
இன்று
படுக்கையறையில் பிணமாய்க் கிடந்த சரளாவை பார்த்து அதிர்ந்தே போனான் தீரேந்திரன். முந்தைய நாள் இரவு தான், சில தகவல்களை வாட்ஸ் அப் வழி பகிர்ந்திருந்தார் சரளா, மறுநாளே அவரை இவ்வாறு பார்க்க நேரிடும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தகவலை பகிர்ந்ததால் தான் இப்படி ஏற்பட்டதோ என்ற குற்ற உணர்வு அவனை ஆட்டிபடைத்தது, அவன் மூளை சில நொடிகள் ஸ்தம்பித்துப் போனது. தவறு செய்துவிட்டோமே என மனசாட்சி அவனை சாட்டையால் அடித்தது போல் உணர்ந்தான்.
எதோ தோன்றியவன் போல் சரளாவின் மகள் சத்யாவிடம் சென்றான் தீரன்.
“சத்யா” மெல்ல அழைத்தான் அவளை,
“சொல்லுங்க சார்” என்றாள்.
“நேத்து ராத்திரி ஒன்பது மணிக்கு அம்மாவை பார்க்க யாராவது வந்தாங்களா..?”
“எங்களை வந்து பார்கிற அளவுக்குச் சொந்த பந்தம்லாம் யாரும் இல்லை சார், நானும் அம்மாவும் மட்டும் தான்”
“அம்மா கூட வேலை செய்யுறவங்க யாரவது வந்தாங்களா.?”
“இல்லை சார் அப்படி யாரும் வரலையே சார்” என அவள் சொல்ல,
“சரிம்மா யாரும் இல்லைன்னு கவலைபடாதே, உனக்கு அண்ணன் நான் இருக்கேன், அம்மாவோட இறுதி சடங்குளுக்கு நானே பொறுப்பேத்துக்குறேன்” எனக் குற்ற உணர்வில் சொல்லியவன் அவளிடம் இருந்து மெல்ல விலகி நடந்து வேப்பமர நிழலில் நின்று எதையோ யோசித்துக்கொண்டிருந்தான், மற்ற காவலர்கள் வீட்டினுள்ளே உடலை பிரதே பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாட்டைச் செய்துக்கொண்டிருந்தனர்.
“அண்ணா..!” அழைத்தது சத்யா தான்.
“சொல்லுமா..?” கேள்வியாய் பார்த்தான்.
“நேத்து ராத்திரி ஒன்பதரை மணி இருக்கும், அம்மாக்கு ஒரு போன் வந்திச்சு, எடுத்து பேசினவங்க ரொம்ப மைல்ட் ஆனா வாய்ஸ்ல பேசினாங்க, கொஞ்ச நேரத்திலே தலை வலிக்குது மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போயிட்டாங்க, போயிட்டு பத்து மணிக்கு தான் வந்தாங்க” எனச் சத்யா சொன்னாள்.
“மெடிக்கல் ஷாப் எங்கே இருக்கு..?” அவளிடம் கேட்டான்.
“தெரு முனையில தான் இருக்கு” அவள் பதில் சொல்லி அங்கிருந்து நகர்ந்து செல்ல, தெருமுனையில் இருக்கும் மருந்தகத்தை நோக்கி ஓடினான் தீரா.
மருந்தகத்தில் இருந்தவனோ காவலுடையில் தீராவை கண்டவுடன் சற்றுத் தடுமாறினான், ஆனால் எதையும் அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“சொல்லுங்க சார் என்ன வேணும்..?”
“நேத்து இந்த ஏரியால இருக்கச் சரளா உங்க கடைக்கு வந்தாங்களா..?”
“இல்லை சார்” மழுப்பினான் அவன், அவன் கண்களைப் பார்த்து அவன் போலியாய் இருப்பதாய் உணர்ந்த தீரா,அவன் தலையில் ஒரு அடி அடித்தான்.
“என்ன நடிக்குறியா.? உண்மைய சொல்லுறியா இல்லை ஸ்டேசன் வர்றீயா..?” மிரட்டல் தொனியில் கேட்டான் தீரா.
“சார் சார் புள்ளை குட்டிகாரன் சார் நான் உண்மையைச் சொல்லிடுறேன் சார்”
“சொல்லு உன் பேர் என்ன..?”
“குமார் சார்”
“எத்தனை வருசமா இங்கே கடை வச்சிருக்க.?”
“அஞ்சு வருசமா வச்சிருக்கேன் சார்”
“சரளாவை எத்தனை வருசமா தெரியும்.?”
“இங்க கடை வச்சதிலே இருந்தே தெரியும் சார், அவங்க காலேஜ் பஸ் நம்ம கடைகிட்ட தான் நிக்கும், தினமும் காலேஜ் பஸ்ல தான் போவாங்க சார்” எனக் குமார் சொல்ல,
“சரி குமார், நேத்து நைட்டு என்ன நடந்திச்சு..?”
“சரளா அவசரமா வந்தாங்க, காலேஜ் பஸ்க்கு வெயிட் பண்ணுற மாதிரி நின்னுட்டு அந்தப் பக்கமா பார்த்திட்டே இருந்தாங்க சார், ஒரு பதினைஞ்சு நிமிசத்துல கருப்பு பல்சர்ல ஒருத்தன் வந்தான் சார், அவனைப் பார்த்ததும் இவங்க ரொம்பப் பதட்டம் ஆனாங்க, அவன் எதையோ கொடுத்தான், அதை வாங்கி முந்தானையில மறைச்சிகிட்டு, அவங்களோட தெருக்குள்ள வழக்கத்தை விட வேகமா நடந்து போனாங்க சார்” என அவன் சொல்லி முடிக்க,
“அந்தப் பைக்ல வந்தவனோட முகத்தைப் பார்த்திங்களா..?”
“இல்லை சார் ஹெல்மெட் போட்டிருந்தாரு, அதோட உடனே கிளம்பிட்டாரு சார்” எனச் சொல்ல,
“நீ சொன்னது எல்லாம் உண்மை தானா.?”
“ஏன் பொண்டாட்டி ரத்தினத்து மேல சத்தியமா எல்லாமே உண்மை சார்” எனச் சொல்லிவிட மருந்தகத்தில் இருந்து கிளம்பியவனுக்கு தீர்வெதும் கிடைத்த பாடில்லை.
அதன் பின் ஸ்டேசன் வந்து சேர்ந்த சில மணி நேரத்திற்குப் பின்னர், கமிஷ்னரிடமிருந்து தீராவுக்கு அழைப்பு வந்தது, உடனே கமிஷ்னர் அலுவலகம் வருமாறு சொல்லப்பட, தீராவும் கிளம்பி அங்கு வந்து சேர்ந்தான்.
“வாங்க தீரேந்திரன்” கமிஷ்னர் அவர் இருக்கையில் இருந்தபடி அழைத்தார்.
“குட் ஈவ்னிங் சார்” மரியாதை நிமித்தமாகச் சல்யூட் வைத்தான் தீரா.
“அதெல்லாம் இருக்கட்டும், வாங்க தீரேந்திரன் உட்காருங்க”
“பரவாயில்லை சார் நின்னுக்குறேன்” பணிவாய் சொன்னான்
“என்ன தீரேந்திரன் கேஸ் எப்படி போகுது?”
“எந்த கேஸ் சார்..?” தெரியாதவன் போல் கேட்டான் தீரேந்திரன்.
“தீரேந்திரன்..? என்கிட்டையும் உங்க பெர்ஃபாமென்ஸை காட்டுறீங்களா..?” கமிஷ்னர் சிரித்தபடி கேட்டார்.
“அதெல்லாம் இல்லை சார்” என மழுப்பினான் தீரேந்திரன்.
“மிஸ்டர் தீரேந்திரன் வெல்டன் ஃபார் யுவர் கோ-ஆப்ரேசன், நான் சொன்னேன்றதுக்காக கார்த்திக்கை விசாரிக்காமல் விட்டிங்க, இப்போ வரைக்கும் நாங்க சொன்ன மாதிரி சரியா பண்ணிட்டு இருக்கீங்க”
“எல்லாம் சரி தான் சார், நான் தான் பார்த்துக்குறேன் சொன்னேன்ல எதுக்காக சரளாவை போட ஆள் அனுப்பியிருக்கீங்க.?”
“அதை நான் பண்ணலை, மேல் இடத்துல இருந்து பண்ணீயிருக்காங்க தீரேந்திரன்”
“என்ன சார் மேலிடம், அவங்களுக்கு தேவை அகரநதியும் கார்த்தியும் தான, எதுக்காக சம்மந்தம் இல்லாம ஷிட்” என சற்று குரலை உயர்த்தி வெறுப்படைந்தான் தீரா.
“லீவ் இட் தீரேந்திரன், இந்த மாதிரி கேஸ்ல நம்ம இப்படி தான் நடந்தாகணும், கேஸ்க்கு எதிரா யார் இருக்காங்கன்னு நமக்கு தெரிய வேண்டாமா..? நாளைக்கு புதுசா எவனாவது வந்தான்னா கேஸை தோண்டி எடுப்பான், அப்போ கார்த்தி குற்றவாளி இல்லைன்னு தெரிஞ்சா நம்ம டிபார்ட்மென்ட் தான் மாட்டிக்கும்” என கமிஷ்னர் ராகவன் சொல்ல,
இத்தனை நாள் அரங்கேறிய நாடகத்திற்கு தொடக்கபுள்ளியே தீரேந்திரன் தான், கார்த்தியின் வழக்கை யாருக்கும் சந்தேகம் வராமல் அவன் தான் குற்றவாளி என்று உறுதி செய்வது தான் அவனுக்கு மேலிடத்திலிருந்து கொடுக்கபட்ட வேலை, இதற்கு பின்னால் இருக்கும் குற்றவாளிகள் யாரென்று தெரியாமல் காப்பாற்றி வருவதே தீரேந்திரன் தான்.
“கார்த்தியை பத்தி பிரச்சனை இல்லை சார், அவன் வாயே திறக்க மாட்டேன்றான் அந்த அளவுக்கு எதோ பிரச்சனைல மாட்டியிருக்கான்” என தீரேந்திரன் விவரித்தான்.
“அப்போ அந்த அகரநதி..?”
“அகரநதி..?” அவன் எதையோ யோசிக்க,
“என்ன தீரேந்திரன் காதலா..?”
“இல்லை சார்” உடனே மறுத்தான் தீரா.
“அவங்க கண்ணு முழிக்குற வரைக்கும் நம்ம டிபார்ட்மென்ட் வாட்ச் பண்ணுறது நல்லது சார்” என சொல்லி முடித்தான் தீரா.
“குட்..! எதோ டைரி கிடைச்சதா சொன்னாங்க”
“அதனால எந்த யூஸூம் இல்லை சார், டைரி முழுக்க காதல் கவிதைகள்” அவன் சொல்லி இதழ் வளைக்க.
“அந்த காதல் கவிதைகள் எல்லாம் உங்களை பத்தி தானே மிஸ்டர் தீரேந்திரன்”
“யா சார் பட், அந்த பொண்ணு நான் விசாரிச்ச வரைக்கும் போல்டான பொண்ணு, ஒருவேளை கண்ணு முழிச்சா உண்மையை சொல்றதுக்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கு.”
“அதுக்கு தான் தீரேந்திரன் சொல்றேன் நீங்க அகரநதியை கூடவே இருந்து வாட்ச் பண்ணுறது நல்லது” ராகவன் சொல்ல.,
“எதுக்காக சார் இவ்ளோ பயந்துகிட்டு, ஒரேடியாய் போட்டு தள்ளிட்டா கேஸ் முடிஞ்சிரும்ல, அகரநதியும், கார்த்தியும் தானே பிரச்சனை, அகரநதியை ஹாஸ்பிட்டல்ல வச்சு முடிச்சரலாம், கார்த்தி நம்மகிட்ட தான இருக்கான் இட்ஸ் ஈசி ஃபார் அஸ்” சாதாரணமாய் சொன்னான் தீரேந்திரன்.
“நீங்க சொல்ற பாயிண்ட் கரெக்ட்டு தான், பட் அது சரி வராது தீரேந்திரன்”
“சாட்சியை வெளிய விட்டு வைக்குறது சம்பந்தபட்டவங்களுக்கு ரொம்பவே டேஞ்சர் சார்” என உறுதியாய் தீரா சொல்ல,
“வெல்டன் மிஸ்டர் தீரேந்திரன், சரியான ஆள்கிட்ட தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க ராகவன்” என கைகளை தட்டியபடி மறைவாய் இருந்த அமைச்சர் செந்தமிழன் வந்து நின்றார். தீரேந்திரனோ முகத்தில் அதிர்வின்றி சாதாரணமாய் அமர்ந்திருந்தான். அவன் அறைக்குள் நுழையும் போதே மூன்றாவது ஆளாய் யாரோ இருப்பதை அவன் அனுமானிதிருக்க,அதை உறுதி படுத்தும் விதமாய் அமைச்சர் வெளிபட்டிருந்தார்.
“ராகவன் சரியான ஆளத்தான் என் வேலைக்கு வச்சிருக்க, யாருன்னு தெரியாமலே, இவ்ளோ வேலை பண்ணியிருக்காரே, தெரிஞ்சிருந்தா அந்த பொண்ணு கதையும் பையன் கதையும் முடிச்சிருப்பாரு போலயே” வாயெல்லாம் பல்லாக கேட்டார் செந்தமிழன், அவர் அரசியல்வாதி என்பதற்கு ஏற்ப கட்சி கரை வேஷ்டி கட்டியிருந்தவர் தோளில் கட்சி துண்டு தொங்கிக்கொண்டிருந்தது., அவருடைய கட்சி தலைவரின் புகைப்படம் சட்டை பையிலிருந்து முகம் காட்டி சிரித்தது.
“ஆமா சார், அவர்கிட்ட சொன்னா போதும் நம்ம வேலை முடிஞ்ச மாதிரி” என ராகவன் விளக்கினார்.
“எவ்ளோ பணம்யா கொடுத்த..?”
“செந்தமிழன் சார் அவர் பணம் கேட்க்கல வேற கேக்குறாரு”
“சொல்லிட்டா கொடுத்தறலாம்யா” புன்னகையுடன் சொல்ல,
“ப்ரோமோஷன்” என சொன்ன தீரேந்திரனின் கையில் ஆறாம் விரலாய் சிகரெட்டும் கண்ணில் கருப்பு கூலர்ஸூம் இருக்க, கால் மேல் கால் போட்டு திமிராய் அமர்ந்திருந்தான் தீரேந்திரன்.
“என்னது ப்ரோமோஷனா..? இதுக்கு அப்பறம் இந்த கேஸ்ல உனக்கு என்ன வேலை இருக்கு” திமிராய் கேட்டார் அமைச்சர் செந்தமிழன். அதே சமயம் தீரேந்திரனின் செல்பேசி இசைந்தது, செவி மடுத்தவன்.
“ம்ம்”
“ஒகே..!” என சொல்லி அழைப்பை துண்டித்தவன்.
“உங்களுக்கு ஒரு ஹாட் நியூஸ் சொல்லவா செந்தமிழன்.?” அமைச்சரின் முகம் கோபத்தில் சிவந்தது,
“தீரேந்திரன் என்ன பேசுறீங்க..? அவரு மினிஸ்டர் பேர் சொல்லி பேசுறீங்க” ஆதாங்கபட்டார் ராகவன்.
“சோ வாட் மிஸ்டர் ராகவன்..?”
“என்னையவே பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு தைரியமா தீரேந்திரன்?” இவ்வளவு நேரம் மரியாதையாய் பேசிக்கொண்டிருந்த தீரேந்திரன் எங்கோ காணாமல் போயிருந்தான், அதைக்கேட்ட கோபத்தில் கத்தினார் கமிஷ்னர் ராகவன்.
“ஆட்சியே எங்க கையில இருக்கு, மரியாதை முக்கியம் தம்பி” செந்தமிழினின் நாசி துடித்தது.
“உங்க குடுமியே என் கையில இருக்கு” ஒற்றை புருவம் நீவி அமைச்சரை பார்த்து விஷமமாய் புன்னகைத்தான் தீரேந்திரன். இதை எதிர்பாராத ராகவனோ.
“தீரேந்திரன்..!” அலறினார் ராகவன்.
“ராகவன் வெயிட் பண்ணுங்க, அவர்கிட்ட எதோ விசயம் இருக்கு” என சொன்ன செந்தமிழனின் இதழில் மர்ம புன்னகை வழிந்தது
“அப்படியா..? தீரேந்திரன்..?” அதிர்வுடன் கேட்டார் ராகவன்.
“அகரநதி குணமாகிட்டா, கண் முழிச்சிட்டாதா டாக்டர் ஜஸ்ட் நவ் தான் தெரியபடுத்தினார்.” என கெத்தாய் சொன்னவன் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை செந்தமிழன் முகத்தில் ஊதிவிட்டவன் மர்ம்மாய் சிரித்தான், அவன் இதழில் நெளிந்த கோணல் புன்னகையை கண்டு உறைந்து போய் நின்றனர் ராகவனும், செந்தமிழனும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஐயையோ இவன் ஹீரோ போலீஸ் இல்லையா … நான் என்ன பண்ணுவேன் … முடியலடா சாமி … இல்ல இவங்க முன்னாடி நடிக்கிறானா … நெஞ்சு வலிக்குது … இவ்ளோ ஷாக் கொடுக்காதீங்க … சிகரெட் ஊதுறானா… Coolers … புரமோஷனா … தீரா இப்படி ஆகி போச்சே … என்னமோ போங்க … அடுத்து என்ன நடக்குமோ …
அவன் வேற திட்டம் வச்சிருப்பான் போல டா 🤐😁 ஆதரவிற்கு நன்றி டியர்❤️
ரொம்ப விறுவிறுப்பா போகுது கதை. சரளாவின் சாவில் இருக்கும் மர்மத்தை விலக்க முயலுவான் என்று பார்த்தால், இவனும் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் அவனுக்கு யாதென்றே தெரியாதா உண்மைகளை மறைக்கவும், பொய்யாக குற்றம் சுமத்தி கார்த்தியை குற்றவாளியாக்கவும் உதவி இருக்கின்றானே!
வேலையில் நேர்மையுடன் செயல்படுபவன் போல் அல்லவா இருந்தான்.
சூழ்நிலையின் காரணம் அவர்கள் பக்கம் இருந்தே உண்மைகளை வெளிக்கொணர உதவுவானா?