
யான் நீயே 10
கண்கள் குளம் கட்டி நிற்க, உணர்வுகளின் அழுத்தத்தில் மீனாளின் செவ்விதழ்கள் துடித்தன.
யாருக்கும் காட்டாது வேறு பக்கம் திரும்பியவள், அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கத்தில் தூணின் மறைவில் நின்று கொண்டாள்.
பார்த்துக்கொண்டிருந்த லிங்கம்…
“என்னண்ணே?” என்க,
“அவளுக்கு இதுதேன் நல்லதுடே” என்ற வீரன், “பாதி வேலையில விட்டுபோட்டு வந்தேன். பார்த்துக்க” என்று சொல்லி சென்றுவிட்டான்.
“இன்னைக்கு கூட அப்படியென்ன ஆவலாதி அப்பு உன் உடன்பிறந்தவனுக்கு?” என லிங்கத்திடம் வினவினார் வசந்தி.
“ஹோட்டலு இப்போ ரெண்டு இல்லைங்க பெரிம்மா. ஏழாகிப்போச்சு. அண்ணே போவலன்னா நாந்தேன் போவனுமாட்டிக்கு. சீசன் நேரமுங்க. டூரிஸ்ட் வரத்து அதிகம். நானு குடும்பத்தோட இருக்கணுமின்னுதேன் எனக்கு பதிலா அண்ணே அலையுது” என்ற லிங்கத்தின் பதிலில் வசந்தியின் முகம் சிறுத்தது.
“விவசாயம், ரெசிடன்சியல் ஹோட்டல் எல்லாம் ஒரு தொழிலா?” என்று தானே வசந்தி அன்று பாண்டியனை மறுத்திருந்தார். இன்று அதற்கு தக்க பதிலடி கொடுத்த திருப்தி லிங்கத்திடம்.
லிங்கம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“காலம் போன காலத்துல இதை சொல்லிக் காட்டணுமாடே!” அப்பத்தா சொல்லிட, பாண்டியன் மகனை முறைத்தார்.
வசந்திக்கு எப்போதும் இவர்களின் ஒற்றுமை உறுத்தல் தான். அதுவும் உடன் பிறந்த தங்கை தான் வந்து போகுமளவில் கூட இல்லாமல் இருக்க, இவர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே என்ற பொறாமையே அவரின் குணத்தை மாற்றியிருந்தது.
அதுவும் வசந்தி போன் செய்யும் போதெல்லாம், குடும்பமென்று மருதன் பாண்டியன் வீட்டு புகழை பாடுவதில் அண்ணன் மீதே அவருக்கு கோபம். இங்கு வந்து பார்த்த பின்னர் இரு குடும்பத்தின் இருப்பிடம் மட்டுமே வேறு, மனதளவில் ஒன்றாக இருக்கின்றனரென்று அத்தனை எரிச்சல் அவருக்கு. அதனைதான் ஒவ்வொரு சிறு பேச்சிலும் காட்டிக்கொண்டிருக்கிறார்.
அதனை உணர்ந்தே லிங்கம் காட்டமாக பதில் கொடுத்தான்.
“என்னண்ணே அம்மாவும் அப்பா மாதிரியே பேசுது. இங்க வந்து மாறிட்டாங்களோ? அம்மா இப்படிலாம் பேச மாட்டாங்களே?” கௌசிக் கௌதமிடம் கேட்க,
“நல்லானின் மனைவின்னு ப்ரூவ் பன்றாங்க. கண்டுக்காத” என்ற கௌதம் வசந்தியை பார்க்க, அவரோ முகம் திருப்பிக்கொண்டார்.
“அப்பா கூட வந்ததிலிருந்து அமைதியாத்தான் இருக்கார்” என்ற கௌசிக் அங்கை கூப்பிட்டாளென்று அவளுடன் சென்றுவிட, கௌதமின் பார்வை தன்னைப்போல் சுபாவின் மீது படிந்தது.
“கடைத்தெருவுல எதாவது வாங்கணுமின்னா வாங்கிட்டு வாங்க பசங்களா! கெளம்புவோம்.” மகா சொல்லிட சிறியவர்கள் எழுந்து சென்றனர்.
பெரியவர்கள் பேச்சில் ஆழ்ந்திட…
லிங்கம் மீனாளின் அருகில் சென்று அமர்ந்தான்.
“என்னாச்சு மீனாகுட்டிக்கு?”
அவளின் தலையை தன் தோள் மீது சாய்த்தவனாக வினவினான்.
“மாமா என்னைய வெறுத்துட்டாரு நினைக்குறேன்” என்றவளின் கண்ணில் மலுக்கென நீர் நிறைந்தது.
“அண்ணே உன்னைய வெறுக்கிறதா?” என்ற லிங்கம், “நீயி அண்ணே வேணாமின்னு தானே இருக்க? பொறவு அவரு உன்னைய வெறுத்தா என்ன? பேசலன்னா என்ன? என்னத்துக்கு வெசனம்?” என்றான்.
“தெரியலையே?” என்றவள், “கஷ்டப்படுத்துறேனா மாமா?” எனக் கேட்டாள்.
“அண்ணே தான் சொல்லணும்” என்ற லிங்கம், “மொத படிப்பை முடிக்கிறதை பாரு. அண்ணேதான் உனக்குன்னா அதை நீயே நினைச்சாலும் மாத்த முடியாது” என்றவன் அவளை எழுப்பி கடைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
பெரியவர்கள் அனைவரும் கோவிலில் கூடியிருப்பதால் பிரேம் நாச்சியின் நிச்சயத்துக்கு நாள் பார்க்கலாமென்று பேசிக்கொண்டிருக்க…
“அந்த நாளிலே மீனாளுக்கும், கௌதமுக்கும் நிச்சயம் பண்ணிப்புடலாமேண்ணே?” என்றார் வசந்தி.
வசந்தி கேட்டதில் நல்லானைத் தவிர்த்து அனைவரும் அதிர்ச்சியை உள்வாங்கினர்.
வசந்தி இப்படி கேட்பாரென்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அவர்களின் எண்ணமே வேறாயிற்றே! அதுவும் மருதனுக்கு அவரின் ஆசை மருமகன் மாப்பிள்ளையாக வேண்டுமென்று பேராசையாயிற்றே! மருதன் தான் வசந்தி கேட்டதில் அதீத அதிர்வு கொண்டார்.
“என்னண்ணே ரொம்ப ரோசிக்குறாப்புல இருக்கு?” வசந்தி பாண்டியனை பார்த்துக்கொண்டு வினவ,
“அது… வந்துத்தா…” என்று மருதன் இழுத்தார்.
மீனாட்சிக்கு என்ன தான் அண்ணன் பிள்ளைகளாக இருந்தாலும், அவ்விருவரையும் தன்னுடைய மக்கள் போல் பார்த்துக்கொண்டாலும், உரிமை பேச்சில் தலையிடக்கூடாதென்று ஒதுங்கி இருந்தார்.
“எனக்கும் மீனாளை கேட்கணும் விருப்பம் மருதா. அத்துக்குத்தேன் வந்ததே!” என்றார் நல்லான்.
நல்லானுக்கு மருதனை பிடிக்காது என்பது அவரின் பேச்சிலே தெரியும். அப்படிப்பட்டவர் தன் மகளை கேட்பதை மருதனால் நம்பவே முடியவில்லை.
நல்லானுக்கும் சரி, வசந்திக்கும் சரி வீரனென்றால் ஆகாது. இச்சமயத்தில் தன்னுடைய விருப்பம் தெரிந்தால் என்ன பிரளயத்தை உண்டு பண்ணுவார்களோ என்று மருதன் மௌனம் காக்க… தனக்கு இப்போதே ஒரு முடிவு தெரிந்தாக வேண்டுமென வசந்தி பிடிவாதமாக இருந்தார்.
“மீனா கண்ணு படிச்சிட்டு இருக்குதே ஆத்தா. எப்படி கண்ணாலம் கட்டி குடுக்கிறது?”
மருதனின் கேள்வி நல்லானுக்கு நியாயமாகப்பட்ட அதே கணம்,
“கௌதமுக்கும் இருபத்தி நாலு தானேண்ணே ஆவுது. இப்போ பரிசம் மட்டும் போட்டு உறுதி பண்ணி வச்சிப்போம். மீனாள் படிப்பை முடிச்சதும், கௌதமுக்கும் இருபத்தி ஏழு வந்துபுடும். பொறவு ஜாம் ஜாமுன்னு கண்ணாலம் பண்ணிப்புடலாமே” என்றார் வசந்தி.
வசந்தி சொல்வதில் அத்தனை பேரும் அயர்ந்து போய் பார்த்தனர் அவரை.
“இவ(ள்) ஒரு முடிவோடு வந்திருக்காப்போல மகா!” மீனாட்சி தன் மகளிடம் முணுமுணுக்க…
“நம்ம வீரனை பேசிடக்கூடாதுன்னு எம்புட்டு நேக்கா பேச்சை ஆரம்பிச்சுட்டாய்ங்க பாருங்க அத்தை” என்றார் அபி. அங்கலாய்ப்பாக.
அபிராமிக்கு அண்ணன் மகள் சுபா இருந்தாலுமே, அத்தையென்று சிறு வயது முதல் தன் கையிலே வளர்ந்த மீனாள் மருமகளாக வருவதில் கொள்ளை விருப்பம்.
“அவள் மேல படிக்கணுமின்னு விருப்பப்படுறா மதினி.” மகா நாசூக்காகக் கூறினார்.
“இப்போவே மேப்படிப்புத்தானே மகா படிக்கிறா?” என்ற வசந்தி, “இதுக்கு மேற்பட்டு படிச்சு அரசாங்க உத்யோகத்துக்கா போவப்போறா? அதெல்லாம் வூட்டுல உட்கார்ந்து எம் மவனை கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு புள்ளைய பெத்து போட்டா ஆவாதா?” என்றார்.
அவரின் அப்பேச்சு அங்கு ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.
“நல்லா படிச்ச… பெரிய ஆபீசர் வேலையில இருக்குற ஆளத்தேன் கட்டிப்பேன்னு கட்டிக்கிட்ட நீங்களா மதினி இப்படி பேசுறீய்ங்க?” என்ற மகா, “அவள் வேலைக்கு போறாளோ இல்லையோ… பொறந்த வூட்டுலத்தானே பொண்ணுங்க ஆசைப்பட்டதை செஞ்சிக்க முடியும். அதனால அவ விருப்பட்டவரைக்கும் படிக்க வச்சுதேன் அவளுக்கு கல்யாணம்” என்றார் மகா.
மகா என்றுமே இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பிடிவாதமாக பேசிடமாட்டார். மருதனுக்கே மகா இப்படி முறைப்பாக பேசுவதில் உடன்பாடில்லை என்றாலும், வசந்தியை இப்படி பேசவில்லை என்றாலும் சமாளிக்க முடியாது என்றே தோன்ற அமைதியாக இருந்தார்.
“என்னண்ணே உம் பொண்டாட்டியை பேசவிட்டு நீயி மௌனமா உட்கார்ந்திருக்க?” வசந்தியே பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வரட்டுமென்று நல்லான் அமைதியாக இருந்தார்.
“இப்போவேவா கண்ணாலம் கட்டி வைக்க கேக்குறேன்? பரிசம் மட்டும் போடத்தானே?” என்றார் வசந்தி.
“கொறஞ்சது ஒரு வருசத்துக்கு மேல்பட்டு செய்யப்போறதுக்கு என்னத்துக்கு இப்போவே தட்டு மாத்திக்கணும் வசந்தி?” என்றார் மருதன்.
“என்ன மருதா நாங்களே பொண்ணு கேட்டமாட்டிக்கு பவுசு காட்டுறியோ?” முதல் முறையாக நல்லான் வாய் திறந்தார். அவர் விறைப்பாகக் கேட்ட தோரணையே சண்டைக்கு பாய்வது போலிருந்தது.
“அட கோவிலுக்கு சாமி கும்புடன்னு வந்துபோட்டு என்னத்துக்கு சலம்பல்?” என்ற மீனாட்சி, “பொம்பளை புள்ள விசயம், சுருக்குன்னு முடிவெடுத்துப்புட முடியாதே! பெத்தவைங்க நாலும் ரோசிச்சுத்தானே முடிவெடுப்பாய்ங்க. கொஞ்சம் காலம் கொடு வசந்தி. மருதனும் என்ன ஏதுன்னு அலசி முடிவெடுக்கட்டும்” என்றார். சுமூகமாக முடித்துவிட எண்ணினார்.
“இதுல ரோசிக்க என்னயிருக்குமாட்டி அயித்த? நானு என்ன பிரத்தியா? அலசி முடிவு சொல்ல. உடன்பிறந்த தங்கச்சி மவனுக்கு கட்டிக்கொடுக்க கசக்குதாம்மா?” என்ற வசந்தி, “நாளைக்கு ஊருக்கு கெளம்புறோம் அதுக்குள்ள முடிவை சொல்ல சொல்லுங்க. பொறவு போக்குவரத்து நீடிக்குமா இல்லையான்னு நான் சொல்லுறேன்” என்றார்.
அவர் மறைமுகமாக உறவை முறித்துக்கொள்வேன் என்று சொல்வது எல்லோருக்கும் புரியவே செய்தது.
“நீயி லிங்கத்துக்கு போன போட்டு வண்டிக்கிட்ட வர சொல்லு பாண்டியா… வூடு போவோம் முன்ன” என்ற அப்பத்தா எழுந்திட, அவருடன் மகாவும் அபியும் சென்றுவிட்டனர்.
பாண்டியனும் மருதனும் கூட அவர்களின் பின்னே சென்றுவிட… வசந்தியும் நல்லானும் சற்றே பின் தேங்கினர்.
“இங்கன கெளம்பி வரும்போது கூட நீ கெளதம் கல்யாணத்தை பத்தி எதுவும் பேசலையே வசந்தி… பொறவு என்னத்துக்கு மீனாளை கட்டித்தர சொல்லிக் கேட்ட?” நல்லான் தன் மனைவி வசந்தியிடம் கேட்டார்.
“பட்டிக்காட்டுல பொறந்து வளர்ந்து இருக்கா(ள்)… நம்ம கௌதமுக்கு செட்டாவமாட்டான்னு நெனச்சேன். இங்குட்டு வந்து பார்த்தாக்கா அம்புட்டு அம்சமா இருக்கா(ள்). என் அண்ணன் கூட சொல்லுச்சு பெரிய படிப்புலாம் படிக்கிறா அப்படி இப்படின்னு. நாந்தேன் என்னயிருந்தாலும் நம்ம கௌதமுக்கு பொருந்தமாட்டான்னு கம்மின்னு இருந்துப்புட்டேன். அவள் ருதுவானதுக்கு கூட நாம வரலையே! பாண்டியன் மவனுக்கு பேசிகீசி வச்சிருக்காவுகளான்னு அம்புட்டுக்கத்தேன் கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சேன். பார்த்தாக்கா எங்கண்ணே இம்புட்டு ரோசிக்குது. ஏற்கனவே சொத்து எல்லாம் ஒட்டுக்காதேன் ஆளுராய்ங்க. இதுல சம்பந்தியும் ஆகிப்புட்டால் நம்ம கைக்கு என்ன வந்து சேரும்?” என்ற வசந்தியிடம் நல்லான் இவ்வளவு சூட்சுமத்தை எதிர்பார்க்கவில்லை.
“சரி வருமா வசந்தி?”
“அதெல்லாம் உறவு வேணுன்னுதேன் அண்ணே நினைக்கும். நான் வச்சிருக்க பொடி அப்படி” என்ற வசந்தியும் நல்லானுடன் பேசிக்கொண்டே வண்டி நிற்குமிடம் வந்து சேர தன் வாயினை கப்பென்று மூடிக்கொண்டார்.
“எங்கடே பசங்களை காண்கல?” பாண்டியன் வினவ,
“எல்லாம் நம்ம ஹோட்டலுக்கு போயிட்டாவுக ஐயா. நீங்க ஏறுங்க.உங்களை வூட்டுல வுட்டுப்போட்டு திரும்ப வந்து கூட்டிக்கிறேன்” என்று பதில் சொல்லிய லிங்கம் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் மதுரை சென்றுவிட்டான்.
“இன்னைக்கு சாப்பாடு இங்கத்தேன் வசந்தி? ஓய்வெடுக்கிறதுன்னா அந்தா இருக்க ரூமுல படு” என்று மீனாட்சி சொல்ல…
“என்ன மதினி நான் என் பொறந்த வூட்டுக்கு வக்கணையா ஆக்கி திங்கிலாமுன்னு வந்தாக்கா… நீங்க, என்னை அடுத்த வூட்டுல சீராட வைக்கிறீங்க?” என்று பட்டென்று மகாவிடம் கேட்டிருந்தார் வசந்தி.
மகா அதிர்ந்து மருதனை ஏறிட, அவருக்கும் அப்பேச்சு அத்தனை உவப்பனதாக இல்லை. தங்கையை நோக்கி பார்த்த பார்வையில் கண்டிப்பபைக் காட்டினார்.
“என்ன வசந்தி பேச்சொன்னும் சரியில்லையே! இது அடுத்த வூடாக்கும். உன் கை மணம் யாருக்கும் வராது அயித்த இன்னும் செத்த கொழும்பு ஊத்துன்னு கேட்டு வாங்கி திண்ணதுலாம் மறந்துப்போச்சாக்கும்” என்று பேச்சிலே கொட்டு வைத்தார் மீனாட்சி.
“என் அண்ணே நான் கேட்டதை அம்புட்டு ரோசிக்கும் போது… நான் அவிங்க மாமியார் வூட்டுல உட்கார்ந்து உண்குறது அம்புட்டு ருசிக்குமா? அதேன் வெசனத்துல கேட்டுப்புட்டேன்” என்ற வசந்தி, “அவிங்களுக்கு இங்க செட்டாவாது அயித்த. நான் அங்குட்டு கூட்டிட்டுப் போறேன். நீயி ஆக்கி அறிச்சி, கொடுத்தனுப்பு” என்று நல்லானை அழைத்துக்கொண்டு வசந்தி மருதனின் வீடு நோக்கி சென்றுவிட…
அவ்விடமே மழை அடித்து ஓய்ந்தது போல அத்தனை அமைதியைக் காட்டியது.
***********************
மீனாட்சியின் குடும்பம் முற்றத்தில் கூடியிருந்தது. சிறியவர்கள் தவிர்த்து.
“எல்லாம் ஆச்சு அத்தை. சாப்பிட்டுபோட்டு பொறவு பேசுவோம்” என்று சேலை தலைப்பில் கையை துடைத்தவராக அபிராமி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த மீனாட்சியின் அருகில் வர, அவரோ என்ன முடிவெடுப்பதென்று தெரியாது முகம் சுருங்கி மனம் சுணங்கி அமர்ந்திருந்த மருதனை பார்த்திருந்தார்.
“இப்போ என்னவாகிப்போச்சு மாமா? இப்படி சுணங்கி உட்காந்திருக்க? மீனாளை உன் தங்கச்சி மவனுக்கு கட்டிக்கொடுக்க நீ முடிவெடுத்தா நாங்க வருத்தமாகிப்போவோம் வெசனப்படாத மாமா! அவிங்கள மாதிரி உறவை முறிச்சிப்போமின்னு பூச்சாண்டிலாம் காட்டமாட்டோம். உனக்கு என்ன தோணுதோ செய். எங்களுக்கு நீயி ரொம்ப முக்கியம். உன் நிம்மதியுந்தேன்” என்றார் பாண்டியன்.
“மனக்கசப்பு ஏதும் வேண்டாமப்பு. உரிமை இருக்கப்போயி கேட்டுப்புட்டாள். மொவத்துக்கு நேரா மறுப்பு சொல்ல நீயி தயங்குறன்னு வெளங்குது அப்பு. அதுக்குன்னு நீயி இப்படி இருந்தாக்கா ஆச்சா? சம்மந்தம் வச்சிக்கிட்டாதேன் நம்ம உறவு ஒன்னும் மண்ணா இருக்குமின்னு இல்லப்பு. வீரன் மருமகனா இருந்து செய்ய வேண்டியதெல்லாம், அவென் உம் மவனா இருந்து செய்வான் அப்பு. அவென் உனக்கு மவனா இருக்கணுமின்னு காலம் நினைக்குதோ என்னவோ? வேணுமின்னா லிங்குவை சின்னக்குட்டிக்கு கட்டிவச்சு உன் ஆசையை தீர்த்துக்க” என்று மீனாட்சி சொல்ல, அனைவருக்கும் இந்த யோசனையில் பிடித்தம் இருப்பதுபோல் பாவனை காட்டினர்.
“எனக்கு லிங்குவை சின்னதுக்கு கட்டிவைக்கிறதும் பிடித்தந்தேன் அயித்த. ஆனால் என் அமிழ்த(ன்)த்தா அவென். மீனாளுக்கு அவந்தேன்னு கனா கண்டுட்டேனே! மனசை சுலுவா மாத்திக்க முடியல!” என்ற மருதனின் மனம் கனத்துக் கிடந்தது.
“பிள்ளைய்ங்க ஒன்னுமண்ணா இருக்கும்போது கண்டதை நெனச்சு உழப்பிக்காத மருதா! வசந்தி பேச்சைக் கேட்டாக்கா, அவள் ஒரு முடிவோடு இருக்கமாறி இருக்கு. நீ வேண்டான்னுபுட்டா ஆட்டம் ஆடிடுவாள் தோணுது. நம்ம விருப்பம், முடிவு தாண்டி பிள்ளைய்ங்க விருப்பமின்னு ஒன்னு இருக்குதே!” என்ற மீனாட்சி, “கௌதமுக்கு கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறேன். எம் வார்த்தையில நம்பிக்கை இருந்தாக்கா, ரெண்டு பேருக்கும் இன்னும் வயசாவுட்டும், மீனாளும் படிப்பை முடிக்கட்டும் பொறவு எல்லாம் வச்சிக்கலாம் சொல்லு” என்றார்.
“அதுக்கு அவள் ஒத்துக்குவாளா அயித்த? பரிசம் போட்டே ஆவனுமின்னு ஆவலாதியாவில்ல இருக்காள்” என்றார் மருதன் கவலையாக.
“அவள் எதுக்காக அவசரம் அவசரமா பரிசம் போட்டு உறுதி பண்ணி வச்சிக்கணும் நெனக்கிறா தெரியல மருதா” என்று மீனாட்சி பேசும் போதே…
“வேறென்னத்துக்கு நாச்சியாக்கும் பிரேமுக்கும் கல்யாணம் பண்ணி சம்மந்தி பந்தம் ஆகிப்புட்டோம். அடுத்து வீரனுக்கு மீனாளை கட்டி வைக்க பேசிபுடுவோமின்னு கணக்கு போட்டு காய் நவுத்துறா(ள்). பொறாமை பிடிச்சவ” என்ற அபிராமி, பாண்டியனின் பார்வையில் முகத்தை நொடித்தவராக… “அண்ணே மவ இருந்தும்… வீரனுக்கு மீனாளுதேன் பொருத்தமின்னு, அவளை மருமவளா வச்சு பார்த்து ரசிச்சிப்புட்டேனே! அந்த மன வருத்தம் ஆத்தமாட்டமா முரண்டு பிடிக்குது” என்று சேலை தலைப்பை இழுத்து இடையில் சொருகியவராக உங்களது பேச்சும் முடிவும் எனக்கு பிடிக்கவில்லை என்பதை அதிருப்தியாகக் காட்டிக்கொண்டு அபிராமி அங்கிருந்து நகர்ந்திட, அவர் பின்னாலே மகாவும் சென்றுவிட்டார்.
“ரெண்டு பேருக்கும் விருப்பமில்லையாட்டுக்கு!” மருதன் கவலையாகக்கூற,
“ஆத்தா சொன்ன மாதிரி வசந்திக்கிட்ட பேசு மாமா. ஒத்து வந்தா புள்ளைங்ககிட்ட கூட இதை சொல்ல வேண்டாம். பின்னாடி செய்யுறப்போ பேசிக்கலாம். வசந்தி கல்யாணத்துக்குன்னு சொல்றதை பார்த்தாக்கா, அதுக்கே கௌதமுக்கு ரெண்டு வருசம் செண்டு கல்யாணம் பண்ணத்தேன் விருப்பமிருக்கமாட்டிக்கு இருக்கு. நீயி எங்க அமிழ்தனுக்கு பேசிப்புடுவியோன்னுதேன், அது மொத முந்திக்கிச்சு. நீயும் வாய் வார்த்தையா மட்டும் பேசி வச்சிப்போமின்னு சொல்லி வெய்யி. அதது நடக்கும் போது புள்ளைங்க மனசுல என்ன இருக்கோ அப்போ பார்த்துகிடலாம்” என்று பாண்டியன் ஆற்றுப்படுத்தினார்.
“எனக்கு பாண்டியன் சொல்றது சரின்னு படுதப்பு” என்ற மீனாட்சி, “மொத வந்து உண்குங்க. மத்ததை பின்னால பாப்போம்” என்று எழுந்து சென்றார்.
இப்போ தான் சென்றால் மீண்டும் திருமணம் குறித்து வசந்தி ஏதும் பேசுவாரென்று, தொழுவத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவரிடம் மகா உணவினை கொடுத்து அனுப்பிவிட்டார்.
மருதனுக்கு தன் வீடு செல்லவே இப்போது மனமில்லை. உண்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டார்.
மாலை போல் மதுரையிலிருந்து இளைஞர் பட்டாளம் அனைவரும் வந்துவிட… சுபா தனதறைக்கு சென்று சுருண்டு படுத்துக்கொண்டாள்.
சுபா கடந்த இரண்டு மணி நேரமாகவே அப்படித்தான் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறாள்.
மற்றவர்களுக்கு காரணம் என்னவென்று தெரியாததால் அதனை ஆராயாமல் விட்டுவிட, காரணமறிந்த மீனாள் கௌதமிடம் பேச வேண்டுமென நினைத்துக்கொண்டாள்.
“அமிழ்தன் வரலையாடே?” அபிராமி கேட்டிட, “வாராய்ங்க. வழியில யாரையோ பார்த்து நின்னுட்டார்” என்று கௌசிக் பதில் சொல்ல…
“நாங்களெல்லாம் ஹோட்டலிலே உண்கியாச்சு” என்று மற்றவர்களும் அலுப்பு போக ஓய்வெடுப்பதாகக் கூறி சென்றுவிட்டனர்.
“லிங்கம் நீயி ஒரு எட்டு ஊருக்குள்ள போயி… நம்ம வூட்டுல லைட்டை மட்டும் போட்டுட்டு வந்துடுய்யா. கண்ணாயிரம் மவ(கள்) வீட்டுக்கு போயிட்டான். ஆளில்லை” என்ற மீனாட்சியின் பேச்சை தட்ட முடியாது லிங்கம் கிளம்பிட, வீரனின் இருசக்கர வாகனம் நின்றிருந்தது.
“ரெண்டு மூணு நாளாவே வண்டியை எடுக்கலையே! ஏதும் பழுதா இருக்குமோ?” என்று சிந்தித்த லிங்கம், “நாச்சியா… அண்ணே வண்டி சாவி கொண்டாத்தா!” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தான்.
சில நொடிகளில் வெளியில் வந்த நாச்சி,
“அங்குட்டு எப்பையும் மாட்டுற இடத்துல சாவி இல்லண்ணே” என்று சொல்ல, லிங்கமும் தன் வண்டியை நோக்கி நகர, சரியாக வீரன் வந்து சேர்ந்தான்.
“வண்டி இங்குட்டே நிக்குது. பழுதாகிடுச்சோ?” என்று லிங்கம் வினவியதும், நாச்சிக்கு பின்னால் வந்து நின்ற மீனாளின் மீது நொடிக்கும் குறைவாக பார்வை பதித்த வீரன் விழிகளை விலக்கிக் கொண்டான்.
“சாவி தொலைஞ்சுப்போச்சுது. டூப்ளிகேட் செய்யணும்” என்றவனாக உள்ளே செல்ல… “இன்னொன்னு இருக்குமே?” என்றான் லிங்கம். கேள்வியாக.
“அது போன வருசமே காண்கல” என்றவனாக நின்று கூட பதில் சொல்லாது உள்ளே சென்று மறைந்தான்.
“எப்படித் தொலையும். அம்புட்டு கவனக்குறைவான ஆளில்லையே!” என்று நாச்சியிடம் சொல்வதைப்போல் சொல்லிக்கொண்ட லிங்கம் தோளை குலுக்கிவிட்டு சென்றுவிட, நாச்சி மீனாளை ஆராய்வாக பார்த்தாள்.
“என்ன மதினி?”
“சுபா நாளைக்கு போயிடுவா? சாவியை கொடுத்துப்போடு. இந்த நாவே முடிஞ்சுதே! இனிமேட்டுக்கா அவளை உட்கார வச்சு சுத்தப்போவுது?” என்ற நாச்சியின் பேச்சில் மீனாள் மீன் விழிகளை உருட்டினாள்.
“அச்சோ அப்படிலாம் இல்லை மதினி. நானெடுக்கல” என்று வேகமாக மீனாள் மறுத்திட…
“சரி எடுக்கலன்னா வுடுத்தா. அதுக்கெதுக்க கண்ணை ஆட்டுற…?” என்ற நாச்சி, “இந்த கண்ணுலதேன் ஆனானப்பட்ட வீரனே கவுந்துப்போச்சுன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“தேவையில்லாம எதையும் நெனச்சு குழப்பிக்காதீங்க மதினி. நீங்க நெனக்கிற மாறிலாம் ஒன்னுமில்லை” என்ற மீனாள் படபடப்போடு தன் வீடு நோக்கிச் சென்றாள்.
“எம்புட்டு நாளுக்கு மறைச்சு ஓடுறன்னு பாக்குதேன்” என்ற நாச்சியின் குரல் தன் செவி தீண்டிட… மீனாள் நடையை எட்டிப்போட்டாள்.
“மதினிக்கு எப்புடித் தெரிஞ்சுது? இன்னும் யாருக்கெல்லாம் தெரியும்? எல்லாரும் கவனிக்கிறாய்ங்களோ?” என்று புலம்பியபடி மீனாள் தென்னந்தோப்பிற்குள் வர, அங்கு கௌதம் நின்றிருந்தான்.
“என்ன மீனு தனியா பேசிக்கிட்டுவர?”
கௌதமின் குரலில் பதறி சீரானாள்.
“ஹேய் என்னாச்சு?”
“ஒன்னுமில்லை” என்றவளை கௌதம் நம்பாத பார்வை பார்க்க…
“ஏன் சுபா அக்காக்கு நோ சொல்ற?” என திசை திருப்பக் கேட்டாள். ஆனால் ஏற்கனவே இதைப்பற்றி அவனிடம் பேசவேண்டுமென நினைத்து தானிருந்தாள். இப்போது அவன் தன்னை கேள்வி கேட்காமலிருக்க, அவனை கேட்டு வைத்தாள்.
கௌதம் மௌனமாக நிற்க…
“உங்களுக்கும் சுபா அக்காவை ரொம்ப புடிக்கும் தெரியுது. பொறவு ஏன் அவிங்களை கஷ்டப்படுத்துற? உன்னை அக்காவுக்கு அம்புட்டு புடிக்குமின்னு பாக்குற எனக்கே தெரியுது. உனக்கு தெரியலையா? தெரியும்… அவிங்களை புடிக்கும்… இல்லைன்னா நேத்து ராத்திரி…” என்று இழுத்தவள் ஒற்றை கண்ணடித்து, “மாமா வூட்டு தொட்டிகிட்ட… செம சீனு. நானும் வீரா மாமாவும் பார்த்துப்புட்டோம். ஆனால், நான் கண்ணை மூடிக்கிட்டேன்ப்பா” என்று சிரித்தாள்.
கௌதம் மீனாள் சொல்லியதற்கு அதிரவுமில்லை, அசடு வழியவுமில்லை.
சிலைபோல் நின்றிருந்தான்.
“புடிக்காமத்தேன் அவுங்க முத்தம் கொடுத்தப்போ தள்ளிவுடாம வாங்கிட்டு நின்னியோ?” என்றாள்.
“எனக்கும் புடிக்கும் மீனு” என்ற கௌதம், “அவ என்னை விரும்புறதுக்கு முன்னவே, எனக்கு அவளை அவ்ளோ பிடிக்கும். ஆனால், என் காதலை சொல்ற தைரியம் எனக்கில்லை. என் அப்பா எப்படின்னு உனக்கே தெரியும். ஏற்கனவே பாண்டியன் மாமான்னா ஆகாது. இதுல அபிராமி சித்தியோட அண்ணன் பொண்ணுன்னா சொல்லவே வேண்டாம். அம்மா அப்பாவுக்கு மேல. ஏதோ ஒட்டி உறவாடலனாலும், முகம் கொடுத்து பேசுற அளவுக்காவது அப்பா இருக்கார். அதுவும் மருதன் மாமாக்காக. என்னயிருந்தாலும் அம்மாவுக்கு அண்ண உறவும் வேணுமே” என்றதோடு, “என் காதல் தெரிஞ்சுது அம்புட்டுதேன். பன்னெண்டு இல்லை பலாயிரம் வருசமானாலும் இங்கிட்டு நாங்க எட்டிப்பார்க்க முடியாது” என்றான்.
“மாமா மறுக்கத்தேன் செய்வாருன்னு நீயே மனசை குழம்பிக்கிட்டு, சுபா அக்காவையும் வேதனை படுத்தாத. இன்னும் உனக்கு கல்யாண வயசாகலயே! கொஞ்சம் வெயிட் பண்ணு. சுபா அக்காகிட்ட இப்போ என்கிட்ட சொன்னதலாம் பொறுமையா சொல்லு. கண்டிப்பா புரிஞ்சிக்கும். உனக்காக காத்திருக்கும். அதுக்குள்ள நீயி பொறுமையா அத்தைகிட்ட எடுத்து சொல்லி புரிய வச்சு மாமவையும் சம்மதிக்க வச்சிப்புடு. மனசுல ஆசையிருக்கும்போது, சேர என்ன வழின்னு ரோசிக்காம… எட்ட நின்னு நீயும் வெசனப்பட்டு சுபா அக்காவையும் அழ வச்சிக்கிட்டு… நல்லாவாயிருக்கு?” என்றாள்.
“அப்போ லவ் பண்ணலாமுங்கிறியா?” கௌதம் கண்கள் மின்ன கேட்டான்.
இந்த இடத்தில் தான் வசந்தியால் அவர்களின் பேச்சினைக் கேட்க நேர்ந்தது.
“ஆமாங்கிறேன்!”
“நிஜமா பண்ணலாமா?”
“பண்ணலாமே!” மீனாள் உற்சாகமாகக் கூறினாள். முகம் முழுக்க சுபாவின் மகிழ்வை நினைத்து மகிழ்ந்தவளாக.
தன்னை மறைத்து நின்று பார்த்துக்கொண்டிருந்த வசந்திக்கும் அத்தனை மகிழ்வை கொடுத்தது.
“ஹ்ம்ம்… லவ் பண்ணலாமுங்கிற?”
“ஆமாண்டா” என்ற மீனாள், அவனை நெருங்கி “நைட்டே சொல்லிபுடு. சுபா அக்கா கொடுத்ததை நீயும் திருப்பிக் கொடுத்துடு” என்று குறும்பாக முணுமுணுக்க… கௌதமும் சிரிப்போடு அவளின் காதை திருகி, “சரியான வாலு. கொஞ்ச நேரத்துல என்னையவே கவுத்துட்டியே” என்க வசந்தி அதீத புன்னகையோடு அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
வசந்தி, தான் பார்த்தது, கேட்டது வைத்து என்ன தெரிந்து புரிந்துகொண்டாரோ?
இதனால், அவரால்… பெரும் பிரச்சனை மட்டும் உருவாக இருக்கிறது. அது யாருக்கு பாதகமாக அமைந்திடுமோ!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வில்லன் மட்டும் தான் இருக்கார்னு பார்த்தா வில்லியும் இருக்கும் போல … ஓ அப்போ சுபா குடுத்தது முத்தமா அதை தான் டெமோ காட்டவா அப்படின்னு கேட்டானா வீரன் … வீரா இப்படி இருக்கது எங்களுக்கே கஷ்டமா இருக்கு … மீனா கௌதமுக்கு பரிசம் போட்ட அப்புறம் தான் வாயை திறக்கும் போல … இங்க கௌதம் சுபாக்கு ஓகே சொல்ல … அங்க வசந்தி கௌதம் மீனுக்கு ஓகே சொல்ல பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆக போகுது …
உரிமையுள்ள தங்கச்சி கேட்கிறத செய்யவும் முடியாம மறுப்பு சொல்லவும் முடியாம திணறுராறு மருதன்.
வாய் வார்த்தையா சொல்லி இப்போதைக்கு சமாளிக்க பார்த்தாலும் அந்த வாரத்தையே பிறகு வினையா வந்து நிக்குமே!
மீனாள் சொன்னதுக்காக விலகி நிக்கும் வீரா அவளை மத்தவங்க உரிமை கொண்டாடுறதா பார்த்துட்டு அமைதிக்காப்பானா?
ஏதே – யார் பொண்ண யார் தூக்குறது ?!!!