Loading

ஈஸ்வரின் சட்டையை பிடித்த நிலா,

   “யாரு டா நீ? எதுக்காக இதை எல்லாம் பண்ற? நான் அப்படி உனக்கு என்ன தான் பாவம் செஞ்சேன்? சத்தியமா எனக்கு தெரியல.

   என் மனசறிஞ்சு யாருக்குமே நான்  கெடுதல் பண்ணது கிடையாது, என் வாழ்க்கையையே இப்படி நாசமாக்கினதோட, என்னை சேர்ந்தவங்களையும் ஏன் இப்படி வதைக்கிற?”

    பேசிக் கொண்டே சென்றவள் அவன் சட்டையை பற்றிய வேகத்தில், வெளியே வந்து விழுந்த, அவனது டாலர் செயினில் தனது பார்வை பதித்தாள்.

     கண்களில் ஒரு திடுக்கிடலோடும், விரல்களில் நடுக்கத்தோடும், அதைத் தொடச் சென்றவளின் கைகளை தட்டி விட்டவன், அதீத கோபத்தோடு அவளது கழுத்தைப் பற்றி இருந்தான்.

     “இதை தொடனுங்கற எண்ணம் கூட உனக்கு வரக் கூடாது. அதையும் மீறி தொட்டா, உன்ன கொல்ல கூட நான் தயங்க மாட்டேன் டி.”

   அவள் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி, அதில் என்ன கண்டானோ சட்டென்று தனது கைகளை உதறிக் கொண்டு, அங்கிருந்து வேகமாக  வெளியேறி இருந்தான்.

     நிலை தடுமாறி சோபாவில் தொப்பென்று விழுந்தவளின் நினைவுகளோ, கடந்த காலத்திற்குள் மூழ்கத் தொடங்கியது.

     தென்காசிக்கு முப்பது கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள அழகான கிராமம்  தான் சோலைவனம்.

   பெயருக்கு ஏற்றார் போல பசுமை கொஞ்சும் எழில் மிகு பகுதி.

   கிராமமாக இருந்த போதும் கூட, தார் சாலைகளும் அவசிய தேவைகளான மருத்துவமனை, பள்ளி, கல்லூரி என்று அனைத்தையுமே தன்னகத்தே கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணமே அவ்வூரின் மதிப்புமிக்க குடும்பமான பாண்டி குடும்பமும் அதன் ஆணி வேரான ஈஸ்வர பாண்டியனும் தான்.

   ஈஸ்வர பாண்டியன் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான், ஆனால் தனது இளமை காலத்தில் அவரது உயிர்  நண்பரான, ராமமூர்த்தியோடு சேர்ந்து ஆரம்பித்த தொழில் சூடு பிடிக்க, படிபடியாக இருவரின் அந்தஸ்தும் உயரத் தொடங்கியது.

   ஈஸ்வர பாண்டியன் மற்றும் தேவகி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என்று மூன்று வாரிசுகள்.

    மூத்தவர் சொக்கநாத பாண்டியன், இவரது மனைவி சிவகாமி ஈஸ்வரமூர்த்தியின் பார்ட்னரான ராமமூர்த்தியின் மகள். ராமமூர்த்தி ஒரு விபத்தில் தனது மனைவியோடு இறந்து விட, நிர்கதியாக நின்ற அவரது மகளுக்கு,  தொழிலில் உதவி புரியுமாறு தனது மகன் சொக்கநாதனை ஈஸ்வர பாண்டியன் அனுப்பி வைக்க, உதவிக்காக சென்றவரோ சிவகாமியின் துணிவு மிகு பேச்சும், அவரது நேர்த்தியான நிர்வாக திறமையும், அமைதியான நல்ல குணமும் கவர்ந்து விட, தனது தங்கை விஜயலட்சுமியின் திருமணத்திற்கு பிறகு வீட்டினரின் ஒப்புதலோடு, சிவகாமியையே திருமணம் செய்து கொண்டார்.

   விஜயலட்சுமியை அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியரான வெங்கடபதிக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர்.

   தேவகியின் அண்ணன் மகளான ராஜலட்சுமியை தான் சொக்கநாதருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பேசி வைத்திருந்தனர். ஆனால் சொக்கநாதர் சிவகாமியை விரும்புவதாக கூற, ஈஸ்வர பாண்டியனின் மூன்றாவது வாரிசான மருது பாண்டிக்கும் ராஜலட்சுமிக்கும் சில வருடங்கள் கழித்து திருமணம் நடந்தது.

    பெரியவர் ஈஸ்வர பாண்டியன் தன்னால் முடிந்த அளவு ஊருக்கு நன்மைகள் பல செய்தார். தனது மகன்கள் தலையெடுக்க தொடங்கிய பிறகு, அவர்களுக்கான சொத்துக்களை பிரித்துக் கொடுத்தவர், பாண்டியன் குரூப்ஸ் கம்பெனியில் பங்குதாரராகவும் ஆக்கினார்.

    அவருக்குப் பிறகு சொக்கநாத பாண்டியன் அந்த இடத்திலிருந்து தொழிலையும், ஊர் பொது காரியங்களையும் கவனித்துக் கொள்ள, வீட்டுப் பொறுப்பை சிவகாமி தனதாக்கிக் கொண்டார். அதனால் தனது தந்தையின் தொழிலை ஈஸ்வர் குரூப் என்று பெயர் மாற்றி, அந்த பொறுப்பையும் தனது கணவரிடமே அவர் ஒப்படைத்து விட்டார் சிவகாமி.

   தனது மனைவி தொழிலில் இருந்து விலகிய பிறகும் கூட, தொழில் மற்றும் ஊர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சிவகாமியிடம் கூறி கருத்து கேட்பதும், நடந்தவற்றை  அவரோடு தினமும் பகிர்ந்து கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார் சொக்கநாத பாண்டியன்.

   அவர்களது தூய அன்பிற்கு பரிசாக வந்தவன் தான் விஷ்வேஸ்வர பாண்டியன். விஜயலட்சுமியின் மகனான சூர்யாவை விட இரண்டு வயது இளையவன். அதோடு அந்த குடும்பத்தினரின் செல்லப் பிள்ளையாகவும், சிவகாமியால் ஒழுக்கத்தோடும் வளர்க்கப்பட்டவன்.

    மருதுபாண்டி ராமருக்கு ஏற்ற லக்ஷ்மணராக, தனது அண்ணன் சிந்தனையில் எண்ணும் காரியங்களை செயல்களாக மாற்றிக் கொண்டிருந்தார்.

    எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது, அரசியல் என்ற சூறாவளி அந்த வீட்டிற்குள் நுழையும் வரை, ஊருக்காக எந்த வளர்ச்சியும் செய்யாமல் அடுத்த தேர்தலிலும் ஓட்டு கேட்டு வந்த எம்எல்ஏவை, அந்த ஊர் மக்கள் அடித்து விரட்டி விட்டு, சொக்கநாத பாண்டியனை இம்முறை தேர்தலில் நிற்க வைக்க நினைக்க, ஈஸ்வர பாண்டியனும் ஊர் மக்களுக்காக அதுவே சரி என்று கூறினார். ஆனால் ஏனோ இந்த அரசியல் பேச்சு அத்தனையும், சிவகாமிக்கு மனதிற்கு நெருடலாகவே இருந்தது.

   சுயேட்சியாக அவரை நிற்க வைக்க அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தபின், வேட்புமனு தாக்கல் செய்யவதற்க்காக ஊர் மக்களோடு கிளம்பிச் சென்றவரை, ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ, திட்டம் தீட்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்தி கொன்று விட்டான்.

    அதோடு அவர்களது கம்பெனியிலும் அடுத்தடுத்து குளறுபடி உள்ளதாகக் கூறி, அரசாங்கத்தால் கையகப்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருந்தது, அதனால் குடும்பமே இடிந்து போனது.

    ஈஸ்வர பாண்டியன் மகனை இழந்த துக்கத்தில் இருக்க, மருதுபாண்டி தனது அண்ணனின் சொல்படியே கேட்டுப் பழகியவர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினார்.

     சில நாட்கள் தனது கணவரின் இழப்பால் பித்து பிடித்துப் போய் அமர்ந்திருந்த சிவகாமி, தனது மகனுக்காகவும் பிறந்த வீட்டின் நிலைமையை மாற்றுவதற்காகவும், பொறுப்பை தனது கையில் எடுத்துக் கொண்டார். ஒரு மாதம் போராடி கம்பெனியை தன் வசப்படுத்தியவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டவும், தங்களது தொழிலை நிலைநிறுத்தவும் மும்முரமாக செயல்படத் தொடங்கினார்.

   ஈஸ்வர பாண்டியன் தனது மனைவியோடு சேர்ந்து பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள, ராஜலட்சுமி வீட்டுப் பொறுப்பை பார்த்துக் கொண்டார்.

     சிவகாமி தொழில் பொறுப்பை தனதாக்கி கொண்டதால், அண்ணனிடம் இருந்தது போலவே, அண்ணிக்கும் துணையாக இருந்து, தொழிலில் தனது திறமையை காட்டத் தொடங்கினார் மருது பாண்டி.

     சொக்கநாத பாண்டியர் இறந்த போது விஷ்வேஸ்வரனுக்கு பதினாறு வயது தான், அப்போதே தனது அன்னையோடு சேர்ந்து, தொழிலின் அடிமட்டத்தில் இருந்து, வேலையை கற்றுக் ஸகொள்ளத் தொடங்கியவன், வேலைகளை ஒருவித ஈடுபாட்டோடு செய்யத் தொடங்கினான்.

   அதோடு தனது சிற்றப்பாவின் துணையோடு, தன் தந்தையின் சாவுக்கு காரணமான எம்எல்ஏவை, பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

   இந்த விஷயம் சிவகாமிக்கு தெரிய வர உடனடியாக ஒரு அதிரடி முடிவை எடுத்தவர், தனது மாமனாரிடமும் அதைப் பற்றி தெரிவித்தார்.

   “என்னம்மா சொல்ற? நம்ம விஷ்வாவை வெளியூருக்கு படிக்க அனுப்பனுமா? நம்ம குடும்பத்தோட வாரிசும்மா அவ, இவ்வளவு பேரு வீட்ல இருக்கோம், அதோட நாங்க அவனை பார்த்துக்க மாட்டோமா?”

     “இல்ல மாமா, நீங்களும் அத்தையும் கண்டிப்பா அவனை நல்லபடியா பாத்துக்குவீங்க, அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இப்ப என் புள்ளையோட கோபம் என்னை பயப்பட வைக்குது மாமா.

   அவங்க அப்பாவோட மரணத்துக்கு காரணமான, அந்த எம்எல்ஏவை பழி வாங்கனும்னு அவன் நினைக்கிறான். இப்போ அதை தடுக்காம விட்டா, அவனோட வாழ்க்கையே பாழா போயிடும் மாமா .

     இவனை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கணும், அது ஒன்னு தான் இப்ப என்னோட குறிக்கோளா இருக்கு. தயவு செஞ்சு இதுக்கு சம்மதம் சொல்லுங்க மாமா.”

    ஒரு வழியாக அனைவரிடமும் பேசி எப்படியோ சம்மதம் பெற்றவர், விஸ்வேஸ்வரனை வெளியூரில் உள்ள கார்வன்ட்டில் சேர்த்து, படிக்க  அனுப்பினார்.

    தனது அன்னையின் பேச்சுக்கு மறுமொழி கூறாதவன், அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அடுத்த நாளே ஊரை விட்டு கிளம்ப தயாரானான்.
 
    குடும்ப உறுப்பினர்கள் அழுதபடியே அவனை வழியனுப்ப, சிவகாமி தனது கழுத்தில் இருந்த தன் கணவர் தனக்கு அணிவித்த காதல் பரிசான, குடும்ப சங்கலியை அவன் கழுத்தில் இட்டவர்,

    “இது உன் அப்பா அவர் கையால என் கழுத்துல போட்டது. இது உன்கிட்ட இருக்கிற வரைக்கும், நானும் அப்பாவும் உன் கூடவே இருக்கிற மாதிரி இருக்கும் தங்கம்.  எக்காரணம் கொண்டு இந்த செயினை நீ தவற விடக் கூடாது.

     இப்போ நீ எங்களை எல்லாம் பிரிஞ்சு இருக்கப் போறது கஷ்டமா இருந்தாலும், பின்னால உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான், நான் இத செய்யறேன். அம்மா மேல எதுவும் கோவமா ராஜா?”

    “அப்படி எல்லாம் எதுவும் இல்லம்மா, என்னோட நல்லதுக்காக தானே இப்படி  செய்யறீங்க, ஆனா நீங்க உங்க உடம்பை பத்திரமா பாத்துக்கணும், நேரா நேரத்துக்கு சாப்பிட்டு, நேரத்துக்கு தூங்கணும். நீங்க நல்லா இருந்தா தான், நான் அங்க நிம்மதியா இருக்க முடியும்.”

   தனது மகனை கட்டித் தழுவி கண்ணீர் வடித்த, சிவகாமியின் அருகில் வந்த ராஜலட்சுமி,

     “நல்லா இருக்குது க்கா, புள்ளைய சந்தோஷமா வழி அனுப்பி வைக்காம,   நீங்களும் இப்படி அழுதுட்டு இருந்தா எப்படி? தம்பி உன் அம்மாவ பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு சரியா, நீ எந்த வெசனமும் படாம நல்லபடியா போய்ட்டு வாப்பா.”

    மருது பாண்டியோடு தனது மகனை வெளியூர் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தவர் அறிந்து இருக்கவில்லை, தன் மகன் நினைத்த காரியத்தை  முடித்து விட்டுத் தான், இங்கிருந்து கிளம்பிச் செல்கின்றான் என்று.

    தனது தந்தையின் இறப்புக்கு காரணமான அந்த எம்எல்ஏவிற்கு விபத்தை ஏற்படுத்தி, கோமா நிலைக்கு அவனைக் கொண்டு சென்றவன், அவரது சொத்தையும் உபயோகிக்க முடியாத படி, சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருந்தான். அதனால் அந்த ஊரை விட்டே அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்து விட்டது.

   கல்லூரியில் படிப்புப்போடு விளையாட்டிலும் முதன்மையாகத் திகழ்ந்தவன், தொழில் சம்பந்தப்பட்ட பல யுக்திகளையும் கற்றுக் கொண்டு, அன்னையை மிஞ்சும் பிள்ளையாக தங்களது தொழிலை வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலும் விரிவு படுத்தினான்

     ஊரே தற்போது திருவிழா கண்டது போல, விழா கோலம் பூண்டிருந்தது. பின்ன இருக்காதா என்ன? அந்த ஊரின் தலைமை பொறுப்பாளர்களான ஈஸ்வர் குடும்பத்தாரின், மூத்த வாரிசுக்கு திருமணம் ஆயிற்றே.

   சிவகாமி தனது மகனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று, ஆங்காங்கு தான தர்மங்களையும், கோயிலில் விசேஷ பூஜைகளையும் ஏற்பாடு செய்திருந்தார்.

சில இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகி இருக்க, ஊர் மக்களும் உறவுகளும் திருமண சடங்குகளுக்கு இடையே, அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.

    திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான், வெளிநாட்டு வேலையை முடித்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தான் விஷ்வேஸ்வர பாண்டியன். தொழில்துறையில் கொடி கட்டிப் பறக்கும் பாண்டியன் குடும்பத்திற்கு, எதிரிகளும் அதிகமாகவே இருந்தனர்.

    பல லீடிங் கம்பெனிகளைை பின்னுக்கு தள்ளி விட்டு, ஈஸ்வர் குரூப் ஒரு புதிய ப்ராஜெக்ட்டை கைப்பற்றி இருக்க, அது பொறுக்காமல் அவனை தீர்த்துக் கட்டும் வேலையில் இறங்கி இருந்தனர் பலர்.

    ஏர்போர்ட்டில் இருந்து தனது சிற்றப்பாவோடு ஊரை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கும் போது, அவனது காரை வழிமறித்த எதிரிகள், தாக்குதலில் ஈடுபட, வந்தவர்களை அலற விட்டு ஓட வைத்திருந்தான் ஈஸ்வர்.

   அந்த சண்டையில் அவனது கழுத்தில் இருந்த குடும்ப சங்கிலி அறுந்து விழுந்திருந்தது. அதோடு அவனது சிற்றப்பாவிற்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. தனது அத்தை மகனும் உயிர்த்தோழனுமான சூர்யாவிற்கு மட்டும் விஷயத்தை தெரிவித்தவன், ஹாஸ்பிட்டலில் மருது பாண்டிக்கு துணையாக அவனை இருக்கச் சொல்லிவிட்டு, கோபமாக அங்கிருந்து கிளம்பினான்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஐயையோ நிலா என்னத்த மா பண்ணி வச்சிருக்க … என்ன நடந்திருக்குமோ … நீதான் குற்றவாளியா …