Loading

 

     “நீங்களும் சாரும் திருமாங்கல்யத்தை உங்க கையாலயே எடுத்து கொடுத்து, எங்க வாழ்க்கை நல்லபடியாக இருக்கனும்னு, ஆசிர்வாதம் பண்ணுங்க க்கா.”

 

தன் மகள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணை, விஷ்வா என்று தெரிய வர, சுகுமாருக்கும் காஞ்சனாவுக்கும் அவ்வளவு அதிர்ச்சி. இருவருக்கும் இப்போது தங்களது கட்டாயத்தினால் தான், தன் மகள் ஆதிரனோடு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாளோ, என்ற எண்ணமும் தோன்றியது. 

 

அதை வெளிப்படையாக கூறி இருக்கலாமே, ஒருவேளை சுகுமாரின் உடல் நிலையை கணக்கில் கொண்டு, தங்கள் மகள் இந்த முடிவை எடுத்து விட்டாளோ? அதற்குள் ஈஸ்வரை நோக்கி திரும்பிய ரிதன்யா, 

 

  “ஈஸ்வர் உங்களுக்கு இவங்களை முன்னாடியே தெரியுமா? இவங்க தான் நிலாவோட அப்பா அம்மா.”

 

“வாட்…? நிலா இவங்க… இவங்க தான் உன்னோட அப்பா அம்மாவா? அப்போ…அப்போ அக்கா…நா உங்க பொண்ணை திருட்டு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு, உங்ககிட்டயே ஹெல்ப் கேட்டிருக்கேனா? 

 

   ஐயோ எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க க்கா…என்னை தயவு செஞ்சு  மன்னிச்சிடுங்க.”

 

மணமேடையில் இருந்து எழப் போனவனை, அங்கிருந்து அனைவரும் அப்படி செய்யக் கூடாது என்று கூறி, அமர வைக்க முற்பட, 

 

  “இல்ல இல்ல நல்லவங்களான இவங்களுக்கு போய், இப்படி ஒரு தப்பை பண்ண இருந்தேனே? கண்டிப்பா இனி இந்த கல்யாணம் நடக்கக் கூடாது.”

 

   அதற்கு மேல் அவனது நாடக வார்த்தைகளையும் நடிப்பையும் காணப் பொறுக்காது, கோபத்தோடு மணமேடையில் இருந்து எழப் போன நிலாவின் முன்பு, ஒரு போனை நீட்டினாள், அவள் அருகே நின்றிருந்த ஒரு பெண். 

 

    அதனைக் கண்டு அதிர்ந்து போன நிலா அசைய மறந்தாள். அதோடு அந்த பெண் கூறியதைக் கேட்டு, அப்படியே அமர்ந்து விட்டாள்.

 

“விஷ்வா எங்களுக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான். கழுத்துல மாலையை போட்டுட்டு கல்யாணம் பண்ணிக்காம  மணமேடையை விட்டு இறங்க கூடாது. 

 

உன் அம்மாவுக்காகவாச்சும்  இன்னைக்கு உங்க கல்யாணம், நடந்தே ஆகணும். நான் சொன்னபடி இதோ உனக்கு தாலியை எடுத்து தரேன்.”

 

   “இல்லக்கா அது…”

 

  “நான் சொல்லறதை நம்பு விஷ்வா, உன்ன மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையை இழக்க, நாங்க விரும்பல. என் பொண்ணு இதை எங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்? ஆனா ஏதோ ஒரு காரணத்தால மறைச்சுட்டா…

 

   சரி விடு, ஆனா மணமேடை ஏறுன பிறகு, இந்த கல்யாணம் நடக்காமல் போனா, அது நல்லதல்ல. நாங்க மனப்பூர்வமா தான் சொல்லறோம், இந்த தாலியை என் பொண்ணு கழுத்துல கட்டு.”

 

அவர் கைகளில் இருந்து தாலியை வாங்கியவன், நிலாவை நோக்கி திரும்ப அதே நேரத்தில்,மூச்சு வாங்கிய படி, வேகமாக அங்கு வந்து நின்றாள் மாலினி. 

 

“கல்யாணத்தை நிறுத்துங்க… அம்மா அவங்க சொல்றதை நம்பாதீங்க, நம்ம உதயோட இஷ்டம் இல்லாம தான், இந்த கல்யாணம் நடக்க போகுது. 

 

   இவங்க பிளான் பண்ணி நம்ம உதயை 

ஏமாத்தி இருக்காங்க.”

 

நிலாவின் குடும்பத்தார் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருக்க, மாலினி அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்பாக, நிலாவே வாய் திறந்தாள். 

 

“மாலினி போதும், நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன். என்னோட முழு சம்மதத்தோட தான், இந்த கல்யாணம் நடக்குது. அப்பாகிட்ட சொல்ல எனக்கு தைரியம் வரல, அதனால அவருக்கு ஆபரேஷன் முடிஞ்சதும், எங்க காதலைப் பத்தி சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இவருக்கு வேற பொண்ணோட, கல்யாணமாகி விடுமோங்கற பயத்துல தான், இப்படி ஒரு அவசர கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னேன்.”

 

   நிலா அழுத்தமாக இந்த வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருக்க, மாலினி அவளை ஊன்றிப் பார்த்தவள் ஏதோ பேச வர, 

 

“நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன், இதுக்கு மேலயும் என் கல்யாணத்தை நிறுத்தி, என் வாழ்க்கையை கெடுக்கணும்னு நினைக்கிறியா?”

 

  பாவம் மாலினி, அதோடு தனது வாயை மூடிக் கொண்டாள்.

 

சுகுமாரும் காஞ்சனாவும் ஆதிரனோடு முன்னே வந்து நின்றனர். ஆதிரன் மட்டும் தனது கவலையை மறைத்துக் கொண்டு நிலாவிற்காக சிரித்துக் கொண்டிருந்தான். 

 

  ஆனால் சுகுமாராலும் காஞ்சனாவாலும் அவ்வாறு எளிதாக மனதை மறைத்து, சிரிக்க முடியவில்லை. முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாலும், ஏதோ மகள் நல்ல இடத்தில் தான் மணமாகி செல்கிறாள், என்று அமைதியாக இருந்தனர். 

 

மாங்கல்யத்தை நிலாவின் கழுத்தில்  கட்டிக் கொண்டே அவளது காதை நோக்கி குனிந்தவனோ, 

 

“வெல்கம் டு தி ஹெல், மை டியர் எனிமி.”

 

அவன் கூறியதைக் கேட்டு அவனை நோக்கித் திரும்பியவளோ, அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் கலவரமானாள். ஏன் இவனுக்கு தன் மீது  இவ்வளவு கோவம்? அப்படி அவனுக்கு நான் என்ன தீங்கு செய்து விட்டேன்?

 

இருவரின் கண்களும் ஒரே  நேர்க்கோட்டில் இருந்தது, மற்றவர்களுக்கு அது அவர்களின் உண்மையான காதலாகத் தெரிய, மாலனிக்கு மட்டும் ஏனோ வித்தியாசமாகப் பட்டது.

 

    சற்று நேரத்திற்கு முன்பு கூட இந்த திருமணம் நடக்காது என்று, அவ்வளவு உறுதியாக கூறிய நிலாவின் முகம், தற்போது இறுக்கமாக இருந்ததை வைத்தே, இங்கு ஏதோ சூழ்ச்சி நடப்பதாக மாலினியால் புரிந்து கொள்ள முடிந்தது. 

 

   அதோடு தான் விளக்கமாக கூறுவதாக, தன்னை அழைத்துச் சென்ற ரிதன்யா, ஒரு ரூமிற்குள் தன்னை தள்ளி அடைத்து வைத்து விட்டுச் செல்ல, வெகு நேரத்திற்குப் பிறகே அங்கு வந்தவர்களால் கதவு திறக்கப்பட்டு அவசரமாக இங்கு ஓடி வந்திருந்தாள் மாலினி.

 

அதை நினைத்து அவள் கோபமாக திரும்பி ரிதன்யாவை பார்க்க, அவளோ கண்களில் நீரோடு, ஈஸ்வர் கைகளால் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டிருந்த நிலாவைத் தான்,  பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சம்பிரதாயங்கள் முடிந்து ஈஸ்வரின் சரிபாதியான நிலா, பொம்மை போலவே அவன் இழுத்த இழுப்புக்கு அவனோடு நகர்ந்து கொண்டிருந்தாள். அவனை சுற்றி சற்று நேரத்திற்கு முன்பு இருந்த, அவன் நிலாவிற்கு அறிமுகப்படுத்திய உறவுகள் அனைத்துமே, அங்கிருந்து மாயமாகி இருந்தனர். 

 

   நிலாவிற்கு புரிந்து விட்டது இது தான் நிறுத்துவதற்காக ப்ளான் செய்து வந்த திருமணம் அல்ல, தனக்காகவே போடப்பட்ட கல்யாண பிளான் என்று. 

 

  நிலாவின் பெற்றோர்கள் கண்களில் அவர்களையும் மீறி கண்ணீர் திரண்டது. அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாமல், வெளியேற முனைந்தவர்களின் முன்பு, ஜோடியாக சென்று நின்றவர்கள், அவர்களின் காலில் விழுந்து வணங்கி எழுந்தனர். 

 

அங்கிருந்து வெளியேற முயன்றவர்களை தடுத்து நிறுத்தி தங்களோடு வருமாறு விஷ்வேஸ்வரன் கேட்டுக் கொள்ள, 

 

  “தம்பி எங்களுக்கு இதை ஏத்துக்க கொஞ்சம் டைம் தேவைப்படுதுப்பா, நாங்க…நாங்க கிளம்பறோம்.”

 

   என்று கூறிவிட்டு, காஞ்சனா தன் கணவரின் கையை பற்றிக் கொண்டு முன்னே நடக்க, நிலா மனம் நிறைய வலியோடு அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள். 

  

   ஆதிரன் அவளது மனதை உணர்ந்தானோ என்னவோ, 

 

   “கவலைப்படாத நிலா, அத்தையும் மாமாவும் கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பாங்க. கூடிய சீக்கிரம் அவங்களோட உன் புகுந்த வீட்டுக்கு வரேன்.”

 

   என்று கூறியவன், ஒரு சிறு தலையசைப்போடு ஈஸ்வரிடம் இருந்தும் விடைபெற்றுச் சென்றான். 

 

  கண்களில் தேங்கிய நீரோடு போகும் ஆதிரனையே அவள் பார்த்து நிற்க, அவள் கண்ணீரை துடைத்தபடியே அவள் காதுகளில் நஞ்சை கக்கினான் ஈஸ்வர். 

 

“அட என் தர்மபத்தினி…தாலி கட்டினவன் முன்னாடியே, முன்னாள் காதலனை நினைச்சு வருத்தப்படுறியே…என்ன அவனோடவே ஓடிப் போயிடலாம்னு தோனுதா?”

 

  கண்களை இறுக்கி மூடிக் கொண்டவள், வலி நிறைந்த பார்வையோடு அவனை பார்க்க, 

 

   “ஐ வாண்ட் மோர் இமோஷன் பேபி,  இதெல்லாம் எனக்கு பத்தல.”

 

   அடுத்த திருமண கோஷ்டி தயாராக மேடைக்கு கீழே நிற்க, இறங்க தயாராக இருந்தவர்களை, பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

 

   பாடிகாட்களுக்கு நடுவே இவர்கள் கோவிலை விட்டு வெளியேற, அந்த தள்ளுமுள்ளுவில் மாலினி மாட்டிக் கொண்டு வெளியே வந்த போது, அங்கு யாருமே இல்லை. பத்திரிக்கையாளர்கள் மூலம் விஷ்வேஸ்வரன் பற்றி அறிந்து கொண்டவள், பிரச்சனையின் வீரியத்தை அறிந்து, உடனே சுகந்தனுக்கு அழைத்தாள். 

 

   காரில் எதுவும் பேசாமல் தனது அருகில் அமர்ந்து, கணிணியை நோண்டிக் கொண்டிருந்த, தனக்கு ஈஸ்வராக அறிமுகமானவனைத் தான் விழி அகலாது, வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. 

 

   அவனோ தனது விழிகளை கூட கணிணியில் இருந்து நகர்த்தாமல், அவளிடம் பேசத் தொடங்கினான். 

 

   “என்ன உன் பார்வையாளையே  என்னை எரிக்க முயற்சி பண்றயா? கண்டிப்பா நடக்காது, அதுக்கு மனசு சுத்தமா இருக்கனும்.

 

நீ தான் எவன் குடியை கெடுக்கலாம்னு  அலையிறவளாச்சே… என்ன மொறப்பு? நீ ரகசியமா நடத்திட்டு வர்ற தொழிலுக்கு பேரு என்னவாம்? உன் புத்திக்கே அது தப்புன்னு தெரிஞ்ச காட்டி தானே, உன் அப்பா அம்மா கிட்ட கூட அதை பத்தி சொல்லல.”

 

   “நீ பெரிய ஒழுங்கா… இப்போ என் பிரண்டோட அப்பாவ ஜெயில்ல வச்சிருக்கிறதையும், அவளோட அம்மாவையும் பாட்டியையும் பிணைக்கைதி மாதிரி, ஒரு ரூம்ல அடிச்சு வச்சிருக்கறதையும், காட்டி தானே என் கழுத்துல தாலி கட்டினே?”

 

“ஆமா உன் பிரண்டு ரிதன்யாவோட குடும்பத்தை பணையமா வச்சு தான், உன்னை கல்யாணம் பண்ணேன், ஆனால் இந்த தண்டனை அவங்களுக்கு வேண்டியது தான்.”

 

“எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? நான் அப்படி உனக்கு என்ன பாவம் செஞ்சுட்டேன்.”

 

   “நீ செஞ்சது எல்லாமே பாவம் தான்டி, அதுக்கான தண்டனை உனக்கு கிடைக்க வேண்டாம்… இனி வாழ்க்கை ஃபுல்லா நீ அனுபவிக்க போறது அதை மட்டும் தான்.”

 

அதற்குள் கார் ஒரு பங்களாவின் முன்பு நிற்பதை கண்டு வெளியே எட்டிப் பார்த்தாள். வாசலில் இருந்த அந்த பாண்டியன் இல்லம் என்ற பெயர் பலகை, நிலாவின் மூளைக்குள் சிந்தனை விதையை தூவியது. 

 

   போர்டிகோவில் கார் வழுக்கிக்  கொண்டு வந்து நிற்க, அதில் இருந்து இறங்கிய விஷ்வேஸ்வரன், வாசல் தாண்டி உள்ளே செல்ல முற்பட்டான். அவனை கைநீட்டித் தடுத்தார் செல்லம்மா. 

   

   பல வருடங்களாக அவனது வீட்டில் வேலை செய்பவர், அவர்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கூட கூறலாம். அவனது தாயாருக்கு பிறகு, அவர் தான் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர். சுற்றிமுற்றி பார்த்தபடியே நிலா அவனை நோக்கி வர, 

 

“தம்பியோட சேர்ந்து வந்து நில்லுங்கம்மா. முதல் முதலா கல்யாணமாகி வீட்டுக்கு வர்றீங்க, ஆரத்தி எடுக்கணும் இல்லையா?” 

 

   வீட்டின் உள்ளே இருந்து இரண்டு வேலையாட்கள் ஆரத்தி தட்டோடு வர, 

 

   “இப்போ இது ரொம்ப முக்கியமா செல்லம்,  இவளுக்கு இது ஒன்னு தான் குறைச்சல்.”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்னடா இது ரிதன்யா தான் பிளான் பண்ணியிருக்கா அப்படின்னு பார்த்தா … ரிதன்யா வுக்கு இவன் பிளான் போட்டு வச்சிருக்கான் … நிலா போய் மாட்டிக்கிட்டா … என்னடா பண்ணா அவ சொல்லி தொலைடா விஷ்வேஸ்வரா … நினைச்சேன் இதான் இவனோட பேர் அப்படின்னு …