
அத்தியாயம் 23
“அப்பா, நீங்க சொன்ன ஒரே வார்த்தைக்காக கட்டிக்கப்போற பொண்ணு யாரு, எப்படிப்பட்டவ, என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட விசாரிக்காம கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.
என் ப்ரண்ட்ஸ்கிட்ட ஒருவார்த்தை சொல்லி இருந்தா இவங்க ஒட்டுமொத்த ஜாதகமே எங்க கையில் வந்திருக்கும். ஆனா அப்பாவுக்கு அப்புறம் தான் கடவுளேன்னு நினைச்சு கண்ணை மூடிக்கிட்டு உங்க கை பிடிச்சு இவ்வளவு தூரம் வந்தேன் இல்ல. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் னு புரியவைச்சுட்டீங்க.
உங்க மேல வைச்சிருந்த கண் மூடித்தனமான அன்பை வைச்சு என் கண்ணையே கட்டி கோமாளி ஆக்கிட்டீங்க இல்ல. நினைக்க நினைக்க ரொம்ப வருத்தமா இருக்கு பா.” அத்தனை வருத்தம் இருந்தது செல்வாவின் பேச்சில்.
“ஏன் பா இப்படிப் பண்ணீங்க. உண்மையைச் சொல்லி அதனால் நாங்க இந்தக் கல்யாணம் வேண்டாம் னு சொல்லி இருந்தாக் கூட எங்களுக்குப் புரியவைக்க முயற்சி பண்ணி இருக்கலாமே. அதை விட்டுட்டு எதுக்காக இப்படி நாடகம் ஆடி உங்க மரியாதையை நீங்க குறைச்சிக்கிட்டீங்க.” மனம் பொறுக்காமல் கேட்டான் தர்மா.
“ருக்குவைப் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்பவே நீங்க அவங்க கூடப்பிறந்த பொண்ணுங்களைத் தான் உங்க மத்த பசங்களுக்கு பேசி முடிச்சிருக்கீங்கன்னு சொல்லி இருந்திருந்தா, குறைந்தபட்சம் இந்தக் காரணத்துக்காக ருக்குவை விடணுமான்னு யோசிச்சு இருப்பேன். ஆனா இப்ப இந்த நிமிஷம் ருக்கு என்னைத் திட்டம் போட்டு ஏமாத்திட்டாங்கன்னு நினைக்கத் தோணுது.” தெய்வாவும் தன் பங்கிற்குக் குதித்தான்.
“தோணுது என்ன தோணுது அதுதான் உண்மை. அப்பா போய் கேட்டதும் காரு, பணம், சொத்து, மரியாதை எல்லாம் கிடைக்கிதுன்னு நாலு பேரும் தலையைத் தலையை ஆட்டி இருப்பாங்க. அப்பாவும் இது புரியாம என்னமோ உலக அழகிகளை தன் பிள்ளைங்களுக்கு கட்டி வைச்சிட்டதா மிதப்புல திரியுறாரு.” விஷத்தை துப்ப ஆரம்பித்தான் நாகா.
“இப்ப என்னாச்சுன்னு இப்படி மாத்தி மாத்தி புலம்பிக்கிட்டு இருக்கீங்க. எப்படியும் உங்க அப்பா காலம் வரைக்கும் நீங்க இந்த வீட்டில் தானே இருக்கப் போறீங்க. அதுவரைக்கும் உங்க பொண்டாட்டிங்க ஒன்னா இருக்கிறதுக்கு உங்களுக்கு நல்லது தானே.” என்றவாறு வந்தான் அரசு.
“வாடா நல்லவனே நீயும் இந்த விஷயத்தில் இவருக்கு கூட்டாளி தானே. இப்ப என்ன எங்களுக்கு சப்போர்ட்டா பேசுற மாதிரி நடிக்கிற.” நாகாவின் நாவு அடங்குவேனா என்றது.
“என்னது நான் நடிக்கிறேனா. அது சரி பெத்து, வளர்த்து, உங்க மேல உயிரையே வைச்சிருக்கிற உங்க அப்பாவையே நாடகம் ஆடுறீங்கன்னு சொல்ற நீங்க, என்னை நடிக்கிறேன்னு சொன்னதில் ஆச்சர்யப்படுறதுக்கு எதுவும் இல்லை தான்.” துளிர்விட்ட கோவமும் அதைக் காட்ட இயலாத கையாலாகாத தனமும் சேர்ந்துகொள்ள பேசினான் அரசு.
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத அரசு, அப்பா பண்ணது தப்பு. கல்யாண வாழ்க்கையைப் பத்தி எத்தனையோ கனவுகளோட இருந்தேன். அது எல்லாம் இப்படி ஒரே நொடியில் மண்ணோடு மண்ணாப் போயிடுச்சு. என்னோட விரக்தியும், மனவேதனையும் உனக்குப் புரியாது.” தெய்வாவின் புலம்பல் நிற்பேனா என்று பிடிவாதம் பிடித்தது.
“என்னடா தப்பு, எதுடா தப்பு. நான் பெத்த பிள்ளைங்க ஒற்றுமையா இருக்கணும் னு ஆசைப்பட்டதில் அப்படி என்னடா பெரிய குத்தத்தைக் கண்டுட்டீங்க. நீங்க நாலு பேரும் சகலைங்களோ இல்லை பங்காளிகளோ இல்லை, ஒன்னா இருந்தா ஒத்து வராதுன்னு சொல்றதுக்கு.
நாலு பேரும் ஒரே அப்பா அம்மாவுக்குப் பிறந்தவங்க. அதுவும் இரண்டு இரட்டைப் பிள்ளைங்க. ஊருக்குள்ள போய் பாருங்க டா, இரட்டைப் பிறவியா பிறந்தவங்க எல்லோரும் இராமனும், இலட்சுமணனும் மாதிரி எப்படி ஒத்துமையா இருக்காங்கன்னு. என் பசங்களும் அப்படி இருக்கணும் னு நான் ஆசைப்பட்டது என்ன அவ்வளவு பெரிய தப்பா.” என்ற வடிவேலு, குறுக்கே பேச வந்த பெரிய மகனைத் தடுத்து தானே பேசினார்.
“ஒருவேளை நீங்க ஒத்துமையாவே வளர்ந்து கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ஆளுக்கு ஒரு பக்கமா குடும்பம், தொழில் னு போய் இருந்தாக் கூட என் மனசு இந்த அளவுக்கு வருத்தப்பட்டு இருக்காது.
ஆனா, சின்ன வயசில் இருந்தே நாலு பேரும் நாலு திசையா தானே இருக்கீங்க. உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க, ஒருநாள், ஒரே ஒரு நாளாவது நீங்க நாலு பேரும் என்கூட எங்கேயாவது வெளியில் வந்து இருக்கீங்களா.
அவன் வந்தா நான் வரமாட்டேன், இவன் வந்தா நான் வர மாட்டேன்னு ச்சே… அப்ப எல்லாம் ஒரு அப்பனா என்னோட மனசு எப்படி வலிக்கும் தெரியுமா? அதெல்லாம் நாளைக்கு நீங்க அப்பனா ஆனாத்தான் புரியும்.” வடிவேலு நிறுத்த, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உங்க விருப்பம் எத்தனை முக்கியமோ அதே அளவு எங்க சௌகர்யமும் முக்கியம் தானே. உங்க ஆசைக்காகத் தான் பிடிக்கவே இல்லன்னாக் கூட இந்த வீட்டில் இருக்கோம். அதுவே பெருசு, அதுக்கு மேல் பேராசைப்பட்டு இப்படிச் செய்தது தப்பு அப்பா.” பொறுக்க முடியாமல் சொன்னவன் நாகா.
“நீங்க என்னை நாடகக்காரன், கலகக்காரன், ஏமாத்துப் பேர்வழின்னு எத்தனை சொன்னாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. தொழிலில் ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுக்கும் முன்னாடி, கோர்ட் கேஸ் னு அலைஞ்சே என் அப்பா போய் சேர்ந்துட்டார், நாலு வருஷ வாழ்க்கைக்குள்ள பொண்டாட்டி போய் சேர்ந்துட்டா. எனக்கு நினைவு தெரிந்து நான் சந்தோஷமா இருந்த நாள்கள் ரொம்பவும் கம்மி.
பரம்பரை சொத்துக்காக, பெத்த பசங்களுக்காகன்னு நான் ஓடின ஓட்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. என்னோட சந்தோஷத்துக்காக நான் வாழனும் னு நினைச்சப்ப என்னோட வாலிபம் எல்லாம் போய் கிழவனா நின்னேன்.
இனிமே எனக்குக் கிடைக்க வேண்டிய ஒன்னு இருக்குன்னா அது நிம்மதியான சாவு தான். ஒருத்தன் வாழும் போது எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். சாகும் போது நிம்மதியா செத்தா தான் அவன் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கும்.
நான் சாகுறதுக்குள்ள என் பசங்க நீங்க ஒருத்தருக்காக ஒருத்தர் இருப்பீங்க, ஒருத்தருக்குப் பிரச்சனைன்னு வந்தா மத்த மூணு பேர் கூட இருந்து காப்பாத்துவீங்கன்னு நம்பிக்கை எனக்குள்ள வரனும். அப்படி வந்தா தான் என் கட்டை தீயில் வேகும். அதனால் தான் இது அத்தனையும் செஞ்சேன், இனியும் செய்வேன்.” என்க, மகன்களுக்கு என்னவோ போல் இருந்தது.
“நான் பண்ண இந்தக் காரியத்தோட வீரியம் இப்ப உங்களுக்குப் புரியாது. ஒருநாள் வரும், அப்ப நீங்க உணர்வீங்க. இந்தப் பொண்ணுங்களை நம்ம வாழ்க்கையில் கொண்டு வந்து நம்ம அப்பா நமக்கு எவ்வளவு பெரிய உபகாரம் பண்ணி இருக்காருன்னு கட்டாயம் யோசிப்பீங்க. ஆனா அப்ப நான் உயிரோட இருக்க மாட்டேன்.” வடிவேலு சொல்ல,
“உணர்ச்சிவசப்பட்டு என்ன பேசுறோம் ஏது பேசுறோம் னு புரியாமப் பேசாதீங்க. உங்க காலம் வேற, எங்க காலம் வேற. உலகம் ரொம்ப வேகமாப் போயிட்டு இருக்கு. இப்ப போய் கூட்டுக்குடும்பம் அது இதுன்னு.
இப்பெல்லாம் நமக்கு வர பிரச்சனையை நாம தான் தீர்த்துக்கணும். நம்ம நிழல் கூட நமக்குத் துரோகம் பண்ணாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல. புருஷன், பொண்டாட்டி, குழந்தைன்னு வாழ்றது தான் உண்மையான குடும்பம். அங்க தான் சந்தோஷம், நிம்மதி இருக்கும். அதை விட்டுட்டு அண்ணன், அண்ணன் குடும்பம், தம்பி, தம்பி குடும்பம் னு வாழ்வதெல்லாம் செட்டே ஆகாது.” தெளிவாய் சொன்னான் தெய்வா.
“நீ யோசிக்கிறது சரி இல்ல தெய்வா. நீங்க உங்க பொண்டாட்டி, புள்ளையோட தனியா போகணும் னு ஆசைப்படலாம். அதில் ஆம்பிளைங்களான உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனா பொண்ணுங்களுக்கு அப்படி இல்லடா.
நீங்க வேலைக்குப் போற வரைக்கும் உங்க முகத்தை மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்கணும், நீங்க வெளியில் போயிட்டா உயிர் இல்லாத வீட்டுச் சுவரை மட்டும் தான் பார்க்கணும். மனசில் இருக்கிறதைப் பேச, வாய் விட்டு சிரிக்க துணைக்கு ஒரு ஆள் இல்லாம வீட்டில் இருக்கிற பொண்ணுங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க.
சன்டே ப்ரீயா தானே இருப்போம். அப்ப நிறைய நிறைய பேசிக்கலாம் னு நீங்க சொல்லலாம். ஆனா ஒரு வாரம் முழுக்க வீட்டிலே அடைஞ்சு கிடக்கிற பொண்ணு வெளியே போக ஆசைப்படுறதுக்கும், ஒரு வாரம் முழுக்க வெளியில் சுத்தின ஆண் ஒருநாள் வீட்டில் இருக்க ஆசைப்படுறதுக்கும் நடுவில் நடக்கிற அந்த சண்டை தான் சன்டே.
குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடுமேனன்னு நீங்க சொல்லலாம். ஆனா குழந்தை பிறக்கிறதுக்கும் குறைஞ்சபட்சம் ஒரு வருஷமாவது ஆகுமே. அந்த ஒரு வருஷத்துக்குள்ள வீட்டில் குடும்பப் பெண்ணா இருக்கிற பொண்ணுங்க அனுபவிக்கிற கஷ்டங்களை வார்த்தையால சொல்லிட முடியாது.”
“பொண்ணுங்க உணர்ச்சிப் பூர்வமானவங்க. அவங்களுக்குத் தோணுற எல்லாத்தையும், அப்பப்ப கொட்டிடணும். அது அழுகை, கோவம், சிரிப்பு, சந்தோஷம் னு எந்த மாதிரியான உணர்வா இருந்தாலும் அதை அடக்கிக்கக் தெரியாது. அதை அடக்க நினைச்சா அது பெரிய பிரச்சனையில் போய் தான் முடியும்.”
“குழந்தை உருவாகி இருக்கிற நேரத்தில், தனக்குள் நடக்கிற ஒவ்வொரு மாற்றத்தையும் பெண்ணாகப்பட்டவ இரசிப்பா. உடனே அதை யார்கிட்டையாவது சொல்லி சந்தோஷப்பட ஆசைப்படுவா.
வேலையில் இருக்கிற ஆண்களுக்குப் போன் பண்ணா, அவங்க என்ன சொல்லுவாங்க இதெல்லாம் ஒரு விஷயம் னு போன் பண்ணியான்னு கேட்பாங்க. உங்களையும் குற்றம் சொல்ல முடியாது, உங்களுக்கு வேலையில் ஆயிரம் பிரச்சனை இருக்கும்.
உங்களைப் பொறுத்தவரைக்கும் நீங்க நிராகரிச்சது சின்ன விஷயமா இருக்கலாம். ஆனா பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும் அது ரொம்பப் பெரிய விஷயம். அது மட்டும் இல்ல நாள் முழுக்க வேலை செஞ்சுட்டு மேலதிகாரிகிட்ட திட்டு வாங்கிட்டு சோகமா வர உங்ககிட்ட, நாள் முழுக்கத் தனிமையில் இருந்த அவங்க ஏதாவது பேசுனீங்கன்னா, நீங்க என்ன சொல்லுவீங்க தொண தொணன்னு பேசாம அமைதியா இருன்னு சொல்லுவீங்க. அதுவும் அவங்களை ரொம்பவே பாதிக்கும்.
இதே நிலை நீடிக்கும் போது உங்ககிட்ட இருந்து அவங்க எதிர்பார்க்கிற அன்பும், அக்கறையும் கிடைக்காம போனதா, உங்களுக்கு அவங்களைப் பிடிக்காம போயிட்டதா அவங்களுக்குள்ள ஒரு பிரம்மை உருவாகும். உங்களை விட்டு விலக ஆரம்பிப்பாங்க. அதை நீங்க உடனே உணர்ந்திட்டா கூட பரவாயில்லை. ஆனா நீங்களும் அதைக் கவனிக்காம விட்டுட்டீங்கன்னா உங்க வாழ்க்கையே அந்த இடத்தில் தொலைஞ்சு போயிடும்.”
“ஒரு வீட்டில், அந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு எவ்வளவு சந்தோஷமா இருக்காளோ அந்தளவு தான் அந்த வீட்டில் உள்ள மத்தவங்களோட சந்தோஷம் அமையும். உங்களுக்கு அவங்க மேல இருந்த அன்பும், அக்கறையும் குறைஞ்சதா நினைச்ச அவங்க, குழந்தை பிறந்ததும் குழந்தையை மட்டும் முழுக்க முழுக்கக் கவனிக்க ஆரம்பிப்பாங்க. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் என்னைக் கண்டுக்கவே மாட்றன்னு அதுக்கும் அவங்களைத் தான் குற்றம் சொல்லுவீங்க.”
“பொண்ணுங்க பாவம் டா. வீட்டில் சும்மா தானே இருக்கிறன்னு சுலபமா ஒரு பொண்ணைப் பார்த்து கேட்டிடலாம். ஆனா அப்படி இருந்து பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும்.” நீளமாகப் பேசி முடித்த வடிவேல் தன் மகன்களின் அமைதி நிறைந்த முகத்தைப் பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.
“இது இப்படின்னா வேலைக்குப் போகுற பொண்ணுங்களோட கஷ்டம் சொல்லி மாளாது. ஆபீஸில் வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்தா வீட்டில் தலைக்கு மேல வேலை இருக்கும். குழந்தை பிறந்திட்டா டபுள் டென்சன் அந்தப் பொண்ணுக்கு.
வேலையில் இருக்கிற கோவத்தை வீட்டில் காட்டிட்டா வேலைக்கு போகுற திமிருன்னு சொல்லச் சொல்லும், அதுவே வேலையைக் கொஞ்சம் பகிர்ந்துக்க சொன்னா நமக்கு மேல் வலிக்கும்.
இப்படிப்பட்ட நிலைமையில் தான் பொண்ணுங்க தடம் மாறுவாங்க. வீட்டில் உள்ளவங்களோட அன்பும், அக்கறையும் போதுமான அளவு கிடைக்காத போது அதை வெளியே எர்பார்த்து ஏமாறுவாங்க.”
“ஆனா கூட்டுக்குடும்பத்தில் இதுக்கு வாய்ப்பே இல்லை. புருஷன் நீங்க சண்டை போட்டா அக்கா, தங்கச்சின்னு அவங்ககிட்ட போய் நிக்கலாம். அதுக்காக புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்கிற சண்டை எல்லாத்தையும் வெளியே போய் சொல்லனுமான்னு நீங்க கேட்கலாம். இந்த விஷயத்தில் பொண்ணுங்களை அடிச்சிக்கவே முடியாது. முழுசா எதையும் யார்கிட்டேயும் சொல்ல மாட்டாங்க. தன்னோட புருஷனை யார்கிட்டையும் விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க.
வேலை, சந்தோஷம், துக்கம் எல்லாத்தையும் பகிர்ந்துக்க கூட்டுக்குடும்பத்தில் ஆள் இருக்கும். தான் மட்டுமே எல்லாம் என்கிற ஆதிக்கம் இருக்கிறவங்களுக்கு கூட்டுக்குடும்பம் ஒத்து வராது தான். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தால் தான் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுத்துப் போகும் குணம் எல்லாம் கூடவே வளரும்.
கூட்டுக்குடும்பத்தில் வீட்டுக்குள்ள பிரச்சனை வரலாம். வரத்தான் செய்யும். ஆனால் ஒரு நல்லது கெட்டதுன்னா எல்லாத்தையும் மறந்து ஒன்னு சேர்ந்திடுவாங்க.
அதோட அப்பா, அம்மான்னு மட்டும் பார்த்து வளரும் குழந்தையை விட, அப்பா அம்மா, தாத்தா பாட்டி, சித்தப்பா, பெரியப்பான்னு பார்த்து வளருற குழந்தைங்க ரொம்ப புத்திசாலியாவும், ஆக்டிவாவும் இருப்பாங்க.
டீவி, செல்போன் போன்ற உயிர் இல்லாத பொருளோட அவங்க செலவழிக்கிற நேரத்தைக் குறைச்சுக்கிட்டு உயிருள்ள மனுஷங்ககிட்ட செலவழிப்பாங்க. இன்னும் நிறைய நிறைய நல்ல விஷயம் நடக்கும்.”
“நான் இவ்வளவு தூரம் சொல்லியும், இல்ல நான் தனியாத் தான் போவேன்னு நீங்க நின்னா அது உங்க சாமர்த்தியம், சாபமும் கூட. ஆனா நான் ஒன்னு சொல்றேன் நல்லா ஞாபகத்தில் வைச்சிக்கோங்க.
என்ன ஆனாலும் இந்த ஜென்மத்தில் அவங்க தான் உங்களுக்குப் பொண்டாட்டி. அதை மாத்த முடியாது, மாத்த நான் விடமாட்டேன். புரிஞ்சி நடந்துக்கோங்க.” என்ற வடிவேலுவின் வார்த்தைகளில் இதுவரை தாங்கள் காணாத கடுமை இருக்கவும் ஆண்களுக்கு நெஞ்சம் எல்லாம் மரத்துப் போன உணர்வு.
“நான் அரசுவைக் கூட்டிக்கிட்டு ஒரு வாரம் வெளியூர் போறேன். அதுவரைக்கும் வீட்டைப் பார்த்துக்கோங்க, என் மருமகள்களையும் பார்த்துக்கோங்க.” என்றுவிட்டு, மகன்கள் மறுக்கக் கூட இடம் கொடாமல் அரசுவுடன் கிளம்பினார் வடிவேலு.
“நம்ம அப்பாவுக்கு இவ்வளவு தூரம் பேசத் தெரியுமா என்ன?” தர்மா கேட்க, “அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். முதலில் எனக்கு ஒரு விஷயத்தை க்ளியர் பண்ணுங்க.
அப்பா சொன்னதை எல்லாம் கேட்டுட்டு எமோஷனல் ஆகி ஒன்னா ஒத்துமையா இருக்கலாம் னு யாராவது நினைக்கிறீங்களா என்ன?” முன்வந்தான் நாகா.
“ஐயோடா, நினைப்பைப் பாரு. ஒத்துமையாவா அதுவும் உங்க கூடவா வாய்ப்பே இல்ல.” என்றான் தெய்வா.
“அப்பா அந்தக் காலத்து ஆள். அவருக்கு நாம நடப்பை எடுத்துச் சொல்லி புரியவைக்க முடியாது. சொந்தங்கள் எல்லோரும் ஒன்னா ஒரே குடும்பமா இருக்கோம் னு வெளிப்பார்வைக்கு காட்டிட்டு உள்ளுக்குள்ள தனித்தனியா இருப்பது எல்லாம் ஒத்து வராது.
கூட்டுக்குடும்ப அமைப்பில் இருக்கும் முக்கால்வாசி நபர்கள் நடுநிலையா யோசிக்கிறவங்களா இருந்தால் மட்டும் தான் அவர் சொல்வது எல்லாம் ஒத்து வரும். நம்ம வீட்டில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
அதனால் அவரைப் பத்தி கவலைப்பட வேண்டாம். ஆனா நாம கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்திருக்கிறவங்களைப் பத்தி நாம யோசிக்கணும்.” என்றான் செல்வா.
“இதில் யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு, நாம சொல்ற படி, அப்பா காலத்துக்கு அப்புறம் தனியா வர சம்மதிச்சா சந்தோஷம், இல்லைன்னா” இழுத்தான் நாகா.
“இல்லைன்னா” மற்ற மூவரும் கேட்க, “டிவோர்ஸ் தான்” என நாகா சொன்ன வார்த்தைகள், தண்ணீர் எடுக்கவென்று கீழே வந்து கொண்டிருந்த ஊர்மியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாகா ஏன் இப்படி?? அவனும் நல்லா இருக்கமாட்டான்.. மத்தவங்களையும் நல்ல இருக்கவிடமாட்டான் போல…
நாகா நீ தான் பொண்டாட்டி கிட்ட செம்ம அடி வாங்க போற … இதென்ன இந்த லூசுங்க கிட்ட பொண்ணுங்களை விட்டுட்டு போயிட்டாரு … என்ன பண்ண போறாங்களோ