Loading

யான் நீயே 7

ஐவரும் கிளம்பிச் செல்லும் வரை வீரன் திண்ணையில் தான் அமர்ந்திருந்தான்.

மீனாள் சுடிதாருக்கு மாறியிருந்தாள். வெளியில் செல்வதால்.

லிங்கமும், பிரேமும் லிங்கத்தின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்க,

நாச்சி மீனாளின் ஸ்கூட்டியில் ஓட்டுவதற்கு அமர்ந்திருந்தாள். அவளும் புடவையை மாற்றியிருந்தாள்.

நாச்சிக்கு பின்னால் மீனாள் இருக்க, அங்கை எதில் யாருடன் செல்வதென்று பார்க்க…

“வா சின்னகுட்டி” என்று அழைத்திருந்தான் பிரேம்.

அவளும் லிங்கத்திற்கு பின்னால் அமரலாமென்று உற்சாகமாக நகர,

“பாவாடை கட்டிட்டு எப்படிடி அந்த வண்டியில ரெண்டு பக்கம் காலிட்டு உட்காருவ?” என்ற நாச்சி, “நீ போ மீனு” என்றதோடு, “என் பின்னுக்கு வந்து உட்காரு” என்றாள் அங்கையை.

அங்கை நாச்சியை முறைத்திட…

“என்ன அங்கை. உன்னால ஒரு பக்கட்டு பெரிய வண்டியில, அதுவும் கடைசியா உட்கார முடியாதுன்னு தான் மதினி சொல்றாங்க. போ” என்ற மீனாள், அங்கையின் புதிதான நடவடிக்கைகளை அவதானித்தவளாக லிங்கத்தின் வண்டியில் சென்று அவன் பின்னால் அமர, அவளுக்கு பின்னால் பிரேம் அமர்ந்தான்.

வீரன் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

இன்று புதிதாய், லிங்கத்தின் தோளில் உரிமையாய் கரம் பதிக்கும் மீனாளின் மீது அங்கைக்கு பொறாமை துளிர்வதை.

மீனாளுக்கும் அங்கையின் பார்வையில் வித்தியாசம் தெரிந்திட…

“என்ன அங்கை?” எனக் கேட்டிருந்தாள்.

“நான் உடுப்பு மாத்திக்கிட்டு வரவா?” முறைத்துக்கொண்டே கேட்டாள்.

“ம்க்கும்… உண்கவே அம்புட்டு நேரம். இதுல இவள் வீட்டுக்கு போயி வரதுக்குள்ள விடிஞ்சிடும்” என்றான் லிங்கம்.

“படம் தொடங்கிடும் அங்கை. டைம் ஆவுது. ஏறு.” நாச்சி சற்று அதட்டலாகவே கூறிட, வேண்டா வெறுப்பாக முகத்தை சுருக்கிக்கொண்டு ஏறினாள்.

“ஏன் அங்கை ஒரு மாதிரி இருக்கிற? தாவணி உனக்கு அம்சமாதான் இருக்குது.”

அங்கை உம்மென்று வரவே நாச்சி பேச்சுக்கொடுத்தாள்.

“நீங்க அண்ணேவை லவ் பண்றீங்கன்னு எப்படி மதினி தெரிஞ்சிக்கிட்டிங்க. அதுக்கு சிம்டம்ஸ் இருக்கா?”

அங்கை கேட்ட கேள்வியில் டக்கென்று சாலையில் இரு பக்கமும் கால் ஊன்றி வண்டியை நிறுத்தியிருந்தாள் நாச்சி.

“என்ன மதினி?”

ஒன்றும் அறியாதவள் போல் முகம் வைத்து அங்கை வினவினாள்.

“இந்த வயசுல நெனப்புல பலது வந்து போவுமாட்டி அங்கை. அதெல்லாம் வெத்து கனா மாறிதேன். சூதானமா இருந்துக்க. பேச்சுல அடங்கியிரு” என்று எச்சரிக்கை செய்து வண்டியை கிளப்பினாள்.

புதிதாக மனதில் முளைத்திருக்கும் உணர்வில் இருந்த அங்கைக்கு நாச்சியின் பேச்செல்லாம் காதில் ஏறவில்லை.

“சும்மா கேட்டேன் மதினி” என்று முடித்துக்கொண்டாள்.

நாச்சிக்குத்தான் அங்கையை நம்புவதா வேண்டாமா என்று குழப்பமானது.

“போங்க மதினி. அவீங்க முந்தி போறாய்ங்க!”

அங்கையையே பார்வையால் அளவீடு செய்து கொண்டிருந்த நாச்சி, அவளின் உலுக்களில் வண்டியை கிளப்பியிருந்தாள்.

சிறியவள் அவளுக்கு தன் உணர்வுகளை மறைத்து வைக்கத் தெரியவில்லை. அனைவரின் கண்ணிலும் மாட்டிக்கொள்கிறாள்.

லிங்கத்திற்கு தெரிய வரும்போது அவனின் நிலை என்னவாக இருக்குமோ?

லிங்கத்துடன் வண்டியில் செல்ல முடியாத மற்றும் திரையரங்கில் அவனுடன் உட்கார முடியாத கோபத்தில் அங்கை சிடுசிடுவென்று தான் நேரத்தை கழித்தாள்.

லிங்கம் அங்கையை தூக்கிக்கொண்டு சுற்றியிருக்கிறான். அவளுடன் தொட்டு விளையாடியிருக்கின்றான். ஆனால் அவள் வயதாக தன்னைப்போல் இடைவெளியில் நின்றுகொண்டாலும், எப்போதும் போல் தான் நடந்துகொள்கின்றான்.

இருப்பினும் அங்கைக்கு லிங்கத்திடம் நெருங்கிட பேராவல். சிறு பெண் தானே! இதுக்கே துவண்டு போனாள்.

“ஏன் அங்கை உம்முன்னே இருக்க?”

மற்ற நால்வரும் உற்சாகமாக படம் பார்த்து கை தட்டுவது விசில் அடிப்பதென்று ஆரவாரம் செய்து கொண்டிருக்க… அவள் மட்டும் எதற்கு வந்த விருந்தோயென்று லிங்கத்தை அவ்விருட்டிலும் முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்க… மீனாள் வினவினாள்.

“தலை வலிக்குதுக்கா!” என்று சமாளித்தாள்.

“அதிகாலையில தலைக்கு தண்ணி ஊத்துனதா இருக்கும். ஏசி பக்கட்டு உட்காந்திருக்க. என் சீட்டுல மாறி உட்காரு” என்று எழ, அடுத்த நொடி அங்கை உற்சாகமாக மாறியிருந்தாள்.

அங்கை லிங்கத்தின் ஒரு பக்கம் அல்லவா அமர்ந்திருந்தாள்.

பெண்கள் மூவரையும் நடுவில் விட்டு ஆண்கள் இருவரும் இருபக்கம் அரணாக அமர்ந்திருந்தனர். பொங்கல் தினமென்பதால் திரையரங்கு அத்தனை கூட்டமாக இருந்தது. இளைஞர்கள் தான் அதிகம் இருந்தனர்.

“என்ன சின்னக்குட்டி படம் புடிக்கலையாட்டு?” அவள் தன்னருகே அமர்ந்ததும் லிங்கம் வினவினான்.

“இதுக்குமேல்பட்டு புடிக்கும் நினைக்குறேன்” என்றவள், திரையை விட லிங்கத்தை தான் பார்த்து வைத்தாள்.

திடீரென்று லிங்கம் கோபமாக எழுந்திருக்க… அவ்விருட்டிலும் அவனின் கண்கள் அத்தனை சிவப்பாய் ஒளிர்ந்தது.

லிங்கம் எழுந்ததும் பின்னிருக்கையிலிருந்த இளைஞர்கள் அமர சொல்லி கத்தி கூச்சலிட… அங்கை பயந்து அவனை பார்த்தாள்.

“மாமா என்னாச்சு?”

மீனாள் காரணம் விளங்காது கேட்க… மற்ற இருவரும் கூட என்னவென்று அவனை பார்த்தனர்.

“நான் போறேன். நீங்க பார்த்துப்போட்டு வாங்க” என்று சட்டையை அடியில் பிடித்து உதறிய லிங்கம், கத்திக்கொண்டிருந்த இளைங்கர்களிடம்,

“ஓவரா சலம்பாதிங்கடே!” என்று தன் எரிச்சலை காட்டிவிட்டு, பிரேம் கூப்பிட கூப்பிட வெளியில் சென்றுவிட்டான்.

“கோட்டித்தனமா ஏதும் பண்ணியா அங்கை?” நாச்சி அதட்டலாக வினவ, அவளின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

அவளளவில் அவள் செய்தது அவளுக்குத் தவறாக தெரியவில்லை. வயதுக்கே உரிய வேகம் அனைத்திலும் அவசரம் காட்டியது.

“ம்ப்ச் விடு அழகு. அவள் பண்ற சேட்டைக்கு இப்படி ரியாக்ட் பண்ணமாட்டானே! வேறென்னவோ” என்ற பிரேம், “நாமும் போவோம். அவென் இல்லாம எங்கட்டு பாக்குறது!” என்க, மீனாள் அவன் சொல்லி முடிக்கும் முன்பே வெளியேறியிருந்தாள்.

மீனாள் லிங்கத்தை வாகனங்கள் தருப்பிக்கும் இடத்தில் பார்க்க, அவனோ கேட்டைத் தாண்டி வெளியில் சென்று கொண்டிருந்தான்.

அவனுடைய கோபம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது.

அழுதுகொண்டே வந்த அங்கையின் மீது தான் மீனாளுக்கு சந்தேகமாக இருந்தது.

“என்ன மீனு போயிட்டானா?”

“ஆமாண்ணே!”

“என்னாச்சு இவனுக்கு” என்ற பிரேம், வீரனுக்கு அழைத்திட்டான்.

முதல்முறை எடுக்காமல் விட்ட வீரன், மூன்றாவது அழைப்புக்குத்தான் ஏற்றிருந்தான்.

“என்னடே பிரேம்? சோலியா கிடக்கேன். என்ன அவசரம்?” என்றான் வீரன். எடுத்ததும்.

“என்னாச்சுன்னு தெரியல மாமா, லிங்கு பாதியில எழுந்து போயிட்டான். இந்நேரத்துக்கு நம்ம வூருக்கு பஸ் இல்லையே மாமா. எப்படி வாரது?” எனக் கேட்டான்.

“சரி அங்கினவே தியேட்டர் பக்கட்டு இருங்க. ஒரு பத்து நிமிசத்துல வந்துடுறேன்” என்ற வீரன் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கால் மணி நேரத்தில் அவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.

காரில் தான் வந்திருந்தான். உடன் சுபா.

“ஹாய் சுபா!” நாச்சி அவளை பார்த்ததும் அணைத்து விடுவிக்க, பிரேம் உறவு முறையில் தங்கையானவளை தோளோடு சேர்த்து விடுத்தான்.

“எப்படிக்கா இருக்கீங்க?” என்று இன்முகமாகவே வரவேற்று கேட்டாள் மீனாள்.

“நல்லாயிருக்கேன் மீனுகுட்டி” என்ற சுபா, “வளர வளர ரொம்பவே அழகாகிட்டு போற மீனு” என்று அவளின் கன்னம் பிடித்து ஆட்டினாள்.

“வீட்டுல போயி பேசிக்கலாம் சுபா. மொத வண்டியில ஏறுங்க!” என்றான் வீரன்.

சுபா உரிமையாய் மீனாளின் கன்னம் கிள்ளியது உண்மையில் அவனுள் பற்றி எரிய வைத்தது. அவனால் அவளிடம் பேச்சு வார்த்தையால் கூட நெருங்கிட முடியாதிருக்க… மற்றவர்கள் அனைவரும் அதீத நெருக்கம் காட்டுவது அவனுள் புகைச்சலை உண்டு பண்ணியது.

“என்ன சடவுடா அவனுக்கு. ஜாலியாத்தானே கெளம்பி வந்தீய்ங்க. யாரு ஒரண்டை இழுத்தது” என்று பிரேமிடம் வினவிய வீரன், அங்கையை அர்த்தத்தோடு ஏறிட்டான்.

எப்போதும் சலசலத்துக் கொண்டிருப்பவளின் தற்போதைய அமைதியே அவள் தான் ஏதோ செய்திருக்கிறாள் என்பதை அவனுக்கு காட்டிக்கொடுத்தது.

பின்னிருக்கையில் கால்நடைகளுக்கு வாங்கிய புதிய கயிறு, சிறு சிறு பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் அலங்கார பொருட்கள் யாவற்றையும் நிரப்பி வைத்திருக்க…

“அதெல்லாம் எடுத்து பின்னாடி போடுடே! நீ போன் போட்டதும், அவசரத்துல வந்துட்டேன்” என்றான் வீரன்.

“நீயி கார் எடுத்துட்டு வந்ததும் வசதியா போச்சு மாமா. இல்லைன்னா பஸ்ஸுக்குத்தேன் காத்திருந்திருக்கணும்.” பிரேம் சொல்லிட, வீரன் மீனாளைத்தான் பார்த்தான்.

அவளோ அவன் பார்வை உணர்ந்தபோதும் அவன் புறம் திரும்பவே இல்லை.

“நாச்சி வண்டி எங்கடே?”

“ஆமா, என் வண்டி இருக்கே” என நாச்சி சொல்ல,

“நான் அதுல வந்துக்கிறேன்” என்றான் பிரேம்.

முன்னால் வீரனுக்கு அருகில் அமர்ந்த அங்கை, அவனது கையின் புஜத்தை இரு கரம் கோர்த்து பிடித்தவளாக அவனின் தோளில் தலை சாய்த்து கண்ணை மூடிக்கொண்டாள்.

“உடம்பு ஏதும் பண்ணுதாடா?”

மற்றவர்கள் பொருட்களை பின் வைப்பதிலும், அமர்வதிலும் முனைப்பாக இருக்க… இவர்களை கவனிக்கவில்லை.

வீரன் கேட்டிட இல்லையென்று தலையாட்டியவளின் முகம் மட்டும் அத்தனை வாடியிருந்தது.

“இப்போ நான் உன் கை பிடிச்சிருக்கேன். உன் மேல சாய்ஞ்சிருக்கேன். இது தப்பா மாமா?”

வேற்றுமை இன்றி அன்பு என்ற ஒன்றை மட்டுமே கொண்டு பிணைப்புடன் வளர்ந்த அவர்களுக்குள் இதெல்லாம் இயல்பானது. அப்படியிருக்கையில் இது தவறென்று ஏன் கேட்கிறாள் என சிந்தித்த கணம் வீரனுக்கு லிங்கத்தின் கோபத்திற்கான காரணம் விளங்கிற்று.

“வீட்டுக்கு போயி பேசுவோமாட்டிக்கு” என்றவன் அவளின் தலையில் அழுத்தம் கொடுத்து கோதினான்.

“போகலாம் மாமா” என்று அங்கையின் பக்கத்தில் வந்து சுபா அமர, மற்ற இருவரும் பின்னால் அமர்ந்தனர்.

பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்திருந்தனர்.

லிங்கத்தின் வண்டி வீட்டு வாசலிலேயே நிற்க, அவன் வந்துவிட்டான் என்பது தெரிந்தது.

பின்னால் வந்த பிரேமும் வீரனும், வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பின்பக்கம் கட்டுத்தறி அறையில் வைத்துவிட்டு வீட்டுக்குள் வர,

அங்கை மற்றும் சுபாவை தவிர்த்து மற்ற மூவரும் லிங்கத்திடம் காரணம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

லிங்கம் யாருக்கும் அசையாது முற்றத்தில் கிடந்த கயிற்று கட்டிலில் நிமிர்ந்து படுத்திருந்தான்.

பிள்ளைகளின் குரல் கேட்டு வந்த மீனாட்சி மற்றும் அபிராமி சுபாவை வரவேற்று நலம் விசாரித்த பின்,

“என்ன புள்ளைங்களா சினிமா பாக்கன்னு போயி சுருக்க வந்து சேர்ந்துபுட்டிங்க. படம் நல்லாயில்லையா?” எனக் கேட்டார் மீனாட்சி.

“எல்லாம் உன் பேரங்(ன்)கிட்ட கேளு அம்மத்தா! அவனால தான் வேஸ்டாப்போச்சு” என்றான் பிரேம்.

“என்ன கோட்டிலே ஆச்சு உனக்கு. புள்ளைங்களை ஆசைகாட்டி கூட்டிப்போயி, இப்படி பாதியில இழுத்தாந்திருக்க?” எனக் கேட்டார் அபிராமி.

அப்போதும் லிங்கத்திடம் பதிலில்லை.

ஆள் மாற்றி ஆள் அவனுக்கு என்னவானதென்று கேட்டு முட்டி மோத, அங்கை மற்றும் வீரன் மட்டும் பார்வையாளராக நின்றிருந்தனர்.

வீரன் எப்போதும் அமைதி மற்றும் அதிரடி. ஆனால் லிங்கம் அப்படியில்லை. கலகலத்து இருப்பான். எப்போதும் அவனிருக்கும் இடம் அத்தனை பேச்சாக இருக்கும். அவனது இந்த திடீர் அமைதி புதிது என்பதாலேயே எல்லோருக்கும் என்னவா இருக்குமென்ற கவலையை அளித்தது.

“அவனை செத்த சும்மா விடுங்க. கொஞ்ச நேரம் செண்டா சரியாவான்” என்று பாண்டியன் அதட்டிய பின்னரே அவனை விட்டனர்.

அன்றைய நாள் முழுக்க அந்த கட்டிலை விட்டு லிங்கம் அசைந்தானில்லை.

வீரனும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அன்றைய தினம் வேறு வேலை இல்லையென்பதால், வீட்டில் தான் அவனும் இருந்தான்.

அனைவர் கேட்டும் என்னவென்று சொல்லாதவன், கண்களை திறக்காதவன், சுபா சென்று பேசிட அவளை வரவேற்கும் விதமாக சிறு புன்னகையை மட்டும் காட்டினான்.

மாலை வரை பொறுத்த வீரன்,

“வாடா அப்படியே களத்துமேடு வரையும் போய்யி வருவோம்” என தம்பியை அழைக்க, மறுப்பேதும் சொல்லாது எழுந்து உடன் சென்றான்.

இவர்கள் இருவரும் வயல்வெளி பக்கம் செல்வதை கண்ட சுபா,

“நானும் வரட்டுமா மாமா?” எனக் கேட்க, அவளை தவிர்க்க முடியாது வாவென்றிருந்தான்.

வீரன் லிங்கத்திடம் தனித்து பேச எண்ணியே அவனை வெளியில் அழைத்து செல்ல நினைத்தான். இப்போது சுபாவும் உடன் வருவதால் பொதுவாக பலவற்றை பேசியபடி இரு வீட்டுக்கும் நடுவிலிருக்கும் தென்னந்தோப்பிற்குள் வந்திருந்தனர்.

“மீனு வீடு வந்திருச்சே! நான் அங்க போயிட்டு வரேன் மாமா” என்ற சுபா வீட்டை நோக்கிச்செல்ல… இவர்கள் வருவதை தனதறை சன்னல் வழி பார்த்த மீனாள், லிங்கத்திடம் பேச வேண்டுமென தோப்பு பக்கம் வந்தாள்.

எதிரில் பட்ட சுபாவிடம்,

“மாமாகிட்ட பேசனும் சுபாக்கா. நீங்க வூட்டுக்கு போங்க. அம்மா, அண்ணே, அங்கை இருக்காய்ங்க. சட்டுன்னு வந்துபுடுவேன்” என்று சொல்லி செல்ல…

‘வீரா மாமாவும் லிங்கத்துகிட்ட பேசத்தான் தனியா கூட்டிட்டு வந்திருப்பாரோ? நாம நந்தி வேலை பார்த்துட்டோம்மாட்டிக்கு’ என்று நினைத்தவளாக சென்றாள்.

லிங்கம் வாய்க்காலின் மண் மேட்டில் இரு கால்களுக்கு இடையில் கை விரல்களை கோர்த்தவனாக, தரை பார்த்து அமர்ந்திருக்க… வீரன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தன்னுடைய தம்பியை அவதானித்தபடி தென்னை மரத்தின் தண்டில் சாய்ந்தவனாக நின்றிருந்தான்.

நீடித்த மௌனத்தை வீரனே கலைத்தான்.

“எதுக்கு அந்த பையனை அடிச்ச?”

“சேக்காலியோட அண்ணன்னு பழகியிருக்காள். அவன் இவளை அவனோட லவ்சுக்கு யூஸ் பண்ணிட்டியிருந்திருக்கான். தெரிஞ்சு அவளை கண்டிச்சேன். இவளும், உன் தங்கச்சி இருக்கும்போது நான் ஏன் நீயி கொடுக்கிறதையெல்லாம் அந்த அக்காகிட்ட கொடுக்கணுமின்னு இவள் கேட்டதுக்கு மிரட்டியிருக்கான். வந்து சொன்னாள். அவென ரெண்டு தட்டு தட்டினேன்” என்ற லிங்கம், “ஏற்கனவே அவனோட பேசக்கூடாதுன்னு நீங்க சொல்லி திட்டுனதால, மேடம் என்கிட்ட சொன்னாய்ங்க. அப்பவும் உங்கக்கிட்ட சொல்லடக்கூடாதுன்னு அம்புட்டு கெஞ்சல் வேற” என்றான்.

“அப்புறம்?” வீரன் தம்பியை அனைத்தையும் சொல் எனும் விதமாக பார்த்தான்.

“அதான் எல்லாம் உங்களுக்கே தெரியுமாட்டிக்கே! பொறவு என்னத்துக்கு என்னையவே சொல்ல சொல்லுறீ(ய்)ங்க?” என்றான்.

வீரனிடம் அதே பார்வை.

“காலையில பொங்க வைய்க்கும்போது ஏதும் வில்லங்கமா நடக்குதான்னு நா கேட்டதுக்கு, அது உன் முடிவை பொறுத்துன்னு சொன்னிங்களே… வெளங்கிடுச்சு” என்றான் லிங்கம்.

“அப்புறம்?”

“அண்ணே இப்போ நான் என்ன சொல்லணுமாட்டிக்கு நெனைக்கிற நீயி?” சற்று கடுப்பாகவே கேட்டான் லிங்கம்.

“நீதான் சொல்லணும் லிங்கு!” வீரன் சொல்லிட மீனாள் அருகில் வந்தாள்.

வீரனிடம் பார்வையைக் கூட திருப்பாது,

லிங்கத்தின் முன் சென்று மண்டியிட்டவள் அவனின் கையை பிடித்துக்கொண்டு…

“என்ன வெசனம் லிங்கு மாமா உனக்கு? அவள் சின்னப்புள்ள. எடுத்து சொன்னாக்கா புரிஞ்சிப்பா(ள்). நீயி இப்படி சோர்ந்து உடக்காரத. என்னமோ மாறி இருக்கு” என்றாள்.

“அப்போ உனக்கும் தெரிஞ்சிருக்கு. என்னன்னு எனக்குத்தான் லேட்டா தெரிஞ்சிருக்குல. நானு அம்புட்டுக்கு முட்டாளா இருந்திருக்கேன்” என்ற லிங்கத்தின் பேச்சினை மறுத்த மீனா, “நானும் ரெண்டு நாளாத்தான் கவனிக்கேன் மாமா” என்றாள்.

“சரி… அப்போ ரெண்டேறும் அவகிட்ட பேசாம, என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கீய்ங்க. இது தப்புன்னு எடுத்து சொல்லும். பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?”

லிங்கம் அங்கையை மட்டுமே மனதில் வைத்து அப்படி பேச, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் மீனாள்.

மீனாளின் பார்வையில் அவளின் மனப்போக்கை கண்டுகொண்டவன், நெற்றியில் தட்டி தன்னையே நிந்தித்தவனாக,

“அச்சோ மீனாக்குட்டி… நானு உன்னைய” எனும் போதே…

“புரியுது மாமா. தப்பா நினைக்கல” என்றிருந்தாள்.

இவர்களின் இந்தப்பேச்சில் வீரனுக்கு ஒன்று தெரிந்தது.

மீனாளும் தன்னை பள்ளி வயதிலிருந்தே விரும்புகிறாள் என்று. எந்த வயதிலிருந்தென்று தான் தெரியவில்லை.

“நீயி பேசுண்ணே. உம் பேச்சுக்குத்தேன் மதிப்பு கொடுப்பாள்” என்று லிங்கம் சொல்லி முடிக்க…

“யார் சொன்னாய்ங்கன்னாலும் இதில் கேட்டுக்க மாட்டேன்” என்று திடமாக மொழிந்தாள் அங்கை.

அப்போதுதான் மூவரும் அவளை கவனித்தனர். எப்போது வந்தாளென்று தெரியவில்லை.

“அப்படியே செவுலிலே ஒன்னு வச்சேன்னு வைய்யி… சவ்வு கிழிஞ்சிடும்” என்று உட்கார்ந்திருந்த லிங்கம் எகிறிக்கொண்டு கை ஓங்கிட, வீரன் அவனை பிடித்து தடுத்திருந்தான்.

“உன் வயசென்ன என் வயசென்ன? பல்லை பேத்து கையில கொடுத்துப்புடுவேன்” என்று வீரனின் பிடியில் திமிறினான் லிங்கம்.

“எல்லாம் நல்ல வயசுதேன். கட்டிக்கலாம் தப்பில்லை.”

ஒன்றும் புரியாது பேசுபவளை பார்த்து லிங்கம் பல்லைக் கடிக்க,

“அங்கை” என்று மீனாள் அதட்டியிருந்தாள்.

“என்னை ஏன்’க்கா அதட்டுத? மதினியும், அண்ணேவும் லவ் பண்ணலையா?” எனக் கேட்ட அங்கையின் பார்வை வீரனை மட்டும் தவிர்த்தது.

“அச்சோ அங்கை புரியாம உளறாதட்டி” என்ற மீனாள், “அவெய்ங்களுக்கு சரியான வயசெட்டி. அதுவும் வூட்டுல ஒத்துக்கிட்டாய்ங்க. உனக்கும் மாமாக்கும் பதினோரு வருசம் வித்தியாசம் வருது” என்று விளக்கமாகக் கூறினாள்.

மீனாள் இதை சொல்லியதும், ‘என் காதலுக்கும் இவள் இதையெல்லாம் பார்ப்பாளோ?’ என உடனடியாக தனக்கும் மீனாளுக்குமான வயது இடைவெளியை கணக்கிட்டு நிம்மதி கொண்டான் வீரன்.

“அப்பாக்கும், அம்மாவுக்குமே பன்னெண்டு வருசம் வித்தியாசம். அவெய்ங்க சந்தோசமா வாழலையா? கல்யாணம் கட்டி குடும்பம் நடத்த மனசு போதும் வயசுலாம் வேணாமாட்டிக்கு” என்ற அங்கையின் பேச்சில் அதீத சினம் கொண்ட லிங்கம்…

“யார் சொல்றதையும் கேட்கமாட்டிய நீயி. தியேட்டர்ல நீயி பண்ண வேலைக்கு அங்கிட்டு வைச்சே உன்னைய வகுந்திருக்கணும். சின்ன புள்ள மாதிரியா பேசுற நீயி?” என்று கத்தினான்.

“இன்னும் ரெண்டு மாசத்துல பரீட்சை முடிஞ்சிட்டாக்கா… அடுத்த ரெண்டு மாசத்துல காலேஜூக்கு போயிப்புடுவேன். நான் ஒன்னும் சின்னப்புள்ளை இல்லை” என்ற அங்கை, “புரிஞ்சிக்கோயேன் மாமா. நெஞ்சுக்குள்ள உட்கார்ந்திட்டு அவஸ்தையை கூட்டுற. வீரா மாமாகிட்ட உரிமையா பேசும்போது விளையாடும் போதெல்லாம், உன்கிட்ட இப்படி இருக்க முடியலையேன்னு மனசு வெம்புது. அக்காவை உனக்கு ரொம்ப புடிக்கும் தெரியும். அவன்னா உனக்கு நாச்சியா மதனியைவிட கொள்ளப் பிரியம். அது என்மேல ஏன் இல்லைன்னு அக்கா மேலயே கோவம் கோவமா வருது. எனக்கு அக்காவ பார்த்தா பொறாமையா இருக்கு மாமா. உம்மேல உசுரே வச்சிருக்கேன். எப்புடி புரிய வைக்கணுமாட்டி தெரியல மாமா. நீயே புரிஞ்சிக்கோயேன்” என்றவள் அவன் முன் மண்டியிட்டு முகம் மூடி விசும்பினாள்.

லிங்கம் மட்டுமல்ல மீனாள், வீரனுக்கு கூட அங்கையின் தீவிரம் அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.

சிறுபெண் விளையாட்டாக செய்கிறாள். எடுத்து சொன்னால் சரியாகிவிடுவாளென்று வீரன் நினைத்திருக்க… அவள், தான் அப்படியில்லையென்று உணர்த்தியிருந்தாள்.

“என்னண்ணே பார்த்துகிட்டு நிக்குத?”

லிங்கத்திற்கு அவளின் அழுகை என்னவோ செய்தது.

“மீனு” என்று பரிதவித்த லிங்கம்,

“அச்சோ சின்னகுட்டி அழுவாத. என்னவோமாட்டிக்கு இருக்கு. நீதான் புரிஞ்சிக்கணும். உனக்கு இன்னும் வயசு இருக்குதுடா. இப்போ இந்த வயசுல படிப்புத்தேன் முக்கியம். மொத நால்லா படி. நீயி பாக்க வேண்டியது, தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்குது. இன்னும் வருசம் செண்டா உன் மனசு மாறலாம். அப்போ என்னையவிட வேற உனக்கு முக்கியமா தோணலாம். அப்போ பேசிக்கலாம். இந்த வயசுல இதெல்லாம் சும்மா ஈர்ப்புடா.” அதுவரை கத்திக்கொண்டு குதித்தவன் அவளின் அழுகையில் தன்னைப்போல் அமைதியாகியிருந்தான்.

அங்கையின் முகம் துடைத்து அழக்கூடாது என்ற லிங்கம்,

“மொத படி. பெரிய படிப்பெல்லாம் படி. பொறவு உனக்கே இது தப்புன்னு புரியும்” என்றான்.

“அண்ணே சொல்லுண்ணே!” லிங்கம் வீரனை துணைக்கு அழைத்தான்.

“அதான் நீயே அம்புட்டும் சொல்லிபுட்டியே! நான் வேறென்னத்த சொல்ல” என்ற வீரன், மீனாளுக்கு லிங்கத்தை பார்க்குமாறு கண்காட்டிவிட்டு, அங்கையை தன்னுடன் அழைத்துக்கொண்டு தள்ளிச் சென்றான்.

வீரன் அங்கையிடம் என்னவோ பேசுவதும், அதற்கு கண்களை துடைத்துக்கொண்டு, பளிச்சென்று அங்கை சிரிப்பதும் இருவருக்கும் தெரிந்தது. ஆனால் என்ன பேசினான், இவள் எதுக்கு சரியென்று தலையை ஆட்டுகிறாள் என்று ஒன்றும் கேட்கவில்லை.

லிங்கம் அழுத்தமாக பார்த்தபடி நின்றான். அவனுக்கு அங்கை அழுகையோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தை குடைவது போலிருந்தது.

“லிங்கு மாமா.” மீனாள் அழைக்க அவளை ஏறிட்ட லிங்கம், “அண்ணே பார்த்துக்கும் விடு” என்றான்.

“உனக்கு வயசுதேன் பிரச்சனையா மாமா?” எனக் கேட்டாள்.

தங்கையின் கண்ணீர், அவளின் காதலின் ஆழத்தை மீனாளுக்கு காட்டியது. காதலில் நித்தம் வலி சுமந்து கொண்டிருப்பவளுக்கு, காதலின் ஆழம் தெரியாதா என்ன?

என்ன நடந்தாலும் அங்கை எப்போதும் இதில் பின்வாங்கிட மாட்டாளென்பது உறுதியாக மீனாளுக்கு தெரிந்திட, காதலில் தான் கொள்ளும் வலி தன்னுடைய தங்கைக்கும் வேண்டாமென நினைத்து லிங்கத்திடம் அவ்வாறு கேட்டாள்.

மீனாளை உணர்வற்ற பார்வை பார்த்த லிங்கம்,

“மீனாக்குட்டி உனக்குமாடா வெளங்குல?” என்றான். ஆயாசமாக.

“சாரி மாமா” என்ற மீனாள், “எனக்கு அவள் லேசுல விடமாட்டான்னு தோணுது” என்றாள்.

ஆனால் மீனாள் சொல்லியதற்கு எதிராக, வீரனோடு சிரித்தபடி வந்த அங்கை…

“சாரி மாமா சின்னப்புள்ளத்தனமா நெறையவே பேசிபுட்டேன். மனசுல வச்சிக்காத. கஷ்டப்படுத்திட்டனாக்கும். மன்னிச்சிக்க” என்றிருந்தாள்.

அங்கை காதலை உணர்த்த அழுகையோடு மன்றாடிய நொடி வேண்டாமென மறுத்தவனின் மனம், அவளின் இப்பேச்சில் ஆட்டம் கண்டது.

அதனை லிங்கம் உணரவில்லை. உணர்ந்துகொள்ள வலி சுமக்க வேண்டுமோ. காதலை வலி கொண்டுதான் புரிந்துகொள்ள வேண்டுமென்றிருந்தால் லிங்கம் மட்டும் விதிவிலக்காக அமைந்திடுவானா என்ன?

இப்போதைக்கு அங்கை தன் முடிவை மாற்றிக்கொண்டதே போதுமென நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“தேன்க்ஸ்’ண்ணே!” என்ற லிங்கம், வீரனை அணைத்து விடுவிக்க, பார்வையில் பொறாமையை காட்டாது இயல்பாக பார்த்து நின்றாள் அங்கை.

கவனித்த லிங்கத்திற்கு ஆசுவாசமாக இருந்த அதே கணம், தொண்டை அடைப்பது போலவும் இருந்தது.

“சரி வூட்டுக்கு போங்க” என்று இரு பெண்களையும் வீரன் அனுப்பி வைத்திட,

“என்னண்ணே பேசுன?” என லிங்கம் வீரனிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் மீனாளும் அங்கையிடம் கேட்டிருந்தாள்.

“அப்படி அழுதுட்டு எப்புடி வேண்டாமின்னு சொன்ன? மாமா என்ன பேசுச்சு உன்கிட்ட?”

“நான் வேண்டாமின்னு சொல்லலையேக்கா! லிங்கு மாமா எனக்குத்தேன்” என்று மீனாளை அதிர்வுக்குள்ளாக்கிய அங்கை, “என்ன பேசுனாங்க… அதை நீயி வீரா மாமாகிட்டத்தான் கேக்கணும்” என்று சொல்லித் துள்ளிக் குதித்து ஓடினாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
35
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அப்படிங்கிறதை ஐ லவ் யூ னு மட்டுமில்ல நெஞ்சுக்குள்ள உட்கார்ந்துகிட்டு அவஸ்தையை கூட்டுற அப்படின்னும் சொல்லலாம் … ஹையோ நல்லா இருக்கு இவங்க காதல் எல்லாம் … லிங்கன் படுற அவஸ்தைய அழகா சொல்லியிருக்கீங்க … வீரன் லவ் தான் பெருசுன்னு பார்த்தா அங்கை எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டா … அன்புல காதல்ல ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்லன்னு காட்டிட்டே இருக்காங்க …

    1. Author

      மகிழ்ச்சி… மிக்க நன்றி சிஸ் ❤️

  2. அங்கை சிறு பெண்ணாக இருந்தாலும் அவளது காதல் ஆழமானதாக இருக்கின்றது.

    பாவம் அதனை முதிர்ச்சியாக வெளிப்படுத்த தெரியாமல் அவசரமாக கொட்டிவிட்டால்.

    மீனாள் வயசு வித்தியாசம் யோசிப்பாளோ? என்டு யோசிச்சு உடனே கணக்கு போட்டு பார்க்கிறியே வீரா! 🤣🤣 உனக்கு உன் கவலை.

    உன்னால நெருங்க முடியலேனா யாரும் அவள நெருங்க கூடாதா?

    அம்புட்டு நேரம் சலங்கை கட்டி ஆடிட்டு, அவ அழுகைய பார்த்ததும் அமைதியா தலை வணங்கிட்டியே லிங்கம்.

    அவ காதலை சொல்லும் பொழுது வேண்டாம்னு மறுத்துட்டு, அவ விலகி இருக்கப்போ அவஸ்தைபட போறான்.

    1. Author

      காதல் அப்படின்னாலே இப்படித்தானே, விலகினா நெருங்கும். நெருங்கினா விலகும் 🤣🤣🤣

  3. சிலிர்க்க வைக்கும் பாசப் பிணைப்புகள்…. அழகா இருக்கு….

    1. Author

      நன்றி அக்கா ❤️❤️🫂