
“டேய் ஜித்து அங்க பாரு” என்றாள் இழை.
“என்ன பிங்கி, டிராயிங் வரையறப்போ டிஸ்டர்ப் பண்ணாதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது. சீக்கிரம் ஹோம்வொர்க் முடி. அப்போதான் அம்மா கேரம் கொடுப்பாங்க”
“டேய் சீக்கிரம் ஓடிவா. கேரமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அதைவிட முக்கியமான விஷயம்” என்றழைக்க,
“ப்ச் என்ன பிங்கி” என்று எழுந்து வந்தவன், இழையின் விழிவழியே பயணித்த மறுகணமே அவள் வீட்டு மாடியில் இருந்து அவசரமாக கீழே ஓடினான்.
அவன் செல்லவும், அவன் பின்னே ஓடியே இழைக்கு இன்னுமே அதிர்ச்சி நீங்கவில்லை. பின்னே அவள் வீட்டு மாடியில் இருந்து பார்க்க, அவர்கள் வீட்டின் பின்புறமிருந்த கிரவுண்டில் வசீகரன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை போட்டு அடி அடியென அடித்து கொண்டிருந்தான்.
தடதடத்த மனதோடு கீழே சென்று அருகில் அவன் ஆக்ரோஷத்தை கண்ட இழை, அதிர்ச்சியில் உறைந்து போனாள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குமுன்னும் அவளிடம் கோபமாக பேசி இருக்கிறான் தான், ஆனால் இத்தகைய ஆக்ரோஷத்தை அவள் கண்டதில்லை.
வசீகரனிடம் அடிவாங்கிய பையனுக்கு முகமே வீங்கி போயிருக்க, உதட்டில் ரத்தம் கசிந்திருந்தது. நல்லவேளை வசீ மேலும் அடிக்கும் முன் ஜித்துவும் அங்கிருந்த சில மாணவர்களும் வசீகரனை தடுத்து பிடிக்க, அடி வாங்கியவன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக ஓட்டம் எடுத்திருந்தான்.
“விடு ஜித்து” என்று தம்பியிடம் இருந்து தன்னை விடுவித்தவன் வேகமாக முன்னேற,
“அண்ணா உங்க கையில் ரத்தம்” என்றவன், அங்கே இருந்த வசீயின் விளையாட்டு பொருட்களை எடுத்து அடுக்க தொடங்கி இருந்தான்.
மட்டுபடாத கோபத்தோடு வேகமாக சென்ற வசீ, எதிரில் இழையை கண்டதும் தன் நடையை நிறுத்தி, “எல்லாம் உன்னால” என்று வெறுப்போடு பல்லைக் கடித்து கொண்டு இழையை பார்த்தவன்,
“ஏய் உன்னை என் கண் முன்னாடி வரக்கூடாதுன்னு சொன்ன பிறகும் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா வருவ” என்று குறையாத சீற்றத்துடன் கேட்க, இழையோ என்ன பதிலளிப்பது என்று புரியாமல் அவனை பார்த்து நின்றாள்.
“இதோ பார், எங்கம்மா பொண்ணுங்களை அடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கறதால உன்னை விட்டு வைக்கிறேன். இல்ல அவனைவிட அதிகமா உனக்கு விழும்” என்றவனின் பார்வையும் குரலுமே எதுவும் செய்வேன் என்பதாக இருக்க, இழைக்கு கண்களில் நீர் திரண்டுவிட்டது.
“ஸா, ஸாரி” என்றாள், கண்களை துடைக்கவும் மறந்தவளாக. ஆனால் அவள் மன்னிப்பை கணக்கில் கொள்ளாத வசீகரன், எங்கே அங்கிருந்தால் தன்னை மீறி அவளை கை நீட்டி விடுவோமோ என்று வேகமாக சென்றிருந்தான்.
அன்றைய இரவு உறக்கம் தொலைத்த இழை, தன் கைபேசியை எடுத்து வசீகரனின் புகைப்படத்தை கண்டவள், அன்றைய வசிக்கும் இன்றிருப்பவனுக்குமான வித்தியாசத்தை பட்டியலிட தொடங்கியிருந்தாள்.
**************
“மச்சி ஒரு நிமிஷம் என்னை பிடி, எனக்கு மயக்கமே வருது” என்றாள் இழையாளின் மருத்துவமனையில் அவள் முன் அமர்ந்திருந்த ஜீவிகா.
“ஹே ஜீவி, இவ்ளோ நேரம் நல்லா இருந்த, திடீர்னு என்னாச்சுடி” என்றவாறே இழை அவள் அருகே வர,
“மச்சி, இப்போ கொஞ்சம் முன்ன நீ சொன்னதெல்லாம் நிஜமான்னு நம்ப முடியாம இருக்கேன். தயவுசெய்து கொஞ்சம் என்னை கிள்ளுடி” என்றாள்.
“என்னடி சொல்ற?”
“ப்ச், கிள்ளுன்னு சொல்றேன்ல” என்றதும் அவள் கரத்தில் இழை நறுக்கென கிள்ளவும்,
“ஸ்ஸாஆ” என்று கையை தேய்த்துவிட்டு, “நம்பறேன் நம்பறேன். இந்த பூனையும் பால் குடிக்கும்னு இப்போ நம்பறேன்” என்றதும், தோழியின் கேலியில் அவள் முதுகில் ஒன்று வைத்தவள்,
“விளையாடாத ஜீவி” என்றாள்.
“யார்டி விளையாடுறா, நீயா இல்ல நானா” என்றவள் முகத்தில் இன்னுமே அதிர்ச்சி மீதமிருக்க,
“அடிப்பாவி, இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்தவளுக்கு இது பேரல் பேரலா பீரே அடிக்கும்னு தெரியாம போச்சே. மச்சி இன்னும் என்னவெல்லாம் என்கிட்டே மறைச்சிருக்க” என்று ஆற்றாமையுடன் கேட்டவள்,
“அட ராமா, இது தெரியாம உன்னை நாங்கெல்லாம் என்னென்னமோ நினைச்சோமே” என்று புலம்ப,
“ஜீவி அமைதியா இல்ல கண்டிப்பா உதை விழும்” என்றாள் கோபமாக.
“ஏன்டி இப்படி முழு பூசணிக்காவையும் சாப்பாட்டுல மறைச்சுட்டு எப்படிடி உன்னால சாதாரணமா இருக்க முடியுது”
“இதோ பார், இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுன்னு ஐடியா கொடுக்குறதுன்னா இரு. இல்ல இடத்தை காலி பண்ணி கிளம்பிட்டே இரு” என்று இழை கறாராக கூறவும்,
“கல்யாணத்தை நிறுத்தனுமா. அடியே, ஒருநாளைக்கு எத்தனை ஷாக்கை தான் என் பாடி தாங்கும். இதுவரை நீ சொன்னதையே நம்ப முடியாம இருக்கேன். என்னைய இப்படி விடாம அடிச்சா எப்படி மச்சி. கொஞ்சம் தெளிய வச்சுதான் அடிக்கிறது” என்றவள், தன்னை வர சொல்லி தோழி கூறியதை நினைத்து பார்க்க, மீண்டும் மயக்கம் வரும் போலிருக்க.
“மச்சி கொஞ்சம் தண்ணி கொடு” என்று கேட்டு வாங்கி குடித்தவள்,
“ஐயோ ராமா, எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ன்னு நம்ப முடியலையே. இதுக்கு மேல இவ சொல்றதை எல்லாம் தாங்குற சக்தியை எனக்கு கொடு ஆண்டவா” என்ற வேண்டுதலோடு குரலை செருமி,
“சரி சொல்லு, எதுக்கு கல்யாணத்தை நிறுத்தனும்” என்றாள்.
இழை திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லவும்,
“ஏன்டி உனக்கு எங்களை பார்த்தா எப்படி தெரியுது. அன்னைக்கு கேட்டபோது என்னென்னமோ கதை சொன்ன. அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்”
“ஜீவி, உனக்கு எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை”
“ஏன், வாயால சொன்னது புரியலைன்னா மூக்கால சொல்ல போறியா”
“அப்படியில்ல ஜீவி, நான் சொல்றதை பொறுமையா கேளு” என்று பேச தொடங்கியவள் முடிக்கவும்,
“அப்போ கம்பு, சொம்புன்னு சொல்லி நீ என்னை சோஷியல் மீடியால தேட சொல்லி உயிரை எடுத்தது இவரைதானா” என்றதும், தன் எதிரே இருந்த நோட்டை தூக்கி போட்டவள்,
“அடிவாங்க போற ஜீவி. அவர் பேர் தம்பு, ஒழுங்கா கூப்பிடு” என்றாள்.
“சரி சரி, முறைக்காத. எனக்கு தெரியாமதானே கேட்டேன்”
“தெரியலைன்னா என்னானாலும் சொல்லுவியா. என்கிட்டே கேட்க வேண்டியது தானேடி” என்றவளிடம் இன்னுமே கோபம் குறையவில்லை.
“சரிடி ஸாரி, இனி அப்படி சொல்லலை போதுமா. ஆனா அவர் பேர் தம்பு மட்டுமில்ல, வேற ஏதோ இருக்குன்னு சொல்லிட்டு இருந்தியே. கண்டுபிடிச்சிட்டியா”
“ஹ்ம்ம்”
“என்னது”
“வசீகரன்”
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ இழை நானும் குழம்பி போயிட்டேன் … அந்த ஃப்ரெண்ட் சொல்ற எல்லா டயலாக் எனக்கும் பொருந்தும் … அந்த மாதிரி தான் இருக்கு … ப்ளாஷ்பேக் ஒழுங்கா சொல்லுங்க பா … நீ ஸ்வேதாவை லவ் பண்ணிட்டு எதுக்கு இழை வேணும்னு சொல்லுற வசீகரா …
சகி அத்தியாயம் 19 அப்லோட் பண்ணலையா … இல்ல சீரிஸ் ல இல்லையா செக் பண்ணுங்க …