
அழகியே 11
வேதாவின் அலறல் சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த துளசியம்மாள், “ஏய் எவடி அது புள்ளைய அடிக்கிறது. தள்ளி போ” என்று தள்ளி விட, “ஏய் கிழவி யார் நீ.. மரியாதையா தள்ளி போயிரு. இவ பண்ணுன காரியத்துக்கு இவளை கொன்னா கூட ஆத்திரம் தீராது” என்றவர் அங்கிருந்த வாரியலை எடுத்தவர் அவளை அடிக்க, அதற்குள் அவர் கையில் இருந்ததை பிடிங்கிய சுந்தரம், “ஏன் மா, பார்த்தா நல்ல குடும்பத்து பொம்பளை மாறி இருக்க, இப்படி வீடு பூந்து அராஜகம் பண்ற,எதுக்கு இந்த உடம்பு சரியில்லாத புள்ளைய போட்டு இந்த அடி அடிக்குற” என்று கேட்டார்.
மீனாட்சி அதே ஆத்திரத்துடன்”நீங்க யாரு?” என்று வேகமாக கேட்க, “நாங்க இந்த வீட்டு சொந்தகாரங்க” என்று கூறியவர் வேதாவிடம், “ஏன் தாயி இந்தம்மா யாரு?” என்று கேட்க, அவளோ, “தெரியல தாத்தா” என்றவள் பல்லை கடித்து கொண்டு வலியை பொறுத்து கொள்ள காயத்தை கைவைத்து மூட, பெரியவரோ அவரின் துண்டை எடுத்து தலையை சுத்தி கட்டிவிட்டார்.
மீனாட்சி, “எடு செருப்ப.. யாருன்னு தெரியாதாம்ல.. என் பையன மயக்கி கட்டிக்க மட்டும் தெரியுமோ” என்று கேட்டார். அப்போதுதான் அவரின் பேச்சுக்களும் புரிந்தது அவர் யாரென்றும் புரிந்தது.
சுந்தரமோ, “நீ செழியனோட அம்மாவா? எதா இருந்தாலும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த அந்த பையன் கிட்ட கேளுமா. சின்ன புள்ளைகிட்ட போய் இப்படி நடந்துக்குற” என்றார்.
அதில் ஆத்திரம் அடைந்த மீனாட்சி, “யாரு இவ சின்ன புள்ளையா? பாத்த ஒரே நாளுல என் புள்ளைய மயக்கி கட்டிக்கிட்ட இவ சின்னப்புள்ளயா? எங்கங்க என்ன பண்ணாளோ கடைசியா என்ன மகன புடிச்சுக்கிட்டா” என்று கத்த அவரின் குரலில் தெருவில் கூட்டம் கூடிவிட, வேதாவிற்கோ அவமானமாக இருந்தது.
“ஏன்டி நீயெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்தவளா.. உன்ன ஊர் மேய விட்டுட்டு என்ன செய்றாங்க உன் ஆத்தாலும் அப்பனும், நல்ல பணக்கார வீட்டு பையன பிடிச்சுக்கோ. காலம் முழுசும் சந்தோசமா இருக்கலாம்னு சொன்னாங்களா?” என்று திட்ட, “இங்க பாருங்க என்னை என்னவேனாலும் திட்டிக்கோங்க. என் அப்பா அம்மாவ பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல” என்று கூற, “அட பெரிய இவங்களாடி உன் அப்பனும் ஆத்தாலும், நீயே இப்படி இருக்க அவங்க எத்தனை குடும்பத்தை கெடுத்திருக்காங்களோ” என்று கத்தினார்.
துளசியம்மாள், “ஏய் வெளியே போயிரு மருவாதையா, நீ எடுத்த தொடப்பத்தை நானெடுத்தேன் பிஞ்சு போயிரும். போடி” என்று அவரை கேட்டிற்கு வெளியே தள்ளிவிட்டார்.
தெருவில் நின்றவாறே, “நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. நாசமா போயிருவேடி. என் பாவத்தை கொட்டிகிட்டு நீ நல்லா இருந்துருவியா? எல்லாம் ஆசை அடங்க வரைக்கும் தான். எல்லாம் தீர்ந்ததும் அவன் எங்ககிட்டதான் வந்து நிப்பான். அப்போ உன்னை செருப்பால அடிச்சு தொரத்துவேன்டி” என்று தன்மகனைதான் கேவலப்படுத்துகிறோம் என்றறியாமலே கத்திக்கொண்டு வண்டியில் ஏறி சென்று விட்டுருந்தார்.
அவர் கூறி முடிக்க செழியனின் கோவம் எல்லை கடந்தது. தேவ் மீனாட்சி கையில் கிடைத்தால் அப்போதே கொன்றே போட்டிருப்பான். அத்தனை கோபம் இருவருக்கும். இருவரும் கவனமாக அவளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செல்ல, அவர்களுக்கு நன்றி கூறி அனுப்பிய செழியன் தேவ்வை பார்க்க, அவனோ அப்புறம் பாத்துக்கலாம் இவளை பாரு என்று கூற செழியன் அவளை அணைத்து சமாதானப்படுத்த, அவளுக்கோ வேதனை தாங்க முடியவில்லை.
தேவ் இருவரையும் தனியாகவிடலாம் என்று முடிவு செய்தவன் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அவளோ, “நான்தான் உங்கள மயக்கிட்டேனாம். ஆசை தீர்ந்ததும் நீங்க என்னை போயிடுவீங்கலாம். அவங்க ஏன் அப்டி சொன்னாங்க” என்று கேட்க, செழியனுக்கோ தன்னிடம் இதேதான் கூறினார். என்மீது அவ்வளவு நம்பிக்கையா அவருக்கு என்று நினைத்தவன் வெறுத்து போனான்.
“நான் வேணா எங்காச்சும் போயிரட்டுமா? ஆனால் நான் எங்க போவேன், எனக்கு தான் யாரும் இல்லையே” என்றவள் கூற செழியனே அழுதுவிட்டான். “ஹேய் உனக்கு நான் இருக்கேண்டி சாகுற வரைக்கும். அப்போ கூட உன்ன தனியா விடமாட்டேன். நீ என்ன மயக்கல. நான்தான் உன்கிட்ட மயங்கிட்டேன். அவளோ அழகு தங்கமே நீ. மூணு மாசம் இல்ல. முப்பது வருஷம் ஆனாலும் நான் உங்கிட்ட மயங்கித்தான் இருப்பேன். ஒரு வாரம் ஆனாலும் காதல் காதல் தான். உயிர் போற வரை என் மூச்சுக் காத்து கூட உனக்குதான். இனி நீ இதெல்லாம் யோசிக்காத” என்றவன் அவளை சமாதானப்படுத்துவதற்குள் ஒரு வழியாகி போனான்.
அவனின் மடியில் சமாதானமாகி படுத்திருந்தவளிடம் செழியன், “தங்கமே நாம வேற ஊருக்கு போயிருலாமா?” என்று கேட்க, அவளோ, “ஏங்க இங்க வந்து உங்கம்மா என் கிட்ட அப்படி நடந்து கிட்டதால சொல்றீங்களா.. வேணாங்க. நாம வாழ மாட்டோம்னு சொன்னவங்க முன்னாடி நாம வாழ்ந்து காட்டணும். அதுவும் என் அப்பா சொல்வார் தொலைஞ்ச இடத்துலத்தான் தேடணும். தோத்து போன இடத்துல இருந்துதான் ஜெயிக்கணும்னு. நமக்காக நாம வாழனும். அடுத்தவங்களுக்காக இல்ல. நான் புரிஞ்சுக்கிட்டேன். இனிமேல் அழ மாட்டேன்” என்றவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.
தேவ், அரவிந்துக்கு அழைத்து அனைத்தையும் சொல்லியிருக்க, அவனோ முதல் வேலையாக கிளம்பி வீட்டிற்கு வர, தேவ்வும் சரியாய் வர, வேதாவின் இந்த கடைசி பேச்சு மட்டும் விழ, அரவிந்த்தின் இதழ்கள் தாராளமாய் விரிய, தேவ் அவளின் புரிதலை எண்ணி மகிழ்ந்து போனான்.
அவள் பேசியதை கேட்டுக்கொண்டே உள்ளே வர, செழியனின் மடியில் படுத்திருந்தவள் வேகமாக அவர்களை கண்டதும் எழுந்திருக்க அரவிந்தனோ, “நோ பார்மலிட்டிஸ் டா, நீ படுத்துக்கோ, நான் செழியனோட அண்ணன் அரவிந்த்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, செழியனோ தேவ்வை முறைத்தான்.
அவளோ, “வாங்க” என்றவள் எழுந்தமர செழியனோ, “என்னடா” என்று கேட்க, அரவிந்தனோ வேதாவிடம் வந்தவன், “எங்கம்மா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேண்டாமா, சாரி. அவங்க ஏன் இப்படி பன்றாங்கனு தெரியல. நான் அவங்களை வார்ன் பண்றேன். சாரி மா” என்று மீண்டுமொரு முறை மன்னிப்பை வேண்ட, செழியனும் தடுக்கவில்லை.
அவளோ, “ச்ச ச்ச அவங்க பண்ணதுக்கு நீங்க என்னை செய்வீங்க அண்ணா. பரவாயில்லை. நீங்க உட்காருங்க. நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று கூற, தேவ்வோ, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் வேதா, நீ வந்து உட்காரு. இப்போ நீ ஓகேவா. ஈவினிங் உன்னை அப்படி பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல அதான் வெளியே போய்ட்டேன். இன்னும் வலி இருக்கா” என்று நெற்றி காயத்தை பார்த்து கேட்டான்.
அவளோ, “ஓகே அண்ணா பரவாயில்லை. இப்போ வலிக்கல. நான் டீ எடுத்துட்டு வரேன்” என்றவள் கிட்சன்க்கு சென்று விட, செழியனிடம் அமர்ந்தவன், “நிஜமா உன் லைப் பத்தி நான் எவ்ளோ கவலைப்பட்டேன் தெரியுமா செழியா. இப்போ நாங்க வரும்போது கடைசியா அந்த பொண்ணு சொன்ன அந்த ஒரு வார்த்தை அவ தரத்தை சொல்லிருச்சு. இவளை போய் திட்ட எப்படிதான் மனசு வருதோ அம்மாக்கு. கண்டிப்பா நான் இதை விட மாட்டேன். ச்ச.. இவள திட்றதும் உன்ன திட்ற மாதிரின்னு அவங்களுக்கு ஏன் புரியலைன்னு எனக்கு தெரியல” என்று வருத்தப்பட்டான்.
தேவ், “நாம வரும்போது அவ இருந்த நிலமையை பார்த்து ரொம்ப பயந்துட்டேன் செழியா இதுல இருந்து எப்படி மீட்க போறோம்னு. அது அவசியமே இல்ல. ரொம்ப மெச்சூர்டா நடந்துக்குறா” என்றான்.
“இந்த வயசுல இவளுக்கு இருக்குற பக்குவம் கூட அம்மாக்கு இல்லாம போச்சே. செழியன்தான் என்ன நடந்துச்சுனு எல்லாம் தெளிவா சொல்லிட்டானே. இதுல இந்த பொண்ணு மேல என்ன தப்பு. அவங்க ஏன் அவளோ வெறுக்குறாங்க எனக்கு புரியல டா. அம்மாவோட எத்தனையோ விசயங்களை பார்த்து நான் வியந்துருக்கேன். எல்லா பிரச்சனையும் ஈஸியா ஹாண்டில் பண்றவங்களுக்கு இந்த விசயத்துல மட்டும் ஏன் இவளோ ஹார்சா நடந்துக்குறாங்க” என்று வருத்தப்பட்டான்.
தேவ், “அண்ணா இதுல நாம எதுவும் பண்ண முடியாது. இது மாமியார்களோட சைக்கலாஜி. பிடிக்காத மருமகள் வேற. அவங்க அப்டித்தான். நாமதான் விலகி போகணும்” என்று கூற, செழியன் இருவரும் பேசுவதை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தவன், எதுவும் பேசவில்லை. அதற்குள் வேதா டீ எடுத்து வந்துருக்க, மூவரும் அதை குடித்து முடித்தனர். செழியன் அவளின் முகத்தையே பார்க்க, அவளோ அழுகையை அடக்குவது நன்றாக புரிந்தது.
அரவிந்தனோ, “டீ ரொம்ப நல்லா இருந்துச்சுடா, சரி நான் கிளம்புறேன். ஹெல்த் பாத்துக்கோ. அகைன் சாரி. சாரி சொல்றதால எதுவும் மாறாது. ஆனாலும் இப்போதைக்கும் எனக்கு அத தவிர என்னை சொல்றதுன்னு தெரியல” என்று கூற, அப்போது துளசியம்மாள் வந்தார்.
வேதாவின் அருகில் வந்தவர், “இப்போ பரவாயில்லையா தாயி” என்று கேட்டவர், “இங்க வா இப்படி வந்து உட்காரு. எங்கே கையை நீட்டு இந்தா இந்த எண்ணையை தேச்சா கை எரிச்சல் எதுவும் வராது” என்றவர் அவளின் கையை பற்றி இழுக்க, அதுவோ முழங்கையில் இருந்து விரல் நுனி வரை விளக்கமாற்று குச்சிகள் குத்தி அத்தனை காயங்கள் பொட்டு பொட்டாய்.
செழியனுமே அதுவரை அதை பார்க்கவில்லை. அத்தனை காயங்கள் எப்படிதான் வலி தாங்கினாலோ துடித்து போனவன், “இது எப்படி ஆச்சு”என்று கேட்க, துளசியம்மாளோ, “எல்லாம் உங்க ஆத்தா குடுத்த பரிசுதான். விளக்கமாத்தை வச்சு என்ன இழு இழுத்துட்டா. நான் புடிச்சு தள்ளி விடலைன்னா கொன்னாலும் கொன்றுப்பா. மனிசியா அவ. பச்சப்புள்ள வலில எப்படி துடிச்சிருப்பா” என கூறும் முன்பே அவரின் கண்கள் கலங்கி விட்டது.
தேவ் கண்கள் கூட கலங்கிவிட்டது அவளின் காயத்தை பார்த்து. அரவிந்தனுக்கு குற்ற உணர்வு தன்னால் தான் என்று. அவர் எண்ணையை எடுத்து மயிலிறகால் தடவி விட, எரிச்சல் குறைந்ததால் கண்களில் கண்ணீர் வழிய, அதை தாங்கிக்கொள்ள முடியாதவனோ, “பாட்டிமா ப்ளீஸ் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க. இன்னும் ஒரு ஒருமணி நேரத்துக்கு மட்டும் இவ கூட இருக்க முடியுமா? எனக்கு தீர்க்க வேண்டிய கணக்கு ஒண்ணு இருக்கு. அதுக்கு விடை எழுதிட்டு வந்துறேன்” என்று கூற அவரோ, “என்ன ராசா உதவின்னு பெரிய வார்த்தை பேசற, என்ற பேத்திய நான் பாத்துக்கிடறேன், தொலைவானாலும் பரவாயில்லை மிச்சம் வைக்காம முடிச்சுட்டே வா” என்று அவன் கூறிய விதத்திலே பதிலளிக்க, வேதா கண்களில் பரிதவிப்புடன் அவனை பார்க்க, அவளை பார்க்க முடியாமல் வேகமாக வெளியில் சென்றுவிட்டான்.
தேவ், அரவிந்த் இருவரும் அவன் பின்னே வந்தவர்கள், “ஹேய் என்னடா எங்க போற” என்று கேட்க, அவனோ, “வாங்கனதுக்கு பதிலடி குடுக்க வேணாம். வாங்க போகலாம்” என்று கூற, அரவிந்த், “செழியா வேணாமே” என்று கூற, செழியனின் தீப்பார்வையில் காரில் ஏறி விட, தேவுடன் பைக்கில் ஏறி வண்டியை எடுத்தவன் நேராக சென்றதென்னவோ அவர்களின் வீட்டுக்கு தான்…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இவ்ளோ ஹார்சா நடந்திருக்க வேணாம் செழியன் அம்மா … செழியன் என்ன பண்ண போறானோ … அரவிந்த் சூப்பர் பா நீ … தேவ் சூப்பர் ஃப்ரெண்ட் … எல்லாருமே நல்லவங்களா இருக்காங்க … இந்த அம்மா தான் வில்லி மாதிரி ஆட்டம் போடுது … பாவம் வேதா … செல்லமா வளர்ந்த பொண்ணு …
சூழ்நிலைகளின் போது பேசும் பேச்சுகளிலும், செயல்களிலும் தான் ஒருவரது தரம் வெளிப்படும்.
மீனாட்சி அம்மாவின் தரமும், வேதாவின் தரமும் தெரிந்துவிட்டது.
வீழ்ந்த இடத்தில் தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வீராப்பு வேதாவிற்கு.
அனைத்து உண்மைகளையும் கூறியும் இவ்வாறு நடந்து கொள்ள என்ன தேவை உள்ளது.
வேதா, செழியனுக்கு நல்ல அக்கம் பக்கத்தினர் அமைந்துள்ளனர். இன்னல்களில் துணை நிற்கும் அண்ணன் மற்றும் நல்ல நண்பன் கிடைத்துள்ளான் செழியனுக்கு.