Loading

அத்தியாயம் 22

     வீடு வந்ததும் மணமக்கள் அனைவரையும் வாசலில் நிற்க வைத்து, லேசான தள்ளாட்டத்துடன் வந்த பாட்டி ஒருவரைக் கொண்டு ஆலம் சுற்ற வைத்தார் வடிவேலு.

     “பொதுவா கண் திருஷ்டிக்குப் பயந்து இரண்டு கல்யாணத்தையே ஒன்னா நடத்த மாட்டாங்க. ஆனா வடிவேலு தான் பெத்த நாலு பசங்களுக்கும் ஒன்னா ஒரே மேடையில் கல்யாணம் பண்ணி அழகு பார்த்திருக்கான். ஊர் கண்ணு முழுக்க உங்க மேல தான் இருக்கும்.” என்றவண்ணம் தெருமுக்கில் இருந்து காலடிமண் எடுத்துவந்து மணமக்களுக்கு சுத்தி போட்டவர்,

     “நீங்க நாலு பேரும் இந்த வீட்டுக்குள்ள வலதுகால் எடுத்து வைச்சு வரப்போற நேரம், இந்த வீட்டில் செல்வம் நிறையணும், நிம்மதியும் சந்தோஷமும் போட்டி போட்டி தங்கணும். போங்கம்மா உள்ள.” அன்பே உருவாக ஆணையிட்டார்.

     “பாட்டி நூறு வயசைத் தாண்டின சுமங்கலி. அவங்க ஆசிர்வாதம் கிடைச்சா இரண்டு தலைமுறை பெரியவங்களோட ஆசிர்வாதம் கிடைச்ச மாதிரி.” பெருமையுடன் சொன்னார் வடிவேலு.

     தங்களுக்காக இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களில் கூட தங்கள் மாமனார் பார்த்துப் பார்த்து நடந்துகொள்வது அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது பெண்களுக்கு.

     அரண்மனை போன்ற வீட்டின் அகலமான நுழைவு வாயிலில் நெல் நிறைந்த நாளிகள் நான்கு வைக்கப்பட, மருதாணியால் சிவந்த கால்களால் அதைத் தட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர் நால்வரும்.

     அதுநாள் வரை அவர்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த வீடு தான் என்றாலும் இப்போது முறைப்படி மருமகள்களாக வரும் போது உள்ளம் பூரிப்படைவதைத் தடுக்க முடியவில்லை பெண்களால்.

     “லீலா தங்கச்சிங்களோட சேர்ந்து பூஜை ரூமில் விளக்கு ஏத்திடு மா.” வடிவேலு சொல்லை சரியென்று ஏற்று அங்கே சென்றனர்.

     பஞ்சமுக விளக்கில் ஐந்து திரிகள் போடப்பட்டு விளக்கு ஏற்றத் தயாராக இருக்க, தங்களுடைய வாழ்வில் நிம்மதியும், சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு முதல் திரியை ஏற்றினாள் லீலா.

     அடுத்து ருக்கு, ஊர்மி, கடைசியாகத் தேவகி என வரிசையாக நான்கு திரிகளை ஏற்றி முடித்தவுடன் மீண்டும் தீப்பெட்டி லீலாவின் கரத்திற்கே வந்தது. ஐந்தாம் திரியை ஏற்றி முடித்தவள் தங்கைகளுடன் வெளியே வந்தாள்.

     அதற்குள் ஆடவர் நால்வரும் மாலையைக் கழட்டி கைகளில் வைத்திருக்க அதைப் பார்த்த பெண்களும் தங்களுடைய மணமாலையைக் கழட்டினர். ஜோடி ஜோடியாக மாலைகளை பெற்றுக்கொண்டு அவரவர் அறைகளில் மாலையை வைக்க கிளம்பினர் வேலையாட்கள்.

     சென்றவர்கள் திரும்பி வரவும், அவர்களோடு சேர்த்து ஆங்காங்கே இருந்த மற்ற வேலையாட்களுக்கும் அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுகளை மணமக்களின் கையால்  கொடுக்க வைத்து ஒருவாரம் விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார் வடிவேலு.

     ஆண்கள் நால்வரும் என்ன நடக்கிறது என்பதைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, பெண்கள் நால்வர் முகத்திலும் புயலுக்கு முன்னான பீதி அப்பட்டமாகத் தெரிந்தது.

     அது புரிந்தது போல், “என்னோட அன்பான மருமகள்களா நான் சொன்ன மாதிரி ஊர் அறிய சீரும், சிறப்புமா உங்களோட கல்யாணத்தை நடத்திட்டேன். இந்த ஒரு நிமிஷம், என்னோட எத்தனை வருஷ தவம் னு உங்க யாருக்கும் தெரியாது. என் பசங்களையும் சேர்த்து தான் சொல்றேன்.

     கோடி கோடியாக் கொட்டி கோவில் கட்டின அரசனை விட்டுட்டு, மனசுக்குள்ளே கோவில் கட்டின அடியார் ஒருத்தருக்கு சிவபெருமான் அருள் கொடுத்தாராம். அதே மாதிரி மனசுக்குள்ளே இத்தனை வருஷமா தவம் இருந்த எனக்கு கை மேல பலனா உங்களைக் கொடுத்திருக்கிறார் நான் வணங்கும் ஆண்டவன். நானும் என் பசங்களும் ரொம்பக் கொடுத்து வைச்சவங்க.” என்க, இந்த நேரத்தில் இப்படியெல்லாம் பேசத்தான் வேண்டுமா? இதைக் கேட்டால் அவர்களின் கோபம் இன்னும் அல்லவா அதிகரிக்கக்கூடும் என்று உள்ளுக்குள் பதறிக்கொண்டிருந்தாள் லீலா.

     “லீலாம்மா, உண்மையை மறைச்சுக் கல்யாணம் பண்ணிக்கிறதில் விருப்பம் இல்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை உண்மையைச் சொல்லப்போறேன்னு நீ முன்வந்தப்ப நான் தான் உன்னைத் தடுத்தேன். அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி.

     ஆனா, இதுக்கு மேல நான் உன்னைத் தடுக்க மாட்டேன். இனி அவன் உன் புருஷன், உனக்கு மட்டும் சொந்தமானவன். அவன்கிட்ட நீ நினைக்கிற எல்லாத்தையும் சொல்றதுக்கு உனக்கு உரிமை இருக்கு. நீ ஆசைப்பட்ட மாதிரியே அவன்கிட்ட நீயே உண்மையைச் சொல்லிடு.” மருமகள்கள் மேல் மகன்கள் அதிகம் கோபம் கொள்ளாமல் இருப்பதற்காக தான் பழியை ஏற்றுக்கொள்வது போல் கோடு போட்டுக் காண்பித்தார் வடிவேல்.

     நாகாவைத் தவிர மற்ற மூவருக்கும் சற்றே அதிர்ச்சி. அதிலும் செல்வாவுக்குப் பயங்கர அதிர்ச்சி. வடிவேல் நேரடியாகப் பேசியது அவன் மனைவியிடம் அல்லவா.

     “என்ன லீலா, அப்பா என்ன சொல்றாரு என்ன உண்மை. ஆமா நீங்க ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க.” கேள்விகளை அடுக்கினான்.

     “அது வந்துங்க” ஆரம்பித்த லீலா, சொல்லத் தெரியாமல் பரிதாபமாய் வடிவேலுவைப் பார்த்தாள்.

     “என்ன லீலா, எதுக்காக பயத்தோட அப்பாவைப் பார்க்கிறீங்க. என்ன சொல்லணும் என்கிட்ட, எதுவா இருந்தாலும் தாராளமாச் சொல்லுங்க. நான் உங்களைத் தப்பா நினைக்க மாட்டேன். ஒருவேளை இங்க வைச்சு பேசுறதுக்கு உங்களுக்கு சங்கடமா இருந்தா, நம்ம ரூமுக்கு போயிடலாம்.” என அவன் முன்நடக்க,

     “இல்லங்க இதை இங்க வைச்சு உங்க நாலு பேர் முன்னாடி தான் பேசியாகணும். அதுதான் சரியும் கூட.” படபடப்பாய் சொன்ன லீலா, தன்னை விட அதிகமாகப் பயந்து கொண்டிருக்கும் தன் தங்கைகளைப் பார்த்ததும், தன் பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஆழமான மூச்சு எடுத்துவிட்டாள். அவள் வாழ்வை நினைத்த போது வந்த பயம், தங்கைகளின் வாழ்வை நினைத்ததும் பறந்து போனது. கண் முன் இருக்கும் பெரிய சவாலை எதிர்கொள்ளத் தேவையான தைரியத்தை நொடியில் வளர வைத்துக்கொண்டாள்.

     “முதலில் நீங்க நாலு பேரும் எங்களை மன்னிக்கணும். நாங்க நாலு பேரும், உங்ககிட்ட இருந்து ஒரு பெரிய உண்மையை மறைச்சிட்டோம். கடவுள் மேல சத்தியமா உங்களுக்கு எப்பவும் தெரியவே கூடாதுன்னு திட்டம் போட்டு மறைக்கல. வேற வழி இல்லாம, கட்டாயத்தின் பேரில் கல்யாணம் முடியுற வரைக்கு மட்டும் உங்ககிட்ட இருந்து இந்த பெரிய உண்மையை மறைக்கிற மாதிரி ஆகிடுச்சு.” பொதுவில் சொல்ல ஆண்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

     “தவளை தன் வாயால் கெடும் னு சொல்லுவாங்க. அது இங்க ரொம்ப சரியா நடக்கிது. மாப்பிள்ளைங்களா உங்க பொண்டாட்டிங்க மேல பித்துப் பிடிச்சி அலைஞ்சீங்களே, இப்ப நான் பார்க்கத்தானே போறேன் உங்களோட ஆக்ஷ்ன் ரியாக்ஷனை.” மனதினுள் நினைத்துச் சிரித்தான் நாகா.

     “ருக்கு என்ன சொல்றாங்க அவங்க. என்ன உண்மை யார் மறைச்சாங்க. ஆமா நீங்க எதுக்காக அவங்க கையைப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறீங்க.” கேட்ட தெய்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

     “தேவகி அவங்களுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம். அவங்க உங்களையும் சேர்த்து ஒரு விஷயம் சொல்றாங்க நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க.” என்றான் தர்மா.

     “அவங்களுக்கும் சேர்த்து நானே பேசிடுறேன். ஏன்னா அவங்க பண்ண தப்புக்கு நான் தான் பொறுப்பு.” முன்வந்தாள் லீலா.

     “அது எப்படி, அவங்க பண்ண தப்புக்கு நீங்க பொறுப்பாவீங்க. அப்படி உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்.” தெய்வாவுக்குப் பொறுமை பறந்து கொண்டிருந்தது.

     “நான், ருக்கு, ஊர்மி, தேவகி நாலு பேரும் அக்கா, தங்கச்சிங்க. ஒரே அப்பா அம்மாவுக்குப் பிறந்தவங்க.”  உண்மையை ஒரே வரியில் போட்டு உடைத்தவள், இதை அவர்கள் தாங்கிக்கொள்வதற்கான அவகாசத்தை கொடுத்துவிட்டு மேலும் தொடர்ந்தாள்.

     “வடிவேல் மாமா எங்க வீடு தேடி வந்து, உங்களுக்கும் எங்களுக்குமான கல்யாணம் பத்திப் பேசினப்ப, நாங்க நாலு பேரும் கடைசி வரைக்கும் ஒன்னா இருக்க வாய்ப்பு கிடைக்குமே என்கிற ஆசையில்  கல்யாணத்துக்குச் சம்மதிச்சோம்.

     உங்களோட சம்மதம் கிடைச்சு, கல்யாணம் முடியுற வரை நாங்க நாலு பேரும் அக்கா, தங்கச்சிங்க என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு மாமா கேட்டுக்கிட்டாரு. முதலில் எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை.

     ஆனா இப்படி ஒரு அழகான வாழ்க்கை, நல்ல மாப்பிள்ளைகள் என் தங்கச்சிங்களுக்கு கிடைக்கிறது கஷ்டம் னு நான் தான் முதலில் ஒத்துக்கிட்டேன். நான் சொன்னதால மட்டும் தான் என் தங்கச்சிங்க இதுக்குச் சம்மதிச்சாங்க” மூத்தவளாய் தவறை தான் ஏற்றாள் லீலா.

     வெற்றியை தன்னோடு சேர்ந்து அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுக்க வேண்டும், தோல்வியைத் தான் ஒருவனே ஏற்க வேண்டும். அதுதான் நல்ல தலைவனுக்கு அழகு. அதைத் தான் செய்தாள் லீலா.

     “ஒரே அப்பா அம்மாவுக்குப் பிறந்திருந்தா நீங்க நாலு பேரும் எப்படி ஒரே வயசில் இருக்க முடியும். யொய் சொல்றதா இருந்தாலும் கொஞ்சம் பொறுத்தமா சொல்லணும். எங்ககிட்ட இப்படி பொய் சொல்லி உங்களுக்கு என்ன ஆகப் போகுது.” முந்திக்கொண்டு வந்தான் தெய்வா.

     அவன் கோபத்தில் அதிர்ந்தாலும் சமாளித்துக்கொண்டு, “நான் பொய் சொல்லல. எங்க அம்மாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நாலு பொண்ணுங்க நாங்க. எங்க அம்மாவோட கர்ப்பத்தில் உருவான நாளில் இருந்து இப்ப வரைக்கும் நாங்க பிரிஞ்சது இல்ல. இந்த காரணத்தால் தான் எங்களை உங்களுக்கு ஜோடியா மாமா தேர்ந்தெடுத்தாங்க.” தடுமாறினாலும் சொல்லிவிட்டாள்.

     இன்னமும் இதை நம்பமுடியாமல் நின்று கொண்டிருந்த தன் சகோதரர்களைப் பார்த்ததும் வெறுப்பாக வந்தது நாகாவிற்கு. “இருந்திருந்து இப்ப தான் இவங்க வாயில் இருந்து உண்மை வருது. அதை நம்ப முடியாம நிக்கிறீங்களே முட்டாள்களா? அவங்க நாலு பேரும் Non Identical தான் என்றாலும் அவங்க முகத்தை குறுகுறுன்னு பார்த்தா ஆயிரம் ஒற்றுமை இருக்கும்.

     மெத்தப் படிச்சு, பெரிய காலேஜில் படிப்பு சொல்லிக்கொடுக்கும் மேதாவி ஒருத்தன், தினம் தினம் பல பேரைப் பார்க்கும் போலீஸ்காரன் ஒருத்தன், மனித உடல் அமைப்பைப் பத்தி நல்லாத் தெரிந்த டாக்டர் ஒருத்தன். உங்க ஒருத்தரால்கூட இந்த ஆனைமலை இரகசியத்தைக் கண்டுபிடிக்கவே முடியலையே. எப்படித்தான் இந்த பொல்லாத உலகத்தில் வாழப்போறீங்களோ.” சலித்துக்கொண்டான்.

     “நாகா வாயை மூடு” வடிவேல் அதட்ட, “என்னப்பா இதெல்லாம், இவங்க சொல்றது எல்லாம் உண்மையா?” வடிவேலுவிடம் சீறினான் தெய்வா. அவனால் இன்னமும் லீலாவின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

     “ஆமா டா அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. நீங்க கடைசி வரைக்கும் ஒன்னா, ஒற்றுமையா இருக்கணும் என்பதற்காகத் தான் நான் இவங்களை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சேன்.” என்றார் வடிவேலு.

     “என்னப்பா எல்லாரும் சேர்ந்து விளையாடுறீங்களா? தாலி ஏறிடுச்சுங்கிற ஒரே காரணத்துக்காக எங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒன்றை கட்டாயப்படுத்தி ஏத்துக்க வைச்சிடலாம் னு நினைக்காதீங்க. இதையெல்லாம் சகிச்சிக்கணும் னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.” தன் மன எண்ணத்தைச் சொல்வது போல் சகோதரர்களை ஏற்றிவிடப் பார்த்தான் நாகா. அவன் ஒருவன் சொல்லும் வரை தான் வார்த்தைகள் சபை ஏறாது. அதுவே நான்கு பேரும் சேர்ந்து சொன்னால் நடக்குமே என்கிற நப்பாசை தான்.

     நாகாவின் வார்த்தைகள் தெய்வாவைத் தூண்டிவிட்டது. “ஏங்க எங்க அப்பாவுக்கு தான் அறிவில்லை உங்களுக்கு.” என்று லீலாவை நோக்கி முன்னேறும் போது, பதறிப்போய் அக்காவுக்கும் கணவனுக்கும் நடுவில் வந்தாள் ருக்கு.

     “நாங்க பண்ணது ரொம்பப் பெரிய தப்பு தான். நான் இல்லைன்னு சொல்லல. உங்களுக்கு கோவம் வரத்தான் செய்யும். ஆனா அந்தக் கோவத்தை என் மேல காட்டுங்க. எங்க அக்கா பாவம். எங்களை மனசில் வைச்சு தான் மாமா சொன்னதுக்கு சம்மதிச்சாங்க, அவங்களைத் திட்டாதீங்க.” கெஞ்சும் குரலில் சொன்னாள் ருக்கு.

     ருக்குவின் அழுகை நிறைந்த முகம் தெய்வாவின் கோபத்தை கொஞ்சம் மட்டுப்படுத்த அதற்கு எப்படி விடுவேன் என்பது போல், “அதெப்படிங்க திட்டாம இருக்க முடியும். எங்கப்பா தான் இவ்வளவு பெரிய விஷயத்தை எங்ககிட்ட இருந்து மறைக்கச் சொன்னாருன்னா, உங்க அக்காவுக்கு எங்கங்க போச்சு புத்தி. ஆரம்பத்திலேயே ஒத்துக்கிட்டாங்களா? இல்ல இத்தனை பெரிய வீட்டையும், சொத்துக்களையும் பார்த்த பிறகு மனசு மாறினாங்களா?” ஏற்றி விட்டான் நாகா.

     “உங்களுக்கு தான் இந்த விஷயம் முன்னாடியே தெரியுமே. எல்லாம் தெரிஞ்சு தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அப்புறம் எதுக்கு இப்ப உங்க அண்ணன் தம்பிங்க முன்னாடி சீன் காட்டுறீங்க.” என அழகாய் அவனை கோர்த்துவிட்டாள் ஊர்மி. மற்றவர்கள் அவனை முறைக்க, “இந்தக் கத்தரிக்காய் வேற.“ கடுகடுத்துக்கொண்டான் நாகா.

     “தேவகி இங்க என்னதான் நடக்கிது. அவங்க சொல்றது உண்மையா? நீங்க நாலு பேரும் அக்கா தங்கச்சிங்களா?” யாரிடமும் எந்தப் பேச்சு வார்த்தையும் வேண்டாம் நான் என் மனைவியிடம் நேரடியாகப் பேசிக்கொள்கிறேன் எனத் தர்மா கேட்க, கலங்கிய கண்களுடன் தலையை ஆட்டினாள் அவன் மனைவி.

     “என்ன லீலா இதெல்லாம், நான் உங்களுக்கு மரியாதை கொடுத்து என் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன். ஆனா நீங்க, போங்க லீலா. என்னை ரொம்ப டிஸ்அபாயிண்ட பண்ணிட்டீங்க.” செல்வா முகம் வாடவும், தன்னைப் போல் லீலாவின் முகமும் வாடியது.

     “மாமா அக்காவை ஏதும் சொல்லாதீங்க, அக்கா பாவம்.” என்றனர் மூவரும்.

     செல்வாவும், தெய்வாவும் குதிகுதியென்று குதிக்க தர்மாவிற்கோ இது ஒன்றும் பெரிய விஷயம் போல் தோன்றவில்லை. மனைவி இத்தனை பெரிய விஷயத்தை மறைத்தது கொஞ்சம் சுறுக்கென்று குத்தினாலும், பெண்கள் நிலையில் இருந்து அங்கே யோசித்துப் பார்த்தது அவன் ஒருவன் மட்டும் தான்.

     இந்தக் காலத்தில் தனியாக இருக்கும் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைப்பது போன்ற சம்பந்தம் அமையும் போது, யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தானே நினைப்பார்கள். தவறு என்று சொல்ல வேண்டும் என்றால் இப்படி ஒரு யோசனை சொன்ன தந்தையைத் தானே சொல்ல வேண்டும் என்று நினைத்தான். கூடுதலாக, இவர்கள் நால்வரும் அக்கா தங்கைகளாக இருப்பதில் என்ன பெரிய பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று தோன்ற பெரிதாகப் பிரச்சனை செய்யாமல் அமைதியாகிவிட்டான்.

     தெய்வாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. ருக்குவை மனைவியாக மனதில் நினைத்த நாளில் இருந்து ஆசையாய் கட்டி இருந்த கனவுக் கோட்டை தகர்ந்து விழுந்ததில் கடுப்பானவன், இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த கோபம் எல்லை மீற நேராக ருக்குவிடம் வந்து அவளுடைய புஜத்தை இறுக்கமாகப் பற்றினான்.

     லீலா அவனிடம் ஏதோ சொல்ல வர, “எதுவா இருந்தாலும் நான் என் பொண்டாட்டிகிட்ட பேசிப்பேன். இதில் பெட்டர் நீங்க தலையிடாதீங்க.” முகத்தில் அடிப்படி போல் சொல்லிவிட அதில் அவள் அடங்கிவிட்டாள்.

     “என்னோட எதிர்காலம் இந்த வீட்டில் இல்லை. சீக்கிரம் தனியாப் போயிடுவோம் னு தெளிவாச் சொன்னேன் தானே. அப்ப தலையைத் தலையை ஆட்டினீங்க. எத்தனை கனவோட சொன்னேன். அப்பவே நீங்க ஏன் இதை எல்லாம் சொல்லல. நீ என்ன சொன்னா என்னன்னு தானே அமைதியா இருந்திருக்கீங்க.” அவன் ஒரு உலுக்கு உலுக்கவும் ருக்குவின் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

     “அக்கா” என்று ஓடிவந்து தோள் சாய ருக்குவாலும் முடியவில்லை, “அழாதே அக்கா இருக்கேன்.” என்று ஆறுதல் சொல்ல லீலாவாலும் முடியவில்லை.

     செல்வாவிற்கு இவர்கள் சகோதரிகள் என்பது அதிர்ச்சியைக் கொடுத்தாலும், லீலா அதைத் தன்னிடம் சொல்லவில்லையே என்பது தான் கோபத்தைத் தூண்டியது. தன்னுடைய முன்னாள் காதலி விஷயத்தில் ஆரம்பித்து மெதுமெதுவாகத் தான் தன்னால் இந்த திருமண வாழ்வை ஏற்றுக்கொள்ள முடியும் என்பது வரை எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட தான் எங்கே, இத்தனை பெரிய விஷயத்தை மறைத்து விட்டு நிற்கும் அவள் எங்கே என்பதாய் தான் யோசித்தான்.

     தெய்வாவைப் பொறுத்தவரை ருக்குவின் புறம் அவனை மொத்தமாகச் சாய வைத்ததே அவளுக்கு யாரும் இல்லை என்று வடிவேலு சொன்ன அந்த ஒற்றை விஷயம் தான்.

     இந்த உலகத்தின் ஒட்டு மொத்த உறவாகவும் தானே தன் மனைவிக்கு இருக்க வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தான். அது அனைத்தும் பொய்யாகிப் போனதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் அடைந்த ஏமாற்றம் கோபமாக வெளிப்பட்டது.

     எப்போதும் செல்லம் கொஞ்சும் அவனிடம் இருந்து இத்தனை கடுமையான முகபாவனைகளை எதிர்பாராமல் பயந்து போன ருக்கு, அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு திருமணத்திற்கு முன்பு  தாங்கள் தங்கி இருந்த அறைக்கு ஓட, அவள் பின்னே ஓடினர் மற்ற மூன்று பெண்களும்.

     “உங்க கோபம் நியாயம் தான், நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அதுக்காக அந்தப் பொண்ணுங்களை ஏதும் சொல்லாதீங்க. அந்தப் பொண்ணுங்க ரொம்பப் பாவம் டா.

     அண்ணன், தம்பிங்க ஒன்னா ஒத்துமையா இருக்கிறது உங்களைப் பொறுத்தவரைக்கும் வேடிக்கையான விளையாட்டு விஷயமா இருக்கலாம். ஆனா அதில் இருக்கிற சந்தோஷம் என்னன்னு அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும். அந்தப் பொண்ணுங்க அக்கா தங்கச்சியா இருக்கிறதில் உங்களுக்கு என்னடா பிரச்சனை.” வடிவேலு கேட்க,

     “என்ன பிரச்சனையா, புருஷன் பொண்டாட்டிக்கு வேற யாருமே உறவுகள் இல்லை என்னும் பட்சத்தில் அவங்களோட மொத்த அன்பும் அவங்களுக்குள்ள மட்டுமே காட்டிக்குவாங்க.

     அவங்களுக்குள்ள அன்பு, அந்நியோன்யம் அளவுக்கு அதிகமா இருக்கும். அப்பப்ப சின்னச்சின்னச் சண்டை இருந்தாலும், தான் போகுறதுக்கு வேற இடம் இல்லை, தனக்கு ஆறுதல் சொல்ல வேற ஆள் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு அடிச்ச அம்மாகிட்டையே அழுதுகிட்டு ஓடி வர குழந்தை மாதிரி, சண்டை போட்டவங்க கிட்டேயே திரும்ப வந்து சேருவாங்க.

     அப்படி ஒரு வாழ்க்கை வாழத்தான் நான் ஆசைப்பட்டேன். ருக்குவோட மொத்த அன்பும் எனக்கு மட்டும் தான் கிடைக்கும் னு எவ்வளவு கனவோட இருந்தேன் தெரியுமா?

     அந்த மூணு பேரைத் தாண்டி தான் எனக்கு அவங்க அன்பு கிடைக்கும் னா கட்டாயம் அது தேவை தானான்னு யோசிக்கத் தோணுது.” என்றான் தெய்வா.

     “லீலா மேல நான் ரொம்ப நம்பிக்கை வைச்சிருந்தேன். அதை எல்லாத்தையும் அவங்க உடைச்சிட்டாங்க. அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி இந்த விஷயத்தை கண்டிப்பா என்கிட்ட சொல்லி இருக்கணும். ஒருவேளை சொல்லி இருந்தா இதை ஏத்துக்கிட்டு இருந்திருப்பேனே என்னவோ. இப்ப எனக்கு மனசெல்லாம் விட்டுப் போச்சு.” என்றான் செல்வா.

     “எங்க நாலு பேருக்கும் செட்டாகாதுன்னு முடிவானதுக்கு அப்புறம் அவங்களை மாதிரி நாலு பேரை எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சு, எங்க வாழ்க்கையைக் காப்பாத்துறேன் என்கிற பெயரில் அவங்க நிம்மதி, சந்தோஷத்தை பணயம் வைச்சிட்டீங்க அப்பா. இதில் என்னோட வருத்தம் முழுக்க முழுக்க உங்க பேரில் மட்டும் தான்.” என்றான் தர்மா. என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டு பாவமாக நின்றிருந்தார் வடிவேலு.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. Vera yar mulama intha unmai therinjiruntha innum nilaimai kastama irunthurukum.. nalla velai avangale sollitanga super sis…
    Vadivel nilaimai tha pavam…

  2. ஒருவழியா உண்மை தெரிஞ்சுடுச்சு … லவ்வர் பாய் தெய்வா ரொம்பத்தான் பண்றான் … எங்க நம்ம அரசுவை காணோம்