Loading

    “என்னடா சொல்ற பேமிலி பிரச்சனையா? அதுக்காக உன்னை எதுக்கு ஊருக்கு கூப்பிடறாங்க?”

   “ எங்க அப்பா கூட பிறந்ததுக எல்லாமே அரைக்கிறுக்கனுங்க, ஆன்னா வூன்னா கையை நீட்டறது தான், அதுகளுக்கு வேலையே.

    இப்ப என்ன பிரச்சனையை இழுத்து விட்டிருக்குங்களோ தெரியல மாலு,  விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிடுச்சு போல, ஊருக்கு போய் அதை சால்வ் பண்ணிட்டு, ரெண்டு நாள்ல உடனே இங்க திரும்ப வந்திடறேன்.

    சாரி உதய், இப்போ ஆபீஸ்ல வொர்க் கொஞ்சம், ஜாஸ்தியா இருக்குன்னு தெரியும்.

  புது ப்ராஜெக்ட் எதுவும் இல்லையே அது வரைக்கும் சந்தோசம். நம்ம ரெகுலர் ஒர்க்ஸ் மட்டும் பார்த்துட்டு இருங்க, ரெண்டு நாள்ல நான் சீக்கிரமா வந்துடறேன்.”

   நிலா தற்போது ஈஸ்வரின் ப்ராஜெக்ட்டை பற்றி, சுகந்தனிடம்  வெளிப்படுத்தலாம் என்று தான், நினைத்துக் கொண்டு ஆபீஸுக்கு வந்திருந்தாள்.

  ஆனால் ஆபீஸ் வந்ததும் அவன் இப்படி ஒன்றைக் கூற, அமைதியாக இருந்தவள், அவன் பிரச்சனைகளை முடித்து விட்டு ஊருக்கு வந்ததும், அதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

   அப்போது மாலினி நிலாவிடம் காலையில் அவளுடைய வீட்டிற்கு அழைத்ததாகக் கூற,

   “ஆமாண்டா…அது அன்னைக்கு பார்த்த இல்ல, என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் தன்யா, அவ கூட கொஞ்சம் வெளியே போயிருந்தேன்.”

   புருவ முடிச்சோடு நிலாவைப் பார்த்தவள், குழப்பத்துடன் சுகந்தை திரும்பிப் பார்க்க, அவனுடைய முகத்திலும் ஒரு சிறு அதிர்வு. அதற்குள் கிளைன்ட்ஸ் வரத் தொடங்கி விட, நிலா அங்கு சென்று விட்டாள்.

    “என்ன சுகந்தா காலைல அந்த ரிதன்யா என்னன்னா, இவளை பார்க்கணும்னு சொல்லி, காலங்காத்தாலயே, இங்க வந்து உட்கார்ந்திருந்தா.

   இவ என்னடான்னா அவ கூட தான், வெளியே போயிருந்தேன்னு சொல்லறா?

   அம்மாக்கு போன் பண்ணா காலையில நேரத்துலயே, ஆபீஸ்ல ஏதோ மீட்டிங்ன்னு சொல்லி, கிளம்பி போயிட்டான்னு சொல்றாங்க. எல்லார் கிட்டயும் மாத்தி மாத்தி பொய் சொல்லிட்டு, இவ எங்க தான் போயிட்டு வந்திருப்பா? நம்மகிட்டயே மறைக்கிறான்னா, என்ன விஷயமா இருக்கும்னு தெரியலையே?

   இரு நான் இப்பவே இதைப் பத்தி அவகிட்ட கேட்டுட்டு வரேன்.”

    “வேண்டாம் மாலு, அப்படி சொல்லக் கூடிய விஷயமா இருந்திருந்தா, கண்டிப்பா உதய் நம்ம கிட்ட அதை வெளிப்படையாவே சொல்லி இருப்பா.

   ஏதோ விஷயம் இருக்கிறதனால தானே, நம்ம கிட்ட சொல்லல. எப்படியும் அவளா கண்டிப்பா நம்மகிட்ட சொல்லுவா, அதுவரைக்கும் அமைதியாவே இரு.

   நம்மளோட இனி அவ இருக்க போறதே கொஞ்ச நாள் தான், கூடிய சீக்கிரம் ஆதிரன் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு, வெளிநாட்டுல செட்டிலாக போறா, விடு பார்த்துக்கலாம்.”

   “இல்லடா அவளுக்கு ஏதாச்சும் பிரச்சனையோன்னு தான்…”

   “ அப்படி எதாவது பிரச்சனையா  இருந்தா, நம்மகிட்ட தானே அவ முதல்ல சொல்லுவா…

    சரி நான் ஊருக்கு கிளம்புறேன், அவகிட்ட திரும்ப இதை பத்தி எதுவும் பேசி, அவளை டென்ஷன் பண்ணாத.”

   தலையசைத்து அவனை அனுப்பி வைத்த மாலினியின் மனதில், இன்னும் உதயநிலாவின் வார்த்தைகள் ஓடிக் கொண்டே இருந்தன.
 
    தனது தோழி ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொள்வாளோ, என்ற பயமும் தோன்றியது. ஆனால் சுகந்தன் சொன்னபடி, வெளிப்படையாக அவளிடம் எதையும் கேட்காமல், தள்ளி நின்று அவளை கண்காணிக்கலாமே என்ற முடிவிற்கு வந்தாள் மாலினி.

   இங்கு ஒரு தோழி அவள் மீதான அக்கறையில் இருக்க, இன்னொருத்தியோ அவளது வாழ்வையே மாற்றப் போகும் நிகழ்வுக்கு, அடித்தளம் இட்டுக் கொண்டிருந்தாள்.

   தனது கையில் இருந்த மொபைலில்,  நிலாவும் ஈஸ்வரும் நெருக்கமாக அமர்ந்து, பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோக்களை, இமை விலகாது பார்த்துக் கொண்டிருந்தாள் ரிதன்யா.

     “மேடம் நீங்க சொன்னபடியே அவங்க ரெண்டு பேருக்கும் தெரியாம, அவங்க  நெருக்கமா இருக்குற மாதிரி ஆங்கிள்ல போட்டோஸ் எடுத்துட்டு வந்துட்டேன்.

    எப்படி மேடம், நீங்க கேட்ட மாதிரியே, உண்மையான காதலர்கள் மாதிரி இருக்கா?”

     “ம்ம் இருக்கு… ஆனா ஏன் இவ்வளவு தான் இருக்கு? எனக்கு இன்னும் நிறைய போட்டோஸ் தேவைப்படுது.”

     “மேடம் தள்ளி தள்ளி இருந்தவங்களை சிரிக்கும் போதும், கைக் குலுக்க பக்கம் வரும் போதும், ஒண்ணா இருக்குற மாதிரி ஆங்கிள்ல எடுக்கறது, அதோட அவங்களுக்கு தெரியாம அதை எடுக்கறது, எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா?

   கண்டிப்பா இந்த போட்டோஸை பார்த்தா, எல்லாரும் அவங்களை லவ்வர்ஸ்னு தான் சொல்லுவாங்க, நீங்க கவலைப்பட வேண்டாம்.”

     “சரி சரி, இந்தா உனக்கான பணம், மறுபடியும் உன்னோட ஹெல்ப் எனக்கு கண்டிப்பா தேவைப்படும். அப்ப கூப்பிடும் போது வந்து, இதே மாதிரி போட்டோஸ் எடுத்துக் கொடு.”

    பணக்கட்டுகளை பார்த்தவன் பல்லைக் காட்டியபடியே,

    “சரிங்க மேடம் கண்டிப்பா செஞ்சு கொடுத்துடறேன்.”

      தன் கையில் இருந்த நிலாவின் புகைப்படத்தின் மீது, தனது விரல்களால் கோலம் போட்டவளின் வாய் தானாக முனுமுனுத்தது.

    “என்ன பண்றது நிலா, உன் கல்யாணத்தை நிறுத்த எனக்கு வேற வழி தெரியல, அதுக்கு இதை  பயன்படுத்திக்க போறேன்.

        உன் கல்யாணத்துக்காக நீ என்னை இன்வைட் பண்ணி இருக்கக் கூடாது நிலா, அது மட்டும் நடக்காம இருந்திருந்தா, இப்போ நடக்கிற எந்த நிகழ்வுமே நடக்காம போயிருக்கும்.”

    அந்த போட்டோக்களை தனது இன்னொரு  மொபைலில் ஏற்றியவள் அதை உதயநிலாவின் வருங்கால கணவனான ஆதிரனின் மொபைலுக்கு அனுப்ப முடிவெடுத்தாள்.
  
    தனது மொபைலில் ஆதிரனின் நம்பரை தேட, எதிர்பாராமல் அவனுடைய வாட்ஸ்அப் ஓபனானது.

    பல வருடங்களுக்கு முன்பு அவள் பிளஸ் டூ படிக்கும் போது, கடைசியாக அவனுக்கு அனுப்பிய ஐ லவ் யூ என்ற மெசேஜ்க்கு பிறகு, அவன் இவளை பிளாக் செய்திருந்தான்.

   அந்த நினைவுகள் இவள் கண் முன்னே நிழலாட, இரு துளி கண்ணீர் திரண்டு வந்து, அவன் போட்டோ ஸ்டேட்டஸில் விழுந்து மின்னியது.

    ப்ளஸ் டூவில் நிலா எடுத்த அதே குரூப்பை, இவள் எடுத்திருந்தாலும் அதே ஊரில் கல்லூரிப் படிப்பை தொடராமல், வேறு ஊரில் உள்ள கல்லூரியில்  ரிதன்யா சேர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

   சிறுவயதில் இருந்தே நிலாவோடு நட்பையும், வளர வளர ஆதிரன் மீது காதலையும் ஏற்படுத்திக் கொண்ட ரிதன்யாவிற்கு, தெரிந்திருக்கவில்லை  நிலாவின் பெற்றோர், ஏற்கனவே ஆதிரனை தனது பெண்ணுக்கு மணவாளனாக, தேர்வு செய்து விட்டனர் என்று.

    பிளஸ் டூ படிக்கும் போது, முதன் முதலில் தனது காதலை அவனிடம் பகிர்ந்து கொள்ள, முதலில் அதிர்ச்சியானவன், பிறகு இது சாத்தியமில்லை என்று கூறி, தனக்கும் நிலாவிற்கும் உள்ள பந்தத்தை,  அவளுக்கு விரிவாக எடுத்துரைத்தான்.

    அதன் பிறகு ஏனோ அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் தான், தனது படிப்பைக் காரணமாக்கி, வேறு ஊருக்கு மாறி வந்து விட்டாள் ரிதன்யா.

     நிலா அலுவலகத்தில் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், ஈஸ்வரின் ப்ராஜெக்டை எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற சிந்தனை, அவள் மூளைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

     ஒருவேளை சுகந்தனால் இரண்டு நாட்களுக்குள் இங்கு வர முடியாமல் போனால்…? என்ன செய்வது?

     ஈஸ்வர் ஒரு பெரிய தொழிலதிபர், அவரிடம் வாக்கு கொடுத்து விட்டு, அதிலிருந்து பின் வாங்கவும் முடியாது. இதை பற்றி சுகந்தனிடம் இப்போது பேசவும் முடியாது, வேறு என்ன செய்யலாம், என்ற சிந்தனையில் இருந்தவளுக்கு  தலை வலிக்க ஆரம்பிக்க சத்தமாகவே,

   “ஐயோ ஈஸ்வர்…”

       என்று தன்னை மறந்து கத்தி விட்டாள்.

   அதே நேரம் கதவை திறந்து கொண்டு, நிலாவை பார்க்க ஆவலாக  உள்ளே வந்த ஆதிரன், அவளது கண்களை மூடப் போகும் நேரத்தில், அவள் திடீரென்று இப்படி கத்தவும், அவளது செய்கையில் வித்தியாசமாக அவளை பார்த்தவன்,

   “என்னாச்சு நிலா? நான் அவ்வளவு தூரத்துல இருந்து, உன்னை பார்க்க ஆசையா இங்க வந்திருக்கேன், நீ என்னை கவனிக்காம, யாரோட பேரையோ சொல்லி இப்படி கத்திக் கிட்டு இருக்க?”

     “அ…அத்தான் நீங்க எப்ப வந்தீங்க?”

      “  நீ தலையை பிடிச்சு கிட்டு கத்தும் போதே நான் வந்துட்டேன், எதுவும் பிரச்சனையா நிலா?”

    “அதெல்லாம் ஒன்னும் இல்லத்தான், கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன் அவ்வளவு தான். உங்க ஜர்னி எப்படி இருந்துச்சு, பார்க்கவே டையர்டா இருக்கீங்க, ஒரு போன் பண்ணி இருந்தா நானே வீட்டுக்கு வந்திருப்பேனே?”

     “நான் அங்கிருந்து கிளம்பும் போது போட்ட போனுக்கே, உன்கிட்ட இருந்து இன்னும் ஆன்சர் வரலீங்க மேடம்…”

     “ அச்சோ சாரி அத்தான்…கொஞ்சம் வொர்க் பிஸி… சாரி”

     “சரி விடு நிலா என்ன அவ்வளவு  டென்ஷன்?”

     “அது…அது ஒன்னுமில்ல அத்தான், இது ஆபீஸ் மேட்டர் தான், ஒரு கப்பிளுக்கு மேரேஜ் முடிச்சு வைக்கணும் அதை பத்தி யோசனையில் இருந்தேன் அவ்வளவு தான்.”

     “மேடம் ரொம்ப வொர்க் பண்றீங்க போல, காலையில கூட சீக்கிரமா கிளம்பிட்டதா அத்தை சொன்னாங்க.

   அவங்க சொன்ன போது எனக்கு நீ  காலேஜ் படிக்கும் போது, ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொல்லிட்டு, காலேஜ் போகாம கட்டடிச்சிட்டு வெளியே சுத்த போவயே, அது தான் நியாபகம் வந்துச்சு. அதே மாதிரி தான் இப்பவும் சுத்திகிட்டு இருக்கியா?”

    “ஐயோ என்ன அத்தான் இப்படி சொல்லிட்டீங்க, அப்ப நான் சின்ன பிள்ளை. அதோட அறியாத வயசு வேற, ஆனா இப்ப அப்படி இல்லையே.

   அதோட சொந்த தொழில்ல இப்படி கட் அடிச்சா, எங்க ஆபீஷையே மொத்தமா இழுத்து மூடிகிட்டு, போக வேண்டியது தான்.”

   “ அப்போ இன்னைக்கு அத்தைகிட்ட சொன்னபடி, நீ நேரா ஆஃபீஸ்க்கு தான் வந்தே இல்லையா?”

   “ஆமா அத்தான் காலையில நேரத்துலயே இங்க வந்து, இரண்டு மூணு ப்ராஜெக்ட் முடிக்க வேண்டி  இருந்தது. இப்ப எல்லாம் பொண்ணு  மாப்பிள்ளையோட போட்டோ டீடெயில்ஸ் பார்க்கறதுக்கு கூட, நல்ல நேரம் பார்க்கறாங்க என்ன பண்றது.”

  அதற்குள் தொலைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேச தொடங்கியிருந்தாள் நிலா.

   ஆதிரனின் கண்களில் கூர்மை கூடியது, அவன் மனதிற்குள்ளேயே பேசத் தொடங்கினான்.

    ஆதிரன் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பும் போதே புதிய நம்பரில் இருந்து, நிலா இன்னொருவனோடு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கும், போட்டோ அவனுக்கு கிடைத்து விட்டது. யாரோ வேலை இல்லாமல் இவ்வாறு செய்வதாக நினைத்தவன், நிலாவை சந்தேகிக்கவில்லை.

   வீட்டிற்கு வந்ததும் அவனது அத்தை  காஞ்சனா, நிலா காலையில் எதுவுமே உண்ணாமல் சென்று விட்டதாக கூற, மனது பொறுக்காமல் அவளை தேடி அவளது ஆபீசுக்கு வந்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அடிப்பாவி இவ லாம் ஒரு ஃப்ரெண்ட் டா … அவ கல்யாணத்தை நிறுத்த வேறு வழியே இல்லையா … அவளை போய் பிரச்சனையில மாட்டி விட பார்க்குற … +2 ல வந்தது ஒரு லவ்வு … அதுக்கு என்னெல்லாம் பண்ற …