
யான் நீயே 21
வீரன் தன்னுடைய அறை கட்டிலில் விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்தான்.
அவனது சிந்தை முழுக்க இரவு உணவிற்கு பின்னான மருதனின் பேச்சிலேயே உழன்று கொண்டிருந்தது.
இரவு வரையிலுமே வசந்திக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது மருதன் பாண்டியனின் வீட்டிலேயே தான் இருந்தார்.
பிள்ளைகள் அங்கு சென்றுவிட்டனரே என்று மகா மட்டும் தன்வீடு சென்றிருந்தார். வசந்தி தனியாக இருக்கும் மீனாளிடம் ஏதும் கேட்டு வைப்பாரோ என்று மாலை போலவே சென்றுவிட்டார்.
பாண்டியன் நேரமாகிவிட்டது இங்கேயே உறங்க சொல்லியும், வீட்டின் பக்கவாட்டாய் ஓடும் வாய்க்கால் நீரினை வெறித்தவராக மருதன் திண்ணையிலேயே அமர்ந்துவிட்டார்.
பாண்டியனுக்கு நேரமாக தூக்கத்திற்கு கண்கள் சூழல, கயிற்று கட்டிலை கொண்டு வந்து வீட்டின் முன்னிருக்கும் கள பகுதியில் போட்டு மருதனுக்கு துணையாக படுத்துவிட்டார்.
“நீயி எழுந்து உள்ள போயி படுடே!” என்று மருதன் எவ்வளவு சொல்லியும் பாண்டியன் கேட்காது அங்கே படுத்திருந்தவர் நேரம் செல்ல உறங்கியும் விட்டார்.
பின்னால் கால்நடைகளுக்கு தீனி போட தொழுவத்திற்கு சென்ற வீரன், வீட்டின் முன் கதவு அடைத்திருக்கிறதா என்று பார்க்க வர, கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்த மருதனை கண்டுவிட்டு அவரின் அருகில் அமர்ந்தான்.
“என்ன மாமா உறக்கம் வரலையாட்டுக்கு” என்ற வீரன், “என்னத்த ஆத்தமாட்டாம மனசுக்குள்ள போட்டு உழப்பிக்கிற? ” என்று அவரின் முகம் பார்த்து வினவினான்.
” அதெல்லாம் ஒன்னுமில்லை அமிழ்தா” என்ற மருதனின் முகமே ஏதோ உள்ளது என்பதை வீரனுக்கு காட்டிக்கொடுத்தது.
” சொல்ல விருப்பமில்லையாட்டுக்கு” என்ற வீரன் “பொறவு என்னத்துக்கு இங்குட்டு இப்படி உட்கார்ந்து இருக்கீரு” என்று கேட்டான்.
அதற்கு மேல் மருதனால் வீரனிடம் சொல்லாமல் விட முடியவில்லை.
கோவிலில் வசந்தி பேசியது, வீட்டில் தாங்கள் கலந்து பேசியது என அனைத்தையும் ஒன்றுவிடாது சொல்லிவிட்டார். தாங்கள் எடுத்த முடிவில் மகா, அபியின் விருப்பமின்மையையும் மறைக்கவில்லை.
சில நிமிடங்கள் வீரனிடம் ஆழ்ந்த அமைதி. ஆனால் அவனின் உள்ளம் எரிமலை நெருப்பு கங்குகளாக வெடித்து சிதறிக்கொண்டிருந்தது. அத்தனை தகிப்பு. தனலாய் சுருண்டான்.
“என்ன மாப்பிள்ளை அமைதியாகிப்புட்ட?”
“இதில் நான் சொல்ல என்னயிருக்கு மாமா? எது சரிவருமின்னு உங்களுக்குலாம் தெரியாதா?” என்றான். அடைத்த தொண்டையை வெகு சிரமப்பட்டு மறைத்தான்.
“வசந்திக்காக எல்லாரோட விருப்பத்தையும் கொல்லனுமான்னு இருக்குய்யா” என்ற மருதன், “மொத பிரேம் நாச்சி கல்யாணத்தை முடிக்கலாம் பார்த்தாக்கா… இந்த வசந்தி இப்படியொன்னை ஆரம்பிச்சு மனசை குழப்பிவிட்டுபுட்டா(ள்)” என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தார்.
“எல்லாம் நாம நெனச்சா ஆவுமா? காலமும் நேரமும் என்ன நெனச்சு சுழலுதோ அதுபடிதேன் விதி அமையும். ரொம்ப ரோசிக்காதீரு. இப்போ முடிவு பண்ணியிருக்கமாறி பேசி பாரும்” என்று முடித்துக்கொண்டான்.
‘தங்கப்பொண்ணை எனக்கு கொடுத்துப்புடேன் மாமா?’ மனம் உந்தி தள்ளி வாய் வரை வந்துவிட்ட வார்த்தையை ரணப்பட்டு தொண்டைக்குள் விழுங்கி வைத்தான்.
“நீயி என் அப்பன் அப்பு. உன்னைய அப்படித்தேன் பாக்குறேன். மீனாளை கட்டிக்கொடுத்து என் கைக்குள்ளே வச்சிக்க ஆசைப்பட்டுப்போட்டேன். மாத்திக்க முடியல. மனசு முண்டுது. என்ன செய்ய, நீயி சொல்லுறமாறி நம்ம ஆசைப்பட்டா போதுமா?” என்றவர், “கொஞ்ச நாளைக்கு செத்த ஆறபோடுவோம். வசந்திகிட்ட பக்குவமா பேசணும்” என்றதோடு அங்கேயே திண்ணையில் போடப்பட்டிருந்த பாயில் படுத்துக்கொண்டார்.
“உள்ள வந்து படு மாமா!”
“இருக்கட்டும் அமிழ்தா” என்றவர், “நல்லவேளை கூடவே ஒன்னுமண்ணா வளர்ந்ததால உங்களுக்குள்ள ஆசைன்னு ஒன்னு மொளைக்காம போச்சுதே! அதுவரை சந்தோஷமாட்டிக்கு. இல்லைன்னா உங்க மனசை உடைச்சிருப்போமே” என்று பேசியவரின் பேச்சை அதற்கு மேல் கேட்டிட முடியாது வேகமாக தன்னுடைய அறை வந்து சேர்ந்திருந்தான்.
அதுமுதல் பொட்டு உறக்கம் கண்களை அண்டாது மனதால் தவித்துக் கொண்டிருக்கிறான்.
“தங்கப்பொண்ணு…” கண்களில் கண்ணீர் கசிந்தது.
“விலகியே இரு மாமா. எனக்கு அதுதேன் நல்லது.
“தொல்லை பண்ணமாட்டேன் சொன்னீங்க?
“ரெண்டேருக்கும் வலியாகிப்போவும்.”
தன்னை தள்ளி நிறுத்த அவள் கூறிய வார்த்தைகள் யாவும் நெருஞ்சி முள்ளாய் அவனின் இதயத்தை பதம் பார்த்தது.
என்ன தான் விருப்பமிருந்தாலும் தன்னுடன் பழையதை மறந்து இயல்பாய் வாழ முடியாது என்று சொல்பவளை கட்டுப்படுத்தி கட்டாயப்படுத்தி கை பிடித்திட துளியும் எண்ணமில்லை வீரனுக்கு.
தன்னுடன் சாதாரணமான பேச்சுக்கே ஓடப்பார்ப்பவளுக்கு, பெரியவர்களின் முடிவின்படி கௌதமுடனான வாழ்வு நன்றாக இருக்கட்டுமென்றே அக்கணம் வலியோடு நினைத்தான்.
“எய்யா அமிழ்தா!”
கதவு தட்டும் ஓசையுடன் பாண்டியனின் குரல் கேட்டிட… மெல்ல எழுந்து முகத்தை துடைத்து சீர் செய்தவன் கதவை திறந்தான்.
“என்னங்க ஐயா. உறங்கிட்டு இருந்தீங்களே! ஏதும் மேலுக்கு ஆவலையா?” திடீரென இந்நேரத்தில் தன்னை தேடி வந்திருக்கும் தந்தையின் உடலை ஆராய்ந்தவாறு சிறு பதற்றத்துடன் வினவினான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லையப்பு” என்ற பாண்டியன்…
“உன் மனசை கண்டுக்காம இருந்துபுட்டேனா எய்யா” என்றார். கலங்கிவிட்ட குரலுடன்.
“ஐயா!” மெல்லிய அதிர்வு வீரனிடம்.
“ஆசைப்பட்டது கெடைக்காம போற வலி…” கண்களை மூடி திறந்தவர்,
“மாமாவுக்கு சொந்தமின்னு இருக்க தொப்புள்கொடி உறவு வசந்தி மட்டுந்தேன். அத்தோடு மாமாக்கு வசந்தின்னா அம்புட்டு பாசம். ஏற்கனவே மனசுல விழுந்த விதையை முளைக்க விடாமல் வசந்தி மீனாளை கேட்டு நிக்குறாளேன்னு உக்கிப்போய் இருக்காரு. இடையில இது தெரிஞ்சா, உன் விருப்பத்தை நிறைவேத்த முடியலையேன்னு வெம்பி போவாரு. நாம கொஞ்சம் ஒதுங்கிக்கலாம் அப்பு. நம்மனால மாமாக்கு தங்கச்சி உறவு இல்லைன்னு ஆகிடக்கூடாது” என்றார்.
“நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க ஐயா!”
“உன் மொவம் பார்த்து கண்டுபிடிக்க தெரியாதாய்யா. மாமாகிட்ட நீயி பேசும்போதே முழிச்சிக்கிட்டேன். உன் குரல் பிசுறுக்கான காரணம் எனக்கு வெளங்காதா சாமி?” என்றவர், வீரனின் கன்னம் வழித்து… “கொடுத்துவைக்கலையே அப்பு” என்றார். தழுதழுப்பாக.
“நாமட்டும் நெனச்சா போதுங்களா? மீனாளுக்கு விருப்பமில்லைங்க. நான் எப்பவோ ஒதுங்கிட்டேங்கய்யா. இருந்தாலும் ஏதோ வலி, கொஞ்சம் தடுமாறிப்புட்டேன். இனி இதுக்காக வெசனப்பட்டு உட்காரமாட்டேங்க. நீங்க போங்க. உறங்குங்க” என்றான்.
மனம் என்னவோ நொடியில் வறண்ட பாலை நிலமாய் மாறியதை உணர்ந்தான்.
“என் சாமி” என்ற பாண்டியன் மேற்படி என்ன சொல்வதென்று தெரியாது, கீழே இறங்கிச் சென்றார்.
தந்தைக்காக வேணும் துக்கத்தை வெளிக்காட்டக்கூடாதென்று நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டான்.
அறைக்குள் வந்தவனின் பார்வை வழக்கம்போல் சன்னல் பக்கம் சென்றது. தன்னையே கடிந்தவனாக திரும்பிட முயல, தென்னந்தோப்பு பாதையில் வண்டியின் ஒற்றை விளக்கு வெளிச்சம்.
யாரென்று பார்த்திட, பண்ணையை கடந்து சாலையில் வண்டி ஏறிய பின்னரே அது மீனாள் என்பது தெரிந்தது.
மணியை பார்க்க, பதினொன்றை கடந்திருந்தது.
‘இந்நேரம் எங்கு போறா(ள்)?’ என சிந்தித்தவனாக, அவளுக்கு அழைத்துவிட்டான்.
அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட்டது.
“இந்த ராத்திரியில தனியா எங்குட்டு போற?” எடுத்ததும் அதீத சினத்தோடு கேட்டிருந்தான்.
அவனின் புதிதான கோப குரல் உள்ளுக்குள் குளிர் பரப்பியது. தடுமாறியபடி அலைபேசியை இறுக்கி பிடித்தாள்.
“கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்லாம இருந்தாக்கா என்ன அர்த்தம்?” சுள்ளென்று விழுந்தன அவனது வார்த்தைகள்.
அதற்குள் அவளிடம் பேசிக்கொண்டே வீரன் தங்கள் பண்ணையை கடந்து பாதைக்கு வந்திருந்தான்.
“வூட்டுல இத்தனை பேரு இருக்கோம். தனியா எங்க புறப்பாடு? அதுவும் இந்நேரம் செண்டு!” திடீரென முதுகுக்கு பின்னால் கேட்ட கேள்வியில் உடல் அதிர கையில் பிடித்திருந்த அலைபேசியை மீனாள் நழுவவிட,
சட்டென்று குனிந்து கையில் பிடித்திருந்தான் வீரன்.
“உன்னைத்தான் கேக்குறேன்” என்றவன் தனது அலைப்பேசியில் இணைப்பைத் துண்டிக்க, அவளின் அலைப்பேசி திரை ஒளிர்ந்து அணைந்தது.
திரையில் அவனது புகைப்படம். கடைசி வருட மஞ்சுவிரட்டில் காளையை அடக்கி, வாடிவாசல் பகுதியில் மீசையை முறுக்கியபடி அவன் நின்ற தோரணை உருவத்தின் நிழல் படம்.
வீரன் அதனை கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.
அவளின் கையில் அலைப்பேசியை கொடுத்தவன்,
“என்ன சோலி?” என்றான் மீண்டும். அழுத்தமாக.
“நாளைக்கு புரொஜெக்ட் சப்மிஷன். புரொஜெக்ட் பைண்டிங் கொடுத்திருந்தேன். அவிங்க எங்கையோ திடீர் சோலியா இன்னும் ஒரு மணி நேரத்துல வெளியூர் கெளம்புராய்ங்களாம். நாளைக்கு கடை மூடி கிடக்கும், இப்போ வந்து வாங்கிக்க சொன்னாய்ங்க” என்று திணறி கூறினாள்.
“உச்சியில நங்குன்னு கொட்டுனேன்னு வைய்யீ… மண்டை பொலந்துக்கும் பார்த்துக்க. ஊரு உலகம் தெரியுமா தெரியாதா?” என்றவன் அவளின் மருண்ட பார்வையில், “கீழ இறங்கு” என்றான். தன்னை நிதானித்து.
மீனாள் வண்டியிலிருந்து இறங்கியதும், லிங்கத்திற்கு அழைத்து அவனின் வண்டியை எடுத்துவரக்கூறி வைத்தான்.
“அங்கதேன் கௌதம் இருந்தானே கூட்டிட்டு போக வேண்டியதுதானே! எதுக்கு ஒத்தையில கிளம்புன?”
“உறங்கிட்டு இருந்தாய்ங்க. அத்தை வந்தேல இருந்து அம்மாக்கு ஓய்வே இல்லை. எதையாவது செய்ய சொல்லிட்டே இருக்காங்க. அதேன் அம்மா உறங்கட்டுன்னு எழுப்பல?” என்றாள். அவனை முறைத்துக்கொண்டே!
மீனாளிடம் வீரன் அதட்டலாக பேசுவானே தவிர, இப்படி கோபமாகவெல்லாம் ஒருநாளும் கடிந்து கொள்வதைப்போல் பேசியது இல்லை.
தன்னுடைய தங்கப்பொண்ணு தனக்கில்லை என்கிற அழுத்தம், இவள் தன்னை விலக்கி வைப்பதால் தானே இன்றைய பெரியவர்களின் முடிவில் திடமாக தன்னுடைய ஆசையை சொல்ல முடியவில்லை என்கிற ஆதங்கம், அழுத்தம்… இரண்டும் அவனை அவளிடம் கோபம் கொள்ள வைத்தது.
வீரனின் மனம் புரியாத மீனாளுக்கு, கோபம் கொண்டு கடியும் வீரன் புதிதாக தெரிந்தான்.
“இங்க லிங்கத்தை கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே? எல்லாம் குருட்டு தைரியம்” என்று நிந்தித்தான்.
அவளின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.
அரை தூக்கத்தில் லிங்கம் வந்து சேர்ந்தான்.
“எங்கனையோ போவணுமாம். கூட்டிட்டுபோயிட்டு வா” என்று லிங்கத்திடம் சொல்லிய வீரன் மீனாளின் ஸ்கூட்டியில் அமர, மீனாள் லிங்கத்தின் பின்னால் ஏறினாள்.
வண்டியை முறுக்கி நகர்த்திய ஒரு அடியிலேயே லிங்கத்தின் கையில் வண்டி ஆட்டம் காண…
“அடேய்!” என்று பதறி அருகில் சென்றான் வீரன்.
“என்னடே!”
“செம தூக்கம்ண்ணே! கண்ணு சொக்குது” என்றான் லிங்கம். இரு கைகளாலும் முகத்தை தேய்த்தவனாக.
“இப்படி உறங்கிட்டு எப்படிடே போவ” என்ற வீரன், கௌதமுக்கு அழைக்கப்போக…
“எல்லாரும் உறங்கிட்டுதேன் இருப்பாய்ங்க அண்ணே! கோவிலுக்கு போய் வந்த அலைச்சல். நீயே போயிட்டு வந்துப்புடு” என்றான் லிங்கம்.
முன்பிருந்த வீரனாக இருந்திருந்தால், இரவு நேரம் தன்னவளுடன் கரிய தார் சாலையில் குளிர் காற்றில் மேனி உரசிட இதமான வாகன பயணமென்று துள்ளி குதித்து கிளம்பியிருப்பான்.
ஆனால் இப்போது… வீட்டாரின் எண்ணமும் முடிவும் வேறென்றாகிய நிலையில் மீண்டும் மீண்டும் அவளில் மூழ்கும் மனதை எட்ட நிற்க வைத்திடவே முயல்கிறான்.
“நேரமாச்சுது… நாளைக்கு காலேஜில் வைவா வேற இருக்குது” என்றாள் மீனாள்.
அதன் பின்னர் வீரன் தலும்பும் மனதை தட்டி வைத்தவனாக லிங்கத்திடம் ஸ்கூட்டியை கொடுத்து அனுப்பிவிட்டு, லிங்கத்தின் வண்டியில் மீனாளை ஏற்றிக்கொண்டு சில்லென்ற வாடை காற்றை கிழித்து சாலையில் கண்ணாகப் பறந்தான்.
மனம் அத்தனை அழுத்தமாக இருந்த போதிலும், சீரான வேகத்திலேயே வண்டியை செலுத்தினான் வீரன்.
வண்டியின் பக்க கம்பியை பிடித்திருந்த மீனாள், வண்டி வேகத்தடையில் ஏறியிறங்கிட அனிச்சையாக வீரனின் இடை பற்றினாள்.
குனிந்து அழுத்தமாக தன்னில் பதிந்த அவளின் மென் விரல்களை பார்த்தவன் ஏதும் சொல்லாது சாலையில் கவனாமகினான்.
‘என்னாச்சு இந்த மாமாக்கு. நான் பக்கட்டு இருந்தாலே துடுக்கா என்னத்தையும் பேசிட்டு இருக்கும். இன்னைக்கு காலையிலிருந்து உம்முன்னு இருக்கு’ என்று சிந்தித்த மீனாளுக்கு, தன்னுடைய வார்த்தைகளே அவனின் தூரத்திற்கும் அமைதிக்கும் காரணமென்று தெரியவில்லை.
“நீயி நல்லாதானே மாமா இருக்க?”
கண்ணாடி வழி அவளை கூர்ந்து நோக்கியவன்,
“பார்த்தாக்கா எப்புடி தெரியுதாக்கும்?” என்றான். இன்னமும் சிடுசிடுப்பைக்காட்டி.
“உனக்கு என்னாச்சு மாமா? ஏன் கோவமா வஞ்சிக்கிட்டே இருக்க?” அழவில்லை என்றாலும் அவளின் குரல் கலங்கித்தான் ஒலித்தது.
“திட்டு, நாலு அடி கூட குடு மாமா. ஆனால் கோவமா மட்டும் பேசாத. நெஞ்சை அடைக்குற கணக்கா இருக்குது!” என்றாள்.
பட்டென்று வண்டியை நிறுத்தி அவளை பார்த்தவன், அவளின் வருந்தும் முகம் காண பிடிக்காது திரும்பி கொண்டான்.
“வேறென்ன என்னைய பண்ண சொல்லுற?” என்ற வீரன்,
“இப்படி இருக்கிறதுதேன் ரெண்டேருக்கும் நல்லது” என்று சொல்லி, வண்டியை அதீத சீற்றத்துடன் இயக்கினான்.
அவனது வார்த்தையில் விக்கித்துப்போனாள் மீனாள்.
அவள் சொல்லியபோது தோன்றாத ரணம் அவன் சொல்லி காட்டியதில் உண்டானது.
இவளுக்காகவே கடை வாயிலில் கடையின் உரிமையாளர் காத்திருந்தார். அவனுக்கு ஏற்கனவே வீரனை நன்கு தெரிந்திருந்தது.
உடன் வீரன் வந்ததும்…
“சாரிண்ணே… இந்நேரம் அழைக்க வேண்டியதாப்போச்சு. உறவுமுறையில திடீர் துக்கம். இல்லைன்னா நானே கொண்டாந்து குடுத்திருப்பேன். அங்கபோவ கெளம்புற அவசரம். பாப்பா நாளைக்கு கண்டிப்பா வேணுன்னு நேத்தும் போன் போட்டு சொன்னதுல ரொம்ப முக்கியமின்னு நெனச்சுதேன் நெனப்பு வந்ததும் நேரத்தை பொருட்படுத்தாம கூப்பிட்டுப்புட்டேன்” என்று அத்தனை விளக்கம் கொடுத்தான் அவன்.
அவனுக்குத்தான் வீரனைப்பற்றி நன்கு தெரியுமே! வீட்டு பெண்பிள்ளையை இந்நேரம் எதற்கு அழைத்தாயெனக் கேட்டு பட்டென்று கை நீட்டினாலும் நீட்டிடுவான். சொல்வதற்கில்லை. அதனாலே மூச்சுவிடாது சொல்லி முடித்தான்.
“நான் காலேஜுக்கு போன நாளிலிருந்தே எல்லாத்துக்கும் உன் கடை தானே ரமேசு. அன்னைக்கு கடையில புது பையன் இருந்ததால, அவென் கராரா காசு கேட்டதுக்கும் அமைதியா போயிட்டேன். அம்புட்டென்னா நம்பிக்கையில்லாத்தனம்” என்ற வீரன், “உன் அண்ணே இருந்திருந்தாக்கா, எம் வூட்டு புள்ளைன்னு எனக்குத்தேன் போன் போட்டிருப்பான். இனிமேலாட்டாவது நேரங்காலம் செண்டு இழுத்தடிக்காத. தவிர்க்க முடியாத சூழலுன்னு அமைதியா போறேன்” என்றான்.
“மாப்பு கேட்டுகிறேங்க. அண்ணே கிட்ட சொல்லாதீங்க. வைய்யும்” என்ற ரமேஷ், மீனாளிடம் பைண்ட் செய்யப்பட்ட குறிப்பேட்டை நீட்டிட நன்றி சொல்லி பெற்றுக்கொண்டாள்.
வீரன் ரமேஷிடம் பணம் கொடுக்க, அவனும் பெற்றுக்கொண்டான்.
“நானு அன்னைக்கே முழுசா குடுத்துபுட்டேன்.” திரும்பி வருகையில் மீனாள் சொல்லிட, “இந்த காசு எந்நேரமானாலும் பரவாயில்லைன்னு அவென் உன் புரொஜெக்ட்டை பைண்ட் பண்ணி குடுத்ததுக்கு” என்றான் வீரன்.
“இப்போதேன் அவிங்களை நேரமில்லையான்னு வஞ்சீங்க?” என்றாள்.
“அது வேற இது வேற” என்ற வீரன், “அவென் நேரத்தை பார்த்து விட்டிருந்தியான். நாளைக்கு வைவா மார்க் உனக்கு பூஜ்ஜியம் தான்” என்றதும் தான் வீரனின் கோணம் அவளுக்கு புரிந்தது.
அதன் பின்னர் இருவரிடமும் காற்றின் ஓசை மட்டுமே! அந்த அமைதி மீனாளுக்கே என்னவோ போலிருந்தது. எப்போதும் ஒதுங்க நினைப்பவளுக்கு அவனின் ஒதுக்கம் நெருங்கத் தூண்டியது.
பேச வேண்டுமென எண்ணியவள், மாலை கௌதம் உடனான பேச்சினை முழுவதுமாக சொல்லிட… வீரனிடம் கேட்டுக்கொண்டேன் என்பதற்கான ம் மட்டுமே பிரதிபலிப்பாக.
“சுபா அக்கா ரொம்ப சந்தோஷப்படுவாய்ங்க!” மீனாள் சொல்ல…
“இது நடக்காது. கௌதம் நல்லான் பெரியப்பா விருப்பப்படியே நடந்துக்கட்டும். வூடால நீயி என்னத்தையும் அதிகப்பிரசிங்கித்தனமா பண்ணி வைக்காதே” என்ற வீரன், “பெரியவங்க போக்கு வேறையா இருக்கு. சுபாவுக்கு அதீத வலி கொடுத்துப்புட வேணாம்” என்று முகத்தில் அடித்தார் போல் பட்டேன்று கூறினான்.
வீரனின் பேச்சு அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
“கௌதம் தெளிவா இருந்திருக்கியான்” என்ற வீரன், ‘இது நடந்தாக்கா நல்லாத்தேன் இருக்கும். என் தங்கம் எனக்கு கிடைப்பாளே!’ என்று மனதிற்குள் மட்டுமே சொல்லிக்கொண்டான்.
மருதனோ, பாண்டியனோ பேசிடும் போது, மீனாள் தனக்கில்லையா என்கிற அதிர்வில் சுபா, கௌதம் காதலை மறந்திருந்தான். அந்நேர தாக்கத்தில் அவனுக்கு அது நினைவிலும் வரவில்லை.
இப்போது மீனாள் மூலம் நினைவு வந்தும் மகிழ்வுகொள்ள முடியா நிலையில் வீரன்.
பெரியவர்களின் பேச்சும் முடிவுமே செயல் வடிவம் பெற அதீத சாத்தியக்கூறுகள் இருப்பதாக வீரனுக்குப் பட்டது. அதனாலேயே மேற்படி மீனாளிடம் கூறினான்.
இப்போது சுபாவின் காதலுக்காக, அவளைப்பற்றி யோசித்து கௌதமிடம் பேசியிருக்கும் இதே மீனாள், மருதன் நேருக்குநேர் உனக்கும் கௌதமிற்கும் திருமணமென்று கூறினால், மறுக்காது ஏற்கவே செய்திடுவாள். மீனாள் மட்டுமில்லை, இப்போது அவனுமே பெரியவர்களின் பேச்சினை மீறி பழக்கமில்லை என்பதால் தானே தன்னுடைய ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளாது குமைந்து கொண்டிருக்கின்றான். மீனாள் மட்டும் விதிவிலக்கா என்ன?
எத்தனை வயதாகினாலும், வீட்டின் பெரியவர்களின் ஒற்றை சொல்லை தட்டிட அங்கை வரை யாருக்கும் மனம் வந்திடாது. அது பெரியவர்களின் மீதான பயமில்லை. அவர்கள் இளையவர்களுக்கு கொடுக்கும் பாசம், கொடுத்திருக்கும் சுதந்திரத்திற்கான மதிப்பு.
“நீ அன்னைக்கு உண்மையை சொன்னியோ… இல்லை எனக்கு வலிக்க வைக்க சொன்னியோ! இப்போ அதுதான் நெசமாவப்போவுது. சுபாவுக்கு நல்லது செய்யுறேன்னு எதையும் இழுத்து வைக்காத. சுபா ஐயா சுந்தரேசன் மாமா, நல்லான் பெரிப்பா மாறி கிடையாது. அதிர்ந்துகூட பேச தெரியாதவர். அவருக்கு பிரச்சனைன்னு ஒன்னை நாம உருவாக்க வேண்டாம்.”
மீனாளை அவளது வீட்டு வாயிலில் இறக்கிவிட்டவன், முகம் பார்க்காது சொல்லிச் சென்றுவிட்டான்.
யோசனை என்னவென்று மனதில் தடதடத்தாலும், நாளைய தேர்வை நினைத்து மற்றதை ஒத்துக்கிவைத்தாள்.
காலையில் மீனாள் பரபரப்பாகக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“என்ன அவசரம் மீனாள். பைய்ய கிளம்பு. லேட்டானா பிரேமை கொண்டுபோய் விட சொல்லுறேன்” என்ற மகா, மீனாளின் ஓட்டத்திற்கு இணையாக பின்னால் நடந்துகொண்டே அவளுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.
“அத்தை…”
வீரன் குரல் கேட்கவும், அங்குமிங்குமாய் நடந்து தனக்கு தேவையானவற்றை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்த மீனாள் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்தாள்.
வீரனுக்கு எப்போதுமே உணவினை அதற்குரிய மரியாதை கொடுத்து உண்ண வேண்டும். விவசாயம் செய்வதாலோ என்னவோ, உணவின் மீது அதீத மரியாதை அவனுக்கு. ஒரு வாய் உணவினையும் வீணாக்கிடமாட்டான். தன்னால் முடியுமென்றால் மட்டுமே அளவினை கூட்டிக்கூட தன்னிலையில் வைத்துக்கொள்வான்.
உணவு என்பது இறைவனுக்கு சமம் என்ற எண்ணம் கொண்டவன்.
மீனாள் சட்டென்று அமர்ந்து மகாவின் கையிலிருந்த தட்டினை வாங்கி தானே உண்ண ஆரம்பித்ததற்கு காரணம், அவனின் கடிதலுக்கு பயந்தே!
“என்னய்யா காலையிலே அத்தை நெனைப்பு?”
அன்றைய சண்டைக்கு பின்னர் வீரனும் இன்றுதான் மருதனின் வீட்டிற்குள் வந்திருக்கிறான்.
அப்பாவிடம் பேச அரம்பித்துவிட்டதால், வீட்டிற்குள் வருகிறானென்று மீனாள் நினைத்துக்கொண்டாள். உண்மையும் அதுதானே!
“மாமா பார்த்து கையெழுத்து வாங்கணும் அத்தை. வெரசா பேங்க் போவனும். இலலைன்னா இழுத்து அடிச்சிப்புடுவான்” என்ற வீரன், “அம்மா கொடுத்தாய்ங்க” என்று தூக்குவாலி ஒன்றை கையில் கொடுத்தான்.
“என்னது அப்பு?” என்று கேட்டுக்கொண்டே திறந்த மகா, “ஆட்டுக்காலாக்கும்” என்றதோடு, “என்னயிருந்தாலும், நம்ம ஓட்டலுல வைக்கிற பாயா ருசி வராதுய்யா” என்றவராக சமையலறை பக்கம் சென்றார்.
“அம்மா எனக்கு ஆட்டுக்கால் குழம்பு வெச்சு வைய்யீ. காலேஜ் போயிட்டு வந்து சாப்புட்டுக்கிறேன். மொத்தத்தையும் பாயா வைக்காத” என்று வீரனை மறந்து உரக்கக் கூறியவள், அவனது செருமலில் தட்டை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.
அதுவரை வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்த வசந்தி,
“என்னத்துக்கு கையெழுத்து?” என்றார்.
“கரும்பு ஆலை தொடங்கலாமின்னு இருக்கேன் பெரியம்மா. அதுக்குத்தேன்” என்றான்.
‘கரும்பு ஆலையா!’ என்று மனதிற்குள் வாய் பிளந்திட்ட வசந்தி…
“இதுவும் கூட்டுதேனா?” எனக் கேட்டார்.
“பிரிச்சு எதையும் செய்யுறதில்லைங்க.” வீரனின் பதில் வசந்திக்கு அறை வாங்கிய உணர்வை கொடுத்தது.
“கூட்டு கூட்டுன்னுதேன் மொத்தமா லவட்டிட்டு இருக்கீங்களே! பிரிச்சுப்போட்டா எங்க லாப நட்டத்தை நாங்களே பார்த்துக்கிறோம்” என்றார். நீட்டி முழக்கி.
வீரன் அமைதியாக இருந்தான். இன்னும் இவர் என்னவெல்லாம் பேசுவாரென்று.
அவரின் பேச்சில் அடுக்கலைக்குள்ளிருந்து மீனாளும், மகாவும் வேகமாக கூடத்திற்கு வர, அப்போது தான் மாடியிறங்கி வந்த கௌதம்…
“அம்மா என்ன பேச்சிது?” என்று அதட்டினான்.
“என்னடே சத்தம் அதிகமா வருது? உன் அய்யன் இருக்கும்போது குரலை உசத்திதேன் பாரேன்!” என்று கௌதமை அடக்கினார்.
“எம்புட்டு நாளைக்குத்தேன் கணக்கு வழக்குலாம் ஒன்னுன்னு சொல்லி லாபத்தை சுருட்டுவீங்க?” என்று வசந்தி தன் விஷத்தை கொட்ட, மகா “மதினி” என்று முன் வந்தார்.
“நானென்ன இல்லாததை சொல்லிப்புட்டேன். எனக்கும் இங்க பங்கு இருக்குதானே! ஆனால் ஒரு பட்டமும் என் கணக்கு வந்து சேரலையே?” என்றார்.
“நான் பொறவு வரேன் அத்தை” என்று வீரன் மகாவிடம் விடைபெற…
“உண்மைய கேட்டதும் நழுவுறான் பாரு” என்று நக்கல் பேசினார் வசந்தி.
வீரன் விறைத்தபடி நிமிர்ந்து நின்று… “இப்போ உங்களுக்கு என்ன தெரியனுமாட்டிக்கு?” என்று அழுத்தமாகக் கூர் பார்வையோடு வினவினான்.
அவனது அத்தகையத் தோற்றம் வசந்திக்குத் திமிராகத்தான் தெரிந்தது.
மீனாள் அதனை ரசனையோடு ஏறிட்டாள். சூழல் மறந்து. வீரனும் அவளது பார்வையை உள்வாங்கியபோதும் வசந்தியையே நேர்கொண்டு பார்த்தான்.
“அண்ணே விடுங்க. அவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க” என்று கௌதம், வீரனிடம் தழைந்து செல்ல முனைய…
“இதெல்லாம் நல்லாயில்லை மதினி” என்றார் மகா.
“உன் அண்ணே குடும்பத்துக்குதேன் நீயி அல்லு கட்டுவ!” என்று மகாவை ஒதுக்கிய வசந்தி,
“இப்போ கட்டுற சக்கரை ஆலைக்கும் எங்க பணந்தேனா?” என்று எள்ளலாகக் கேட்க…
“வசந்தி” என்று வீடே அதிர விளித்திருந்தார் மருதன்.
அன்று காலை உணவிற்கு பின்னர் நல்லான் குடும்பம் கிளம்புவதாக இருக்க, ஊருக்கு கொண்டு செல்ல நல்லான் இளநீர் கேட்டாரென்று அதனை கொண்டுவர சென்ற மருதன், வசந்தி கௌதமை அடக்கியபோதுதான் வீட்டிற்குள் நுழைந்தார்.
வீரனின் அமைதி… அவர்களின் ஏமாற்றும் செயலை தான் கண்டுகொண்டதால் என்று தவறாக நினைத்து வசந்தி யாரையும் பொருட்படுத்தாது பேசிக்கொண்டேப்போக… தங்கையின் உண்மையான குணத்தையே அன்று தான் மருதன் கண்டுகொண்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
27
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனிமே தான் பரபரப்பான திருப்பங்களா ?? வீரா வை ஒரு வழியா இந்த மீனா வலிக்க வச்சிருச்சு … என்னெல்லாம் பஞ்சாயத்து நடக்க போகுதோ
வசந்தியை சீக்கிரமா ஊருக்கு அனுப்பிடுங்களேன்…
தங்கையின் திடீர் விருப்பம் பற்றிய பகிர்தலால் தனது வீரனை தனக்கு மருமகனாக்கும் ஆசை நிறைவேறாதோ என்கின்ற தவிப்பினில் மருதன்.
எட்டி நிறுத்திய அவளது வார்த்தைகளால் தனது விருப்பத்தையும் பெரியவர்களிடம் கூற முடியாமல் போனதே என்ற ஆதங்கத்துடன் வீரன்.
“மாமனுக்கு தங்கச்சி உறவு நிலைக்கட்டும் நாம் விலகி கொள்வோம்”, என்று தனது மைந்தனின் மனம் புரிந்தும் கூட அவனுக்கு எடுத்து சொல்லும் பாண்டியன்.
தனது வார்த்தைகளே அவனது விலகலுக்கும், ஒதுக்கத்துக்கும் காரணம் என்றறியாமல், அவனை நெருங்க நினைக்கும் மீனாள்.
அவள் கூறிய போது வலிக்காத வார்த்தைகள் அவன் கூறி கேட்க வலிக்கின்றதோ!
மனம் விரும்பும் ஒருத்தியுடன் இதமான இரவு நேர பயணமாக இருந்திருக்க வேண்டிய ஒன்று அருகில் இருந்தும் தூரமாய்.
பெரியவர்களின் முடிவும் தனது ஆசியும் வேறாக இருக்க, அவளிடம் மூழ்கும் மனதை எட்டி தள்ளும் முனைப்புடன் அவன்.
அவனை வலிக்க வைக்க கூறிய வார்த்தைகள் வினையாகி அவளையும் வலிக்க வைக்க இருக்கின்றது என்று அறியாமல் அவள்.
Unmaiya ah therijukitaru.pola maruthan sir…