Loading

அத்தியாயம் 32

     “லவ்வா, நான் தான் நமக்குள்ள இதெல்லாம் செட் ஆகாதுன்னு பல மாசத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட தெளிவாச் சொல்லிட்டேனே. நீங்க சரின்னு சொன்னதால் தான் நான் உங்களோட பழையபடி நட்பாப் பழக ஆரம்பிச்சேன்.

     இன்னும் அந்த நினைப்பு உங்களுக்குள்ள இருக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் உங்ககிட்ட ஒருவார்த்தை கூடப் பேசி கூட இருக்க மாட்டேன்.” துளிர்விட்ட சினத்தோடு சொன்னான் தர்மா.

     “என்னை ஏன் தர்மா உங்களுக்குப் பிடிக்கல. என்கிட்ட இல்லாதது அப்படி என்ன இவகிட்ட இருக்குன்னு இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.”

     “இங்க பாருங்க கயல், இப்பவும் எனக்கு உங்க மேல் கொஞ்சம் மரியாதை மிச்சம் இருக்கு. என் மனைவியை மரியாதைக் குறைவாப் பேசி, உங்களுக்கான மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க.”

     “இனிமேல் நீங்க என் மேல மரியாதை வைச்சா எனக்கென்ன, வைக்கலன்னா எனக்கென்ன. உங்களால நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா? அப்படி என்னை வேண்டாம் னு சொல்லிட்டு எந்த உலக அழகியைக் கல்யாணம் பண்ணி இருக்கீங்கன்னு பார்க்கத் தான் இந்த விருந்து ஏற்பாடு எல்லாம்.” என்க, கடும் கோபம் வந்தது தர்மனுக்கு.

     “நான் தெளிவா மறுத்ததுக்கு அப்புறமும் நீங்க உங்க மனசை மாத்திக்காதது பைத்தியக்காரத்தனம். அதுக்கான பழியை என்மேல் சுமத்தாதீங்க. யாரும் யாரையும் காதலிக்கலாம். அதே சமயம் எதிராளியும் திரும்பக் காதலித்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. அதைப் புரிஞ்சுக்கோங்க.” இத்தோடு கயலின் சங்காத்தமே வேண்டாம் என மனதோடு முடிவெடுத்தவன் இப்போது அவள் தந்தை பக்கம் திரும்பினான்.

     “உங்களை நான் ரொம்ப உயர்வா நினைச்சிருந்தேன் சார். ஆனா சாப்பிட வரச்சொல்லி அவமானப்படுத்தும் அளவுக்கு பெரிய மனிதரா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கல.” உண்மையான மனவருத்தத்துடன் சொன்னான்.

     “நான் உன்னை எங்க அவமானப்படுத்தினேன் தர்மா.” ஒன்றும் அறியாதவர் போல் அவர் கேட்க, “என்னை அவமானப்படுத்தினா என்ன? என் பொண்டாட்டியை அவமானப்படுத்தினா என்ன. எல்லாம் ஒன்னு தான்.” இதைச் சொல்லும் போது தர்மாவின் குரலில் அடக்கப்பட்ட கோபம் இருப்பதை அவரோடு சேர்த்து அவர் மகளாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

     “சரி தர்மா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அதனால இனி என்ன பேசியும் பிரயோஜனம் இல்ல. என் பொண்ணோட கேள்வி தான் எனக்குள்ளேயும் இருக்கு. எதுக்காக என்னோட பொண்ணை நீ வேண்டாம் னு சொன்ன அதுக்கான காரணத்தைச் சொல்லிட்டு நீ கிளம்பு.” என்றார்.

     முதல்முறை மனைவியை இப்படி ஒரு இடத்திற்கு அழைத்து வந்துவிட்டோமே என்று மனது வருந்தினான் தர்மன். “சார் உங்க பொண்ணுக்குச் சொன்னது தான் உங்களுக்கும். ஒருத்தர் நம்மைக் காதலிக்கிறாங்க என்பதற்காக நாமும் திரும்பிக் காதலிக்கணும் என்கிற அவசியம் இல்லை.

     நான் உங்க பொண்ணுகிட்ட தனிப்பட்ட முறையில் எந்த வித கூடுதல் நெருக்கமும் காட்டல. மத்தவங்களை விட அவங்க எனக்கு அதிகம் வேண்டப்பட்டவங்க என்கிற மாதிரி சின்னக் குறிப்பு கூட காட்டல. அதனால் அவங்களா வளர்த்துக்கிட்ட நினைப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது.

     இதுநாள் வரை நமக்குள் இருந்த ஒரு நல்ல உறவு இதுக்கு மேல நிலைக்க வாய்ப்பில்லை. இதுவே நமக்குள்ள நடக்கிற கடைசிப் பேச்சுவார்த்தையா இருக்கட்டும், நான் கிளம்புறேன்.” தேவகியை இழுத்துக்கொண்டு சென்றவன் கதவை நெருங்கும் வேளையில் நின்றான்.

     “ஒரு நல்ல தகப்பனா உங்க பொண்ணுக்கு நடப்பை எடுத்துச் சொல்லி நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கொடுங்க. ஒரே பொண்ணுன்னு அவங்க இஷ்டம் போல விடாம அவங்களோட கட்டுப்பாட்டை கொஞ்ச நாளுக்கு உங்க கையில் கொண்டு வந்து, அவங்க வாழ்க்கையை காப்பாத்திக்கோங்க. உங்க மரியாதையும் அதில் தான் இருக்கு.

     நாளைக்கு நான் என்னோட ரெசிக்னேஷன் லெட்டரை எழுதி கொடுத்துட்டு முறைப்படி ரிலீவ் ஆகிக்கிறேன். அதுக்கு அப்புறம் எனக்கும் உங்களுக்கும் கூட எந்த சம்பந்தமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை நான் வரேன்.” என்றவன் திரும்பியும் பாராமல் மனைவியுடன் வீடு நோக்கிப் பயணமானான்.

     அவன் மனது முழுவதும் தேவகி இதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாதே என்னும் பயம் தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவளோ மிகவும் சாதாரணமாக இருந்தாள். அவள் மனதைத் தெரிந்து கொள்வதற்காக மெல்ல பேச்சுக்கொடுத்தான் தர்மா.

     “தேவகி நடந்த எல்லாத்துக்கும் நான் ரொம்ப வருத்தப்படுறேன். நீங்க என்னை நம்பி தான் என்கூட வந்தீங்க. ஆனா அவங்க இப்படியெல்லாம் நடந்துப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் அனுமதிச்சிருக்க மாட்டேன்.” என வருத்தம் தெரிவித்தான்.

     “விடுங்க இதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டு. அந்தப் பொண்ணுக்கும், அவ அப்பாவுக்கும் நீங்க அவளை வேண்டாம் னு சொல்லிட்டு என்னைக் கட்டிக்கிட்டீங்கன்னு காண்டு, அதை இப்படிக் காட்டிட்டாங்க.

     எனக்கு கோவமோ, வருத்தமோ இல்லைங்க. ஒருத்தரோட பேச்சை நாம எந்தளவு மனசில் ஏத்திக்கிறோம் என்பதில் தான் நம் மனவருத்தத்தோட அளவு தீர்மானிக்கப்படும் னு லீலாக்கா அடிக்கடி சொல்லுவாங்க.

     இவங்க யார் எனக்கு, என்னைப் பத்தி ஒன்னுமே தெரியாத அவங்க சொன்னதைக் கேட்டு நான் ஏன் வருத்தப்படணும், அவமானமா நினைக்கணும். அவங்க சொல்லிட்டாங்க என்பதால் நான் உங்களுக்கு இணையில்லன்னு ஆகிடுமா என்ன.

     நீங்களோ, நானோ நினைக்கணும். நீங்க அப்படி நினைக்கிறீங்களா என்ன?” என்க, பக்கென்று சிரித்து வைத்தவனுக்கு முதல் நாள் தேவகி பேசியவை நினைவு வந்தது.

     அது புரிந்தது போல், “அதெல்லாம் அப்ப. இப்ப என்னை விட உங்களுக்கு பெட்டர் ஜோடி யாருமே கிடையாதுங்கிறது தான் என்னோட நினைப்பு.” என்ற மனைவியை அமர்த்தலாகப் பார்த்தான் தர்மன்.

     சூழ்நிலை மாறிய பின்னரும் அவன் முகம் தெளிவடையாததைக் கண்டு, “இனிமேல் அவங்களைப் பார்க்கவே போறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. இதுக்கு அப்புறமும் அவங்க பேசியதையே நினைச்சுக்கிட்டு இருப்பதால் யாருக்கு என்ன பிரயோஜனம்.” என்க, ஆமென்று தலையாட்டி ஏற்றுக்கொண்டான்.

     கணவன் தொடர்ந்து அமைதியாக இருப்பது பிடிக்காமல், “எனக்காக நீங்க பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அடுத்தவங்க பேசினதை தலைக்கு ஏத்துக்காம இருக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இன்னொரு முறை அவங்க அப்படிப் பேசாம இருக்க நடவடிக்கை எடுப்பதும் முக்கியம். அதை ரொம்ப சரியா பண்ணீங்க.

     அப்பப்பா எனக்கு உடம்பே சிலிர்த்துப் போச்சு. சில நாள்களுக்கு முன்னாடி அறிமுகமான எனக்காக, இத்தனை நாளா பழக்கம் இருந்தவங்களை தூக்கிப் போட்டீங்க பார்த்தீங்களா, அதெல்லாம் வேற லெவல் பீல்ங்க.” சிலாகித்துச் சொன்னாள்.

     “எத்தனை நாளுக்கு முன்னாடி அறிமுகமானா என்னங்க, நாள் கணக்கை விட இரண்டு பேருக்கும் நடுவில் இருக்கிற உறவுக்கு தான் மதிப்பு. அப்படி இருக்கும் போது நீங்க எங்க, அவங்க எங்க.” நிஜத்தைத் தான் சொன்னான்.

     “ஒரு மனைவியா உங்களை நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. இப்படி ஒரு கணவனை எனக்கு அமைச்சுக் கொடுத்ததுக்காக என் அக்காவுக்கு நான் காலத்துக்கும் கடமைப்பட்டு இருக்கேன்.” என்றபடி அவன் புஜத்தில் சாய்ந்தாள் தேவகி.

     “என்னங்க இது போங்காட்டமா இருக்கு. உங்களைக் கடைசி வரைக்கும் வைச்சுக் காப்பாத்தப்போறது நான், கிரெடிட் உங்க அக்காவுக்கா.” தர்மா செல்லமாகக் கோபிக்க, சிரிப்பு தாண்வமாடியது அந்த வாகனத்திற்குள்.

     “ருக்கு நான் உங்களைத் தான் கூப்பிடுறேன், கூப்பிட்டா என்னன்னு கேட்க மாட்டீங்களா?” அவள் மனமாற்றத்திற்காக கோவிலுக்கு அழைத்து வந்திருக்க, வந்த இடத்திலும் மாலைத் தாமரையாய் மடங்கி இருந்த மனைவியின் மதிமுகத்தைப் பார்க்க பொறுக்காமல் தானே பேச்சைத் துவங்கினான் தெய்வா.

     “நீங்க கேட்டீங்களா, படம் பார்க்கணும் என்னைப் பார்க்க விடுங்கன்னு சொன்னப்ப கேட்டீங்களா? இல்ல தானே, நான் மட்டும் எதுக்காக நீங்க சொல்றதைக் கேட்கணும். நான் கேட்க மாட்டேன், என் காது கேட்காது.” என்று காதைப் பொத்திக் கொண்டு விலகி அமர்ந்தவளைக் கண்டவனுக்குக் கோவம் தான் வந்தது.

     “ருக்கு என்னை ரொம்பக் கோபப்படுத்துறீங்க, இதுக்கு மேல நாம இங்க இருக்கிறது நல்லது இல்ல வீட்டுக்கு போகலாம். வண்டியில் ஏறுங்க.” என்றான்.

     “படத்துக்குப் போயிட்டு சாப்பிட்டு தான் வருவோம் னு அக்காகிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன். இப்ப வீட்டில் போய் சாப்பிட்டா ஏன் எதுக்குன்னு கேட்பாங்க. நமக்குள்ள சண்டைன்னு தெரிய வந்தா அக்கா ரொம்ப வருத்தப்படுவாங்க.” அமைதியாய் ருக்கு சொல்ல,

     “கடவுளே, எல்லாத்துக்கும் அக்கா தானா. இப்ப என்ன உங்களுக்கு ஹோட்டலில் சாப்பிட்டு வீட்டுக்கு போகணும். அவ்வளவு தானே வாங்க போகலாம்.” என்றுவிட்டுத் தனக்குப் பழக்கமான நல்ல உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்.

     ஆர்டர் செய்துவிட்டு இருவரும் அமைதியாய் இருக்க தெய்வாவின் மனம் மட்டும் ஆர்பரித்துக் கொண்டிருந்தது. அவனுடைய வாழ்நாள் கனவு, எளிமையான அழகான குடும்பப்பெண்ணாய் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். தன் மனைவிக்கு தான் மட்டுமே உலகமாக இருக்க வேண்டும் என்பது. அவன் நினைத்தது போலவே ருக்கு அவனுக்குக் கிடைத்தாள். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாய் அவளுடைய உலகம் மிகவும் பெரிதாய் இருந்தது.

     அக்கா, தங்கைகள், அவர்களுடைய கணவர்மார்கள், சினிமா ஹீரோ, சீரியல் ஹீரோ என்று பலருக்கு இடையில்  ஒரு மூலையில் தான் தனக்கு அவள் உலகத்தில் இடம் இருக்கிறது என்று தவித்தான்.

     அவள் மனதின் இங்கு இடுக்கு கூட யாருக்கும் இடம் கொடாமல் தான் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்ற பேராசைக் கொண்ட பேராசைக்காரன் அவன்.

     “என்னாச்சுங்க ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க.” தவிப்புக்கு ஆளாக்கிய அவளே காரணம் கேட்டால் அவன் என்னவென்று பதில்  சொல்வான்.

     “ஏன் ருக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு உண்மையா பதில் சொல்லுங்க, உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” அழுத்தமாகக் கேட்டான்.

     “என்னங்க பைத்தியக் காரத்தனமான கேள்வியா இருக்கு. எந்தப் பொண்டாட்டிக்காவது அவ புருஷனைப் பிடிக்காம இருக்குமா?” என்றவளுக்கு முறைப்பை பதிலாய்த் தந்தவன், “நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல.” என்றான்.

     “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.” சந்தோஷமாய் முழு மனதோடு சொன்னாள்.

     “உண்மையிலே பிடிக்குமா, இல்லை இப்படிச் சொன்னா தான் புருஷனுக்குப் பிடிக்கும். அதனால இப்படிச் சொல்லுன்னு உங்க அக்கா சொல்லிக் கொடுத்தாங்களா?” நக்கலாகக் கேட்டான்.

     “என் அக்காவை இதில் ஏன் இழுக்குறீங்க, உண்மையைச் சொல்லப் போனா அன்னைக்கு உங்களை மாப்பிள்ளை பார்க்க வந்தப்ப அத்தனை பேர் பார்க்க நீங்க எனக்கு முத்தம் கொடுத்த பிறகு, உங்களுக்கும் எனக்குமான கல்யாணத்தை முடிவு பண்றதுக்கு அக்காவுக்கு  விருப்பமே இல்ல.

     ரொம்பத் தயங்கினாங்க. நான் தான் எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொல்லி அக்காவை சம்மதிக்க வைச்சேன்.” என்றாள்.

     அவள் ஏதோ தனக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் வேகத்தில் சொல்ல, அவனோ தனக்கும் ருக்குவுக்குமான திருமணத்தை லீலா தடுத்து நிறுத்த நினைத்திருக்கிறாள் என்று சரியாகத் தவறாக புரிந்துகொண்டான்.

     இராதா இல்லத்தில், “சாப்பிட வரீங்களா இல்லை சாதாத்துக்கு தண்ணீர் ஊத்திடவா?” அதிகாரமாகக் கேட்டாள் ஊர்மி. பணிந்து போகக் கூடாது என்று தீர்க்கமான முடிவுக்கு வந்த பின்னால் இப்படித்தான் பேச்சு வந்தது அவளுக்கு.

     “என்னது சாதமா, இராத்திரியில் யாராவது சாதம் சாப்பிடுவாங்களா? எனக்கு டிபன் தான் வேணும்.” என்றான் நாகா.

     “சரி என்ன பண்ணட்டும் இட்லி, தோசை, உப்மா” ஊர்மி அடுக்க, “என்னது உப்மாவா அது சைடு டிஷ் டி. அதை எப்ப மெயின் டிஷ்ஷில் சேர்த்தீங்க. உங்க வீட்டில் அந்தப் பழக்கம் இருக்கலாம். இங்க அப்படி இல்ல போய் ஒரு நெய்தோசை, ஒரு ஆனியன் தோசை, ஒரு பொடி தோசை போட்டு ஹாட்பேக்கில் வைச்சிட்டு ஏதாவது நல்லதா இரண்டு சட்னி வை. நான் இன்னும் அரை மணி நேரத்துல வரேன்.” ஹோட்டலில் ஆர்டர் கொடுப்பது போல் சொல்லிவிட அவளும் மறுப்பு எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.

     “அக்கா உன் கொழுந்தனாருக்கு சாதம் வேண்டாமாம் தோசை தான் வேணுமாம். நீயும் மாமாகிட்ட ஒரு தடவை கேட்டுட்டு அப்புறம் டைனிங்டேபிளுக்கு எடுத்துட்டு போ. என்ன இருந்தாலும் நாலு பேரும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தானே.” கணவனிடம் காட்ட முடியாத எரிச்சலை தமக்கையிடம் காட்டினாள் ஊர்மி.

     லீலா செல்வாவிடம் கேட்க, அவனும் இரவிற்கு சாதம் ஆபத்து என்று லெக்சர் எடுக்க ஆரம்பித்தான். சரியென்று லீலா கிச்சன் வர, ஊர்மி தோசை ஊற்றிக்கொண்டே சட்னிக்கு தேவையானவற்றையும் ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள்.

     “நம்ம சின்ன வயசில் மூணு வேளையும் சோறு தான். பொறியல் கூட எதுவும் கிடையாது. எப்பவாவது ஒரு நல்ல நாள் அன்னைக்கு தான் அம்மாவும், அத்தையும் இட்லி சுடுவாங்க. இங்க நெய் தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை. இந்தப் பணக்காரங்க தான்யா வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்றாங்க.” தன்னைப் போல் புலம்பினாள் ஊர்மி.

     “ஆமா ஊர்மி அதனால தான் வயசான காலத்துல இருக்கிற எல்லா நோயையும் இழுத்து வைச்சிக்கிறாங்க.” சொல்லிவிட்டுச் சிரித்தாள் லீலா.

     இங்கே, சாப்பிட்டுவிட்டு பில் கொண்டு வந்த உணவக ஊழியனைப் பார்த்து முறைத்தான் தெய்வா. “இரண்டு பேர் சாப்பிட்டதுக்கு என்னய்யா இவ்வளவு பில் போட்டு இருக்க.” என்க,

     “இல்ல சார் மேடம் பார்சல் நிறைய ஆர்டர் பண்ணி இருக்காங்க. அதோட பில்லையும் சேர்த்து தான் கொண்டு வந்து இருக்கேன். தனித்தனியா போடணும் னா சொல்லுங்க சார்.” பணிவுடனே கேட்டான்.

     “ஸ்சாரி அவங்க ஆர்டர் பண்ணதை நான் கவனிக்கல.” என்றுவிட்டு பணத்தைக் கொடுத்தவன் தனியாகச் சற்று தொலைவில் நின்றிருந்த ருக்குவிடம் வந்தான்.

     “ருக்கு என்ன இது, எதுக்காக இவ்வளவு பார்சல் வாங்கி இருக்கீங்க. இதெல்லாம் ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுற பொருள் இல்ல. உங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருக்குன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாமே. நாளைக்கும் நான் உங்களை இங்க கூட்டிக்கிட்டு வந்திருப்பேனே.” என்றான்.

     “இது எனக்கில்லைங்க. லீலா அக்காவுக்கும் தங்கச்சிங்களுக்கும். இது ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு. அதனால் தான் அவங்களுக்கும் கொஞ்சம் வாங்கலாம் னு நினைச்சேன். நீங்க போன் பேசிக்கிட்டு இருக்கும் போது உங்ககிட்ட கேட்டேன், நீங்களும் சரின்னு சொன்னீங்களே.” உன்னிடம் கேட்டு தான் செய்தேன் என்பதையும் சேர்த்துச் சொல்லிவிட்டாள்.

     “எப்ப பார்த்தாலும் உங்களுக்கு அக்கா, தங்கச்சி ஞாபகம் தானா என்னைப் பத்தி யோசிக்க மாட்டீங்களா?” தெய்வாவின் பொறாமை வளர்ந்து கொண்டே போனது.

     “உங்களைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு. நீங்க என் பக்கத்தில் தானே இருக்கீங்க.” சாதாரணமாய் சொன்னாள். அவளுடைய அக்கா, தங்கைகளுக்காக தன் பணத்தைச் செலவு செய்ததைக் கூட பெரிதாக நினைக்கவில்லை தெய்வா.

     கணவன் என்கிற உரிமையில் தன் பணத்தை அவள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சாதாரணமாகத் தான் அதனைக் கடந்தான். ஆனால் எப்பொழுது பார் அவர்களை முன்னே நிறுத்தி தன்னைப் பின்னால் ஒரு ஓரமாக நிற்க வைப்பது போன்ற மனைவியின் நடவடிக்கையைத் தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

     கோபம் கோபமாக வந்தது. சரியாக அந்த நேரம் வெயிட்டர் கொண்டு வந்து கொடுத்த உணவு வகைகள் அடங்கிய கவரைப் பார்த்து, “இதை யாருக்காவது பிச்சைக்காரனுக்கு
கொடுத்திடுங்க.” என்றுவிட்டு மனைவியை இழுத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான்.

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஐயையோ என்ன தெய்வா இதல்லாம் … பொறுமையே இல்லாம இப்படி பண்ற … ருக்கு மேல் சின்ன தப்பு இருக்கு … அவ எப்பவுமே அக்காங்களை பத்தி பேச கூடாது … ஆனா அவளுக்கு டைம் தரலாமே … எல்லாத்தையும் தப்பா பார்த்தா எப்படி