்ற? பொறவு என்னத்த காரணம் சொல்ல சொல்லுற? நான் வேணான்னாக்கா காலம்பூரா இப்படியே இருந்திடுவியா என்ன? உன்னால என்னைய ஏத்துக்க முடியாதுங்கிறப்போ, பேசமா பெரியவங்க செய்றதை ஏத்துக்க” என்று தனக்குள் எழுந்த வலியோடு அவளுக்கும் வலிக்கச் செய்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

‘என்னைய ஏத்துக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாதுன்னா நானும் என்னத்த செய்வேன்?’ வீரன் மனதில் பொரும்பிப்போனான்.

அவனால் அவளை விட்டுக்கொடுத்திட முயலாத போதும் ஏதோவொரு நம்பிக்கை. தன்னுடைய தங்கம் தன் கைக்கு மட்டுமே எனும் நம்பிக்கை. அதன் திடத்தாலே அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவனாக அமைதியாக ஒதுங்கி நிற்கிறான்.

வீரனுக்கு அவளாகவே சொல்ல வேண்டுமென்கிற எண்ணம். அவனாக சொல்லி, வீரன் மீது ஏற்கனவே இருக்கும் வருத்தத்தில் அவள் அனைவரின் முன்பும் மறுத்துவிட்டாள் இருவரின் காதலும் மரித்துப்போகுமே! அதனாலே வீரனின் இவ்வெண்ணம். அவளாக வர வேண்டுமென்று. அனைத்தும் மறந்து கடந்து அவன் மட்டுமே வேண்டுமென்று வர வேண்டும்.

வீரன் பேசிச் சென்றதில் லிங்கத்திற்கும் அண்ணனின் மீது கோபம். இருப்பினும் அவனது செயலுக்கு காரணமிருக்குமென்று மீனாளின் அருகில் வந்து அவளின் தலையில் பரிவுடன் கை வைத்தான்.

“மாமா” என்று அவனின் வயிற்றில் முகம் புதைத்து கட்டிக்கொண்டவள்,

“ஏன் அவிங்களுக்கு புரிய மாட்டேங்குது. எப்படி சாதாரணமா சொல்ல முடியுது?” எனக்கேட்டு கண்ணீரில் கரைந்தவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தெரியாது தட்டிக்கொடுத்தவனாக நின்றிருந்தான்.

மீனாளின் அழுகை மெல்ல தேய்ந்தது.

“நீ வேணாமின்னு சொன்னதாலதேன் அண்ணே தள்ளி நிக்குது. இப்போ நீயி வந்து பேசுன்னு சொன்னாக்கா அண்ணனும் என்னத்த பண்ணும் மீனாகுட்டி?” என்ற லிங்கம், “இன்னைக்கேவா நடக்கப்போவுது. நடக்கும்போது பார்த்துகிடலாம். அழுது கரையாம… எதுக்கும் துணிஞ்சு நில்லு. நீயி என்ன முடிவெடுத்தாலும் அண்ணே அதுக்கு கட்டுப்படும். அண்ணேக்கு உன்னைத்தவிர வேற எதுவும் வேணாமாட்டிக்குடே. கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன். உன் மனசு புரியலையா கேட்காதடே. புரிஞ்சதாலதேன் சொல்றேன். அண்ணே இல்லன்னா நீயிதேன் உக்கிப்போவ” என்றான்.

லிங்கத்தின் வார்த்தைகள் சத்தியமானதென்று மீனாளுக்கும் தெரியும்.

பழையதை கடக்க முடியாது அவள் படும்பாட்டை அறிவானா அவளின் வீரன்?

*****************

“நாச்சியா பேசுடி!”

பல அழைப்புகள் எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட, தகவல் அனுப்பினான் பிரேம்.

பிரேம் பணியிடம் சென்று மூன்று நாட்களாகியிருந்தது. அவன் இருக்கும் வரை தெரியாத ஒன்று, வேலை நிமித்தமாக பெங்களூர் சென்றதும் நாச்சிக்கு புரிந்தது.

‘திருமணத்திற்கு பின்பு அவனுடனான தன்னுடைய வாழ்க்கை, தனது சுற்றம் துறந்து பெங்களூரில் தானோ?’ குடும்பத்தை விடுத்து தனித்து வாழ முடியாது என்பதே நாச்சியின் பரிதவிப்பிற்கான காரணம்.

அவளால் பிரேமை விடுத்துக் கூட இருந்திட முடியும், அவளின் பெற்றோர், உடன் பிறந்தோர், அப்பத்தா, அத்தை, மாமா, அவளைச் சுற்றி அவளை பெரிய மனிதியாக உணர்த்திடும் மீனாள், அங்கையை விடுத்து இருந்திட முடியாது.

பெண் பிள்ளைகள் அனைவரும் என்றோ ஒரு நாள் வேறு அகம் சென்றுதானே ஆக வேண்டும். அதுதானே நிதர்சனம்.

புரிந்த போதும்… தவிக்கிறாள்.

‘மற்ற பெண்களைப்போல் வேறு வீட்டில் வாக்கப்பட்டால் என்ன செய்திருப்பாய்?’ மனதின் கேள்விக்கு, “அதுதான் இல்லையே!” என்று பதில் கொடுத்தவளுக்கு ‘நிச்சயம் அப்படியொரு நிலையில் திருமணமே வேண்டாமென்றே சொல்லியிருப்பேன்’ என்கிற எண்ணமே!

பிரேமிடமிருந்து தகவலும், அழைப்புகளும் வந்து கொண்டே இருக்க…

வேகமாக ஏற்று காதில் வைத்தவள்,

“இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” எனக்கூறி பட்டென்று வைத்துவிட்டாள்.

அங்கு பிரேம் அவளின் வார்த்தையில் வெறும் கூடாக நின்றிருந்தான்.

அதன் பின்னர் பல முறை அழைத்து நாச்சியின் அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே வர, அவளின் முடிவில் குழம்பிப்போனான்.

திடீரென இப்படி சொல்வதற்கு காரணம் தெரியாது மருகினான்.

உண்மை என்னவென்று அறியாது மற்றவர்களிடம் என்னவென்று கேட்பதென தொய்ந்து போனான்.

அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. பொங்கலுக்காக நீண்ட விடுப்பு எடுத்தவனால் இப்போது விடுப்பு கேட்க முடியாது போனது. இரண்டு மணி நேரம் கூட அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

வீரனுக்கு அழைத்துவிட்டான்.

ஆனால் என்ன சொல்லி கேட்பதென்று தெரியாது இயல்பாக பேசுவதைப்போல் நலன் விசாரித்து வைத்துவிட்டான். வேலையில் கவனம் பதிய மறுத்தது.

படிக்கும் காலத்திலேயே காதலுக்காக, நாச்சிக்காக அடி வாங்கியவன். அந்த காதல் கை சேருமோ சேராதோ என்று தவித்த நாட்கள் அதிகம். இப்படி கைகூடும் என்று எதிர்பாராது கை சேரும் முன் வந்த தன் காதல் கரம் கோர்க்காமலே மாண்டுவிடுமோ என்ற அச்சம் நெஞ்சம் முழுக்க வியாபிக்க, தன்னுடைய மேலதிகாரிக்கு விடுப்பு கேட்டு அவன் அனுப்பிய மின்னஞ்சல் சில நிமிடங்களில் நிராகரிக்கப்பட்டதோடு, பொங்கல் விடுமுறையில் சென்ற நாட்களுக்கான வேலை பெண்டிங்கில் இருப்பதை இன்றே முடித்து கொடுக்கும்படியும் தகவல் வர நொந்தேப்போனான்.

மீண்டும் ஒருமுறை நாச்சிக்கு அழைத்தவன், இணைப்பு கிடைக்காமல் போகவே அலைப்பேசியை விட்டெரிந்தான். அவனது கேபினின் தடுப்பில் மோதி மேசையில் விழ, அலைப்பேசி தன்னுயிரை துறந்தது.

அதனை எடுக்கத் தோன்றாது முயன்று வரவழைத்த கவனத்துடன் வேலையில் மூழ்கினான்.

மாலை கடந்து இரவு வந்தபோதும் தன் வேலையிலேயே கண்ணாக இருந்தான். நாட்சியின் வார்த்தையின் மீது உண்டான கோபத்தை தன் பணியில் காண்பித்தான். ஒட்டு மொத்த வேலையும் அன்றே முடித்து விடுபவன் போல் தீவிரமாக வேலையில் அமர்ந்து இருந்தவனை அவனது மேலாளர் வந்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியும், தான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டே வீடு சென்றான்.

வீட்டிற்கு சென்றவனால் நிலை கொள்ள முடியவில்லை கையில் அலைபேசியும் இல்லாது நாச்சியை எப்படி தொடர்பு கொள்வது என தெரியாமல் தவித்துக் குழம்பி நின்றான்.

தன்னுடன் தங்கியிருக்கும் வெளிமாநிலத்து நண்பன் வந்து சேர்ந்ததும் அவனது அலைபேசியை பெற்று நாச்சிக்கு அழைக்க அப்பொழுதும் அவளது எண் அணைத்து வைக்கப்பட்டருப்பதாகவே பதில் வந்தது.

அந்நேரத்தில் எப்படி அவளை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் லிங்கத்திற்கு அழைக்க அவனோ தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அரை உறக்கத்தில் பேசி வைத்து விட்டான்.

லிங்கம் என்ன ஏது என்றுக்கூட கேட்காது வைத்ததில் கடுப்பான பிரேம் நண்பனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு தனதறை நுழைந்து கதவினை அறைந்து சாற்றி மெத்தையில் கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டான்.

தன் காதல் தனக்கு கிடைக்கவே கிடைக்காது எனும் நிலையில் கூட பிரேம் உடைந்து அழுதது இல்லை. ஆனால் இன்று நாச்சியின் ‘திருமணத்தை நிறுத்திவிடு’ எனும் சொல் அவனது இதயத்தை நன்றாக கீறி விட்டிருந்தது கண்களில் கண்ணீர் வடிவது கூட தெரியாது மூடிய விழிகளுடன் மனதில் போராடிக் கொண்டிருந்தான்.

எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை.

விடியலில் பிரேமின் நண்பன் வந்து கதவை தட்டவும், எழுந்து திறந்தவன்… அங்கு அவனை கடந்து தனக்கு முன் நின்று இருந்த வீரனை கண்டதும் தாவி அணைத்துக் கொண்டான்.

“மாமா!”

வீரன் பிரேமின் செயலில் அவனது நண்பன் சூரஜ்ஜை சங்கடத்துடன் பார்க்க இருவரின் சூழல் புரிந்து சூரஜ் அங்கிருந்து நகர்ந்தான்.

சூரஜ் இன்று தான் வீரனை நேரில் காண்கிறான். பிரேமை பார்த்திட உறவினர்கள் என்று இதுவரை யாரும் வந்தது இல்லை. இது முதல் முறை என்பதாலும் ப்ரேமின் நேற்று இரவு முதலான கசங்கிய முகமும் ஏதோ உணர்த்திட… சூரஜ் அவர்களுக்கு தனிமையளித்து நண்பனாக புரிதலுடன் விலகிச் சென்றிருந்தான்.

“சாரி மாமா. பதறி வரவச்சிட்டனா?” என்று கேட்ட பிரேம், வீரனிடமிருந்து பிரிந்திட…

“மொபைல் என்னாச்சு?” எனக் கேட்டான் வீரன்.

“அது” என்று தயங்கிய பிரேம், நாச்சி சொல்லியது முதல் எல்லாம் கூறினான்.

“இதை எனக்கு போன் போட்டப்பவே சொல்ல வேண்டியதுதானேடே… குரலில் சுரத்தே இல்லை. என்னன்னு நெனக்கிறது. திரும்ப போன் போட்டாக்கா அது லைன் கெடக்கவே இல்லை. உன் கூட்டாளிங்க நெம்பரும் தெரியாது. என்ன பண்ணட்டும். உனக்கு என்னன்னு அங்குட்டு உட்கார்ந்து வெசனப்பட்டு இருக்காம கெளம்பி வந்தாக்கா, ஒண்ணுமில்லாத விடயத்தை போட்டு உருட்டிட்டு இருக்க. நைட் இங்குட்டு ஒரு லோடு வர வேண்டியது. அதை சாக்கா வச்சு வந்தது நல்லதாகிப்போச்சு. வூட்டுல சொல்லியிருந்தாக்கா, அவிங்களும் தேவையில்லாம வெசனம் கொண்டிருப்பாய்ங்க” என்ற வீரன், “நாச்சியா ஏதும் உன்னைய சீண்டி விளையாட அப்படி சொல்லியிருக்கும். எதுக்கும் நான் என்னான்னு விசாரிக்குறேன். இலைன்னாக்கா நாச்சியை பேச சொல்லுறேன்” என்றான்.

“தேன்க்ஸ் மாமா!” என்ற பிரேம், “என்னால உனக்கு வீண் அலைச்சல் மாமா” என்றான் வருத்தமாக.

“உனக்கு என்னவோன்னு அங்குட்டு உட்கார்ந்து பதறி கண்டதை ரோசிச்சு மனசை குழப்பிக்கிறதுக்கு நேரில் வந்தது திருப்திடே” என்ற வீரன், “சரி நான் புறப்படுறேன்” என்றான்.

“வந்ததும் கெளம்புறியே மாமா. இரு குளிச்சிட்டு சாப்பிட்டு போலாம்” என்ற பிரேம் வீரனின் வருகையால் தெளிந்திருந்தான்.

வீரன் குளித்து தயாராகி வரும் முன்னர் சூரஜ்ஜுடன் இணைந்து, உணவினை செய்து மேசையில் வைத்திருந்தான்.

நண்பனை முறையாக வீரனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

வீரன் வேட்டி சட்டை அணிந்திருக்க, சூரஜ்ஜுக்கு தமிழ் தெரியாததால் வீரனிடம் ஆங்கிலத்தில் பேசினால் அவனுக்கு புரியுமா என்று தயங்கிட, தன்னுடைய தயக்கம் அவசியமற்றது என்று வீரன் பேசிய ஸ்டைலான ஆங்கிலத்தில் வாய் பிளந்து பார்த்தான் சூரஜ்.

“வாவ்…”

“என் மாமாவை என்னன்னு நெனச்ச. அவரு அக்ரிகல்ச்சரில் மாஸ்டர் பண்ணியிருக்கிறார். எம்பிஏ கோல்ட் மெடலிஸ்ட்” என்று பெருமை பேசினான் பிரேம்.

“அடே போதும்டே” என்ற வீரன், “தோற்றத்துக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை சூரஜ். நம்முடைய அடையாளத்தை மாற்றி தோற்றத்தை உருவகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறிட, அதனை ஆமோதித்து தலையாட்டிய சூரஜ் “நீங்க பேசுற தமிழ் வித்தியாசமா இருக்கு” என்றான். பிரேமிடம் பேசியதை வைத்து.

இதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமானால் மொத்த தமிழ்நாட்டையும் பிச்சி போடணும் என நினைத்த வீரன்,

“நேட்டிவ் ஸ்லாங்” என்பதோடு முடித்துக்கொண்டான்.

உணவு நேரம் முடிய… பிரேம் வீரனை பஸ் ஏற்றி விட பேருந்து நிலையம் அழைத்துச் சென்றான்.

செல்லும் வழியில் பிரேமிற்கு புது அலைப்பேசி ஒன்றை வாங்கிக்கொடுத்தான். பிரேம் மறுக்கவெல்லாம் இல்லை. வீட்டில் யாருக்கு ஒன்றென்றாலும் செய்வது வீரனாகத்தான் இருக்கும். சிறுவயது முதலே அது பழக்கமானதால் வீரனிடம் எதையும் மறுக்கத் தோன்றாது.

பேருந்தில் அமர்ந்த பின்னர்,

“அடுத்தவாரம் நிச்சயத்துக்கு தேதி குறிச்சிருக்காய்ங்க பிரேம். மாமா உன்கிட்ட எப்போ வரணும் சொல்லுவாரு. நேத்துதேன் அம்மாவும், அப்பத்தாவும் நம்ம வூர் கோவில் ஜோதிடர்கிட்ட தேதி வாங்கிட்டு வந்தாய்ங்க” என்றான்.

“எனக்கு பயமா இருக்கு மாமா. அப்போ நான் பண்ணதை வச்சு நிறுத்த சொல்லுறாளோ?” எனக் கேட்டான் கவலையாக.

“அதுதேன் காரணமின்னா, அவள் மொதலில் சம்மதம் சொல்லியிருக்கவே மாட்டாடே! கண்டதை உழட்டிக்கமா இரும். நாச்சியை நான் பேச சொல்லுறேன்” என்று மீண்டும் மீண்டும் சுணங்கி நிற்கும் பிரேமை அதட்டி மிரட்டி சரிகட்டியே கிளம்பினான் வீரன்.

வீரன் ஊர் வந்து சேர்ந்ததும்…

“என்னண்ணே நல்லாத்தானே இருக்கியான்?” என்று பிரேம் பற்றி விசாரித்தான் லிங்கம்.

செல்லும் முன்பு லிங்கத்திடம் மட்டும் சொல்லிச் சென்றிருந்தான் வீரன்.

“நாச்சியாதேன் ஏதோ சொல்லி அவனை கலங்கடிச்சிருக்கு” என்ற வீரன் தங்கை எங்கென்று பார்க்க, அவளோ கரியனிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்.

“ஃபோன் ஆன் பண்ணட்டுமா கரியா? என்னான்னு காரணம் சொல்லாமலே அவிங்கள கஷ்டப்படுதிப்புட்டேன். எம்புட்டு தவிக்கிறாய்ங்களோ!” என்று கரியனிடம் புலம்பிய நாச்சி தன்னுடைய அண்ணன்களை கண்டுவிட்டு வாயினை மூடிக்கொண்டாள்.

“பிரேம்கிட்ட ஏதோ சொன்னியாம்? உனக்கு விருப்பமில்லாம ஏதும் வேணாமின்னு நிச்சயத்தை நிறுத்த சொல்லி போன் போடுறான் அவென்” என்றான் வீரன்.

வீரன் சொல்லியதும் நாச்சிக்கு பிரேம் மீது கோபம் சுறுசுறுவென வந்தது.

அதே கோபத்தோடு,

“அவிங்ககிட்ட நான் பேசிக்கிறேன்” என்றாள்.

“சட்டுப்புட்டுன்னு பேசி ஒரு முடிவ சொல்லுத்தா. நிச்சயத்துக்கு வேலை பார்க்கட்டுமா இல்லையான்னு தெரியனுமில்லையா” என்று மேலும் ஏற்றிவிட்டான் லிங்கம்.

“சொல்லுறேன்” என்றவள் வெகு வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.

“என்னண்ணே இப்புடி மாட்டிவிட்டுடீங்க… பிரேம் நிலை?” என்று லிங்கம் கேட்க, “கொளுத்திபோட்டாதேன் நல்லா வெடிக்கும்டே” என்று வீரன் சொல்ல… இருவரும் இணைந்து சிரித்தனர்.

“அப்போ நிச்சய சோலியை பாக்கலாமுன்னு சொல்றிங்களாண்ணே?”

“கல்யாண சோலியவே பார்க்கலாமின்னு சொல்லுறேன். கல்யாணத்தை சுருக்க வையுங்கன்னு சொன்னாலும் ஆச்சரியமில்லை” என்ற வீரன், “காதல்னாலே சுலுவா சேராது போல” என்றான்.

“அண்ணே…”

“வாடே” என்று வீரன் லிங்கத்தின் தோளில் கை போட, கரியன் “ம்மா…” என்று கத்தியது.

“ம்க்கும்… நீ எங்கள்ட்ட ஒட்டுதல் காட்டுனின்னா இவனுக்கு மூக்கு வேர்த்திடுமே” என்று லிங்கம் சொல்ல… அவனின் பேச்சு புரிந்தது போல கரியன் லிங்கத்தின் தோளில் நெற்றியை முட்டியது.

“போதும்டே… உன் ஐஸ்” என்ற லிங்கம், “இவனுக்கு எல்லாரும் இவனையே கொஞ்சணும்” என்று அவனின் நெற்றியில் தடவிக் கொடுத்தான்.

கரியனிடம் இருவரும் உரையாடிக் கொண்டிருக்க… சுந்தரேசனிடமிருந்து வீரனுக்கு அழைப்பு வந்தது.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
36
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

7 Comments

  1. தனது சொந்த அண்ணன் மகளை விட மீனாள் வீரன் ஜோடியை மனதினில் நிலை நிறுத்திவிட்டார் அபிமா.

    லிங்கம் அவசரமாக மறுத்துவிட்டானே. அம்புட்டு பயம் 🤣 அங்கை மண்டைக்குள்ள நல்லா நாட்டியம் ஆடுறா போல.

    அண்ணன் வருங்கால அண்ணிய தாங்குவதை பார்த்து தானும் அதே போல தாங்கனும் எண்ட கற்பனை வேற. லிங்கம் முழுசா கவுந்துட்டான் சின்னக்குட்டிகிட்ட.

    வீரன் தயங்குவதில் அர்த்தம் உள்ளது. அவள் மனதை அவளே முழுதாக ஏற்றுக்கொள்ளாமல் விலகி இருக்கிறாள். இதில் எங்கனம் அவன் பெரியவர்களிடம் பேச.

    மீனாள் நடந்ததை மறக்கவும் இல்லாமல் கடக்கவும் செய்யாமல் குழப்படி செய்கிறாள்.

    அனைவரது உரையாடல்களும் அருமையாக உள்ளது. உணர்வுபூர்வமாக நேர்த்தியாக இருக்கிறது. ❤️

    1. Author

      மகிழ்ச்சி… மனமார்ந்த நன்றி ❤️❤️

  2. காதல் னாலே சுலுவா சேராது போல … அதான …

    எங்க ஹீரோ வீரன் ஒரு சரியான ஹீரோ மெட்டீரியல் … எல்லாமே தெரியும் … படிப்பு … குடும்பம் … விவசாயம் … தொழில் … காதல் … இப்போ சமையல் இப்படி எல்லாத்துலயும் நம்பர் ஒன் …

    லிங்கம் வீரனை மாதிரி லவ் பண்ண போறீகளோ … பாத்து அங்கை மீனா மாதிரி வேணாம்னு தலையாட்டிட போகுது …

    1. Author

      அங்கை அப்படித்தான் சொல்லுவாள் 🤣🤣🤣🤣

  3. க்கும்.. காரியனுக்கு கூட பொறாமை வருதே…