
கோவிலுக்குள் நுழைந்த நிலா, அங்கங்கு கும்பலாக நின்றிருந்த கூட்டத்திற்கு இடையே, பல மாப்பிள்ளையும் பெண்ணும் இருந்ததை கண்டு அதிர்ந்து போனாள்.
“தன்யா என்ன நடக்குது இங்க? யாருமே வர மாட்டாங்கன்னு சொன்னாரு, ஆனா மொத்த ஊருமே இந்த கோயிலுக்குள்ள தான் இருக்கு போல.”
“தெரியலையே நிலா.”
அதற்குள் கருப்பு உடை அணிந்த ஐந்தாறு பாதுகாவலர்கள், அவர்களை சூழ்ந்து கொண்டு வழி நடத்திச் செல்ல,
“சுத்தம் இவ்வளவு நேரமா நம்மள கவனிக்காம இருந்தவங்க கூட, இப்போ இந்த அலப்பறைல கண்டிப்பா என் முகத்தைப் பார்க்க ட்ரை பண்ணுவாங்க.”
“இந்த பாடிகார்ட்ஸ்சை மீறி எதுவும் தெரியாது நிலா, யூ டோன்ட் வொர்ரி.”
சுப்பிரமணியர் கோவிலில், சிவன் சன்னதிக்கு முன்பாகத் தான், யாககுண்டம் எரிந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒரு ஜோடிக்கு அங்கு திருமணம் நடந்திருக்கும் போல, அவர்கள் தங்கள் உடைமைகளை அகற்றிக் கொண்ட பிறகு, ஈஸ்வரின் வேலையாட்கள், அவசரமாக மணமேடையை தயார் செய்யத் தொடங்கினர்.
ஐயர் மணமகனையும் மணப்பெண்னையும் மணவறையில் அமரச் சொல்ல, நிலா ஒருவித பதட்டத்தோடடு மேடை ஏற முனைந்தாள். அப்போது அவள் வலது கையை பிடித்து நிறுத்தியது ஒரு கரம்.
பயந்து கொண்டே திரும்பிப் பார்த்த நிலா, தன் எதிரே கோபத்தோடு நின்றிருந்த மாலினியை கண்டாள்.
“என்ன உதய் பண்ணிட்டு இருக்க? நீ செய்யப் போற காரியம் என்னன்னு உனக்கு புரியுதா இல்லையா? அடுத்த வாரம் ஆதிரன் அண்ணா கூட நிச்சயதார்த்தத்தை வச்சிகிட்டு, இப்போ இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க தயாராகி, இப்படி மணப்பெண் அலங்காரத்துல நிற்கிற?”
“மாலினி அது…”
அதற்குள் ஐயர் இரண்டாவது முறையாக மணப்பெண்ணை அழைக்க,
“நிலா நீ போ, நான் இவங்க கிட்ட பேசுக்கிறேன்.”
ரிதன்யா கூறியதைக் கேட்டு, மீண்டும் மணமேடையை நோக்கி திரும்பிய நிலாவின், கைகளை பிடித்த மாலினி.
“நோ நிலா, என்னால நீ செய்யப் போற காரியத்தை ஏத்துக்க முடியாது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா, என்ன ஆகும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா.”
ஐயர் மீண்டும் மணப்பெண்ணை அழைக்க,
“மாலினி ப்ளீஸ், இந்த கல்யாணம் நடக்காது புரிஞ்சுதா, அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு ப்ளீஸ். ரிதன்யா இவகிட்ட எல்லாத்தையும் எடுத்து சொல்லு, அப்படியும் நம்பலன்னா, இன்னும் பத்து நிமிஷத்துல நானே வந்து, முழு விபரத்தையும் அவளுக்கு சொல்லறேன்.”
என்றபடி மணமேடை ஏறி, ஈஸ்வரின் அருகில் அமர்ந்தாள் உதயநிலா.
திருமணச் சடங்குகள் தொடங்கிட, மந்திர முழக்கத்தோடு மணமக்கள் இருவருமே, மாலை மாற்றிக் கொண்டனர்.
பூ மாலையை சரிசெய்வது போல், ஈஸ்வரின் காதருகே குனிந்த நிலா,
“சார் நீங்க ஏற்பாடு பண்ண ஆட்கள், கல்யாணத்தை நிறுத்த எப்ப தான் வருவாங்க? இங்க கல்யாணமே முடிஞ்சிடும் போல.”
“டோன்ட் வொர்ரி நிலா, ப்ளேன் பண்ணபடி எல்லாமே கரெக்டா நடக்கும்.”
அவனது குரலில் இருந்த வித்தியாசம் அவளது சிந்தனையை தூண்ட, நிமிர்ந்து அவனை பார்த்தவள், வழக்கம் போல அவன் கண்களின் தூண்டிலில் சிக்கிக் கொண்டாள்.
“ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் நான் சொல்ற மந்திரத்தை, கரெக்டா திருப்பி சொல்லுங்கோ, கல்யாணம் முடிஞ்சதும் அப்பறம் நல்லா பேசுவேளாம்.”
சுற்றி இருப்பவர்கள் கிண்டல் செய்து சிரிக்க, நிலாவால் வெளிப்படையாக தலையில் அடித்துக் கொள்ள முடியவில்லை, அவ்வளவு தான், ஐயரை ஒருமுறை முறைத்து விட்டு, தலையை குனிந்து கொண்டாள்.
நிமிடத்திற்கு நிமிடம் அவளது இதயத்துடிப்பு வேறு, அதிகமாகிக் கொண்டே சென்றது. மாலினியை வேறு காணவில்லை, கண்டிப்பாக ரிதன்யா தான் அவளை வெளியே அழைத்துச் சென்று, இங்கு நடக்கும் விபரங்களை பற்றி கூறிக் கொண்டிருப்பாள் என்று நம்பினாள்.
தான் ஏற்றுக் கொண்ட இந்த ப்ராஜெக்ட் பற்றி தெரிந்தால், தன் நண்பர்களிடம் இருந்து எப்படிப்பட்ட எதிர்வினை வரும் என்று, அவளால் யூகிக்க முடிந்தது. இந்த சிந்தனைகளிலேயே அவள் உழன்று கொண்டிருக்க, ஐயர் மாங்கல்யத் தட்டை எடுத்து மற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி வருமாறு கொடுத்தனுப்பினார்.
அவள் அருகே அமர்ந்திருந்த ஈஸ்வரோ, யாரிடமோ சீரியஸாக போனில் பேசிக் கொண்டிருந்தான், அதை கண்டு இதற்கு மேல் முடியாது என்று, எழுந்து கொள்ளப் போனாவளின் தோள் மீது விழுந்தது, ரிதன்யாவின் கை.
அவளைப் பார்த்ததும் தான், நிலாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. உடனே மாலினியிடம் பேசுவதற்காக நிலா தலையை நிமிர்த்த, அங்கு தன் கண்முன்னே நின்றிருந்த தனது குடும்பத்தாரைக் கண்டு அதிர்ந்து போனாள்.
தனது தாய், தந்தையையும் ஆதிரனையும் அங்கு சற்றும் எதிர்பார்க்காதவள், அதிர்ச்சியில் மணவறையில் இருந்து எழப் போக, அவளைத் தடுத்து தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிய ரிதன்யா, நிலாவின் குடும்பத்தாரை நோக்கி நடந்தாள்.
“ம்மா மன்னிச்சிடுங்க… நானாவது இந்த கல்யாணத்தை பத்தி உங்ககிட்ட, முன்னாடியே சொல்லி இருக்கணும். நிலா வேணுமுன்னே எதுவும் பண்ணல, அவளோட சிச்சுவேஷன் இப்படி ஒரு முடிவை எடுக்க வெச்சிருச்சு.”
எங்கே தனது குடும்பத்தார் தன்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்களோ, என்று நினைத்து நிலாவின் கை கால்கள் தானாக நடுங்கத் தொடங்கி விட்டது. ஆனால் அவர்களிடம் ரிதன்யா அடுத்துக் கூறிய வார்த்தைகளை கேட்டு, அவள் உறைந்தே போனாள்.
“எங்க அவ காதலிக்கிற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா, அவங்க அத்தை மாதிரியே அவளோட வாழ்க்கையும் ஆகிடுமோன்னு நினைச்சு, அப்பாவோட உடல்நிலை இன்னும் மோசமாயிருமோன்னு பயந்து தான், அவ இப்படி ஒரு அவசர கல்யாணத்தை பண்ணிக்க நினைச்சுட்டா.”
கோவிலின் முன்பு டாக்ஸியில் வந்து இறங்கிய காஞ்சனாவும் சுகுமாரும், பணம் கொடுக்க பர்சை தேடியே போது தான், சுகுமாருடைய போன் கிப்ட்க்கு கீழே இருப்பதை கண்டு, அதை எடுத்து பார்த்தனர்.
அதில் வந்திருந்த ஆதிரனின் பல மிஸ்டு கால்களை கண்டு, சுகுமார் உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தார்.
“ஆதிரா என்னப்பா இவ்ளோ நேரத்துல கூப்பிட்டிருக்க? அதோட இத்தனை மிஸ்டு கால் வேற?”
“மாமா முதல்ல நீங்க இப்ப எங்க இருக்கீங்க? நிலா உங்க கூட தான் இருக்காளா?”
“நாங்க ஒரு கல்யாணத்துக்காக சுப்பிரமணியர் கோயில் வரைக்கும் வந்திருக்கோம்ப்பா, இப்ப தான் டாக்ஸில இருந்து இறங்கறோம். நிலா அவளோட ஃப்ரெண்டு கல்யாணம்னு நேரத்துலயே கிளம்பி போயிட்டாளே, ஏம்பா எதுவும் பிரச்சனையா? நிலா…நிலாவுக்கு எதுவும் இல்லையே?”
“மாமா பதறாதீங்க அதெல்லாம் எதுவும் இல்லை, நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க, நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்.”
“என்னப்பா சொல்ற?”
“ஆமா மாமா, நான் நம்ம ஊர்ல தான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்திடுவேன்.”
ஏன் எதற்கு என்று தெரியாமல் குழப்பத்தோடு காத்திருந்தவர்களின் முன்பு, சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான் ஆதிரன்.
அவர்களிடம் பொறுமையாக ஆரம்பம் முதல், தற்போது வந்த மெசேஜ் மற்றும் போட்டோ வரை அனைத்தையும் காண்பித்தான். அதை கண்டு இருவருக்குமே அதிர்ச்சி தான், சுகுமார் சற்று நிலை தடுமாறி, கோவில் தூணை பிடித்துக் கொண்டார். காஞ்சனாவோ அவரைப் பிடித்தபடியே நிலாவை திட்டிக் கொண்டே, அழத் தொடங்கி விட்டார். அவரை சமாதானப்படுத்தி சுகுமாருக்கு ஆறுதல் கூறிய ஆதிரன்,
“மாமா எனக்கு ஒரு வாக்கு கொடுங்க, ஒருவேளை நிலா தனக்கு பிடிச்ச பையனை, கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருந்தா, நீங்க அதுக்கு தடையா நிற்கக் கூடாது. என் அம்மாக்கு ஆனது போலவே நிலாவுக்கு ஆகும்னு ஏன் நினைக்கறீங்க?
ஒருவேளை அவ காதலிக்கிற பையன், நல்லவராக் கூட இருக்கலாம் இல்லையா? அதோட நிலாவை பத்தியும் எனக்கு நல்லா தெரியும்.
அவ ரொம்ப புத்திசாலிப் பொண்ணு, அவளோட சாய்ஸ் எப்பவுமே தப்பாகாது.”
அவனை கட்டிக் கொண்டு அழுத காஞ்சனா,
“இப்படி தங்கமான பிள்ளையோட மனசை, நோகடிச்சுட்டு போயிட்டாளே இந்தப் பாவி மக, நீ அவளோட வாழ்க்கைய பத்தி யோசிக்கிற ப்பா,
ஆனா நம்மள பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, அடுத்த வாரம் நிச்சயத்தை வச்சிகிட்டு, இன்னைக்கு இப்படி திருட்டுத்தனமா கல்யாணம் பண்ண நினைச்சுட்டாளே…”
“அத்தம்மா ப்ளீஸ், ஒருவேளை கோவிலுக்குள்ள நிலாவுக்கு கல்யாணம் நடந்துகிட்டு இருந்தாலும், நீங்க எதுவும் சொல்லாம, அவளை ஆசீர்வாதம் தான் பண்ணனும்.
இது என் மேல சத்தியம், என்னை உண்மையாவே உங்க பிள்ளையா நினைச்சு, வளர்த்தீங்கன்றது உண்மைன்னா, எனக்காக இந்த ஒரு சத்தியத்தை மட்டும் பண்ணுங்க.”
ஒருவழியாக அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி கோவிலுக்குள் அழைத்துச் சென்றவன், சிவன் சன்னிதியை நெருங்கும் போது தான், நிலா மாலையை சரி செய்தபடி ஈஸ்வரோடு பேசிக் கொண்டிருந்தாள்.
மாலையும் கழுத்துமாக சந்தோஷமாக அமர்ந்திருந்த நிலாவை, மணமேடையில் கண்டதுமே, திரும்பிச் செல்ல நினைத்த காஞ்சனா மற்றும் சுகுமாரை, கையை பிடித்து மணமேடை அருகே அழைத்து வந்திருந்தான் ஆதிரன்.
ரிதன்யா தனது பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளைக் கேட்டு உறைந்து போயிருந்த நிலா, ஈஸ்வரின் குரலில் தான் தன்நிலைக்கு வந்தாள்.
“நிலா நான் சொன்ன முக்கியமான ஆள் வந்தாச்சு, அதோ தாலியை தொட்டு ஆசிர்வாதம் பண்றாங்க பாரு அவங்க தான்.”
குழப்பத்தோடு அவனை பார்த்தவளோ, அவன் பேசியது புரியாமல் முழிக்க,
“அக்கா என் கல்யாணத்தை முன்ன நின்னு, நல்லபடியா நடத்திக் கொடுக்கறேன்னு சொன்ன நீங்க, எங்க வராம போயிடுவீங்களோன்னு, ரொம்ப கவலையா இருந்தேன். நல்லவேளை கரெக்ட் டைமுக்கு வந்துட்டீங்க.
எங்க இரண்டு பேரோட பேரன்ட்ஸ்ஷீம் இங்க இல்லாததால, அந்த இடத்துல இருந்து நீங்களும் சாரும் தான் எங்களுக்கு ஆசி வழங்கனும்.”
நிலா அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன் குடும்பத்தாரை பார்த்ததை விட, ஈஸ்வரின் பேச்சு தான் அவளுக்கு அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது. அவள் புறம் புன்னகையோடு திரும்பியவனோ,
“நிலா உனக்கு இவங்களை தெரியாது இல்ல, இவங்க தான் நம்ம கல்யாணத்துல மெயின் கெஸ்ட், நீ கட்டி இருக்க புடவை நல்லா இருக்குன்னு சொன்னியே, அது அவங்க செலக்ஷன் தான்.”
என்ன பேசிக் கொண்டிருக்கிறான் இவன்? தன்னை சுற்றி என்ன தான் நடக்கின்றது? தனது உயிர் தோழியான ரிதன்யாவோ, தன்னைப் பற்றி தனது பெற்றோரிடம், பொய்களை அளந்து விட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு மேல் இவன் ஏதேதோ கூறி கொண்டிருக்கிறானே?
அதோடு ஈஸ்வருக்கு எப்படி தனது பெற்றோரைப் பற்றித் தெரியும்? தன்னைச் சுற்றி என்ன தான் நடக்கின்றது?
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


போச்சு டா ஈஸ்வர் விஷ்வா ஒண்ணு தானா … நிலா பாவம் … அவளுக்கே தெரியாம அவளுக்கு கல்யாணம் … ஈஸ்வர் நல்லவனா இருந்தா சரி … இல்ல அவ்ளோதான்
நம்ம ஹீரோ ரொம்பபபப நல்லவரு சிஸ்🙂