Loading

அன்று

 

இருள் தின்னும் ஒளிப்பறவை ஓய்வின்றித் தன் வேலையைச் செவ்வனே செய்துக்கொண்டிருந்த மதிய வேளையில். உச்சி வானில் இருந்தபடி மக்களைச் சுட்டெரித்துக்கொண்டிருந்தான் ஆதவன். சென்னையின் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் சென்றுக்கொண்டிருந்தனர் அதியும் கார்த்தியும். அகிலனை பற்றிக் கொஞ்சம் மறந்திருந்தாள் அவள், கார்த்தி அவளை மாற்றிவிடுவான் அவளின் சோகத்தை துடைத்தெறியும் சக்தி கார்த்தியிடம் உள்ளது.

“டேய் ஏன்டா இவ்ளோ ஸ்லோவா போற.? கொஞ்சம் வேகமா தான் போயேன் கார்த்தி” எனப் பின்னே இருந்து எரிந்து விழுந்தாள் அகரநதி.

“இந்த மாதிரி ட்ராஃபிக் அதிகமா இருக்க ரோட்டுல, சிக்ஸ்டிக்கு மேல போகக் கூடாது அதி”

“அப்போ சார் என்ன அறுபதுலையா போறீங்க, இருபதை தாண்டு டா இடியட்” அவள் நச்சரிக்க, அவளின் நச்சரிப்புத் தாழாமல் ஆக்ஸிலேட்டரை திருகினான் வண்டி வேகம் பிடித்தது.

“அப்பாடா இப்போ தான் காத்தே வருது, என்னா வெயிலு, இருந்தாலும் இந்த சன் ஏன் ஓவர் டியூட்டி பாக்குறாரு?” என அவள் புலம்பி சூரியனையும் திட்ட ஆரம்பித்தாள்.

“உனக்குக் காத்து வரலைன்னு தான் இவ்ளோ அக்கப்போரா அதி, அட லூசு” நக்கலாய் சிரித்தான் கார்த்தி, அந்த நேரம் பார்த்து பெண்ணொருத்தி சாலையின் ஓரத்தில் நின்று கைநீட்டி சைகை காட்டி வண்டியை நிறுத்த முயற்சிக்க, வாகனத்தின் வேகத்தை அதிகபடுத்தியவன் அந்தப் பெண்ணைப் பொருட்படுத்தாது விரைந்து தாண்டி சென்றான்.

“ஹேய் லூசு, இப்ப மட்டும் ஏன்டா அறுபதுல போற, ஒரு அக்கா கையைக் குறுக்கப் போட்டாங்க பார்த்தியா?”

“பார்த்தேன் அதி”

“அப்பறம் ஏன்டா வேகமா வந்த, வண்டியை நிறுத்திருக்க வேண்டியது தானே?”

“ஏய் அதி விவரம் புரியாமல் பேசாதே, நமக்கு எதுக்குப் பிரச்சனை”

“என்னடா சொல்லுற நின்னு என்னனு கேட்கிறதில் என்ன பிரச்சனைடா வரப்போகுது நீ முதலில் வண்டியை திருப்பு, அவங்களுக்கு எதாவது பிரச்சனையா இருக்கப் போகுது வா ஹெல்ப் பண்ணுவோம்” அவனைத் திட்ட ஆரம்பித்தாள்.

“எம்மா தாயே உன் கருணைக்கு இன்னைக்கி லீவ் விடக் கூடாதா??”

“டேய் கார்த்தி !!சும்மா உளறிகிட்டு இருக்காமல் திரும்பி, அவங்க ஹெல்ப்னு சொன்னது என்னோட காதுல விழுந்துச்சுடா” உறுதியாய் சொன்னாள் அதி.

“இதை ஏன்டி முன்னாடியே சொல்லலை” எனச் சொன்னவன் யூடர்ன் போட்டு அந்தப் பெண் நின்றிருந்த இடத்தை நோக்கி வேகமாய் வண்டியை செலுத்தினான் கார்த்தி.

இந்த முறை இவர்கள் வரும்போதும் அந்தப் பெண்மணி மீண்டும் வண்டியை பார்த்தவுடன் கைநீட்டினார். கார்த்தி அவர் அருகே வண்டியை நிறுத்தினான்.

“டேய் கார்த்தி இவங்க திருநங்கைடா” அவன் காதுகளில் கிசுகிசுத்தாள், அது அந்தப் பெண் காதில் கேட்டுவிட,

“ஆமா பாப்பா நான் திருநங்கை தான்,என் பேரு நித்யகல்யாணி”

“அக்கா இந்த இடத்துலாம் நிக்காதீங்க கா போலீஸ் பிடிச்சுப்பாங்க, அதோட டே டைம் வேற” கார்த்தித் தவறாய் புரிந்து கொண்டு சொல்ல,

“அய்யோ தம்பி அதெல்லாம் இல்லைப்பா, நீ நினைக்கிற மாதிரி நான் எதுவும் பண்ணலை, எங்களைப் பார்த்தாலே, நாங்க இப்படித் தான்னு முடிவு பண்ணிருவீங்க அப்படித் தானே.? நான் ஃபேஷன் டிசைனர் பா, மாசம் மூணு லட்சம் டர்ன் ஓவர் எடுக்கிறேன்” என ஆத்திரத்தில் பேசிய திருநங்கை, தன் உத்யோகத்தை அடையாளமாய்ச் சொன்னவுடன், அதிர்ந்தே போனான் கார்த்தி.

சில நேரங்களில், சில மனிதர்கள் இப்படித் தான், அவர்களுக்குள் இருக்கும் கண்ணோட்டம் சரியோ,தவறோ, என்றெல்லாம் யோசிப்பதில்லை, மூன்றாம் பாலினமும் நம்மைப் போன்ற மனிதர்களாய் பார்த்தாலே போதும், அதை விட்டுவிட்டு வேற்று கிரக வாசிகளைப் போல் நடத்தும் முறை என்று தான் மாறுமோ, அப்படி மாறும் பட்சத்தில் வேற்று கிரக வாசிகளே பூமி வந்து சேர்ந்தாலும், நம் குணாதிசயங்களைக் கண்டு நண்பனாகி போகவும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அதற்குக் கிஞ்சிய அளவெனும் மனிதம் நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.

“அய்யோ நித்யா அக்கா அவனுக்குப் பதில் நான் சாரி கேட்டுக்குறேன், மன்னிச்சிருங்க, அவன் அப்படித் தான் விளையாட்டா பேசிருவான் மனசுல எதுவும் வச்சிக்க மாட்டான்” என மனப் பூர்வமாய் மன்னிப்பு கேட்டாள் அதி.

“சாரிக்கா எல்லாரையும் மாதிரியும் நானும் தப்பா புரிஞ்சுகிட்டேன்” எனக் கார்த்தியும் மன்னிப்பு வேண்டினான், அவன் பேசியது தவறென புரிந்துக்கொண்டான்.

“அதெல்லாம் விடுப்பா தம்பி, இது மாதிரி கமெண்ட்ஸெல்லாம் எங்களை மாதிரி திருநங்கைகளுக்கு ரொம்பவே சகஜம்பா, இதெல்லாம் பார்த்து நாங்க பயந்திட மாட்டோம்”

“சொல்லுங்க அக்கா லிஃப்ட் வேணுமா.?” அதி பட்டெனக் கேட்டுவிட,

“பாப்பா, இல்லைடா நான் என் கார்ல வந்திட்டு இருந்தேன், கார் திடீர்னு பஞ்சர் ஆகிருச்சு” என நித்யா சொல்ல.

“பஞ்சர் பார்க்க ஆள் கூட்டிட்டு வரணுமாக்கா..?” கார்த்திக் கேட்டான்.

“அதெல்லாம் நானே பண்ணிருவேன், நான் வந்திட்டு இருக்கும் போது ஒரு ப்ரெக்னன்ட் லேடி லிஃப்ட் கேட்டாங்க ஹாஸ்பிட்டல் போக, நானும் கூட்டிட்டு வந்துட்டேன், காரும் பஞ்சர் ஆகிருச்சு, என்னைப் பார்த்து யாரும் வண்டியை நிறுத்த மாட்றாங்கபா, ஒரு ஆட்டோ மட்டும் பிடிச்சு கொடுக்குறீங்களா.? அந்த பொண்ணு பாவம் வலியால துடிக்குது, எனக்கு என்ன செய்றதுனே தெரியலைபா, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணலாம்னு பார்த்தால் வண்டி வர எவ்ளோ நேரம் ஆகுமோ தெரியலை, கொஞ்சம் ப்ளீஸ் வண்டி பிடிச்சு தாங்களேன்” என கெஞ்சிய படி கேட்ட நித்யகல்யாணியை பார்த்து மனமிறங்கி போனாள் அதி, அவள் இயல்பாகவே உதவும் குணம் கொண்டவள், இப்போது சொல்லவா வேண்டும்.

“அக்கா கண்டிப்பா” எனச் சொன்ன அதி, வெயிலுக்காக முகத்தைத் துப்பட்டாவின் உதவியோடு மறைத்திருந்தவள், அந்தச் சாலையின் நடுவே நின்றாள், அதற்குள் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை,நித்ய கல்யாணியின் காரில் இருந்து இறக்கி சாலையோரம் நின்றிந்தனர்,உதவிக்கு யாரெனும் வந்தால் உடனே வாகனத்தில் ஏற்றிவிட ஏதுவாய் ஒரு பக்கம் கார்த்தியும், இன்னொரு பக்கம் நித்யகல்யாணியும் கர்ப்பிணி பெண்ணைப் பிடித்திருக்க, அவளோ தன் குழந்தையின் வருகைகாகத் தன் உயிரைக் கையில் பிடித்தபடி கதறிக் கொண்டிருந்தாள்.

அதே சமயம் சாலையை மறித்தபடி நின்றிருந்த அகரநதியோ, ஒவ்வொரு வாகனத்தையும் கைக்காட்டி நிறுத்தும் முயற்சியில் இருந்தாள் கர்ப்பிணி பெண்ணின் அலறல் அதியை மேலும் பயமூட்டியது. என்ன தான் சிறுப்பெண்ணாக இருந்தாலும், அந்த அலறலில் அடங்கியிருந்த ஒட்டுமொத்த வலியையும் உணர்ந்ததைப் போல், அவள் கண்கள் சற்றுக் கலங்கியது. அப்போதென்று பார்த்து ஒரு பைக் ஆசாமி வண்டியை நிறுத்தினான்

“என்ன பாப்பா பகல்லையே தொழிலா? ”என்றவனின் பார்வை அவள் அங்கங்களில் அலைபாய்ந்தது.

“யோவ் மரியாதையா போயிரு”அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைச் சரியாய் கொடுத்தாள் அதி.

“ஏய் பொண்ணு போறவனைக் கைய காட்டி நிறுத்திட்டு, இப்போ என்ன உத்தமி மாதிரி பேசுற?” கார்த்திக்கோ அவளுக்கு உதவ முடியாத நிலையில் கர்ப்பிணி பெண்ணைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதே நிலை தான் நித்ய கல்யாணிக்கும், தனியாகச் சமாளித்தாக வேண்டிய சூழலுக்குத் தள்ளபட்டாள் அதி.

“யோவ் அங்க ப்ரெக்னன்ட் லேடி வலியில் துடிச்சிட்டு இருக்காங்க, அவங்களுக்காகத் தான் கைய காட்டி நிறுத்துனேன், ஆட்டோ இல்லைனா, கார்க்கு தான் கையாட்டினேன், உன் டப்பா டூவீலருக்கு காட்டல, ஓட்ட டூவீலரை வச்சிகிட்டு சீன் காட்டுறியா” என எகிறினாள் அதி.

அவள் அவனைத் திட்ட பதிலுக்கு இவனும் எதேதோ வார்த்தைகளை ப்ரயோக படுத்தித் திட்ட ஆரம்பித்தான்.

அதற்குள் பின்னே வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்க் காத்திருக்கும் அளவிற்குச் சண்டை பெரிதாக, வாக்குவாதமாய்ப் போய்க்கொண்டிருந்த சண்டை கைகலப்பாகிய வேளையில் அதியை அடிக்க ஓங்கிய கைகளைப் பிடித்துத் தடுத்திருந்தான் தீரேந்திரன்., அவனைக் கண்டதும் அவளின் மின்னல் விழிகள் குதுகலித்தது. வழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

‘தீரா வை காண்பதற்கு எத்தனை சண்டை வேண்டுமானாலும் போடலாம் அதி, வந்துட்டான் பாரு என்னோட ஹீரோ’ அவள் மனம் அவளுக்கே எடுத்துரைத்தது. அவனை மொத்தமாய் விழுங்கிவிடும் அளவிற்கு பார்த்துக்கொண்டிருந்தாள் அகரநதி.

“பொண்ணு மேல கை வைக்குற அறிவில்லை” பைக் ஆசாமிக்கு பளார் பளார் என விழுந்தது. தீரேந்திரன் அடித்த அடியில் அலறியடித்து ஓடியிருந்தான் பைக் ஆசாமி.

‘அய்யோ இதெல்லாம் படத்தில தானே பார்த்திருக்கேன். இப்போ எனக்கே நடக்குதா’ அவள் விழிகளை அவளால் நம்ப முடியவில்லை.

“ஏய் பொண்ணு உனக்கென்ன..? நடு ரோட்ல நின்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்க.?”

“தீரா.!” அவள் அழைத்தவளின், கருவிழிகள் அவனையே பார்த்து நிலைக்குத்தி இருக்க, அவள் முகம் துப்பட்டாவால் மறைக்கபட்டிருந்தால் மையிட்ட விழிகள் பேசும் மொழிகளை அவன் அறிந்திருக்கவில்லை.

“தீராவா..?” யாரெனத் தெரியாத பெண் தன் பெயர் சொல்லி அழைப்பதில் ஆச்சரியம் அவனுக்கு. அதற்குள் அவனுடைய நதியே சமாளித்து விட்டாள்.

“சார் ப்ரெக்னன்ட் லேடி வலியில துடிச்சிட்டு இருக்காங்க,யாரவது உதவி செய்வாங்கன்னு வண்டியை நிறுத்துறதுக்கு முயற்சியில தான், அந்த ஆளு தப்பான பொண்ணுனு நினைச்சுத் தப்புத் தப்பா பேசிட்டாரு” என நடந்தவற்றை விவரித்தாள் அகரநதி.

“அதான் ஏன்மா இவ்ளோ லேட்டா சொல்றீங்க, எங்க இருக்காங்க.?” துரிதமான தீரா, அங்கிருந்த வாகனங்களில் குவிந்து கிடந்த ட்ராபிக்கை க்ளியர் செய்துவிட்டு, அந்தக் கர்ப்பிணி பெண் நின்றிருந்த இடத்தின் அருகே அவனுடைய காரை கொண்டு வந்து நிறுத்தினான்.

“சார் பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருங்க, நான் என்னோட வண்டியை சரி பண்ணணும்” என நித்ய கல்யாணி தீராவை பார்த்து சொல்ல,

“அக்கா.! இவங்களை ஹாஸ்பிட்டல சேர்க்கிற வரைக்கும் யாரவது லேடீஸ் கூட இருந்தால் நல்லா இருக்கும்” எனத் தீரா சொல்ல அதி அவளே முன் வந்து தீராவுடன் சென்றாள். கார்த்தித் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தீராவின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தான்.

“அய்யோ வலிக்குதே..!” முனகலில் தொடங்கி அலறிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். வாகனத்தின் பின்னிருக்கையில் கர்ப்பிணி பெண்ணின் தன் மடியில் படுக்க வைத்திருந்த அதியோ.

“அக்கா பயப்படாதீங்க இப்போ ஹாஸ்பிட்டல் போயிருவோம்” என அதி தைரியமூட்டினாள்

“அவங்ககிட்ட பேச்சு கொடுத்துகிட்டே வாங்க.?” என அவள் பெயரை எப்படி அழைப்பது என்று புரியாமல் அவன் வார்த்தைகள் தடைபட்டு நிற்க,

“நதி” என்றாள் விழிகள் சிரிக்க, வாகனத்தைத் துரிதமாய் ஓட்டுவதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான்.

“அக்கா இதோ வந்துட்டோம் ஹாஸ்பிட்டல் வந்துட்டோம், இன்னும் டென் மினிட்ஸ் தான் என அகரநதி, சொல்லிக்கொண்டிருந்த போதே பெரும் வலியெடுத்து ஆவென அலறினாள் அந்தக் கர்ப்பிணி பெண்.

“அய்யோ சார் பயமா இருக்கு, இவங்க ரொம்பக் கத்துறாங்க கொஞ்சம் சீக்கிரம் போங்க ப்ளீஸ்” தீரனை துரிதபடுத்தினாள்.

“இந்த உலகத்துல உள்ள எல்லாத் தாய்களும் இப்படியொரு வலி எடுத்துத் துடிதுடித்துத் தான் குழந்தைகளைப் பெத்து எடுத்திருப்பாங்க, தங்களோட உயிரை அடமானம் வச்சி அவங்க குழந்தையைத் தங்களிடம் மீட்டுட்ட வர ப்ராஸஸ் தான் இந்தப் பிரசவம், அதனால நீங்களும் பயந்து அவங்களையும் பயமுறுத்தாதீங்க, நாளைக்கு நீங்களும் தாயாக நேரிடலாம், அப்போ உங்களோட கணவன் உங்களுக்கு ஆதரவாய் இருப்பாங்க, இப்போ இவங்களுக்கு நீங்க ஆதரவா இருங்க நதி” என அவன் பேச நதியின் விழிகள் சில நொடிகள் குளமாகி இயல்புக்கு மீண்டது.

பெண்களைக் கேலி பொருளாகவும் , தங்களுடைய உடல் தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்ளும் இயந்திரமாகவும் நினைக்கும் ஆண்கள் மத்தியில் இப்படியொரு கண்ணியமான ஆண்மகனா..? அவள் விழிகள் சில நொடி ஆச்சரியத்தைத் தத்தெடுத்தது. ஆண் உயர்ந்தவனா.? பெண் உயர்ந்தவளா..? என்பதை அவளின் மானத்தையும் அவள் உடையையும் காரணம் காட்டும் ஆண்களில் இருந்து தள்ளியிருக்கும் ஸ்பெஷல் மேக்காக அவளுக்குத் தெரிந்தான் தீரா.

“அக்கா..! உங்க குழந்தை முகத்தை இன்னும் கொஞ்ச நேரத்துல பார்க்க போறீங்க, அவ்வளவு தான் ஹாஸ்ப்பிட்டல் வந்திருச்சு” எனப் பேசியபடி வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தவனை ஏறிட்ட விழிகளோ காதலுடன் பார்த்து,

“லவ் யூ தீரா” என்று மனதிற்குள் மட்டுமே சொல்லிக்கொண்டாள். காதலில் மூழ்கினாலும், அவன் விழிபார்த்து, வார்த்தைகளைக் கோர்த்து மாலையாய் சூடும் நாள் எப்போதோ என்ற சிந்தனையில் இருந்தவள், அந்தப் பெண்மணியின் கரங்களை ஆதரவாய் பற்றியிருந்தாள் அகரநதி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்ன கதை அதுக்குள்ள முடிஞ்சு போச்சு … லவ் சீன் அப்படியே உள்ள போயிட்டேன் போல … இருக்கு இன்னும் நிறைய பிளாஷ்பேக் இருக்கு … வெயிட்டிங் தீராநதி

  2. அகரின் மனநிலையை மாற்றும் சக்தி கார்த்தியிடம். உன்னதமான நட்பு.

    ஒரு சில ஆட்களை தவறான கண்ணோட்டத்தினில் பார்த்தே பழகிவிட்டோம் என் செய்ய!

    எதற்கு வம்பு என்று கார்த்தி தயங்கினாலும், வழக்கம் போல் நதி வண்டியை திருப்பி உதவி செய்ய சென்றது நன்று.

    தீரா உடனான நதியின் சந்திப்பு அருமை.