Loading

   “தம்பி அம்மாவோட வார்தைகள் எல்லாம் உங்களுக்கு நியாபகம் இல்லையா? எப்படிப்பட்ட சூழ்நிலையில இந்த கல்யாணம் நடந்திருந்தாலும், இது அக்னி சாட்சியாக நடந்த கல்யாணம் ப்பா. அதுக்கான மரியாதையை நாம கொடுத்து தானே ஆகனும்?”

   அந்த தட்டை தட்டி விட்ட விஷ்வேஸ்வரனோ,

    “ஆமாம், ஆனா இது ஊருக்காக மட்டுமே நடந்த கல்யாணம் தான், இவளோட உறவை இங்க நீடிக்கிறதுக்காக இல்ல. அதோட இந்த மரியாதை எல்லாம் ஏத்துக்குற தகுதி கூட இவளுக்கு இல்ல ம்மா.”

   “தம்பி அவங்க உங்க மனைவி.”

   “முதல்ல இவளை இப்படி மரியாதையா கூப்பிடறதை நிறுத்துங்க செல்லம்மா, அதுக்கெல்லாம் இவளுக்கு தகுதியே கிடையாது.”
  
  அவரை தாண்டி விடுவிடுவென்று உள்ளே சென்றவன், மாடியில் இருக்கும் தனது அறையை நோக்கிச் சென்றான். அவனது வார்த்தை சவுக்கினால் காயம் பட்ட பெண்ணவளோ, தனது இந்த  நிலைக்கான காரணம் கூட அறியாது குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

   “தம்பி எதோ கோபத்துல அப்படி பேசிட்டுப் போறாரும்மா, நீங்க வலது காலை எடுத்து வெச்சு உள்ள வாங்க.”

   இந்த கட்டாயக் கல்யாணத்துல அது ஒன்னு தான் குறைச்சல் என்று மனதில் நினைத்தாலும், தனக்கு எதிரே புன்னகையோடு நின்றிருந்தவருக்காக அவர் சொல்வதை செய்தாள்.

    அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற சொன்னவரோ, பிறகு அவளை அழைத்துக் கொண்டு, சற்று தள்ளி இருந்த அறையை நோக்கிச் செல்ல, உடை மாற்றிக் கொண்டு ஆபீஸ் செல்வதற்காக கீழே வந்தவன், அந்த வீடே அதிரும்படி கத்தி, அவர்களை தடுத்து நிறுத்தினான்.

    “செல்லம்மா என்ன பண்றீங்க நீங்க?”

    “இல்ல தம்பி… அது… ஆசிர்வாதம்…”

    “எக்காரணம் கொண்டும் இவளோட இந்தப் பாவம் படிஞ்ச பார்வை, அவங்க மேல விழவேக் கூடாது. புரியுதா…? இன்னும் இரண்டு நாள்ல ஊருக்கு கிளம்பனும், அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை பாருங்க.”

   என்றபடி வேகமாக அவன் வெளியேறி விட, நிலாவின் பார்வையோ மூடியிருந்த அந்த அறை கதவை நோக்கி சென்றது.

      கட்டிலில் தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள் நிலா. ஈஸ்வர் கத்திவிட்டு சென்ற பிறகு, அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற செல்லம்மா, சற்று நேரம் ஓய்வு எடுக்கும் படி கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

    நிலாவின் மனது தற்போது அவளது தாய் தந்தையரை தேடியது, அவர்களைப் பற்றிய நினைவு தான் அவள் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? அவர்கள் மனதின் வலி என்னவென்று அவர்களின் பார்வையிலேயே தெரிந்ததே… தனது தாய் எதுவுமே பேசாமல் மௌனமாக சென்றதற்கு காரணம், கண்டிப்பாக தனது அத்தானாகத் தான் இருக்கும். தன் மனதின் வலியையும் மீறி தனக்காக அவர்களிடம் அவர் பேசி இருக்க வேண்டும்.

     ஆதிரனைப் பற்றி நினைக்கும் போதே  நிலாவின் கண்களில் கண்ணீர் சூழ்ந்தது. அடுத்த வாரத்தில் தன்னோடு நிச்சயம் செய்ய இருந்தவளை, இன்னொருவனின் மனைவியாக கண்ட பிறகும் கூட, மனதின் வலியை மறைத்து வாழ்த்தி விட்டுச் சென்றவனை நினைக்கும் போதே, மனம் கனிந்தது.

     ஒருவேளை ஆதிரனிடம் முன்பே தனது ரகசிய தொழிலை பற்றி கூறியிருந்தால், மாலினியை போன்றே  இந்த திருமணத்தில் சூழ்ச்சி இருப்பதை உணர்ந்து, ஈஸ்வரோடான தனது  திருமணத்தை நிறுத்தி இருப்பாரோ!

    தன் மீது உள்ள வன்மத்தை தீர்த்துக் கொள்ள, ஒரு குடும்பத்தையே ஒருவன் சிதைத்திருக்கிறான் என்றால்,  அவனுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய தீங்கை செய்து விட்டேன்!

   ஒவ்வொரு முறையும் என்னை வார்த்தைகளால் காயப்படுத்துகின்றானே தவிர, அதற்கான காரணத்தை அவன் கூறவே இல்லையே.

     அவன் முகத்தை முன்பு எங்கும் பார்த்தது போலவும் நினைவில்லை, நானே அறியாது எதுவும் நடந்திருக்குமா?

      நான் பிறர் திருமணத்தை நிறுத்த பயன்படுத்தும் அதே யுக்தியை பயன்படுத்தி, தன்னை பேச முடியாமல் செய்து திருமணத்தையும் நடத்தியிருக்கிறான் என்றால், கண்டிப்பாக தன்னை பற்றிய முழு விவரமும் அவனுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் எதற்காக ரிதன்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறான்? எவ்வளவு யோசித்தும் அதற்கான விடையை அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

     இந்த விஷயத்தில் தனது நண்பர்களின் உதவியை நாடவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது. எங்கே இவனைப் பற்றிய உண்மைகளை வெளியே கூறினாள், தன்னை சுற்றி இருப்பவர்களை அவனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் ஏதாவது செய்து விடுவானோ என்று அச்சமும் அவளுக்கு தோன்றியது.

    முதலில் இந்த இக்கட்டில் இருந்து வெளிவர, அதற்கான காரணத்தை அறிய வேண்டும். ஒருவேளை அந்த அறைக்குள் இருப்பவரை கண்டால், இதற்கான விடையை தன்னால் அறிய முடியுமோ! என்ற எண்ணம் தோன்ற, அந்த அறையை நோக்கி நடக்கத் தொடங்கியவளின் காதுகளில் மாலினி மற்றும் ஆதிரனின் குரல் கேட்டது.

   வாசலில் உள்ள வாட்ச்மேனிடம் தங்களை உள்ளே விடுமாறு கூறி, மாலினி சண்டையிட்டுக் கொண்டிருக்க, ஆதிரனும் பைக்கை வெளியே நிறுத்தி விட்டு, தாங்கள் யார் என்று அவனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

   நிலா அவர்களை நோக்கி செல்வதற்கு முன்பாகவே, கேட்டின் அருகே வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய ஈஸ்வர், வாட்ச்மேனை திட்டிவிட்டு அவர்கள் இருவரோடும் வீட்டினுள் நுழைந்தான்.

    “என்னோட வேலையாள் சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் மிஸ்டர் ஆதிரன்.”

    “பரவாயில்லைங்க…”

    “விஷ்வேஸ்வரன், நீங்க என்ன ஈஸ்வர்னே கூப்பிடலாம். அண்ட் அகைன் சாரி பார் தட்.”

    “அதெல்லாம் எதுவும் தேவையில்லை ஈஸ்வர், அவருக்கு எங்களை தெரிஞ்சிருக்க வாய்பில்லை இல்லையா, அவரோட டியூட்டிய தானே அவர் செஞ்சார். நான் நிலாவோட டிரஸ்ஸை கொடுத்துட்டு போலாம்னு தான் வந்தேன்.

     ஆமாம் மாலினி கல்யாணம் முடிஞ்சு நீ நிலா கூட இங்க வரலையா என்ன? பிரண்ட்ஸ் நீங்க எல்லாம் இருக்கீங்கன்ற நம்பிக்கைல தானே, நான் அத்தை மாமா கூட போனேன், அப்போ நிலா தனியா தான் இங்க வந்தாளா?”

    மாலினி வாய் திறப்பதற்குள் நிலாவே பேசத் தொடங்கினாள்.

     “இல்ல மாமா நான் தான் அவளை முக்கியமான விஷயமா அனுப்பி வச்சேன்.”

    “அப்படி என்ன முக்கியமான விஷயம்?”

    “முதல் முதல்ல வீட்டுக்கு வந்திருக்கீங்க, வெளியவே நின்னு பேசினா எப்படி? உள்ள வாங்க ஆதிரன். அப்புறம் என் அத்தானை நிக்க வெச்சே பேசுறீங்களான்னு உங்க அத்தை பொண்ணு என்னை அடிக்க வருவா.”

     சிரித்தபடியே ஆதிரன் ஈஸ்வரோடு முன்னே செல்ல, நிலாவின் கைகளை பிடித்தபடி ஒதுங்கி சென்றாள் மாலினி.

    “உதய் கொஞ்ச நாளா நீ ஏதோ வெளியே சொல்ல முடியாத பிரச்சனைல இருக்கியோன்னு தோணுச்சு. அதனால தான் உனக்கே தெரியாம, உன்னை நான் ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்.

   பட் அப்படியும் இந்த கல்யாணத்தை என்னால தடுத்து நிறுத்த முடியாம போயிடுச்சு.  நீ பயப்படாதே நான் சுகந்தன்கிட்ட பேசிட்டேன், இன்னைக்கு நைட் ட்ரெயினுக்கே கிளம்பறேன்னு சொல்லி இருக்கான். என்ன பிரச்சனையா இருந்தாலும் சரி, நாம சேர்ந்து அதை சமாளிக்கலாம்.”

   “அட மாலினி ஏன் இன்னும் பதட்டமா இருக்கீங்க? அது தான் உங்க அப்பாக்கு எதுவும் பெருசா அடிபடலையே.”

   ஈஸ்வரின் கூற்றில் மூவரும் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க,

  “என்ன ஈஸ்வர் சொல்றீங்க? மாலினியோட அப்பாவுக்கு என்ன ஆச்சு? நிலா நீ சொன்ன முக்கியமான விஷயம் இது தானா?”

   உறைந்து போய் நின்ற நிலாவைக் கண்டு, இதழ் கடையோர கேலிச் சிரிப்பை உதிர்த்த ஈஸ்வர்,

    “அது ஒன்னும் இல்ல ஆதிரன், இன்னைக்கு மாலினியோட அப்பா ஓட்டிட்டுப் போன வண்டிக்கு, சின்னதா ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு? ஜி ஆர் ஹாஸ்பிடல்ல அவரை அட்மிட் பண்ணி இருக்காங்க.

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த ஹாஸ்பிட்டல் டாக்டர் கூட நான் பேசினேன், பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல தான், இருந்தாலும் எதுக்கும் ஒருமுறை ஸ்கேன் எடுத்து பார்த்துக்கலாம்னு, உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க.

    நம்ம மாலினிக்கு அவங்க அப்பாவை விட, ஃப்ரெண்டு லைஃப் மேல தான் ரொம்ப அக்கறை, அது தான் இந்த நிலைமையிலும், அங்க அவங்க அம்மாவை பார்த்துக்க சொல்லிட்டு, நிலாவை பார்க்க இங்க ஓடி வந்துட்டாங்க.”

   அவன் பேசுவதைக் கேட்டு குழம்பிப் போய் நின்றிருந்த மாலினியின் போன் அடிக்க, எடுத்துப் பேசியவள் மறுபுறம் அவள் தாய் அழுதபடி கூறிய இதே செய்திகளை கேட்டு, அதிர்ந்து நின்றாள்.

   “என்னாச்சு மாலினி ஸ்கேன் முடிஞ்சிருச்சா?எதுவும் பிரச்சனை இல்லையே, நான் வேணும்னா  டாக்டர்கிட்ட பேசி பார்க்கட்டுமா.”
   
    கோபத்தோடு பேச வாயெடுத்த மாலினியின் கைகளை பிடித்த நிலா,

    “நீ இப்பவே ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பு மாலினி. முதல்ல நீ உன் குடும்பத்தை பாரு, நானா சொல்ற வரைக்கும் நீயும் சரி சுகந்தனும் சரி, என்னை பார்க்க வரக் கூடாது இது என் மேல சத்தியம்.

   இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினா அப்புறம் வாழ்நாள் முழுக்க நான் உங்க கூட பேசவே மாட்டேன். அத்தான் நீங்க மாலினியை ஹாஸ்பிட்டல்ல விட்டுடுங்க.”

   ஆதிரனும் சரியென்று மாலினியோடு வாசலை நோக்கிச் செல்ல, ஈஸ்வர் வெற்றிப் புன்னகையோடு தனதறையை நோக்கிச் சென்றான்.

   அவர்களோடு வாசல்வரை சென்று வழியனுப்பி விட்டு உள்ளே வந்தவளோ, கோபத்தோடு ஈஸ்வரின் அறையை நோக்கிச் சென்றாள்.

    சோபாவில் அமர்ந்து ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தவனின், கைகளில் இருந்த கோப்பை பறித்து தூக்கி வீசியவள், 

   “ஏன் இப்படி பண்ணீங்க? மாலினியோட அப்பாவுக்கு எதுக்காக இந்த தண்டனை?”

    “வாட் நீ என்ன பைத்தியமா? அவங்க அப்பா வண்டியை ஓட்டத் தெரியாம ஓட்டி, எங்கயோ போய் விட்டதுக்கு நான் எப்படி காரணமாவேன். அடுத்து உன் ப்ரெண்ட் சுகந்தனை போலீஸ் அரெஸ்ட் பண்ணதுக்கு கூட, நான் தான் காரணம்னு சொல்லுவ போல.”

    “வாட் சு… சுகந்தனை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?”

    “இன்னும் இல்ல, பட் அவன் அவனோட குடும்பத்தை மறந்துட்டு, உன்னை தேடி வந்தா, இதை விட பெரிய பிரச்சனையை கூட அவன் சந்திக்க வேண்டி இருக்கும். அப்புறம் அவங்க பெரியப்பன் சித்தப்பன் மாதிரி, அவனும் போலீஸ் ஸ்டேஷனே கதின்னு கிடக்க வேண்டியது தான்.”

  “அப்போ சுகந்தாவை நீ தான் ப்ளான் பண்ணி, இங்கிருந்து அனுப்பி இருக்க அப்படித் தானே?

    உனக்கு என் மேல தானே கோபம், அதை என்கிட்ட நேரடியா காட்ட வேண்டியது தானே, எதுக்காக என்னை சுத்தி இருக்கவங்களை கஷ்ட்டப்படுத்துற?”

   “ஏன்னா அப்பத் தானே நீ அதிகமா காயப்படற, அது தானே எனக்கும் வேணும்.”

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அடப்பாவி ஈஸ்வரா என்னடா உன் பிரச்சனை சொல்லித் தொலை … பயங்கரமான ஆளா இருப்பான் போலயே

    1. Author

      ஆமாம் பாருங்களேன் 🙂