Loading

   “என்ற…என்ற…மகேன் சிவராமனவாய்யா சொல்லற ராசா?”

  “உங்க மகனே தான் பாட்டி.”

  “அவன பாத்தியா ராசா நீ? என்ற மருமக எப்படி இருக்கா? ரெண்டு பேரும் எங்க இருக்காங்க? என்ன பாக்க வந்திருக்காய்ங்களா?”

“இல்ல பாட்டி நாம தான் அவங்க வீட்டுக்கு போக போறோம். அவருக்கு நீங்க ஆஸ்பத்திரியில் இருக்கிறது இன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன்.”

  அப்போது தீபனுக்கு மூர்த்தி தாத்தாவிடம் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் வேந்தனிடம் கூறிவிட்டு எடுத்த பேச தொடங்கினான்,

            “சொல்லுங்க தாத்தா.”

            “……”

“நிரஞ்சனாவையா நல்லா தேடி பார்த்தாங்களா? கீழ எங்கயும் இல்லையா?”

             “…..”

  “அவங்களோட போட்டோ வச்சு ஹாஸ்பிடல்ல கேட்டுப் பார்த்தாங்களா?”

            “…..”

  “எல்லோரையும் தைரியமா இருக்க சொல்லுங்க, எதுவும் பயப்பட வேண்டாம். நான் உடனே கீழ வரேன்.”

“நிரஞ்சனாவை எங்கே தேடியும் கிடைக்கலையாம், எல்லாரும் கீழே பதட்டமா இருக்காங்க.”

    “அண்ணனும் தங்கச்சியும் அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சுட்டாங்க போல ராசா, நீ விடு அவங்க எப்படியோ போகட்டும். எனக்கு மனசே விட்டு போச்சுப்பா.”

  பூவுப்பாட்டி கூறியதைக் கேட்கும் போதே உணர முடிந்தது, அவர் மனதில் உண்டான ரணத்தை, இருந்தும் இப்படியே விட்டு விட முடியாதே, ஒருவேளை இது உண்மையாக இருந்தால்?

   எனவே வேந்தனும் தீபனும் கீழே சென்று பார்த்து வருவதாக, அவர்களிடம் கூறி சென்றனர்.

     கீழே எங்கு தேடியும் ரஞ்சி கிடைக்காததால் மாறனுக்கு பயம் தொற்றிக் கொண்டது.

      அங்குள்ள அனைத்து ஊழியர்களிடமும் ரஞ்சியின் புகைப்படத்தை காட்டி விசாரித்த போதும், எந்த பலனும் இல்லை.

  அவளது தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவே, தொடர்ந்து கூற, இவனுக்கு மனதில் பதட்டம் அதிகமானது.

   கீழே வந்ததும் தீபன் ஒரு புறம் அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணையை தொடங்க, வேந்தன் சந்துருவிற்கு அழைத்து, அங்குள்ள நிர்வாகத்திடம் பேசி கேமரா பதிவை செக் செய்தான்.

  அதில் சிறிது நேரத்திற்கு முன்பு, ரஞ்சி தொலைபேசியில் யாருடனோ பேசியபடியே, ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறியது தெரிந்தது.

அவள் தானாகவே வெளியே சென்றிருப்பதால், ஆஸ்பத்திரிக்கு அருகில் எங்காவது இருக்கலாம் என்று கூறி, ஆண்கள் அனைவரும் அவளைத் தேட கிளம்பினர்.

   பெண்களும் குழந்தைகளும் எப்படியாவது ரஞ்சி கிடைத்து விட வேண்டும் என்ற தவிப்புடனே, மூர்த்தி தாத்தாவுடன் வேடந்தூரை நோக்கி சென்றனர்.

  ரஞ்சி தனது கண்களை திறக்க முயற்சி செய்தாள். அவளது கண்கள் இன்னும் மயக்கத்திலேயே இருந்தது. உள்ளுணர்வுகள் விழித்துக் கொள்ள, கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள்

ஒரு வசதியான காலி அறைதனில், தான் ஒரு பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து, என்ன நடந்தது என்பதையும், தான் இங்கு எப்படி வந்தோம் என்பதையும் ஞாபகத்தில் கொண்டு வர முயற்சி செய்தால் ரஞ்சி.
    
    ஹாஸ்பிடலில் இருக்கும் போது ரஞ்சிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

   அதில் பேசிய நபர், உனது திருமணம் வேந்தனுடன் நடக்க வேண்டும் என்றால், இப்படி உன் பாட்டியின் உயிரை பணையம் வைத்து, அதை நடத்தி விட முடியாது.

முதலில் வேந்தனின் மனம் உன் புறம் சாய வேண்டும். அதற்கு நான் உனக்கு உதவுகிறேன். நம்பிக்கை இருந்தால் கீழே வந்து என்னை பார் என்று கூறியது அந்த குரல்.

     எங்கே தானும் தன் அண்ணனும் மாட்டிக் கொண்டோமோ என்று பயந்த ரஞ்சி, தன் அண்ணனிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து, தொலைபேசியில் அழைத்தது யார் என்பதை காண கீழே சென்றாள்.

  அவள் அவ்வாறு யாரிடமும் சொல்லாமல் சென்றது தான் தவறாகிப் போனது. மருத்துவமனைக்கு வெளியே அவளை வரச் சொன்ன அந்த குரல், அவள் வெளியில் வந்ததும் மயக்க மருந்தினை அவள் மூக்கில் வைத்து அழுத்தியது மட்டும் தான் அவளுக்கு நினைவு இருந்தது.

   பிறகு கண் விழிக்கும் போது இந்த அறையில் இருக்கின்றாள். எவ்வளவு முயன்றும் தன்னை இங்கு கூட்டி வந்தவர்கள் யார் என்றே அவளுக்கு தெரியவில்லை.

   திடீரென்று அறையின் உள்ளே ஒரு வெள்ளை புகை பரவ, மீண்டும் மயக்க நிலைக்கே ரஞ்சி சென்று விட்டாள்.

   அவள் இருந்த அறைக்கு பக்கத்து அறையில், அவள் மயங்கி விழுவதை கேமரா மூலம் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தது இரு உருவங்கள். அவர்களில் ஒருவர் அமைச்சரின் குருஜியும் மற்றொன்று அவரால் விஜயன் என்று அழைக்கப்பட்டவனும் தான்.

    “குருஜி எதுக்காக இந்த பொண்ண இப்ப கடத்திட்டு வர சொன்னீங்க?”

   “என்ன விஜயா மறந்து விட்டாயா? இன்னும் இரண்டு நாளில் குருந்த மரத்தடியில் இருந்து மண்ணெடுக்கப் போகிறார்கள் இல்லையா.”

           “ஆமாம் குருஜி, ஆனா?”

   “பொறு நான் முழுதாக கூறிவிடுகிறேன். அப்போது மோகினி பள்ளத்திலிருந்து வெளிப்படும் உன் மகளின் ஆன்ம சக்தியினை, தாங்கும் அளவிற்கு, இந்த பெண்ணின் உடலும் மனமும் பலப்பட வேண்டாமா? உன் மகளின் ஆன்ம சக்தி நூற்றாண்டுகள் கடந்தும் வஞ்சம் தீர்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

நேரடியாக இந்தப் பெண்ணின் உடலில் அது கலந்தால், உன் மகளின் ஆன்ம சக்தியினை தாங்க முடியாமல் இவள் மாண்டு போகலாம்.

அதனால் தான் இப்பெண்ணை இங்கு வைத்து, சில மூலிகை மற்றும் மாந்திரீகத்தினால் சக்தி கொடுத்து உருவேற்ற முடிவெடுத்துள்ளேன்.

        உன் மகளின் வரவாள் தான் அந்த கொற்றவையின் முடிவு ஆரம்பமாகப் போகிறது. நமது தெய்வம் காலக்கோடரை மகிழ்விக்க போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை விஜயா.”

   தனது கையில் உள்ள கோப்பையில் பாதி அளவே இருந்த ஆறிப்போன காபியை, அமிர்த சொட்டு போல சொட்டு சொட்டாக ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தாள் மது. அவளை முறைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்தால் வினு.

    “இன்னும் எவ்வளவு நேரம் டி அந்த ஆறிப்போன காபியை ஊதி ஊதி குடிச்சுட்டு இருப்பே?”

   “நீ காண்டாகி கிளம்பலாம்னு சொல்ற வரைக்கும்”

  “அடியே உன் கோயம்புத்தூர் குசும்ப என் கிட்ட காட்டாத, ஒட்ட நறுக்கிடுவேன் வாலை. மரியாதையா சொல்லு, என்ன நடந்துச்சு உள்ள, அந்த ஓனர் ஏதாச்சும் மிரட்டினாரா?”

  “இன்னும் எத்தனை தடவை தான் கேட்ப, நான்தான் சொன்னேன்ல நான் உடைச்ச பொருளுக்கு தான் காசு கேட்டாரு, மத்தபடி வேற எதுவும் சொல்லல.”

      “சரி நாம வந்த வேலைய மட்டும் பாத்துட்டு போலாமே, அதுக்கு எதுக்கு அப்படி ஒரு போஸ்டிங்கே இல்லாத இந்த கம்பெனில, உனக்காகவே போஸ்டிங்கை ஏற்படுத்தி உன்னயவே அப்பாயிண்ட் பண்ணியிருக்காரு அவருக்கு பி ஏ வா?”

” எனக்கு என்னடி தெரியும். அதை பத்தி அவருகிட்டத் தான் போய் கேட்கணும்”

  ” ஓஓஓஓஓ அவரு…ம்ம்ம், அவர் போயிட்டு வரேன்னு தலையாட்டும் போது பவ்யமா திரும்ப தலையாட்ட மட்டும் தெரியுமோ இந்த பச்ச குழந்தைக்கு?”

    “அவருக்கு ஒர்க் பிரஷர் ஜாஸ்தியா இருக்குதாம், அதனால டெம்ப்ரவரியா என்னை, அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க அவ்வளவு தான்.”

  “அதுக்காக நாம வந்த வேலையையும் பார்த்துட்டு,எக்ஸ்ட்ரா வொர்க்கும் பார்க்க போறியா? வேண்டாம் மது, நாம எப்படியாச்சும் பணம் அரேஞ்ச் பண்ணி செட்டில் பண்ணிடலாம் டா.

மது, என்ன பாத்து சொல்லு நிஜமா இங்க ஒர்க் பண்ண, உனக்கு பிடிச்சிருக்கா?”

         காலையில் தன்னிடம் இங்கு சேர்ந்தே தீர வேண்டும் என்று இவள் மன்றாடியதென்ன, ஆனால் இப்போது தனக்கு ஒரு பிரச்சனை என்றதும், எதை பற்றியும் யோசிக்காமல் இவ்வேலையை தூக்கிப் போட துணியும் இந்த நட்பை பெற, தான் என்ன தவம் செய்திருக்க வேண்டுமோ, என்று எண்ணிய மது வினுவிற்காகவாவது, தான் இங்கு இருந்தே தீர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.

        “வினு இது நமக்கு கிடைச்ச புது வாய்ப்பு, இதை மிஸ் பண்ணனும்னு சொல்றியா? கண்டிப்பா இங்க ஒர்க் பண்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

     அன்னைக்கு நான் தானே அவர் வண்டி மேலே போய் மோதினேன். கார் ஹெட் லைட்டையும் நான்தானே கல்லை வீசி ஓடச்சேன், தப்பு என் மேல தானே, அதுக்கு பதிலா இங்க பி.ஏ ஒர்க் பார்த்து அதை சரி பண்ணிட போறேன் அவ்வளவுதானே, அதுதான் நீயும் என் கூடவே இருக்கயில்ல செல்லம்.”

மதுவை மேலிருந்து கீழாக ஒரு மாதிரி பார்த்த வினு,

  “அன்னைக்கு நம்ம மேல தானே தப்புன்னு,  நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னதுக்கு, செத்துப்போன என் கொள்ளு பாட்டி மொதக்கொண்டு தோண்டி எடுத்து இல்லடி திட்டினே?

இப்போது மட்டும் எப்படி தங்களுடைய ஞானக்கண், திறந்தது என்ற உண்மையை கூற முடியுமா மன்னா?”
  
“அப்படி கேளும் என் மங்குனி , உம்மோடு சேர்ந்து சேர்ந்து என்னுடைய மூளையும் அடிக்கடி வேலை செய்ய மாட்டேன் என்று சண்டித்தனம் செய்கின்றதே.”

  ” ஆனால் மன்னா அப்படி ஒன்று தங்களுக்கு இருந்தால் தானே வேலை செய்ய, அப்படி இருந்திருந்தால் இப்படி ஆறிப்போன காப்பியை இவ்வளவு நேரம் ஊதிக்கொண்டு இருப்பீரா?”

   இருவரும் ஒருவாராக ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். மதுவின் வீட்டில் அவளை இறக்கி விட்ட வினு, காலை தானும் அவளுடன் வருவதாக கூறினாள்.

  மதுவிற்கு தெரியும், வினு கண்டிப்பாக தன்னை தனியாக செல்ல அனுமதிக்க மாட்டாள் என்று.

“சரிடி தாயே சரி, ஆனாலும் உன் பாசத்தை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணும்மா, மழை காலத்துல உன்னோட ஓவர் பாசத்தால நான் எங்காவது வழுக்கி விழுந்திட போறேன்.”
 
       “ஐய்யே உனக்கு வேண்டி யார் வர்றது? உன்கிட்ட இருந்து அந்த ஓனரை காப்பாத்த தான், நான் உன் கூட வரேன்னு சொன்னேன்.”

    அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அமுதன்,

    “அட என்னதிது எங்க வீட்டு வாசல்ல  குள்ளவாத்து கூட்டமா இருக்கு? அட நம்ம தங்கச்சிங்க தானா. என்ன மகளிர் அணி மாநாடு வீட்டு வாசல்ல நடக்குது?”

     “யாரைப் பார்த்து வாத்துன்னு சொன்ன?”

  “அட என் அறிவு கெட்ட உடன் பிறப்பே, உங்களை சுத்தி யாராவது இருக்காங்களா? இல்லல்ல, அப்போ கண்டிப்பா உங்களை பார்த்து தான் சொல்றேன்.
 
   இப்படி வழியை மறைச்சிட்டு நிக்காம, அந்த பக்கம் குட்டையா பார்த்து போய் சுத்துங்க போ போ.”

  “மது உங்க அண்ணன் பேச்சில கொஞ்சம் திமிர் தெரியுதில்ல?”

         “ம்ம்ம்…. மொத்தமா குறைச்சிடுவோம்.”

    வேகமாக உள்ளே வந்த மது, தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்த அமுதனை பார்த்து, ஒரு மடித்து வைத்த பேப்பரை தூக்கி எறிந்தால்,

     “டேய் அண்ணா அந்த நாலாவது வீட்டில மூணாவது மாடியில இருக்கற அந்த பொண்ணு, உங்க அண்ணன் கிட்ட என்னோட இந்த பதில் லெட்டரை மறக்காம கொடுத்திடுன்னு சொல்றா. என்னை பார்த்தா போஸ்ட் மேன் மாதிரி இருக்கா இல்ல, ப்ரோக்கர் மாதிரி இருக்கா?”
 
   “டேய் அமுதா என்னடா சொல்றா இவ? யாருடா அந்த பொண்ணு? எத்தனை நாளா இந்த வேலை நடக்குது?”

   “ஐயோ அம்மா அது யாருன்னே எனக்கு தெரியாதும்மா. இவ ஏதோ பொய் சொல்லிட்டு இருக்கா.”

  “எது நான் பொய் சொல்றனா? அந்த பொண்ணு தெளிவா சொல்லுது பதில் லெட்டர்னு, நீ லெட்டர் கொடுக்காமயா அது திருப்பி பதில் லெட்டர் கொடுக்கும்.”

  லட்சுமி எதிர் தரப்பு வக்கீலாக மாறி, தன் மகனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுக்க, மது பார்வையாளராக அக்காட்சியை ரசித்துக்கொண்டே அருகில் இருந்த பொறியை மென்று கொண்டிருந்தாள்.

   அமுதன் தன் தங்கை சிரிப்பதைக் கண்டு அவசரமாக அந்த லெட்டரை எடுத்து பிரித்துப் பார்க்க, அதில் ஒன்றுமேயில்லை வெற்றுக் காகிதம்.

      “என்னடி இது, ஒன்னுத்தையும் காணோம். “

“எனக்கென்ன தெரியும், அதை நீ அந்த பொண்ணு கிட்டயே கேளு”

     அப்போதுதான் லட்சுமியம்மா நினைவு வந்தவராக,

     “ஆமா நாலாவது வீட்டில் தான் மாடியே இல்லையே, அது ஓட்டு வீடாச்சே.”

அப்பறம் என்ன, லட்சுமியம்மாவும் அமுதனும் மதுவை துரத்த, அவள் ஓட என்று வீடு அதகளப்பட்டுக் கொண்டிருந்தது.

   அப்போது வீட்டுக்குள் நுழைந்த சிவராமன், இது எதனையும் கண்டுகொள்ளாமல் நேரே தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

   அவரைக் கண்டு மூவரும் தன்நிலைக்குத் திரும்ப, லஷ்மியம்மா சிவராமனை காண அவர்கள் அறைக்குச் சென்றார். அமுதனும் மதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

   “டேய் அண்ணா, என்ன அதிசயமா இருக்கு, நம்ம வீட்டு நாட்டாமை எதுவுமே சொல்லாம உள்ள போயிட்டாரு, அட அட்லீஸ்ட் ஒரு முறைப்பு கூட இல்ல, என்னவா இருக்கும்?”

“ம்ம்ம்…,ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியிது, அப்பாவோட முகமே சரியில்ல, அம்மா வரட்டும் கேட்போம். “

   தலைக்கு கை கொடுத்து, விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்த சிவராமனின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. அவர் கண்களை சிமிட்டிய போது, தெறித்து விழுந்த இரு துளி கண்ணீரைக் கண்டு, பதறிப்போய் அவர் அருகில் வந்தார் லட்சுமியம்மா.

   “என்னங்க ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி இருக்கீங்க?”

     “அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் லட்சுமி, ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களாம். எனக்கு அவங்கள இப்பவே பார்க்கணும் போல இருக்கு. ஆனா அப்பா தான் என்னை அவர் முகத்துலயே முழிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரே.”

  “அச்சோ அத்தைக்கா? நீங்க ஏதும் கவலைப்படாதீங்க, அத்தைக்கு ஒன்னும் ஆகாது, நீங்க தைரியமா இருங்க.

மாமா என்ன சொன்னாலும் பரவால்ல, நாளைக்கே நாம போய் அத்தைய பார்த்துட்டு வரலாம்.”

    சிவராமன் தனது மனைவியின் மடியில் முகம்தனை புதைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வேந்தனுக்கு ஜாலி தான் … மது வேந்தன் சேர போறாங்க … அய்யோ ஏற்கனவே நிரஞ்சனா பேய் மாதிரி தான் அலையுது … இதுல அது மேல பேயை ஏவி விடுறாங்களா … சீக்கிரமே முன் ஜென்மத்துக்கு போக போறோம் போல … மன்னவனை … அவனோட தேவியை பார்க்க வெயிட்டிங்

    1. Author

      ஆமாம் சிஸ் ஆனால் அதுக்கு முன்னாடி சில காட்சிகள் பாக்கி இருக்கு🙂