Loading

அத்தியாயம் 19

     தன் பின்னே யாரோ வரும் சத்தம் கேட்டு ஊர்மி திரும்ப, அரசு நின்றிருந்தான்.

     “மாமா இந்நேரத்துக்கு தூங்கி இருப்பாரே நீங்க இன்னும் கிளம்பலையா?” சாதாரணமாகக் கேட்டாள். வடிவேலு அவனைத் தன் சொந்தப் பிள்ளையைப் போல் நடத்துவதை இங்கு வந்த நாள் முதல் கண்டிருந்ததால் இயல்பாய் வந்த பேச்சுவார்த்தை அது.

     “இது எனக்கும் சொந்த வீடு மாதிரி தான். அப்பப்ப இங்கேயே தங்கிக்கிறதும் உண்டு.” இலகுவாகச் சொல்லிவிட்டு தோள்களைக் குலுக்கினான் அரசு.

     “அப்பப்ப தங்கிக்கிறதுக்கு இங்கேயே தங்கிடலாமே மாமாவுக்கும் சந்தோஷமா இருக்கும்.” தன் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரிகள் உடன் இருந்தும், உடன் இருக்க வேண்டியவன் கைவிட்டதில் உண்டான தனிமை உணர்வு மூச்சடைக்க வைக்க, அதைப் போக்கிக் கொள்வதற்காக தன்னையும் மீறி அரசுவிடம் பேசத் துவங்கி இருந்தாள் அவள்.

     “எல்லோருமா சேர்ந்து தசரதனா இருக்கிறவரை பாண்டுவா மாத்தாம விட மாட்டீங்க போலவே. யார் யார் எங்கெங்க இருக்கணுமோ அங்கங்க இருக்கிறது தான் நல்லது.” பொடிவைத்துப் பேசினான். அவன் வார்த்தையில் உள்ளர்த்தம் இருந்ததை சாதாரண நிலையில் இருந்திருந்தால் ஊர்மிளா கட்டாயம் கண்டுபிடித்திருப்பாள். ஆனால் இப்போது உணர்வுகளின் பிடியில் இருந்தவளால் அதை ஊன்றிக் கவனிக்க முடியவில்லை.

     “மொட்டைமாடியில் ப்ரீயா இருக்கலாம் னு வந்து இருப்பீங்க, நான் நிக்கிறதைப் பார்த்ததும் சங்கடமாப் போச்சோ.” சிரித்தபடி கேட்டாள் ஊர்மி.

     அரசு புரியாமல் பார்க்க, “திருட்டு தம் அதிகமா அடிப்பீங்களோ. உங்களுக்கு மட்டும் தான் இந்தப் பழக்கம் இருக்கா, இல்லை இந்த வீட்டு மத்த ராஜகுமாரனுங்களுக்கும் இருக்கா.” வார்த்தைகளை விட்ட பின்பு தான் அதிகம் பேசிவிட்டோமோ எனப் பதறினாள் ஊர்மி. ஆனால் அதற்குப் பதிலாக அரசுவிடம் இருந்து கிடைத்தது என்னவோ நகைப்பொலி தான்.

     “வடிவேல் அங்கிளை இந்த விஷயத்தில் ஏமாத்த முடியாதும்மா. அவனுங்க பண்ணா திட்டோட முடிஞ்சிடும். எனக்குன்னா அடி கன்பார்ம்.” சிரித்தவன், “ஆமா எப்பவும் அக்கா, தங்கச்சிங்க எல்லாரும் ஒன்னா தானே இருப்பீங்க. இப்ப என்ன இங்க தனியா டல்லா.” தூண்டில் போட்டான்.

     “அவங்க எல்லோருக்கும் முக்கியமான வேலை வந்திடுச்சு, நான் வெட்டியா இருந்தேன். நிச்சயம் முடிஞ்சதில் இருந்து அப்பா, அம்மா ஞாபகமா வேற இருந்துச்சு. அதனால் தான் சும்மா காத்து வாங்கலாம் னு வந்தேன்.” என்றாள் கையில் இருந்த நிச்சய மோதிரத்தை கழட்டி மாட்டி விளையாடிக்கொண்டு.

     “நாகா மேல் மனவருத்தத்தில் இருக்கீங்களா?” வந்த வேலையை ஆரம்பித்தான் அரசு.

     அக்கறையாய் கேட்டவனின் கேள்விக்கு சின்ன புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள் அவள். “இன்னும் எத்தனை நூற்றாண்டு வந்தாலும், இந்த தமிழ்ப் பொண்ணுங்க திருந்தவே மாட்டாங்க போல. இன்னும் கல்யாணமே முடியல, அதுக்குள்ள வருங்காலப் புருஷனை விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு பிடிவாதமா. நடத்துங்க நடத்துங்க.” கேலி செய்தான் அரசு.

     “நீங்க கேட்ட கேள்விக்கு நான் வாயைத் திறந்து பதில் சொல்லாத ஞாபகம்.” ஊர்மி சொல்ல, “எனக்குக் காது நல்லாவே கேட்கும். அதை விட கொஞ்சம் அதிகமா அறிவும் வேலை செய்யும்.

     நாகாவுக்கும், உங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் இருந்திருந்தா நான் கேட்ட கேள்விக்கு வெட்டு ஒன்னு துண்டு இரண்டா இல்லன்னு பதில் சொல்லி இருப்பீங்க. அதை விட்டுட்டு கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் தப்பிக்க முயற்சி பண்ணி இருக்க மாட்டீங்க.” அவள் எண்ண ஓட்டத்தின் நாடியைப் பிடித்தது போல் பதில் சொன்னான் அரசு.

     ஊர்மிளா அமைதியாகவே இருக்க, “ஊர்மி, எனக்கு இந்த வீட்டில் இருக்கிற ஒவ்வொருத்தரைப் பத்தியும் ஒரு இன்ஞ் கூட விடாம நல்லாத் தெரியும். அதனால என்கிட்ட இருந்து நாகாவைக் காப்பாத்தலாம் னு நினைக்காதீங்க.” என்க, ஊர்மியின் முகம் மலர்ந்தது.

     “உண்மையாவே உங்களுக்கு இந்த வீட்டில் உள்ள எல்லோரையும் நல்லாத் தெரியுமா? அப்ப செல்வா மாமாவைப் பத்தி எனக்குச் சொல்லுங்களேன். எனக்கு அவரைப் பத்தி யோசிக்க யோசிக்க குழப்பமாவே இருக்கு.” தவிப்போடு சொன்னாள்.

     “செல்வாவைப் பத்தி உங்களுக்கு என்ன குழப்பம். அது உங்க அக்கா டிபார்ட்மெண்ட் இல்ல.” உன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போது அவனைப் பற்றி என்ன யோசனை என்பதாய் தான் ஊர்மியைப் பற்றி நினைத்தான் அவன்.

     “அவர் முகத்தைப் பார்த்தா நடக்கப் போற கல்யாணத்தில்  விருப்பம் இல்லாத மாதிரி தெரியுது. ஒருவேளை அக்காவைப் பிடிக்கலையோன்னு உத்துப் பார்த்தா வெறுப்பு இருக்கிற மாதிரியும் தெரியல. உணர்வுகள் இல்லாத ரோபா மாதிரி சுத்திக்கிட்டு இருக்காரே, ஏன்னு ஒரே குழப்பம். ஒருவேளை லவ் மாதிரி ஏதாவது பிரச்சனை இருக்குமா?” உள்ளுக்குள் உருத்திக்கொண்டிருந்த விஷயத்தைக் கேட்டே விட்டாள் அவள்.

     அரசு அவளைக் கூர்மையாகப் பார்க்க, “நாளைக்கே அவருக்கும் அக்காவுக்கும் கல்யாணம் ஆகி, அவரோட பிரச்சனை அக்காவை பாதிக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு.” தன் மனநிலையை எடுத்துச் சொன்னாள்.

     “நாலு பேர் இருக்கும் போது ஏன் செல்வாவுக்கு மட்டும் இந்தக் கேள்வி. அதுவும், உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகா வேப்பிலை கசாயத்தைக் குடிச்சவன் மாதிரி எப்ப பார் உங்ககிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்கான். அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குமோன்னு யோசிச்சா அது நியாயம். அதை விட்டுட்டு செல்வாவைப் பத்தி மட்டும் கேட்கிறீங்க. மத்த மூணு பேருக்கும் கேர்ள்ப்ரண்டு, லவ்வு இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” ஆச்சர்யம் தாளவில்லை அரசுவிற்கு.

     அவன் கேட்ட தோரணையிலும், அவன் முகம் போன போக்கிலும் சிரிப்பு வந்தது ஊர்மிளைக்கு. “நான் என்ன ஜோசியரா ஒருத்தரோட முகத்தை வைச்சு அவருக்குக் காதல் கத்திரிக்கா இருக்கா இல்லையான்னு சொல்றதுக்கு. மத்த மூணு பேருக்கும் இதுக்கு முன்னாடி காதல் இருந்திருந்தாலும், இல்லாமப் போனாலும் எனக்குக் கவலை இல்லை. இனி எங்க மூணு பேரையும் சந்தோஷமாப் பார்த்துக்கிறாங்கிளா அது போதும்.” என்க, இன்னமும் வியப்பில் புருவங்கள் உயர்ந்தது அரசுவிற்கு.

     “அப்ப செல்வாவைப் பத்தி மட்டும் ஏன் ஸ்பெஷலா விசாரிக்கிறீங்க?” என்க,

     “காரணம் இருக்கு. நாங்க நாலு பேரும் எங்கம்மா வயித்தில் உருவான நேரத்தில் இருந்து ஒன்னா தான் இருக்கோம். ஆனா எங்க ஒவ்வொருத்தருக்குள்ளும் குணத்தில் அத்தனை வேறுபாடு இருக்கும்.

     பொதுவா அதிக அன்போட இருக்கிறவங்களை அம்மா மாதிரின்னு சொல்வோம். ஆனா எங்கக்காக லீலா எங்களுக்கு அப்பா மாதிரி. அன்பு, கண்டிப்பு எல்லாம் ஒரு சேர இருக்கும் அவங்ககிட்ட. அவங்களோட நினைப்பு முழுக்க எப்பவும் எங்களைச் சுத்தி தான் இருக்கும். அப்படிப்பட்ட அக்காவுக்கு திரும்பச் செய்வதற்கு எங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கல. இந்தக் கல்யாண வாழ்க்கை அவங்களுக்கு நல்லபடியா அமைஞ்சா எங்க மனசு நிறைஞ்சிடும்.

     ருக்குக்கா, தேவகி, நான் நாங்க மூணு பேரும் வேற. எங்களுக்குச் சின்னதா ஏதும் பிரச்சனை வந்தாக் கூட அக்கான்னு ஓடிப்போய் அவங்ககிட்ட நின்னுடுவோம். ஆனா எங்க லீலா அக்கா அப்படிக் கிடையாது.

     அவங்க அவங்களோட சந்தோஷத்தை மட்டும் தான் எங்ககிட்ட பகிர்ந்துக்குவாங்க. துக்கத்தை அவங்களுக்குள்ளேயே பூட்டிக்குவாங்க. அந்தக் கஷ்டங்களைத் தாங்கிக்கவும் முடியாம, எங்ககிட்ட சொல்லவும் முடியாம ரொம்பக் கஷ்டப்படுவாங்க. அவங்களாச் சொல்லாம அவங்ககிட்ட இருந்து ஒரு விஷயத்தை வாங்குவது ரொம்பக் கஷ்டம்.

     அவங்க நிழல் மாதிரி கூடவே இருந்தாலும், எங்கிட்ட அவங்களுக்குள்ள இருக்கிற சோகத்தின் சுவடைக் கூட காட்ட மாட்டாங்க. அவங்களோட கஷ்டங்களுக்கு வலி நிவாரணியே எங்க முகமும், அதில் இருக்கிற சந்தோஷமும் தான்.” ஊர்மி சொல்லிக்கொண்டே வர அரசு ஆர்வமாகவும், ஆச்சர்யமாகவும் பார்த்துக் கொண்டிருந்தான்.

     “இந்த வீடு ரொம்பப் பெருசா இருக்கு. நாங்க ஒன்னா இருக்கிற நேரமும் இனிக் குறைய ஆரம்பிக்கும். செல்வா மாமாவுக்கு ஏதாவது பிரச்சனை வந்து, அது அக்காவை பாதிச்சு, அதனால அக்கா தனியாக் கஷ்டப்பட்டா அதை எங்களால் தாங்கிக்க முடியாது. அதனால் தான் கேட்கிறேன் உண்மையைச் சொல்லுங்க.” மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே கொட்டி இருந்தாள் ஊர்மிளா.

     “செல்வா ரொம்ப ரிசர்வ்டு டைப். யார்கிட்டையும் அவ்வளவு சீக்கிரம் நிறைய பேசிட மாட்டான். உணர்வுகளைப் பிரதிபலிக்காத முகம் அவனுடையது. மத்த மூணு பேரும் வேலை நேரம் போக நிறைய இடங்கள் சுத்துவாங்க. ஆனா செல்வா, வீடு விட்டா ஹாஸ்பிடல், ஹாஸ்பிடல் விட்டா வீடுன்னு இருப்பான். ரொம்ப ரொம்ப  பொறுப்பானவன்.

     அவனுக்குத் தெய்வா மாதிரி சிரிக்கத் தெரியாது, தர்மா மாதிரி அதிகமா பேசத் தெரியாது, நாகா மாதிரி தேலையில்லாம கோவப்படத் தெரியாது. மொத்தத்தில் செல்வா செல்வா தான் மத்தவங்க மத்தவங்க தான்.

     அதனால உங்க அக்காவைப் பத்திக் கவலைப்படாதீங்க. செல்வா ரொம்ப நல்லவன், அவன் உங்க அக்கா லீலாவை நீங்க நினைக்கிறதை விட நல்லாவே பார்த்துப்பான். இனிமேலாவது உங்க வாழ்க்கையைப் பத்தி யோசிங்க.” சுற்றி வளைத்து ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தான் அரசு.

     “என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு. இந்த வீட்டோட மருமகளா, நாகாவுக்குப் பொண்டாட்டியா என்னோட ஆயுசுக்கும் சந்தோஷமா வாழ்வேன்.” சொல்லும் போதே, முடியுமா என்று மனசாட்சி கேள்வி எழுப்பத்தான் செய்தது. அதன் தலையில் தட்டி புறந்தள்ளி விட்டாள்.

     “நாகாவோட கடைசி வரைக்கும் சந்தோஷமா உங்களால வாழ முடியும் னு நிஜமாவே தோணுதா என்ன.” போட்டு வாங்கப் பார்த்தான்.

     “ஏன் உங்க நாகாவால இந்த ஊர்மி கூட வாழ முடியாதா என்ன?” அலட்டிக்கொள்ளாத பதில் வந்தது அவளிடம் இருந்து.

     “சரிதான், சண்டைக்கு ஏத்தி விடுற சேவல் மாதிரி நல்லாவே சிலிர்த்துக்கிற.” என்க, “கொஞ்சம் மாத்தி சொல்லிட்டீங்க நான் சேவல் இல்லை கீரி.” சொல்லிச் சிரித்தாள் ஊர்மிளா.

     “அப்ப எங்க நாகாவை ஒருவழி பண்ணனும் னு முடிவோட தான் இருக்க போல.” கேட்ட அரசுவுக்கும் சிரிப்பு வந்தது.

     “நான் ஒரு சாதாரண பொண்ணு என்னால அவரை என்ன பண்ணிட முடியும்.”

     “வீட்டுக்குள் வைச்சு வளர்க்கப்படும் யானைக்குத் தன் சொந்த பலம் கடைசி வரைக்கும் தெரியாதுன்னு சொல்லுவாங்க. அந்த வகையில், பல பொண்ணுங்களுக்கு அவங்களோட உண்மையான பலம் என்ன, அவங்குள்ள இருக்கும் திறமைகள் என்னன்னு தெரியமாட்டேங்கிது.

     பசங்களால் செய்ய முடியாத பல விஷயங்களை துண்டை தோள் மாத்திப் போடும் இடைவெளியில் பொண்ணுங்க சர்வ சாதாரணமா பண்ணிட்டுப் போயிடுவாங்க. அவங்க நினைச்சா மண்ணும் மாளிகை ஆகும், அதே மாத்தி நினைச்சா மாளிகையும் மண்ணாகும்.” தொடர்ந்து அரசு ஏதோ சொல்ல வர,

     “நிறுத்துங்க நிறுத்துங்க, நீங்க உதாரணமா சொல்ல வர இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் எல்லாம் எனக்கும் தெரியும். அதனால சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வாங்க.” பட்டுக் கத்தரித்தது போன்ற அவள் பேச்சில் அரசு சில நொடிகள் தடுமாறினாலும்,

     “பெருசா என்னம்மா சொல்லப் போறேன். நாகா உன்கிட்ட பேசின பேச்சையெல்லாம் அங்கிள்கிட்ட சொல்லி இருக்கான். அவர் என்னைத் தூங்கவிடாம ஒரே புலம்பல்.

     மத்த வீட்டில் ஒரு பையனுக்கும், அவன் பொண்டாட்டிக்கும் நடுவில் சண்டை வந்தா அது அவங்க இரண்டு பேரைத் தான் பாதிக்கும். ஆனா என் வீட்டில் என்னோட எந்த பையன் வாழ்க்கையில் பிரச்சனை வந்தாலும், அது மத்த மூணு பேர் வாழ்க்கையையும் சேர்த்து தான் கெடுக்கும்.

     இந்த நாகாப் பையன் பண்ணி வைச்ச வேலைக்கு ஊர்மி இதுவரைக்கும் கல்யாணம் வேண்டாம் னு சொல்லாம இருக்கிறது ஒரு பக்கம் அதிசயமா இருந்தா, இன்னொரு பக்கம் லீலாகிட்ட கூட சொல்லாம இருக்கிறது பயமா இருக்குன்னு அரட்டுறார் மனுஷன்.” அரசு மேற்க்கொண்டு எதுவும் சொல்லும் முன்னர் அவனைத் தடுத்த ஊர்மிளா, “மாமாவுக்கு ஏன் இவ்வளவு பயம்.” என்றாள் சாதாரணம் போல.

     “நாகாவோட நாக்கைப் பத்தி எனக்குத் தெரியும். அவனால் பாதிக்கப்பட்ட ஊர்மி, அவனைப் பழிவாங்குறேன் அது இதுன்னு யோசிக்க ஆரம்பிச்சா குடும்பம் கெட்டுப் போயிடும்.

     என்னோட நாலு பசங்க வாழ்க்கை, நான் நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்பேன்னு நம்பி என்கூட வந்த நாலு பொண்ணுங்களோட வாழ்க்கைன்னு எட்டு பேரோட வாழ்க்கை போயிடும் னு புலம்புறார்.” வடிவேலுவின் புலம்பலை எல்லாம் கொட்டி முடித்தவன், அமைதியாக எதிரே நிற்கும் ஊர்மியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

     இப்போதைக்கு அவள் பதில் சொல்லப் போவது இல்லை என்பது புரிய, “உனக்கு நாகா மேல கோவம் இருக்கும் னு எனக்குத் தெரியும். அந்தப் பய பண்ண காரியத்துக்கு எதிரே அன்னை தெரசாவா இருந்தாலும் கோபப்படத்தான் செய்வாங்க. ஆனா அந்த கோபத்தில் அவனை அழிக்கிறேன்னு நீயும் அழிஞ்சிடாதே.” தயங்கித் தயங்கித்தான் சொன்னான். நீ யார் எனக்கு அறிவுரை சொல்ல என்று கேட்டுவிடுவாளோ என்கிற பயம் அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது.

     “போனில் நெட் பேலன்ஸ் அதிகமா இருக்குன்னு நிறைய தமிழ் சீரியல் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன். அவர்  பண்ண கோமாளித்தனத்துக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரை மாதிரியே வார்த்தைகளால் வதைக்கிறது, நிம்மதியா சாப்பிட விடாம உப்பு, காரம் அள்ளிப் போடுறது, தள்ளி நிறுத்தி கோபப்பட வைக்கிறது, இல்லை எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் அவர் பேரில் இன்சூரன்ஸ் எடுத்து கொஞ்ச நாளில் போட்டுத் தள்ளுறதுக்கும் எல்லாம் நான் ஆள் இல்லை.” என்க, சிரித்துவிட்டான் அரசு.

     “நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். அதுக்காக அவர் பேசுறது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு இருக்க மாட்டேன். அன்பைப் பொழிஞ்சு அவரை மாத்துற வேலையும் என்கிட்ட நடக்காது.

     அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். அவராத் தன் தப்பைப் புரிஞ்சுக்கிட்டு மாறி வந்தாருன்னா நல்லது. இல்லாமப் போனா காலம் என்ன முடிவு எடுத்து வைச்சிருக்கோ அதன்படி நடக்கட்டும்.” தெளிவாகவே பேசினாள் ஊர்மிளா. அவளை வியந்து போய் பார்த்தான் அரசு.

     “கல்யாணத்தோட அர்த்தம் எனக்கு நல்லாவே தெரியும் சார். குற்றம் குறை இல்லாத மனுஷங்க ரொம்பக் கம்மி தான். தான் பண்ற தவறுகளைப் புரிஞ்சுக்கிட்டு அதை நிவர்த்தி பண்ண நினைக்கிறாங்களா இல்லையான்னு தான் பார்க்கணும்.

     கல்யாணம் கணவன், மனைவி இரண்டு பேரும் சேர்ந்து விளையாடும் பரமபதம் மாதிரி. இதில் அவர் என்னைக் கஷ்டப்படுத்தினாலும், நான் அவரைக் கஷ்டப்படுத்தினாலும் சங்கடம் இரண்டு பேருக்கும் தான்.

     அவர் மேல் எனக்கு எக்கச்சக்க கோவம் இருக்கத்தான் செய்யுது. அதைத் தாண்டி எங்க உறவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்தில் தான் இன்னும் இந்தக் கல்யாணத்தில் உறுதியா இருக்கேன்.

     அவரோட ஆயுள் முழுக்க வாழனும் என்கிற ஆசையோட தான் அவர் கையால் இந்த மோதிரத்தை வாங்கி இருக்கேன். என்பக்கம் இருந்து எந்தப் பங்கமும் இல்லை. இனி நடக்கப்போறது எல்லாம் உங்க நாகா கையில் தான் இருக்கு.” என்றாள்.

     “உங்களை உங்க அம்மா ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க.” மனதில் இருந்து சொன்னான் அரசு.

     “அப்ப உங்க நாகா இப்படி வளர்ந்து நிக்கிறதுக்கு வடிவேல் மாமாவோட தவறான வளர்ப்பு தான் காரணம் னு சொல்றீங்க அப்படித்தானே.” ஊர்மிளா கேலியில் இறங்க, “அம்மா தாயே என்னை ஆளை விடு. உனக்கு நாகா மேல கோவம் இல்லை வருத்தம் தான்னு நான் அங்கிள் கிட்ட சொல்லிடுறேன். அப்படியே உனக்குக் கல்யாணப்பரிசா அந்த நாகாவுக்கு நாலு நல்லபுத்தி நறுக்குன்னு சொல்லச் சொல்றேன். மத்ததெல்லாம் உன் பாடு அந்த கருநாகம் பாடு நான் கிளம்புறேன்.” என்று கையெடுத்துக் கும்பிட்டான் அரசு.

     ஊர்மியைப் பல இடத்தில் தேடிவிட்டு மாடிக்கு வந்த தேவகி, அரசுவின் முதுகுப்புறத் தோற்றத்தையும், ஊர்மியின் முகத்தில் இருந்த சிரிப்பையும் பார்த்துவிட்டு, அவளுக்கு எதிரே இருப்பவன் நாகா தான் என்று நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டு கீழே ஓடினாள்.

     “அக்கா” என்கிற அழைப்போடு லீலாவின் கரம்பிடித்து அருகே அமர்ந்தாள் தேவகி.

     “என்னடி என்ன விஷயம். என்னாச்சு உனக்கு, எதுக்காக இப்படி உன் முகம் காது எல்லாம் சிவந்து கிடக்கிது.” ருக்கு விசாரித்தாள்.

     “அக்கா, நாம எல்லாம் இங்க ஊர்மி அக்காவை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கோம். ஆனா அங்க அவங்க எந்தக் கவலையும் இல்லாம நாகா மாமா கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க.” சின்ன சிரிப்போடு சொன்னாள்.

     “நீ நிஜமாவே அவரைத்தான் பார்த்தியா?” சந்தேகமாய் கேட்டாள் ருக்கு. நாய் வால் அதற்குள் நிமிர்ந்துவிட்டது என்று சொன்னால் யாரால் தான் நம்ப முடியும்.

     “அக்கா, நான் அவரைத் தான் பார்த்தேன். ஊர்மி அக்கா நல்லா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் இல்லாம வேற யார் கூட அக்கா அப்படி சிரிச்சு பேசப் போறாங்க.” என்க, லீலாவுக்கு மனதிற்குள் இருந்த மிகப்பெரிய குடைச்சல் காணாமல் போனது.

     சற்று நேரத்தில் ஊர்மி அறைக்கு வர மூன்று பேரும் அவளை ஊற்றுப் பார்த்தனர். “என்னாச்சு ஏன் எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்க்கிறீங்க.” காயவைத்த துணிகளை எடுத்து வந்து அதை மடிக்க ஆரம்பித்தாள்.

     “ஏன் ஊர்மிக்கா, போன் வாங்கிக் கொடுத்தா போனில் மட்டும் தான் பேச முடியும், நேரில் பேச முடியாதுங்கிற கவலையில் தான் மாமா உனக்கு இன்னும் போன் வாங்கிக் கொடுக்கலையா?” விஷயத்தை வேறு மாதிரிப் புரிந்துகொண்டாள் கடைக்குட்டி.

     ஓரளவு சூழ்நிலையை உணர்ந்த ஊர்மியும், “ஆமா இப்ப என்ன அதுக்கு.” சகோதரிகளின் மன நிறைவுக்காக உண்மையை மறைத்தாள் ஊர்மிளா.

     “ஊர்மி உன்னை நினைச்சு தான் எனக்குப் பயமா இருந்தது. இப்ப தான் நிம்மதியா இருக்கு.” லீலா புன்னகைக்க, இந்தப் புன்னகைக்காக இன்னும் எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்தாள் ஊர்மிளா.

     அங்கே அறையில், “ஆமாண்டா இனி எனக்கு வேற வழியே இல்லை. அந்த அடங்காப்பிடாரியைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும். அவ ஆளும், பேரும், மூஞ்சியும் எனக்குச் சுத்தமா பிடிக்கல.” நண்பனிடம் கத்திக் கொண்டிருந்தான் நாகா.

     மனநிறைவுடன் சகோதரிகள் நால்வரும் படுத்த உடன் நன்றாக உறங்கவும் ஆரம்பித்தனர். அரசுவிடம் மனதில் இருந்த அனைத்தையும் பேசித் தீர்த்ததில் ஊர்மிக்கும் கூட நல்ல உறக்கம் வந்திருந்தது.

     நடுநிசியில் அலைபேசி சத்தம் கேட்கவே கண்விழித்த லீலா வரிசையாய் இருந்த மூன்று போனில் எந்த போனில் இருந்து சத்தம் வருகிறது என்று கண்ணைத் தேய்த்துக் கொண்டே பார்த்தாள்.

     அது அவளுடைய போன் தான். ஏதோ ஒரு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்னும் குழப்பத்தில் நேரத்தைப் பார்க்க அது பன்னிரண்டு மணி இருபது நிமிடத்தைக் காட்டியது.

     குழப்பத்துடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். “ஹாய் லீலா, ரொம்பச் சீக்கிரம் தூங்கிடுவ போல. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் எதிலும் இல்ல. செல்போனை எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு மட்டும் யூஸ் பண்ற.

     வேலை செய்த இடத்திலும் ரொம்ப நல்லபடியாச் சொல்றாங்க. இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணது இல்லையாம், பாஸ் பெஸ்டி என்ன ஆண் நண்பர்கள் என்று கூட யாரும் இல்லையாம். எந்தக் காலத்தில் இருக்க நீ. எப்படி அந்தச் செல்வா உன்னைக் கண்டுபிடிச்சானோ தெரியல.

     நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்க. ஆனா நீ நினைக்கிற அளவுக்கு செல்வா இல்ல. அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட உயிருக்கே ஆபத்து, அப்புறம் உன் இஷ்டம்.” என்று அந்தப்பக்கம் சொன்ன செய்தியை கேட்டதும் தூக்கம் இருந்த இடம் தெரியாமல் போனது லீலாவுக்கு.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இதென்ன கடைசியில இப்படி ஒரு ட்விஸ்ட் … நாகா செஞ்ச வேலையா ?? இல்ல செல்வா செக் பண்றானா ??