
அத்தியாயம் 27
கோபம் தாறுமாறாக ஏற, அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் பேசிவிட வேண்டும் என்று உள்மனம் உந்த ஊர்மி வாயைத் திறக்கும் நேரம், “நம்ம மேல் தப்பு இருக்கும் போது நாம கொஞ்சம் பொறுத்துப் போவது தப்பில்லை.” என்கிற லீலாவின் வார்த்தைகள் நினைவு வந்தது அவளுக்கு.
லீலா, ருக்மணி, தேவகி மூவரும் அவர்களின் வருங்காலக் கணவர்களிடம் ஒரு உண்மையை மறைத்திருந்தார்கள். ஊர்மி அதைச் செய்யவில்லை. ஆனால் அதைவிட பெரிய தவறை அல்லவா செய்திருந்தாள்.
நாகா அத்தனை முறை பேசியும், கெஞ்சியும் திருமணத்தை நிறுத்த மாட்டேன் என்று அடம்பிடித்த வடிவேல், ஊர்மிளா ஒருவார்த்தை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் நிச்சயம் அவர்களுக்கான திருமணத்தை நிறுத்தி இருப்பார். ஆனால் ஊர்மி இறுதிவரை அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லவில்லையே.
‘எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை’ என்று முகத்துக்கு நேராக சொன்ன ஒருவனை, கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி, முழுக்க முழுக்க அவள் சுயநலத்திற்காக அல்லவா திருமணம் செய்திருக்கிறாள்.
இந்த நினைப்பு ஊர்மியை பயங்கரமாகக் குத்தியது. அவன் நினைத்துக்கொண்டிருப்பது போல் பணத்திற்காக அவனைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், தன் சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை தானே, தன் மேல் இஷ்டமில்லாத அவனைத் திருமணம் செய்து கொள்ள வைத்தது. இதுவும் சுயநலம் தானே.
காலம் போனால் எல்லாம் சரியாகிவிடும், மாமா சொன்னால் அவன் கேட்டுக்கொள்வான் என ஒன்றுமில்லாத காரணங்களைச் சொல்லி, தன் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு திருமணத்தை நடத்திக்கொண்டது தான் தானே என்கிற உண்மை கசந்தது ஊர்மிளைக்கு.
ஒருவேளை தான் அல்லாது வேறு பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் இப்படியெல்லாம் பேசி இருக்க மாட்டானோ? அவளிடம் அன்பாக நடந்துகொண்டிருப்பானோ. கட்டாயத்திருமணம் என்பதால் தான் இத்தனை கோபமோ என அவன் பக்கமும் யோசித்தாள்.
திருமணம் செய்ய முடிவெடுத்தது, நான். அதைக் காப்பாற்ற வேண்டிய முயற்சியையும் நானே எடுக்க வேண்டும். ஆனால் இப்போது நேரம் சரியில்லை. கணவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நெடுநேரம் அமைதியாகத் தாக்குப் பிடிக்க, தன்னால் முடியாது.
வெகுவிரைவில் தேவையில்லாத வார்த்தைகள் தன்னை மீறி வெளியே வந்துவிடும் என்று நினைத்த ஊர்மி, கணவன் என்கிற பெயரில் தன் முன் நிற்பவனை சிறிதும் பொருட்படுத்தாமல் முதலிரவு அறையைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.
தோட்டத்தில் செடியோடு செடியாய் நின்று கொண்டு ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கோபம் மட்டும் அடங்குவேனா என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. தன் மீது தவறு இருக்கிறது தான். அதற்காக இப்படிக் கோபப்பட்டு அவன் தன் தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று மனதிற்குள் பொறுமினாள்.
அவனுக்கோ கட்டாயப்படுத்தி தாலி கட்டிக்கொண்ட மனைவியை இவ்வளவு பேசியும் மனது குளிரவில்லை. “தன்னை அதட்டி கூட பேசாத அப்பா, தன்னுடைய ஆசை எதுவாக இருந்தாலும், அது பேராசையாகவே இருந்தாலும் பொருட்படுத்தாமல் நிறைவேற்றி வைக்கும் தன்னுடைய அப்பா, இவளுக்காகத் தானே தன்னை திட்டினார், அடிப்பதற்குக் கை ஓங்கினார் என நினைத்து நினைத்து மனம் வெதும்பினான். அதை நினைக்க நினைக்க அவனுக்கு மனது ஆறவே இல்லை.
தன்னுடன் பிறந்த மற்ற மூவரையும், இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை தாழ்த்திப் பேசும் போதெல்லாம் பாசமான தந்தையாக அறிவுரை மட்டுமே சொன்னவர், இவளைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வதற்குள் அப்படி கொதித்துவிட்டார் என்றால் தன்னை விட இவள் தான் அவருக்குப் பெரிதாகிவிட்டாளா? என்னும் நினைப்பு நாகாவை அரித்துக்கொண்டே இருந்தது. பெற்றவர் மீது கொண்ட பெரும்பாசம் ஊர்மியால் பொஸஸிவ்னஸ்ஸாக மாறி அவள் மீதே கோபமாகத் திரும்பியது.
அவள் அறைக்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு, “இவ என்கூட அனுசரிச்சு கடைசிவரை நல்லபடியா வாழ்வான்னு நம்பி தானே அப்பா என் பேச்சைக் கேட்க மறுத்துட்டார். இவளை என் வாழ்க்கையை விட்டு ஓட வைக்கிறேன்.
இவள் எனக்குச் சரியானவ இல்லன்னு நான் சொன்னது தான் உண்மைன்னு அப்பா புரிஞ்சிக்கணும். அதுக்கு அப்பா முன்னாடி இவளைக் கெட்டவளா, புருசனை மதிக்காதவளா, பணப்பேராசை பிடிச்சவளா ப்ரேம் பண்ணனும்.” என வில்லங்கமாக யோசித்திருந்தான்.
அதற்காகவே இல்லாத பொல்லாத விஷயங்களைப் பேசி அவளைத் தூண்டிவிட்டிருந்தான். இத்தனை திட்டம் போட்டும் இறுதியில் அவன் நினைத்தது நடக்கவில்லை.
“நான் என்ன தான் பேசினாலும் இந்த அம்மா ஏதோ மகாத்மா காந்தியோட கொள்ளுப் பேத்தி மாதிரி இவ்வளவு அமைதியா இருக்காளே. விடக்கூடாது இவளை நம்ம வாழ்க்கையை விட்டு ஓட வைச்சே தீரனும்.” என்னும் முடிவுடன் அவளைத் தேடி வந்தான் நாகா.
“ராஸ்கல் என்ன பேச்சு பேசுறான். அவன் வீடு, அவன் ரூம் னா என்ன வேண்ணாலும் பேசுவானா?” ஊர்மி தன்னைப் போல் புலம்ப, “ஆமாடி என் வீடு, என் ரூம், என் வாய் நான் பேசத்தான் செய்வேன்.” என்றான் அவள் பின்னில் இருந்து.
திடீரெனக் கேட்ட குரலில் உடல் தூக்கிப் போடத் திரும்பியவள், “நீ எதுக்கு இங்க வந்த. என்னைக் கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டியா?” ஒருமையில் சீறினாள்.
“நிம்மதி வேணும் னு நினைச்சவ, உன் மேல் துளி கூட ஆசை இல்லாத ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது. முதலிரவு அறையை விட்டு ஓடஓட விரட்டி விட்ட பிறகும் இந்த வீட்டில் இருந்திருக்கக் கூடாது.” வன்மம் மொத்தத்தையும் கொட்டினான்.
“இங்க பார் தாலி கட்டின புருஷனாச்சே, உன்கூட தான் கடைசி வரைக்கும் வாழ்ந்து தொலைக்கனுமேங்கிற நினைப்பு எனக்குள்ள இன்னும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கிறதால் தான், நீ இப்படி நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு ஆம்பளைத் திமிரைக் காட்டிக்கிட்டு இருக்க.
உனக்கு பதிலுக்குப் பதில் நான் பேச ஆரம்பிச்சேன் நீ மட்டும் இல்ல, இந்த வீட்டில் இருக்கிற ஒருத்தர் கூட தாங்க மாட்டாங்க. என் அக்காங்களையும் தங்கச்சியையும் சேர்த்து தான் சொல்றேன்.” என்றாள்.
“அப்படியா அப்ப நீ கண்டிப்பா பேசித்தான் ஆகணும். பேசுடி, இன்னைக்கு நீ பேசுற. என் மேல இருக்கிற கோவத்தை திட்டித் தீர்க்கிற. அப்படி என்ன தான் நடக்கப் போகுதுன்னு நானும் பார்க்கிறேன்.
சுனாமி வருதா இல்ல பூகம்பம் வந்து பூமி பிளந்து உன்னை இழுத்துட்டுப் போகுதான்னு நானும் பார்க்கிறேன்.” என்று அவன் பேச பேச பல்லைக் கடித்து பொறுமையை இழுத்துப் பிடித்தாள் ஊர்மி.
“என்னடி பேச மாட்டேங்கிற, சாப்பாட்டுல உப்பு போட்டு தானே சாப்பிடுற. நான் இவ்வளவு பேசுறனே உனக்குக் கோவம் வரல. என்னைத் திட்டத் தோணல. ஆமால்ல நான் ஒரு விஷயத்தை மறந்துட்டேன்.
நீங்க நாலு பேரும் பேசி வைச்சிக்கிட்டு தானே வந்து இருப்பீங்க. நாங்க நாலு பேர் என்ன பேசினாலும், ஏன் முகத்தில் காரித் துப்பினாலும் கோபப்படக்கூடாதுன்னு.
ஒருவேளை ரோஷம் வந்து கிளம்பிட்டா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தானே அடிக்கணும். அதெல்லாம் முடியாது, ஒரு குழந்தை பிறக்கிற வரை பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கிட்டா, அதுக்கு அப்புறம் இந்த வீட்டோட மொத்த உரிமையும் நம்ம கைக்கு வந்திடும். அப்புறம் நம்ம ராஜ்ஜியம் தான்னு உங்க அக்கா, அதான் என் கூடப்பிறந்தவனை மயக்கிக் கட்டிக்கிட்ட அந்த மகராசி சொல்லி அனுப்பி இருப்பா. அதனால தானே நான் இவ்வளவு தூரம் பேசியும் நீ அமைதியா இருக்க.” என்ற நாகா அடுத்த வார்த்தை பேச முடியாதபடி ஊர்மி விட்ட அறையால் கதிகலங்கிப் போனான்.
“என்ன தைரியம் இருந்தா என்னைக் கை நீட்டி அடிப்ப.” எனக் கை ஓங்கியவன் ஊர்மியின் கலங்கிய கண்களைப் பார்த்ததும் ஒருநிமிடம் சிலை ஆனான்.
“நீயெல்லாம் மனுஷன் தானா? எதிர்க்க நிக்கிறவங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும் னு புரியாதா உனக்கு. தேள்கொடுக்கு மாதிரி கொட்டிக்கிட்டே இருக்க. நீ இப்படித்தான் இருப்பன்னு தெரிஞ்சு தான் உனக்கு நாகாராஜ் னு பேர் வைச்சாங்களோ என்னவோ. உடம்பு முழுக்க விஷம் தான். உன்னைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு.” என்க, ஊர்மி சொன்ன அந்த அருவருப்பு என்கிற வார்த்தையில் பயங்கரமாக அடிவாங்கினான் நாகா.
“நீ சொல்ற மாதிரி நாங்க ஒன்னும் சாப்பாட்டுக்கு இல்லாதவங்க இல்ல. நாங்க உங்களை மாதிரி வீணா பணத்தை செலவு பண்ணிக்கிட்டு ஆடம்பரமான வீட்டில் வாழல தான். சின்ன வீட்டில் இருந்தாலும் அன்பாலும், ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்துக்கிட்ட ஆதராவாலும் சந்தோஷமா வாழ்ந்தவங்க.
பணம் இருக்குன்னா, தன்கிட்ட பழகுறவங்க எல்லோரும் அந்தப் பணத்துக்காக தான் பழகுறாங்கன்னு நினைக்கிறது ஒருவிதமான மனவியாதி. அது முத்திப் போறதுக்குள்ள நல்ல டாக்டரா போய் பாரு.” என்றாள்.
“ஏய் நீ ரொம்பப் பேசுற.” நாகா கத்த, “நீ தானே நான் பேசணும் னு ஆசைப்பட்ட, அதான் பேசுறேன். நல்லாக் காது குளிர கேளு. ஆமா ஏதோ தகுதின்னு ஒரு வார்த்தை சொன்னியே, முதல்ல உன்னோட தகுதி என்னன்னு உனக்குத் தெரியுமா.
நீ பெரிய படிப்பு படிச்சிருக்க, டிகிரி வைச்சிருக்க எல்லாம் சரிதான். பிடிக்காத கல்யாணமா இருந்தாக் கூட சும்மா வந்து நாலு போட்டோவுக்கு போஸ் கொடுத்த உன் ப்ரண்ட்ஸ்க்கு பேச்சுலர் பார்ட்டின்னு ஒன்னரை இலட்சம் செலவு பண்ணியே அசால்ட்டா. உன் மனசைத் தொட்டு சொல்லு அதில் ஒரு ரூபாய் உன்னோட உழைப்புன்னு.” ஊர்மியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை நாகாவினால்.
“இருக்காது, ஏன் தெரியுமா சுயமா சம்பாதிக்கிற யாருக்கும் நீ பண்ற மாதிரி வெட்டி செலவு பண்ண மனசு வராது. மேல் வலிக்காம அப்பா காசை செலவு பண்ற நீ சொல்ற, நான் உங்கிட்ட இருக்கிற பணத்து மேல ஆசைப்பட்டேன்னு.
அப்பா சம்பாதிக்கிற பணத்தை செலவு பண்ண பையனுக்கு உரிமை இருப்பது உண்மை தான். அதுக்காக பணத்துக்காகத் தான் நீ உன் அப்பா கூட இருக்கன்னு சொன்னா ஆமான்னு சொல்லுவியா என்ன?” என்க, நாகாவிற்கு முதல்முறையாகத் தான் பேசியது தவறோ என்று தோன்றியது.
“நான் தெரியாம தான் கேட்கிறேன். என் லீலா அக்காவைப் பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு. என் அக்கா எப்படிப்பட்டவங்க தெரியுமா.
ஆதரவாக இருந்த அம்மாவும், அத்தையும் செத்துப்போய் அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நின்னப்ப, இருபது வயசுப் பொண்ணா குடும்பப் பொறுப்பை கையில் எடுத்தாங்க.
அவங்களுக்கு உதவி பண்றதா நினைச்சு வேலைக்குப் போன ருக்குக்கா இழுத்து வைச்ச பெரிய ஏழரையை சமாளிச்சதோட நிற்காம, எங்களுக்கும் அப்படி எதுவும் ஆகிடக்கூடாதுன்னு, அவங்க ஒருத்தங்க மட்டும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, எங்களை உட்கார வைச்சு சாப்பாடு போட்டு அழகு பார்த்தவங்க அவங்க.”
“என்னமோ பெரிய பணக்காரன் பணக்காரன்னு பெருசா பில்டப் கொடுக்கிறியே. ஊருக்குள்ள நீ மட்டும் தான் பணக்காரனா என்ன. பூனை கண்ணைக் முடிக்கிட்டு உலகமே இருட்டாகிடுச்சின்னு நினைக்குமாம். அதே மாதிரி தான் நீயும். தாத்தா, அப்பா சம்பாதிச்ச சொத்தை செலவு பண்ணிக்கிட்டு நான் பெரிய பணக்காரன் பணக்காரன்னு பெருமைக்கு அலையுற.”
“கண்ணைத் திறந்து பாரு உங்களை விட பெரிய பணக்காரங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படி ஒரு பணக்கார வீட்டுப் பையன் தான் கைலாஷ்.” ஊர்மி சொல்ல, தான் கேள்விப்பட்ட விஷயத்திற்கு வேறு ஒரு பக்கம் இருக்குமோ என்று தயக்கமாகப் பார்த்தான் நாகா.
“என் அக்காவை ஒருதலையாக் காதலிச்சவன். ரொம்ப நல்ல பையன். அதை விட முக்கியம் சென்ட்ரல் மினிஸ்டர் ஷர்தார்லாலோட ஒரே பையன். என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு சுத்தி சுத்தி வந்தான். அவனோட ஆசைக்காக அவங்க வீட்டிலும் ஒத்துக்கிட்டாங்க. ஆனா எங்க அக்கா அவங்களைப் பத்தி யோசிக்காம, எங்களைப் பத்தி மட்டுமே யோசிச்சு அந்த சம்பந்தத்தை தவிர்த்துட்டாங்க.
உங்ககிட்ட இருக்கிற பணத்தை விட பல மடங்கு பணமும், நடுத்தர வீட்டுப் பொண்ணை சாதி, மதம் பார்க்காம ஏத்துக்கிற நல்லகுணமும் அவங்ககிட்ட இருந்துச்சு.
நீ சொல்ற மாதிரி என் அக்கா பணத்து மேல ஆசைப்படுறவங்களா இருந்திருந்தா, எப்பவோ எங்களையும் கூடவே கூட்டிக்கிட்டு போய் அந்த வீட்டில் செட்டில் ஆகி இருப்பாங்க. அந்தக் குடும்பத்து ஆள்களே இந்த யோசனையைச் சொன்னப்ப கூட அக்கா அதுக்கு ஏத்துக்கல.” என்க, நாகாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அவன் விசாரித்த போது வந்த தகவல்கள் என்னவோ, லீலா கைலாஷ் உடன் ஒன்றாக சுற்றிவிட்டு திருமணம் என்று வரும் போது மறுத்துவிட்டாள் என்பது தான்.
“அக்கா கல்யாணம் பண்ணி போகும் வீட்டுக்கு இலவச இணைப்பா நாங்களும் போனா, அந்த வீட்டில் எங்களுக்கு உரிமை இருக்காது. உரிமை இல்லாத வீட்டில் கொஞ்ச நாளுக்கு அப்புறம் மரியாதை இருக்காதுன்னு எங்களோட சுயகௌரவத்துக்காக, தனக்குக் கிடைச்ச ஒரு நல்ல வாழ்க்கையை வேண்டாம் னு சொல்லிட்டு எங்க கூடவே இருந்தவங்க தான் எங்க அக்கா.“ தன் மார்பில் தட்டிக் காண்பித்து அத்தனை பெருமையாகச் சொன்னாள் ஊர்மி.
“அப்படிப்பட்டவங்க செல்வா மாமாவைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்கன்னா, அதுக்கு ஒரே காரணம் எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்பதும், எங்களுக்குப் பக்கத்திலே இருந்து நல்லது, கெட்டதைப் பார்க்கலாம் என்பதாலும் தான்.
உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? நாங்க இந்த ஊர் வந்த முதல் நாளே உன்னையும், என்னையும் தவிர அவங்க ஆறு பேருக்குள்ளும் நல்லா செட் ஆகிடுச்சு. அதுக்குப் பிறகும் கூட, ஊர்மிக்கும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சா மட்டும் தான் நாலு பேரோட கல்யாணமும் நடக்கும். இல்லைன்னா நாங்க நாலு பேரும் எங்க வீட்டுக்கே திரும்பப் போயிடுறோம் னு சொன்னவங்க எங்க அக்கா. உன்னால் நம்ப முடியலன்னா உங்க அப்பாகிட்ட போய் கேட்டுக்கோ.
அந்த மாதிரி எதுவும் நடந்திடக் கூடாதுன்னு தான் வடிவேலு மாமா உன்னை அதட்டி உருட்டி, என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைச்சாங்க.” இன்றுவிட்டால் இனி இவனிடம் பேச வாய்ப்பே கிடைக்காது என்பது போல் விடாது பேசினாள் ஊர்மிளா.
“அதான் எனக்குக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லன்னு உனக்கு தெரிஞ்சிடுச்சு இல்ல. நீ அவங்ககிட்ட சொல்லி அட்லீஸ்ட் நம்ம கல்யாணத்தையாவது தடுத்து நிறுத்தி இருக்கலாமே.” இத்தனை அவள் பேசியதால் கொஞ்சம் நாவை அடக்கினானா இல்லை இன்னமும் அவளிடம் இருந்து போட்டுவாங்கப் பார்த்தானா அவன் மட்டுமே அறிவான்.
“உன் குணத்தைப் பார்த்து கண்டிப்பா உன்னோட என் வாழ்க்கை சந்தோஷமா அமையாதுன்னு தெரிந்த பிறகு அக்காகிட்ட சொல்லிடத்தான் நானும் நினைச்சேன்.
ஆனா ருக்குக்கா மேல தெய்வா மாமா ரொம்ப அட்டேச் ஆகிட்டாரு. லீலா அக்காவையும், செல்வா மாமாவையும் ஒன்னாப் பார்க்கும் போது சிவனையும், பார்வதியையும் பார்க்கிற மாதிரி அவ்வளவு பொருத்தமா இருந்தாங்க. அதே மாதிரி தான் தேவகியும், அவ புருஷனும்.
என் ஒருத்தியால அவங்க அத்தனை பேரும் கஷ்டப்படுறதுக்கு பதில், நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் னு நினைச்சேன்.” என்றவள் குற்றஉணர்வில் தலைகுனிந்தாள். இவ்வளவு நேரம் அவளிடம் இருந்த நிமிர்வு இந்த இடத்தில் காற்றில் கரைந்த கற்பூரம் போல் காணாமல் போய் இருந்தது.
“என்னது அட்ஜஸ்ட் பண்ணுவியா? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு பிடிக்கல அதெல்லாம் ஒரு மேட்டர் இல்ல. எனக்கு உன்னைப் பிடிக்கணுமே அதைப் பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” இவ்வளவு நேரம் ஊர்மி எதிர்பார்த்து தவித்துக்கொண்டிருந்த கேள்வி கடைசியில் வந்தே விட்டது. இதற்கு அவளால் என்ன பதில் சொல்லிவிட முடியும்.
சில நொடிகள் தாமதித்தவள், “சரி இப்ப சொல்லு, உனக்கு ஏன் என்னைப் பிடிக்கல? எல்லாத்தையும் சரிபண்ணிடலாம்.” என்றாள் நேரடியாக.
“ஏன்னா” என வேகமாக ஆரம்பித்த நாகா பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினான்.
“சொல்லு எதுக்கு உனக்கு என்னைப் பிடிக்கல. யாரையும் லவ் பண்ணல, அல்ரெடி லவ் பெயிலியரான்னு பார்த்தா அதுவும் இல்ல. யாருக்காச்சும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வார்த்தை கொடுத்து இருக்கியான்னா அதுவும் இல்ல.
கட்டிக்கப்போற பொண்ணு அழகு, படிப்பு, வசதின்னு எல்லாத்திலும் உனக்கு இணையா இருக்கணும் னு எதிர்பார்த்தியான்னா அதுவும் இல்லை. அப்பா பார்க்கிற பொண்ணு யாரா இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்க.
நீயும், நானும் முன்ன பின்ன மீட் பண்ணது கூட கிடையாது. அப்படி இருக்கும் போது எந்தக் காரணத்தால உனக்கு என்னைப் பிடிக்கல.” ஊர்மி கேட்க, நாகாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தான்.
“இங்க பார் நீ ஒன்னும் பார்த்தவுடனே ஆளை மயக்குற மன்மதன் கிடையாது. உன்னைப் பார்த்த உடனே ப்ளாட் ஆகி, கல்யாணம் கட்டினா உன்னைத் தான் கட்டுவேன்னு நான் அடம்பிடிக்கிறதுக்கு.
என்னைப் பொறுத்தவரைக்கும் என் அக்கா கை காட்டுற யாரை ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவரோட குணநலன்களோட முடிந்தவரை ஒத்துப்போய் சந்தோஷமான வாழ்க்கையை அமைச்சுக்கப் பாடுபடத்தான் போறேன். அது ஏன் நீயா இருக்கக் கூடாதுன்னு யோசிச்சு, என்னோட முழு மனசோட தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.
உனக்கு என்னைப் பிடிக்கலன்னு தெரிய வந்தப்ப, அதுக்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்பதும் சேர்த்து தெரியவந்தது. இப்ப இல்லன்னாலும் கொஞ்ச நாள் கழிச்சு நீ என்னைப் புரிஞ்சுக்குவ. அதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கையை நாம வாழலாம் னு நினைச்சிருந்தேன்.”
“ஆனா உன் மனசு நான் நினைச்சிருந்ததை விட குப்பை அதிகமா நிறைஞ்சிருக்கு. இப்படிக் காரணமே இல்லாம தினம் தினம் என்னை வார்த்தையாலே குத்திக்கிட்டு இருந்தன்னா ஒருநாள் இல்லன்னா ஒருநாள் என்னோட கோவம் அதிகமாகி உன்னை என்னோட கையாலே கொன்னாலும் கொன்னுடுவேன். நான் அப்படிப்பட்ட ஆளு தான்.” என்க, முதல்முறையாக ஊர்மியைப் பார்த்து பயந்தான் நாகா.
“அதனால இனி நமக்குள்ள செட்டாகாது. நீ என்ன என்னை வேண்டாம் னு சொல்றது. நான் சொல்றேன், நீ எனக்கு வேண்டாம். நாளைக்கு காலையில் நம்ம உறவுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்.” என்றுவிட்டு ஊர்மி வீட்டுக்குள் செல்ல முயற்சிக்க, இதுதான் அவன் எதிர்பார்த்தது என்றாலும் அதை அவள் வாயால் கேட்பதற்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவளுடைய அந்தத் திமிர் பிடித்திருந்தது.
அவள் தன்னை வேண்டாம் என்று சொல்வது அவனுக்கு அவமானமாகத் தோன்ற, இதற்காகவே அவளுடன் வாழ வேண்டும், அவளை எல்லாவற்றிற்கும் தன்னை எதிர்பார்த்து நிற்க வைக்க வேண்டும் என்று அவன் மனம் போர்க்கொடி தூக்கியது. விளைவு ஊர்மியின் கரம் பற்றி நிறுத்தினான்.
அவள் கேள்வியாகப் பார்க்க, “என்னைத் தான் வேண்டாம் னு சொல்லிட்டியே. அப்புறம் நான் கட்டின தாலி மட்டும் எதுக்கு உனக்கு. என்கிட்ட கொடுத்துடு.” என்றான்.
பெண்கள் சம்பிராதாயங்களையும் அது சார்ந்துள்ள உணர்வுகளையும் மதிப்பவர்கள். அதிலும் இவர்கள் நால்வரும் குடும்பக் குத்துவிளக்குகள். அதனால் நிச்சயம் அவள் இதைத் செய்ய மாட்டாள் என நம்பினான் நாகா. தன் செய்கையில் முதலாவதாக இதை வைத்து அவளைக் கெஞ்சவிடலாம் என நினைத்தான்.
ஆனால் நாகாவின் மீது ஏக கடுப்பில் இருந்தவள் அவனுடைய இந்த செயலால் இன்னும் தான் கடுப்பானாள். “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என ஒரு பெண் பதிபக்தியுடன் வாழவேண்டும் என்றால், அதற்குத் தகுந்தாற் போல் கணவனும் இருக்க வேண்டும்.
ஒரு பெண் சீதையாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அவளுடைய கணவன் முதலில் ராமனாக இருக்க வேண்டும்.” என உறுதியாக நம்பும் ஊர்மிளா, எதைப்பற்றியும் யோசிக்காமல் காலையில் எந்தத் தாலி தான் சாகும் வரை தன் கழுத்தை விட்டு இறங்கக் கூடாது என்று மனமுருகி வேண்டினாளோ அதே தாலியைக் கழட்டி அதைக் கட்டியவன் கையிலே கொடுத்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்படி போடு போடு போடு … யார் கிட்ட … பொண்ணுங்க அப்படி இப்படின்னு அவனே நினைச்சுகிட்டு என்னென்ன பண்றான் … பேசினான் … ஊர்மி தாலியை கழட்டி குடுத்துட்டா … மகனே நீ காலி … நாகா கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன … உன் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ படிக்க வெயிட்டிங் …
Sema epi sis… Urmi is correct… Naga ethi parkathathu natakuthu..
Waiting next epi sis..