Loading

    “வாட்? நானா…என்ன விளையாடுறியா, காஞ்சனாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது அவ்வளவு தான்.

    ஏற்கனவே எங்களோட பிரிச்சு விடர ரகசிய தொழிலை பத்தி, அவங்களுக்கு  தெரிஞ்சிருமோன்னு,  நானே பயந்துகிட்டு இருக்கேன். இதுல நானே அங்க பிரச்சனை பண்ணப் போறேன்னு மட்டும், அவங்களுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்.”

    “நிலா…ஏன் பயப்படற, இது எப்படி அம்மாக்கு தெரியும்? எப்படியும் அந்த கோயில் உங்க வீட்ல இருந்து ரொம்ப தூரம், அதோட கல்யாணத்துக்கு அவரோட நெருங்கிய உறவினர்களை தவிர, வேற யாரையும் கூப்பிடலைன்னு தான் ஈஸ்வர் சொல்லி இருக்காரே.

  அந்த அதிகாலை நேரத்துல யார் அங்க இருக்க போறா? அதோட அந்த கோயிலோ, நாலு அஞ்சு ஊர் தள்ளி தானே இருக்கு. எப்படியும் நீ இருக்கிற ஊருக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது.

     அப்பறம் என்ன நிலா… ஈஸ்வர்க்கு வாக்கு கொடுத்திருக்கோம், அதுனால அதை நல்லபடியா செஞ்சு முடிக்கணும் இல்லையா? அவரும் வேற பாவம்… ?”

    நிலாவிற்கும் வேறு வழி இருக்கவில்லை, ஈஸ்வருக்காக அவளும் விருப்பமேயின்றி தலையாட்டி வைத்தாள்.

    எப்படியும் திருமணதிற்கு வெளியில் இருந்து, வேறு யாரும் வர மாட்டார்கள் என்று ஈஸ்வர் உறுதி கூறியிருந்ததால், தானே அவனது காதலியாக நடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தவள், நடக்கப் போகும் நாடகத்திற்கு தயாரானாள்.

   ஆனால் அந்த கோவிலில் ஒரே முகூர்த்த நேரத்தில், அடுத்தடுத்து பல திருமணங்கள் நடைபெறும் என்பதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.

  ஈஸ்வர் கொடுத்திருந்த எண்ணிற்கு பலமுறை அழைத்துப் பார்த்தும், லைன் அவளுக்கு கிடைக்கவே இல்லை. அதனால் தற்போது ப்ளானில் ஏற்பட்ட மாற்றங்களை, மெசேஜ் மூலமாக அவனுக்கு அனுப்பி வைத்தவள், அவன் பதிலுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

      பலரின் தலையெழுத்தையே மாற்றப் போகும் அந்த திருமண நாளும் வந்தது. நிலாவும் அவளது பெற்றோர்களும், ஒரே கோவிலுக்கு செல்வதற்க்காகத் தான்,   கிளம்பி கொண்டிருந்தனர்.

   நிலா தனது தோழியின் திருமணத்திற்கு ரிதன்யாவோடு செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து கிளம்பி இருக்க, அவளது பெற்றோர்களும் தெரிந்தவருக்கு திருமணம் என்று கிளம்பி இருந்தனர்.

   ஆதிரன் எப்போதோ தனது கம்பெனி இருக்கும் பெங்களூருவிற்கு சென்று விட்டான். வெகு நாட்கள் கழித்து இன்று தான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

     ரிதன்யாவை அழைத்துச் செல்வதற்காக அவளது இருப்பிடத்திற்கு வந்தவள், அவள் தயாராகி கொண்டிருப்பதை கண்டு, அப்படியே ஹால் சோபாவில் தொப்பென்று விழுந்தாள்.

   ரிதன்யா தயாராக இருந்த போதும் வெளியே கிளம்பாமல், அங்கும் இங்கும்  ஓடிய படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது போனை பார்த்தபடியே இருந்தவள், அவள் எதிர்பார்த்த  குறுஞ்செய்தி வந்ததும், நிலாவின் மொபைல் ரிங் ஆவதற்காக காத்திருந்தாள்.

   நிலா ஹால் சோபாவில் கால்நீட்டி படுத்தபடி விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
 
   மனதின் குழப்பம் அவளது கண்களில் தெரிய, தான் செய்யப் போகும் காரியம் சரியா தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தவளின், அருகே வந்தமர்ந்த ரிதன்யா, அவள் முன்பு காபியை நீட்ட,

   எழுந்து அமர்ந்தபடியே கோப்பையை வாங்கிக் கொண்டவள் அப்போது தான் கவனித்தால், வீட்டில் யாருமே இல்லை.

    “தன்யா நீ மட்டும் தான் தனியா இங்க வந்திருக்கியா என்ன? கூண்டுக்கிளியான உன்ன உன் அம்மாவும் அப்பாவும் எப்படி தனியா விட்டாங்க?”

   “அப்பா பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்காரு, அம்மா பாட்டி கூட ஆன்மீக சுற்றுலா போயிருக்காங்க.

  அதனால தான் நான் என் பிரண்டு மேரேஜ்காக, இங்க தனியா  வந்திருக்கேன். ஏன் அவங்க இல்லாட்டி நீ என்னை பார்த்துக்க மாட்டியா என்ன?”

    “ஆஹா பார்த்துகிட்டா போச்சு, எங்கே எந்திரிச்சு நின்னு, போற கல்யாணத்துலயே யாராவது பெஸ்ட் மாப்பிள்ளை பார்த்து, உனக்கும் முடிச்சு வச்சிடலாம்.”

    கேலியோடு பேசிக் கொண்டிருந்த நிலாவின் மொபைல் போன் ஒலிக்க, ரிதன்யாவின் கண்கள் கூர்மையானது.
  
    ஈஸ்வரின் நம்பரை கண்டதும்  பரபரப்பான நிலா, அலைபேசியை லவுடு  ஸ்பீக்கரில் போட்டவள் பேசத் தொடங்கினாள்.

    “சார் கிளம்பிட்டோம் இன்னும் முக்கால் மணி நேரத்துல உங்க முன்னாடி இருப்போம்.”

    “நிலா பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச். நேத்து நைட்டு எங்க வீட்ல சரியான சண்டை.

    நான் இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைச்சு போட்ட ப்ளான், எப்படி வெளிய தெரிஞ்சதுன்னு தெரியல.

  வீட்ல இருக்கவங்க நான் கல்யாணத்தை நிறுத்த, நிறைய ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிறதா, அம்மாகிட்ட சொல்லிட்டாங்க.”

   “அச்சச்சோ என்ன சார் சொல்றீங்க?”

    “ம்ம்…ஆனா நான் இன்னொரு பொண்ணை லவ் பண்றதால தான், இதை நிறுத்த முடிவு பண்ணியதாகவும், இன்னைக்கு காலைல அவ என்னைத் தேடி வரேன்னு சொல்லி இருக்கான்னும்,   இன்னைக்கு அவள தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னும், அம்மாகிட்ட சொல்லிட்டேன்.”

    “எது? சார்… “

    “ நான் இன்னும் முடிக்கல நிலா, என்னோட அம்மா அது உண்மையா இருந்தா, அவ வரட்டும் உனக்கு அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன், இல்லாட்டி நாங்க பார்த்திருக்க பொண்ணை நீ இன்னைக்கு கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்லிட்டாங்க.

   என்னோட சிச்சுவேஷன் உங்களுக்கு புரிஞ்சது இல்லையா? அதனால சுகந்தனை கல்யாணப் பொண்ணு போல அலங்காரம் பண்ணிகிட்டு வர சொல்லுங்க.”

   “சார் என்ன சொல்றீங்க? அது…சுகந்தன்…? நீங்க என் மெசேஜ்…”

    “சாரி நிலா எனக்கு இப்போ பேசறதுக்கு நேரம் இல்ல,  அப்பறம் கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது, அதை நிறுத்தறதுக்கு என்னோட ரிலேஷன் மூலமா, ஒரு பிரச்சனையை தூண்டி விட்டிருக்கேன்.

    அதற்கான ஏற்பாடும் பண்ணிட்டேன், அதனால சுகந்தன் கழுத்துல தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை, கண்டிப்பா உருவாகாது. அதனால ப்ளீஸ் மணக்கோலத்துல அவரைக் கிளம்பி வரச் சொல்லுங்க.”

   அதற்குள் பக்கத்தில் அவனை யாரோ அழைத்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க, அவனும் போனை வைத்து விட்டான்.

   போனை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் , ரிதன்யாவும் அதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

    “என்ன தன்யா இவர் இப்படி சொல்றாரு?”

    “அவர் தான் சொல்றாரே நிலா, சிட்டுவேஷன் சரியில்லைன்னு அப்பறம் என்ன? எப்படியும் நாம கல்யாணத்தை வேற வழில நிறுத்தனும்னு நினைச்சோம், ஆனா இப்போ அவரே அதை நிறுத்த ஏற்பாடு பண்ணி இருக்கறதா சொல்றாரு. .

   இப்போ உன்னோட வேலை மணமேடையில மணமகளா அவர் பக்கத்துல உட்காரனும், டென்ஷன் ஆகாதே டா, அது தான் எப்படியும் நிற்கப் போகுதே.”

    “என்ன விளையாடுறியா தன்யா, என் குடும்பத்துக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது அவ்வளவு தான்.”

    “நிலா யாருக்கும் இந்த விஷயம் தெரிய போறதே இல்ல, அதோட அவர் தான் சொன்னாரே, அவங்க ரிலேஷன்ஸ் மட்டும் தான் அங்க இருப்பாங்கன்னு.

   அதோட கல்யாணத்தை நிறுத்த தான் அவரே ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொல்றாரு, இதுக்கு மேல உனக்கு என்ன குழப்பம்.”

   நிலாவின் முகம் தெளிவடையவே இல்லை, மனதிற்குள் ஏதோ தவறாக நடக்கப் போகின்றது என்று, ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவளது முகத்தை விரல் கொண்டு நிமிர்த்திய ரிதன்யா,

    “நிலா…எதுவும் தப்பா நடக்காது, நான் உன் கூட தானே இருக்கேன். அதோட இது தான் உன்னோட கடைசி ப்ராஜெக்ட்.

   அப்புறம் என்ன? உள்ள பெட் மேல என்னோட சாரீஸ் இருக்கு பாரு, அதை உன் நிச்சியத்துக்காக கொண்டு வந்தேன், நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி தானே இருக்கோம், பிளவுஸ் பிட்டிங்கா தான் இருக்கும்.

   அதை போட்டுட்டு வா இன்னையோட இந்த பிரச்சனையை முடிச்சிடலாம்.”

      நிலாவிற்கு மனதே இல்லை ஏதோ மனதை பிசைவது போல இருந்தது.

      “தன்யா நாம ரிஸ்க் எடுக்கறோமோன்னு தோணுது…இது எனக்கு சரியா படல.”

    “நான் தான் இருக்கேன்ல, அப்படி ஏதாவது தப்பா நடக்க விட்டுருவேனா? நீ போய் ரெடி ஆகிட்டு வா, நான் வெளியே இருக்கேன்.”

    நிலாவை பெட்ரூமினுள் விட்டு விட்டு வந்தவள், அவசரமாக தனது மொபைலில் இருந்து அன்நோன் நம்பர் மூலமாக, ஆதிரனின் நம்பருக்கு மெசேஜ் செய்தாள்.

   சற்று நேரத்தில் நிலா தன் காதலனுடன், சுப்பிரமணியர் கோவிலில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், இப்படிப்பட்ட பெண்ணை நம்பிய தங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும், கூறி ஒரு மெசேஜை ஆதிரனுக்கு அனுப்பி வைத்தாள்.

   கபோர்டில் இருந்த நகை பெட்டியை எடுத்தவள், நிலாவிற்கு மணப்பெண் அலங்காரம் செய்யத் தொடங்கினாள்.

  மணப்பெண் அலங்காரத்தில் தேவதை போன்று ஜொலித்தவளின் கண்களில் ஒருவித தவிப்பு, ரிதன்யாவின் கண்களிலும் நீர் கோர்த்து விட்டது. நிலாவை கட்டிக் கொண்டவளின் உதடுகள் தானாக முணுமுணுத்தது.

    “ஐ அம்… ஐ அம் சாரி நிலா, என்னால தானே உனக்கு இப்படி ஒரு நிலைமை. ஐ அம் ரியலி சாரி டி, நான் உன் பிரண்டா இல்லாம இருந்திருந்தா, இப்படி ஒரு நிலைமை உனக்கு வந்திருக்காது இல்லையா…”

   கதறி அழுது கொண்டிருந்த அவளை, தற்போது நிலா தேற்றும் நிலை ஏற்பட்டது.

      “ஹேய் தன்யா என்ன? என்ன என்னவோ பேசிட்டு இருக்க, நான் ஆல்ரெடி செஞ்சுட்டு இருந்த ப்ராஜெக்ட் தானே.

   இதை விட மோசமான நிலைமை எல்லாம் நாங்க பார்த்திருக்கோம். விடு நீ என்ன வேணும்னா செஞ்ச? பார்த்துக்கலாம்.

   எத்தனையோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா.

   முதல்ல முகத்தை தொடச்சிட்டு கிளம்பு, இல்லைன்னா, அந்த ஈஸ்வர் நம்மளை கூட்டிட்டு போக இங்கேயே வந்துட போறாரு.”

    நிலாவின் ஸ்கூட்டியை அங்கேயே விட்டுவிட்டு, டாக்ஸி வைத்துக் கொண்டு இருவரும் கோயிலுக்கு சென்றனர்.

   கோவிலுக்கு வெளியே பதட்டத்தோடு நின்று கொண்டிருந்த ஈஸ்வர், டாக்ஸியில் இருந்து இறங்கிய நிலாவின் தோற்றத்தை கண்டு, ஒரு நிமிடம் இமைக்க மறந்தான்.

   அடுத்த நொடியே அவள் அருகே சென்று பேச முயன்ற போது, ஈஸ்வரின் உறவுகள் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

   “அடடே நீ தானாம்மா அது? எங்க ஈஸ்வர் உன்ன தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நிக்கிறான், அதுவும் சொந்த பந்தங்களான எங்களையெல்லாம் எதிர்த்துகிட்டு, அப்படி என்ன தான் அவனுக்கு சொக்கு பொடி போட்டியோ?”

   அதற்குள் இன்னொருவர் பேசியவரை அதட்ட,

   “சரி சரி நேரம் ஆச்சு, சீக்கிரமா மாப்பிள்ளையும் பொண்ணையும் மணமேடையில் உட்கார வைங்க.”

  நிலா ஈஸ்வரிடம் பேசுவதற்காக திரும்ப,

   “அட கல்யாணத்துக்கு அப்பறம் பேசிட்டே தானே இருக்க போறீங்க, கொஞ்ச நேரம் நாங்க சொல்றதுபடி மணமேடைல அமைதியா உட்காருங்க வாங்க.”

   நிலா அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, அடுத்தடுத்து திருமண சம்பிரதாயங்கள் அங்கு ஆரம்பமானது.

      அதே நேரம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஆதிரன், தனது மொபைலில் வந்திருந்த மெசேஜை பார்த்து, ஒரு நிமிடம் தான் யோசித்தான்.

     பிறகு அதை தேவையற்றது என்று ஒதுக்கி விட்டான். ஆனால் சிறிது நேரத்திலேயே மணப்பெண் அலங்காரத்தோடு கூடிய நிலாவின் புகைப்படம் வந்திருக்க, அதைக் கண்டு அதிர்ந்து போனவனோ, உடனே தனது அத்தைக்கு ஃபோன் செய்தான். ஆனால் அது சுவிட்ச் ஆப் என்று வர அடுத்து மாமாவுக்கு போன் செய்தான்.

   ஆனால் அது பேக்கினுள்  விஷ்வாவிற்கு கொடுக்கப் போகும் கிப்ட்டின் அடியில், சத்தமில்லாமல் ரிங் போய் கொண்டிருக்க, டாக்ஸியில் போய் கொண்டிருந்தவர்களுக்கு அதன் சத்தம் சுத்தமாக கேட்கவில்லை.

   அடுத்து அவன் நிலாவிற்கு ஃபோன் செய்ய, அந்த மொபைல் தான் தற்போது ரிதன்யாவின் கையில் இருந்ததே, அழைப்பை கட் செய்தவள் கையோடு மொபைலை ஸ்விட்ச் ஆஃப்பும் செய்து விட்டாள்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. போச்சு டா … நிலா நல்லா சிக்கிக்கிட்டா … ஆதிரன் நிலம அதோ கதி தான் … இப்போதான் விஷ்வா எதுக்குனு தெரியுது … என்னெல்லாம் நடக்க போகுதோ …