
அத்தியாயம் 18
தன் முடிவை தான் பெற்ற அருந்தவப்புதல்வர்களிடம் வடிவேலு சொல்ல, அவர்கள் பெரிதாக எதிர்ப்புக் காட்டவில்லை.
நால்வருக்கும் ஒரே மேடையில் நிச்சயம் என்று சொல்லும் போது கூட தகப்பனின் ஆசைக்காக சரியென்று ஒப்புக்கொண்டவர்கள் இதற்காக நிராசை அடையப்போகிறார்கள்.
ஆனால் மணப்பெண்களிடம் சொல்லும் போது லீலாவைத் தவிர மற்ற மூன்று பேருக்கும் முகம் சுருங்கிவிட்டது. அக்காவுடைய நிச்சயத்தை முதலில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது கடைசியாகத் தான் நடக்கும் என்பதில் வருத்தம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
நிச்சயமனையில் தர்மாவின் எதிரே அமர்வதற்காக தேவகியை அழைக்க, மற்ற பெண்கள் மூவருமாக சந்தோஷமாக அவளை அழைத்து வந்தனர். நீல நிறப் பட்டுடுத்தி, அதற்கு ஏற்ப அணிகலன்கள் அணிந்து அலங்காரத் தேராய் பூமிக்கு வலிக்காமல் பொத்திப் பொத்திப் பாதம் வைத்து நடந்து வந்தாள் தேவகி.
“ஏய் அங்க போய் இப்படி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்காத கொஞ்சம் நிமிர்ந்து அவரையும் பாரு என்ன?” ஊர்மி கிண்டலை ஆரம்பித்து வைக்க, “போக்கா” அழகாய் வெட்கப்பட்டாள் அவள்.
“இப்பவே இவ்வளவு வெட்கமா, கொஞ்சம் மிச்சம் வைச்சிக்க அப்புறம் தேவைப்படும்.” ஊர்மி சொல்ல இன்னும் இன்னும் வெட்கப்பட்டாள் தேவகி.
அக்காவுக்கு முன்னால் நிச்சயம் என்ற அந்தச் சின்ன வருத்தத்தையும் தாண்டி உள்ளம் நிறைந்த பூரிப்புடன், தன் புடவைக் கலருக்கு இணையாக நீல நிற சட்டை மற்றும் பட்டு வேஷ்டியில் ஆணழகனாய் காட்சியளித்த தர்மாவின் அழகில் சொக்கிப்போய், அதைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு அவனுக்கு எதிரே அமர்ந்தாள் பெண்ணவள்.
நிச்சயத் தாம்பூலம் மாற்றிக்கொள்ள வடிவேலுவுக்கு எதிரே பெண் வீட்டு சார்பாக யாரை அமர வைப்பது என்று ஒருவர் கேட்கவும் சின்னதாய் சலசலப்பு. அதுவரை அங்கு வந்திருந்த பலருக்கு மணப்பெண்கள் தாய், தந்தை இல்லாதவர்கள் என்று தெரியாது. அது இப்போது பேசுபொருளாக சுதாரித்தார் வடிவேலு.
எப்படியும் இப்படி ஒரு கேள்வி வரும் என்று கணித்திருந்த வடிவேலு, தன் உடைக்கு இணையாக உடை அணிந்து தன்னைப் போலவே நிச்சய வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அரசுவை பெண்களின் அண்ணன் ஸ்தானத்தில் அமர வைக்க நினைத்திருந்தார். அப்போதும் கூட திருமணம் ஆகாதவன் என்று யாரும் குறை சொல்வார்கள் என்பது தெரிந்திருந்தாலும், அரசுவைத் தாண்டி வேறு யாரையும் தன் குடும்பத்தில் ஒருவராகச் சேர்த்துக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை.
“நான் இருக்கும் போது யாருமே இல்லாத அநாதை மாதிரி என் தங்கச்சி ஏன் ஒத்தையில் நிக்கணும். என் தங்கச்சிக்கான நிச்சயத் தாம்பூலத்தை நான் தான் வாங்குவேன்.” மனதோடு உறுதியாய் சொல்லிக்கொண்ட லீலா யாரும் எதிர்பாராமல் வடிவேலுவுக்கு எதிரே பெண் வீட்டின் சார்பாக தங்கையின் அருகே அமர்ந்தாள்.
“லீலா என்னம்மா?” வந்திருந்த விருந்தினர்களைக் காட்டியும் தான் பெற்ற மைந்தர்களை நினைத்து தான் அதிகம் தடுமாறினார் வடிவேலு.
“எங்க நாலு பேருக்கும் அம்மா, அப்பா இல்லை. அதனால் ஒருத்தர் மத்தவருக்காக கடைசி வரைக்கும் இருக்கணும் னு ஆசைப்படுறேன். இந்த வீட்டுக்கு மருமகள்களா வரப்போற என் தங்கச்சிங்களுக்கு அக்காவா உங்ககிட்ட இருந்து நிச்சயத் தாம்பூலத்தை நானே வாங்கிக்கிறேனே மாமா. எனக்காக என் தங்கச்சிங்க வாங்கிப்பாங்க.” லீலா சொல்லவும் மேடையில் அமர்ந்திருந்த தேவகியின் கண்கள் கலங்கியது.
“தேவகி எல்லாரும் பார்க்கிறாங்க, கண்ட்ரோல் யுவர்செல்ப். அப்பா அம்மா இல்லைன்னா என்ன. இனி நான் இருக்கேன் உங்களுக்கு.” மேடையைச் சுற்றியிருந்த வெகுசிலருக்கு முன்னிலையில் சமாதானம் சொன்ன தர்மா, எட்டி அவள் கரம் பிடித்து அதில் ஒரு அழுத்தம் கொடுக்க, கலங்கிய கண்களுடனே அவனை நேருக்கு நேராகப் பார்த்துப் புன்னகைத்தாள் தேவகி.
வடிவேலு தன் பிள்ளைகளை ஒருமுறை பார்த்துவிட்டு, என்ன வந்தாலும் சமாளிக்கலாம் என்னும் தைரியத்தில் முழு மனதாய் லீலாவிடம் தாம்பூலத்தைக் கொடுக்க, பூரிப்புடன் வாங்கிக்கொண்டாள் அவள்.
மணமாலை கூட ஜோடிகளின் உடை நிறத்திற்கு ஏற்ப பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருந்தான் அரசு. அதைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்த லீலா தன் கரத்தால் மாலை எடுத்து தங்கையிடம் கொடுத்தாள்.
மாலை மாற்றி, நீலக்கல் பதித்த மோதிரத்தை ஒருவருக்கு ஒருவர் போட்டுவிட தேவகி, தர்மாவின் நிச்சயம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மன மகிழ்வுடன் வடிவேலுவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் ராதா இல்லத்தின் கடைக்குட்டித் தம்பதிகள்.
அடுத்து நாகாவை அழைத்து வந்து அமர வைத்தான் அரசு. “நான் என்ன பொண்ணாடா, எனக்குப் போகத் தெரியாதா?” கடுகடுத்துக்கொண்டு தான் வந்த மனையில் அமர்ந்தான் பச்சை நிற சட்டையும், பட்டு வேஷ்டியும் அணிந்திருந்த நாகராஜ்.
அவனுக்கு இணையாகப் பச்சை வண்ணப் பட்டுடுத்தி அழகில் மதுரை மீனாட்சியைப் போல் ஜொலித்த ஊர்மியை தேவகி, ருக்கு இருவரும் மனையில் அமர வைத்தனர்.
முந்தைய ஜோடியிடம் இருந்த பூரிப்பு இருவரில் ஒருவரின் முகத்திலும் இல்லை. “நான் அத்தனை சொல்லியும் இப்படிச் சீவிச் சிங்காரிச்சுக்கிட்டு வந்து இருக்கல்ல.” என அவனும், “உன்னை மாதிரி தான் நானும், உன்னை விரும்பி ஒன்னும் இங்க உட்கார்ந்து இருக்கல.” என அவளும் தங்களுக்குள் நினைத்துக் கொண்டனர். யாருக்கோ நிச்சயம் நடக்கிறது என்பது போல் தான் இருந்தது அவர்கள் அமர்ந்திருந்த தோற்றமும், அவர்களின் முகபாவனையும்.
வடிவேலுவும், லீலாவும் மீண்டுமொரு முறை நிச்சயத் தாம்பூலத்தை மாற்றிக்கொள்ள, கடவுளை வேண்டிக்கொண்டு கொடுக்கப்பட்ட மணமாலைகள், ஒருவர் கழுத்தில் இன்னொருவரால் தூக்கி எறியப்பட்டது போல் மாற்றப்பட்டது.
மோதிரங்கள் நீட்டப்பட, “அம்மணிக்கு மரகதக்கல் பதிச்ச மோதிரம் ஒன்னு தான் கேடு.” என்று மனதிற்குள் நினைத்தவனாய், “ஏம்மா ஆளு தான் பழைய பஞ்சாங்கமா இருக்க சரி. பேரு கூடவா ட்ரண்டுக்கு ஏத்த மாதிரி மாத்திக்க கூடாது, ஊர்மிளான்னு ஒரு பேரா.” அவளுக்கு மட்டும் கேட்கும் படிச் சொல்லிக் கொண்டே மோதிரம் அணிவித்தான். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவள் தான் இனித் தன் மனைவி என்பதில் அவன் மனம் நிலைப்பட்டு விட்டது.
“என் பெயரைப் பத்தி எனக்குத் தெரியல. ஆனா உங்களுக்கு சரியா தான் பெயர் வைச்சிருக்காரு மாமா, உடம்பு முழுக்க விஷம்.” எனத் தன் நாக்கின் விஷத்தைக் காண்பித்தாள் ஊர்மிளா. நடந்தது ஒரு நிச்சயதார்த்தம் இதுக்கு ஆசிர்வாதம் ஒன்னு தான் கேடு என்று நினைத்துக்கொண்டே வடிவேலுவின் காலில் விழுந்தனர் ஊர்மி, நாகா தம்பதியர்.
அடுத்ததாக தெய்வா, ருக்கு முறை வர. “போதும் டா மனையில் இருந்து எழுந்திரு.” எனத் தம்பியை எழுப்பி விட்டு வடிவேலுவின் அருகில் அமர்ந்தான் தெய்வா.
ருக்குவை ஊர்மிளாவும், தேவகியும் அழைத்து வர, இளம்ரோஜா வண்ணப் புடவையில் புதிதாய் பூத்த ரோஜாமலராய் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவளைப் பார்த்து கை ஆட்டினான், அவளுக்குத் தோதான நிறத்தில் உடையணிந்து நிச்சயமனையில் காத்திருந்த மணமகன்.
அவன் கரத்தை மடக்கிப் பிடித்து, “போலீஸ்கார் கொஞ்சம் பொறுமை.” என்று நக்கலடித்துச் சென்றான் அரசு.
இளரோஜா நிறத்தில் வைரக்கல் பதிக்கப்பட்ட மோதிரம் மாற்றிய பின்னர், “நிச்சயம் முடிஞ்சிட்டா பாதிப் பொண்டாட்டின்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இது நிச்சய மோதிரம் இல்ல, கல்யாண மோதிரம். இந்த நிமிஷத்தில் இருந்து நீங்க முழுசா எனக்கு சொந்தமானவங்களா மாறிட்டீங்க ருக்கு.” சிரிப்போடு எழுந்தவன், அவள் எழுந்திரிக்க கரம் கொடுத்து வடிவேலுவிடம் ஆசிர்வாதம் வாங்கும் வரை பிடித்த அவள் கரத்தை விடவில்லை.
“அம்மாடி லீலா இப்ப நீ நிச்சயமனைக்கு வாம்மா.” வடிவேலு அழைக்கவும், தன் கடமையை உணர்ந்து பட்டென்று தெய்வாவின் அருகே இருந்து பிரிந்து, தன்னுடைய தங்கைகளின் அருகே சென்று நின்றுகொண்டாள் ருக்கு. அது தெய்வாவிற்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது.
ருக்கு, ஊர்மி, தேவகி மூவருமாக சேர்ந்து அரக்கு நிறப் பட்டுப்புடவை அணிந்து, புடவையின் பெரிய பார்டர் நடக்கும் போது அங்கும் இங்கும் அசைந்தாட, நெல்லையைக் காக்கும் காந்திமதி அம்மன் போல் வைர மூக்குத்தி ஜொலிக்க அலங்கார தேவதையாய் இருந்தவளை அழைத்து வந்து, செல்வா அருகே அமர வைத்தனர்.
தன்னுடைய அம்மா, அப்பாவே தன்னை அழைத்துச் செல்வது போல் தோன்றவும் உணர்வுகள் ஊற்றெடுத்தது லீலாவிற்கு. கண்கள் கலங்க, யாரும் அறியாதவாறு அதைத் துடைத்துக் கொண்டாள்.
தன் பரம்பரையின் பாரம்பரியச் சொத்தான வைர மூக்குத்தியை லீலாவுக்குப் பரிசளித்திருந்தார் வடிவேல். அது அந்த வீட்டின் மூத்த மருமகள்களுக்குக் காலம் காலமாகக் கொடுக்கப்படுவது.
தங்கைகளுக்கு இல்லாமல் தனக்கு மட்டுமா என அவள் தயங்க, “இந்த வீட்டோட மூத்த மருமக நீ. அந்த வகையில் உனக்குன்னு பல கடமைகளும், சில வெகுமதிகளும் கிடைக்கத்தான் செய்யும். அதை மறுக்கக் கூடாது.” வடிவேலு அழுத்தம் திருத்தமாகச் சொல்லவும் அதை ஏற்றுக்கொண்டாள். எத்தனை நகைகள் வந்தாலும், பாரம்பரிய நகைகள் தனி கௌரவம் ஒரு பெண்ணிற்கு. அது தங்கள் அக்காவிற்குக் கிடைத்ததில் தங்கைகளுக்கு ஆனந்தம் தான்.
“ருக்கு லீலாவுக்கு நிச்சயத் தாம்பூலத்தை நீ வாங்கிக்கோ மா.” வடிவேலு சொல்ல, “அக்கா தனியா எங்க மூணு பேருக்கும் செஞ்சதை நாங்க மூணு பேரா சேர்ந்து திரும்ப செஞ்சா கூட அது முழுமையடையாது மாமா. அதனால நாங்க மூணு பேருமா சேர்ந்து வாங்கிக்கிறோம்.” ருக்கு சொல்ல வடிவேலுவும் சம்மதித்தார். ஆனால் தன் பிள்ளைகளை நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கவலையாகவே இருந்தது.
“நாலு பேரும் எத்தனை திறமையா நடிக்கிறாங்க. என் கூடப்பிறந்த விளக்கெண்ணைங்க ஏன் இப்படி மண்ணாங்கட்டியாகிப் போனாங்கன்னு தெரியலையே.” என்பதாய் புலம்ப மட்டும் தான் முடிந்தது நாகாவினால்.
மற்ற மூவரையும் கூட சமாளித்துவிடலாம். ஆனால் தெய்வாவைச் சமாளிப்பது மிகச்சிரமம் என வடிவேல் பயம்கொள்ள, அவனோ ருக்கு கையால் தன் கரம் ஏறிய மோதிரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் என்ன ஆனால் எனக்கென்ன என்று தனிஉலகில் சஞ்சரித்திருந்தான்.
லீலாவின் புடவைக்கு இணையாக சட்டையும், பட்டு வேஷ்டியும் அணிந்து நிச்சயமனையில் அமர்ந்திருந்த செல்வாவின் முகத்தில் ஏதோ குழப்ப ரேகைகள் ஓடியது.
லீலாவின் கழுத்தில் மாலையிட்ட அந்த நொடி மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தையும் விலக்கிவிட்டு, முழுமனதாகச் சிரித்தவன் அதே நிறைவுடன் அவளுக்கு நிச்சய மோதிரத்தை மாட்டிவிட்டான். ருக்கு, ஊர்மி, தேவகி மனம் நிறைந்த புன்னகையுடன் இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஊர்மி அருகே நின்று கொண்டிருந்த நாகா யாரும் அறியாமல் அவள் தலையில் கொட்டி, “சந்தோஷம்” என நக்கல் அடித்தான்.
லீலாவின் முறை வந்து அவள் மோதிரம் போட எத்தணிக்க, செல்வா தன் மோதிரவிரலுக்குப் பதிலாக நடுவிரலைக் காட்டினான். சின்னதாய் யோசனை வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் மோதிரத்தைப் போட முயன்றாள் லீலா. ஆனால் மோதிரம் நுழைவேனா எனச் சாகசம் செய்தது. அழுத்திப் போட்டால் வலிக்குமே என்று தடுமாற்றத்துடன் இருந்தாள் லீலா.
“செல்வா மோதிர விரலைக் காட்டு டா.” வடிவேலு சொல்ல அவனும் நீட்டினான். ஆனால் அங்கே ஏற்கனவே இன்னொரு மோதிரம் இருந்தது.
“இந்த மோதிரத்தைக் கழட்டி அந்த கையில் போட்டுக்கோ.” என்க, பெருமூச்சுவிட்டபடி அதைக் கழட்டியவன், “இனி இந்த மோதிரம் தேவை இல்லைப்பா.” என்று கீழே போட்டுவிட்டு லீலாவின் கையால் நிச்சய மோதிரத்தை வாங்கிக் கொண்டான்.
நான்கு நிச்சயமும் நல்லபடியாக நடந்து முடிந்ததில் வடிவேலுவுக்கு மனம் நிறைந்து போனது. இதே போல் திருமணமும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும். அதன் பின்னர் தன் பிள்ளைகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு குலதெய்வக் கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுவதாய் வேண்டிக்கொண்டார்.
“அக்கா எங்களுக்கு நிச்சயத்தட்டை நீ வாங்கினது ரொம்பச் சந்தோஷமா இருந்தது. அப்பா, அம்மாவே கூட இருந்து எங்களோட நிச்சயத்தை நடத்தி வைச்ச மாதிரி நிறைவா இருந்துச்சு.” ருக்கு சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
எப்பொழுதும் போல இரவு உணவை இவர்களின் அறைக்கே கொண்டு வந்த வேலைக்கார பாட்டி ஒருவர், வடிவேலு சொன்னது போல் பெண்கள் நால்வரையும் ஒன்றாக நிற்க வைத்து, உப்பு மிளகாய் கொண்டு திருஷ்டி கழித்தார்.
இரவில் ஒரே நேரத்தில் லீலா, தேவகி, ருக்கு மூவரின் அலைபேசியும் ஓசையெழுப்பியது. அதில் தெரிந்த தங்களுடைய வருங்காலக் கணவர்களின் பெயர்களைப் பார்த்தவுடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
ஊர்மிக்கு மட்டும் சின்ன நெருடல் இருந்தது. வடிவேலு அத்தனை சொல்லியும் நாகா என்பவன் ஊர்மிக்கு இன்னமும் அலைபேசி வாங்கித் தந்திருக்கவில்லை. வடிவேலுவிடம் சொன்னாலோ இல்லை கேட்டாலோ சில நிமிடங்களில் கிடைக்கும் தான். லீலாவிடம் கேட்டால் உடன் வாங்கிக்கொடுப்பாள்.
ஆனால் முதல் பரிசு என்பது கட்டிக்கொள்ள இருப்பவனிடம் இருந்து அல்லவா கிடைக்க வேண்டும். சண்டையோ சச்சரவோ அது தங்களுக்குள் இருக்க வேண்டும். மற்றவர்கள் முன்னர் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நினைப்பவள் ஊர்மி. நாகா எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் அவளுக்கு வருத்தமே.
காரணம் கேட்ட தன் சகோதரிகளிடம், நீதிமன்றம் பக்கம் போய் பல மாதங்கள் ஆன அந்த வக்கீல் தன் சொந்தப் பணத்தில் விலை உயர்ந்த அலைபேசி வாங்கித் தர கொஞ்சம் கால தாமதம் ஆகுமென்று சொல்லி இருப்பதாக சொல்லி வைத்திருந்தாள்.
தன்னவனாக வரப் போகிறவனிடம் இருந்து சரியான அன்பு கிடைக்கவில்லையே என்கிற வருத்தமா இல்லை தங்களுக்கு இடையே இருக்கும் ஊடலை மற்றவர்கள் கண்டு பிடித்துவார்களோ என்னும் பயமோ எதுவோ சேர்ந்து அவளை மொட்டை மாடிக்கு அழைத்து வந்தது.
விளக்கு வெளிச்சத்தில் தன் விரலில் கிடந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர்மி. வாழ்க்கை மாறிவிடும் என்பதில் நம்பிக்கை இருந்தது. ஆனால் மாறுவதற்குள் பலபாடு பட வேண்டும் என்பதை நினைக்கையில் தான் வருத்தம் அதிகமானது.
“ஹாய் ருக்கு என்ன பண்றீங்க.” ஆசையாய் கேட்டான் தெய்வா.
“இராத்திரி நேரத்தில் என்ன கேள்வி இது. சாப்பிட்டு முடிச்சாச்சு, இனிமே தூங்க வேண்டியது தான்.” என்றவளின் பதிலில் தெய்வாவைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் அனைத்தும் பறந்து போயின.
“உங்ககிட்ட இருந்து ரொமான்ஸ் எதிர் பார்த்தேன் இல்ல என்னைச் சொல்லணும். நீங்க தான் பால்வாடிக்கு போற பச்சைக் குழந்தையாச்சே.” கிண்டலடித்தான் நாயகன்.
“நீங்க என்னை ரொம்பக் கிண்டல் பண்றீங்க.” சிணுங்கினாள் நாயகி.
“என் நிலைமை அப்படிங்க. லவ்வர்ஸ்குள்ள பேசிக்கிறதுக்கு எத்தனையோ இருக்கு, பேசிக்கிறதுக்குன்னு ஒரு முறையும் இருக்கு. நான் தான் உங்களுக்கு அதைக் கத்துக்கொடுக்கணும் போல. எப்ப நீங்க எல்லாத்தையும் கத்துக்கிட்டு, அதை நம்ம இம்ப்ளிமெண்ட் பண்ணி, விடிஞ்சிடும்.” சொன்னவன் பேச்சில் அத்தனை சலிப்பு.
“நாம லவ்வர்ஸ்ஸா நல்ல காமெடி.” அவன் சொன்ன அத்தனை விஷயத்தில் இது ஒன்று தான் அவள் காதில் விழுந்தது போலும்.
“நீங்க என்னை லவ் பண்ணாம இருக்கலாம். ஆனா நான் உங்களை லவ் பண்றேன். அதுவும் உங்களைப் பார்த்த அந்த நொடியில் இருந்து.” கோபம் வந்தது வளர்ந்தவனுக்கு.
“நான் உங்களை ஒன்னு கேட்கலாமா?” மோதிரம் விரல் ஏறியதும் தைரியம் வந்திருந்தது ருக்குவிற்கு.
“இப்படி ஒரு கேள்வியைக் கேட்காமலே, உரிமையா அதிகாரமா நீங்க கேட்டு இருக்கலாம். நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்.” தன்னுடைய தேவை அவள் தன்னிடம் காட்டும் உரிமை என்பதை வெளிப்படையாகவே சொன்னான் தெய்வா. அவளுக்கு அது புரியவேண்டுமே.
“என்னை ஏன் உங்களுக்கு பிடிச்சிருக்கு.” சம்பந்தம் இல்லாத கேள்வி தான். ஆனால் அவளைப் பொறுத்தவரை இது தான் முக்கியமானகேள்வி.
“என்னங்க கேள்வி இது. நம்ம அம்மா, அப்பாவை ஏன் பிடிச்சிருக்குன்னு யாராவது கேட்டா நாம அவங்களைப் பார்த்து சிரிக்க மாட்டோம். அதே மாதிரி இப்ப சிரிக்கத் தோணுது எனக்கு.
சில பேர் மேல காரணமே இல்லாம அன்பு வைக்கத் தோணும். அப்படி ஒரு அன்பு தான் நான் உங்க மேல வைச்சிருக்கிறது.” தெய்வா சொல்ல சொல்ல பாகாய் உருகினாள் ருக்கு.
“தேவகி ஆர் யூ ஆல் ரைட்.” எடுத்ததும் இப்படித்தான் கேட்கத் தோன்றியது தர்மாவிற்கு.
“எனக்கென்னங்க நான் நல்லா தான் இருக்கேன்.”
“அப்பாடா ஒரு நாலு வார்த்தை சேர்ந்தாப்புல பேசிட்டீங்க.” அவன் சிரிக்க,
“என்னங்க கிண்டலா”
“ச்சே ச்சே இல்லைங்க, இதுவரைக்கும் வார்த்தையை எண்ணி எண்ணி பேசிக்கிட்டு இருந்த நீங்க திடீர்னு இவ்வளவு லென்த்தா பேசினீங்களா அதான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிட்டேன். ஆமா நிச்சயத்தப்ப ஏன் அவ்வளவு எமோஷனல் ஆனீங்க.”
“அப்பா, அம்மா ஞாபகம் வந்திடுச்சு அதனால் தான்”
“மறுபடியும் உங்க அப்பா அம்மாவை ஞாபகப்படுத்திட்டேனா.” தயக்கமாகக் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, நாம வருத்தப்படுவதால் நம்மளை விட்டுப் போனவங்க திரும்பியா வரப் போறாங்க.”
“இதுதாங்க உண்மை. இதைப் புரிஞ்சுக்காம தான் நிறைய பேர் வருத்தத்துல இருக்காங்க. சரி அதையெல்லாம் விடுங்க உங்களுக்கு ஏதாவது ஆசைகள் இருக்கா?” ஆசையாய் கேட்டான் தர்மா.
“ஆசைகளா, என்ன கேட்கிறீங்க எனக்குப் புரியல?” இந்தப்பக்கம் தேவகி சொல்ல, அந்தப்பக்கம் ருக்குவும் தெய்வாவிற்கு அதே பதிலைத் தான் சொன்னாள்.
“இல்லைங்க இந்த ஊருக்குப் போகணும், இந்த இடங்களை எல்லாம் சுத்திப் பார்க்கணும் இந்த மாதிரி ஏதாவது ஆசைகள். எந்த இடமா இருந்தாலும் சொல்லுங்க. கல்யாணம் முடிஞ்சதும் நாம அங்கெல்லாம் போகலாம்.” என்றனர் தெய்வா, தர்மா இருவரும்.
“அதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்.” என்று பெண்கள் இருவரும் சொல்ல ஆண்களுக்கு புஸ்ஸென்று ஆனது.
“லீலா” செல்வா அழைக்க, “சொல்லுங்க” மென்மையாகப் பதில் சொன்னாள்.
தன் தங்கைகளுக்காக நிச்சயத் தாம்பூலத்தை வாங்கும் போது அவன் முகம் போன போக்கை வைத்தே, கட்டாயம் அதைப் பற்றிப்பேசுவான் என்று அவள் நினைத்திருக்க அதே போல் தான் நடந்தது.
“எதுக்காக இன்னைக்கு அந்தப் பொண்ணுங்களுக்காக நீங்க நிச்சயத் தாம்பூலத்தை மாத்தினீங்க.” எளிதில் புரிந்து கொள்ள முடியாத உணர்வுள்ள குரலில் அவன் கேட்க, “என்னைக்காவது என் பசங்களைச் சமாளிக்க முடியாத நிலை வந்தா, தயவு தாட்சண்யமே பார்க்காம என்னை உள்ளே இழுத்திடுங்க. உடனே பசங்க அமைதியாகிடுவாங்க.” என்கிற வடிவேலின் கூற்று நினைவு வர அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.
“நாங்க நாலு பேரும் ஒரே வீட்டு மருமகங்க. அதனால் அக்கா, தங்கையா ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து கடைசிவரைக்கும் ஒத்துமையா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கணும் னு மாமா தாங்க சொன்னார்.
எங்க நாலு பேருக்கும் தான் யாரும் இல்லையே. அதனால் மாமா சொன்னபடி, நாங்க நாலுபேராவது ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா இருக்கலாம் னு தான் செஞ்சேன். நான் செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களா?” தடுமாற்றத்துடன் கேட்டாள்.
பொய் சொல்வது மட்டும் இல்லை உண்மையை மறைப்பதும் தவறு தானே. உண்மையை மறைப்பது பாதிப் பொய் சொல்வதற்குச் சமம் என்று தர்மராஜா சொல்லி இருக்கிறாரே என்கிற எண்ணம் எல்லாம் அவளுள் வராமல் இல்லை.
ஆனால், இந்த முறை தங்கைகளின் வாழ்க்கை என்பதையும் தாண்டி, உண்மையைச் சொன்னால் செல்வாவை இழக்க நேரிடும் என்பதற்காகவும் அவள் அமைதியாக இருக்க வேண்டியதாகிப் போயிற்று. அவளும் சாதாரணப் பெண் தானே. அவளுக்குள்ளும் கனவுகள் பூப்பூக்கத் துவங்கி இருந்தது.
“உங்களுக்குப் பெரிய மனசு லீலா. நீங்க அவங்களோட பழகுங்க, நான் வேண்டாம் னு சொல்லல. ஆனா ஒரு எல்லையோட இருந்துக்கோங்க. ஏன்னா நாம எல்லோரும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஒன்னா, ஒரே வீட்டில் இருப்போம் னு சொல்ல முடியாது, ரொம்ப பழகிட்டீங்கன்னா அப்புறம் நீங்க தான் கஷ்டப்படுவீங்க.” என்க, இந்தப் பேச்சு வார்த்தை லீலாவுக்குக் கஷ்டமாக இருந்தது.
ஒரு வழியாக மூன்று பேருமாக தன் வருங்காலத் துணைகளுடன் பேசி முடித்துவிட, திருப்தியான பாவனையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அக்கா ஊர்மி எங்க?” மூவரில் முதலில் சுதாரித்தவள் ருக்மணியே.
“நமக்குப் போன் வரும் போது இங்க தானே அக்கா இருந்தா.” என்ற தேவகி, “லீலாக்கா நீ கொஞ்சம் ஊர்மிக்காட்ட பேசுக்கா. எனக்கென்னவோ அவளுக்கும், அவ கட்டிக்கப் போறவருக்கும் ஒத்துப் போகலையோன்னு தோணுது.” நிச்சயத்தில் நாகாவின் முகபாவனையைக் கவனித்தவளாக தேவகி சொல்ல, அன்றொரு நாள் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தாள் ருக்கு.
அந்தச் சமயம், மொட்டைமாடியில் வெட்டவெளியில் வெண்ணிலைவை இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஊர்மியைக் கலைத்தது செறுமல் குரல் ஒன்று.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஊர்மி யை நினைச்சா கஷ்டமா தான் இருக்கு … ஆனா அவளால நாகாவை சமாளிக்க முடியும் … நாகா க்கு உண்மை ஏற்கனவே தெரிஞ்சதால எந்த பிரச்சனையும் இல்ல … ஆனா அமைதியான செல்வா கத்த போறான் … லவ்வர் பாய் தெய்வா டெரர் பாயா மாற போறான் … இந்த ஜாலி தேவா சோகமா மாற போறான் போல … என்ன ஆக போகுதோ …