
அத்தியாயம் 25
நேரம் செல்லச் செல்ல ராதா இல்லத்தில் இருந்த அனைவருக்குள்ளும் ஒருவிதமான தயக்கம், கூச்சம், எதிர்பார்ப்பு, பயம் என அனைத்தும் கலந்த கலவையான உணர்வுகள் மேலோங்கி இருந்தது.
பெரியவர்கள், உறவினர்கள் என யாரும் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ. கயிற்றைக் கட்டி கிணற்றில் தூக்கிப் போட்ட கதையாக எப்படியாவது சம்சார சாகரத்தில் நீத்தி மேலே வந்துவிடுங்கள் எனத் தன் பிள்ளைகளை அப்படியே விட்டுவிட்டு வடிவேலு சென்றிருந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று.
இதுதான் வாழ்க்கை, சண்டை, கோபம் எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் தான் தன்னோடு இறுதி வரை வரப்போகிறவர்கள் என்பதை அந்த வீட்டு ஆண்கள் மனமாற ஏற்றுக்கொண்டிருந்தனர்.
இளம்வயதுப் பெண்ணாக, புது மனைவியாக லீலாவிற்கும் உள்ளுக்குள் பயம் இருந்தது தான். வழக்கம் போல் அது எல்லாவற்றையும் தூரம் வைத்துவிட்டு தங்கைகளைத் தேற்ற முன்வந்தாள். இதற்குப் பெயர் தான் கடமையாற்றுதல். இது யாரும் கற்றுக்கொடுத்து வருவது அல்ல. ஊற்றுநீர் போல் தன்னால் ஒவ்வொருக்குள்ளும் வரவேண்டியது. அது லீலாவுக்குள் சற்று அதிகமாகவே இருந்தது.
தங்கைகள் மூவரையும் தன் கரங்களாலே மிதமாக அலங்கரித்தவள், ஏற்கனவே இதைப் பற்றி பலமுறை பேசி இருப்பதால், இத்தனை அருகில் வந்த பிறகு மேலும் பேசி பதற்றமடைய வைக்க விரும்பாமல் அமைதியாக இருந்தாள். ஆனாலும் பல வித உணர்வுகளின் கலவையோடு இருந்தவர்களைப் பார்த்து முதன் முறையாக தங்களுடைய தாய் தங்கள் அருகில் இல்லையே என்று கவலையுற்றாள்.
“ருக்கு, ஊர்மி, தேவகி காலையில் இருந்ததுக்கு அவங்களோட கோபம் குறைந்த மாதிரித் தான் தெரியுது. அப்படியே குறையாமல் போனால் கூட தப்பு நம்ம பேரில் என்பதால் பொறுத்துப் போவதில் எந்தத் தப்பும் கிடையாது.
கூடவே உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரியணும் னு இல்ல. எல்லாம் உங்களுக்கே தெரியும் தான். கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க. பிடிக்கலையா பிடிக்கலன்னு முகத்துக்கு நேரா சொல்லிடுங்க தப்பே இல்ல.
பயப்படக்கூடாது, ருக்கு முக்கியமா உனக்கு ஒன்னு சொல்றேன். தயவுசெய்து அழுதிடாத. இனி இது தான் நம்ம வாழ்க்கை. அவங்க தான் நம்ம வாழ்க்கைத்துணை. உடலாலும் மனசாலும் அவங்க கூட தான் நாம கடைசி வரைக்கும் ஒன்னா வாழப் போறோம் புரிஞ்சுது தானே.” லீலா கேட்டது என்னவோ ருக்குவிடம் தான் என்றாலும் அவள் தங்கைகள் அனைவருமே தலையாட்டினர்.
“சரி அவரவர் ரூமுக்கு போங்க.” தமக்கை சொல்ல தயங்கினர் தங்கைகள்.
“அவங்க கோபத்தைப் பார்த்து எப்படியும் போங்கன்னு நாம அமைதியா இருக்க முடியாது செல்லங்களா? புருஷன், பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னு வந்தா யார் மேல் தப்பு இருக்கோ அவங்க தான் சமாதானத்துக்கு முதல் அடி எடுத்து வைக்கணும். நாம எடுத்து வைப்போம். என்ன குறைஞ்சிடப் போறோம்.” என்க, அந்த வார்த்தையில் தெளிந்தனர் அவள் தங்கைகள்.
முன்னால் நடந்த மூவரும் திரும்பி தங்களையே பார்த்துக்கொண்டிருந்த தமக்கையிடம், “அக்கா நீ, மாமா ரூமுக்குப் போகலையா.” என்றனர். “இதோ கிளம்பிட்டேன்” என்றாள் லீலா.
“அக்கா எங்களுக்கு சொன்னதை, உனக்கு நீ ஒரு தடவை சொல்லிக்கோ. மாமா ரொம்ப நல்லவரு, எப்பவும் போல எங்களைப் பத்தி யோசிச்சு அவரைக் கோபப்படுத்தாதே, கோட்டை விட்டுடாதே. எங்க வாழ்க்கையை நாங்க வாழ்றது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உன் வாழ்க்கையை நீ வாழ்றது.
இந்த வீட்டில் எங்களோட சந்தோஷம் உனக்குத் திருப்தின்னா, உன் சந்தோஷம் தான் எங்களோட எதிர்பார்ப்பு. உனக்குத் தெரியாதது இல்ல. செல்வா மாமாவுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கணும் னு தான் கட்டிக்கப் போறவங்களை ஒரு முறை நேரில் பார்க்க கூட நினைக்காம நாங்க எங்களோட கல்யாணத்துக்குச் சம்மதிச்சோம்.” என்க, லீலாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவள் அறிந்து தெய்வாவின் குணத்திற்கு அவன் மட்டும் ருக்குவின் இந்த வார்த்தைகளைக் கேட்டிருந்தால் மறுபடியும் முருங்கை மரம் ஏறி இருப்பானே எனப் பதறிப்போனாள்.
“அன்னைக்கு அவன், அந்த கைலாஷோட நண்பன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எங்க ஒவ்வொருத்தர் காதுக்குள்ளேயும் திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டே இருக்குக்கா. நீ சந்தோஷமா வாழனும் அக்கா.” ஊர்மி சொல்ல, அன்றைய நாளின் நினைவில் இதுவரை அடக்கி வைத்திருந்த வேதனைகள் எல்லாம் பொங்கி வர, அழுகையுடன் லீலாவை அணைத்துக்கொண்டாள் ருக்கு. தேவகியும் அணைத்துக்கொள்ள கனமான நிமிடங்கள் கடந்தது அங்கே.
என்ன தான் லீலாவிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகலாம் என்று செல்வா சொல்லி இருந்தாலும், அந்த முதலிரவு அறை, சற்றே கலைந்திருந்த ஆளை மயக்கும் அலங்காரம், இனி இந்த அறையில் தன்னுடன் தன் மனைவி என்ற பெயரில் ஒரு பெண், கணவனாய் அவள் மீது தனக்கு உரிமை உள்ளது என்கிற ஆணித்தரமான எண்ணம் எல்லாம் சேர்ந்து இதுவரை உணராத உணர்வுகளை எல்லாம் உணர வைத்தது செல்வாவை.
அவனுடைய அறையில் ஆரம்பித்து, அவன் வாழ்வு முழுக்க அனைத்திலும் சரிபாதியாய் இருக்கப் போகிறவளின் வரவு இன்னும் சற்று நேரத்தில் நிகழ இருக்கிறது. அவளுடனான தனிமையான, உரிமையான முதல் சந்திப்பு எப்படி இருக்கும் என அவனுக்குள் ஒரு ஆர்வம் முளை விட்டிருந்தது.
இல்லத்தரசன் என்கிற புதுப்பதவி கிடைத்தது ஏதோ பெரிதாய் சாதித்தது போல் உணர வைத்தது அவனை. பெண்ணின்றி ஒரு ஆணின் வாழ்வு முழுமை அடையாது என்பதை உறுதியாய் நம்புபவன் செல்வா. ஆதலால் தன் வாழ்வை முழுமையாக்க வந்த லீலாவின் மீது மிகப்பெரிய மதிப்பு வைத்திருந்தான்.
அவன் கொண்ட கோபம் கூட அவள் தன்னை அந்நியனாய் நினைத்து அத்தனை பெரிய உண்மையை மறைத்தது தான். அது கூட இப்போது குறைந்து விட்டிருந்தது.
தங்களுக்கு இடையே மனதளவிலும், உடலளவிலும் இருக்கும் இடைவெளி குறையும் நேரம், அவனையோ அவளையோ நகல் எடுத்தது போல் அவர்களுக்கு ஒரு குழந்தை. இந்த நினைப்பே தனி ஒரு குதூகலத்தைக் கொடுத்தது செல்வாவிற்கு. உள்ளுக்குள் ஊற்றெடுத்த உற்றாகத்தில் மெத்தையில் கிடந்த சற்றே வாடிய ரோஜா இதழ்களை அள்ளி கீழே கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.
“ருக்கு நீங்க எப்ப வருவீங்க. இந்த ரூமுக்குள்ள வந்ததும் உங்க மேல இருந்த மொத்தக் கோவமும் இருந்த சுவடே தெரியாமப் போயிடுச்சு. சீக்கிரம் வாங்க ருக்கு.” புன்னகையுடன் அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் தெய்வா.
“முதலிரவு, ஒவ்வொருத்தனுக்கும் இது எவ்வளவு பெரிய கனவு எனக்கு மட்டும் ஏன் இப்படி உயிரே இல்லாத உறவாகிடுச்சு. என்னோட பர்ஸ்ட் நைட்டை எந்த ஊர்ல எப்படி செலிபரேட் பண்ணனும் னு நான் நினைச்சிருந்தேன். ஆனா இந்த அப்பாவால எல்லாம் கெட்டுப் போச்சு.
என் பொண்டாட்டிங்கிற பேரில் ஒருத்தி இருக்காளே ஊர்மிளா. பேரைப் பாரு பேரை. அவளைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல. அவளுக்கும் என்னைக் கண்டா பிடிக்கல. இந்த இலட்சணத்துல எங்களுக்கு பர்ஸ்ட் நைட் ஒன்னு தான் கேடு. அவ வந்ததும் தெளிவா சொல்லப் போறேன்.
இங்க பாருடி எனக்கு உன்னையும் பிடிக்கல உன் பேரையும் பிடிக்கல. அதனால் இதெல்லாம் தேவையில்லன்னு.” என்றுவிட்டு மெத்தையில் உருண்டு கொண்டிருந்தான் நாகா.
இவர்களைப் போல எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் தர்மா. சற்று நேரம் முன்னர் தான் தேவகியின் பயன்பாட்டிற்காகத் தன்அறையில் சில மாற்றங்களை உண்டாக்கி இருந்தான்.
அவள் எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வரக்கூடும் என்பதால், அமைதியாய் மெத்தையில் அமர்ந்து காலையில் இருந்து தனக்கு வந்திருந்த வாழ்த்து குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தான்.
“என்ன தர்மா உனக்கு இப்ப பர்ஸ்ட் நைட் ஆச்சே. அங்க அந்தப் பொண்ணுகிட்ட பேசுறதை விட்டுட்டு, என்கிட்ட பேசிக்கிட்டு இருக்க. என்ன விஷயம், புரட்டாசி விரதம் பக்கத்தில் வராதன்னு தள்ளி வைச்சிட்டாங்களா?” நக்கலடித்தான் நண்பன் ஒருவன்.
“நேரில் வந்தேன்னு வைச்சிக்க வாயில் ஒரு பல்லு இருக்காது ராஸ்கல்.” இதை அனுப்பும் போது முகத்தில் பெயருக்கு கூட கடுமை இல்லை. அத்தனை பல்லும் வெள்ளை வெளீரென்று காட்சியளித்துக் கொண்டிருந்தது தர்மராஜிற்கு.
“நான் உள்ள வரலாமா?” என்ற குரலில் ஒருநிமிடம் ஜெர்க்கான செல்வா லேசாக பதற்றமடைய அவனுடைய குரல் கட்டிக்கொண்டது.
“வாங்க லீலா” அழைக்கும் பொழுதே தொண்டையை லேசாக சரி செய்வது புரிந்தது அவளுக்கு.
கையில் ஒரு டம்ளர் பால் கொண்டு வந்திருக்க அதை அருகில் வைத்துவிட்டு, அவன் காலில் விழப்போக பதறி இரண்டடி பின்னால் நகர்ந்தான் அவன்.
“என்ன பண்றீங்க லீலா. இதெல்லாம் சுத்தப் பட்டிக்காட்டுத்தனம். நமக்குள்ள இதெல்லம் அவசியமில்லை.” அவசரமாக உரைக்க, பிகு பண்ணாமல் சரியென்று தலையாட்டி ஏற்றுக்கொண்டாள் அவன் மனைவி.
என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை. அதனால் தனக்காய் தோன்றியதைச் செய்தாள். அவள் தான் செய்தாளே தவிர தங்கைகளுக்கு இதைச் சொல்லி இருக்கவில்லை.
செல்வாவுக்குள் அந்த நேரம் வரை இருந்த வித்தியாசமான உணர்வுகள் எல்லாம் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் இருக்க, எப்பொழுதும் போல சாதாரண செல்வாவாக மாறியிருந்தான்.
“நான் உடனடியா இரண்டு விஷயம் உங்ககிட்ட சொல்லணும் லீலா.” மென்மையாகவே ஆரம்பித்தான்.
“சொல்லுங்க” சாதாரணமான பேச்சு வார்த்தைக்கே சற்றே சங்கடப்பட்டாள் அவள்.
“முதல் விஷயம் இனி இந்த ரூமுக்குள் வர நீங்க அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரூமுக்குள்ள உங்களுக்கு முழு உரிமை இருக்கு. எப்ப வேண்ணாலும் வரலாம், போகலாம். இரண்டாவது இந்த மாதிரி இன்னொரு தடவை பண்ணாதீங்க, எனக்குச் சங்கடமா இருக்கு.” என்க, லேசாகப் புன்னகைத்துக் கொண்டவள் சரிங்க என்று தலையை ஆட்டினாள்.
“வாங்க, வந்து உட்காருங்க.” என்று மெத்தையில் தனக்கு அருகில் சற்று இடைவெளி விட்டு இடத்தைக் காட்டினான்.
பெண்கள் தயக்கத்தையும், வெட்கத்தையும் எளிதாக தலையைக் குனிந்து தன்னவர்களிடம் இருந்து மறைத்துக் கொள்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் பாவம் தான் என்று எங்கோ ஒருமுறை கேட்டது நினைவுக்கு வந்தது செல்வாவிற்கு.
“லீலா ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்கீங்க, நார்மலா இருங்க. நாம தான் நம்ம ஒருத்தருக்கொருத்தர் நல்லா பேசி பழகிக்கிற வரைக்கும் இதெல்லாம் வேண்டாம் னு முடிவு பண்ணி இருக்கோமே.” முடிந்தவரை அவளை இலகுவாக்க முயற்சிக்கலாம் என்று பேச்சை ஆரம்பித்தான் செல்வா.
“நானும் ரொம்ப நேரமா அதுக்கு தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா என்னால உங்க முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியல. ரொம்பப் படபடப்பா இருக்கு.” என்று தன் கையை விரித்துக் காட்ட அது பாடல் இல்லாமலே நடனமாடிக் கொண்டிருந்தது.
“லீலா காம் டௌன்.” என்றவண்ணம் அவன் நடுங்கும் அவள் கரத்தைப் பற்ற, அந்தக் கரத்தில் மின்சாரம் அடித்தது போல் பட்டென்று நிமிர்ந்தாள் லீலா.
“இந்த ரூம், இந்த டெக்கரேஷன் தான் உங்களை இந்தளவு பதற்றமடையச் செய்யுதுன்னா இதை இப்பவே கலைச்சிடலாம்.” என்ற செல்வா அதற்கான வேலையில் இறங்கப்பார்க்க, “அப்படி எல்லாம் இல்லைங்க.” வேகமாய் மறுத்தாள்.
“சரி அப்ப ஒன்னு பண்ணலாம் பேசாம தூங்கிடலாம். இரண்டு, மூணு நாள் போச்சுன்னா இந்தப் பயம், பதற்றம் எல்லாம் சரியாகிடும். காலம் முழுக்க நாம ஒன்னா தானே இருக்கப் போறோம். கொஞ்சம் கொஞ்சமா பேசிக்கலாம்.” என்க, அவன் தாங்கள் சொன்ன பொய்யைப் பற்றி கேட்டு கோபப்படாததோடு சேர்த்து இத்தனை அன்பாகப் பேசியதும் சேர்த்து லீலாவிற்குப் பெரும் நிம்மதியாக இருந்தது.
அவள் அமைதியாகவே இருப்பது கண்டு, “நான் சொல்றதில் உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையே. அப்படி ஒருவேளை ஏதாவது” செல்வா ஆரம்பிக்கவும் ஒரு நொடி அவன் சொல்ல வருவது புரியாமல் விழித்தவள் புரிந்த அடுத்த கணம், “இல்லைங்க அப்படி எதுவும் இல்லை.” வேகமாகச் சொன்னாள்.
“டென்சன் ஆகாதீங்க பீ கூல். நிம்மதியாத் தூங்குங்க, குட் நைட்.” என்றவண்ணம் அறையின் விளக்கை அணைத்தவன் தலையணை மற்றும் போர்வையை எடுத்துக்கொண்டு சோபா பக்கம் நகர்ந்தான்.
“நீங்க இங்கேயே படுத்துக்கலாமே.” லீலா மெத்தையைக் காட்டினாள்.
“நான் துங்கிடுவேன், நீங்க தூங்க மாட்டீங்க. ஏசி ரூமில் வடியுற வியர்வையைப் பார்த்தாலே தெரியுது. உங்களோட வாழ்க்கையில் ஒரு பையனை இவ்வளவு பக்கத்தில் இப்பதான் சந்திக்கிறீங்கன்னு. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உங்க வாழ்க்கையில் ஆண்களோட ரோல் ரொம்பக் கம்மி தான் இல்ல. சரி அதெல்லாம் முன்னாடி, இனி தான் நான் இருக்கேன் இல்ல.
ஒரு இரண்டு, மூணு நாள் மட்டும் என்றவன், அந்த மட்டும் என்பதில் அழுத்தம் கொடுத்திச் சொல்லிவிட்டு, நான் இங்க தூங்கிக்கிறேன். அப்புறம் மெத்தையில் உங்களோட படுத்துக்கிறேன். இப்ப எதைப் பத்தியும் யோசிக்காம தூங்குங்க.” சொல்லிவிட்டு அவன் படுத்துக்கொள்ள லீலாவுக்கு அகமும், முகமும் நிறைந்தது.
அடுத்த அறையில், “ஏங்க நான் உள்ள வரலாமா?” தனக்குள் பலமுறை கேட்டுப் பார்த்ததை ஆறாவது முறையாக முயற்சி செய்து சற்றே சத்தமாகக் கேட்டுவிட்டாள் ருக்மணி.
கதவிற்கு அருகேயே காத்துக்கொண்டிருந்த காரணத்தால், பட்டென்று கதவைத் திறந்து மனைவியின் கரம் பற்றி உள்ளே இழுத்து வந்தான் தெய்வா.
அவனுடைய இந்த அடாவடியால் ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இப்போது நடுங்கவே ஆரம்பித்துவிட்டாள். ஆலமரத்தில் தலைகீழாகத் தொங்கும் பாம்பைப் போல் அவளின் உச்சந்தலையின் ஒற்றைப் பாதையில் தொங்கிக் கொண்டிருந்தது நெற்றிச்சுட்டி ஒன்று.
மனைவியின் முகம் காணக் காத்திருந்தவனுக்கு நெடுநேரம் அந்தச் நெற்றிச்சுட்டி மட்டுமே காணக்கிடைக்க, அதுவும் வெட்கம் கெட்டுப்போய் அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் அவள் நெற்றியை முத்தமிட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றவும் அதைப் பார்த்து பொறாமை கொண்டவன், “ருக்கு நிமிர்ந்து என்னைக் கொஞ்சம் பாருங்க.” என்றான் சற்றே அழுத்தமாக.
அவ்வளவு தான் காலையில் அவனை விட்டுச் சென்றிருந்த கோபம் இப்போது மறுபடியும் வந்துவிட்டது. தனியாக மாட்டிய தன்னை வைத்து வாங்கப் போகிறான் என்கிற பயத்துடனே தலையை நிமிர்த்தி கணவன் முகம் பார்த்தாள் ருக்கு.
காலையில் பார்த்த அளவு கோபம் இல்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் கோபம் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் வண்ணம் முகம் சற்றே இறுகி இருந்தது.
“என்னை மன்னிச்சிடுங்க. நான் பொய் சொன்னது தப்பு தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல. எனக்கு என் அக்கா, தங்கச்சிங்களும் வேணும், நீங்களும் வேணும். அதனால் தான் மாமா உண்மையை மறைக்கச் சொல்லும் போது ஒத்துக்கிட்டேன்.” வேகவேகமாக அனைத்தையும் சொல்லத் துவங்க, முதலில் என்ன பேசுகிறாள் இவள் என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அதன்பிறகே அவன் மறந்த விஷயமும், அதனால் அவனுக்கு உண்டான ஏமாற்றமும் கூடவே சேர்ந்து கோபமும் வந்தது.
கோபமாக ஏதோ சொல்ல வந்தவன் அவள் வார்த்தைகளில் ஸ்தம்பித்தான். வெறுமென அக்கா, தங்கைகளுடன் வாழ்வதற்காக மட்டும் அவள் இதைச் செய்யவில்லை. தன்னை இழக்கப் பிடிக்காமல் தான் இதைச் செய்திருக்கிறாள் என்பது புரிய அவனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
இந்த ஒற்றை வாக்கியத்திற்காக அவள் செய்த அனைத்தையும் கடந்துவிட முடிவு செய்தான். ஆனால் அடுத்தடுத்த சம்பவங்களால் அவன் மனைவி அவனை இன்னும் அதிகமாகக் கடுப்பேற்றப்போகிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன ருக்கு எங்க லவ்வர் பாய டென்ஷன் பண்ணிட்டே இருக்க … அந்த நெற்றிச்சுட்டி சீன் சூப்பர் … இந்த நாகா திருந்த மாட்டான் … எனக்கு தெரிஞ்சு நாகா ஊர்மிக்கு தான் முதலிரவு நடக்கும் போல 😜😜😜😜 … செல்வா லீலா ரூட் கிளியர்… அக்கா தங்கச்சிங்க குள்ள இன்னொரு ப்ளாஷ்பேக் இருக்கும் போலயே