
அகம்-9

மறுநாள் காலை..
“அழகரு! அழகரு! எங்கே இருக்கே?”
“சின்னத்தை அழகரைப் பார்த்தீங்களா?”
“இங்கணதான் நின்னுட்டு இருந்தான். புறத்தே போய் பாரு!” அரசி சொல்லிவிட்டு நகர,
“பெரியத்தை அழகரைப் பார்த்தீங்களா?” எதிரே வந்த பூங்கொடியிடம் வினவினாள் கருவிழி.
“என்கிட்டே என்னத்துக்குடி கேட்கிற? ரெண்டு பேரும் ரெட்டைப் புள்ளைகளாட்டம் ஒட்டிக்கிட்டு திரிவீக! என்கிட்டே கேட்கிறவ? போய் தேடுடி இவளே..!” எனச் சொல்லிவிட்டு பூங்கொடியும் நகர்ந்துவிட்டார்.
“அம்மாச்சி! அழகரைப் பார்த்தீங்க.?” மாட்டுத் தொழுவத்தில் கன்றுக்குட்டி பாலருந்துவதை இரசித்துக் கொண்டிருந்த அங்கயற்கண்ணியிடம் வினவினாள் கருவிழி.
“உன் மாமன் மயனை என் சுருக்குப் பைக்குள்ளே ஒளிச்சு வச்சிருக்கேன். போடி அகம் பிடிச்சக் கழுதை! கல்யாணத்துக்கு இன்னும் நாள் கிடக்கு ஓயாமல் அவன் பின்னாலேயே சுத்தாதே..!” தன் பங்குக்கு பேத்தியை ஏசினார் அங்கயற்கண்ணி.
“போங்க அம்மாச்சி! உங்கிட்டே போய் கேட்டேன் பாரு! என்னைச் சொல்லணும்!” தலையில் அடித்துக் கொண்டவள் வீட்டின் பின் புறத்தை நோக்கி நகர்ந்தாள்.
“அழகரு! எங்கே போய்த் தொலைஞ்சே? காலேஜூக்கு நேரமாகிடுச்சு!” கண்கள் பின்புறத் தோட்டத்தில் அவனைத் தேடியது.
தோட்டத்தில் இருந்த மாமரத்தில் சரிந்து விழ இருந்த குருவிக் கூட்டை பாதுகாப்பாய் கீழே விழாத வண்ணம் வைத்துவிட்டு, பொத்தென அத்தை மகளின் பின்னால் குதித்தான் துடிவேல் அழகர்.
“ஆத்தீ!” என அலறியவளுக்கு, அவனைப் பார்த்ததும் ஆசுவாசப் பெருமூச்சு வெளி வந்தது.
“லூசு மாமா! பயந்துட்டேன் போ! திக்கு திக்குன்னு இருக்கு!” படபடத்த நெஞ்சை கரத்தால் அழுத்தியபடியே சொன்னாள் கருவிழி.
“உன்னை எவன் இங்கிட்டு வரச் சொன்னது? காலேஜூக்கு நேரமாகிருச்சு தானே? போக வேண்டியது தானே?” எங்கோ பார்த்து பதில் பேசினான் அவன்.
“மாமா! எப்போவும் நீ தானே வந்து விடுவே? ஏன் இப்படியெல்லாம் பண்ணுறே? நான் தனியா எப்படி காலேஜ் போவேன்?!”
“ஏன் நடந்து போ! கால் இல்லையா? நீ ஒண்ணும் எல்.கே.ஜி குழந்தை இல்லை! உன்னை விடறதுக்கும் கூட்டிட்டு வர்ரதுக்கும் ஏப்போவும் யாராவது இருந்துட்டே இருக்க மாட்டாங்க! நீயே போய் பழகிக்கோ!” அங்கிருந்து நகர முயன்றவனை அழுத்தமாய்க் கைப்பிடித்து இழுத்து நிறுத்தினாள் கருவிழி. அவனின் உரமேறிய முரட்டு மாநிறக் கரம், அவளின் வெண் பஞ்சைப் போன்ற மென் கரத்தினுள் சிறைபட்டிருந்தது.
“அழகரு! ப்ளீஸ் அழகரு..! நான் பாவம் தானே? எனக்கு தனியா போக பயம்ன்னு உனக்கு தெரியும் தானே?”
“பாண்டிச்சேரி வரை தனியா போகத் தெரிஞ்சவளுக்கு, இங்கண இருக்கிற காலேஜ் போறதுக்கு பயமாம். கேட்கிறவன் கேணையானா இருந்தால் கேப்பையிலும் நெய் வடியும்ன்னு சொல்வாங்களாம்.!” எனச் சொன்னவனிடம், அவளின் கொஞ்சல் கெஞ்சல் எதுவுமே எடுபடவே இல்லை.
“போ! ரொம்பத்தான் பண்ணுறே! நானே தனியா போய்க்கிறேன் போ!” கோபமாய் அங்கிருந்து அவள் நகர, வீம்புக்கென்றே இழுத்துப் பிடித்தக் கோபத்துடன் அசையாமல் கற்சிலையாய் நின்றிருந்தான் அழகர்.
“டேய் டென் ருப்பீஸ்..! என்னைக் கொஞ்சம் காலேஜில் விட்டுடுடா!” வாகனத்தைக் கிளப்பிக் கொண்டிருந்த வீரபத்ரனிடம் வினவினாள் கருவிழி.
“ஸாரி! உன்னையெல்லாம் விட முடியாது. என்னை டென் ருப்பீஸ்ன்னு சொல்றே?! நீ தான் அஞ்சு பைசா மை டப்பி! முட்டைக்கண்ணி என்கிட்டே எல்லாம் வராதே ஓடிரு!” எனச் சொல்லிவிட்டு அவள் முறைப்பைப் பொருட்படுத்தாது வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு ஓடிவிட்டான் வீரபத்ரன்.
“போடா பதிற்றுப்பத்து.. எப்படியும் வீட்டுக்கு தானே வருவே? இரு உன்னை வச்சிக்கிறேன்..!” எனக் கத்தியவள்,
“எல்லாரும் சொல்லி வச்சது போல் செய்றீங்களா? யானைக்கு ஒரு காலம் வந்தால், இந்தக் கருவிழிக்கும் ஒரு காலம் வரும்..! அப்போ வச்சுக்கிறேன் உங்க எல்லாரையும் ” எனப் புலம்பியபடியே தோள்பையை மாட்டிக் கொண்டவள் விறுவிறுவென வாசலை நோக்கி நடந்திருந்தாள். அவள் செல்வதையே வாசலுக்கு வந்து நின்று அழகர் பார்த்துக் கொண்டே இருக்க, வாசலைத் தாண்டிப் போனவள், ஏதோ தோன்றியவளாய் மீண்டும் உள்ளே வந்தாள்.
“என்னத்துக்குடி இங்கே வந்தே? திரும்ப மாமா மாமான்னு கெஞ்சலாம்ன்னு வந்தியாக்கும்?” எண்ணெயில் விழுந்த கடுகாய்ப் பொரிந்தான் அழகர்.
“ரொம்ப ஆசை தான் மாமா! ஒத்தையில் போ, போன்னு விரட்டினால், எப்படி போறது?” எனச் சொன்னவள் அவன் சட்டைப் பாக்கெட்டில் உரிமையாய் கைவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்க, பெண்ணவளின் தீண்டலில் தடுமாறி, ஸ்தம்பித்து நின்றிருந்தான் துடிவேல் அழகர்.
********
“ச்சீ! இந்த பஸ்ஸில் எப்படித்தான் வர்ராங்களோ? இந்நேரம் அழகர் இருந்திருந்தால், பொத்துனாப்ல கொண்டு வந்து விடுருக்கும்! என்ன தான் நினைச்சுட்டு இருக்கோ, மொகரையைத் தூக்கி வச்சிட்டு திரியுது.!” எனப் புலம்பியபடியே கல்லூரி வாசலில் இறங்கி, மெதுவாய் கல்லூரியை நோக்கி நடந்தாள். பேருந்தில் கூட்டத்தில் இடிபட்டு வருவதற்குள் தலை, உடை எல்லாம் கலைந்து அவள் விரித்து விட்டிருந்த சுருள் கூந்தல் பப்பரக்கா என பரப்பிக் கொண்டு நின்றது.
“ம்ப்ச்! இது வேற! அழகரா இருந்திருந்தால், தலை கலைஞ்சுரும்ன்னு மெதுவா வண்டி ஓட்டிட்டு வரும்!” என முணுமுணுத்தபடியே தன் தோள்பையிற்குள் கரம் நுழைத்து, சீப்பை தேடத் துவங்கினாள்.
“ஐயய்யோ! சாப்பாட்டை மறந்து வச்சுட்டேனே.! ம்ப்ச் அழகர் மாமா வந்திருந்தால் எல்லாத்தையும் ஞாபகமாய் எடுத்து வச்சிருக்கும்.!” கல்லூரியின் வாசலைத் தாண்டி உள்ளே நுழைவதற்குள்ளேயே ஆயிரம் முறைக்கும் அதிகமாகவே அவள் மனம் அழகரை நினைத்துவிட்டது.
பெண்களுக்கான ஓய்வறைக்குள் நுழைந்து, கலைந்த தலையையும் தன்னையும் சீர்படுத்திக் கொண்டு, தன் வகுப்பை நோக்கி அவள் நடந்தாள் அவள். அவள் வகுப்பறைக்கு எதிரே இருந்த வாகன நிறுத்தத்தில் தன் நவீனரக மகிழுந்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான் ரோஹன்.
“ஹேய் பேபி!” அவன் குரல் செவிகளைத் தீண்டியதும் இவளுக்குள் திடுக்கிடல்.
“ரோ.. ரோஹன்..!” திக்கித் திணறியபடி அவனை நோக்கி நடந்தவளுக்கு முதன் முறையாய் அவளை அறியாமலே பயம் வந்தது. நேற்று மது சொன்னவை அனைத்தும் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
“நேத்து கேட்டேனே? நல்லா யோசிச்சியா பேபி?” அவன் கண்கள் தன் ஆடையைத் தாண்டி துளைக்க முயல்வதை முதன்முறையாய் உணர்ந்தாள் பெண். அவன் அருகில் இதயம் நிறைய பயம் நிரம்பி வழிய, முகத்தில் வியர்வை மொட்டுக்கள் பூக்க ஆரம்பித்திருந்தன.
“இ.. இது சரி வரும்ன்னு எனக்கு தோணலை ரோஹன்.!” நெஞ்சக் கூடு நடுங்க, முதன் முறையாய் தன் உள்ளுணர்வு ஆபத்து என அலறுவதை உணர்ந்தாள் கருவிழி. அவளின் கருவிகள் நிலை கொள்ளாது அலைபாயத் துவங்கியது. அவன் கண் பார்த்துப் பேச முடியாது பார்வை சுற்றத்தில் அலைபாய்ந்தது.
“ஹேய் பேபி! நான் இங்கே இருக்கேன் டா! என்னைப் பார்த்துப் பேசு! உனக்கு ஏன் இப்படி வேர்க்குது? கார்க்குள்ளே வந்து உட்காரு!” கரம் பிடிக்க முயல, இரண்டடி தன்னால் பின்னால் நகர்ந்தாள் பாவை.
“இல்லை வேணாமே! எனக்கு க்ளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு! நான் கிளம்பறேன்!” அந்தச் சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டு ஓடிவிட நினைத்தாள் கருவிழி.
“ம்ப்ச் பேபி! நீ என்னை லவ் பண்ணுற தானே? பின்னே என்ன? லிவ்-இன் சொன்னதும் பயந்துட்டியா? எல்லாமே உனக்கு நான் சொல்லித் தர்ரேன் பேபி! டோன்ட் ஒர்ரி!” அவளின் சிவந்த கன்னங்களை தீண்ட முயன்றது அவன் முரட்டுக் கரங்கள்.
“வேணாம்! என்னைத் தொடாதே!” என அவன் கரத்தை தட்டி விட்டவள்,
“டோன்ட் டச் மீ!” நிமிர்வும் கொஞ்சம் கோபமுமாய்ச் சொன்னாள். அவளின் மலர்க் கரம் நெற்றி தாண்டி கன்னம் வழிந்த வியர்வையைச் சுண்டி எரிந்தது.
“விழி!” கோபமாய் உஷ்ண மூச்சுகளோடு அவளை முறைத்தான் ரோஹன்.
“என் நுனி விரல் கூட உன்னைத் தொடக் கூடாது அப்படித்தானே? அப்பறம் என்ன இதுக்குடி என்னை லவ் பண்ணுறே? பத்தினி வேஷம் போடுறியா? டெய்லி அந்தக் காட்டுமிராண்டி கூட ஒட்டி உரசிக்கிட்டு தானே வர்ர? நான் தொட்டால் மட்டும் உனக்கு எரியுதா? நல்ல மூடில் வந்தவனை மூட் அவுட் பண்ணுற பேபி!” அவன் குரல் ஹை-டெசிபலில் உயர்ந்து பின் நிதானத்திற்கு வந்தது.
இங்கே பித்துப் பிடித்தவள் போல் நின்றிருந்தாள் கருவிழி. கடந்த ஆறுமாதத்தில் முதன் முறையாய் ரோஹனின் கோபத்தைக் காண்கிறாள். உனக்கு கோபமே வராதா? என அவளே கூட அவனிடம் கேட்டிருக்கிறாள்.
“நோ பேபி! உன்கிட்டே கோபமா? நோ சான்ஸ்..!” வசீகரமாய் அவன் சிரித்தது ஒரு கணம் கண்களுக்குள் வந்து போனது. தன் ஒற்றை மறுப்பு அவனின் உண்மையான நிறத்தைக் காட்டிவிட்டதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.
‘மது சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான்..! என் உள்ளுணர்வு இங்கிருந்து ஓடச் சொல்கிறது! அபடியென்றால் ரோஹன் மீதான என் காதல்? நான் அவனைக் காதலிக்கிறேனா இல்லையா? எனக்ககே தெரியலையே? நான் இவன் பக்கத்தில் பாதுகாப்பா உணரலையே..? என் மனசு என்னதான் சொல்லுது? எனக்குப் புரியலையே?’ தனக்குள் பட்டிமன்றம் நடத்தியபடி அவள் நிற்க, கரத்தில் சிவப்பு ரோஜாவை ஏந்தியபடி அவள் முன் வந்து நின்றான் ரோஹன்.
“ஸாரி பேபி! ஸாரி! ஏதோ கோபத்தில் பேசிட்டேன். இன்னைக்கு ரோஸ் டேவாம்..! நாம லவ் பண்ணின பிறகு வர்ர முதல் ரோஸ் டே..! ஐ லவ் யூ பேபி! இது உனக்காகத் தான்.!” என்றவன் அவள்புறமாய் இரத்த சிவப்பு நிறத்திலிருந்த ரோஜாவை நீட்டினான். அழகான சிவப்பு நிற ரோஜா மலர், அவள் கண்களுக்கு தனக்கு வரப் போகும் அபாயத்தை உணர்த்துவதாய் தோன்றியது.
“இல்லை வேணாம்..!” தன் கரத்தினை அவள் பின் இழுத்துக் கொள்ள, வலுக்கடாயமாய் அவள் கரம் பிடித்து, அதில் ரோஜா மலரைத் திணித்தவன்,
“நான் உனக்கு ரோஸ் கொடுத்தேன் தானே? இப்போ நீ எனக்கு ஒரு கிஸ் கொடுப்பியாம்!” கண்களில் மயக்கம் தேக்கி அவன் சொல்ல நடுநடுங்கிப் போனாள் கருவிழி.
‘ஆத்தி! வகை தொகையா மாட்டிக்கிட்டேனா? கூறுகெட்டவன் வெட்கமே இல்லாமல், முத்தம் கொடுன்னு கேட்கிறான். இப்படியே விட்டால் முத்தம் கொடு, மொத்தம் கொடுன்னு கேட்பான். இவனைச் சும்மாவே விடக் கூடாது.! ‘ பயத்தையும் மீறி மனதிற்குள் வசை பாடியவள், அவன் கரத்திற்குள் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை உதறிவிட்டு,
“இங்கே பாரு ரோஹனு! முத்தம் கித்தம்ன்னு கேட்டே பல்லைக் கழற்றி கையில் கொடுத்துருவேன் பார்த்துக்கோ! மூஞ்சியும் மொகரக்கட்டையும் பாரு! பூவைத் தூக்கிட்டு வந்துட்டான். இவர் கல்யாணம் பண்ண மாட்டாராம். ஆனால் லவ் பண்ணுவாராம், கிஸ் பண்ணுவாராம்.. கல்யாணமே பண்ணாமல் வாழலாம்ன்னு சொல்லுவாராம்! நாங்க ஈஈன்னு பல்லைக்காட்டிட்டு வரணுமாம். என்ன நினைச்சே எல்லா விஷயத்திலும் இந்தக் கருவிழி விளையாட்டாய் இருப்பாள்ன்னு நினைச்சியோ? எங்க தாத்தா கிட்டே சொன்னேன் உன்னை தலையில்லாமல் தலைகீழா தொங்க விட்டுருவாரு பார்த்துக்கோ! இப்போ நான் சொல்றேன் டா வெள்ளைப் பன்னி! லெட்ஸ் பிரேக் அப்பு.! நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்!” அந்த நேரத்தில் தன் மனதில் பட்டதை, அப்படியே தன்னையறியாமல் சொல்லியிருந்தாள்.
அவளின் இயல்பான பேச்சில் அவன் திகைத்து நிற்பதையும் பொருட்படுத்தாது, அவன் கொடுத்த பூவை அவன் முகத்தில் வீசியவள்,
“ஓடிருடி கருவிழி! திரும்பவும் இந்த ரோஷம் கெட்டவன்கிட்டே மாட்டிக்காதே!” தனக்குள் பேசியவள் அங்கிருந்து வேகமாய் நடக்கத் துவங்கியிருந்தாள். முதன்முறையாய் கருவிழிக்கு நிதர்சனம் நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் உரைத்தது.
“பேபி! பேபி! வெய்ட்!” என்ற ரோஹனின் குரல் காற்றோடு கலந்து கரைந்து போனது. எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவள் போல, பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஓடினாள் பெண். மனம் முழுதும் அச்சம் அதிகமாய் நிரம்பி வழிந்தது.
“ஆத்தி! இந்தப் பரதேசிக்காக கையைக் கிழிச்சுக்கிட்டு சாகத் தெரிஞ்சேனே? அழகரு நீ சொன்னியே.. நான் தான் கேட்கலை! உசிரு போனால் இந்த ரோஹன் தருவானா? அடியேய் மது! உனக்கு கட்டிப்பிடிச்சு உம்மா குடுக்கணும்டி! நீ மட்டும் என் மூணாவது கண்ணைத் திறக்கல, எலிப்பொறிக்குள்ளே மாட்டின எலி மாதிரி சிக்கி சின்னா பின்னமாகிருப்பேனே..!” எனப் புலம்பிக் கொண்டே நடந்தவள், திடீரென தன் குறுக்கே வந்து நின்றவனின் மீது மோதி நின்றாள்.
“ஆத்தி..!” இதழ்கள் பயத்துடன் உச்சரித்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அஞ்சு ரூபாய் மை டப்பா 🤣🤣
அழகர் மனதில் தடுமாற்றம் இனிதே ஆரம்பம். 😍😍
அப்பாடா! ஒருவழியா விழி உள்ளுணர்வு விழிச்சிடுச்சு.
ரோஹன் பக்கத்தில் இருக்கும் போது வரும் பயம் அறிந்து விலகி ஓடி வந்துட்டா.
நாள் முழுக்க மனசுக்குள்ள அழகர் புராணம் பாடிட்டே இருக்காளே. எவ்ளோ தேடுது அவன மனசு.
விழி இப்போ தான் விழிச்சிருக்கா இனி அழகர் மேல் இருக்கும் அன்பு எத்தகையதுனு யோசிப்பா.
விழி ரோஹன்கிட்ட பேசின டயலாக் நல்லா இருந்தது.
😂😂😂 மைடப்பிக்கு இப்போதான் மூளை வேலை செய்யுது. அழகர் மனசை இவ புரிஞ்சுக்கிட்டு… எஎன்னவெல்லாம் பண்ண காத்திருக்காளோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💜💚💙
ரோஷன் கெட்ட ரோஹன் அவ்வளவு தான் எங்க கருவிழி திருந்திட்டா … ஹையோ அழகருக்கு காதல் வந்துடுச்சு …
ஆமா.. ஆமா.. அழகருக்கு காதல் வந்துருச்சு. இந்தப் புள்ளைக்கு என்னைக்கு புரியுமோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💛💜
விழி மோதி நின்றது அழகர் மேல தான… கதை நன்றாக நகர்கிறது sis…
ஆமா டியர் 😅 உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💜💚💛