Loading

அத்தியாயம் 17

     “அக்கா என்ன ஒரே யோசனையாவே இருக்க.” லீலாவைப் பார்த்துக் கேட்டாள் ஊர்மி.

     பெண்கள் நால்வரும் சிறிது நேரத்துக்கு முன்பு தான் தங்கள் இல்லம் வந்திருந்தனர். வடிவேலுவுக்கு அவர்களை அனுப்ப மனதே இல்லை. விரைவில் மொத்தமாக வந்துவிடுவதாய் சொல்லி சமாளித்து வந்திருந்தார்கள் நால்வரும்.

     கிளம்பும் போது அவரவர் துணையிடம் சொல்லிக்கொண்டு செல்லுமாறு வடிவேலு சொல்லவும், லீலா முதலாவதாக செல்வாவிடம் வந்தாள். அவன் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. “நல்லபடியா போயிட்டு வாங்க லீலா.” என்றதோடு முடித்துக்கொண்டான்.

     நாகாவோ, “ரொம்ப நல்லது, இனிமேல் நீயும் உன்னோட சகோதரிகளும் இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்காத மாதிரி பண்ணிடுறேன்.” எனத் தன்னோடு நினைத்துக்கொண்டான்.

     தர்மா கூட, “உங்க விருப்பம் தேவகி.” என்றதோடு முடித்துக்கொண்டான். அதிகம் அடம் பிடித்தது தெய்வா தான்.

     “அதுதான் உங்களுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு அப்பாகிட்ட மொத்தமா விட்டுட்டுப் போயிட்டாங்க இல்ல. நீங்க எதுக்காக அங்க போகணும்.” எனக் கடுமையாக அடம்பிடித்தான்.

     அவனுக்குச் சொல்லப்பட்ட கதை, ருக்கு அவள் வளர்ந்த வீட்டிற்குச் சென்று சீராடப் போகிறாள் என்பது தான். அதில் அவனுக்கு அத்தனை நாட்டம் இல்லை. எனவே பால்குடி மறக்காத பிள்ளை போல் ருக்குவைத் தனித்துவிட முடியாது என்று அடம்பிடித்தான்.

     ஒரு கட்டம் வரை அவனைச் சமாளிக்க என்னென்னவோ சொல்லிப் பார்த்த ருக்கு, கடைசியில் போராட முடியாமல், தன் ஆயுதமான அமைதியைக் கையில் எடுக்க, வேறு வழி இல்லாமல் தெய்வா தான் இறங்கி வந்தான்.

     ருக்கு தன்னுடனே இருக்க வேண்டும் என்கிற நினைப்பு ஒரு பக்கம் இருந்தால், இன்னொரு பக்கமோ அவள் வளர்ந்த இடத்தில் ஏதோ பிரச்சனை. அதனால் தான் இத்தனை வயதாகியும் சின்னச்சின்ன விஷயத்திற்கும் பயந்துகொண்டிருக்கிறாள் என அவனாகவே கற்பனை செய்து கொண்டான்.

     என் அருகில் வைத்து இப்போது தான் கொஞ்சம் தேற்றி வைத்திருந்தேன். மறுபடியும் அங்கே அனுப்ப வேண்டுமா என்று தவித்தான். கடைசியாக நானே உங்களை, உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன் என்று நின்றவனை வடிவேலு தான் சமாளிக்க வேண்டியதாகிப் போயிற்று.

     அவனிடம் இருந்து தப்பித்து வந்த பிறகு உடன்பிறந்தவர்களின் கேலிப் பார்வையைத் தாங்க முடியாமல் ருக்கு முகம் சிவந்தது எல்லாம் தனிக்கதை.

     நினைவுகளில் இருந்து வெளியே வந்த லீலா, “மாமா சொன்னதுக்கு நாம ஒத்துக்கிட்டு இருந்திருக்கக் கூடாதோன்னு தோணுது ஊர்மி. அவங்க நாம கட்டிக்கப் போறவங்க. அதுக்கு அர்த்தம் அவங்க நம்மளில் சரிபாதி. அவங்ககிட்ட இத்தனை பெரிய உண்மையை மறைச்சு ஏமாத்திக்கிட்டு இருக்கோமோன்னு மனசுக்கு உருத்தலாவே இருக்கு. பொய்யை அடிப்படையாய் வைச்சு ஆரம்பிக்கும் உறவு என்னவாகுமோன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு.” தவிப்போடு சொன்னாள் லீலா.

     “பேசாம உண்மையைச் சொல்லிடலாமா அக்கா. அவர் என் மேல ரொம்பப் பாசமா இருக்காரு. நான் உண்மையைச் சொன்னாலும் என்மேல கோவப்பட மாட்டாரு.” தெய்வாவின் மீது இருந்த அதீத நம்பிக்கையில் சொன்னாள் ருக்கு. உண்மை தெரிய வரும் போது நால்வரில் அவன் தான் அதிகம் பாதிப்படைவான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     “ருக்குக்கா நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா. அவங்க நாலு பேரோட ஒற்றுமை அழகை, நான் என் கண்ணால பார்த்து இருக்கேன். நாம உண்மையைச் சொன்னா கண்டிப்பா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டாங்க.” என்றாள் ஊர்மி.

     “கல்யாணத்துக்கு அப்புறம் நாம உண்மையைச் சொல்லி ஏன் இதை முன்னாடியே சொல்லலன்னு கேட்டா நாம என்ன சொல்லுறது.” சிரித்து சிரித்துப் பேசும் தர்மாவின் முகம் கோபம் வந்தால் எப்படி இருக்கும் என்கிற பயம் கலந்த கற்பனையோடு கேட்டாள் தேவகி.

     “இருக்கவே இருக்காரு வடிவேல் மாமா. அவர் மேல பழியைத் தூக்கிப் போட்டுடுவோம். உண்மையைச் சொல்லப் போனா அது தான் உண்மையும் கூட.” பட்டென்று பதில் வந்தது ஊர்மிளையிடம் இருந்து.

     “நாலு பேருமாச் சேர்ந்து மாமா மேல கோச்சுக்கப் போறாங்க. பாவம் மாமா, அவரோட பசங்க மேல ரொம்பப் பாசம் வைச்சிருக்காரு. நம்மளால் அவங்களுக்குள்ள எப்பவும் சண்டை வரக் கூடாது.” உறுதியாகச் சொன்னாள் ருக்கு.

     “அதெல்லாம் ஒன்னும் வராது, இப்போதைக்கு அந்த நாலு இராஜகுமாரனுங்ககிட்ட இருக்கிற மிகப்பெரிய நல்ல பழக்கம் அவங்க அப்பாமேல வைச்சிருக்கும் அன்பும், மரியாதையும் தான். அதனால என்ன நடந்தாலும் வடிவேல் மாமா மனசு காயப்படும் படி பேசவோ நடந்துக்கவோ மாட்டாங்க.” உறுதியாய் சொன்னாள் ஊர்மிளா. இவர்கள் தான் அவரின் மனதை சுக்கு நூறாக உடைத்துப் போட்டு நீங்களும் வேண்டாம் உங்கள் பிள்ளைகளும் வேண்டாம் என்று பின் வரும் நாள்களில் பிரிந்து வரப்போகிறார்கள் என்பது இப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     “சரி அக்கா இப்ப நீயே சொல்லு என்ன பண்ணலாம்.” முடிவை மூத்தவளிடம் விட்டாள் தேவகி.

     “கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னாலும் சரி, கல்யாணத்துக்கு அப்புறம் சொன்னாலும் சரி. இந்த உண்மை நம்ம மூலமா தான் அவங்களுக்குப் போகணும். அதுதான் நமக்கு நல்லது.” சொன்ன லீலாவின் மனதில் செல்வாவின் அமைதியான முகம் நிழலாடியது.

     இராதா இல்லத்தில், “தெய்வா என்ன பண்ற?” என்றபடி அண்ணன் அறைக்குள் வந்தான் நாகா.

     “என்னடா அதிசயமா என் ரூம் பக்கம் வந்து இருக்க. யார் மேலையாவது கம்ப்ளைண்ட் கொடுக்கனுமா என்ன?” வராதவன் வந்திருக்கும் அதிர்வில் வா என்று கூட சொல்லவில்லை தெய்வா. வேலையாட்கள் துவைத்து மடித்து மெத்தையில் வைத்துச் சென்ற தன் உடைகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான்.

     “கிட்டத்தட்ட அதுமாதிரித் தான். என் ப்ரண்டு ஒருத்தனை ஒரு பொண்ணு ஏமாத்திட்டா, அவ மேல கம்ப்ளைண்ட் கொடுக்கலாமான்னு அவன் யோசனை பண்ணிட்டு இருக்கான். அதைப் பத்தி தான் உன்கிட்ட கேட்க வந்தேன்.” என்றான் நாகா.

     “என்ன ஏமாத்தினா, பணமா”

     “இல்லை”

     “நகை, விலையுயர்ந்த பொருள் ஏதாவது”

     “இல்லை”

     “அப்புறம் என்னத்தை டா ஏமாத்தினா”

     “அப்பா, அம்மான்னு யாரும் இல்லைன்னு பொய் சொல்லி சிம்பதி வரவைச்சு அவனைக் கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணி இருக்கா. நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடி அதைக் கண்டுபிடிச்சிட்டான்.” சொல்லிவிட்டு சகோதரனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நாகா.

     “நீயெல்லாம் என்னடா லாயர். ஒரு பொண்ணு மேல இப்படி ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தா, அது இயல்பில் எவ்வளவு வீக்குன்னு உனக்குத் தெரியாதா?

     அதோட அந்தப் பொண்ணு மேல அப்படி என்ன பெரிய தப்பு இருக்கு. ஏற்கனவே கல்யாணம் ஆகி அதை மறைச்சிருந்தா தப்புன்னு சொல்லலாம். அம்மா, அப்பா இருக்கிறதை எதுக்கு மறைச்சான்னு அந்தப் பொண்ணு கூட உட்கார்ந்து பேசச் சொல்லு. மேபி இந்தப் பிரச்சனை அவங்களுக்குள்ள சால்வ் ஆகிட வாய்ப்பு இருக்கு.” சொல்லிவிட்டுத் தன் வேலையைத் தொடர ஆரம்பித்தான்.

     “பணக்காரப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக, இருக்கிற அப்பா அம்மாவை இல்லைன்னு அந்தப் பொண்ணு சொன்னது தப்பு இல்லைன்னு சொல்ல வரீயா?” தெய்வா ஊர்மிக்குச் சாதகமாகப் பேசியது போல் கோபம் கொண்டான் நாகா.

     “அந்தப் பொண்ணு பண்ணது தப்புன்னா, அதை அப்படியே நம்பினான் பாரு அவன் மேலையும் தான் தப்பு.” தெய்வா சொல்ல, “சரியாச் சொன்ன. இப்ப இதே மாதிரி ஒரு நிலைமையில் தான் நாமளும் இருக்கோம். நம்ம வீட்டுக்கு மருமக என்கிற பேரில் வந்திருக்காங்களே உண்மையில் அவங்க யாருன்னு தெரியுமா?” நாகா மெதுவாக ஆரம்பிக்க, அவன் முகம் முன் கை நீட்டித் தடுத்தான் தெய்வா.

     “எதுக்குடா எலி அம்மணமா சுத்துதேன்னு யோசிச்சேன். இதோ எலி பெருச்சாளியாகி பொந்துக்குள் இருக்க முடியாம வெளியே வந்திடுச்சே.

     அதை இதைச் சொல்லி எனக்கும், ருக்குவுக்கும் இடையில் பிரச்சனை உண்டு பண்ணலாம் னு வந்தியா? நீயெல்லாம் ஒரு தம்பி, அண்ணன் என்கிற பாசம் வேண்டாம். குறைஞ்சபட்சம் உன்னை மாதிரி ஒரு ஆம்பிளைன்னு என்னை நினைச்சிருந்தாக் கூட, நான் ஆசைப்பட்ட பொண்ணுகிட்ட இருந்து என்னைப் பிரிக்கணும் னு நினைச்சிருக்க மாட்ட.

     உன்னை மாதிரி ஒருத்தன் என் கூடப் பிறந்ததை நினைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு போடா இங்க இருந்து.” ஒரேயடியாகக் கத்திவிட்டிருந்தான் தெய்வா.

     அடப்பாவி சண்டாளா என மனதோடு நினைத்த நாகா, “தேவையில்லாத வார்த்தைகளை ரொம்பப் பேசிட்ட, இதுக்து அனுபவிப்ப பாரு. உனக்கு நல்லது பண்ணனும் னு நினைச்சி வந்தேன் இல்ல என்னைச் சொல்லணும். எக்கேடும் கெட்டுப் போ. ருக்குவாம் ருக்கு செல்லப்பெயர் ஒன்னு தான் குறைச்சல்.” என்றவாறு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

     “பைத்தியம், அந்தப் பொண்ணுகிட்ட அப்படி என்ன இருக்குன்னு இப்படி அலையுறான். இவன் வேலைக்கு ஆக மாட்டான் செல்வா தான் கரெக்ட் அவன்கிட்ட பேசுவோம்.” எனத் தன்னோடு நினைத்தவன் செல்வாவின் அறைக்குள் நுழையப் பார்க்க,

     “உனக்கு அவ்வளவு தான் மரியாதை சொல்லிட்டேன். இனிமேல் அவளைப் பத்தி ஏதாவது தப்பா சொன்ன உன்னைக் கொன்னுடுவேன் ராஸ்கல். இதுக்குத்தான்டா உங்க யார்கூடவும் நான் தொடர்பில் இல்லை. எனக்குக் கல்யாணம் நடந்தா என்ன, கருமாதி நடந்தா தான் என்ன. என் விஷேஷத்துக்கு நான் கூப்பிடாம எவனாவது வந்தீங்க மரியாதை கெட்டுப் போகும் ஆமா.” செல்வாவின் நண்பன் ஒருவன் லீலாவை விசாரித்தும், முன்னாள் காதலி லேகாவைப் பற்றியும் தவறாகப் பேசி இருக்க, அவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த செல்வாவின் பேச்சைத் தான் செவிமடுத்திருந்தான் நாகா.

     “இவனும் லூஸ் ஆகிட்டானா? நேத்து வரைக்கும் முனிவராட்டம் கடிவாளம் போட்ட குதிரை மாதிரி எந்தப் பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தவனுங்க, இவங்க தான் பொண்ணுன்னு அப்பா சொன்னவுடனே இப்படி ஆகிட்டாங்களே. இவ்வளவு தான் இவனுங்க கெத்தா.

     காமன் அம்பை ஏவ வந்த மன்மதனை அழிச்சு, தன் விரதத்தைக் காப்பாத்திக்கிட்ட சிவன் மாதிரி இருப்பானுங்கன்னு நினைச்சா மேனகைகிட்ட விழுந்த விஸ்வாமித்திரனா இல்ல மாறிட்டாங்க.

     இத்தனை வருஷம் பழக்கமான ப்ரண்ட்ஸை திட்ற அளவுக்கு, இரண்டு நாளுக்கு முன்னாடி வந்த பொண்ணு ஒசத்தியாகிட்டாளா?

     இவங்களைச் சொல்லியும் தப்பு இல்ல எல்லாம் அந்தப் பொண்ணுங்களைச் சொல்லணும். எங்க தட்டினால் எப்படி ஆடுவாங்கன்னு சரியா செய்வினை வைச்சிருக்காங்க போல.” என்றவனுக்கு அதிமுக்கியச் சந்தேகம் வந்தது.

     “ஆமா, நான் ஏன் இவனுங்களை மாதிரி பைத்தியம் ஆகாம உஷாராகிட்டேன். ஒருவேளை அந்த ஊர்மிளாவுக்கு சமார்த்தியம் பத்தலையோ. ச்சே என்ன கண்ட்ராவி யோசனை இது.” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் நாகா.

     “நாகா” வடிவேலுவின் உரத்த குரல் கேட்க, “பிபியை வைச்சுக்கிட்டு எதுக்கு இப்படி கத்துறீங்க.” என்றபடி தந்தையை நெருங்கினான் இவன்.

     “உன் மனசில் என்னதான்டா நினைச்சிக்கிட்டு இருக்க. தெய்வாகிட்ட போய் ருக்குவைப் பத்தி தப்பா சொல்ல பார்த்தியாமே. நீ ஊர்மியை விட்டுடக் கூடாதுன்னு நான் உன்கிட்ட அந்தளவு பேசினா, நீ சத்தமே இல்லாம உன் அண்ணன் மனசையும் கலைக்கப் பார்த்து இருக்க.” மகனின் செய்கையில் மனம் வருந்திப் போய் பேசினார் மனிதர்.

     “என்னை இந்தப்பக்கம் அனுப்பிட்டு, சின்னப்பையன் மாதிரி அப்பாவுக்குப் போன் பண்ணி போட்டுக் கொடுத்திருக்கான் ராஸ்கல்.” மனதோடு தமையனை வறுத்தெடுத்துவிட்டு தந்தையைப் பார்த்தவன், இப்ப இவர் அதிகம் பேசுவாரே எப்படிச் சமாளிக்கப்போறேன் என்பதாய் நெற்றியை விரல்களால் வருடினான்.

     “உன் வாழ்க்கையை நாசமாக்கிக்கிறதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஆனா உன் அண்ணனுங்க வாழ்க்கையை நாசமாக்க உரிமையும் கிடையாது, அந்தப் பொண்ணுங்களைப் பத்தி தப்பா பேசுறதுக்கு தகுதியும் கிடையாது.

     இந்த நாலு கல்யாணம் நடக்காமப் போறதில் அந்தப் பொண்ணுங்களுக்கு எந்த இழப்பும் இல்ல. அவங்க வீட்டுக்குப் போய் அவங்களோட பழைய வாழ்க்கையை சந்தோஷமா வாழ்வாங்க. ஆனா உங்க எதிர்காலம் சூன்யமாகிப் போகும்.” என்ற தந்தையை விரக்தியாய் பார்த்தவன்,

     “ஊருக்குள்ள நிறைய நல்ல பொண்ணுங்க இருக்காங்க. பணக்காரப்பொண்ணுங்களில் கூட நல்ல பொண்ணுங்க எக்கச்சக்கம் இருக்காங்க. அவங்க எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலன்னா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்.

     முதலில் புடவையில் சுத்துறவங்க எல்லோரும் நல்லவங்க, மாடர்ன் ட்ரஸ் பண்றவங்க எல்லோரும் கெட்டவங்க என்கிற உங்க பழைய கால மனப்பாங்கில் இருந்து வெளியே வாங்க.” நிஜத்தை தந்தைக்கு உணர்த்திவிடும் நோக்கில் சற்றே குரலுயர்த்தினான் நாகா.

     “கடைசியா என்ன தான்டா சொல்ல வர.” வடிவேலுக்குப் பொறுமை பறந்து போயிற்று.

     “இந்தக் கல்யாணம் எனக்கு வேண்டாம். வேண்டாம் னு சொல்றவனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சு உங்க பாஷையில் ரொம்ப நல்ல பொண்ணான அந்த ஊர்மிளா வாழ்க்கையைக் கெடுத்திடாதீங்க.” தெளிவாகவே சொன்னான் நாகா.

     “எப்ப என் பேச்சுக்கு மதிப்பு இல்லாமப் போச்சோ, இதுக்கு அப்புறமும் நான் எதுக்காக பெரிய மனுஷத் தோரணையில் இந்த வீட்டைச் சுத்தி வரணும். இனிமேல் எதுக்காகவும் உங்களை நான் கட்டாயப்படுத்தப் போறது கிடையாது. தனிக்காட்டு ராஜாவா உங்க இஷ்டத்துக்கு சுத்தி வாங்க. என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுடுங்க. இல்லையா? அரசுவுக்குத் தத்துக் கொடுத்திடுங்க. அவன் என்னை நல்லாப் பார்த்துப்பான்.” வார்த்தைகளை விட்டார் மனிதர்.

     “அப்பா என்ன பேச்சுப்பா பேசுறீங்க.” நிஜமாகவே பதறித்தான் போனான் நாகா.

     “ஏன்டா ரொம்ப பாசம் இருக்கிற மாதிரி உருகுற. நான் எப்ப சாவேன், எப்ப நீங்க ஆளுக்கொரு திசையா போகலாம் னு தானே வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க அப்புறம் என்ன.” என்றார் நீண்ட நாள் கவலையை வார்த்தைகளில் சேர்த்து.

     “இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா, இப்ப என்ன நான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கனும் அவ்வளவு தானே. பண்ணிக்கிறேன், இன்னொரு தடவை உங்க சாவப் பத்தியோ இல்ல நாங்க உங்க மேல வைச்சிருக்கிற பாசத்தை குறைச்சுப் பேசாதீங்க. அப்படிச் செஞ்சா அது உங்க கையால நீங்களே என்னைக் கொன்னு போட்ட மாதிரி.” தந்தையின் மனதுடைந்த ஒற்றை வாக்கியத்துக்குப் பதறி மனதை மாற்றிக்கொண்டான் நாகா.

     “நிலைமை கையை மீறிப் போகுறதுக்குள்ள சீக்கிரம் நாலு பேரோட கல்யாணத்தையும் நடத்திடணும்.” எனத் தனக்குள் முடிவெடுத்தவர் அரசுவிற்கு போன் செய்து, “டேய் அறிவில்லாதவனே சீக்கிரம் வா உன்கிட்ட பேசணும்.” என்றார்.

     இனித் தான் தப்பிக்கவே முடியாது என்பதை நன்கு உணர்ந்த நாகா, இதுக்கெல்லாம் காரணமான ஊர்மி மீது நியாயமே இல்லாமல் கோவம் கொண்டான். என்கிட்ட வா, அப்புறம் உன்னைப் பார்த்துக்கிறேன் என்றவனுக்கு ஊர்மி நிஜத்தில் எப்படியானவள் என்பது தெரிந்திருக்கவில்லை தான்.

     வடிவேலுவும், அரசுவும் இணைந்து திருமண வேலைகளை துரிதப்படுத்த பெண்கள் நால்வரும் தங்களைச் சுற்றி இருந்த சில நல்ல உள்ளங்களிடம் விடைபெற்று மொத்தமாக ராதா இல்லம் வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த நேரத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார் வடிவேலு. சின்னப்பிள்ளையைப் போல் அவர் செய்யும் அலப்பறைகளை சிரிப்புடன் கடந்தனர் மருமகள்கள்.

     “எப்பப் பார்த்தாலும் நாலு பேரும் ஒன்னாவே தான் அலையுறாங்க. கொஞ்சம் உத்துப்பார்த்தா கண்டிப்பா இவங்க நாலு பேரும் ஒரே வீட்டில் வளர்ந்தவங்க தான்னு கண்டுபிடிச்சிடலாம். ஆனா இவனுங்க ஒருத்தனுக்கும் சந்தேகம் வரல. எல்லாம் மாட்டு மூளையா இருக்காணுங்க.” சதோதரர்களை மனதோடு கடிந்தான் நாகா.

     அதோ இதோ என்று நிச்சய நாளும் வந்துவிட்டிருந்தது. பெண்கள் நால்வரையும் ஒன்றாக ஒரே வரிசையில் அமர வைத்து அலங்கரித்துக் கொண்டிருந்தனர் அந்த நகரின் தலைசிறந்த ஒப்பனையாளர்கள்.

     அலங்காரம் முடித்த அம்மன் விக்கிரங்களாய் ஜொலித்த நால்வரும் நிலைக்கண்ணாடியில் தங்களைப் பார்த்து உண்மையில் அது தாங்கள் தானா என்று அதிசயித்தனர்.

     அவர்களுக்காவே பிரத்யேகமாக நெய்த காஞ்சிப்பட்டில், அளவான நகைகள் மற்றும் ஒப்பனைகளுடன் மகாலட்சுமியின் ரூபமாகவே திகழ்ந்தனர் பெண்கள் அணி.

     “அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.” மூவரும் லீலாவைப் பார்த்து ஒரு சேர சொல்ல அவளுக்கு வெட்கம் வந்தது.

     இதுவரை தங்கைகள், அவர்களுடைய திருமணம் என்று மட்டும் கற்பனை செய்து பார்த்தவளுக்கு, தனக்கும் திருமணம் தனக்கும் கணவன் என்கிற ஒருவன் வரப்போகிறான் என்கிற எண்ணம் தோன்ற கன்னங்கள் சிவப்பேறியது. முகம், மழைநீர் தாங்கிய ரோஜாப் பூ போல தானாய் நிலம் நோக்கியது.

     “ஐயோ அக்கா வெட்கப்படுறாங்க பாருங்களேன்.” தேவகி சொல்ல, “தேவகி நீயே அக்காவுக்கு கண்ணு வைச்சிடுவ போல.” என்று சின்ன அதட்டலுடன் லீலாவிற்கு திருஷ்டி பொட்டு வைத்துவிட்டாள் ஊர்மி.

     “இன்னைக்கு நான் அழகா இருக்கலாம். ஆனா என் தங்கச்சிங்க எப்பவும் என்னை விட ரொம்ப அழகானவங்க.” என்று மூவரையும் அணைத்தவள் மூவருக்கும் திருஷ்டி பொட்டு வைத்துவிட்டாள்.

     “தாய் கண்ணு பெருங்கண்ணுன்னு சொல்வாங்க. என் மருமகப் பொண்ணுங்க மேல என் கண்ணே பட்டுடும் போல. நிச்சயம் முடிஞ்சதும் யாரையாவது விட்டு என் பிள்ளைங்களுக்குச் சுத்தி போடச் சொல்லணும்.” என்றபடி அந்த அறைக்குள் வந்தார் வடிவேலு.

     “மாமா நாங்க ரெடி.” சந்தோஷமாய் சொன்னாள் லீலா. இன்று அவர்கள் நால்வரும் இத்தனை ஆனந்தமாய் இருப்பதற்கு அவர் தானே காரணம். அந்த நன்றியை தான் சாகும் வரை மரியாதையாக வடிவேலுவின் காலடியில் சமர்ப்பிப்பாள் லீலா.

     “எல்லா விஷேஷங்களிலும் பொண்ணுங்க ரெடியாகத் தான் லேட் பண்ணுவாங்க. இங்க நீங்க ரெடியாகிட்டீங்க, ஆனா நான் பெத்த சீமராஜாக்கள் இன்னும் ரெடியாகல. அவங்க ரெடியானதும் நிச்சய மேடைக்கு வரச் சொல்லுவாங்க. அப்ப வாங்க.” என்றுவிட்டு வெளியே சென்றார் வடிவேல்.

     தெய்வா வாங்கிக் கொடுத்திருந்த அலைபேசியை எடுத்த ருக்கு, தங்கள் நால்வரையும் புகைப்படம் எடுக்கச் சொல்லி அங்கிருந்த ஒருவரிடம் கேட்க, அவரும் புன்னகையுடன் எடுத்துக் கொடுத்தார். ஓரகத்திகளுக்குள் இத்தனை அன்பா என்கிற ஆச்சர்யம் தாங்கவில்லை அவருக்கு.

     அதன் பிறகு சகோதரிகள் நால்வரும் விதவிதமான நிலையில் நிறைய சுயமிகளை எடுத்துக்கொள்ள, அந்தக்கணம் அவர்களின் காலம் முழுமைக்கும் மனதில் சேமித்து வைக்கும் பொக்கிஷ நினைவுகளாக மாறிப்போனது அவை.

     நிச்சயத்திற்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் வடிவேலுவிடம், “நாலு பசங்களுக்கும் ஒரே நேரத்தில் கல்யாண நிச்சயம் பண்றீங்க, ரொம்ப சந்தோஷமான விஷயம். ஆனா ஒருத்தர் கண்ணு மாதிரி இன்னொருத்தர் கண் இருக்காது. கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாதுன்னு சொல்வாங்க. அதனால நான் ஒன்னு சொல்றேன் உங்களுக்குச் சரின்னு தோணுச்சுன்னா அப்படியே பண்ணுங்க.” தயங்கித் தயங்கித்தான் சொன்னார்.

     மத்திய வயதில் இருக்கும் சொந்தங்களுக்கு வேண்டுமானால் தன்னை விட மற்றவர்கள் நன்றாக வாழ்கிறார்களே என்கிற பொறாமை இருக்கலாம். ஆனால் வாழ்ந்து முடிக்கும் தருவாயில் இருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும், கண்ணில் படும் எல்லாப் பிள்ளைகளும் நன்றாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தான் இருக்கும். அது தான் இந்தப் பெரியவரிடமும் இருந்தது. வடிவேலுக்கும் அவரைத் தெரியும் என்பதால் சொல்லுங்கய்யா என்று பவ்யமாகவே பேசினார்.

     “நாலு பேருக்கும் ஒரே நேரத்தில் நிச்சயம் வைக்காம, சின்னவனுக்கு முதல்ல ஆரம்பிச்சு பெரியவனுக்கு கடைசியில்  வைங்க.” என யோசனை சொன்னார். வடிவேலுவுக்கும் அது சரியான யோசனையாகத் தான் தோன்றியது. காரணம் அவரும் நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.

     விஷேஷ விழாக்களில் நெடுநாள் பார்க்காத சொந்தங்களை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்வதை விடுத்து, தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற வரன்கள் கிடைப்பார்களா என்பதைக் கவனிப்பதை விடுத்து, பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்பதை நாலும் தெரிந்த மனிதர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொள்வதை விடுத்து,  மண்டப அலங்காரம் யார் செய்தது, மேடையில் வைத்திருக்கும் நகைகள் பட்டுப்புடவைகள் எல்லாம் என்ன விலை. நகைகள் பெண்வீட்டில் வாங்கியவையா இல்லை நீங்கள் வாங்கிக் கொடுக்கிறீர்களா எனத் தேவையில்லாத கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தவர்களைப் பார்க்க அவருக்கும் சற்றே அசௌகர்யமாகத் தான் இருந்தது.

     தன் பிள்ளைகள் அவர்களின் கண்ணை நிறைத்து அதனால் துன்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இத்தனை பெரிய விஷேஷத்தில் சின்னக் குறையாக, கடைசியில் இருந்து ஆரம்பித்து முதலாவது மகனுக்கு கடைசியாக நிச்சயம் செய்வோம் என்று முடிவெடுத்தார் வடிவேல்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வடிவேலு எப்படியோ பேசி மகன்களை சமாளிக்கிறார் … நாகா வை சமாளிச்சிட்டார் … நிச்சயதார்த்த காஸ்ட்யூம் சூப்பர் … ஒருவழியா நிச்சயத்தை முடிச்சுட்டார் வடிவேலு …