
அகம்-13

“ஏன்டி.. உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? என்கிட்டே சொன்னால் நான் கூட்டிட்டு போக மாட்டேனா? அந்த மரமண்டை மது கூட சேராதேன்னு சொன்னேனா இல்லையா? காலேஜில் உன்னைக் காணாமல் பதறி போய்ட்டேன்டி பைத்தியக்காரி! வந்தக் கோபத்துக்கு, கன்னத்தைச் சேர்த்து நாலு இழு இழுத்துருப்பேன். பாவம் சின்னப்புள்ளைன்னு அமைதியா இருக்கேன்.!” அவன் கோபம் அவன் வாகனத்தின் வேகத்தில் தெரிந்தது.
“மெதுவா போ மாமா..! என்னத்துக்கு இப்படி கோபப்படுறே? காலேஜ் முடிஞ்சதும், ரொம்ப நேரமா உனக்கு காத்திருந்தேன். உன்னைக் காணோம்! காலேஜிலிருந்து வெளியே வந்ததும் தான் மதுவைப் பார்த்தேன். அவள் ஏதோ வாங்கணும்ன்னு சொன்னாள். அதனால் போனேன். எப்படி இருந்தாலும் தப்பு உன் மேல் தான். நீ தான் லேட்டா வந்தே! நான் தான் உன்மேல் கோபப்படணும். அப்பறம் நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு வீட்டுக்கு வர வழித் தெரியும். நீ ஒண்ணும் ரொம்பக் கவலைப்பட வேணாம்.!” அவளின் சின்ன முகத் திருப்பலில், தன் கோபத்தைக் கைவிட்டு,
“வேலை இருந்துச்சுடி கரு கரு! அதனால் தான் லேட்..!” எனப் பொறுப்பாய் பதில் சொன்னான்.
“என்னை விட உனக்கு வேலை தான் முக்கியமா? நான் கோபமா இருக்கேன் போ!” விளையாட்டாய் அவள் முகம் தூக்குவதைக் கூட, ரசனை வழிய வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி வழியே பார்த்திருந்தான் அவன்.
“கோபமா கரு கரு..! உன்னை எப்படி சமாதானப்படுத்தணும்ன்னு எனக்குத் தெரியுமே..!” என அவன் சொன்னதும்,
“லேட்டா வந்ததுக்கு லஞ்சமா?!” எனக் கண்கள் மின்னக் கேட்டவள் அவன் சட்டை பாக்கெட்டில் இருந்த பெரிய சைஸ் சாக்லேட்டை எடுத்து பிரித்து, உண்ணத் துவங்கியிருந்தாள்.
“கோபம் போயிருச்சாடி கரு கரு..!”
“கொஞ்சம் போயிருச்சு அழகரு! ஆனால் இன்னும் கொஞ்சம் இருக்கு. ஐஸ்க்ரீமை பிடுங்கி தூக்கிப் போட்டுட்டல்ல அந்தக் கோபம் இன்னும் இருக்கு.!” சிறுபிள்ளையாய் முகம் தூக்குபவளின் முன், தன் கோபம் பனியாய் கரைவதன் காரணம் புரியாது..
“நாளைக்கு வாங்கித் தர்ரேன்டி கிறுக்கி..!” எனச் சொன்னான் அவன்.
“ரெண்டு வாங்கி தரணும்.!” செல்ல உடன்படிக்கை போட்டவள்,
“மாமான்னா மாமா தான்.!” என்றபடியே அவன் தோளில் கரம்பதித்து பயணத்தைத் தொடர்ந்தாள். சில நிமிடப் பயணங்களில் வீட்டிற்கு வந்துவிட,
“வீட்டில் கேட்டால், தனியா சுத்தினேன்னு சொல்லாதே..! அத்தை வைவாங்க. நான் தான் கூட்டிட்டுப் போனேன்னு சொல்லு!” சுதாரிப்பாய் முன்பே சொல்லிவைத்துக் கூட்டிப் போனான் அழகர்.
வாகத்தை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவளை இழுத்துக் கொண்டு அவன் உள்ளே நுழைய, தங்க மீனாட்சி மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார்.
“மாமா! அம்மா உட்கார்ந்திருக்கு! வையப் போவுது!” பயந்தபடியே கால் கொலுசு சிணுங்க ஓரடி எடுத்து வைத்தாள் கருவிழி.
“நான் பார்த்துக்கிறேன். நீ உன் ரூம்க்கு ஓடிரு..!” எனக் கண்களால் சைகை காட்டினான் அவன்.
புன்னகையுடன் தலையசைத்தவள், வேக எட்டுக்கள் வைத்து நடக்க,
“நில்லு டி!” என்ற மீனாட்சியின் குரல் கேட்டு அசையாமல் அப்படியே நின்றாள்.
“அத்தை.. நான்தேன் அவளைக் கூட்டிட்டுப் போனேன் வையாதீங்க!” அத்தை மகளைக் காப்பாற்ற முயன்றான் துடிவேல் அழகர்.
“நீ பேசாமல் இரு அழகரு! நான் அவகிட்டே பேசணும்.!” எனச் சொல்லி அவனை அடக்கியவர்,
“ஏன்டி களவாணி சிறுக்கி! உன்னைப் படிக்க காலேஜுக்கு அனுப்பினால், அங்கே என்ன கண்ணராவி பண்ணி வச்சிருக்க டி? எம்புட்டு நெஞ்சழுத்தமும் திமிரும் இருந்திருந்தால், இப்படியெல்லாம் பண்ணுவே? தின்னக் கொழுப்பு தெருத் தெருவா திரிய சொல்லுதோ?” என்றவர் தனக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த விளக்குமாறால் அடி வெளுத்து எடுத்துவிட்டார்.
“எம்மா! நான் என்ன பண்ணினேன்னு என்னை அடிக்கிறே.? மாமா கூடத் தானே வெளியே போனேன்? எதுக்குன்னு சொல்லிட்டு அடிம்மா!”
“ம்மா வலிக்குதும்மா!”
“ம்மா விடுன்னு சொல்றேன்ல்ல.?”
“உன் அண்ணே மவன் மேல நம்பிக்கையே இல்லையா? அழகர் கூடப் போனதுக்கா அடிக்கிறே?” அழகரின் பின்னால் மறைந்தபடியே கேட்டாள் கருவிழி.
“அத்தே!”
“அவளை அடிக்காதீங்க!”
“ஒத்தப் பொம்பளப்பிள்ளை! அவளைப் போய் அடிச்சுக்கிட்டு!” என அவள் குறுக்கே நின்று மறைத்தவன், அவள் மீது விழும் அடிகளை விரும்பியே தான் பெற்றுக் கொண்டான்.
“மீனாட்சி என்னத்துக்கு பிள்ளையை அடிக்கிறே?!”
“மீனாட்சி நிறுத்து!”
“ஏய்! மீனாட்சி நிறுத்திடி!”
யார் குரலுக்கும் தங்க மீனாட்சி செவி சாய்ப்பதாய் இல்லை. ஆத்திரமும் கோபமும் மேலோங்க, கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டே இருந்தார் மீனாட்சி.
“அத்தே.! இன்னும் ஒரு அடி அடிச்சாலும் நான் செத்ததுக்கு சமம்!” அவர் கரத்திலிருந்து விளக்கமாற்றைப் பிடுங்கி வீசியவன், தனக்குப் பின்னால் நடுக்கத்துடன் நின்றிருந்தவளை தன்னோடு இழுத்து அணைத்து தன் மார்புக்குள் புதைத்திருந்தான் துடிவேல் அழகர்.
அவன் அணைத்த அந்த நொடியில், இதுவரையிலும் யாரிடமும் உணராத ஓர் உணர்வை அவனின் தீண்டலில் உணர்ந்தாள் கருவிழி.
அந்த உணர்வு என்னவென்பதை அறிய முயன்று தோற்றுக் கொண்டிருந்தது அவள் மனம். இதுவரை இருந்த மாமன் மகன் என்ற பாசத்தையும் தாண்டிய ஓருணர்வு. விம்மி விம்மி அழுதபடியே, தனக்குள் குழப்பத்தில் அவள் மூழ்கிப் போயிருக்க,
“என்னத்துக்கு மீனாட்சி, புள்ளையை இப்படி அடிக்கிற? சின்னப் புள்ளையைப் போய் இப்படி அடிச்சுக்கிட்டு. அதுவும் நம்ம வீட்டு மகாலெட்சுமி, அவளைப் போய் விளக்கமாற்றில் அடிக்கலாமா?” என்றபடி, அழகரின் அணைப்பிற்குள் நின்றவளைத் தன் தோளில் தாங்கினார் அரசி.
“நீயே சொல்லு அரசி,ஒத்தைப் புள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்து என்னத்துக்கு? நான் இவளைப் பத்தி கேள்விபடற சங்கதி ஒண்ணும் சரி இல்லையே? இன்றைக்கு காலேஜில் ஏதோ பஞ்சாயத்தாம்! எதோ பையன் கூடச் சேர்ந்து இவ பேர் அடிபடுதாம். அப்பன் இல்லாமல் ஒத்தையா நின்னு பிள்ளையை வளர்த்த எனக்கு இவ நல்ல கைம்மாறு செஞ்சுட்டாளே அரசி! பெத்த வயிறு பத்தி எரியுது. இதையெல்லாம் கேட்கத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேனா?” ஆங்காரமாய்க் கத்தினார் தங்க மீனாட்சி.
“என்ன மீனாட்சி இதெல்லாம்? நம்ம புள்ளையை நாமளே நம்பலைன்னா எப்படி?.ஆயிரம் பேர் ஆயிரம் பேசட்டுமே..! ஏன் ரெண்டாயிரம் விதமாக் கூடப் பேசட்டும். நம்ம புள்ளையை நாம நம்ப வேணாமா? நம்ம வீட்டுப் புள்ளையை நாமளே நம்பலைன்னா வேற யாரு நம்புவாங்க சொல்லு? அதுவும் நம்ம விழி எல்லார்கிட்டேயும் கலகன்னு பேசுக்கிட்டு இருப்பா! பொண்ணு அழகா இருக்காளேன்னு கண்ணு உறுத்துறவங்க பேசத்தேன் செய்வாக! அதுக்காக நம்ம பிள்ளைங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை நாம விட்டுடக் கூடாது.!” எனச் சொன்னவர், தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த கருவிழியின் தலையை மென்மையாய் வருடினார்.
தன் வீட்டினர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நேரில் கண்ட கருவிழிக்கு, முதன் முறையாய், ‘தவறு செய்துவிட்டோமோ?’ என்ற எண்ணம் வேரூன்றத் துவங்கியது. இத்தனை பேரின் நம்பிக்கையை உடைத்திருக்கிறோமே? என்ற குற்றவுணர்வே, தன் அன்னையிடம் பெற்ற அடிகளை விட அதிகமாய் வலிக்க, கண்களில் நீர் தளும்பி நின்றது.
“எவனோ சொன்னதைக் கேட்டுத்தான் என் பேத்தியை அடிச்சியாக்கும்? இன்னொரு முறை அவளைத் தொட்டுப் பாரு, கையை முறிச்சு அடுப்பில் வச்சுடுறேன்.!” என தன் மகளை மிரட்டிய அங்கயற்கண்ணி,
“ஏன்டி சீமை சித்தராங்கி! காலில் சக்கரம் கட்டித் திரியாமல் அடங்கி இருன்னு சொன்னால் கேளு! அடி வாங்கின மாதிரி நடிப்பு வேற? அம்புட்டு அடியையும் உன்னைக் காப்பாத்தப் போய் என் பேரன்தேன் வாங்கியிருக்கான். நீ என்னவோ அடி வாங்கின கணக்கா, நடிச்சுட்டு நிக்கிற? போய் சோலிக் கழுதையைப் பாருடி!” என கருவிழியையும் அதட்டினார்.
“சும்மா இருங்கத்தே..! புள்ளை அடிச்ச அடியில் பயந்து நடுங்கிட்டு நிக்கிறா. நடிப்புன்னு சொல்றீங்க! புள்ளையை நாளைக்கு கோயிலுக்குக் கூட்டிட்டு போய், பூசாரிக்கிட்டே சொல்லி திருநீறு போடணும்.! விழிம்மா நீ வா, அத்தை சாப்பாடுதர்ரேன். புள்ளை அடி வாங்கியே களைச்சு போயிருப்பா!” எனப் பூங்கொடி அழைத்துச் செல்ல,
“அடியேய் இவளுங்களா! இப்பிடி மடியில் தூக்கி வச்சு அவளைக் கொஞ்சிட்டே இருந்தால், அவளுக்கு நல்லது கெட்டது எப்படி தெரியும்.? அதிக செல்லம் ஆபத்து தான்டி! நான் சொல்றதைச் சொல்லிட்டேன்.!” சடைத்துக் கொண்டே அங்கயற்கண்ணி அங்கிருந்து நகர்ந்துவிட, தன் பெரியன்னையோடு அடுக்களைக்குள் நுழைந்தவளைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தான் துடிவேல் அழகர். அவன் அணிந்திருந்த கருப்புச் சட்டையில் அவளின் வாசம் கொஞ்சம் மிச்சமிருந்தது.
“நல்லவேளை வீட்டில், ஆம்பிள்ளைங்க யாரும் இல்லை. மாமா தான் அறையில் இருக்காரு. அவருக்கு சத்தம் கேட்டிருக்காது. கேட்டிருந்தால் இந்நேரத்துக்கு வட்ட மேசை மாநாடு போட்டு, தீர்மானத்தை நிறைவேத்தியிருப்பாரு.!” சிரித்துக் கொண்டே அரசி சொல்ல,
“ஆமா! நடுக் கூடத்தில் அம்புட்டு பேரையும் நிக்கவச்சு, போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சிருப்பாரு.!” எனப் பூங்கொடியும் சிரித்துக் கொண்டிருக்க,
“எம்மா! சாப்பாடு போடு! பசிக்கிது!” என்றபடியே குதித்து வீட்டிற்குள் வந்தான் வீரபத்ரன்.
“சின்னத்தை! இந்த டென் ருப்பீஸ்க்கு சாப்பாடு போடாதீங்க! காலையில் என்னைக் காலேஜில் விடமாட்டேன்னு சொல்லிட்டான். டேய் போடா! உனக்கு சாப்பாடு இல்லை! அத்தை எனக்கு இன்னொரு நெய் தோசை போடுங்க!” காலை ஆட்டியபடியே அடுக்களை மேடை மீது அமர்ந்திருந்தாள்.
“ஏய், மை டப்பி! உன்னைப் பிச்சுப்புடுவேன். உன்னை வண்டியில் கூட்டிட்டு போறதுக்கு நான் நடந்தே போய்டலாம். நாங்களெல்லாம் ஹை-ஸ்பீடில் போவோம்மா! உன் தலை கலையாமல் இறக்கி விடவெல்லாம் என்னால் முடியாது. என் கூட நீ வந்தால், குருவிக்கூடு மண்டையோட தான் நீ காலேஜ் போவ! சரின்னா சொல்லு, நாளைக்கே உன்னைக் கொண்டு வந்து காலேஜில் விடறேன்.!”
“ஒண்ணும் தேவையில்லை! என்னை அழகர் மாமா வந்து விடும். உன் தயவு ஒண்ணு எனக்கு தேவையில்லை! போடா பதிற்றுப்பத்து!”
“ம்மா! இவளைப் பாரும்மா! இப்படியே சொல்லிட்டு இருந்தால், நான் அவளை அடிப்பேம்மா! டென்ருப்பீஸ், பதிற்றுப்பத்துன்னு ஊரெல்லாம் சொல்லி வச்சிருக்கா!”
“நீ மட்டும் அஞ்சு பைசா மை டப்பின்னு சொல்லலை? நான் மட்டும் சொன்ன மாதிரி பேசுறே?”
ஆளுக்கொருபுறம் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்க,
“ஏய்! ரெண்டு பேரும் பேசாமல் சாப்பிடுங்க! நீ சும்மா இரு பத்ரா! புள்ளை இப்போ தான் அடி வாங்கிட்டு ரெண்டு வாய் சாப்பிட உட்கார்ந்திருக்கா! உன் அத்தை அடிச்சுப்புட்டாக! பாவம் புள்ள பாரு எப்படி தடித்து போச்சுன்னு..?” வருத்ததுடன் அரசி சொல்ல,
“நம்ம அழகருக்குத்தான் வசமா விழுந்துச்சு அரசி! புள்ளை வந்தால், எந்நேரமா இருந்தாலும் சுடுதண்ணி வச்சு ஒத்தடம் கொடுத்துரு!” என அக்கறையாய் சொன்னார் பூங்கொடி.
“என்ன மைடப்பி! அடி பலமா? ஆனால் சேதாரம் கம்மியா இருக்கே? எங்க அண்ணே குறுக்க விழுந்து காப்பாத்திருச்சாக்கும்?” எனக் கிண்டல் செய்தவனை கருவிழி முறைக்க, மற்றவர்கள் சிரிக்க என அவர்கள் சந்தோஷமாய் இருந்த அதே நேரம், மாடியிலிருந்து இத்தனை நேரம் நடந்தவற்றைப் பார்த்திருந்த சொக்கேசனோ, தீர்க்கமான முடிவொன்றை எடுத்திருந்தார்.
மீனாட்சிக்கே கல்லூரியில் நடந்தவை அரசல் புரசலாய் தெரியும் போது, ஒட்டு மொத்த வீட்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சொக்கேசனுக்குத் தெரியாதா என்ன? அவரின் முடிவில் வீடு மொத்தமும் ஆட்டம் காணப் போவதை அப்போதைக்கு யாரும் அறிந்திருக்கவில்லை
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகர் அத்தை மகளுக்கு கோவம் குறைய சாக்லேட் வாங்கி கொடுத்தாலே போதுமா?
நன்றாக புரிந்து வைத்திருக்கின்றான் விழியை.
தவறு செய்யும் நேரம் புரியாத ஒன்று அதன் விளைவுகளை காணும் நேரம் புரிகின்றது.
இத்தனை பேரின் அன்பு, அக்கறை, நம்பிக்கை என்று அனைத்தையும் உதறிவிட்டு செல்ல இருந்த மடத்தனம் இப்பொழுதாவது புரிந்ததே விழிக்கு.
விழ வேண்டிய அடியை அழகருக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு நெய் தோசை கேட்குதா கரு கரு உனக்கு.🤣
ஆமா, அஞ்சு பைசா மை டப்பா தலை கூட கலையாம பொத்துனாபுல கூட்டி போய் வர அழகரால தான் முடியும்.
கரு கரு மனதிலும் காதல் நுழைந்துவிட்டது. 😍😍💚
ஆமா.. ஆமா.. மிக்க நன்றி டியர் 💜 வாங்கின அடிக்கு புரிஞ்சுட்டா போதுமே.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💚
இவர் வேற என்ன பண்ண காத்திருக்காறோ … கருகரு நல்லா அடி வாங்கினியா … இல்ல அழகரு அடி வாங்கினானா … சூப்பர் குடும்ப கதை … ஜாலியா போகுது …
மிக்க நன்றி டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💛 உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 💙