
விடியும் முன்..!
அத்தியாயம் 08
கருப்பு நிறத்தில் விரல்கள் ஒவ்வொன்றும் நீண்டு ஒரே வரிசையில் இருக்காது ஒவ்வொரு கோணத்தில் விரிந்து கிடக்க தடித்ததாய் துவங்கி மெல்லியதாய் முடிவுற்றிருந்தன.
விகாரமான கால்களின் வழியே குருதி ஒழுகிக் கொண்டிருக்க முகம் வெளிறிப் போனது,அவனுக்கு.
முன்பு போல் பிரம்மையாக இருக்குமோ என்கின்ற நினைப்பில் மீண்டும் விழிகளை மூடித் திறக்க அப்போதும் அவன் கண்ட தோற்றத்தில் மாற்றமில்லை.
கத்திக் கூச்சலிட முயன்ற நாவை அடக்கியவனுக்கு தப்பிப்பதே பெரும் யோசனையாய் தான் இருந்தது.
வண்டி நின்றிருக்க கீழே குனிந்து எழாதவனைக் கண்டு கஜேந்திரனுக்கு கோபம் எகிறியது.
“என்ன மருது பொதயல் தேட்றியா..?வேல இருக்கு வீடு போய் சேரனும்..” கடினமாய்ச் சொல்ல நிமிர்ந்தவனின் முகத்தில் இருந்த கலக்கமும் விழிமொழியும் கஜேந்திரனுக்கும் எதையோ புரிய வைக்க முயன்றது.
விழிகளால் கீழே குனிந்து பார்க்குமாறு சைகை செய்ய என்றுமில்லாமல் அவன் சொன்னபடி கீழே குனிந்து மருதவேலின் சைகை படி பின்னே திரும்பியவனும் மிரண்டே விட்டான்.
இருந்த மனநிலை மொத்தமும் மாறி பயம் துளிர்க்க அதன் சாயலாய் முகமெங்கும் வியர்வைப் பூக்கள்.
செய்வயறியாது திகைத்து நிமிர்ந்தவனுக்கு மருதவேலின் நிதானம் நினைவில் வர அவனின் விழிமொழிக்கேற்ப பொறுமையாய் இருந்தான்,கஜேந்திரன்.
இவர்களின் விழிவழி உரையாடலை சங்கரன் கவனித்ததாய் தெரியவில்லை.அவன் பார்வை வெளியில் தான் மேய்ந்து கொண்டிருந்தது.
அது மருதவேலுக்கு பெரும் நிம்மதியாய் போக அந்த பதட்டத்திலும் தெளிவாய் சிந்திக்கச் செய்தது,அவன் மனம்.
சட்டென்று வண்டியை நிறுத்தியவனை கேள்வியாய் பார்த்தனர் இருவரும்.கஜேந்திரன் முகத்தில் தான் இவனின் செயல் புரியாத கலவரம் தெரிந்தது.
“அண்ணே..கொஞ்சம் எறங்கி வண்டிய தள்ளி விட்றீங்களா..?வண்டி ஸ்டார்ட் ஆகல..” கேள்விக்கு முன்னே பதில் சொல்லியவனின் திட்டம் அப்போது தான் கஜேந்திரனுக்கு புரிந்தது.
சங்கரனோ கஜேந்திரனைப் பார்க்க வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்து இருந்தவனால் எந்த வித பதிலும் சொல்லிக் கொள்ள இயலவில்லை.
“அது ஐயாவுக்கு மழைல நனஞ்சா ஒத்துக்காது..அதான் உங்க கிட்ட சொல்றேன்..”சமாளிப்பாய் சொல்ல அவரும் மறுபேச்சின்றி இறங்கி வண்டியைத் தள்ளத் துவங்கியது தான் தாமதம்,அதி வேகத்தில் பறந்தது அவர்களின் ஜீப்.
தப்பித்திட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.இதுவே,பிரதான வீதியொன்றில் இத்தனே வேகமாய் சென்றிருந்தால் காவல் துறை தடுத்து நிறுத்தி இருக்கும்.
உயிர்ப்பயம் உள்ளுக்குள் உருவெடுத்து நின்றாலும் கஜேந்திரனுக்கு பயத்தை மீறியதாய் கொஞ்சம் திகைப்பும்.மருதவேலின் வேகத்தை கண்டு.
ஒருவாறு அந்த குறுகலான பாதை முடிவடைய வண்டியை நிறுத்தினான்;மருதவேல்.
ஸ்டியரிங்கில் தலையை கவிழ்த்துக் கொண்டவனுக்கு ஆழமாய் மூச்சு வாங்க அவனைப் பார்த்தவாறு ஆசுவாசப் பெருமூச்சொன்றை விட்டான்,மற்றையவன்.
இருவருக்கும் எதில் இருந்தோ தப்பித்த உணர்வு.ஒருவாறு அந்த தோப்பு வீட்டை தாண்டி விட்டதாகிற்றே.
இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தவாறு ஆசுவாசப் பெருமூச்சொன்று வெளிவிட புன்னகைத்த படொ மருதவேல் வண்டியை கிளப்ப முற்பட்ட சமயம்.
“தம்பீஈஈஈஈ இவ்ளோ தூரம் தள்ளுனது போதுங்களா..?” கஜேந்திரனின் புறக் கண்ணாடி தானாய் கீழிறங்கிக் கொண்டிருக்க அந்த கண்ணாடி வழியே தலையை உள்ளே நீட்டி விகாரச் சிரிப்போடு வலது நெற்றியோரம் வழியும் குருதியுடன் கேட்டான்,சங்கரன்.
திடுக்கிட்டு கலைந்தான்,மருதவேல்.
மனம் அவன் பேச்சைக் கேளாமல் நேற்று நடந்ததை நினைத்து தறி கெட்டு ஓடியிருந்தது.இப்போதும் கூட வியர்வைத் துளிகள் அரும்பி அவன் சட்டையை நனைக்காமல் இல்லை.
அமானுஷ்யத்திற்கு அவன் பயம் தான் என்றாலும் அதை பெரிதாய் நம்பும் கூட்டம் இல்லை.நேற்றுத் தான் மொத்தமாய் நம்பும் படி ஆகி விட்டதே.
யோசனையில் இருந்தவனுக்கு இப்போது எப்படியாவது கஜேந்திரனின் தாயாரை சந்தித்து பேசிடும் எண்ணம் தான்.
●●●●●●●●●
நேரம் ஒன்பது மணி பதினைந்து நிமிடம்.
போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்தாலும் அவனுடலில் மெல்லிய நடுக்கம் இழையோடிக் கொண்டிருந்தது.கண்ட காட்சியின் வீரியம் அப்படி.
நேற்றிரவு முழுக்க நிகழ்வின் தாக்கத்தில் உறங்கக் கூட இல்லை.
கண்ணை மூடினாலே அந்தக் கொடூரம் தான் விழிகளுக்குள் நிழலாடியது.
பயந்த சுபாவம் இல்லை அவன்.அதற்கென்று அந்தளவு தைரியமானவனும் இல்லை.அடிதடியைக் கண்டிருந்தாலும் இப்படி ஒரு கொடூரத்தை கண் முன்னே கண்டது இது தான் முதல் தடவை.
அவனறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்க அவன் நினைத்தது போலவே அண்ணன்காரன் தான் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்திருந்தான்.
தம்பியை தினமும் இந்த நேரத்தில் எழுப்ப வருவது வாடிக்கையான பழக்கம் அல்லவா..?
“அருள்..கெட் அப்ப்..” அண்ணனின் கத்தலில் முகத்தை மூடியிருந்த போர்வையை கீழே இறக்கியவனை விசித்திரமாக தான் பார்த்தான்,அவன்.
தம்பியை எழுப்ப அவன் தினமும் போராட வேண்டியிருக்க இன்று முரணாய் அவனே விழித்துக் கிடப்பது சிறு புன்னகையையும் தோற்றுவித்தது.
“என்னடா அருள்..? என்னக்குமில்லாம அதிசயமா இந்தக் காலைல எந்திரிச்சி இருக்க..? நைட் தூங்கலயா நீ..? கண்ணெல்லாம் செவந்து இருக்கு..?” தொடராய் வந்த கேள்விகளுக்கு உடனடியாய் பதில் சொல்ல முடியவில்லை,
அவனாலும்.
“இல்லண்ணா..சும்மா தான்..” என்றவனோ கொட்டாவி விட்ட படி எழுந்தமர தம்பியின் முகத்தை கண்டு அண்ணனின் புருவங்கள் சுருங்கின.
“என்னடா மொகமெல்லாம் ஒரே டல்லா இருக்கு..? ஏதாச்சும் ப்ராப்ளமா..? காலேஜ்ல யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா..? இல்லன்னா ப்ரெண்ட்ஸ்குள்ள சண்ட போட்டுகிட்டீங்களா..? என்னக்குமில்லாம ஏன் இப்டி டயர்டா இருக்க..?”
அண்ணன் மீண்டும் மீண்டும் கேட்க ஒன்றும் இல்லையென்பதாய் தலையசைத்தவனோ எழுந்து குளியலறைக்குள் நுழைய தம்பி ஏதோ மறைக்கிறான் என்பது புரியமால் இல்லை,அண்ணன் பிரகாஷுக்கும்.
குளியலறைக்குள் நுழைந்தவனுக்கு மனம் மட்டும் அத்தனை எளிதாய் சமப்படவில்லை.
●●●●●●●●
கணினியின் முன் அமர்ந்து தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்,
அர்ஜுன்.
அவனின் ஒவ்வொரு செயலிலும் அத்தனை நிதானம் இருக்க அது ஏனோ வினோத்துக்கு பெரும் எரிச்சலை கிளப்பியது.
“இன்னும் எவ்ளோ நேரம் எடுக்கும்..? வந்ததுல இருந்து தட்டி கிட்டே இருக்க..ஒன்னும் நடந்த மாதிரி இல்ல..”
“என்னோட அளவுக்கு தான் என்னால வேல செய்ய முடியும்..இல்லன்னா வேற யார் கிட்ட சரி கொடுங்க..நா கெளம்பிர்ரேன்..” எழப் பார்த்தவனை பிடித்து அமர வைத்திருந்தனர்,
மற்றைய இருவரும்.
“வினோத் சார்..கொஞ்சம் சும்மா இருங்க..அர்ஜுன் டைம்கு வேலய முடிச்சி தந்துருவாரு..”என்றாலும் வினோத்தின் மனம் ஆறவில்லை.
இருக்கையில் அமர்ந்து கொண்டாலும் அர்ஜுனின் முகத்தில் தெரிந்த கோபம் கார்த்திக்கிற்கு சிறு பயத்தை தோற்றுவித்தது.
எதையும் கண்டுகொள்ளாமால் கடந்திடுபவனுக்கு கோபம் வந்தால் உண்டாகும் பின் விளைவுகளை கண் கூடாக கண்டிருக்கிறானே..?
கார்த்திக் மட்டுமல்ல..
வினோத்தும் அர்ஜுனின் முகத்தை ஆராய இத்தனை நேரம் இல்லாது அவனிடம் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக தோன்றிற்று.
வினோத்தின் கூர்மையான பார்வை அவனை ஆராய அதைக் கண்டும் காணாதது போல் கணினித் திரையில் பார்வையை பதித்திருந்த அர்ஜுனின் இதழ்களில் இருந்த மர்மப் புன்னகையை யாரும் கண்டிட மாட்டார்கள்.
சில நிமிடங்கள் கடந்தது.வினோத்தோ சிறு வேலை ஒன்றுக்காக அவனின் அடியாட்களில் ஒருவனை அழைக்க ஓரிரு நிமிடங்களிலேயே வந்து நின்றான்,வீரய்யா.
அவர்களின் அலுவலகத்தில் காவலாளியாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பவன்.
எல்லாம் வாசுவின் கட்டளை தான்.
கண்ணாடித் தடுப்புக்கு வெளியே வந்து நின்ற வீரய்யாவுக்கு அர்ஜுனின் முகம் தெளிவாகத் தெரிந்தது.
“இவன் நம்ம கூட சரக்கு கடத்துனவன் ஆச்சே..இவன் இங்க என்ன பண்றான்..? ஆளு பாக்க டிப்டாப்பா வேற இருக்கான்..”
யோசனையாய் மாறியது,அவனின் முகம்.
●●●●●●●●
அதே நேரம் ரணதீரபுரத்தில்,
தலையை கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்ருந்தவருக்கு யோசித்து யோசித்து தான் தலைவலியே வந்திருந்தது.
எல்லாம் மகனை நினைத்து தான்.அவனை நினைத்து அவர் புலம்பாத நாள் இல்லை.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே போராட வேண்டியது அவர் மனைவிக்கு கடமையான விடயம்.
தந்தையின் நிலையை பார்த்து அவனுக்கும் புன்னகை எழுந்தாலும் உள்ளுக்குள் அப்படியொரு குஷி.
அவரைக் கடுப்பேற்றி வெறுப்பேற்றாவிடின் அவனுக்கு அந்த நாள் பூரணமடையாதே.
கையில்லா பனியனும் கைலியும் அணிந்திருந்தவனோ கைலியை தூக்கி சொருகியிருக்க அது முழங்காலுக்கு கீழே வரை மட்டுமே இருந்தது.
முகம் முழுக்க புதர் போன்று தாடி படர்ந்திருக்க சிகை தோற்பட்டை வரை நீண்டிருந்தது.தடித்த மீசை அவனுக்கு இன்னும் கம்பீரத்தை கொடுத்தாலும் பார்ப்பவரை சற்றே பயமுறுத்தும் தோற்றத்தில் தான் இருந்தான்,அவன்.
அப்படியே அவனின் தாத்தாவின் ஜாடையில் பிறந்து அதற்கு நேர் மாறான சேட்டைக் குணத்துடன் பெற்றோரை மட்டுமல்ல சொந்த பந்தங்களையும் அலற விடும் ஒரு வித்தியாசமான ஜீவன்.
அவன் வீட்டில் இருப்பது தெரிந்தால் ஒரு சில உறவுகள் தவிர வேறு யாரும் தவறியேனும் வீட்டுப் பக்கம் வருவதில்லை.
பல் துலக்கிய படி வாசலுக்கு வந்தவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார்,நந்தகோபாலன்.
“எம்மா..உன் பையன உள்ள போய் பல்லு வெளக்க சொல்லு..காலங்காத்தால வந்து எரிச்சல் படுத்திகிட்டு இருக்கான்..” அவரின் சத்தம் கேட்டு சமயலறையில் இருந்து வெளிப்பட்டார்,தெய்வானை.
“அம்ம இவருக்கு சும்மா இருக்க சொல்லு..எப்பப் பாரு ஏதாச்சும் சொல்லி கிட்டு..பல்லு வெளக்குறத பாக்க முடியலனா கண்ண பொத்திக்க சொல்லு..” சிறு குழந்தையென புகார் அளித்தவனைக் கண்டு அவருக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“நா என்னம்மா தப்பா சொன்னேன்..இவ்ளோ நேரம் கழிச்சு இந்த மகராசன் எந்திரிச்சி வாசப்படில வந்து பல் தேச்சிகிட்டு இருந்தா யாருக்குத் தான் கோபம் வராம இருக்கும்..?”
“முத்து உள்ளப் போ..” தாயின் அதட்டலான குரலை புருவம் உயர்த்தி பார்த்தான்,
முத்துகுமார்.
கதவில் மேல் விளிம்பில் உள்ளங்கைளை பதித்த படி சாய்வாக நின்றவாறே மறுப்பாக தலையசைக்க தெய்வானைக்கு கோபம் வந்தாலும் அதை கணக்கில் எடுக்கவில்லை,அவன்.
“முத்து மாதிரி இருக்கனும்னு முத்துன்னு பேர் வச்சது தப்பா போச்சே..ச்சை..அம்மா பேச்சக் கூட கேக்க மாட்டேங்குறானே..”
“அதான் உங்க தப்பு..அப்பா மேல பாசம் இருக்குன்னு அந்த ஓல்ட் மேன் பேர எதுக்கு வச்சீங்க..? அதனால தான் நா இப்டி இருக்கேன்..” வழமையாக தான் போடும் சண்டைக்கு அவன் தயாராக தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து சென்றிருந்தார்,நந்த கோபாலன்.
சுற்றும் முற்றும் பார்த்த படி பல் தேய்த்து விட்டு கிணற்றடியில் வந்து முகம் கழுவிக் கொண்டிருந்தவனை தேடி வந்திருந்தான்,
அவனின் உயிர்த்தோழன் ப்ரித்வி.
“என்ன மச்சான்..எதுவும் அவசரமா..? இங்கயே வந்துருக்க..?” தோளில் இருந்த துண்டான் முகத்தில் இருந்த நீர்த்திவலைகளை ஒற்றி எடுத்த படி கேட்டான்,முத்து.
“டேய் உனக்கு விஷயமே தெரியாதா..? அந்த கஜேந்திரன் செத்துட்டான்..யாரும் சொல்லலியா..?”
“வாவ்வ்வ்..த்தூ..தூஊ ஐயோ பாவம்..இது எப்போ நடந்துச்சு..?” கவலை இல்லையென்றாலும் ஒரு வித திகைப்பு பரவியிருந்தது,அவன் குரலில்.
“இன்னிக்கி காலைல தான் டா..அது மட்டுல்ல அந்த செல்வி பொண்ணும் எறந்து போச்சு டா..தூக்கு மாட்டிகிச்சு போல..”
“எதேஏஏஏஏ..?”
“ஆமாடா..ரெண்டு பேர் பொணமும் பக்கத்து பக்கத்துல தான் இருந்துச்சு..மாணிக்கம் அவரு தான் கண்டு கத்தி எல்லாரயும் கூப்டு இருக்காரு..”
“எனக்கு என்னமோ செல்வி சூசைட் பண்ணிருக்க மாட்டான்னு தோணுது ப்ரித்வி..அவ ரொம்ப நல்ல பொண்ணு ல..தைரியமான பொண்ணும் கூட..”
“ம்ம்..அதான்டா..ஆனா அந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்தி தான்..
ஆனா தூக்கு மாட்டிகிட்டு தான் யெறந்து போயிருக்கு போல..அவங்கப்பா அப்டி தான் சொல்றாரு..”
தொடரும்.
🖋️அதி..!
2024.03.10

