Loading

    சிவராமன் மேலூரை விட்டு வந்தாலும், அங்கிருக்கும் தனது நண்பர்களின் மூலமாக, அவரின் குடும்பத்தை பற்றியும், தன் தாயின் உடல்நிலை பற்றியும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டார்.

   நேற்று இரவில் இருந்தே ஏதோ மனதிற்கு நெருடலாக இருக்க, இன்று தன் நண்பரிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார்.

   அப்போது தான் தனது அன்னைக்கு அடிபட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சென்று பார்க்க இயலாத தனது நிலையை எண்ணி மிகவும் வருந்தினார்.

    அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி படுக்க வைத்து விட்டு மனபாரத்துடன் தான் வெளியில் வந்தார் லட்சுமியம்மா.

      அப்பாவை பற்றி கேட்ட பிள்ளைகளிடம், அவருக்கு தலைவலி என்று கூறி சமாளித்தார்.

     மது, தான் நாளை காலை ஏழு மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று, தன் அன்னையிடம் கூறிவிட்டு, உணவை முடித்துக் கொண்டு படுக்கச் சென்று விட்டாள்.

     அமுதன் மட்டும் தன் அன்னை கூறியதை நம்பாமல், மது சென்ற பிறகு அவரை பிடித்து விசாரித்தான்.

      தன் மனபாரத்தை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தவித்த லட்சுமியம்மா, தான் பெற்ற மகனிடம் மடைத்திறந்த வெள்ளமாக, தங்கள் முழு கதையையும் கூறினார்.

      அமுதனுக்கு தன் தந்தையை எண்ணி கவலையாக இருந்தது, என்ன ஆனாலும் பரவாயில்லை, நாளை தன் தாய் தந்தையை கூட்டிக் கொண்டு தமது பாட்டியை காணச் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான்.

    தன் அலுவலகத்திற்கு அழைத்து நாளை தனக்கு விடுப்பு கூறிவிட்டு, தன் அன்னையிடம், பாட்டி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரியை பற்றி தந்தையிடம் விசாரிக்குமாறு கூறினான்.

     இங்கு இப்படி இருக்க, வேலப்பன் ஐயாவின் வீட்டில் அனைவரும் பதட்டத்துடன் இருந்தனர்.

   ஏற்கனவே தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலையினை என்னை வருத்தத்தில் இருந்தவர், தனது பேத்தி காணாமல் போனது தெரிந்ததும், முற்றிலுமாக உடைந்து விட்டார் வேலப்பன் ஐயா.

   எவ்வளவு முயன்றும் நிரஞ்சனா எங்கு சென்றாள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

  அவளது அலைபேசியினை ட்ராக் செய்ய முயன்ற போது, அது ஆஸ்பத்திரிக்கு அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    அந்த தொலைபேசியில் ஒரு ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு, அடுத்த நாள் அலாரம் அடிக்குமாறு செட் செய்யப்பட்டு இருந்தது.

    அதை திறந்து பார்த்த தீபன்,
வேலப்பன் ஐயாவின் வீட்டில் அனைவரும் கேட்குமாறு, அந்த ஆடியோவை ஓட விட்டான்.

    அதில் தனது பாட்டி கீழே விழுந்ததை காரணமாக வைத்து, தனது திருமணத்தை முன்னிறுத்துவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், இந்த நிலைக்கு தன்னை ஆளாக்கியதற்காக, தன் குடும்பத்தை வெறுப்பதாகவும், அதனால் இரண்டு மூன்று நாட்கள் தனது தோழியுடன் சென்று தனிமையில் இருக்க விரும்புவதாகவும் கூறி, நிரஞ்சனாவின் குரலில் ரெக்கார்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது.

      இதனைக் கேட்ட குடும்பத்தாருக்கு வேதனையாக இருந்தது. மாறனால் இதை நம்ப முடியவில்லை,பாட்டியின் இத்தகைய நிலைக்கு தாங்கள் தானே காரணம். அதை வைத்து தானே திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
   
     தன் தங்கை தனக்குத் தெரியாமல் ஏதும் திட்டம் போட்டு இருக்கிறாளா என்று தெரியாமல், முழித்துக் கொண்டிருந்தான். தன் தங்கை தன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் அவனிடம் இருந்தது.

எனவே யாருக்கும் தெரியாமல் அவளை தேட முடிவெடுத்தான்.  

    அவனுடைய தாய் தந்தையருக்கு  இந்த பெண் இப்படி செய்து விட்டாளே என்று, மற்றவர் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல், தலை குனிந்து நின்றனர்.

            அண்ணன் தங்கையின் ரகசியமறிந்தவர்கள், இது இவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டனர்.

  ஆகவே ரஞ்சி அவளாகவே வரட்டும் என்று அவளைத் தேடும் பணியை விட்டு விட்டனர்.

  இரவு, வேந்தனது பதட்டமான முகத்தையே நினைத்துக் கொண்டு படுத்திருந்த மதுவிற்கு தூக்கமே வரவில்லை. எதற்காக அப்படி பதறி கொண்டு சென்றான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

    உனக்கேன் இவ்வளவு அக்கறை அந்த ஆபீஸில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று, பராசக்தி டயலாக் பேசிய தனது மனசாட்சியை தலையில் தட்டி ஓரம் போக சொல்லிவிட்டு, அதை நினைத்துக் கொண்டே படுத்திருந்தாள்.

   கட்டிலில் உருண்டு புரண்டு பார்த்தும் நித்திரா தேவி அவளை தழுவாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தார். விடியும் வேளையில்தான் சற்று கண் அயர்ந்தால் மது.

கனவிலும் உன்னை தனியே விடுவேனா! என்று துரத்தி வந்து விட்டான் வேந்தன்.

   அவளது மனக்கண்ணில் தெளிவில்லாத சில காட்சிகள் அரங்கேறின.

  நீரினுள் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அவன் தலை முடியினை பற்றிக் கொண்டு, நீருக்கு மேலே இழுத்து வந்தாள்  நீலவிழி சிறுமி ஒருத்தி.

அந்தக் காட்சியானது அப்படியே புகை போல களைந்து போக, ஒரு குளத்தின் அருகே பதினோரு வயதில் ஒரு சிறுவனும் ஐந்து வயதான ஒரு சிறுமியும் மகிழ்வுடன் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது.

   அச்சிறுவன், மதுரா ஓடாதே நிச்சயம் உன்னை பிடித்து விடுவேன் என்று கூறிக் கொண்டே துரத்த, அச்சிறுமியும் உன்னால் முடிந்தால் என்னை பிடித்து பார் தீரா என்று அச்சிறுவனுக்கு போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தாள்.

  அக்காட்சியும் அப்படியே புகை போல களைந்து போக அடுத்து, வீர முகம்தனை தாங்கி, செம்பழுப்பு வண்ணத்தில் மிளிரும் ஒரு சிலையை கண்டால், அதன் கண்கள் நீல நிறத்தில் ஒளி வீசி கொண்டிருந்தது.

     அந்த தேவியின் சிலை அருகே, தான் ஒரு நூலாடை அணிந்து காட்டுவாசி பெண் போன்ற தோற்றத்தில் கண்மூடி தியானத்தில் இருந்ததை கண்டாள்.

   தனக்கு அருகில் புன்னகை தழும்பிய முகத்துடன் அமர்ந்திருந்த வேந்தன், தன் கைகளில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்தான்.

     பதறிக்கண்விழித்தவள் அதிர்ந்த பார்வையோடு தன் நீல விழி கொண்டு அவனை பார்த்து, தீரா என்று அழைத்திட, புன்னகையுடனே தனது கழுத்தில் இருந்த பதக்கம் பொருந்திய சங்கலியை கழட்டி, அவள் கழுத்தினில் அணிவித்தவன்,

      “ஆம் மதுரா, இனி இந்த ஜென்மம் மட்டுமல்ல நான் பிறப்பெடுக்கும் எந்த ஜென்மத்திலும், நான் உனது தீரன் மட்டுமே. இது அந்த அன்னை கொற்றவை மீது ஆணையாக நான் உனக்கு அளிக்கும் வாக்குறுதி.”

    தன் நீல விழிகளில் கண்ணீர் சூழ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வேந்தனுக்கு பின்னால் இருந்த குகை வழியே, சர்வ அலங்காரத்துடன் இருந்தாலும், கோபத்தினால் முகம் விகாரமாக இருக்க, தன் கைகளில் உள்ள வாளினை ஓங்கிக்கொண்டு வந்தவளை கண்டு, அலறிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தமர்ந்தாள் மது நிகழ்காலத்தில்.

  மது நேரத்திலேயே அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறியதால், அவளை எழுப்ப வந்த அவளின் தாய் லட்சுமி, இவள் அலறியதைக் கண்டு ஐந்து அடி தள்ளிப் போய் விழுந்தார்.

   தன் தாய் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து, மது எழுந்து வந்து அவரை தூக்க, அவர் அவளை கன்னத்தில் ஒரு இடி இடித்து விட்டு,

   “எதுக்குடி இந்தக் கத்து கத்துன? ஆபீஸ்க்கு நீ இன்னைக்கு நேரத்துல போகணும்னு சொன்னதால தானே உன்னை எழுப்ப வந்தேன். அதுக்கு எதுக்குடி இப்படி கத்தற?”

திரு திருவென முழித்த மது,

   “அது…அது…அதிகாலையில இப்படி கத்துனா அஷ்டலட்சுமிகளும் நம்ம வீடு தேடி வரும்னு சொல்லி கேள்விப்பட்டம்மா அது தான் கத்திப் பார்த்தேன்.”

  இந்த வாய்க்காகவே சில பல கோட்டுகளை, பரிசாக தன் தலையில் பெற்றுக்கொண்டு, குளியலறைக்குள் புகுந்தால் மது,

      நீர்திவளைகள் தன் தலை மீது விழும் போது, கனவுகள் அனைத்தும் கலைந்து போனது போன்று ஒரு உணர்வு இருந்தது மதுவிற்கு, எவ்வளவு முயன்றும் நினைவலைகளை அவளால் மீட்டெடுக்க முடியவில்லை.

தலையினை உலுக்கி கொண்டு நிகழ்காலத்தோடு ஒன்றிட எண்ணினால்.

      இன்று வினு அதிகாலையிலேயே, மதுவின் வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டாள்.

  அரக்க பறக்க ரெடியாகி வந்த மது, அம்மாவின் திட்டுகளோடு, அவர் தந்த உணவையும் மென்று முழுங்கி விட்டு, வினுவுடன் வேந்தனின் அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்.

  “அடுத்தவங்களுக்கு பிரச்சனை கொடுத்து, வேடிக்கை பார்க்கிற உன்னையே, அந்த ஓனர் இப்படி அரக்க பறக்க ரெடியாக வைச்சுட்டாரே இதுக்காகவே அவர பாராட்டியாகனும்.”

     “அதிக சந்தோஷம் கொள்ளாதீர்கள் மன்னா, என்னை இப்படி உருண்டோட வைத்த குற்றத்திற்காகவே, நான் அந்த ஆபீஸிலிருந்து வெளி வருவதற்குள், உங்கள் ஓனரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து, அவரை தலை தலையாய் அடித்து கொள்ளும்படி செய்கிறேனா இல்லையா என்று பாருங்கள்.”

    “அட என் மங்குனி அமைச்சரே, ஏற்கனவே தாங்கள் நன்றாக…செய்த செயலுக்காகத்தான் தற்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
  
அதனால் தங்கள் திருவாயை மூடிக்கொண்டு, குரங்கு சேட்டை எதுவும் செய்யாமல் இருந்தாலே நல்லது.”

    மது வினுவை முறைத்து கொண்டே பார்ப்போம் பார்ப்போம் என்றிட,

“அதுதானே தாங்கள் திருந்தி விட்டால் இந்த பூமி சுற்றுவதை நிறுத்தி விடாதா என்ன? அப்பறம் இந்த உலகம் என்ன ஆவது இந்த உலகில் வாழும் ஜீவராசிகளின் கதி என்ன ஆவது?”

      “போதும் டி உன் புது ஒனரை, சரி சரி நம்ம…நம்ம புது ஒனரை நான் எதுவும் செய்யல சரியா.”

   அவர்கள் அலுவலகம் வந்து சேர்ந்த போது, அந்த ஆபீஸை சேர்ந்த பியூன் மட்டுமே அங்கு இருந்தார். அவர் அவர்களிடம் வந்து,

  “சார் கொடுக்கச் சொன்னார்.”
என்று ஒரு கோப்பினை கொடுத்துவிட்டு, 

   “இதுல நீங்க பாக்க வேண்டிய வொர்க்கும், ஏதாவது சந்தேகம்னா கேக்குறதுக்கு சாரோட போன் நம்பரும், இருக்கிறதாக சொல்ல சொன்னார்.”

     என்று கூறிச் சென்றார்.

அவர் கொடுத்து சென்ற கோப்பினை திறந்துப் பார்த்த வினு விழி விரித்து நிற்க, அவள் அவ்வாறு நிற்பதைக் கண்டு அப்படி என்னவா இருக்கும் என்று அதனை வாங்கிப் பார்த்த மதுவின் கண்களில் சிகப்பு நிறம் ஏறியது.

வினுவோ கோப்பினில் உள்ளவற்றை படித்துவிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

மது தன் கையில் இருந்த கோப்பினால் அவளின் தலையில் அடித்து விட்டு, கோப்பினில் இருந்த வேந்தனின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தாள்.

ஆனால் அவனோ இவள் அழைப்பை ஏற்காமல், மதுவின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து கொண்டிருந்தான்.

      “அடேய், என் உசுர எடுக்கவே பொறந்தவனே, போனை எடுத்து தொலையேன்டா.”

   இங்கு இவளை ஹைப்பிச்சில் கத்த வைத்த வேந்தனோ, அங்கு அவளின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருந்தான்.

      ஆஸ்பத்திரியில் உள்ள பூவுப்பாட்டியை சென்று காண, தயாராகி கொண்டிருந்த சிவராமன் குடும்பத்தார் வாசலில் அரவம் கேட்கவும், யார் என்று சென்று பார்த்தனர்.

     முதலில் வேந்தனைக் கண்டு யார் என்று அடையாளம் தெரியாமல் லட்சுமியம்மா விசாரிக்க அவன்,

   “என்னை உங்களுக்கு தெரியாது, ஆனால் இவங்களை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.”

   என்று  தனக்குப் பின் நின்றிருந்த பூவுப்பாட்டியையும் வடிவுப்பாட்டியையும் காட்டினான்.
  
  தன் அத்தையை கண்டு, இது பிரம்மை தானோ என்று அதிர்ந்து நின்ற லட்சுமி அம்மாவை, அமுதன் வந்து உலுக்கிய பிறகே சுயநினைவுக்கு வந்தார்.

  பசுவைக் கண்ட கன்றாக, தனது வளர்ப்புத் தாயை கட்டிக்கொண்டு கதறி அழ தொடங்கி விட்டார் லட்சுமியம்மா.

  “என் ராசாத்தி நாஞ்சாகறதுக்குள்ள உன்ன பாத்து மன்னிப்பு கேட்கணுமுன்னு நினைச்சேன் தாயி, என்னை மன்னிச்சிடும்மா.”

“அச்சோ என்னத்தே இது, எதுக்கு இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறீங்க.”

   “இல்ல தாயி என்ற அண்ணன் சாகும்போது, உன்னை என் மகமாரி பாத்துக்குறேன்னு சொன்னேன், ஆனா அந்த வாக்குறுதியை என்னால காப்பாத்தவே முடியலயே.”

     “நீங்க வேற உங்க மகன் வேறயாத்தே, அவர் என்னை மகாராணி மாதிரி பார்த்துக்கிறாரு.”

“அடி மகளே உங்க அத்தை கிட்ட இருந்து பார்வையை இங்கிட்டும் திருப்புடியம்மா, நானும் என் பேரனும் கூடத்தான் வந்திருக்கோம். எங்களை இப்படியே வாசலோட வழியனுப்பி வைச்சிடலாம்னு நினைச்சுட்டு இருக்கிறயா.”

“அச்சோ வடிவுசித்தி அப்படியெல்லாம் இல்ல. உள்ளே வாங்க, இது உங்க வீடு வாங்க வாங்க. நாங்க எல்லோரும் அத்தையை பார்க்கலாம்னு தான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டு இருந்தோம்.”

  உள்ளே வந்தவர்களிடம் தன்மகன் கனியமுதனை அறிமுகம் செய்து வைத்தார்.

“எஞ்சாமி உன்ன பாக்குறதுக்கு, இந்த கிழவிக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கே. அப்படியே உருவத்துல எங்க அண்ணனை உரிச்சி வச்ச மாதிரி பிறந்திருக்கப்பு”

  “உருவம் மட்டும் இல்லத்தே குணத்துலயும் அவன் உங்க அண்ணணை போலத்தான். அவந்தங்கச்சின்னா அவனுக்கு உசுரு. என்நேரமும் அவள வம்பு இழுத்திட்டே இருந்தாலும், அவ முகம் வாடக் கூட விடமாட்டான்.”

அப்போதுதான் வேந்தனுக்கு மதுவின் ஞாபகம் வந்தது. தனது அலைபேசியை எடுத்து பார்த்தவன், அதில் பலமுறை இவனுக்கு மது அழைத்திருந்ததாக காண்பிக்க, எதற்காக அவள் அழைத்திருப்பாள் என்பதை புரிந்து கொண்ட வேந்தன், விஷமப் புன்னகையுடன் திரும்ப அவளுடைய அலைபேசிக்கு அழைத்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்