
காலை கனவு 35
நிதாஞ்சனி கொடைக்கானல் செல்லவிருந்த தினம் காலை வேளை, அவள் அலுவலகம் கிளம்பிச் சென்றதும் ஆர்விக் அனிதாவிடம் சென்றான்.
“காலேஜ் கிளம்புறீங்களா?” அனிதா கல்லூரி செல்வதற்கு ஏதுவாக தயாராகி நிற்கக் கேட்டிருந்தான்.
“போகணுமே! உன்னால ஒரு வாரத்துக்கு மேல லீவ் போட்டுட்டேன்” என்றார். ஆதங்கமாக.
“இன்னைக்கு ஒருநாள் லீவ் போடுங்க. மண்டேல இருந்து போகலாம்” என்றவனை முறைத்தவர், “இப்போ உண்மையாவே நல்லாகிட்டேன் ஆர்வி. வேணுன்னா உன்னை தூக்கிக்காட்டவா?” என கேட்டதில் ஆர்விக் சத்தமாக சிரித்தான்.
மகன் சிரிப்பதையே வாஞ்சையாகப் பார்த்தவர், அவனின் கன்னத்தில் கை வைத்தவராக,
“நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ஆர்வி” என்றார்.
“நீ கூட இருக்கும்போது என் சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல் அனி” என்றவன், “சுகவனம் அப்பா நெம்பர் வேணுமே?” என்றான்.
“நிதாகிட்ட கேட்க வேண்டியதுதானடா?”
“நைட் கிளம்பனும்னு மார்னிங் வந்தவள், டே ஷிஃப்ட் மாத்திருக்கேன்னு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பிட்டாள் அனி” என்றவன், “அவகிட்ட கேட்டா ஃபைண்ட் பண்ணிடுவாளே!” என்றான்.
“ஒருமுறை கார்த்திகா அவர் போன்ல இருந்து கால் பண்ணப்போ சேவ் பண்ண ஞாபகம். சரியா தெரியல” என தன்னுடைய அலைபேசியை எடுத்து ஆராய்ந்தார்.
“இதோ இருக்கே… நிதா டாட்” என்று எண்ணை காண்பித்தவர், “நீ பேசப்போறியா?” எனக் கேட்டார்.
“ஆமா… நிதாவா சொல்லமாட்டாள். ஃபீல் மட்டும் பண்ணுவாள்” என்ற ஆர்விக், “திருக்கிட்டவும் பேசணும்” என்று சுகவனத்தின் எண்ணை தன்னுடைய அலைபேசியில் பதிந்தவனாக நகர்ந்தான்.
ஆர்விக்கின் பின்னூடே வந்த அனிதா, “உன்னோட லவ் தவிர எல்லார் லவ்வுக்கும் ஸ்டெப் எடுக்கிற நீ” என்றார்.
“முயற்சி பண்ற இடத்தில் என் லவ் இல்லை அனி. முடிஞ்சுப்போச்சு. திரும்பத்திரும்ப அதை பேசினா, நான் ஓவர் கம் ஆகிறதுதான் லேட் ஆகும். அப்புறம் நீ நினைக்கிற மாதிரி எனக்கு கல்யாணம் பண்ணி பாக்குறதும் லேட்டாகும்” என்றான். மெல்லிய சிரிப்போடு.
ஆர்விக்கின் அந்த சிரிப்பில் ஒளிந்து நின்ற வலியை அன்னையாக அனிதாவால் உணர முடிந்தது.
“என்கிட்டவும் நல்லா நடிக்கிற ஆர்வி நீ?” கலங்கத் துடிக்கும் மனதை மகனின் ஆறுதலுக்காக முயன்று கட்டுப்படுத்தினார்.
“அப்படியா?” என்ற ஆர்விக், “நீயா எதுவும் நினைச்சு திரும்ப என்னை அழ வைச்சிடாத அனி” என்றான்.
“அப்போ உடனே பொண்ணு பார்க்கட்டுமா?” வேண்டுமென, அவனின் பதில் என்னவாக இருக்குமென்று தெரிந்துகொள்வதற்காகக் கேட்டாலும் அவரின் முகத்தில் அத்தனை எதிர்ப்பார்ப்பு.
கண்களோடு சேர்ந்து உதட்டில் புன்னகையை படரவிட்ட ஆர்விக்,
“நான் ஓகே சொல்லிடுவேன். ஆனால் நான் சொன்ன ஓகே உண்மையான்னு நீங்க யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்க” என்றான்.
அனிதா புரியாது பார்க்க…
“உன் சந்தோஷத்தில் தான் என் உயிர் வாழுது அனி… உனக்கு என்ன பண்ணனும் தோணுதோ பண்ணு. நீ சொல்றது எதுவாயிருந்தாலும் நோ சொல்லாம தலையை ஆட்டுவேன். போதுமா? நீ இப்போ ஹேப்பியா?” என அவரின் இருபக்க கன்னத்தையும் பிடித்து இழுத்தான்.
“அப்போ நிஜமாவே பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம் சொல்றியா?”
“ஆமா… பாரு! உன்னை மாதிரி என்னை அளவுக்கு அதிகமா நேசிக்கிற பொண்ணா பாரு. நாளைக்கே கூட மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றவன், “காலேஜ் ட்ராப் பண்ணவா?” எனக் கேட்டான்.
“இல்லை… நீ சக்திக்கிட்ட பேசணும் சொன்னியே பேசு. நான் யாஷ் கூட போறேன்” என்று அவர் யாஷை அழைத்துக்கொண்டு வெளியேறியதும், இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.
அதுவரை புன்னகையில் தோய்ந்திருந்த அவனது முகம் சடுதியில் தொய்ந்து வாட்டம் கண்டது.
இருக்கையின் பின் சாய்ந்தவன் கண்களை இறுக மூடினான்.
‘உன்னை மறக்கவே முடியாதா அன்வி?’
கண்ணின் ஓரம் வழிந்த கண்ணீர் காது மடல் நனைத்தது.
என்னதான் கடக்க நினைத்து பல முயற்சிகள் எடுத்து, எதார்த்தத்தின் தடத்தில் அடி வைத்திட நினைத்திட்டாலும் அவனது பயணம் முடிவு பெறுவது அவனின் காதல் பாதையில் தான்.
“ஊஃப்ப்…”
கண்ணீரை உணர்ந்தவன் காற்றை ஊதி தன்னை சமன் செய்தவனாக, இதயத்தை அழுத்தமாக நீவிக்கொண்டான்.
“உன்மேல இந்த காதல் வந்திருக்கவே கூடாது. இவ்வளவு ஆழமா நான் உன்னை விரும்பியிருக்கக்கூடாது” என்று சொல்லிக்கொண்டவன், கண்களை திறந்தவனாக நிமிர்ந்து அமர்ந்தான்.
“என்கிட்டவே நடிக்கிற!” அனிதாவின் வார்த்தைகள் உண்மையென அவனின் நெஞ்சத்தை சுட்டது.
அனைவருக்காகவும், அதிலும் தன்னுடைய அனிதாவுக்காக என்று நினைத்து எடுத்துவிட்ட முடிவில் பெரும் வலி சுமக்கின்றான். வலி கடந்து வலியை மறைக்க வலி கொள்கிறான்.
“திரும்ப அதுக்குள்ள மூழ்கிடாத ஆர்வி” என்று தனக்குத்தானே சொல்லியபடி எழுந்து அங்குமிங்கும் நடந்தான்.
சில நிமிடங்களில் தன்னை மீட்டுமிருந்தான்.
போதுமென்றளவு தண்ணீர் அருந்தி மனதின் தகிப்பை அணைத்தவன்,
“முடிக்கணும் நினைச்சு டாட் வைச்ச ஒன்றை திரும்ப ஸ்டார்ட் பண்ணாத ஆர்வி. அம்மா, அம்மா உன் காலத்துக்கும் உனக்கு வேணும்” என்றவனாக தறிகெட்டு தவிக்கும் மனதை இழுத்துப் பிடித்தான்.
“நினைக்காத நினைக்காத சொல்லியே நினைக்கிற நீ” என இதயப்பகுதியில் குத்திக்கொண்டவன்,
“இப்படியே புலம்பிட்டு இருந்தா ஆவரதுக்கில்லை” என அலைபேசியை எடுத்து சக்திக்கு அழைத்திருந்தான்.
“ஹாய் ஆர்வி!”
“வேலையா இருக்கீங்களா?”
“இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். ஃப்ரீ தான். சொல்லுடா” என்ற சக்தி, “உன் அக்கா லவ்வுக்கு தூது வந்திருக்கியா மச்சான்?” என்றான்.
ஆர்விக் இப்படி அழைத்து பேசியது அன்விதாவின் விஷயத்திற்காக மட்டும் தான். தற்போது அன்விதா பிரச்சினையும் முடிந்திருக்க, ஆர்விக் தன்னை அழைத்ததற்கான காரணத்தை ஓரளவு யூகித்ததாலே சரியாகக் கேட்டிருந்தான்.
“அதான் உங்களுக்கே தெரியுதே மாம்ஸ்… அப்புறம் எதுக்கு ஹிட்டன் பிளே?” என்றான் ஆர்விக்.
சக்தியிடம் பதில் இல்லை. அவனுக்கே தெரிந்திடாத பதிலாயிற்றே இது!
“நீங்க நிதாவை விரும்பிறீங்கதான? அவங்களால உங்ககிட்ட சொல்ல முடியலன்னும் உங்களுக்குத் தெரியும்… ரைட்?” என்ற ஆர்விக், “நீங்க சொல்றதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” என வினவினான்.
“பிரச்சினை அப்படின்னு எதுவுமில்லை ஆர்வி” என்று சக்தி நிறுத்திட,
“அவங்களா சொல்லணும் அப்படின்னு நீங்க எதிர்ப்பார்க்கலன்னு தெரியும்” என்றான் ஆர்விக்.
“எஸ்… எதிர்ப்பார்க்கல. அவளோட லவ் எனக்கு புரியுதே! சோ அவள் என்கிட்ட வந்து சொல்லணும் நினைக்கல” என்றான்.
“அவளும் சொல்ல வேண்டாம்… நீங்களும் இப்படி அமைதியாவே இருப்பீங்க அப்படின்னா என்ன அர்த்தம்?” என்ற ஆர்விக், “நீங்க என்னதான் நினைக்கிறீங்க அதையாவது சொல்லுங்க… அவள் ஃபீல் பண்றதை, அழறதையெல்லாம் பார்க்க முடியல. நிறைய புலம்பி, ரொம்பவே கஷ்டப்படுறாள்” என்றான்.
“எனக்கு நிதா மேல லவ் இருக்கா தெரியல ஆர்வி… ஆனால் வீட்டில் மேரேஜ் டாக் எடுத்ததும் அவள் தான் மனசுல முன்ன வந்து நின்னா! அதுவரைக்கும் எனக்கு காதலில் பெரிய அபிப்ராயமெல்லாம் இருந்தது கிடையாது. எப்பவும் என்னையே சுத்தி வர பார்வையை என்னால புரிஞ்சிக்க முடியாம இல்லை. ஏனோ அப்படி என்னை கவனிச்சுப் பார்க்கிறது ஒருமாதிரி… சொல்லத் தெரியல” என நிறுத்தியவன்,
“நிதா எனக்காகத்தான் நான் படிக்கிற காலேஜுக்கு வந்தான்னு தெரியும். அதுக்காக அவளை என் மனசு ஏத்துக்கணும் இல்லைதானே! இவ்வளவு தூரம் படிக்கணும் வந்துட்டு என்னையே சுத்தி வந்தது ஒரு மாதிரி கோபத்தைதான் கொடுத்துச்சு. அந்த கோபத்தில் தான் அவள் என்கிட்ட அப்போ லவ் சொல்ல நினைச்சு மெசேஜ் பண்ணதும் பிளாக் பண்ணேன்.”
“தெரியாத ஊரு… படிக்கணும் வந்திருக்காள். அப்பப்போ பேசி உதவியா இருன்னு அப்பா தான் அவள் நெம்பர் கொடுத்திருந்தார். சேவ் பண்ணல பட், அவள் நெம்பர் தான் அப்படின்னு வந்த மெசேஜில் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. மெசேஜ் வந்ததுமே இத்தனை நாள் இல்லாம இப்போ ஏன் பண்றான்னு புரிஞ்சுது. உன்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்” என பழம் பறித்த அன்றைய நாளை கூறிய சக்தி,
“எல்லாம் அந்த நாளில் தான் ஆரம்பிச்சது. அப்போ அந்த இடத்தில் நீயோ, அன்வியோ, வேற யாரோ இருந்திருந்தாலும் நான் அப்படித்தான் நடந்திருப்பேன். இருந்தாலும் நான் பண்ணது எதுவோ அவளை அட்ராக்ட் பண்ணியிருக்குன்னு புரிஞ்சுது. அப்போ எனக்குமே பெரிய வயசெல்லாம் இல்லைன்னாலும், சின்னபொண்ணு புரிஞ்சிக்காம நடந்துகிறாள்… நாளான சரியாகிடும் நினைச்சு அவள் என்னை கவனிக்கிறதை நானும் கண்டுக்காத மாதிரி கவனிச்சேன்.”
“முதலில் படிப்பை முடிக்கட்டும். அதுக்குள்ள அது வெறும் அட்ராக்ஷணா மட்டுமிருந்தா அவளும் சரியாகிடுவாள் நினைச்சேன். படிப்பு முடிஞ்சுது. அவள் அங்க. நான் இங்க. ரெண்டு பேருமே பார்த்துகிறது குறைஞ்சது. அடுத்து அவளும் படிப்பை முடிச்சு அங்கவே வேலையில் சேர்ந்துட்டதா அப்பா சொன்னாங்க. அதுக்கு அப்புறம் அவளை நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிடலாம். அவள் என்னை மறந்துட்டான்னு தான் நினைச்சேன்.”
“ஆனால் இவ்வளவுக்கு லவ் பண்ணுவாள் நினைக்கல. அதுவுமில்லாம அதுக்கு அப்புறம் ஒருமுறை கூட லவ் சொல்லணும் அவ என்கிட்ட வரவே இல்லை. சோ, அவள் வெளிவந்துட்டா நினைச்சேன். ஆனால் வீட்டில் பாக்குற மாப்பிள்ளைக்கு எல்லாம் என்னை மனசில் வைச்சுதான் நோ சொல்லிட்டு இருக்கான்னு, அன்வியும் அவளும் ஒண்ணா ஊர் வந்த டைம்ல, நிதா வர மாப்பிள்ளை எல்லாம் பிடிக்கல சொல்றாங்க போல. அவங்க அம்மா சொன்னாங்க அப்படின்னு அன்வியா சொல்லறவரை எனக்குத் தெரியாது. ஆனால் அதுக்கு முன்னவே அவள் எனக்குள்ளும் பாதிப்பை உண்டாக்கிட்டான்னு புரிஞ்சுது. அதனால அந்த டைம் என்னை அறியாமலே அவளை வெளிப்படையாய் கவனிச்சுப் பார்க்கத் தோணுச்சு.”
“பார்த்துட்டு மட்டுமே இருந்தா எனக்கும் எப்படித் தெரியும். பார்த்தே என்னை அவள் பக்கம் இழுத்துட்டான்னு கல்யாணப்பேச்சு ஆரம்பிக்கவும்தான் எனக்கு தெரிஞ்சுது. அதான் அப்பா வெளிய ஒரு இடம் வந்திருக்குன்னு சொன்னப்பவும், என் மனசு எனக்கு தெளிவாகணும் நினைச்சு நானே சொல்றேன் சொல்லியிருக்கேன்” என்றான்.
“இப்போ அவளை நீங்க லவ் பண்றீங்கதான?”
“தெரியல… ஆனால் அவளை கவனிக்கத் தோணுது. பார்க்கணும் தோணுது. அவளைத்தான் மேரேஜ் பண்ணனும் தோணுது. முன்ன அவள் பாக்குறான்னு வந்த கோபமெல்லாம் இப்போ அவள் மேல பிடித்தமா மாறியிருக்கு” என்ற சக்தி, “என் மனசு புரிஞ்ச கொஞ்ச நாளுக்கே என்னால முடியலையே! அவள் எப்படிடா இத்தனை வருஷமா இவ்ளோ பொறுமையா இருக்காள்?” என புரியாது வினவினான்.
“காதல் சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி எல்லாத்தையும் பழக்கிவிட்டுடும்” என்ற ஆர்விக், “நிதாவை ரொம்பவே நல்லா புரியுதே உங்களுக்கு. இன்னமும் காக்க வைக்கணுமா மாம்ஸ்?” எனக் கேட்டான் ஆர்விக்.
“மச்சானே இவ்வளவு தூரம் வந்து பேசும்போது எதுக்கு வெயிட் பண்ணனும்?” என்ற சக்தி, “நான் அப்பாகிட்ட பேசுறேன்” என்றான்.
“முடிஞ்சா இன்னைக்கே பேசிடுங்க. நாளைக்கு பொண்ணு பார்க்க யாரோ வர்றாங்களாம்?” என்ற ஆர்விக், அது குறித்து தங்கள் இருவருக்குமிடையே நடந்த பேச்சுக்கள் அனைத்தையும் சக்தியிடம் கூறினான்.
“நிறைய புலம்பியிருக்காள் போல. எப்படி பொறுமையா கேட்க முடிஞ்சுது உன்னால? அன்வி கூட உன்கிட்ட பேசினாதான் அந்த பிரச்சினை முடிஞ்ச ஃபீல் கிடைக்கும் சொல்லுவாள்” என்று சக்தி கூற, ஆர்விக்கிடம் வழமையான மென் முறுவல்.
“இங்க பலரோட கஷ்டம் நாம சொல்றதை கேட்க யாருமே இல்லைங்கிறதுதான். அவங்க சொல்றதை நாம பொறுமையா கேட்டாலே போதும். பிரச்சினை பாதியா குறைஞ்ச மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நமக்கு பிடிச்சவங்க நம்மகிட்ட ஷேர் பண்றதை கொஞ்ச நேரம் அவங்களோட டைம் ஒதுக்கி கேட்கிறதுல என்னவாகிடப்போகுது?” என்ற ஆர்விக், “இப்போ நீங்க என்கிட்ட பேசினதெல்லாம் நிதாகிட்ட சொல்ல வேண்டியது. இதே டெப்த்தோட அப்படியே சொல்லிடுங்க. அவளுக்கு உங்களை புரியனுமே! உங்க மனசு, உங்களோட எண்ணம்” என்றதோடு, “நீங்க அப்போ பிளாக் பண்ணதுதான் இன்னமும் அவளை உங்க பக்கம் வரவிடாம தடுக்குது” என்றான்.
“ஹ்ம்ம்… நானும் சொல்லணும்” என்ற சக்தி, “தேங்க்ஸ் டா மச்சான்” என்றிட,
“தேங்க்ஸ் மட்டும் சொல்லி எஸ்கேப் ஆகாம, உங்க வெட்டிங்ல மச்சான் மோதிரம் தர்ட்டி டூ கிராம்ல ஹெவியா செய்ஞ்சிடுங்க” என்று அத்தனை நேர அழுத்தமான பேச்சின் கண(ன)த்தை நொடியில் மாற்றியிருந்தான் ஆர்விக்.
“தங்கம் விக்கிற விலைக்கு நாலு பவுனு மோதிரம் போதுமா?” எனக்கேட்டு சக்தி சிரிக்க…
“பெர்ரி தோட்டத்துல நிறைய லாபம் வருதாமே… அதுல கொஞ்சம் மச்சானுக்கு செய்யலாம். தப்பில்லை” எனக்கூறி பதிலுக்கு சிரித்த ஆர்விக், “வீட்ல பேசுங்க மாம்ஸ்” என அழைப்பினை வைத்ததோடு சுகவனத்திற்கு அழைத்திருந்தான்.
ஆர்விக்கிடம் பேசிவிட்டு அறையிலிருந்து வெளிவந்த சக்தி, கதிர்வேலனும், தெய்வானையும் எது குறித்தோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தவனாக அருகில் சென்றான்.
“என்னப்பா பேச்சு?” எனக் கேட்டவாறு அவரின் அருகில் அமர்ந்தான்.
“ஒரு இடமிருக்கு. உனக்கு ஒத்துவரும்ன்னு இப்போ தான் பொன்னுசாமி மாமா வந்து போனார். ஏற்கனவே சொன்ன பொண்ணுக்கே நீ இன்னும் எதுவும் சொல்லலையே சக்தி. அதான் உன்கிட்ட கேட்டு சொல்றதா சொல்லியிருக்கோம். அந்த குடும்பம் எப்படின்னு தெய்வா கேட்டுட்டு இருந்தா” என்றார் கதிர்வேலன்.
“ஹோ…” என்ற சக்தி,
“சுகவனம் மாமா பொண்ணை கேளுங்களேன்” என்றான்.
“சக்தி…” தெய்வானை ஆச்சரியமாக மகனைப் பார்த்திட…
“பிடிச்சிருக்கும்மா” என்று மனதை மறைக்காதுக் கூறினான்.
“நிதா ரொம்ப நல்ல பொண்ணுங்க. நீங்க கேட்டு சுகவனம் அண்ணா முடியாது சொல்லிடுவாரா?” என்று தெய்வானை உடனடியாக பரபரப்பைக் காட்டினார்.
“இது மனசுல படாமப்போச்சே எனக்கு” என்ற கதிர்வேலன், “அவனும் ரொம்ப நாளா நிதாவுக்கு மாப்பிள்ளை தேடிட்டு இருக்கான். நான் பேசுறேன்” என்று அப்போதே எழுந்துகொண்டார்.
*********************************
தேயிலை தோட்டத்தில் வேலையாக நின்றிருந்த சுகவனம், புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும் யாராக இருக்குமென்ற யோசனையில் தான் அழைப்பை எடுத்திருந்தார்.
அவரிடம் எப்படி தன்னை அறிமுகம் செய்துகொள்வதென்று ஆர்விக்குக்கு தெரியவில்லை. முதல்முறை அவருடன் பேசுவது. அதற்காக தடுமாற்றம் கொள்ளவுமில்லை.
நிதாஞ்சனி மீதான அன்பு அவளின் தந்தையிடமும் உரிமையை காட்டிட வைத்தது.
“குட்மார்னிங் ப்பா. நான் ஆர்விக். நிதா…” என அவன் சொல்லி முடிக்கும் முன்னர்,
குரலில் பெரும் மகிழ்வைக்காட்டி…
“சொல்லுப்பா! நல்லாயிருக்கீங்களா? அம்மாவுக்கு உடம்பு இப்போ தேவலாமா?” என நலன் விசாரித்துப் பேசியிருந்தார்.
“நல்லாயிருக்கோம்” என்ற ஆர்விக், “நீங்க, அம்மா எப்படியிருக்கீங்க?” எனக் கேட்டான்.
அவரும் பதில் வழங்கிட,
“உங்ககிட்ட பேசலாமாப்பா? ஃப்ரீயா இருக்கீங்களா?” என்றான்.
“தேயிலை தோட்டத்துக்கு சும்மா மேற்பார்வையிட வந்தேன் தம்பி. பெருசா வேலையில்லை” என்றவர், “எதுவும் தாக்கலாப்பா?” எனக் கேட்டார்.
“அப்படியெல்லாம் இல்லை. நிதா மேரேஜ் விஷயமா பேசணும்” என்று நேரடியாக விஷயத்தைப் பற்றிக் கூறினான்.
“நானும் மேடத்துக்கிட்ட (அனிதா) பேசணும் இருந்தேன் ஆர்வி. எப்போ கல்யாணப் பேச்செடுத்தாலும் வேணாம் வேணாம் சொல்லிட்டு இருக்காள். இந்த முறையும் வேணாம் சொன்னா என் வீட்டம்மாவை சமாளிக்கிறது பெரும்பாடாகிப்போகும். மேடத்துக்கிட்ட நல்லமாறி இருக்காளே! அவங்க சொன்னால் கேட்டுப்பாள் நினைச்சேன்” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம்ப்பா… யார்கிட்டவும் பேச வேணாம். நீங்க உங்க ஃப்ரெண்ட் கதிர்வேலன் அங்கிள் மகன் சக்தியை நிதாவுக்கு கேளுங்க. மாப்பிள்ளை அவரா இருந்தா நிதாவுக்கு டபுள் ஓகே” என பட்டென்று கூறியிருந்தான்.
“சொல்றது விளங்களையே!”
“நிதாவுக்கு சக்தி மேல விருப்பம்.”
“இந்த கழுதை என்கிட்ட சொல்லவே இல்லையேப்பா!” மகள் தன்னிடம் சொல்லவில்லையே என்று சிறு வருத்தம் அவரிடம்.
“அவர்கிட்டவே சொன்னதில்லை. அப்புறம் எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்” என்ற ஆர்விக், “இதுக்காக வருத்தப்படாதீங்க. உங்ககிட்ட சொல்லாததால் உங்கமேல மதிப்பில்லைன்னு அர்த்தமில்லை. உங்கமேல அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும் இருக்கு. அதனால தான்” என்றதோடு, அவர்களுக்காக சக்தியையும் வேண்டாமென நினைத்து முடிவெடுக்க முடியாது நிதாஞ்சனி தவித்தது வரை அவரிடம் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லியிருந்தான்.
“அவங்க வீட்ல இப்போதான் சில சிக்கல் தீந்துச்சு. இப்போ நாம போய் பேசுறது சரிவருமாப்பா?”
மகளின் மீது எந்தளவிற்கு அன்பும் அக்கறையும் இருந்தால் மகளுக்காக யோசித்து தன்னிடமே பேசிடுவான் என்பதில் தன்னைப்போல் அவருக்கு அவன் மீது மதிப்பு உண்டாகியிருக்க அவனிடமே ஆலோசனைக் கேட்டார்.
“அவங்களே வந்து கேட்டால் உங்களுக்கு ஓகே தானப்பா?” என்ற ஆர்விக், “நமக்கு நிதா சந்தோஷம் தானா முக்கியம்?” என்றான்.
அந்த ஒரு வரி… அவனை நிதாஞ்சனிக்கு உடன் பிறந்தவன் எனுமிடத்தில் அவரை பார்க்க வைத்தது.
“எனக்குமே அந்த எண்ணம் இருந்துச்சு. ஆனால் பொண்ணு வீட்டு ஆளுங்க நாமளா எப்படி கேட்கிறதுன்னு தயக்கம்” என்று அதையுமே தயக்கமாகத்தான் கூறினார்.
“நம்ம பொண்ணு சந்தோஷத்துக்காக நாமளே போய் கேட்கலாம். தப்பில்லைப்பா” என்ற ஆர்விக், “இன்னைக்கு திரு அப்பாவே வந்து உங்ககிட்ட பேசலாம். நீங்க இன்னொரு பையனை நாளைக்கு பார்க்க வரச்சொல்லிட்டமேன்னு தயங்கிடக்கூடாதே! உங்க தயக்கம் அவருக்கு வேறுவிதமா யோசிக்க வைத்திடக்கூடாதே! அதுக்காகத்தான் நிதா விருப்பத்தை உங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றான்.
“இப்போ என்ன ஆர்வி பண்ணலாம்?”
“முதல் வேலையா நாளைக்கு வர சொன்னவங்களை வர வேண்டாம் சொல்லிடுங்க. அவங்க வந்த பின்னாடி நாம சொல்றது நல்லாயிருக்காது” என்றான்.
“அதுவும் சரிதான்.”
“அடுத்து திரு அப்பா வந்து பேசும்போது, சந்தோஷமா சம்மதம் சொல்லுங்க. அவ்ளோதான். அப்புறம் கல்யாணம் தான்” என்றான்.
“சந்தோஷம் ஆர்வி. சக்தி மாப்பிள்ளையா வந்தா வேறென்ன வேணும்” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவரைத்தேடிக்கொண்டு தோட்டத்திற்கே வந்திருந்தார் கதிர்வேலன்.
“கதிரு வந்துட்டான். பேசிட்டு கூப்பிடுறேன் ஆர்வி” என சுகவனம் கூற, “இந்த விஷயம் நிதாவுக்கு இப்போ தெரிய வேண்டாம். நாளைக்கு அங்க வந்தே தெரிஞ்சுக்கட்டும்” என்று ஆர்விக் அழைப்பை வைத்திருந்தான்.
அடுத்து கதிர்வேலன் நேரடியாக சக்திக்கு நிதாஞ்சனியை பெண் கேட்டிட… சுகவனம் சற்றும் யோசிக்காது தனது சம்மதத்தை வழங்கியிருந்தார்.
இரு வீட்டாரும் அப்போதே கலந்து பேசிட… அதன் பலனாக நிதாஞ்சனியை அழைத்துச் செல்வதற்காக சக்தியே பேருந்து நிலையம் வந்திருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
43
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆர்விக் கலக்குகிறான்.