Loading

    உதயநிலாவின் ஆபீசுக்கு வந்து பார்த்த போது அவள் அணிந்திருக்கும் ஆடையும், போட்டோவில் இருக்கும் ஆடையும் ஒன்று என்று புரிந்து கொண்ட ஆதிரனுக்கு, பல சிந்தனைகள் மனதில் தோன்றியது.

   அதோடு அவன் ஆபீஸினுள் நுழையும் போதே, கட்டிடத்தின் வாட்ச்மேன் அவனை யார் எவர் என்று விசாரிக்க, நிலாவை பற்றி கூறினான்.

   “மேடம் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் உள்ள போயிருக்காங்க. எப்படியும் உள்ள தான் இருப்பாங்க, நீங்க போய் பாருங்க.”

   என்று அவர் கூறியது வேறு, மனதில் தோன்றி அவனது சிந்தனையை தூண்டியது.

    நிலா எதற்காக தன்னிடம் பொய்யுரைக்கிறாள்…? ஒருவேளை இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லையோ? என்ற சந்தேகம் கூட அவனுக்கு துளிர்க்க தொடங்கி விட்டது.

    அத்தை மாமாவின் கட்டாயத்தினால் தான், தன்னை திருமணம் செய்த கொள்ளப் போகின்றாளோ என்று, ஒரு எண்ணமும் அவனுக்கு தோன்றியது.

   ஆதிரன் வந்திருப்பதை அறிந்து, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த மாலினி,

     “அட அண்ணா எப்படி இருக்கீங்க? எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க? எனிவே உங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.”

    “ என்னம்மா தங்கச்சி எல்லாரும்  கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லுவாங்க, நீ அனுதாபம் தெரிவிக்கிற?”

     “பின்ன கட்டிக்க போறது இவளை இல்லையா, அப்போ அனுதாபமுன்னு  தானே சொல்லணும்.”

    “கரெக்டு தான் என்ன பண்றது, இந்த ஜென்மத்தில் எனக்கு வேற சாய்ஸ் இல்லையே.”

   அதற்குள் அலைபேசியில் பேசி முடித்து விட்டு வந்த நிலா,

    “ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா கிண்டலா இருக்கா என்ன? நீ என்னடி அவரோட சேர்ந்து என்ன கலாய்ச்சிட்டு இருக்க?”

    “நிலா குட்டி, உண்மையை யார் சொன்னாலும் அதை ஏத்துக்க, நல்ல மனசு வேணும்.”

     “எது..? ஹலோ மிஸ்டர் உங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி, நானா தலையை விரிச்சு போட்டுட்டு ஆடினேன். ஆக்சுவலி உங்களை கல்யாணம் கட்டிக்க எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. ஆனா இதை சொன்னா அந்த காஞ்சனா என் சோத்துல விஷத்தையே வெச்சிடும்.

    இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க வெளிநாட்டுல யாரையாவது காதலிச்சேன்னு பொய் சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க. நான் அப்படியே நிம்மதியா எஸ்கேப் ஆகிடுவேன்.

   ஆனா அந்த காஞ்சனாகிட்ட மட்டும், நீங்களே டீல் பண்ணிக்கோங்க.”

    அவளது வார்த்தையில் ஆதிரனின் முகம் சட்டென்று சுருங்கியது, உடனே தன்னை மீட்டுக் கொண்டவன் சிரித்தபடியே,

    “ ஐடியா நல்லா தான் இருக்கு, ஆனா அத்தைக்காகவும் மாமாவுக்காகவும் தான், குட்டி பிசாசான உன் கழுத்துல நான்  தாலி கட்ட போறேன்.

   அவங்களை எதிர்த்து எல்லாம், உன்னை மாதிரி என்னால பேச முடியாதே? ஏன்னா நான் அடக்க ஒடுக்கமான நல்ல பையன். ஆனா உனக்கு இந்த கல்யாணத்துல உண்மையாவே இஷ்டம் இல்லைன்னா, அதை தடுத்து நிறுத்துற முதல் ஆள் நானா தான் இருப்பேன் நிலா. ”

   அவனது பதிலில் நிலா குழப்பமாக ஆதிரனை பார்க்க, சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த மாலினி,

   “அண்ணா உங்க கல்யாண மேட்டர் எல்லாம் அப்புறமா பேசுறீங்களா, முதல்ல ஃபாரின்ல இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? அதை சொல்லுங்க முதல்ல.”

   அதற்குள் காஞ்சனா நிலாவிற்கு அழைத்து விட்டார், அவரிடம் இரண்டு மூன்று முறை திட்டு வாங்கி விட்டு ஆதிரனோடு வீடு வந்து சேர்ந்தாள் நிலா.

   “என்னப்பா  இப்படி சொல்ற இன்னைக்கு தானே ஊர்ல இருந்தே வந்திருக்க, அதுக்குள்ள பெங்களூர்ல இருக்க உங்க ஹெட் ஆபீஸ் போகனுமா?”

   ஆதிரனுக்கும் தனது கணவர் சுகுமாருக்கும் உணவை பரிமாறிக் கொண்டே, காஞ்சனா அவனிடம் இதை கேட்டுக் கொண்டிருக்க, நிலா அது எதையுமே கவனிக்காமல் தனது தட்டில் உள்ள உணவை மும்முரமாக உண்டு கொண்டிருந்தாள்.

    “ஆமா அத்தே நான் நாளைக்கு ஒருநாள் தான் லீவு சொல்லி இருக்கேன். நெக்ஸ்ட் மன்த் நிச்சியத்துக்கு கூட இரண்டு நாள் தான் லீவு போட்டிருக்கேன்.”

   “என்னது இரண்டு நாள் தானா?”

   “வேற வழி இல்லத்தே மாமாக்கு ஆபரேஷன் பண்ணும் போதும், அதுக்கு அப்பறமும் அவரோட நான் ஒத்தாசைக்கு  இருக்கனும் இல்லையா.”

    தனது மனைவி முகம் வாடி நிற்பதைக் கண்ட சுகுமாரன்,

   “என்னாச்சு காஞ்சனா? அது தான் ஆதிரன் இவ்வளவு விளக்கமா சொல்லறாப்புடி இல்ல, அப்பறம் என்ன?”

   “என்னமோங்க இவங்க இரண்டு பேரையும், நாம தான் கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு இழுத்து வைக்கிறது போல தோணுது.

    நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு. ஆனா நம்ம வீட்டைப் பாருங்க, கல்யாண வீட்டுக்கான கலை எங்காவது தெரியுதா?

    நிச்சயதார்த்தம் அன்னைக்கு தான்  இவங்க ரெண்டு பேரும் வீட்லயே இருப்பாங்க போல, ஆதிரன் தம்பியவாவது ஒருவகையில ஒத்துக்கலாம், ஆனா நாம பெத்து வச்சிருக்கவ இருக்காளே, இவ அரைமணி நேரத்துக்கு முன்னாடி ஸ்டேஜ்க்கு வர்றதே பெரிய விஷயம்.”
  
    தனது தாயை முறைத்த நிலா,

    “இங்க பாருங்க உங்க மாப்பிள்ளையை ஒசத்தி பேசுறதுக்காக, என்னைய மட்டம் தட்டி திட்டுற வேலை வச்சுக்காதீங்க.

   ஏன் உங்க மாப்பிள்ளைக்கு மட்டும் தான் வேலை இருக்குமா? எனக்கெல்லாம் வேலை இருக்காதா என்ன?

    நான் என்ன தினமும் வெளிய ஊர் சுத்தவா போறேன்? நானும் வேலைக்கு தானே போறேன்?

    உங்க மாப்பிள்ளை கூட கம்பெனி சொன்ன வேலையை செஞ்சு முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து ஹாயா உட்காந்துக்கலாம்.

   ஆனா நான் சொந்த தொழில் பண்றேன், இங்க நானா  ஒவ்வொன்னையும் முன்ன நின்னு  செஞ்சா தான், முன்னேற முடியும் தெரிஞ்சுக்கங்க.”

    “இப்போ உன்ன அவ்வளவு கஷ்டப்பட்டு யாரு வேலைக்கு போக சொல்றா? கல்யாணப் பொண்ணா லட்சணமா வீட்ல இருந்து, வீட்டு வேலையை கத்துக்க வேண்டியது தானே.

    அதை விட்டுட்டு விடியக் காலைலயே சாப்பிடாம கூட, இங்கிருந்து அடிச்சு பிடிச்சு கிளம்பி போற, ஞாயிற்றுக்கிழமை உலகத்துக்கே லீவு விட்டாலும் உன் காலு வீடு தங்காது.

    அதை விடு, இதுவரைக்கும் அடுப்படி பக்கம் நீ எட்டியாச்சும் பார்த்திருக்கயா?

    நல்லவேளை உன்ன வெளிய கட்டிக் கொடுக்கல, இல்லாட்டி மாமியாக்காரி  உங்க அப்பா அம்மா, வீட்ல அப்படி என்னத்தை தான்டி கத்துகிட்டு வந்தேன்னு, உன் கன்னத்துல இடிக்கிறதோட, எங்களையும் சேர்த்து இல்ல டி கரிச்சு கொட்டு வா.

    உன் முகத்தைத் தான் பாரேன், உன்னை கல்யாண பொண்ணுன்னு சொன்னா, யாராவது நம்புவாங்களா?”

   “ அதுக்கு என்ன பண்ணனும் சொல்லறீங்க? நான் வேணும்னா என் நெத்தியில எழுதி வேணா ஒட்ட வச்சுக்கட்டுமா? நான் கல்யாணம் ஆக போற பொண்ணுன்னு.”

   நிலாவின் கூற்றில் ஆதிரன் சட்டென்று வாய்விட்டு சிரித்து விட, அவனை முறைத்த படியே தட்டை தூக்கிக் கொண்டு அவள் கை கழுவச் செல்ல, டேபிளின் மீது இருந்த அவளது போன் சிணுங்கியது.

     நிலா அவசரமாக டேபிளுக்கு வருவதற்கு முன்பாகவே, அலைபேசி அடித்து ஓய்ந்து போயிருந்தது.

   “இப்ப தான் சொன்னேன் உடனே வந்துருச்சு பாருங்க, எங்காவது இந்நேரத்துக்கு வெளியே கிளம்பினேன்னு வைய்யி, அவ்வளவு தான் சொல்லிட்டேன்.

    இங்க பாருடி நாளைக்கு நல்ல நாள், ஆதிரன் தம்பியும் நாளன்னைக்கு ஒர்க்ல சேரணும்னு சொல்றாரு, அதனால நாளைக்கே நாம முகூர்த்த பட்டுப் புடவை எடுக்க போறோம்.

   எங்காவது அந்த வேலை இருக்கு, இந்த வேலை இருக்குன்னு சொல்லி நீ எஸ்கேப் ஆக நினைச்சே, அப்பறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்  சொல்லிட்டேன்.”

    “ம்கும் இப்ப மட்டும் அப்படியா இருக்கீங்க.”

    “என்னடி  அங்க தலையை குனிஞ்சுகிட்டு முணுமுணுக்கற? நான் சொன்னது காதுல ஏறுச்சா இல்லையா?”

   “சரிமா…சரி…நான் வீட்டுக்கு வந்ததுல இருந்து, இதே பாட்டத் தானே ஓயாம பாடிகிட்டு இருக்கீங்க, எனக்கு மனப்பாடமே ஆகிடுச்சு.

   நாளைக்கு அந்த ஜவுளிக்கடைல உங்க பக்கத்திலேயே வந்து நிக்கிறேன், நீங்க ஓயாம நூறு நூற்றி ஐம்பது சேலையை எடுத்து, என் மேல போட்டு பார்த்து, எது உங்களுக்கு பிடிச்சிருக்கோ அதையே தேர்ந்தெடுங்க.

   நீங்க பர்ச்சேஸ் பண்ணி முடிக்கிற வரைக்கும், அந்த ஜவுளிக்கடை பொம்மை மாதிரியே, நான் அசையாம அப்படியே நிக்கிறேன் போதுமா.”

   பேசிவிட்டு தனது மொபைலில் மிஸ்டு கால் காட்டிய புதிய நம்பரை கண்டவளுக்கு, ஈஸ்வரின் நியாபகம் வந்தது.

   மொபைலை பார்த்தபடியே அவள் மாடியில் உள்ள அவளது அறைக்குச் செல்லப் போக,

   “யாரும்மா இந்நேரத்துல?”

    “அது யாரும் இல்லப்பா, நம்ம மாலு  தான்.”

    “ஆபீஸ் வேலை எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கோம்மா, ஏற்கனவே இன்னைக்கு காலையில நேரத்துல எழுந்ததே டையர்டா இருக்கும்.

   நீ போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும் பாப்பா. அம்மா சொல்றதும் நல்லதுக்கு தானே, நீ நல்லா தூங்கி சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா தான், கல்யாண மேடையில நிக்கும்போது நல்லா இருக்கும் இல்லையா, அப்பா சொல்றதை கேட்ப தானே?”

   “அவ சும்மா தான் கூப்பிட்டு இருப்பாப்பா, அதோட நான் உங்க வைப் சொல்றபடியே கேட்கிறேன் போதுமா. அவங்களுக்காக இல்லைன்னாலும் என் அப்பாவுக்காக கேட்கிறேன்.”

   மொபைலோடு அவள் வேகமாக படியேறிச் செல்ல, ஆதிரன் நெற்றி முடிச்சோடு போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    ஏனென்றால் ஆதிரனின் கைக்கெட்டும் தூரத்தில் தான் நிலாவின் மொபைல், பாரின் நம்பரை காட்டியபடி  ஒலித்துக் கொண்டிருந்தது.

    ஆனால் நிலா மாலினியிடம் இருந்து போன் வந்ததாகக் கூற, அவனுக்குள் மீண்டும் அந்த போட்டோவை பற்றிய நினைவு தோன்றத் தொடங்கியது.

   அதே நேரம் தனது அறைக்கு வந்தவள், கதவை பூட்டிக் கொண்டு மீண்டும் அந்த நம்பருக்கு கால் செய்ய, மறுமுனையில் ஈஸ்வர் போனை எடுத்திருந்தான்.

   “ சாரி சார் நான் கொஞ்சம் வேலையா இருந்தேன், வர்றதுக்குள்ள கால் கட்டாகிடுச்சு.”

    “இப்படி அன் டைம்ல கூப்பிடுறதுக்கு நான் தான் நிலா சாரி கேக்கணும், உங்களுக்கு இயர்லியராவே போன் பண்ணனும்னு தான் இருந்தேன். பட் கம்பெனியில் கொஞ்சம் இஸ்யூ, அதோட ஆன்சைட் வர நான் போக வேண்டி இருக்கு.

   நான் இப்போ ஏர்போர்ட்ல தான் இருக்கேன், எப்படியும் நான் திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும். டைரக்டா கல்யாணத்துக்கு வருவது போல தான் இருக்கும்.

    இது என்னோட பர்சனல் நம்பர், ரொம்ப முக்கியம்னா இதுக்கு மெசேஜ் போட்டு விடுங்க. நான் அங்க  ஃப்ரீயா இருக்கும் போதெல்லாம், உங்களுக்கு திருப்பி டெக்ஸ்ட் பண்றேன், நீங்க எதுவும் என்கிட்ட சொல்லனுமா?”

   அவன் படபடவென்று பேசி முடிக்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிலா தான் திண்டாடினாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இந்த நிலா லூசு ஃப்ரெண்ட் ட நம்பி தானா போய் என்ன பிரச்சனையில மாட்ட போகுதோ … ஈஸ்வர் தான் ஹீரோ வா ?? அப்போ ஆதிரன் 🤔