
காதலொன்று கண்டேன்!
தேடல் 05
(I)
தலை இலேசாக சரிந்திருக்க,பக்கமாய் கழுத்தை வருடிய விரல்கள்,அடர் கேசத்தினுள் நுழைந்து கோதி விட,அவன் விழிகளில் கூர்மை.
அவனின் வருகையில் குழம்பி நின்றவள்,அவனின் கேள்வியில் கலங்கிப் போய் விட,மற்றையவர்களின் பார்வை என்னவோ பாவையவளின் மீது தான்.
“யாழ் யாருன்னு கேட்டேன்..” அழுத்தம் நிரம்பிய குரலில் அவன் சிதற விட்ட வார்த்தைகள் அவளை கொஞ்சம் பயமுறுத்தியது உண்மை.
“யாழ்ங்குற பொண்ணு இல்லயா இங்க..?” பாதத்தை கீழிறக்கி, கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு அவன் ஆராயும் பார்வையுடன் வினவிட,அருகே இருந்த தோழியின் உலுக்கலிலே தன்னிலை மீண்டாள்,அவள்.
“உன்னத் தான்டி கேக்கறாரு..” மித்ராவின் உலுக்கலில் அவளோ பயந்த விழிகளுடன் கரத்தை உயர்த்திட,அவளின் செயலில் பக்கென்று சிரித்து விட்டான்,சத்யா.
“அட்டன்டன்ஸ் போடுது டா அந்த பொண்ணு..” அவன் கலாய்த்திட,அவளைக் கண்டு,அவனிதழ்கள் அசையாவிடினும் விழியோரங்கள் இடுங்கி நொடிதனில் இயல்பாகிற்று.
நேற்று அவன் கண்டவள்!
அவன் அதிரடியால் மிரண்டு நின்றவள்!
“ஓஹ் யாழ்ங்குறது..?” அவன் இழுக்க,”நான் தான்..” மெதுவாய் பயத்துடன் அவளிதழ்கள் அசைந்தன.
சத்தமே வரவில்லை,வார்த்தைகளில்.வெறும் காற்று மட்டுமே.
நேற்று வேறு அவள், அவனுக்கு தோழியரிடம் திட்டிக் கொண்டிருக்க,அவர்கள் வேறு பயம் காட்டி விட்டிருந்தனர்.
“இங்க பாரு யாழ்..சும்மா சும்மா உன்னோட கோவத்த சீனியர்ஸ் கிட்ட காட்டிராத..அப்றம் நமக்குத் தான் கஷ்டமா போய்ரும்..காலேஜ விட்டு போற வர கஷ்டப்பட வேண்டி வரும்” இல்லாத பயத்தை கிளப்பி விட்டிருந்ததன் வெளிப்பாடு தான் இது.
“ஆஹான்ன்ன்ன்..” இடது புருவத்தை ஏற்றி இறக்கி,நக்கல் தொக்கிய விழிகளுடன் அவளை முன்னே வருமாறு சைகை செய்தான்,பையன்.
அவனைத் திட்டுகையில் இருந்த தைரியம் அவளை விட்டு கலைந்து போயிருக்க,அவனின் முன்னே வந்து நின்றவளோ பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.
“அது உன் ஃப்ரெண்டா..?” பையன் வினவிட,பின்னிருந்த மித்ராவை திரும்பி பார்த்து விட்டு அவள் ஆமோதிப்பாய் தலையசைத்தாலும்,அவனின் ஒருமை அழைப்பில் சிறு கோபம் விழிகளில் மிளிர்ந்து மறைந்தது,தப்பவில்லை அவன் விழிகளில் இருந்து.
அதை சட்டை செய்யாதவன்,இருவரையும் சைகையால் அழைத்து விட்டு முன்னே நடந்திட,அவனைப் பின் தொடர்ந்தனர்,யாழவளும் அவளின் தோழியும்.
“எரும்ம மாடு..வாய்க்குள்ள திட்றதுன்னாலும் அடக்கி வாசின்னு சொல்லியிருக்க வேண்டியது தான..இப்போ பாரு எதுக்கு கூப்புட்றாருன்னே தெரில..ஆள பாக்க வேற பயமா இருக்கு..”
விடாமல்,தோழி புலம்பிக் கொண்டே வர,அவளுக்கோ பலவித யோசனைகள்.
வழமையாய் அவன் அமரும் ஆலமரத்தை சுற்றிப் போடப்பட்டிருக்கும் கட்டுத் திண்டில்,கால் மேல் போட்டு பையன் அமர்ந்திருக்க,அருகில் சத்யா.
குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் பேய் முழியுடன் நின்றிருந்தனர்,மகளிர் இருவரும்.
“அறிவில்ல..? படிக்க தான காலேஜுக்கு வர்ரது..? வந்து மூணு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இந்த எழவு எல்லாம் தேவ தானா..?”
அவனின் அமைதியில் அவர்கள் இருவரும் பையன் முகம் பார்த்திருக்க,அதை வெட்டியெறிந்து விட்டு படபடவென பொறியத் துவங்கி இருந்தான்,அவன்.
“கொஞ்சம் சாஃப்டா பேசுன்னு சொன்னா கேக்க மாட்டான்..”தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் முணுமுணுத்தான்,தோழன்.
யாழவளுக்கு எதுவும் புரியவில்லை.அடியும் விளங்காது நுனியும் தெரியாது அவள் விழிக்க,அவளின் முகபாவத்தில் இன்னும் சினம் ஏறி எகிறிற்று,பையனுக்கு.
அவள் இயல்பு,அவனுக்கு நடிப்பாய்த் தோன்றிற்றோ என்னவோ..?
அவளுக்கு கோபம் வரும் அளவு திட்டித் தீர்த்தவனோ,”இனிமே எனக்கு மெஸேஜ் பண்ணன்னு வையி கொன்னுருவேன்..” என்று முடித்திட,அப்பொழுது தான் எதுவோ புரிவது போல்.
“எதே!மெஸேஜா நானா..?அதுவும் உங்களுக்கா..” திகைத்த பாவத்துடன் சத்தமாக கேட்டு வைத்திட,அவள் முகத்தைக் கண்டதும் வெடித்துப் பாயவிருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்,சத்யா.
“ஆமா வேற யாரு..? நீ தான யாழ்..?ஃபர்ஸ்ட் இயர்” என்கவும் தான்,தோழி யாழ்நிலாவின் எண்ணமே வந்தது,அவளுக்கு.
நிலாவுக்கு பையனின் மீது பிடிப்பு இருப்பது தெரிய,அதை வெளிப்படுத்த அவளே குறுஞ்செய்தி அனுப்பியிருக்கக் கூடும் என்று மனம் சரியாய் கணித்து விட்டாலும்,அவனிடம் தோழியை காட்டிக் கொடுக்க இயலாதே.
“எனக்கு அவரு மேல ஃபீலிங்ஸ் இருக்குறது தெரிஞ்சதுன்னா அண்ணா கொன்னுருவான் டி..அவனே ஒடஞ்சி போயிருவான்..” கண்ணீருடன் கலங்கிய முகம்,கண் முன்னே வந்து போக,அவளாலும் எதுவும் செய்திட முடியவில்லை.
“நா யாழ் தான்..ஆனா உங்களுக்கு மெஸேஜ் பண்ணல..” அழுத்தமாய் உறுதியாய் அவளை உரைத்திட,அவனோ விழிகள் இடுங்க அனலை அள்ளி வீசினான்.
“ஆஹான்ன்ன்ன்ன்ன்ன..” இடது புருவத்தை நக்கலுடன் ஏற்றி இறக்கியவனோ,தலை சரித்து கழுத்தை வருடிக் கொடுத்தான்.
“ஓஹ் செஞ்ச குட்டு மாட்டிகிச்சுன்னு தப்பிக்க பாக்கறீங்களோ..?” எள்ளலில் குளித்த அவனின் வார்த்தைகள் அவளுக்கு கோபத்தை தந்திருக்க வேண்டும்.அவள் விழிகளிலும் முறைப்பு பரவிட,பையனுக்கு ஏறியது,சினம்.
“பண்ணதெல்லாம் பண்ணிட்டு நீ மொறக்கிற..?அறஞ்சேன்னா..” ஓங்கிய கையுடன் அவன் காய்ந்திட,அவளுக்கு பயமும் கோபமும் சரி விகிதமாய்.சட்டென ஈரெட்டு பின்னடைந்திருந்தன,பாதங்கள்.
அவனின் கூர்ப்பார்வை அவளின் மொத்த தைரியத்தையும் கூரிட்டிருக்க,பேச்சும் வரவில்லை.
“நா ஒன்னும் மெஸேஜ் பண்ணல..” இழுத்துக் கொண்ட பிடிவாதத்துடன் மொழிந்தவளின் இதழ்களோ,” இவரு பெரிய மன்மதராசா நா போய் பின்னாடி திரிஞ்சு லவ் ப்ரபோஸ் பண்ண..” தமக்குள் அசைந்து தீர்க்க,அதை சரியாய் கண்டு கொண்டவனோ நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டான்,இறுகவே.
“நீ தான யாழ்..வேற யாரு..?” என்றவனுக்கு பதில் சொல்ல நா துருதுருத்தாலும்,தோழியின் முகம் கண் முன்னே வந்து அவளை அமைதிப்படுத்தியது.அதற்கென்று இல்லாத பழியை அவள் மீது போட்டுக் கொள்ளவும் இஷ்டமில்லை,பாவையவளுக்கு.
“இங்க பாரு சும்மா சும்மா இல்ல இல்லன்னு சொல்லி என் கோவத்த கெளறாத..காலேஜ் வந்தா அப்டி அட்ராக்ஷன் வரத் தான் செய்யும்..மத்தவங்க மேல வந்தா அது வேற..என் மேல ஏதாச்சும் வந்து பார்வ என் பக்கம் திரும்பிச்சின்னா கண்ண நோண்டிருவேன்..போ இப்போ..”
அவன் சீற,மேலும் கீழும் தலையைசைத்தாலும், ஒரு கணம் அவனை முறைத்தவள்,நின்று பார்த்தாள்,அழுத்தமாய்.
அவளின் வெட்டும் பார்வையில்,அவனின் புருவங்கள் ஏறி இறங்கிட,இதழ்கள் நக்கலாய் வளைந்தன.
“பார்ரா கண்ணாலயே எரிக்கிறாங்களாம்..” கையை சோம்பல் முறித்தவாறு உரைத்தவனின் கரமோ,அவளுக்கு அறையவே பரபரத்தது.
தோழியைப் பற்றி கூறிடவும் முடியாது.தான் இல்லை என்று சொன்னால் அவன் ஒப்புக் கொள்ளவும் மாட்டான் என்று அவளுக்குப் புரிந்திட,அவனுடன் வாதாட விரும்பவில்லை.
என்னவோ நினைத்துத் தொலை என்கின்ற எண்ணத்துடன் அவள் திரும்பி நடந்திட,முறைப்புடன் அவனை தொட்டுரசிய அவள் பார்வை அவனுக்குள் ஆழமாய் பதிந்து போனதை உணரவில்லை,பையன்.
“எனக்கு என்னவோ அந்த பொண்ணு இல்லன்னு தோணுதுடா..” தோளில் கையைப் போட்டவாறு தோழன் உரைத்திட,அவனை உறுத்து விழித்தான்.
“அவ தான யாழ் வேற யாரு..?” என்றவனுக்கு,யாழ்நிலாவின் எண்ணம் வந்து போனாலும்,அவள் மீது சந்தேகம் வரவில்லை.சத்யாவின் தங்கையை எங்கனம் சந்தேகப்படுவான் அவனும்..?
பொழுது நகர்ந்து இரவும் வந்தது.
“எரும மாடு..எரும மாடு நிலான்னு பேர போட்டு மெஸேஜ அனுப்ப வேண்டியது தான..? அந்த எரிமலக் கெடங்கு என்ன வந்து திட்டுட்டு போறான் பைத்தியம்..”
“சாரி சாரி யாழ்ழ்ழ்ழ்ழ்..” என்ற நிலாவின் குரலும் கலங்கி தளர்ந்து ஒலித்தது.
இன்னும் மனம் சமப்படவில்லை,யாழவளுக்கு.பையனின் திட்டுக்கள் செவியில் ஒலித்துக் கொண்டிருக்க,விழிகளோ தோழியை உறுத்து விழித்தன.
“என்னாட தாட் சரியா தப்பான்னு எனக்கு தெரில யாழ்..ஆனா எனக்கு அவரு மேல ஏதோ ஒரு ஃபீல் இருக்கு..அவரு என்ன தங்கச்சிய தான் பாக்கறாருன்னு எனக்குத் தெர்யும்..”
“……………….”
“ஆனா என்னால அப்டி இருக்க முடில..நேத்து ஏதோ யோசிச்சு தாங்கிக்க முடியாம தான் அவருக்கு மெஸேஜ் பண்ணதே..ஆனா அப்றம் அவ்ளோ கில்டா இருந்துச்சு..அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன?ஆகும்னு யோசிக்கிறப்போவோ பயமா இருக்கு..” தலையில் கை வைத்தவளின் அவசர புத்தியைப் பற்றி நன்கு தெரியுமே,பாவையவளுக்கு.
“நா பண்ற வேலயால உனக்கு கஷ்டம்ல சாரி யாழ்..அவர் இப்டி மிஸ் அன்ட்ர்ஸ்டான்ட் பண்ணிப்பாருன்னு சத்தியமா யோசிக்கலடி நானு..நா நாளக்கி போய் உண்மய சொல்லிர்ரேன்..” அவள் அழுத வண்ணம் கூற,அவளின் கரத்தில் ஒன்று போட்டாள்,யாழவள்.
“நா கோபத்துல கத்திட்டேன் டி..நீ இப்போ போய் உண்மய சொல்லி..எடுத்தோம் கவுத்தோம்னு எதயும் பண்ண முடியாது..உங்க வீட்ல இது எங்க போய் முடியுமோ..?இப்போதக்கி இத தள்ளி போடலாம்..” பலதை யோசித்துத் தான் இயம்பினாள்,அவள்.
எடுத்தவுடன் எந்த முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை.தன் தரப்பை அவனுக்கு கூறிடும் படி,தோழியிடம் மொழிந்திடவும் மனம் வரவில்லை.
“நா நாளக்கி போய் உண்மய சொல்லிர்ரேன் யாழ்..” ஏதோதோ யோசனைகளில் குழம்பித் தெளிந்து நிலா ஒப்புவித்த வார்த்தைகளுக்கு சம்மதமாய் தலை அசைந்திருந்தாள்,யாழவள்.
மறுநாள்,பையனிடம் உண்மையை ஒப்புவிக்கச் சென்று,பயந்து போய் ஒரு வார்த்தையேனும் உதிர்த்திடாமல் திரும்பி வந்திருந்தாள்,நிலா.
●●●●●●●●
“என்னா அடி..?” கன்னத்தை தேய்த்துக் கொண்டு முணுமுணுத்தவளுக்கு வாயைக் கூட திறக்க முடியவில்லை.வாயசைக்கையில் கூட,கன்னம் வலியில் தெறித்தது.
“இருடி மெதுவா ஒத்தடம் கொடுத்து விட்றேன்..” மித்ராவோ,வெந்நீரில் துணியை நனைத்து மெதுவாக பதமாக அழுத்திட்டாலும்,அவளுக்குமே தோழியைப் பார்க்கையில் பாவமாகத் தான் இருந்தது.
“அந்தாளுக்கு என் மேல பர்சனல் வெஞ்சன்ஸ் ஏதாச்சும் இருக்குமாடி..? சைக்கிள் கேப்ல என்னா அடி..?” வலித்தாலும் மன எண்ணத்தை கூறி முடித்திட,சிரிப்பை அடக்கினாள்,தோழி.
“அப்டியும் இருக்கும் போல..இல்லன்னா அவ்ளோ பேர் இருக்கும் போதும் உனக்கா இப்டி நடக்கனும்..?” சீண்டினாள்,அவளும்.
ஒத்தடமிட்டு முடிந்த பின்பும்,வீக்கம் வற்றாதிருக்க கன்னத்தை தடவிப் பார்த்தவளுக்கு,பையனின் மீது கோபமாகவும் வந்து தொலைத்தது.
●●●●●●●●
(II)
அன்று டாக்டருக்கு இரவு நேரப் பணி.வெகு நாட்களுக்கு பிறகு மதியத்தில் வீட்டில் இருக்க,அதற்காகவே பார்த்து,மகனுக்கு வேண்டியதை வாங்கி,அவனுக்கு பிடித்த வகையில் சமைத்து அசத்தியிருந்தார்,பரிமளா.
இரு மகன்கள் இருந்தாலும்,மூத்தவனின் மீது அலாதியான ஒட்டுதல் அவருக்கு.தம்பி வீட்டில் இருப்பதால் அகல்யாவும் அங்கு வந்திருக்க,அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.
அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டிட,தன்னை விடுத்து மற்றையவர்களுக்குள் பரிமாறப்பட்ட சைகைகளும் இதழசைவுகளும் புரிந்தாலும்,காணாதது போலவே நடந்து கொண்டான்,டாக்டர்.
ஏதோ திருமண விடயத்தைப் பற்றிய பேச்சு தான் என புரிந்தாலும்,அவர்களாக கூறட்டடும் என அமைதி காத்தான்.
யார் பேச்சைத் துவக்குவது என்ற குழப்பத்தில் அவர்கள் இருக்க,அதற்குள் உணவருந்தியும் முடித்திருந்தனர்.
தட்டை அலம்பி விட்டு எழுந்து செல்லப் பார்த்தவனை தந்தையின் தொண்டைச் செருமல் நிமிர வைத்திட,தன் அருகே இருந்த இருக்கையைக் காட்டினார்,அன்பரசன்.
“இன்னிக்கி என்ன டாக் ஓ..?” உள்ளுக்குள் புலம்பியவனோ,உணர்வு காட்டாத முகத்துடன் அவரருகே வந்தமர,மகளின் மீது அர்த்தத்துடன் படிந்தது,தந்தையின் பார்வை.
“சித்து நாங்க உனக்கு பொண்ணு பாத்து கிட்டு இருக்குற விஷயம் உனக்கு தெரியும் தான..? நீ ஓகேன்னு தான சொன்ன..?உனக்குன்னு எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லன்னு தான நீ அப்பா கிட்ட சொன்ன”
அவள் மறைபொருளுடன் பேச,அனைத்துக்கும் ஆமென்பதாய் தலையதைத்து வைத்த டாக்டருக்கு,அவளின் பேச்சின் பாதையை புரிந்துணர இயலவில்லை.
“ஆமா இப்போ என்ன..? என்னாச்சு உனக்கு திடீர்னு..?”
“எங்க மூணு பேருக்கும் உனக்கு ஒரு பொண்ண கட்டிவக்க பரிபூரண சம்மதம்..அதான் உன்னோட தாட் என்னன்னு கேக்கலாம்னு..”
“பொண்ணு யாருன்னு சொல்லுங்க..புடிச்சி இருந்தா சொல்றேன்..அடுத்தடுத்த வேலய பாக்கலாம்..” எப்படியும் சம்மதிக்கப் போவதில்லை என்கின்ற உறுதி,அவனில்.
“நாங்க உன்ன ஃபோர்ஸ் பண்ணல..நல்லா யோசிச்சு சொல்லு..இந்த பொண்ண விட உனக்கு பொருத்தமா எந்த பொண்ணும் கெடக்காதுன்னு தோணுது..”
“பொண்ணு யாருன்னு சொல்லுங்கப்பா..” கொஞ்சம் கோபம் வந்து விட்டது,டாக்டருக்கு.
“தென்றல்..” அவர் அழுத்தமாய் உரைத்திட டாக்டரின் விழிகளோ,அதிர்ந்து விரிந்தன.
“தென்றல்ல்ல்ல்ல்ல்..” அகத்தில் துளிர்த்த அதிர்வலைகளை மறைத்தவாறு கேட்டான்.சத்தியமாய் அவனுக்கு அதிர்வு தான்.அவளை முறைப் பெண்ணாய் கூட அவன் யோசித்தில்லாதிருக்க,அவர்களின் சிந்தனைனை எண்ணி டாக்டருக்கு வியப்பு தான்.
“ஆமா டா..தென்றல் தான்..அவள உனக்கு கட்டி வச்சா சரியா இருக்கும்னு தோணுது..” அவர் கனிவாய் உரைத்திட தலைவலித்தது,டாக்டருக்கு.
“யோசிச்சு சொல்றேன் பா..” தாமதியாது பதிலுரைத்து விட்டு அகன்றவனின் முதுகை மூவரின் பார்வையும் இயலாமையுடன் மொய்த்தது.
மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டியவாறு,அண்ணாந்து வானத்தை வெறித்தவனுக்கு,ஏனோ மனம் பிசைவது போல்.
டாக்டரின் மனதிலும் சஞ்சலங்கள் படையெடுத்திட,விடியும் வேளையில் களைப்புடன் வந்தும் கூட உறங்க முடியவில்லை.
சத்தியமாய் அவன் மனதில் அவள் இல்லை.ஆனால்,இன்னொரு வாழ்க்கை என்கையில் மனம் அதையும் ஏற்பதாய் இல்லை.
ஏன் காதலித்துத் தொலைத்தோம் என்கின்ற எண்ணம் தோன்றிட,மனமோ இறுகியது.அவள் அவன் மனதில் இல்லாவிடினும் அவனால் இன்னொருத்தியை அதே காதலுடன்,ஏற்க முடியும் என்று தோன்றிடவில்லை.
அதற்காகத் தானே திருமணத்தை முடியுமான அளவு தள்ளிப் போட முயல்வது.அவன் வாழ்வுக்குள் ஒருத்தி நுழைந்தால்,அவளின் எதிர்ப்பார்ப்புக்கேற்ப காதலை கொடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கை இல்லாதது தான் அவனின் பின் வாங்கலின் முக்கிய காரணமே.
யோசித்தவனுக்கு தலைவலி வருவது போல் இருக்க,நெற்றியை நீவிக் கொண்டே கட்டிலில் சரிந்தான்,நாளை மறுத்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்துடன்.
அதற்குள் அவனின் மனம் மாறி விடக் கூடும் என்று அவன் அறிந்திருக்கும் சாத்தியமில்லை.
●●●●●●●
கைகளை பிசைந்தவாறு அமர்ந்திருந்த சங்கவியின் முகத்தில் அத்தனை கலவரம்.மனதில் இருந்த பதட்டம் அவளை இயல்பாக இருக்க விடவில்லை.
விழிகள் சுற்றிலும் சுழன்று அடிக்கடி யாரும் தம்மை கவனிக்கிறார்களா என கவனித்துக் கொள்ளவும் செய்தது.அவளைப் பார்த்துக் கொண்டே,அவள் முன் வந்தமர்ந்தான்,சஞ்சீவ்.
அவளுக்கு அவனைக் கண்டதும் கோபமாய் வந்தாலும்,விழிகள் காதலுடன் அவளைத் தழுவின.
“இப்போ எதுக்கு வர சொன்னீங்க..?” சீறலாய்த் தான் கேட்டாள்,அவள்.மனதில் இருக்கும் பயத்தின் வெளிப்பாடே அந்த கோபம்.
“உஷ் மெதுவா பேசுடி..வந்ததும் வராததுமா காதுல கத்தற..?”
“வேற என்ன பண்ண சொல்றீங்க..? ஏற்கனவே பக்கு பக்குன்னு இருக்கு..? இதுல நீங்க வேற இப்டி வர சொல்லி பீபிய எகிற வச்சா என்ன பண்றது..?”
“சரி சரி திட்டாத..நா உன்ன கூப்டது முக்கியமான விஷயம் பேசறதுக்கு..?” கூறியவனின் விழிகளில் தீவிர பாவம்.
“என்ன..?” அவளின் குரல் இறங்கி விட்டது.
“உன் வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் தெரியாம இத அர்ரேன்ஜ்ட் மேரேஜாவே கொண்டு வர நா பட்ட பாடு உனக்கு தெரியும் தான..?”
“ம்ம்..”
“எங்க வீட்ல எல்லாம் ஓகே..குதி குதின்னு குதிக்கற எங்கப்பத்தாவே ஓகே சோல்லிட்டாங்க..ஆனா உன்னோட அக்கா கல்யாணம் ஆகாம இருக்குறது ப்ரச்சன..”
“என்னது..?!”
“அன்னிக்கி பொண்ணு பாக்க வந்தப்போவோ உனக்கு புரிஞ்சு இருக்கும்..இப்போ என்னன்னா உன் அக்காவுக்கு கல்யாணம் பண்ணாம உன்ன எப்டி கட்டிக்க முடியும்னு ஒரே டார்ச்சர்..என்னால எந்த பதிலும் சொல்ல முடில..”
அவளுமே அவனின் கேள்வியில் அடங்கி விட்டாள்.அக்காவுக்கு திருமணம் ஆகாமல் அவளுக்கு திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடில்லை என்றாலும் காதல் கண்ணை மறைத்து விட்டது.
தென்றலுக்கும் அதில் பிரச்சினையில்லை என்பது புரிய,அவளும் ஒப்புக் கொண்டு விட்டிருக்க,வேறு விதத்தில் அந்த பிரச்சினை இங்கு கிளர்ந்து எழுந்திருந்தது.
“அவங்க கேக்கறது சரி தான சங்கவி..? என்ன தான் இருந்தாலும் உனக்குள்ளயும் ஒரு சங்கடம் இருக்கும்ல..சரியா சொல்றதுன்னா உங்கக்கா கல்யாணம் பண்ணாம எங்க வீட்ல இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க..அட்லீஸ்ட் அவங்களுக்கு நிச்சயமாச்சும் நடந்து இருக்கனும்..” அவன் ஆணித்தரமாய் கூறிட,அதிர்ந்து போனாள்,சங்கவி.
இங்கு தென்றலோ,சூழ்நிலையும் சொந்தங்களும் தன்னை இறுக்கிப் பிடிக்க இருப்பது தெரியாமல் அவன் நினைவுகள் கரைந்திருக்க,அவளின் எண்ணங்கள் முழுவதும் அவன்!
அவளின் அவன்!
காதல் தேடும்.
2025.04.03
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தென்றலோட அவன் யாரா இருக்கும் … டாக்டர் சரி சொல்லிடுவானா ?? யாழ் பையன் ஸ்டோரி சூப்பரா போகுது …