Loading

“பாட்டி கவனிச்சதால பரவால்ல, ஒரு வேலை கவனிக்காம விட்டிருந்தா, நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு மாமா.”

  “இதை வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லலாம்னு நான் அண்ணன் கிட்ட அப்பவே சொன்னேன். அண்ணா தான் வேண்டான்னு சொல்லிட்டான்.”

    “மாமா இவங்களை நம்ப முடியாது. அண்ணனும் தங்கச்சியும் தனக்கு ஒரு  ஆபத்துன்னு வந்தா, எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவாங்க.

     இதனால குடும்பத்தில் இருக்கவங்களோட மனசு காயப்படறத பற்றியும், கவலைப்பட மாட்டாங்க. அதனால தான் நான் மணி கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.”

    “நீ சரியா தான் சொல்ற மகி, நீங்க எதும் கவலைப்படாதீங்க இனி நான் பாத்துக்குறேன்.”

   வேந்தன் ஜி எம் ஹாஸ்பிடலில் டாக்டராக பணிபுரியும், தனது நண்பன் சந்துருவிற்கு அழைத்தான்.

  “என்னடா அதிசயமா இருக்கு, நீயா எனக்கு கூப்பிட்டு இருக்க, பிசினஸ் மேன் இப்போ பிஸியா இல்லையோ?”

  “சந்துரு நான் இப்போ உங்க ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். நீ எங்க இருக்க, நான் இப்பவே உன்னை பார்க்கணும்.”

  வேந்தனின் குரலிலேயே மாற்றத்தை கண்டு கொண்ட சந்துரு, அவனுக்கு தான் இருக்கும் இடத்தை கூறினான்.

     தீபனுக்கும் மூர்த்திக்கும் பூவுப்பாட்டியின் விஷயம் தெரிந்து, அவர்களும் அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

  ரிசப்ஷனில் வேந்தனை கண்ட இவர்கள், அவன் மூலமாக நடந்ததை அறிந்து கொண்டு, பள்ளி தோழனான சந்துருவைக் காண சென்றனர்.

    ஜீ எம் மருத்துவமனை சந்துருவின் அப்பா, டாக்டர் சந்திரசேகருடையது. கடந்த ஒரு வருடமாக தான், மருத்துவமனையின் பொறுப்புக்களை சந்துருவிடம் கொடுத்துவிட்டு, குடும்பத்தாருடன் ஐக்கியமாகிவிட்டார்.

“என்னடா முப்பெரும் தேவர்கள் சேர்ந்து வர்றீங்க, விஷயம் கொஞ்சம் பெருசோ.”

    “இங்க பூவாத்தாள்ன்னு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்களை அட்டன் பண்ண டாக்டரை, நான் கொஞ்சம் பார்க்க முடியுமா?”

     சந்துரு போனில் தனது உதவியாளரை அழைத்து விவரங்களை கேட்டறிந்து, அவர்களை தன்னை வந்து பார்க்குமாறு கூறினான்.

        வேந்தன் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தவன், நடந்தவற்றை கூறி முடித்தான்,

“நான் இப்ப சொல்ல போறதை தான், அவங்க பேமிலி கிட்ட, டாக்டர் சொல்லணும்.”

  என்று சில விஷயங்கள் கூற ஆரம்பித்தான்.

  “என்னடா சொல்ற அப்பாக்கு மட்டும், விஷயம் தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். எப்படி அவருக்கு தெரியாமல் இதை செய்யறது.”

      “அடேயப்பா! தீபா கேட்டியா, சார் அவரோட அப்பாக்கு தெரியாம எதுவுமே செஞ்சதில்லையாம். அப்போ அந்த லாவண்யா விஷயம் உங்க அப்பாக்கு தெரியுமோ?”

        லாவண்யா சந்துருவின் உயிர் காதலி. காதல் என்றால் ஒன்று இரண்டு வருட காதல் அல்ல, பதினைந்து வருட பள்ளி காதல்.

        இவனுக்கு பிடி கொடுக்காமல் சுற்றிக் கொண்டிருந்த லாவண்யாவை, அவளின் கடைசி வருட கல்லூரி படிப்பின் போது, போராடி காதலிக்க வைத்து விட்டான்.

      இருந்தும் தங்களது இரு குடும்பங்களையும் நினைத்து, இவனைத் தவிர்த்து வந்த லாவண்யாவை, எப்படியோ ரிஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம் செய்யும் அளவிற்கு கொண்டு வந்து விட்டான்.

      அடுத்த வாரம் யாரிடமும் சொல்லாமல், அவளை திருமணம் செய்து கொள்ள போகின்றான். இதற்கு அவளை சம்மதிக்க வைப்பதற்குள் ஒருவழி ஆகி விட்டான்.

     “அடேய் மூர்த்தி, ஏண்டா கத்துற. வெளிய எவனுகாச்சும் கேட்டுச்சுன்னா, நேரா எங்கப்பன் கிட்ட போய் பத்த வச்சுடுவானுங்க.

   நானே இப்பதான் லாவண்யா கிட்ட அதை இதை சொல்லி, வீட்டுக்கு தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு கெஞ்சி, சம்மதம் வாங்கி இருக்கேன். நீங்க ஏதாச்சும் பேசி குடும்பத்துக்குள்ள ஏழரையை கூட்டி விட்டுட்டு போயிடாதீங்கடா ராசாக்கலா.”

“எது ரிஜிஸ்டர் மேரேஜா? அப்போ திருட்டு கல்யாணமா, ஏண்டா வேந்தா அப்போ கண்டிப்பா சாட்சி கையெழுத்து போட ஆளுங்க வேணும்ல.”

“ஆமா தீபா நாமலே வேணும்னா, போட்டு விட்டுருவோமா!”

    ஆஹா இவனுங்க பேசுற மாடுலேஷனே சரியில்லையே, தெரியாத்தனமா கல்யாணத்தை பத்தி நானே வாயை விட்டுட்டனே என்று நினைத்த சந்துரு,
  
     “இப்போ என்ன டா உங்களுக்கு, அந்த டாக்டர்ஸ்க்கு பதிலா நானே நேரா வந்து உங்க குடும்பத்துக்கிட்ட பேசுறேன், வாங்க ராசாக்கலா போகலாம்.”

      சந்துரு தன் உதவியாளரை அழைத்து, தானே நேரடியாக அந்த பேஷண்டை பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு, பூவுப்பாட்டி உள்ள அறையை நோக்கி, இவர்களுடன் நடந்தான்.
 
   இவர்கள் பூவுப்பாட்டியின் அறையை நெருங்கும் போதே, ஒப்பாரி சத்தம், சாத்தியிருந்த அறையின் கதவைத் தாண்டியும், வெளி வரண்டா வரை கேட்டுக் கொண்டிருந்தது.

  “டேய் வேந்தா இது நம்ம சரோசா(ஜா) கிழவி சத்தம் டா, உன் மச்சான் மாறன், காசு கொடுத்து இந்த கிழவியை ஏற்பாடு பண்ணி இருப்பான் போல இருக்கு.

  இந்த கிழவியை பத்தி சும்மா நினைச்சுடாதீங்கடா, ராமலட்சுமனன் மாதிரி ஒத்துமையா இருக்கற குடும்பத்தையே, இந்த கிழவி சண்டையை மூட்டி விட்டு பிரிச்சு விட்டுட்டு போயிரும். இப்ப என்னத்த போட்டு விட இங்கே வந்திருக்கோ.

இது கிட்ட ஒரு வேலையை ஒப்படைச்சிட்டா போதும். அதை வெற்றிகரமா முடிக்கிற வரைக்கும் அந்த இடத்தை விட்டு நகராது.”

   “என்னடா கூலி படை மாதிரி பேசிட்டு இருக்க?”

“டேய் தீபா, இந்தக் கிழவியெல்லாம் அதுக்கும் மேல, நீ பார்க்க தான போற உள்ள வா. உன்னால முடிஞ்சா இதை புடிச்சு ஜெயிலுக்குள்ளையாவது போடு, ஊருக்குள்ள இருக்கிற குடும்பங்களாட்சும் சந்தோசமா இருக்கும்.”

   இவர்கள் உள்ளே நுழையும் போதே, ரோசா பாட்டி சுவர் ஓரம் காலை நீட்டி அமர்ந்தபடி, வெத்தலையை இடித்துக் கொண்டே வாயில் மருத்துவமனையை பற்றி மென்று துப்பி கொண்டிருந்தார்.

“ஏன்டா இன்னுமா உன் பொண்டாட்டி கண்ணு தொறக்கல? என்ன ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்க நீ? ஒரு நர்ஸைக் காணோம், ஒரு வார்டு பாயை காணோம், ப்ரிஜ் இல்ல, ஒரு டிவி பொட்டி கூட இல்லையேடா இங்க, அப்பப்ப வந்து செக் பண்ணிட்டு மட்டும் போறாய்ங்களே தவிர, ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாய்ங்க.

  சரிரிரி… இவே இன்னும் கண்ணயே திறக்கலயே, ஏதும் சீரியஸா இருக்குமோ என்னமோ?

  அவ கண்ண மூடுறதுக்கு முன்னவே, அவ பேத்தி கல்யாணத்தையாச்சும் பார்த்துட்டு போகட்டும். இந்த திருவிழா முடியிறதுக்குள்ள கல்யாணத்தை வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்போவ். அதுதான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் இங்கே தானே இருக்காங்க.”

  தம்மை விட வயதில் மூத்தவர் என்பதால், வேலப்பன் ஐயாவும் மூர்த்தி ஐயாவும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, எதுவும் பேசாமல் நின்றிருந்தனர்.

  அவர்களுக்கே அந்த கதி என்றால், மற்ற குடும்ப உறுப்பினர்களை பற்றி சொல்லத்தான் வேண்டுமா? தான் ஏதாவது பேச, இந்த கிழவி உருமாற்றி சண்டையை மூட்டி விட்டு விட்டால், தமக்கு ஏன் வம்பு என்று அனைவரும் தமது வாயை  இறுக மூடிக்கொண்டு, டாக்டர்கள் என்ன சொல்வார்களோ என்று பதைப்பதைப்புடன் காத்திருந்தனர்.

  “அடடா இது என்ன ஹாஸ்பிட்டல்லா இல்ல சந்தை கடையா? ஒரே கூட்டமும் கூச்சலுமா, இப்படி இருந்தா பேஷண்ட் எப்படி ரெஸ்ட் எடுப்பாங்க. முதல்ல எல்லாரும் வெளியே போங்க.”

“ஏய்யா வார்டு பாய்யி, நீ என்ன இப்ப வாயால கொட்டாவியா விட்டுட்டு இருக்கே? உன் சத்தத்துல மட்டும் அவங்களுக்கு ஒன்னும் ஆகாதா? வந்ததே லேட்டு, போ போய் அந்த பாத்ரூமுல பைப்பு ஒழுகுது, அதை சரி பண்ணிட்டு, டப்பா வேற உடைஞ்சு கிடக்கு அதை மாத்தி வைய்யி.”

நண்பர்கள் படுத்தியபாட்டில் சந்துரு தனது டாக்டர் கோட்டை எடுத்து வர மறந்து, ப்ளூ அண்ட் ப்ளூ யூனிபார்மில் வந்திருந்தான்.

  “ஆஸ்பத்திரியின்னா ஆளும் சனமும் வந்து போயிட்டு தான் இருக்கும். வந்துட்டான் பெருசா நாட்டாமை பண்ண சொம்பை தூக்கிக்கிட்டு.”

   நம்ம ரோசாப்பாட்டி போட்ட போடுல சந்துரு அரண்டே போயிட்டான்.

    வேந்தன் அறையில் நுழைந்ததிலிருந்தே, அவனின் முறைப்பைக் கூட சட்டை செய்யாமல், அவனை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

      “மாப்ள ம்ம்ம்…ரெண்டு பேரும் கண்ணாலையே பேசுக்கிறீங்க போல, ஆனாலும் ஹாஸ்பிட்டல்ல வெச்சு இவ்வளவு பப்ளிக்கா சைட் அடிக்க வேண்டாம் டா.”
 
“போலீஸ்காரன்னு கூட பார்க்க மாட்டேன். உதைச்சே உருட்டி விட்ருவேன், வாயை மூடிகிட்டு நில்லு.”

     இங்கு தீபன் வேந்தனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்க, அந்தப் பக்கம் மூர்த்தி ரோசாப்பாட்டியோடு போராடிக் கொண்டிருந்தான்.

  “பாட்டி அவரு வார்டு பாய் இல்ல, அவர் தான் டாக்டர்.”

    சந்துருவை மேலிருந்து கீழாக பார்த்த ரோசா பாட்டி, வேலப்பன் அய்யாவிடம் திரும்பி,

   “ஏய்யா வேலு இந்த ஆஸ்பத்திரியில டாக்டர்களுக்கு ஒரு வெள்ளை கோட்ட கூடவா கொடுக்க மாட்டாங்க, என்ன ஆஸ்பத்திரியின்னு இதுல வந்து சேர்த்திருக்க?”

“அய்யய்யோ ரோசாப்பாட்டி,  இந்த ஹாஸ்பிடலோட ஓனரே இவர்தான்.”

   இனியாவது தனக்கு மரியாதை கொடுப்பார் என்று எதிர்பார்த்த சந்துருவுக்கு, திரும்பவும் பல்பு தான் கொடுக்கப்பட்டது ரோசாப்பாட்டியால்,

  “அப்படியாய்யா, நீ தான் இந்த ஆஸ்பத்திரி ஓனரா? மத்த ஆஸ்பத்திரியிலே எல்லாம் இருக்கிற மாதிரி டிவி, பிரிட்ஜ்ன்னு ரூம்ல வெச்சிருக்க மாட்டீங்களா.

  கிரகம் இந்த ஆஸ்பத்திரியில சிக்னலே கிடைக்க மாட்டேங்குது, நானும் ரொம்ப நேரமா நாடகம் பார்க்கறதுக்காக போனை நோண்டிக்கிட்டே இருக்கேன், நெட்டே வர மாட்டேங்குது. உன் ரூம்ல டிவி இருக்காய்யா? அதுல நாடகம் எல்லாம் வருமா?”

  சந்துரு வேந்தனை முறைக்க, வேந்தன் மூர்த்திக்கு கண்காட்டியதும் மூர்த்தி முன்வந்து,

“அட ரோசாப்பாட்டி, ஊர்ல இருக்கிறவங்க பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்கிற, உங்களுக்கு ஒரு பிரச்சனையா?

  கீழ கேண்டின்ல டிவி இருக்கு. அங்க நான் வரும்போது நாடகம் தான் ஓடிக்கிட்டு இருந்தது. அதுல கூட மாமியாரும் மருமகளும் இப்பதான் சண்டை போட ஆரம்பிச்சு இருக்காங்க.”

    மூர்த்தி ரோசா பாட்டியை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். போவதற்கு முன் ரோசாப்பாட்டி சந்துருவை எட்டிப் பார்த்து,

“மறக்காம அந்த டப்பாவை மாத்திருப்பா.”

  சந்துரு போகும் ரோசாப்பாட்டியை பார்த்து முறைத்து விட்டு  பூவுப்பாட்டியிடம் சென்று, டேபிளின் மேல் இருந்த அவரது கோப்பினைப்  பார்த்தான்.

  வேலப்பன் அய்யாவும் மற்றவர்களும் பதைபதைப்புடன் அவனைப் பார்த்து நின்றனர்.

அப்போதுதான் மாறன் தன் தங்கையை காணவில்லை என்று கவனித்து, அவன் அன்னையிடம் சென்று கேட்டான்.

ஏதோ தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தனது தோழி கீழே வந்திருக்கிறாள், அவளை சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றதாகவும் கூறினார்.

   சந்துரு மற்றவர்களிடம் பூவுப்பாட்டியின் நிலைமையை பற்றி, எடுத்துக் கூற ஆரம்பித்தான்.

   “அவங்க வழுக்கி விழுந்ததில உடம்புல அவ்வளவா காயம் ஏதும் இல்லை தான். ஆனா டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்ததுல அவங்க ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்கன்னு தெரியுது. கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது. ஒரு ரெண்டு மூணு நாள் இங்க தங்கி இருந்து ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டி இருக்கும்.

அதுவரைக்கும் இவ்வளவு பேர் இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல, ஒருத்தர் இருந்தா போதும்.

      அதுவும் அவங்க மன அழுத்தத்தை குறைக்கிற மாதிரி ஆளா இருக்கணும். பார்த்த உடனே, டென்ஷனை அதிகம் ஆக்குற மாதிரி ஆட்களா இருக்க கூடாது.

       ஃபுட் எல்லாம் பேஷண்ட்க்கும், கூட இருக்கவங்களுக்கும் இங்கேயே ப்ரொவைட் பண்ணிடுவோம். நீங்க அவங்களுக்கு தேவையான டிரஸ்ஸஸ் மட்டும் கொண்டு வந்து கொடுத்தா போதும்.

          மூணு நாள் கழிச்சு வந்து எல்லாரும் பாருங்க அது வரைக்கும் தயவு செஞ்சு அவங்கள எதுவும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.”

  வடிவுப்பாட்டி முன்வந்து அந்த பொறுப்பை தனதாக்கி கொண்டார்.
மறுத்துப் பேசியவர்களை,

  “அவங்க என்னோட அம்மா. அவங்கள  என்னால் மட்டும் தான் நல்லா பாத்துக்க முடியும். இதுக்கு மேல யாராவது பேசினா அண்ணண்னும் பார்க்க மாட்டேன், மாப்பிள்ளைனும் பார்க்க மாட்டேன்.”
 
அதற்கு மேல் எவரும் பேச முன்வரவில்லை, அவர்களுக்குத்தான் தெரியுமே, வடிவு பாட்டிக்கு எல்லாமே அவர்தான் என்று.

  வேலப்பன் அய்யா தளர்ந்த நடையுடன் திரும்பி சென்று விட்டார். அவருக்கு தான் தெரியுமே, மனைவியின் மன அழுத்தம் எதனால் என்று, ஆகவே பூவுப்பாட்டிக்கு மேலும் வருத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று கிளம்பிவிட்டார்.

    மாறனுக்கும் தாம் ஒன்று நினைக்க நடப்பது வேறாக உள்ளதே என்ற வருத்தம் தான். ஆனாலும் பிறகு பார்த்து கொள்ளாம் என்று விட்டு, தனது தங்கைக்கு தொலைபேசியில் அழைத்தான். ஆனால் அது அனைத்து வைக்கப்பட்டுயிருப்பதாக கூற குழப்பத்துடன் அவளை தேடி கீழே சென்றான்.

மற்றவர்களும் கிளம்பி விட, வடிவு பாட்டியோடு தான் இருப்பதாக கூறி, வேந்தன் அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும், வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

    தவறாமல் ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடமாறு சொல்லிவிட்டு தான், அவர்களும் கிளம்பி சென்றனர்.
 
    அனைவரையும் அனுப்பிவிட்டு பூவுப்பாட்டி அருகில் வந்த வேந்தன் அவரிடம்,

  “எல்லோரும் கிளம்பிட்டாங்க பாட்டி.”

என்று கூறியது தான் தாமதம், பூவுப்பாட்டி எழுந்து வேந்தனை கட்டிக்கொண்டு, அழ தொடங்கி விட்டார்.

     அனைவரும் சென்றதும், வடிவுப்பாட்டியிடம், நடந்தவற்றைக் கூறித்தான் அறையின் உள்ளே, அழைத்து வந்திருந்தான் வேந்தன்.

        அவருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை. இந்த குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்தவருக்கு, இப்படி ஒரு நிலையா என்று, அவரின் கைகளை பிடித்து கொண்டு வடிவுப்பாட்டியும் கதறி விட்டார்.

      “என்ன ஆத்தா வெளியே உங்க வீட்டுக்காரர் உட்பட அத்தனை பேரையும் அதட்டி துரத்தி விட்டுட்டு, இப்ப இப்படி வந்த அழறீங்க. நீங்க தானே உங்க அம்மாக்கு சமாதானம் சொல்லணும்.”

  “முடியலையே ராசா, பாவி பய அவிங்க செஞ்ச வேலையை நினைச்சாலே, எனக்கு ஈரக்குலையே நடுங்குது. அவங்களோட சுயநலத்துக்காக அண்ணி உயிரை பணயம் வைக்க பார்த்தாங்களே. இன்னமும் என்னென்னவெல்லாம் செய்ய காத்திருக்காங்களோ தெரியலையே?”

   “அதை நான் பார்த்துக்கிறேன் ஆத்தா, நீங்க ரெண்டு பேரும் அதெல்லாம் மறந்துட்டு, ரெண்டு நாள் ஜாலியா உங்க பையன் வீட்டுல போய் இருந்துட்டு வர்றீங்க சரியா.”

  “என்ன ராசா சொல்ற புரியலையே? நான் அந்த வீட்ல தானே சாகுற வரைக்கும் இருந்தாகணும். ஆனா இப்போதைக்கு அங்கு இருக்கிறவங்கள பார்க்க எனக்கு விருப்பம் இல்ல ராசா”

  “ஐயோ பூவுப்பாட்டி, நான் உங்க ரெண்டாவது பையனை பத்தி சொல்லிட்டு இருக்கேன், அவரை நீங்க பார்க்க வேண்டாமா? வேண்டாம்னா விடுங்க.”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்படி போடு அப்போ மது அப்பா இவங்க பையனா … அதை தான் வேந்தன் அப்படி சொல்றானா …