
விடியும் முன்…!
அத்தியாயம் 02
உதிரம் வழிந்த கால்களைக் கண்டதும் மூச்சடைத்துப் போனது விஜய்க்கு.
பயத்தில் தடுமாறி தனது அலைபேசியை தவற விட்டிருக்க அது கீழே விழுந்திருக்க என்னவானதோ திடுமென்று நின்று போனது, அதில் இருந்து வந்த டார்ச் வெளிச்சம்.
மழை சத்தம் மட்டும் விடாது கேட்டுக் கொண்டிருக்க சுற்றம் எங்கும் ஒரு வித மயான அமைதி.
“விஜய்ய்ய்ய்ய்…எங்கடா இருக்க..?” பயத்தில் நடுங்கும் தொனியுடன் கத்தியே விட்டிருந்ததான்,ஜீவா.
கைகளோ எதுவும் புலப்படா கும்மிருட்டில் தோழனை தேடி காற்றில் அசைந்தது.
“ஜீவா..கூல்..நா இங்க இருக்கேன்..” என்று தோழனுக்கு ஆறுதல் சோன்னாலும் அவனுள்ளேயும் பயம் இருக்கத் தான் செய்தது.
அடியடியாய் எடுத்து வைத்து வந்தவனுக்கு எதுவுமே புலப்படாது இருக்க சுவரொன்றில் மோதி நிற்க நின்றது,அவனின் நடை.
அப்படியே சுவற்றை தடவி அது சுவர் என்று உறுதி செய்து கொண்டவனின் காதருகில் கேட்டில் ஒரு மூச்சுக்காற்றின் சத்தம்.அவனின் கழுத்தடியில் அந்த சீரான சுவாசத்தின் உஷ்ணம்.
“யா..யாரு..யாரு..” கத்திக் கொண்டே உடல் நடுங்க திரும்பி கைகளால் ஆராய முற்பட வெறும் காற்று மட்டுமே அவ்விடத்தில்.
“ஜீவா..எங்கடா இருக்க..?” இம்முறை உச்சஸ்தானியில் கத்தியிருந்தான் தோழன்.
குரல் அப்பட்டமாய் நடுங்கியது.
“மச்சான்…அஅஅஅ…ஹஅஅஅஅ….எனக்கு அம்மா வேணும்..பயமா இருக்கு..அம்மா கிட்ட போனும்..” பயத்தின் உச்சியில் குழந்தையாய் மாறி அழுது கொண்டே சொன்ன தோழன் மட்டும் விஜய்யின் அருகில் இருந்தால் அவனின் நிலை படுமோசம் தான்.
“நாசமா போறவனே..எங்கடா இருக்க..?”இம்முறை பயத்துடன் சேர்ந்து இம்முறையும் கோபமும் ஒருசேர.
“நீ தான் டா பைத்தியம்..முத்துன பைத்தியம்..முழுசா
மாறுன பைத்தியம்…பைத்தியம் டா உனக்கு..வேணா வேணான்னு சொன்னேன்..பெரிய பிஸ்தா மாதிரி கூட்டிட்டு வந்த மெண்டல் டா நீ…”உச்சகட்ட பயத்தில் எழுந்த அசட்டு தைரியத்தில் தோழனை திட்டினாலும் அடிக்கடி விரல்கள் கன்னத்தை நனைக்கும் கண்ணீரை துடைக்கத் தான் செய்தது.
“பைத்தியமே..எங்கடா இருக்க..அத சொல்லி தொல மொதல்ல..”தோழனின் நடத்தை மாற்றத்துக்கான காரணம் புரிந்த விஜய் தன் கோபத்தை கை விட்டு கொஞ்சம் நிதானமானது, அதிசயம் தான்.
“தெரில டா..சுத்தி எங்கயும் இருட்டா இருக்கு..” என்று துழாவிய படி நடந்து வந்தவர்களுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி வருவது புரிந்திடும் சாத்தியம் இல்லையே,அந்த கும்மிருட்டில்.
ஆனால் விஜய்க்கு,
அடிக்கு அடி அதிகமாகும் உரப்பின் அளவைக் கொண்டு தோழன் தன்னை நோக்கி வருகிறான்,என்பதை ஊகிக்க முடிந்தது.
“ஜீவா..பக்கத்துல தான் டா இருக்க..கிட்ட வா..” என்றவனுக்கு சார்ஜ் தீர்ந்திருந்ததால் தோழனின் அலைபேசியை அந்த வீட்டிலேயே விட்டு விட்டு வந்தது மடத்தனம் என்று தோன்றிற்று,ஒரு நொடி.
“ச்சை..சார்ஜ் பண்ணி கொண்டு வந்துருக்கலாம்..”முனகியவாறு நடந்திட காற்றில் துழாவியவனின் கைகளில் அகப்பட்டான்,தோழன்.
ஒன்றும் யோசியாது அவனின் கரத்தைப் பற்றிக் கொள்ள ஆசுவாசப் பெருமூச்சொன்று,
ஜீவாவிடம் இருந்து.
“ம..மச்சான்..ஒன்னுமே தெரில டா..கண்ணு போயிருச்சோன்னு பயமா இருக்கு டா..”
“கெரகத்துக்கு வந்தவனே வாய மூடு..” என்ற படி ஒருவரின் கரத்தை பற்றியவாறு முன்னே அடி எடுத்து வைத்திட “ம்ம்ம்ம்ம்ம்ம்..”கோரமாய் ஓர் உறுமல் சத்தம் ஜீவாவின் காதருகே.
“அஅஅஅஅஅஅஅஅஅ..” கத்தி விட்டிருக்க கத்திய சத்தம் மட்டுமே கேட்டது,விஜய்க்கு.
“ம..ம..மச்சான்..யா..யாரோ உ..உறு..உறுமுனாங்..கடா..” என்றிட உள்ளுக்குள் இன்னும் குளிரெடுத்தது,விஜய்க்கு.
தொண்டைக் குழி ஏறி இறங்கிட எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவனுக்கும் உயிர்ப்பயம் எட்டிப் பார்த்தது.
இருட்டில் துழாவிய படி நின்றவர்களின் முன் திடுமென ஒரு சிறு வெளிச்சம்.
மேலிருந்து கீழே ஒரு வட்ட வடிவ ஒளிப்பொட்டை மட்டுமே உண்டாகும் அளவு சிறு வெளிச்சமே அது.
“மச்சீ..கண்ணு தெரியுதுடா..” நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்பட்டுக் கொண்டான்,ஜீவா.
தோழனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவனுக்கு அவர்கள் கூறிய அமானுஷ்யக்கதைகள் பொய்யல்ல,
என்பது நிரூபனம் ஆகிற்று.
“மச்சீ..நெஜமாவே அவங்க சொன்னது எல்லாம் உண்ம டா..” சுற்றும் முற்றும் கலரவத்துடன் தோழன் சொல்ல விஜய்யின் பார்வை அந்த ஒளிப்பொட்டில் மட்டுமே நிலைத்திருந்தது.
பயத்துடன் அதன் அருகே வந்து அண்ணாந்து பார்த்திட அவ்விடத்தில் துளையேதும் இல்லையே,ஒளி வருவதற்கு.
அதுவும் கன மேகங்கள் சூழ்ந்து அடைமழை பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் நிலவை எங்கே தேட..?
மீண்டும் “ம்ம்..” என்று கொடூரமான உறுமல் சத்தம்.
இருவருக்குமே கேட்டது.
“ம்ம்..ம்ம்..ம்ம்..”இப்போது அதை விட சற்று பலமாய்.
இருவரும் அந்த இடத்தில் விழிகளை இறுகப் பொத்திக் கொண்டு நின்றிட திடுமென ஒரு கரும்புகை அவர்களின் முன்னே வந்து சுற்ற ஏதோ ஒரு ஸ்பரிசம் உணர்ந்து விழி திறந்த இருவருக்கும் பேரதிர்ச்சி.
“அஅஅஅஅஅஅஅ” கத்திக் கொண்டு மயங்கியே விட்டான்,
ஜீவா.
தோழன் கீழே சரிந்ததை கூட உணரவில்லை.
ஸ்தம்பித்து போய் நின்ற விஜய்யிற்கு கை கால்கள் அசைய மறுத்தது.
விழி பிதுங்கி அவன் நின்று கொண்டிருக்க மெல்ல மெல்ல அந்த கரும்புகை மாறிக் கொண்டிருந்தது,
மனித உருவத்துக்கு.
●●●●●
மறுநாள் அதிகாலை மூன்று மணி.
தன் வீட்டுக்குள் நுழைந்தவனின் கரத்தில் இருந்த சிகரெட்டை கண்டு அசூசையாய் முகம் சுளித்த தாயாருக்கு வெறும் நக்கல் பார்வையை கொடுத்தவனோ கடகடவென படிகளில் ஏறிட அவனின் முதுகைத் துளைத்த அவரின் பார்வையில் ஆயிரம் வலிகளும் வேதனைகளும்.
பெற்ற மகன் தடம் மாறுவதை எந்த தாயால் தான் ஒத்துக் கொள்ள முடியும்..?
கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்திட அறைக்குள் வந்தவனோ பத்து நிமிட குளியலை போட்டு விட்டு ஷார்ட்ஸ் ஆர்ம் கட் டீஷர்ட் சகிதம் வெளியே வந்தான்,
சிகையில் நீர் சொட்டிட.
ஒரு கரமோ துவாயை எடுத்து தலையை துவட்டிய படி இருக்க அருகே மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியில் திகதியைப் பார்த்தவனின் இதழ்களில் தாராளமான ஒரு சிரிப்பு.
“அட…இன்னிக்கி நாம பேப்ஸ பாக்கப் போனும் ல..” தனக்குள் யோசித்த வாசுவின் கரங்களோ அவளுக்கு அழைப்பெடுக்க என்றும் போல் இன்றும் ஏற்றிடவில்லை,அவள்.
ஏனோ அவள் மீது அப்படி ஒரு கோபம் எழுந்திட அதை அடக்கும் வழி தெரியவில்லை,அவனுக்கு.
மீண்டும் மீண்டும் அழைத்தான்.அப்போதும் பதிலேதும் இல்லாதிருக்க கோபத்தின் உச்சத்தில் அருகே இருந்த பூச்சாடியை எடுத்து சுவற்றில் வீசி அடித்திட அதுவோ பட்டுச் சிதறியது.
“இந்த பேப்ஸ் யேன் தான் என்ன இரிட்டேட் பண்றாளோ..இடியட்..என் லவ்ல புரிஞ்சிக்கவே மாட்டா..” தனக்குள் முணுமுணுத்தவனுக்கு அவளை இப்போதே கண்டிட வேண்டும் என்கின்ற எண்ணம் முளைத்து கிளை பரப்பியது.
பரபரவென தன் தலையை துவட்டிக் கொண்டே யோசித்தவனுக்கு இந்த நேரத்தில் அவளைக் காணச் சென்றால் ஒரு ஆட்டம் ஆடித் தீர்ப்பாள் என்பது சட்டென்று உரைத்தாலும் தன்னை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை,
அவனுக்கு.
அவன் வாழ்வில் கடந்து சென்ற பெண்கள் பலர் இருந்தாலும் இவள் மட்டும் ஏனோ கொஞ்சம் வித்தியாசமாய்.
அது தானே அவளைப் பிடிக்க வைத்து பின்னே சுற்ற வைக்கிறது.
அவன் அவளை ஆராய்ந்திடக் காரணம் வேறொன்று.
தன் பழிவெறியை தீர்த்துக் கொள்ள பெண்ணவளை பின் தொடர்ந்தவனுக்கு அவள் மீது காதல் வரும் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் சுதாரித்து விலகி நின்றிருப்பானோ என்னவோ..?
விட்டத்தை வெறித்த படி கட்டிலில் சாய்ந்து கொண்டவனின் மனதில் அவளின் எண்ணங்களில் ஊர்வலம்.
●●●●●●
நேரம் முற்பகல் ஏழு மணி.
ஆர்.கே தனியார் கல்லூரியின் பெண்கள் விடுதி அந்த நேரத்தில் பெரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
அதன் மேல் மாடியில் இருந்த அறையில் சாவகாசமாய் நின்று தயாராகிக் கொண்டிருந்தாள்,
அவள்.
இன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருக்க ஊருக்குச் செல்லும் அவளில் அதிகமாய்.
தயாராகிக் கொண்டிருந்தவளை கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்,
தோழி ஆராதனா.
எத்தனை சொல்லியும் கேட்காது தன் பிடிவாதத்தை செய்ய துடிக்கும் தோழியின் மீது கோபமாய் வந்தது.
“நேத்து நைட் நீயும் கீர்த்தனாவும் எங்க போனீங்க..?”
“அதுவா..ஹாஸ்டல் பின் வாசல் கிட்ட ஏதோ சத்தம் கேட்டுச்சு..அதான் டார்ச் எடுத்துட்டு பாக்க போனோம்..”
“ஏன் டி போன..? அதுவும் அந்த நடுராத்திரில..”
“அதான்டி..நைட்ல வெளில போறதுக்கு நா ரொம்ப பயப்படுவேன்ல..நேத்து என்னாச்சுன்னு தெரியல..போனும்னே தோணுச்சு..” தன் மனதில் இருந்ததை அப்படியே ஒப்புவித்திருந்தாள்,
அவள்.
“சரி..அத விடு..இன்னும் எத்தன நாளக்கி எல்லாத்தயும் மறச்சு வச்சிருக்க போற..?” கடுப்புத் தெறிக்கும் குரலில் கேட்டவளுக்கு என்றும் போல் இன்றும் அவளின் பதில் மௌனம் தான்.
“யார் கிட்டயும் உண்மய சொல்லனும்னு அவசியம் இல்ல டி..முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாவே இருக்கட்டும்..”
“பைத்தியமாடி நீ..உன்னால எத்தன பேருக்கு கஷ்டம்..உண்ம தெரிஞ்சா அந்த மனுஷனுக்கு எப்டி இருக்கும்னு யோசிச்சு பாரு..”
“அந்த குற்றவுணர்ச்சியே வேணான்னு தான் அப்டியே இருக்கட்டும் னு சொல்றேன்..என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் இல்ல..என்னோட எடத்துல நீ இருந்தா அதத் தானே பண்ணி இருப்ப..”
“அப்போ நீ அவர லவ் பண்ணல..”
“இல்ல..” அசராமல் பொய்யைச் சொன்னாள்,அவள்.
ஆயாசமாய் இருந்தது ஆராதனாவுக்கு.
எத்தனை முயன்றும் மனதில் இருப்பதை வெளிச்சொல்லா தோழியின் அழுத்தத்தின் மீது அப்படி ஒரு கோபம்.
உள்ளுக்குள் படபடத்தது அவளுக்கு.
என்ன தான் தோழியிடம் பொய் சொன்னாலும் அவளை அவளால் ஏமாற்றிக் கொள்ள இயலாதே.
பெருமூச்சொன்றை விட்டவாறு கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை ஆராய்ந்தாள்,அவள்.
கறுப்பு நிற காலர் வைத்த சுடிதாரும் அணிந்திருந்தவளின் துப்பட்டாவை கழுத்தை இரு தடவை சுற்றி எடுத்து முன்னே விரித்து விட்டிருந்தாள்.
முழங்கை வரை நீண்டிருந்தது சுடிதாரின் கை.
முதுகு வரை நீண்டிருக்கும் கூந்தலை நடுவில் வகுடெடுத்து வழித்து வாரி இறுகப்பின்னி சடை போட்டிருக்க வலது கையில் பெரிய டயல் உள்ள ஒரு கறுப்பு நிற கைக்கடிகாரம்.
மற்ற படி எந்த ஆபரணமும் இல்லை.
தோழியின் தோற்றத்தை கண்ட ஆராதனாவுக்கு கடுப்பாகியது.
“இப்டியே போ..ஜீனஸ் டீஷர்ட் மாட்டுனா ஆம்பள பையன் மாதிரி இருப்ப..இயரிங்கயாவது போடேன்..” கோபத்தில் தொடங்கி கெஞ்சலில் முடித்திட மறுப்பாய் தலையசைத்தாள்,
அவள்.
“நா என்ன கல்யாணத்துக்கா போறேன்..எல்லாத்தயும் மாட்டிகிட்டு போறதுக்கு..” மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு திருப்தி பட்டவளாய் தன் பையை எடுத்து தோளின் இருபுறமும் மாட்டிக் கொண்டாள்,
அவள்.
ஒரு கரம் அலைபேசியை பிடித்திருக்க மறுகரத்தால் கூந்தலை சரி செய்த படி நிமிர்த்தவளின் தோற்றம் அத்தனை நிமிர்வாய் இருக்க சிறு புன்னகையுடன் தோழியின் நிமிர்வை இம்முறை பார்த்திருந்தாள்,
ஆராதனா.
“மித்ரா..நீட்ட தான் இருக்க..ஊருக்கு போகும் போது எப்டி இருக்குமோ தெரியல..உன் ட்ரெஸ் எல்லாம்..” தோழியின் நேரத்தியை பற்றி அறிந்தவளாய் சொன்னாள்,
தோழி.
“நக்கலா..?” என்பதாய் இடது புருவமுயர்த்தி கேட்டவளைப் பார்த்து மறுப்பாய் தலையசைத்திட தோழியை அணைத்து விடுவிடுத்தவாறு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்,
அவள்.
அவள் *மித்ரஸ்ரீ..!*
தனக்கு பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுத்தவாறு கதவைத் திறந்து கொண்டே கீழே வழமையான தன் வேக நடையுடன் வந்தவளுக்கு வாசுவிடம் இருந்து வந்த அழைப்புக்கள் பெரும் பயத்தை கொடுத்தது,
உண்மையே.
ஏதோ தோன்ற கொஞ்சம் தரித்து கடகடவென ஏறி மொட்டை மாடிக்கு ஓடியவளோ நுழைவாயிலின் அருகே விழிகளால் தேட அவள் நினைத்தது போலவே யாருடனோ அலைபேசியில் உரையாடிய படி பார்வையை பாதையில் பதித்த படி நின்றிருந்தான்,
வாசுதேவன்.
திடுமென ஒரு வித கலக்கம் பெண்ணவளுக்குள்.
ஏதோ ஓர் இனம் புரியா பயம்.
ஒரு கணம் அவனுக்கு அழைப்பெடுத்து சொன்னால் என்ன என்கின்ற எண்ணம் எட்டிப் பார்த்தாலும் மறு கணமே தலையை உலுக்கிக் கொண்டு நிமிரந்தவளுக்கு தன்மானம் தன்மன எண்ணத்தை விட முக்கியமாய் பட்டது.
தோழியின் ஓட்டத்தை கண்டு பயந்தவளாய் அவள் பின்னூடு ஓடி வந்த ஆராதனாவுக்கும் வாசுவைக் கண்டதும் உள்ளுக்குள் பெரும் திடுக்கிடல்.
மித்ரஸ்ரீ எதுவும் யோசித்திடவில்லை.
பின் வாயில் வழியே கிளம்புவது தான் உசிதம் என தோன்றிற்று.
ஒருவாறு பின்வாயிலின் அருகே வந்து நின்றவளின் நேரமோ என்னவோ பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்து,
அதில்.
தன்னை நொந்து கொண்டவளோ வேறெதையும் பற்றி யோசித்திடவில்லை.
அருகே இருந்த மரக்கட்டையின் மீது ஏறி ஒருவாறு அந்த சிறு மதிலின் மேற்புறம் தாவி மறுபுறம் குதித்திருந்தாள்,
ஆராய்ந்தவாறே.
அதைத் தவிர வேறு என்ன தான் செய்திட இயலும்..?
ஒருவாறு அந்த ஒற்றை வழிப்பாதை வழியே பாதையை அடைந்தவளின் விடாமல் தன்னை பின் தொடரும் வாசுவின் மீது அப்பட்டமான எரிச்சல்.
●●●●●
இன்னும் மித்ரஸ்ரீயை காணாதிருக்க வாசுவின் மனதில் சிறு சந்தேக விதை.
தடதடவென படிகளில் ஏறி வந்து அவளின் அறைக்கதவை தட்ட உள்ளிருந்த ஆராதனாவுக்கும் கீர்த்தனாவுக்கும் இதயம் தொண்டைக்குழியில் வந்து துடித்தது.
அந்த விடுதிக்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் அத்து மீறி நுழைந்திடுவான்,
வாசு.
அவனுக்கு அதில் எல்லாம் துளியும் பயம் இல்லை.
உடைக்கும் வேகத்தில் கதவைத் தட்டுபவனிடம் என்ன சொல்லி சமாளிக்க என்பது தெரியவில்லை,
பெண்களுக்கு.
ஒருவாறு வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு மெல்ல கதவைத் திறந்தாள்,
ஆராதனா.
கதவருகே இருந்த சுவற்றில் உள்ளங்கையை ஊன்றி கொஞ்சம் சரிந்து நின்றிருந்தான்,
அவன்.
பயத்தில் முகத்தை துப்பட்டாவால் ஒற்றிய படி தன் முன்னே வந்து நின்றவளை கனலாய் பார்த்திட்டது அவன் விழிகள்.
“பேப்ஸ் எங்க..?” அதிகாரமாய் ஒலித்த அவன் குரலில் இவளுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது.
“ஸ்ரீ..கீழ இருக்கா..க்ரவுண்ட் ப்ளோர்ல..” என்றவளுக்கு பயத்தில் உள்ளுக்குள் பெரும் நடுக்கம்.
“அப்டிங்குற..” என்று கேட்டவாறு தாடையை தடவியவன் அடுத்த கணமே ஆராதனாவை இழுத்து சுவற்றில் சாய்த்து கழுத்தை நெறித்திட திகைத்து விட்டாள்,கீர்த்தனா.
அதிலும் அவளின் கழுத்தை பிடித்து மேலே தூக்கியதும் சுற்றி இருந்த அத்தனை பெண்களும் தடுக்க வர அவர்களை நின்ற இடத்தில் சிலையென சமைந்திடச் செய்தது,
வாசுவின் மறுகரத்தில் தவழ்ந்த துப்பாக்கி.
சிலர் கடகவென படியில் இறங்கி ஓடி காவலாளியை அவரோ அவன் அடித்து விட்டு வந்த அடியில் கீழே விழுந்தல்லவா கிடந்தார்.
வயதான மனிதரை தூக்கி விட்டதே அவரை அழைக்க வந்தவர்கள் தான்.
தோழியின் நிலையை பொறுக்காது “அவ அவ ஊருக்கு போக ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கா..” கத்தியே விட்டிருந்தாள்,கீர்த்தனா.
மித்ரஸ்ரீ சொல்ல வேண்டாம் என கூறியிருந்தும் ஆராதனாவின் நிலை அவளை உண்மையை உதிர்க்கச் செய்தது.
அப்படியே வாசு கையை எடுத்திட கீழே சரிந்து அமர்ந்தவளுக்கு இருமல் வந்திட கண்களில் நீர் கோர்த்தது.
தோழியர் தான் அவளை எழுப்பி அறைக்கு அழைத்துச் செல்ல கீர்த்தனா உடனடியாக மித்ரஸ்ரீக்கு அழைப்பெடுத்திருக்க யாரின் நேரமோ அவள் வாசுவின் தொல்லைக்கு பயந்து அதை அணைத்து வைத்திருந்தாளே.
ஒரு வித பதட்டம் தொற்றிக் கொண்டது, இருவர் மனதிலும்.
அத்தனை பெரிய கலவரத்தை உண்டு பண்ணி விட்டு எதுவும் நடவாதது போல் விசலடித்துக் கொண்டே கீழே இறங்கினான்,
வாசு.
அவனுக்கு எப்படியாவது மித்ரஸ்ரீயே இன்று மணம் முடித்தாக வேண்டும்.
அந்த எண்ணம் மட்டும் தான்.
அதே நேரம் ரணதீர புரத்தில்….
பாதையோரமாய் குடித்து விட்டு மயங்கி கிடந்த கணவனின் மேல் ஒரு குடம் நீரை ஊற்றி எடுத்து விட்டு காளி அவதாரம் எடுத்திருந்தார்,
பர்வதம்.
மனைவியின் அவதாரத்தில் பயந்தவராய் கெஞ்சிக் கொண்டு அவர் பின்னூடு நடந்து வந்த மாணிக்கத்தின் பார்வை தற்செயலாய் அந்த டாதையில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த ஆலமரத்தின் மீது படிய சற்றே திகைத்து அதனை நோக்கி நகர்ந்தன,அவரின் பாதங்கள்.
அருகே செல்லச் செல்ல இதயம் வேகமாய் அடித்துக் கொண்டிட அவரை மேலும் அதிர்ச்சியடையச் செய்யும் விதமாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது,
ஒரு உருவம்.
தொடரும்.
🖋️அதி….!
2024.01.25
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதை விறுவிறுன்னு போகுது … பயங்கரம் … கொஞ்சம் சிங்க் ஆகுற மாதிரி இருக்கு … அடுத்தடுத்து அத்தியாயங்கள்ல தெரிஞ்சுடும் … அரண்மனைல எந்த உருவம் இருக்கு ??