Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 07

 

கலங்கிய கண்களை சிமிட்டிக் கொண்டு அவனைப் பார்த்தவளின் முகத்தில் கொலைவெறி தாண்டமாடியது.

 

அப்படியே அவனின் கேசத்தை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விடத் தோன்றிய எண்ணத்திற்கு கடிவாளமிடத் தெரியாமல் கை நீள அவளின் செயல் உணர்ந்தவனின் முகம் கோபத்தில் இறுக ஒரு கையால் ஸ்டியரிங்கை சுழற்றி மறு கையால் அவளின் கையை முறுக்க வலியில் அலறியே விட்டிருந்தாள்,மித்ரஸ்ரீ.

 

பார்த்த முதல் பார்வையிலேயே அவனுக்கு அவளை பிடிக்காமல் போய் விட்டதன் காரணம் சந்த்ருவின் காதலியாய் அவன் மனதில் அவன் உருவாக்கிக் கொண்ட பிம்பமோ என்னவோ..?

 

“விடுடா..விடுடா..கிறுக்கு..ஆ..அம்மா..ஆஆஆஆஆ..” அவளின் மரியாதையின்றிய வார்த்தைக்கு அவன் முறுக்க தொண்டை அடைத்து கண்ணீர் மட்டும் வழிந்தது.

 

மெல்லிய தேகம் கொண்ட பெண்ணல்ல அவள்.ஆனால்,அவன் பிடி அத்தனை வலிமையாய் இருந்ததே.

 

“இப்டி என் மேல கைய வச்ச இல்ல..உன்னயெல்லாம் உன் பொண்டாட்டி முதுகுல ஏறி மிறிப்பாடா..”சாபம் விட்ட படி தளர்ந்த அவள் பிடியில் இருந்து கரத்தை உருவிக் கொண்டவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.

 

“இங்க பாரு..நா ஒன்னும் உன்ன கடத்திட்டு வர்ல..கடத்துற அளவு நீ வர்த்தும் இல்ல..” என்றவனின் விழிகளில் எள்ளல் நிரம்பி படர்ந்திருந்தது.

 

“சந்த்ரு கைய அறுத்து கிட்டு ஹாஸ்பிடல்ல இருக்கான்..அதான் உன்ன கூட்டிட்டுப் போறேன் போதுமா..வாய மூடிகிட்டு வந்து சேரு..” அழுத்தமாய் உரைத்தவனுக்கு பதில் இயம்ப நா துருதுருத்தாலும் கை வலி அதை கட்டிப் போட தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு ரிஷியின் மீது சொல்லொண்ணா கோபம் சேர்ந்து இருந்தது என்னவோ உண்மை தான்.

 

மருத்துவமனையின் அருகே வண்டி நிற்க சடாரென கதவை திறந்து அதை மூடக்கூட மறந்தவளாய் விழுந்தடித்துக் கொண்டு ஓடியவளின் மீது அவனுக்கு கொலைவெறி வரமால் இருந்தால் தான் அதிசயம்.

 

காரை நிறுத்தி லாக் செய்து விட்டு அவன் நடக்க எப்படியோ சந்த்ரு இருக்கும் அறையை தேடிப்பிடித்து அதற்குள் நுழைந்திருந்தாள்,மித்ரஸ்ரீ.

 

மணிக்கட்டில் வெண்ணிற பேன்டேஜ் சுற்றப்பட்டிருக்க விழி தாழ்த்தி இலக்கின்றி பார்வையை திரிய விட்டுக் கொண்டிருந்த சந்த்ரு கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்த கணம் அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.

 

அணுவளவும் அவன் மித்ரஸ்ரீயை அவ்விடத்தில் எதிர்பாராது இருந்திருக்க அது முற்றிலும் பொய்யாகி அல்லவா போனது..?

 

விழிகளில் அனல் தெறிக்க மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி அழுத்தமாய் பார்த்திட அவளின் விழிகளை சந்திக்க முடியாமல் தலையை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்,சந்த்ரு.

 

“எரும மாடே..அப்பவே தலப்பாடா அடிச்சிகிட்டேன்..ரெண்டு பேரும்

லவ் பண்ணாதீங்க பண்ணா தீங்கன்னு..கேட்டியா நீ..தெய்வீக காதல்..தெய்வாதீனமான காதல்னு அடிச்சு விட்டுட்டு இங்க கைய அறுத்துகிட்டு நிக்கற..அறிவில்ல..படிச்சவன் தான நீயி..? மண்டைல கொஞ்சமாச்சும் மசாலா இல்ல..?எனக்குன்னு வந்து சேருதுங்க..ச்சை..”

 

தலையில் அடித்துக் கொண்டே அவனைப் பார்த்திட அவனோ விழியைக் கூட நிமிர்த்தவில்லை.

 

“பைத்தியம்..பைத்தியமா நீ..அவனே உயிர் பொழச்சு வந்துருக்கான்..அவன் கிட்ட போய் இப்டி பேசிட்டு இருக்க..மனசாட்சி இருக்கா உனக்கு..” அவளைத் திட்டிய படி உள் நுழைந்தான்,ரிஷி.

 

அவள் பேசியதை கதவருகே நின்று கேட்டுக் கொண்டிருந்திருப்பான்,போலும்.அவனைக் கண்டதுமே அவளின் மூச்சுக்காற்று தனக்குள் உஷ்ணத்தை தனக்குள் சேர்த்துக் கொண்டதோ என்னவோ..?

மூச்சுக்காற்றில் அப்படி ஒரு உஷ்ணம்.

 

“யாருடா இது..போயும் போயும் இந்தப் பொண்ண போய் லவ் பண்ணியிருக்க..”

 

“மச்சீஈஈஈஈ”

 

“சும்மா இருடா..சப்போர்ட் பண்ண வராம..அவளுக்காக தான் கைய அறுத்துகிட்டன்னு கூட புரிஞ்சிக்காம வந்து இந்த கத்து கத்துறா..ஏதோ உன்னோட லவ்வர்னு தான் நானும் பேசாம இருக்கேன்..”

 

“மச்சீ நா சொல்றத கேளு..”

 

“அடச்சே சும்மா இரு..பாரு ஒரு பொண்ணு மாதிரியா நடந்துகிட்டா..என் கைய வேற கடிச்சு வச்சுட்டா..எத்தன ஊசி போடனும்னு தெரியல..எப்பவும் ப்ரெண்டு வைப்னாலும் லவ்வர்னாலும் ரெஸ்பெக்ட் பண்ண தோணும்..ஆனா இவ இருக்காளே..பேசாம ப்ரேக் அப் பண்ணிருடா..நிம்மதியா இருப்ப..இவள கட்டிகிட்டு வாழ்றதும் ஸ்லோ பொய்சன குடிச்சிகிட்டு சாகறதும் ஒன்னு தான்..”

 

“ஆமா இவரு பெரிய கேரிங்க் பண்ற ஆளு..பொண்ணுன்னு பாக்காம மூஞ்சில குத்துனவன் தான நீயி..உனக்கு வர்ர பொண்டாட்டி தான் பாவம்..தெனம் தெனம் பாக்சிங்க் ரிங்குள்ள வாழ்ற மாதிரி தான் இருக்கும்..வந்துட்டாரு பேச..” அவள் கூறிட ரிஷியின் பார்வை அழுத்தமாய் அவளைத் தீண்டிக் கொண்டிருந்தது.

 

அவனும் பெண்களை கண்டிருக்கிறான் தான்.ஆனால்,யாரும் அவனுடன் நேருக்கு நேர் நின்று வாயாடியதில்லையே.

முதன் முதலாக அவள் அவன் முகத்துக்கு நேரே திட்டித் தீர்க்கவும் அத்தனை கோபமாய் வந்தது.

 

“ஸ்ரீ பாத்து பேசு..அவன் யாருன்னு தெரியுமா..? எதுவும் தெரியாம இப்டி பேசிட்டு இருக்க..சாரி கேளு..”

 

“நா எதுக்கு சாரி கேக்கணும்..அவன் தான் ஆரம்பிச்சான்..நா அவன் கிட்ட பர்ஸ்டா வாயக் கொடுக்கல..”

 

“மன்னிப்புக்கேளுன்னு சொல்றேன்..” சந்த்ரு அதட்ட விழி மூடி தன்னை கட்டுப்டுத்திக் கொண்டாலும் மனதில் கோபம் இன்னும் மீதமிருக்கத் தான் செய்தது.

 

“சாரி..”

 

“ஸ்ரீ ஒழுங்கா அவன் கிட்ட சாரி கேளு..”

 

“நா பண்ணது தப்பு தான்..யாருன்னு தெரியாம நா வாய் அடிச்சிருக்க கூடாது..எப்டின்னாலும் நா பேசனது ஹர்ட் பண்ணி இருக்கும்..மனசார கேக்கறேன் மன்னிச்சிக்கோங்க..” அவள் வார்த்தைகளில் இருந்த மென்மை குரலில் இல்லை.இறுக்கமாய் கேட்டாலும் அந்த வார்த்தைகளை அவனை பதில் பேச தூண்டவில்லை.

 

ஒரு நிமிடம் அங்கு கனத்த அமைதி நிலவ அதைக் கலைக்கும் விதமாய் “சந்து..” எனும் கண்ணீர்க்குரலுடன் ஓடி வந்து அறைக்குள் நுழைந்தாள்,அஞ்சலி.

 

சந்த்ருவின் ஆருயிர் காதலி.மித்ரஸ்ரீயின் பள்ளிக்காலத் தோழி.

 

“சந்த்ரு என்னடா ஆச்சு..?இப்டி இருக்க.?நா கோபமா பேசனேன்னு கைய அறுத்துகிட்டு நிப்பியா..? ஏன்டா இவ்ளோ எமோஷனல் ஆகற..?” கண்ணீருடன் தலை வருடி கேட்க அவனின் கண்களும் கலங்கியது.

 

ரிஷிக்கு ஒரு நொடியில் எல்லாம் தலைகீழாகிப் போனது.அஞ்சலியின் கண்ணீரும் சந்த்ருவின் கண்ணீரும் அவனின் காதலி அஞ்சலி என்பதை பையனுக்கு உணர்த்தி விட்டிருக்க ஒரு வித குற்றவுணர்ச்சி மனதில் எழுந்தாலும் அதை அவன் விழிகளோ முகமோ உணர்த்தி நிற்கவில்லை.

 

“அஞ்சலி சொன்னா சொன்ன டைம்கு வந்துரு..யார் யாரோ இந்த பைத்தியத்தோட லவ்வர்னு என்ன தான் தப்பா நெனச்சிகிட்டு இருக்காங்க..தப்பா நெனச்சாலும் பரவால வண்டி வண்டியா அட்வைஸ் வேற..இந்த எரும தான் நீ அங்க இருக்குறதா சொல்லி அனுப்பி வச்சிருக்கும்..நீ பாட்டுக்கு என்ன அங்க நிக்க வச்சிட்டு பொய்ட்ட பாத்து நடந்துக்க..” முன்பிருந்த கோபம் முற்றிலும் மறைந்து போய் இறுக்கத்துடன் கூறி முடித்தவளின் குரலிலும் அதே பாணி.

 

ரிஷியை ஒரு பார்வை பார்த்து விட்டு கதவை அடைத்துக் கொண்டு வெளியேறியட அவள் கதவை அறைந்த விதமே எடுத்துச் சொன்னது,அவளின் கோபத்தை.

 

திடுமென முகத்தில் மோதிய இலையொன்றின் உரசலில் தான் இயல்பு மீண்டாள்,மித்ரஸ்ரீ.

 

இத்தனை நேரம் பையனின் பார்வை அவள் வதனத்தின் மீது படிந்திருக்க அவளின் நுண்ணிய உணர்வுகளை அவன் ஆராய்ந்து உள்வாங்கியது அவள் கவனத்தில் பதியவில்லை.

 

●●●●●●●●●

நேற்றிரவு ரணதீர புரத்தில்,

 

மருதவேல் வண்டியை செலுத்திக் கொண்டிருக்க தோப்பு வீட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு குறுகலான பாதை வழியே நகர்ந்து கொண்டிருந்தது,கஜேந்திரனின் ஜீப்.

 

மழையின் வீரியம் அதிகமாய் இருக்க தொடரான இடிச்சத்தங்கள் காதைப் பிளக்க அவ்வப்போது தோன்றி மறைந்து கொண்டிருந்த மின்னலும் அந்த கொடூர இருட்டில் ஒரு வித பயத்தை தந்தன.

 

நாய்களின் குரைச்சலும் ஓநாய்களின் கத்தலும் அவ்வப்போது செவியை உரச ஏனோ ஒரு வித இனம் புரியா பயம் மருதவேலின் உள்ளத்தில்.

 

மனதில் அத்தனை பயம்.இத்தனை நாளாய் அவன் உணர்ந்திராத பயம்?

சுற்றி எங்கும் நிலவிய பேரிருளும் சில்லிடச் செய்யும் அமானுஷ்ய அமைதியும் பயத்தை தராது இருக்குமா என்ன..?

 

சுற்றும் முற்றும் பார்த்தவனின் விழிகளுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தாம் இருவரையும் தவிர வேறு யாருமில்லை என்பது புரியத் தான் செய்தது.

 

மழைச் சத்தத்தை மீறிய காலடிச் சத்தமொன்று மீறிய சிறு காலடிச் சத்தமொன்று கேட்பதாக தோன்றினாலும் அது பிரம்மையா..? உண்மையா..? என பிரித்தறிய முடியவில்லை,அவனால்.

 

வண்டியின் முன் விளக்கு வெளிச்சத்தில் பாதை கூட அத்தனை தெளிவாய் தெரியாதிருக்க மனம் படபடக்க வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனின் பார்வை கஜேந்திரனை அலசியது.

 

அலைபேசியில் யாரோ ஒரு பெண்ணுடன் குழைந்து வழிந்து பேசிக் கொண்டு வர அந்த கொஞ்சல் மொழிகள் மருதவேலை ஆத்திரத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றது என்றால் மிகையல்ல.

 

பத்து நிமிடங்களின் பின் அழைப்பை துண்டித்து விட்டு தனக்கு விரும்பிய பாடலை கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தவனுக்கு எப்படி பயம் வராமல் இருக்கிறது என்கின்ற சிந்தனை தான் மருதவேலுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 

அப்போது தான் தொப்பலாய் நனைந்த வண்ணம் ஒரு நபர் பாதையின் ஒரு ஓரம் நின்றிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிய மருதவேலின் நெற்றி சுருங்கிற்று,யோசனையின் தாக்கத்தில்.

 

“யார்ரா இது..இந்த நேரத்துல நம்ம ஊர்ல நிக்கறது..? மருது நீ இந்த ஆள பாத்துருக்கியாடா..?”

 

“இல்லய்யா..நானும் பாத்தது இல்ல..கண்டிப்பா வெளியூரு ஆளாத்தான் இருக்கும்..நம்ம ஊர்ல யாரும் இந்த டைம்ல இங்க நின்னுகிட்டு இருக்க மாட்டாங்கல்ள..”

 

“அதான்..சரி அந்தாளு கைய நீட்றான் வண்டிய நிறுத்த சொல்லி..இங்க இருக்குறதுக்கு பயமா இருக்கும் போல..வா நாம ஏத்திட்டு போய்ரலாம்..” என்க கை நீட்டிய நபரின் அருகே சென்ற வண்டி நின்றது.

 

வண்டியை நிறுத்திய கணம் பெரும் வெளிச்சமொன்று மின்னலின் தயவால் அவ்விடத்தில் வந்து விட்டுப் போக ஒரு கணம் ஆடித் தான் போனான்,மருதவேலும்.

கஜேந்திரனோ அதை இயல்பாக எடுத்துக் கொண்டு அந்நபரை பார்க்க அவரும் புன்னகைத்தார்,இதழ் பிரித்து.

 

“தம்பி நா சங்கரன்..இங்க பக்கத்தூர் தா..தேவம்பட்டி..என்ன கொஞ்சம் அந்த முச்சந்துல எறக்கி விட்ருங்க..தனியா நடந்து வர பயமா இருக்கு..”

 

“சரி உள்ள ஏறுங்க..” கஜேந்திரனின் கட்டளைக் குரலில் உள்ளே ஏறிக் கொண்டார்,அவரும்.

 

“நா ஊருக்கு காலைல கெளம்பி வந்தது??மதியத்துக்குள்ள வேல முடியல..அதான் வர டைம் ஆயிருச்சு..வெளில வந்து பாத்தா பஸ்ஸே இல்ல..அப்றம் தான் சொந்தக்காரங்க வீட்டுக்கே போலாம்னு வந்துகிட்டு இருந்தேன்..சோன்னு மழ..குட வேற இல்லியா..அதான் அங்கயே நின்னுட்டேன்..”

 

“அப்டியா..சரி அப்போ நா முச்சந்துல எறக்கி விட்டுர்ரேன்..அதுக்கப்றம் போய்க்குவீங்களா..? இல்லன்னா உங்க சொந்தக்காரங்க வீட்லயே எறக்கி விட்ரவா..?”

 

“இல்ல இல்ல தம்பி..முச்சந்துலயே எறக்கி விடுங்க..அதுக்கப்றம் தனியா போய்க்கலாம்..மொத்தமா நனஞ்சு தான இருக்கேன்..திரும்ப நனஞ்சா எதுவும் ஆயிடாது..”

 

“சரிங்க..” என்றபடி கஜேந்திரனை பார்க்க அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பது புரிய கலைக்கும் எண்ணம் வரவில்லை.

 

மருதவேலும் சங்கரனும் தமக்குள் சலசலத்துக் கொண்டு வந்தாலும் அவர்களுடன் இணைய முற்படவில்லை,கஜேந்திரன்.

 

திடீரென்று வலது நெற்றியின் ஓரத்தில் இருந்து குருதி வழிய தெளிவில்லா முகத்துடன் புடவை கட்டிய பெண் உருவமொன்று பாதையில் தெரிய சட்டென்று வண்டியை நிறுத்தின,மருதவேலின் கரங்கள்.

 

தன் எண்ணத்தில் திளைத்திருந்த கஜேந்திரனுக்கு வண்டி நிறுத்தப்ட்டது புரிய ஓரிரு நொடி எடுக்கத் தான் செய்தது.

 

“என்னாச்சு..?”

 

“என்னாச்சு தம்பீ..?”

 

“யாரோ யா..யாரோ முன்னாடி வந்து நின்ன மாதிரி இருந்துச்சு..ஒரு பொண்ணு ஒன்னு..” அதிர்ச்சியும் பயமும் ஒரு சேரத் தாக்க திக்கலாய் வெளிவந்தன,அவனின் வார்த்தைகள்.

 

“அப்டி ஒன்னும் தெரியலியே தம்பீ..”

 

“அப்டி ஒரு மண்ணும் இல்ல..உன் கண்ணுல தான் ப்ரச்சன..வண்டிய எடு..ஏற்கனவே லேட் ஆயிடுச்சு..” சீறியவனுக்கு அடங்கி வண்டியை கிளப்பினாலும் முன்பிருந்த பயம் இன்னும் கூடியிருந்தது.

அந்த குளிரிலும் அவனுடல் சற்றே வியரக்கத் துவங்கி இருந்ததன் காரணம் அதீத பயம் தான்.

 

அவனின் பயம் கண்டோ இல்லை வேறு ஏதோ சிந்தனையிலோ சங்கரன் பேசாமல் வர அது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது மருதவேலுக்கு.

 

கண்ணாடி வழியே சங்கரனை கவனித்தவனுக்கு அவனின் வலது நெற்றியோரம் குருதி வழிவதாய் தென்பட அத்தனை மிரட்சி வந்து சேர்ந்து கொண்டது,விழிகளில்.

 

மீண்டும் வண்டியை நிறுத்தவும் பயம்.கஜேந்திரனின் காட்டுக் கத்தலை யார் சமாளிப்பது..?

கண்களை ஒரு கணம் ஆழ மூடித் திறந்து கண்ணாடியை பார்க்க எதுவும் இல்லை.

 

சங்கரனோ கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க வண்டியை ஓட்டிக் கொண்டே கீழே விழுந்த தன் கர்சீபை எடுக்க கீழே குனிந்திட மனம் ஏதோ உந்த பின்னே பார்வையின் திருப்பியவனுக்கு சர்வமும் ஒடுங்கியது.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.09

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ரொம்ப நாள் கழிச்சு திரில்லர் கதை படிக்கிறேன் … பயமா தான் இருக்குது … இன்னைக்கு பயங்கரம் … நிறைய கிளைக் கதைகள் எங்கு போய் ஒன்றாக சேருமோ …