Loading

அகம்-14

ஆகாயச் சூரியனை அள்ளி விழுங்கிவிட்டு, காரிருள் தன் இராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த இரவுப் பொழுது.

கண்களுக்கு புலப்பட மறுக்கும் அந்த அந்தகார வேளையில், அத்துவானக் காட்டிற்குள் நிர்கதியாய் தலைவிரிக் கோலத்துடன், கண்கள் சிவப்பேறி நெருப்புத் துண்டங்களாய் தகிக்க நின்றிருந்தாள் அந்தப் பெண். கசங்கி நலுங்கிய உடையில் தலைவிரி கோலமாய் அவள் நின்றிருந்த தோரணை, அந்த மதுரையை நெருப்பின் கோரப்பசிக்கு இரையாக்கிய மாதரசி கண்ணகியை நினைவுபடுத்தியது.

கோட்டான்கள் அலறும் அந்த அர்த்த ஜாம வேளையில், நடுக்காட்டில் தன்னந்தனியாய் நின்றுக் கொண்டிருந்தவளின் கண்கள் எதையோ அந்த மையிருட்டில் தேடித் துளாவியது. கால் கொலுசு சிணுங்க, எதையோ தேடி, அங்கேயும் இங்கேயும் பைத்தியமாய் உலவிக் கொண்டிருந்தாள் அவள். உதவி செய்ய நாதியில்லை. தொலைத்த பொருள் கிடைக்குமா என்பது அவளுக்குத் தெரியவும் இல்லை.

 

அவளின் கருங்குவளை விழிகள் சுற்றத்தை அலசுவதை நிறுத்தவில்லை. கால்கள் ஓட்டத்தை நிறுத்தவில்லை. அவள் மனமோ நினைப்பதை நிறுத்தவில்லை. அவளின் மலர் பாதங்களில் கல்லும், முள்ளும் தைத்த போதும் கூட அவள் வலியை உணரவில்லை.

 

தனக்குச் சொந்தமானதைத் தேடுவதையும் நிறுத்தவே இல்லை.

அந்த அத்துவானக் காட்டில், ஆளில்லா தனிமையில் தன்னந்தனியாய் பெண்ணொருத்தி, பிறை நிலாவின் ஒளியில் தேடிக் கொண்டிருக்க, அவள் கண்கள் எங்கெங்கோ அலைபாய்ந்து, இறுதியில் ஏதோ ஓரிடத்தில் ஸ்தம்பித்து நின்றது.

 

இத்தனை நேரமாய் இருந்த ஒட்டுமொத்த தைரியமும் மொத்தமாய் வடிந்து, கண்கள் நீரைச் சுமந்து நிற்க, கால்கள் கண்மண் தெரியாமல் தட்டுத் தடுமாறி ஓடத் துவங்கியது. பதைபதைக்கும் நெஞ்சை அழுத்திப் பிடித்து, ஓடியவள், அந்த மங்கலான வெளிச்சத்தில் கீழே விழுந்துக் கிடந்த உருவத்தின் அருகே நெருங்கினாள். நெருங்க நெருங்க இதயம் படபடத்தது.

‘இல்லை! இருக்கக் கூடாது.! இது அவனாக இருக்கக் கூடாது..!’

 

மனம் அடித்துக் கொள்ள, தடுமாறி தவித்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி, அவனருகே வந்தாள். கண்கள் பயத்தில் குளித்திருந்தது. உடலும் மனமும் ஒருசேர நடுக்கமுற, கவிழ்ந்து விழுந்துக் கிடந்த அந்த முரட்டு உருவத்தினை, நடுங்கும் தளிர்க்கரங்களால் திருப்பினாள் அவள். இரத்தச் சகதியில் கிடந்தவனைத் திருப்பி அவன் முகத்தைக் கண்டவளுக்குள், ஆயிரம் மின்னல்கள் ஒருசேர தாக்கியதைப் போன்ற அதிர்ச்சி.

 

கண்கள் இருட்டிக் கொண்டு வர, அவள் கரத்தில் மசமசப்பாய் உதிரம் ஒட்டியிருக்க,

“ஐயோ..!” என்ற அலறலுடன் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள் கருவிழி. உடல் முழுதும் வியர்வையில் குளித்திருந்தது.

 

தான் கண்டவை எல்லாம் கனவென்பதை உணர்வதற்கே சில நொடிகள் நிதானிக்க வேண்டியிருந்தது அவளுக்கு. கண்கள் கடிகாரத்தை அனிச்சையாய் நோக்கியது. நேரம் நள்ளிரவு ஒன்றைத் தொட்டு நின்றது. மின்விசிறி ஓடிக் கொண்டிருந்த காற்றோட்டமான அறையிலும் கூட, அவளுக்கு வியர்த்து வழிந்தது.

 

நெற்றி வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டவளுக்கு, கையில் அப்பியிருந்த வியர்வையின் ஈரம், கனவில் கண்ட இரத்தின் பிசுபிசுப்பை நினைவுபடுத்தியது. கண்கள் அவளை அறியாமலே கண்ணீரைச் சுமந்து நிற்க, உடல் நடுங்க, நுரையீரல் மூச்சுக்காற்றுக்குத் தவிக்க, தொண்டை வறண்டு வலித்தது. என்னதான் கண்டவை அனைத்தும் கனவென மூளை அறிவுறுத்தினாலும் கூட, மனம் எற்க மறுத்தது. உதிரம் தோய்ந்த நிலையில் அவள் கண்ட அந்த முகம் மீண்டும் மீண்டும் கண் முன் வந்து வந்து போனது.

 

“அழகரு!”

அவள் மென்னிதழ்கள் தவிப்புடன் உச்சரிக்க, கண்கள் அடை மழையாய்க் கண்ணீரைப் பொழிந்தது. கருவிழிக்கு கனவுகள் வருவது அதிசயத்திலும் அதிசயம்.

 

அதிலும் வந்த கனவு நினைவில் இருப்பது அதைவிட பெரிய அதிசயம். அப்படி இருக்கையில் திடீரென வந்த துர் சொப்பனத்தை அவளால் இலகுவாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை.

 

தலைவிரி கோலமாய் நின்றிருந்த பெண், அவளைப் போலவும், உதிரம் வழிய கீழே விழுந்துக் கிடந்த உடல் துடிவேல் அழகருடையாதாகவும் தான் அவளுக்குத் தோன்றியது.

 

‘ஏன் இப்படியொரு கனவு?’ மனம் கலங்கிய குளமாய் குழம்பித் தவித்தது. மனம் அப்போதே அழகரைக் காண வேண்டுமென அடம் பிடித்தது. நடுங்கிய பாதங்களை தரையில் ஊன்றி, மென்மையான எட்டுக்கள் எடுத்து வைத்துக் கதவைத் திறந்தாள்.

 

கதவுக் குமிழைத் திறப்பதற்குக் கூட ஒத்துழைக்காது கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. தன் அறையிலிருந்து அழகரின் அறைக் கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி மெதுவாய் எட்டிப் பார்த்தாள். காலியாய் கிடந்த படுக்கையைக் கண்டதும், அவளுக்குள் ஒரு திடுக்கிடலும் அதிர்வும் வந்து போனது.

“ஒருவேளை தோட்டத்தில் இருக்குமோ?” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், மாடிப் படிகளில் மெதுவாய் இறங்கி வந்து, பின் வாசல் கதவைத் திறந்தாள். ஆளரவமே இல்லாத அர்த்த ராத்திரியில், தன் கால் கொலுசு சிணுங்க, கண்களால் அவனைத் தேடி துளாவியவளுக்கு, அவனைக் கண்டதும் தான் போன உயிர் திரும்ப வந்தது.

 

படுக்கையில் அவனைக் காணவில்லை என்றதும் கொஞ்சம் பதறித்தான் போனாள் கருவிழி. கண்ட கனவின் தாக்கம் இன்னுமும் துளி விலகாமல் அப்படியே தான் இருந்தது. ஒருவேளை தோட்டத்திலும் அவனைக் காணவில்லையென்றால், வீட்டில் உள்ளவர்களை எழுப்பி விடலாம் என்ற முடிவோடு தான் பின் பக்கக் கதவைத் திறந்து தோட்டத்திற்கு வந்தாள்.

 

முல்லைப் பந்தலின் கீழிருந்த ஊஞ்சலில் அவனைக் கண்டதும் தான் அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசம் பிறந்தது. மெல்ல நடந்து, கையில்லாத பனியனோடு ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனின் தோளை பின்னிருந்து தொட்டாள் கருவிழி. திடீரென அவள் தொட்டதில் திடுக்கிட்டு திரும்பியவன்,

“ஏய் கரு கரு! இந்நேரத்தில் இங்கே என்னடி பண்ணுறே? பின்னால் வந்து தொடவும் பயந்தே போனேன். கிறுக்கச்சி..! என்னத்துக்குடி இந்நேரத்தில் பிசாசு மாதிரி உலாத்துற?”

 

என அவன் திட்டிக் கொண்டிருக்க, அவன் அருகே ஊஞ்சலில் அமர்ந்தவள், அவனின் முறுக்கேறிய தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அத்தை மகள் செயலின் பொருள் புரியாது குழம்பியவன்,

 

“என்ன ஆச்சுடி?” எனக் கேட்ட நொடியில், சரசரவென அவள் கண்களில் இறங்கிய கண்ணீர், வெது வெதுப்பாய் அவன் தோளை நனைத்தது.

“ஏய் கிறுக்கச்சி! என்னத்துக்குடி இப்படி அழவுறே? என்ன ஆச்சு?”

“என்னன்னு கேட்கிறேன்ல்ல டி? பதில் சொல்லாமல் அழுதுட்டே இருந்தால் என்ன அர்த்தம்?”

“கரு கரு..!” அவனின் கேள்விகளுக்கு எதிர்வினை ஆற்றாது, அவன் தோளில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்தவளைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

 

ஆனால் கண்ட கனவின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல், அவனுக்கு ஏதோ நேர்ந்துவிடுமோ? என நினைத்து பயந்து போனவளுக்கு, அவனைப் பார்த்ததும், அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றதில் நிம்மதி மேலோங்கினாலும், என்றாவது ஒருநாள் கனவு பலித்துவிடுமோ? என்ற பயத்தில் அவளை அறியாமல் கண்கள் நீரைப் பொழியத் துவங்கியிருந்தது.

“என்னத்துக்குடி இப்படி அழறே? சொல்லித் தொலையேன் டி!”

அவள் முகம் நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தான் அவன். ஒன்றுமில்லை எனும் விதமாய், இடவலமாய் அவள் தலையசைத்து மறுக்க,

“அப்பறம் ஏன்டி சின்னப்பிள்ளை மாதிரி அழறே? அத்தை அடிச்சுட்டாங்கன்னு அழறியா?” என அவன் கேட்கவும் வேகமாய் ‘ஆம்’ எனத் தலையசைத்தாள் அவள்.

“இதுக்குப் போய் யாராச்சும் அழுவாங்களா? ஒரே ஒரு தடவை அத்தையோட பக்கம் இருந்து யோசிச்சு பாரேன் டி! ஒத்தை ஆளாய் நின்னு வளர்த்து உன்னை ஆளாக்கியிருக்காங்க தானே.? நாங்களும் கூட இருந்தோம். இல்லைன்னு சொல்லலை! ஆனால் எனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லைன்னு நீ கேட்டப்பவெல்லாம் அத்தை தனியா உட்கார்ந்து அழுததை நானே பார்த்திருக்கேன். பிறந்த வீட்டில் சும்மா இருந்து சோறு தின்னாங்கன்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, களத்து வேலையிலிருந்து, காட்டு வேலை வரை பார்த்தாங்க! சொந்தம்ன்னு நாங்க இருந்தோம் தான். கஷ்டம்ன்னு வந்ததும் தாங்கி தூக்கி நிறுத்தினோம் தான். ஆனால் உழைப்பு முழுசும் அத்தையோடது தான். அண்ணன் பொஞ்சாதிங்க, பெத்த தாய், தகப்பன் யாரும் தன்னை, தான் பிள்ளையை ஒத்தை சொல் சொல்லிடக் கூடாதுங்கிறதில் அத்தை ரொம்ப உறுதியா இருந்தாங்க! அப்படி வைராக்கியமா இருந்தவங்க பொண்ணு நீ, உன்னை இன்னொரு பையன் கூட சேர்த்து வச்சு பேசும் போது, அவங்களுக்கு வேதனை இருக்க தானே செய்யும்? தான் வளர்ப்பு தப்பாகிடுச்சோன்னு அத்தைக்குள்ளே பயம் வந்துடுச்சு. அதை என்னால் உணர முடிஞ்சுது.!” என அழகர் சொல்லவும் கண் சிமிட்டாமல், தன் விழிகளை அகல விரித்து அவனைப் பார்த்தாள் அவள்.

 

“மாமா!” இதழ்கள் தடுமாற்றத்துடன் அவனை அழைத்தது.

 

“முதலில் அத்தையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு டி! நல்லா நிதானமா உட்கார்ந்து யோசிச்சு பாரு, நான் சொல்றது உனக்குப் புரியும்.! எந்த முடிவிலும் அவசரப் பட்டுடாதே! எதுவா இருந்தாலுமே நான் உனக்கு கடைசி வரை துணையாய் இருப்பேன். அர்த்த ராத்திரியில் இப்படி உலாத்தாமல் போய் உறங்கு!” ரோஹனை மனதில் வைத்து சொன்னவன், ஊஞ்சலிலிருந்து எழுந்துக் கொண்டான்.

 

“நீ தூங்கலையா அழகரு? நீ ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?”

 

“என் அத்தை மவளுக்கு இந்த மாமன் மவன் மேல ரொம்பத்தான் அக்கறை! எம்புட்டு நேரஞ்செண்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறவ? உறக்கம் வரலை டி! மணி ரெண்டாகிருச்சு, காய்கறி லோடு அணுப்பணும்! காக்காவிரட்டி காத்திருப்பான். நான் கிளம்புறேன். நீ கதவைப் பூட்டிட்டு உறங்கு!” எனச் சொல்லிவிட்டு அவன் நகர முயல,

 

அவன் முழங்கையை அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டாள் கருவிழி.

“என்னடி?” சலிப்பாய் கேட்டான் அவன்.

“இந்நேரத்தில் போவணுமா மாமா? கொஞ்ச நேரம் உறங்கி எழுந்து போகலாம்ல்ல?”

“நான் இங்கே உறங்கினா, அங்கே தொழில் தூங்கிப் போவும் டி கிறுக்கி!”

“அழகரு.. ப்ளீஸ்..! அப்பறம் என்னை யாரு காலேஜில் விடுவாங்க?!” கண்கள் சுருக்கிக் கொஞ்சியவளின், கரத்திலிருந்து தன் கரத்தினை விடுவித்துக் கொண்டவன்,

“இன்னைக்கு சனிக்கிழமை, உனக்கு காலேஜ் லீவ் தானே? போய் படுத்து உறங்கு. இந்நேரத்தில் தனியா நின்னு பேசறதைப் பார்த்தால், யாராச்சும் என்னமாச்சும் நினைப்பாக!” சின்ன சிரிப்புடனே பதில் சொன்னான் அவன்.

 

“மாமா!” அவள் லேசாய்க் குரலுயர்த்தவும்,

“இந்தாருடி! எல்லா விஷயத்திலும் உன் பேச்சு கேட்டு விளையாட்டுத்தனமாய் இருக்க மாட்டேன். இது தொழில் விஷயம். இதில் விளையாடாதே!” எனக் கண்டித்தவன்,

“ஆமா, பொழுது விடிஞ்சு வெயில் வந்த பிறகும் உறங்குறவ இன்னைக்கு என்ன நடுச்சாமத்தில் எந்திரிச்சு வந்திருக்கே? ஏதாவது கனவு கண்டியா?” எதேச்சையாய் அவன் கேட்கப் போய், இவள் முகம் பேயறைந்தார் போல் மாறியது.

“அ.. அதெல்லாம் இல்லை! தண்ணி குடிக்க எழுந்தேன்.. தூ.. தூக்கம் வரலை. அதனனால் தான் இங்கிட்டு வந்தேன். வேற ஒண்ணும் இல்லை.!” கனவில் கண்ட காட்சிகள் கண்ணுக்குள் வந்து போனாலும், எதையும் சொல்லி அந்த நேரத்தில் அவனைச் சலனப்படுத்த அவள் விரும்பவில்லை.

“சரிடி நீ உள்ளே போ! குளிர் காத்து அடிக்கிது பாரு! உடம்புக்கு எதாச்சும் வந்துடப் போவுது. நீ உள்ளே போ! நான் கிளம்பறேன்.!” என அவன் அக்கறையாய் சொன்ன வார்த்தைகளில் கூட, அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது.

“மாமா! சூதானம்!”

 

நடுங்கியக் குரலுடன் சொன்னவளின் குரலில் என்ன இருந்தது எனப் புரியாமல், அவளைத் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடியே தன் வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வெளியேறியிருந்தான் துடிவேல் அழகர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. கண்ட கனவின் தாக்கம் பாவம் கருகரு ரொம்ப பயந்துட்டா.

    பின்புற தோட்டத்தில் முல்லை பந்தல் ஊஞ்சல் 😍😍❤️

    யாரும் தன்னையும் மகளையும் ஒரு பேச்சு சொல்லிவிட கூடாது என வைராக்கியதோடு வளர்த்த தனது வளர்ப்பு தவறாக போய்விட்டதோ என்ற ஆதங்கம்.

    அழகர் அதனை எடுத்து கூறிய விதம் அருமை கூடுதலாக இன்னும் அவள் மனதில் ரோஹன் உள்ளான் என்ற நினைப்பினில் “நிதானமாக யோசித்து செயல்பட” கூறியதும் நன்று.

    விழி ஏற்கனவே குற்றஉணர்வில் தவிக்கிறாள் இப்பொழுது கண்ட கனவின் பயம் வேறு.

    1. Author

      உண்மை தான் டியர். சீக்கிரம் தெளிஞ்சுடுவா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 💛💙💜

    1. Author

      மிக்க நன்றி கலை மா 💛💜

  2. அய்யோ இந்த கருகரு எப்பவும் அழகரை தான் டென்ஷன் பண்ணும் … இப்போ நம்மள டென்ஷன் பண்ணி விட்டிருக்கு … கனவு பலிச்சிடுமோ… அழகருக்கு ஏதாவது 🤔🤔

    1. Author

      இந்த கருகருவுக்கு டென்ஷன் பண்ணுறது மட்டும் தான் வேலை. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா 💙💜