Loading

அத்தியாயம் 33

     விருந்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி வீட்டில் இருந்து அழைத்து வந்து, கொலைப்பட்டினியாக மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மனம் வராமல் போகும் வழியில் இருக்கும் நல்ல பெரிய ஹோட்டலுக்கு மனைவியை அழைத்து வந்தான் தர்மா.

     அந்த உணவகத்தின் உள் அலங்காரங்களை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டே கணவனோடு நடந்த தேவகியின் மனதில் தர்மா இன்னும் மேலான இடத்தைப் பிடித்தான் அன்று.

     பார்த்துப் பார்த்து மனைவிக்குப் பிடித்த உணவுகளாகக் கேட்டுத் தேர்ந்தெடுத்தவன், அவற்றைச் சாப்பிடும் வரிசை, வழிமுறை அனைத்தையும் அன்பாகவே அவளுக்குக் கற்றக்கொடுத்தான்.

     ராஜாவின் மனைவியானால் அவனுக்கு ஏற்ற வேஷம் போட்டுத்தான் ஆகவேண்டும் என்பதால் தேவகியும் கர்ம சிரத்தையாக அவன் சொன்னதை எல்லாம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

     சாப்பிட்டு முடித்த நேரத்தில், “என்னங்க இந்த சாப்பாடு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு அதனால்.” என்று இழுத்தாள்.

     “இன்னும் கொஞ்சம் வேணுமா?” சிரிப்புடன் கேட்டான் தர்மா.

     “இல்லங்க அக்காங்களுக்கு கொஞ்சம் வாங்கிட்டு போகலாமா?” தயக்கத்துடன் கேட்டாள்.

     “நீங்க கேட்கிறது எனக்குப் புரியுது தேவகி. ஆனா இந்நேரத்துக்கு வீட்டில் அவங்க சாப்பிட்டு இருந்தா என்ன பண்றது. அதோட இது எல்லாமே சைடு அயிட்டம் தான். மெயின் அயிட்டம் இல்லாம இதை மட்டும் சாப்பிடக் கொடுத்தா நல்லா இருக்காது. ஒன்னு பண்ணலாம் இன்னொரு நாள் உங்க அக்காங்க மூணு பேரையும் நாம இங்க கூட்டிக்கிட்டு வரலாம் சரிதானே.” என்க, சந்தோஷமாகத் தலையை ஆட்டினாள் தேவகி.

     வீடு வந்ததும் காரை விட்டு இறங்கிய ருக்கு யாரையும் கவனிக்காமல், கீ கொடுத்த பொம்மை போல் நேராகத் தன்னறை நோக்கிச் சென்றாள்.

     “என்னாச்சு இவளுக்கு” வரவேற்பறையில் அமர்ந்து டீவி பார்ப்பதாக பொழுதைப் போக்கிக்கொண்டிருந்த லீலா, தங்கைக்குப் பின்னால் கோபமான முகத்துடன் வந்த தெய்வாவைக் கவனித்தாள்.

     சட்டென்று மனம் கலங்கினாலும், கணவன் மனைவி உறவு என்று வந்தால் சண்டை, சச்சரவுகள் வருவது சகஜம் தான். எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்க கூடாது. எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, நேரமானதால் செல்வாவிற்குப் பாலை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

     “ருக்கு எனக்கு மிளகுத்தூளும், மஞ்சளும் போட்டு சூடா பால் எடுத்துட்டு வரீங்களா?” தெய்வா எதுவுமே நடக்காதவன் போல கேட்க, பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிச்சனை நோக்கிச் சென்றாள் ருக்கு.

     ஊர்மி படுப்பதற்காக மெத்தைஉறை, தலையணை உறையை புதிதாக மாற்றிக் கொண்டிருக்க, அதே அறைக்குள் இருந்து அவளையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த நாகாவிற்கு உள்ளுக்குள் பலப்பல யோசனைகள்.

     “கல்யாண வாழ்க்கைக்கு வாய்ப்பு கொடுக்கிறதைப் பத்தி மேடம் ஏதோ நிறைய பேசுனீங்களே. அது இந்த வீட்டில் வாழ்வதற்கு மட்டும் தானா இல்லை புருஷனோட சேர்ந்து வாழ்வதற்குமா?” பொடி வைத்துப் பேசினான்.

     “நான் சொன்னதுக்கு அர்த்தம் புரியலையே, நீயெல்லாம் எப்படியா லாயரான.” எதிர்கேள்வி கேட்டாள் ஊர்மி. நிஜத்தில் அவன் கேட்பது அவளுக்குத் தான் புரியவில்லை அவ்விடத்தில்.

     உடலை வளைத்து சோம்பல் முறித்தவன், தொடர்ச்சியாக கைகளிலும் நெட்டி முறித்தபடி, “என்கூட வாழ முடிவெடுத்திருக்கன்னா எல்லாத்துக்கும் ப்ரிப்பேர் ஆகிட்ட அப்படித்தானே.” என்றான் இன்னும் கொஞ்சம் தெளிவை தன் வார்த்தைகளில் கோர்த்து.

     செய்து கொண்டிருந்த வேலையை ஒருநொடி நிறுத்தியவள், “எலி எதுக்கு துணியில்லாம சுத்துது.” என்றாள் கேலியாக.

     “நான் ஒன்னு சொல்லுவேன். ஆனா நீ அதுக்கும் என்னைத் தான் திட்டுவ.” என்றவன் அவள் திரும்பிப் பார்க்கவும், “உன் கேள்வியில் தான், நீ என்கிட்ட எதிர்பார்க்கிற பதில் இருக்கு.” என்க, இப்போது தான் கணவன் எதற்கு அடிபோடுகிறான் என்பதையே உணர்ந்தவளாக நெருப்பாக முறைத்தாள் ஊர்மி.

     “நான் தான் சொன்னேனே, நான் சொன்னா நீ முறைப்பன்னு. என் வாய் அடிக்கடி என் கண்ட்ரோல் மிஸ் ஆகி கண்டதையும் பேசும் தான். ஆனா இப்ப நான் பேசினதில் எந்தத் தப்பும் இருப்பதா எனக்குத் தோணல.” அழுத்தமாகச் சொன்னான்.

     “இங்க பார் நீ என் புருஷன், உன்னோட தான் வாழனும் னு  முடிவு பண்ணி தான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன். ஆனா இப்ப எனக்கு இதில் விருப்பம் இல்ல.

     ஒருவேளை நேத்து இராத்திரி நீ முயற்சி பண்ணி இருந்தா எதுவும் நடந்திருக்குமோ என்னவோ. ஆனா இப்ப நான் இருக்கும் மனநிலைக்கு கண்டிப்பா முடியாது. நான் எதிர்பார்க்கிற மாதிரி நல்ல புருஷனா, அதை விட முக்கியம் நல்ல மனுஷனா என்னைக்கு நீ நடந்துக்கிறியோ அன்னைக்கு நானே உன்னைத் தேடி வருவேன்.

     இல்லை என் சம்மதம் எல்லாம் பொருட்டே இல்ல. உனக்கு உன் ஆசை தான் முக்கியம் னு நினைச்சா, உன் இஷ்டம். நீ சொல்ற மாதிரி கேட்டு நான் நடந்துக்கிறேன். என்னை மாதிரி பணம், அழகு, செல்வாக்குன்னு எதுவும் இல்லாத ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு குறைந்தபட்சம் இதையாவது அனுபவிச்சுக்கோ.” என்றுவிட்டு மெத்தையில் அமர்ந்தாள்.

     மெதுவாக அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தவன் அவளை நோக்கி நகர்ந்து வர, “வேண்டாம் நாகா, இத்தனைக்குப் பிறகும் எனக்கு உன் மேல இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை இருக்கு. இப்ப என் உணர்வுகளை மதிக்காம நீ உன் விருப்பத்தை நிறைவேத்திக்கிட்டா காலத்துக்கும் நான் உன்னை மதிக்க மாட்டேன். இது ஒரு அற்ப சந்தோஷம். இதுக்கு ஆசைப்பட்டு ஆயுள் சந்தோஷத்தை இழந்திடாத.

     நான் நினைக்கிற மாதிரி நீ மாறி வரும் போது நானா சந்தோஷமா உன்னைத் தேடி வருவேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ ப்ளீஸ்.” மனதிற்குள் சொன்னால் அது கணவனின் காதுகளுக்குச் சென்றுவிடும் என்று தன்னோடு நினைத்துக்கொண்டாள் போலும்.

     மெதுவாக வந்து அவளுக்குப் பின்னால் மெத்தையில் அமர்ந்தவன் அவள் தோள்களில் கை வைக்க, கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்கிக்கொண்டு, அமைதியாய் அவன் செயல்களுக்குக் கட்டுப்படத் தீர்மானித்தாள்.

     அவளைத் தன் அருகே படுக்க வைத்தவன் அவளுக்கு மிகவும் நெருக்கமாக படுத்துக்கொண்டு, “நான் என்ன சொன்னாலும் கேட்பியா?” என்றான்.

     வாய் திறந்த பதில் சொல்ல மனம் வராமல் தலையை ஆட்டினாள் ஊர்மி. “அப்ப நீ சொன்ன அந்த கொஞ்ச நாளுக்கு என் பக்கத்தில் படுக்காத. என்னை மீறி ஏதாவது நடந்துச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன். அப்புறம் நீ என்னைக் குற்றம் சொல்லக் கூடாது.” என்றான்.

     கண்ணீரும் சிரிப்பும் சேர்ந்துகொள்ள, “போடா லூசு” என்று திட்டிவிட்டாள். ஏனோ அந்த “டா” விற்கு அவனுக்கும் கோவம் வரவில்லை மாறாக புன்னகை வந்தது.

     “ஏன் ருக்கு இவ்வளவு நேரம்.” தெய்வா கேட்க, “பால் காலியாகிடுச்சு, மறுபடி காய்ச்சி எடுத்துட்டு வர லேட்டாகிடுச்சு.” என்றாள் தரையைப் பார்த்துக்கொண்டு.

     “என் முகத்தைப் பார்த்துப் பேசலாமே.” சற்றே தவிப்போடு கேட்டான். தான் செய்தது அதிகப்படி, அதனால் மனைவியின் மனது பலத்த அடிவாங்கி இருக்கும் என்று புரிந்தது. ஆனால் செய்துவிட்ட காரியத்தை எப்படி திருத்தி எழுத, அதைக் கடக்கத்தான் முடியும் என்று நினைத்தபடி மனைவியைச் சமாதானப்படுத்த பார்த்தான்.

     “எனக்கு ஒருமாதிரி இருக்கு, நான் தூங்கட்டுமா. தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும் னு அக்கா” என்றுவிட்டு மிச்ச வார்த்தையை முழுங்கியவள், “நான் தூங்குறேன் எது தேவையா இருந்தாலும் என்னை எழுப்புங்க.” என்றுவிட்டு தன் இடத்தில் போய் படுத்துக்கொண்டாள்.

     வீட்டில் இருந்து கிளம்பும் போது ஜொலித்த அவள் முகம் இப்போது வாடிக்கிடப்பதை காணப் பிடிக்கவில்லை தெய்வாவிற்கு. ஆனாலும் மன்னிப்புக் கேட்கத் தோன்றவில்லை. மனைவியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு கௌரவக் குறைச்சலா என்றால் கட்டாயம் இல்லை. இப்போது விட்டுக்கொடுத்தால் இனியும் வெளியே செல்லும் போது அக்கா, தங்கைகள் என்று தன்னைக் கடுப்படிப்பாள். இன்று கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் பல காலத்திற்கு அதன் வேலையைச் சிறப்பாகச் செய்யும். சில காரியங்களுக்கு இத்தகைய மருந்து தேவை தான் என நினைத்தே அமைதி காத்தான்.

     அடுத்த நாள் காலையில் ஊர்மி எழுந்திரிக்க நினைக்க அவளால் அது முடியவே இல்லை. உடலின் மீது ஏதோ பெரிய பாராங்கல் இருப்பது போல் கனத்தது. என்னவென்று தலையை நிமிர்த்திப் பார்த்தவள் கடுப்பானாள்.

     நாகா தன் ஒரு கை, ஒரு கால் இவள் மீது போட்டு தன் உடலின் பாரம் அனைத்தும் இவள் மீது போட்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தான்.

     “அடப்பாவி நேத்து வரைக்கும் இங்க நீ மட்டும் தான் இருந்த. அதனால உன் இஷ்டப்படி படுத்த சரி. ஆனா இப்ப உன் பக்கத்தில் முழுசா ஒரு ஆள் படுத்து இருக்கிறது கூடத் தெரியாம இப்படியா?” என்று அவனைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்து வந்தாள்.

     குளித்து முடித்து வெளியே வந்து, காலை உணவைத் தயாரித்து இந்நேரம் கணவன் எழுந்திருப்பான் என அவளாகக் கணித்து நாகாவிற்கு டீ எடுத்துக்கொண்டு ஊர்மி அறைக்குத் திரும்பி வர அவன் இன்னமும் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

     “வீடான வீட்டில் ஒரு ஆம்பிளை எட்டு மணி வரைக்கும் தூங்கினா என்னத்துக்கு ஆகுறது எழுந்திரிங்க.” சட்டம் பேசினாள் ஊர்மி.

     “இதுக்குத் தான் உனக்கும், எனக்கும் செட்டாகாதுன்னு அப்பாகிட்ட சொன்னேன். அந்த ஆளு என் பேச்சைக் கேட்கவே மாட்டேன்னு உன்னை என் தலையில் கட்டி வைச்சிட்டாரு.

     நான் சீக்கிரமா எழுந்திரிச்சு போய் பாற்கடலையா கடையப் போறேன். போ போய் வேற ஏதாவது வேலை இருந்தா பாரு, என்னை என் இஷ்டப்படி தூங்கவிடு.” என்றுவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டான் நாகா. ஒரேயடியாக அவனைப் போட்டு படுத்தி இருக்கும் கொஞ்சம் சுமூக நிலையையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்த ஊர்மி திரும்பி வெளியே வந்துவிட்டாள்.

     “லீலா எமெர்ஜென்சி கேஸ் வந்திருக்காம். என்னை உடனடியா ஹாஸ்பிடல் வரச் சொல்லி இருக்காங்க. இன்னைக்கு உங்களை வெளியே கூட்டிட்டுப் போறதா சொல்லி இருந்தேன். ஆனா முடியாமப் போயிடுச்சு, ஐம் ரியலி ஸ்சாரி லீலா.” அரக்கப் பறக்க கிளம்பியபடியே சொன்னான் செல்வா.

     “இது சின்ன விஷயம் இதுக்கு போய் ஸ்சாரி அது இதுன்னுக்கிட்டு. நீங்க என்னை வெளியே கூட்டிட்டு போயே ஆகனும் னு நான் கேட்கலையே. உங்க தம்பிங்க என் தங்கச்சிங்களை வெளியே கூட்டிட்டு போறதைப் பார்த்து எனக்குள்ளும் அப்படிப்பட்ட ஆசை இருக்குமோன்னு நினைச்சு நீங்களா தான் கேட்டீங்க, அது உங்களோட பெரிய மனசு.” என்றாள்.

     “என்னது எனக்குப் பெரிய மனசா. வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வேலை இருக்குன்னு சொல்லி தனியாக் கிளம்புற புருஷனைப் பார்த்து தமிழ்நாட்டில் இப்படி சொல்றது நீங்க ஒருத்தங்களா தான் இருப்பீங்க.” லீலாவின் புரிந்துகொள்ளும் மனதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தவாறு, வெளியே சிரித்து வைத்தான் செல்வா.

     “உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லவா, எனக்கு இன்னைக்கு வெளியே போகலாம் னு நீங்க கூப்பிட்டதில் அவ்வளவா உடன்பாடு இல்ல.” என்க, “என்ன லீலா சொல்றீங்க” எனப் புருவம் உயர்த்தினான் அவள் கணவன்.

     “டாக்டர் தொழிலை ரொம்பவே மதிக்கிறவ நான். தன்னோட சொந்த, விருப்பு வெறுப்புகளை தள்ளிவைச்சிட்டு அடுத்தவங்களோட உயிரைக் காப்பாத்துற நீங்க, அந்த கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட இறக்கை வைக்காத தேவதைங்க. அதிலும் நீங்க எனக்குக் கிடைச்ச ஆண் தேவதை.

     நீங்க வேலை வேலைன்னு உங்களையே சரியாக் கவனிச்சிக்க மாட்டீங்கன்னு மாமா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. நம்ம கல்யாணத்துக்குன்னு நீங்க எடுத்த லீவ் முழுக்க முழுக்க உங்களோட ஓய்வுக்காக தான் இருக்கணும் னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.” உறுதியாய் சொன்னாள் லீலா.

     “நீங்க இவ்வளவு லென்த்தியா பேசுறது வித்தியாசமா இருக்கு, ஆனா நல்லா இருக்கு. சரி லீலா நான் கிளம்புறேன். நேத்து சொன்னது ஞாபகம் இருக்கட்டும். நம்ம ரூமிலே இருங்க.” சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் செல்ல, நல்ல மனைவியாய் அவன் கிளம்பும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

     “அக்கா ருக்குக்கா ஏன் இன்னும் கீழ வரல.” தேவகி தான் கவனித்துக் கேட்டாள்.

     “நானும் அதைப் பத்தி தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். அவளோட புருஷன் அப்பவே எழுந்து ஜாகிங் போயிட்டாரு. இவ ஏன் இன்னும் கீழ வரல. ஒருவேளை இன்னமும் தூங்குறாளா? ஆனா அவ சாதாரணமா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே என்னாச்சு.” புதுமணத் தம்பதி என்பதால் அறையை நோக்கிச் செல்லவும் தயக்கமாக இருந்தது அவர்களுக்கு.

     “அக்கா ஒருவேளை” ஊர்மி ஏதோ கேட்க வர, அது புரிந்தவளாய், “இல்ல ஊர்மி அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கு.” பட்டென்று சொன்னாள் லீலா. இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க அவர்களைக் கடந்து சென்றான் தெய்வா.

     “மாமா ஒரு நிமிஷம்.” ஊர்மி அழைக்க, “ஹே என்னை மாமான்னு கூப்பிடாதீங்க.” பட்டென்று சொன்னான்.

     “அக்கா புருஷனை மாமான்னு கூப்பிடாம பின்ன என்னன்னு கூப்பிடுறதாம்.” வெடுக்கென்று திருப்பிக்கேட்டாள் ஊர்மி.

     “நமக்குள்ள ஒன்னும் பெரிய வயசு வித்தியாசம் ஒன்னும் இல்ல. அதனால என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க.” என்றான் அவன்.

     “வயசு வித்தியாசம் அதிகம் இல்லாம போனாக் கூட உறவுன்னு ஒன்னு இருக்கு இல்லையா. அதுக்கு மரியாதை கொடுத்து தான் ஆகனும். சரி அதை விடுங்க, ருக்கு ஏன் இன்னும் கீழ வரல, இன்னுமா தூங்குறா?” லீலா கேட்க, என் பொண்டாட்டி எவ்வளவு நேரம்  தூங்கினால் தான் இவங்களுக்கு என்ன என மனதோடு நினைத்துக்கொண்டு,

     “நேத்து ரொம்ப அலைச்சல், அசந்து தூங்குறாங்க. அதனால் தான் நானும் எழுப்பல. இந்நேரத்துக்கு எழுந்து, குளிச்சு
இருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க.” என்று இவன் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அவளும் வந்து சேர்ந்தாள். ஆனால் அவள் வந்த தோரணை அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. என்ன தோரணை … சரியா தூங்கலையா … நாகா நீ தான் பா நல்லா என்ஜாய் பண்ற … வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு நாகா ஊர்மி தான் நெருக்கமா இருக்காங்க … டாக்டர் சார் எது எப்படி போனாலும் அக்கா தங்கைங்க உனக்கு ஒண்ணு சேர்ந்துற கூடாது … அதான … தெய்வா நீ கத்திகிட்டே இரு …