Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 04

 

(I)

 

கொஞ்சம் வேகமாகத் தான் வந்தது,அவனின் வண்டி.அவன் வண்டியோட்டுக் கொண்டு வர,அவனைக் கண்டதும் விழிகள் மினுமினுத்திட,அங்கு நின்று விட்டிருந்தாள்,அதிதி.

 

வண்டியை மரத்தின் அருகே ஓரம் கட்டி நிறுத்தியவனோ,ஹெல்மெட்டை கழற்றி,தலையை இலேசாக சரித்து பக்கமாய் சிரசசைத்து தலைமுடி கோதி விட்டு,கழுத்தை தேய்த்துக் கொண்டு எழுந்தான்.

 

அவன் மேனரிசத்தில் அவளுக்கு பார்வை பிரித்தெடுப்பது,சிரமமாய்ப் போயிற்று.”என்ற இருந்தாலும் இவன் பக்கா ஸ்மார்ட்ல..” மனமோ, மானரோஷமின்றி ஒத்துக் கொள்ளவும் செய்தது.

 

நடந்து தோழனின் அருகில் வந்தவனுக்கு,அவளைக் கண்டதும் ஐயோவென்றானது.கோபப்படும் நிலையை அவன் கடந்திருக்க,தற்போது அவளொருத்தி இருப்பதை கண்டு கொள்வதே இல்லை,அவன்.

 

“என்னடா இவ்ளோ லேட்டு..?”

 

“சின்ன வேல வந்துருச்சு அதான்..” சத்யாவின் தோளில் கையைப் போட்டவாறு அவன் முன்னே நடந்திட,அவனை வழி மறித்து நின்றாள்,அதிதி.

 

“எனக்கு எப்போ ஓகே சொல்லுவ..?”

 

“எந்த கருமம் புடிச்ச படத்த பாத்துட்டு வந்து இங்க டயலாக் விட்றான்னு தெரிலியே..” மனமோ அவளைத் திட்டித் தீரத்திட,விழிகளோ அனலை தெளித்தன.

 

“உன்னத்தான் கேக்கறேன்..நானும் எவ்ளோ நாள் தான் ட்ரை பண்றது..?” அழாத குறையாய் அவள் சிணுங்க,அவளின் கன்னத்தில் அறை வைக்கத் தான் பரபரத்தது,அவனின் கரம்.கட்டிக் காத்துக் கொண்டிருந்தான்,பொறுமையை.

 

அசராமல் பார்த்தான்,அவளை.அவனின் பார்வையில் அவளுக்குள் குளிரெடுத்தாலும்,தன் வாதத்தை விட்டு விடவில்லை.

 

“எப்போ ஓகே சொல்லுவ..”

 

“ஃபர்ஸ்டு மரியாதயா பேசு..உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா..? இந்த ஜென்மத்துல உன் மேல எந்த எழவும் வராது..மூடிட்டு போயிரு..இதுக்கு மேலயும் என் பின்னாடி திரிஞ்சா மூஞ்ச ஒடச்சிருவேன்..” வரைமுறையின்றி பேசினான்.வார்த்தைகளில் உஷ்ணக்கிடங்கு.

 

“இப்டிலாம் சொல்லாத ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ என் பின்னாடி சுத்தத் தான் போற டார்லிங்..”

 

அவள் உரைத்திட,கீழே குனிந்து கல்லைப் பொறுக்கி எடுத்து விட்டான்,அவன்.அதில் மிரண்டு ஓடியிருந்தாள்,அவ்விடத்தில் இருந்து.

 

தீங்கங்குகளாய் ஜொலித்த விழிகளுடன் திரும்பியவனின் பார்வையில் இருந்த உஷ்ணம் தோழனையும் சுட்டது.

 

“பேசாம உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குன்னு அவ கிட்ட சொல்லிரேன்..அப்போ அவ பின்னாடி சுத்த மாட்டா..” தோழன் யோசனையொன்றை எடுத்துக் கொடுக்க,அவனின் பார்வையில் முறைப்பு.

 

“என் வாழ்க்கைல நடக்க சான்ஸே இல்லாதத பொய்யா கூட சொல்றதுக்கு நா விரும்பல..” தலையை இலேசாக சரித்து கழுத்தைத் தேய்ததபடி உரைத்தவனின் வார்த்தைகளில் அத்தனை உண்மை.

 

“இப்டி டயலாக் பேசுறவனுங்க தான் பைத்தியக்காரத்தனமா லவ் பண்ணுவாங்க..” உள்ளுக்குள் குமுறினான்,தோழன்.

 

●●●●●●●

 

வாயிலில் இருந்த பலகை அடுக்குகளில் புத்தகப்பையை வைத்து விட்டு ஸ்டடி ஹாலினுள் நுழைந்தனர்,ஓரிருவர்.

அந்த ஓசையிலும்,அவள் பார்வை அவனை விட்டுத் திரும்பவில்லை.

 

கல்லூரியின் படிப்பதற்கென்று மட்டும் ஒதுக்கப்பட்ட இடம் அது.விடுமுறை நாட்களில் விடுதியில் இருப்பவர்கள் அங்கு வந்து படித்திடலாம்.

 

அங்கு அமர்ந்து அவன் புத்தகத்தில் ஆழ்ந்திருக்க,கொஞ்சம் தள்ளி அமர்ந்து நாடியில் கை குற்றி அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்,அதிதி.

 

தலை சரித்து, கழுத்தைத் தேய்த்து விட்டு,சிகை கோதும் அவனின் அழகை அவனுக்குத் தெரியாமல் புகைப்படம் வேறு எடுத்து வைத்திருக்க,அதை உணர்ந்தவனோ,அவளின் அலைபசியை அடித்து நொறுக்க திட்டம் தீட்டியதெல்லாம் அவள் அறியாதது.

 

அவள் தன்னை கவனிப்பது அவனுக்குத் தெரியும்.அவனுக்குள் எந்த தடுமாற்றமும் இல்லாது போகவே,இயல்பாய் அமர்ந்து இருந்தான்,இறுகிய முகத்துடன்.

 

அவனுக்கு தாகம் எடுத்தது போலும்.எழுந்து சென்று வாயிலின் அருகே இருந்த தன் பையைத் துழாவிட,கையில் கிடைத்தது என்னவோ,காலியான பாட்டில் தான்.

 

அவளுக்கும் புரிந்து போனது.தான் தனது பாட்டிலை கொடுத்தால் அதைக் கொண்டே மண்டைய் உடைத்து விடக் கூடும் என்கின்ற அபாய மணி ஒலித்திட,அமைதி காத்தாள்.

 

அவனோ,பேசாமல் வந்து அமர்ந்து புத்தகத்தில் ஆழ,செவியை உரசின பாதச்சத்தங்கள்.தன்னருகில் வைக்கப்பட்ட பாட்டிலை ஓரவிழியால் கண்டவனுக்கு,எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ..?

 

“ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு..?” ஆக்ரோஷமாய் கேட்டுக் கொண்டே, மேசையில் இருந்த பாட்டிலை தூக்கி அடித்திட, அது சிதறிப் போய் தெறித்த நீர்த்திவளைகள் அந்த பாதங்களை நனைத்தன.

எப்போதும் அந்த வேலையை செய்யும் அதிதி என கணித்து விட்டிருந்தான்,தவறாக.

தவறு!

அவன் வாழ்வின் அழகிய தவறு போலும்,அது.

 

நெஞ்சில் கை வைத்து மிரண்டு நின்று விட்டிருந்தாள்,பாவையவள்.விழிகளில் அதிர்வு நிரம்பி வழிந்தது,அவனின் அதிரடியால்.

 

அவளுக்கே பின்னே நின்றிருந்த அதிதியின் இதழ்களில் இருந்து ஆசுவாசப் பெருமூச்சொன்று.”தப்பிச்சோம் சாமி..”தனக்குள் முணகிக் கொண்டாள்.

 

அவ்விடம் இருந்த ஓரிருவரும் திடுமென கேட்ட சத்தத்தில் திரும்ப,பாவையவளை இன்னும் இயல்பு மீண்டிருக்கவில்லை.திகைத்து விழித்து பேயறைந்த தோற்றத்துடன் நிற்பவளை ஏறிட்டதும் தான்,தன் தவறு உரைத்தது,அவனுக்கு.

 

அவன் வரும் முன்பு அவனிருக்கும் இடத்தில் தான் அவள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தது.போகும் போது புத்தகத்தை தவற விட்டுச் சென்றிருக்க,அதை எடுக்கலாம் என்று மீள வந்தவள்,எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் போத்தலை கையில் எடுத்திடலாம் என்று அதை மேசையில் வைத்திட,அதுவோ இப்போது சிதறித் துண்டாகிப் போயிருந்தது.

 

மீளா அதிர்வுடன் தன்னை விழிகளால் உரசியவாறு இருப்பவளின் பார்வையில் இருந்த மிரட்சி அவனுக்கு தன் தவறை உணர்த்திட,மன்னிப்புக் கேட்கவும் தன் முனைப்பு இடம் தரவில்லை.

 

அவள் தன்னிலை மீள சில நொடிகள் எடுத்திட,ஏனோ விழிகளில் சிறு அழுத்தம் பரவிய வதனம் முறைப்பை தேக்கிக் கொண்டது.

 

அவளின் முறைப்பு புரிந்தாலும் அதை சட்டை செய்யும் ரகமில்லையே,அவன்.

 

அலட்சியமான தோள் குலுக்கலுடன்,விடுவிடுவென அவன் நகர்ந்து செல்ல,பாவையவளோ இதழ்களுக்குள்ளால் அவனை அர்ச்சித்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

 

“மெண்டல் பய என்னோட வாட்டர் பாட்டில ஒடச்சி இருக்கான்..பைத்தியம்..” திட்டிக் கொண்டே சிதறிய துண்டங்களை பொறுக்கி எடுத்தாள்,பாவையவள்.

 

மெதுவாய் குனிந்திருந்தவளின் தோளை ஒரு கரம் அழுத்திட,நிமிர்ந்து பார்த்தவள் அங்கிருந்த அதிதியைக் கண்டதும் மலர்ந்து சிரித்தாள்.

 

“அதிதிக்கா நீங்க இங்க..? நீங்களும் ஸ்டடி ஏரியாக்கு வந்தீங்களா..?” தன்மையாய் வினவியவளைப் பார்த்து வாஞ்சையாய் புன்னகைத்தாள்,அவள்.

 

பாவையவளின் எதிர்வீட்டில் தான் குடியிருந்தாள்,அதிதி.முன்பு நல்ல பழக்கம் இருந்தாலும் கல்லூரி துவங்கிய பின்பு இருவருக்குமான சந்திப்புக்கள் அரிது.

 

“ஆமா நீ எங்க இங்க..?”

 

“புக்க வச்சிட்டு பொய்ட்டேன் அத எடுத்துட்டு போலாம்னு வந்தேன்..ஆமா அந்த எரிமல உங்க பேட்ச் ஆ..?” அவனைக் குறித்து அவள் வினவ,அதிதிக்கோ தன் கோபத்தை காட்டிட முடியா நிலை.

 

அவளிடம் தன் மறுப்பைக் காட்டினால் அவள் அவன் மீதிருக்கும் விருப்பத்தை ஊகித்துக் கொள்ளக் கூடுமே என்கின்ற பயம் மனதை ஆட்டுவித்தது.

 

“ம்ம்..ஆனா எரிமல எல்லாம் இல்ல..அவன் எங்க டார்லிங்..” என்றிட,விழிகளில் அலட்சிபாவத்தை அள்ளிக் கொண்டாள்,பாவையவள்.

 

“பேய் மாதிரி நடந்துக்குது அதப் போய் டார்லிங்னு சொல்லுதுங்க..” சலிப்புடன் எண்ணியவளுக்கு அவன் மீது அதீத கோபம்.

 

வேக நடையுடன் வெளியே வந்தவனுக்கு அவளை எங்கோ கண்டிருப்பது போன்ற நினைவு.சரியாய் சிந்தையில் மின்னலடிக்காது போக,மனமோ நினைவுப் பெட்டகத்தை அலசி ஆராய்ந்ததாயிற்று.ஆனால்,பிடிபடவில்லை.

 

அத்துடன் அவனும் விட்டு விட்டான்,அவளைப் பற்றிய எண்ணத்தை.

 

கல்லூரி முடிந்த பின் அவன் வண்டியில் செல்லும் போது பேரூந்து நிறுத்தத்தில் அவள் எதிர்ப்பட,சட்டென அவள் விழிகளில் வந்து சேர்ந்து கொண்ட முறைப்பு தப்பவில்லை,அவனின் கூர்ப்பார்வையில் இருந்து.

 

“யார்ரா இந்த பொண்ணு உன்ன மொறக்கிது..?” கவனித்தவாறு கேட்டான்,தோழன்.

 

“இவ பாட்டிலத்தான் இன்னிக்கி போட்டு ஒடச்சேன்..” என்றிட,ஆயாசமாய் இருந்தது,தோழனுக்கு.

 

“இவ்ளோ கோவம் ஆகாது டா மச்சி..” அவன் எச்சரித்திட, அவனோ அலட்டிக் கொள்ளவில்லை.

 

மறுநாள்,

 

விரிவுரை இரத்துச் செய்யபட்டு இருந்தால் பாதிப் பேர் கலைந்து சென்றிருக்க,பத்து பேர் மட்டும் தான் இருந்தனர்,அவர்களின் வகுப்பில்.

 

“ஹப்பாடி இன்னிக்கி லெக்சர் கேன்சல்..போய் நல்லா தூங்கனும்..” நினைத்தவாறு எழுந்து கொள்ளப் பார்த்தவளின் கவனம் வாயிலில் நிலைத்தது.

 

சற்றே நீண்ட நிழலொன்று தெரிய நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.

 

“இந்த எரிமல கெடங்கு சஎதுக்கு இப்போ நம்ம க்ளாஸுக்கு வருது..” மனதால் அவனை வைதவளோ,தன் வேலையில் கவனமாக,இங்கு சத்யாவோ அவனை அமைதிப்படுத்த முயன்றாலும் அது விழலுக்கு இறைத்த நீர்ப் போலானது.

 

சற்றே உயரமாய் இருந்த மேடைத் திண்டில் அவன் ஏறி நின்றதுமே,அனைவரின் பார்வையும் அவன் மீது திரும்பிற்று.சிரேஷ்ட மாணவன் என்பதால் ஏதேனும் பேச வந்திருக்கக் கூடும் என்று அனைவரும் நினைத்திருக்க,அவளுமே அவ்வெண்ணத்தில் விழி நிமிர்த்திப் பார்த்தாள்,அவனை.

 

பேராசியர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த மேசையில் வலக்கையை ஊன்றி,பாதத்தால் பின்னே முட்டுக் கொடுத்து பின்னோக்கி சற்றே சரிவாய் நின்றவனோ,தலை சரித்து இடக் கரத்தால் கழுத்தை வருடியவாறு, கேட்ட கேள்வியில் பாவையவளின் இதயம் நின்று துடித்தது.

 

●●●●●●●●●●

 

(II)

 

உணவை விழுங்கி விட்டு ,வெளியே சிட் அவுட்டில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான்,டாக்டர்.விழிகளில் கொஞ்சம் தீவிர பாவம்.

 

மகனைப் பார்த்தவாறு அவ்விடம் வந்தி சேர்ந்த அன்பரசனுக்கு மகனிடம் இந்த விடயத்தை கேட்பதா..?இல்லையா..? என்கின்ற குழப்பம்.

 

பாதங்களுக்கு முன்னே வந்து வந்து நிழலில் அவன் நிமிர,தந்தையக் கண்டதும் ஏதோ புரிந்தது.ஆயினும்,அவராக பேச்சைத் துவக்கிடும் வரை அவன் பேசவில்லை.

 

“சித்து உன் கிட்ட கொஞ்சம் பேசலாமா..?”

 

“என்னப்பா..? என்ன விஷயம்..?” கேட்டவாறு மடிக்கணினியை தள்ளி நகர்த்தி வைத்தான்,அவன்.

 

“நாங்க சொன்ன மாதிரி நீ கல்யாணம் பண்ண ஒத்துகிட்ட..ஆனா வர்ர வரன் எல்லாத்தயும் ஒன்னு விடாம தட்டி விட்ற..? நெஜமாவே பிடிச்சு தான் வரன் பாக்க ஒத்துகிட்டியா..?”

கண்டறிந்து விட்டாரே என உள்ளம் சுணங்கினாலும்,டாக்டர் இயல்பாகவே காட்டிக் கொண்டான்.

 

“உனக்குன்னு ஏதாச்சும் எக்ஸ்பெக்டேஷன் இருக்கா சித்து..?அதனால தான் பாத்த வரன எல்லாம் வேணாம்னு சொல்லி கிட்டு இருக்கியா..?”

 

“அப்டிலாம் இல்ல பா..யாரப்பாத்தும் மனசுக்கு எதுவும் தோணல..ஒரு ஸ்பார்க் வரனும்ல..அது வர்ல..அது வந்த கண்டிப்பா நா ஒத்துக்கறேன்..” என்றிட,அவரின் முகம் தெளிந்தபாடில்லை.

 

“என்னப்பா..? என்ன யோசிச்சி கிட்டு இருக்கீங்க..?”

 

“தெரிலடா..நீ வரன் பாக்க ஒத்துகிட்டது சந்தோஷம்னாலும் மனசு ஏதோ நெருடி கிட்டே இருக்கு..எந்தப் பொண்ண பாத்தும் எனக்கும் மனசு ஒப்பல..உனக்கான பொண்ண பக்கத்துலே வச்சிட்டு தேடி அலைறோமோ என்னவோ..உனக்கு யாராயாச்சும் புடிச்சி இருந்தா கண்டிப்பா சொல்லுடா..”

 

தளர்ந்த குரலில் உரைத்து விட்டு,தொய்ந்த நடையுடன் அவர் அகன்றிட,இயலாமையுடன் அவரின் முதுகை வெறித்திருந்தார்,டாக்டர்.

 

●●●●●●●●

 

அடை மழை பொழிந்து கொண்டிருக்க,யன்னலின் ஊடு மழையை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள்,தென்றல்.

 

கொட்டித் தீர்த்திடும் அடைமழையது,அவனின் நினைவுகளையும் மனதில் வாரியிறைத்து விட்டு வேடிக்கை பார்த்தது.

 

அவன்!

அவனை நினைக்கையில் இதழோரம் அழகான புன்னகையொன்று ஜனிப்பதே ,அவன் மீதான பெருங்காதலுக்கு அத்தாட்சியாய்.

 

அவனின் அண்மை இன்மை,வலி தான்.வலியைத் தாண்டி அவன் நினைவுகள் அவளுக்கு அழகிய புன்னகையை தந்து விட்டுத் தான் அடங்கும்,எப்போதும்.

 

அவன் மீது எப்படி நேசம் துளிர்த்து என்றெல்லாம் அவளுக்கு தெரியாது.துளிர்த்த நேசமது பெருமரமென விரிந்து,அவளையும் அள்ளிக் கொண்டு இளைப்பாறுவது மட்டும் சத்தியமான உண்மை.அழகான நிஜமும் கூட.

 

கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டி,சுவற்றோடு இன்னும் ஒன்றிப் போனாள்,தன்னை குறுக்கிக் கொண்டு.

 

அவனும் அவளும் வெகுதூரத்தில் இருந்தாலும்,அவள் மனதில் இருந்து அவனின் ஓரடி கூட தொலைவாகியிருக்கவில்லை என்பது அவள் உணர்ந்தே இருந்தாள்.

 

எங்கேனும் யாரேனும் அவன் பெயரை அழைப்பது கேட்டாலே அவள் விழிகள் சுழன்று தவிப்புடன் யாரென்று தேடிடும்.

கூட்டத்தின் நடுவே அவனின் சாயலில் யாரேனும் நின்றால் கூட பாதங்கள் அவனுக்கான எதிர்ப்பார்ப்புடன் முன்னே நகர்ந்திடும்.

அவனின் குரலின் நகலில் ஏதேனுமொரு தொனி செவியில் உரசினால் கூட,கேள்மை கூர்மையாகி அவனை நினைக்கத் துவங்கிடும்.

 

அத்தனை அத்தனை நேசிக்கிறாள்,அவள்.அத்தனை அத்தனை நிறைந்திருக்கிறான்,அவன்.

 

அவளாலும் இத்தனை ஆழமாய் ஆத்மார்த்தமாய் நேசித்திட முடியும் என்று அவளுக்கு கற்பித்து விட்டு ஒளிந்திருக்கும் அவனையே நாடிடுது,அவள் மனம்.

 

முன்பெல்லாம் அப்படி அழுவாள்.அழுதழுதே விழிநீரும் வரண்டு வற்றிப் போயிருக்க,இப்பொழுதெல்லாம் அழுகை வருவதுமில்லை.

 

நினைவுகளில் அவள் லயித்திருக்க அறைக்கதவு தட்டப்பட்டது.சங்கவி தான் அழைத்திருந்தாள்.

 

“என்னடி..?” உயிர்ப்பின்றிய விழிகளுடன் வினவினாலும்,வாடிக்கை என்பதால் தங்கையவளுக்கு அதிர்வில்லை.

 

“அத்த மாமா எல்லாரும் வந்துருக்காங்க..உன்ன வர சொன்னாங்க..” என்க,அவளை அனுப்பி வைத்து விட்டு வந்து குளியலறைக்குள் நுழைந்து முகத்தை நீரால் அடித்துக் கழுவினாள்.

 

துவாயால் நீரை ஒற்றி எடுத்தபடி நிலைக்கண்ணாடியில் அவள் முகம் பார்த்திட,அவள் இயல்பாக இல்லை என்று அவளுக்கே புரிந்தது.ஆயினும் என்ன செய்திட முடியும்..?

 

வெளியே வந்தவளை புன்னகையுடன் எதிர் கொண்டாள்,அகல்யா.

மனம் நிறைய புன்னகைத்திட கூட இயலாமல்,கடினப்பட்டு இதழ் பிரித்தாள்,அவள்.

 

“என்ன தென்றல் நல்லா இருக்கியா..?” பரிமளா கேட்டிட,ஆமோதிப்பாய் தலையசைத்தவளுக்கு சிறிது நேரத்திற்கு மேல் அவ்விடத்தில் இருக்க முடியவில்லை.

 

அகல்யாவின் குழந்தையை அள்ளிக் கொண்டு வெளியே வந்து விட,பார்வதியிடம் இருந்து பெருமூச்சொன்று.

 

“இவளுக்கு அந்த பையன வரன் பேசனது நாம பண்ண தப்பு தான்..” நொந்து கொண்டு,சங்கவியை பெண் பார்க்க வந்த தினம் நடந்தது முழுவதையும் ஒப்புவித்திருந்தார்,அவர்.

 

அகல்யாவுக்கும் சரி பரிமளாவுக்கும் சரி அவள் மீது சிறு பரிதாப உணர்வு தோன்றாமல் இல்லை.என்ன ஆறுதல் கூறவென்று தெரியாமல் விழித்தனர்,இருவரும்.

 

“சரி பார்வதி..இப்போ அந்த பையன் என்ன பண்றான்..? அவன் எங்க இருக்கான்..?”

 

“அந்த பையன பத்தி எதுவும் தெரியாது அண்ணி..கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு கத வந்துச்சு..அதுவும் எவ்ளோ உண்மன்னு தெரில..அப்டியே கல்யாணம் ஆகலன்னாலும் இவள அவன் கட்டிக்க மாட்டான்..அவன் தான் அப்போவே வேணாம்னு சொல்லிட்டானே..இவ தான் இன்னும் அவன நெனச்சிகிட்டு வேற யாரயும் கட்டிக்க மாட்டேன்னு சொல்றா..”புலம்பும் போதே,அவரின் விழிகள் கலங்கி விட்டன.

 

அவரை ஆற்றுப்படுத்தி தேற்றி விட்டு,அவர்கள் கிளம்புகையில் இரவு எட்டரை மணியைத் தாண்டி இருந்தது.

 

அன்பரசன் வண்டியை ஓட்டி வர பின்னிருக்கையில் அமர்ந்து இருந்தனர்,தாயும் மகளும்.

 

“அப்பா தென்றல பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க..?” மகளவள் உள் நோக்கத்துடன் கேட்டிட,முதலில் புரியவில்லை,தந்தையானவருக்கு.

 

“நல்ல பொண்ணு..நல்ல கொணமான பொண்ணு..என்ன கொஞ்சம் அழுத்தம் அவ்ளோ தான்..”

 

“அவளுக்கு ஒரு பையன புடிச்சி இருக்கு..ஆனா அந்த பையன் கூட அவ சேர்த்துக்கு வாய்ப்பே இல்ல..இதப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க..?”

 

“எல்லார் வாழ்க்கைலயும் ஒரு லவ் இருக்கும்..சேர முடியாதுன்னு தெரிஞ்சா அத கடந்து வந்துரனும்..அவள புரிஞ்சிக்கற ஒருத்தன பாத்து கட்டி வச்சா ப்ராப்ளம் சால்வ்ட்..”

 

“அப்போ நம்ம சித்துக்கு தென்றல பொண்ணு கேக்கலாம்..” அவள் தடாலடியாய் உரைத்திட,சட்டென நிறுத்தியிருந்தார்,வண்டியை.

 

காதல் தேடும்.

 

2025.04.01

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஹ்ம்ம் அந்த காலேஜ்ல இருந்த புதுசா வந்த பொண்ணு தான் தென்றலா … தென்றலும் டாக்டருமா ?? சிறப்பு