Loading

யான் நீயே 6

தன்னுடைய தங்கப்பொண்ணு சொல்லிச்சென்ற வார்த்தையில் வலியை உணர்ந்த வீரனின் முகம் பட்டென்று வாட்டத்தைக் காட்டியது.

‘மெய்யாவே நான் உனக்கு வேணாமாடி?’ வாய்விட்டு கேட்டிட அஞ்சினான். அவள் ஆமென்று சிறு பார்வை பார்த்திட்டாலும் மரித்திடுவானே!

அவள் பல அடிகள் முன் சென்றிருக்க… எட்டி பிடிக்க பேராவல் முட்டி நின்ற போதும், பொறுமை காத்தான்.

அவனது தங்கம் அவளாக கை சேர வேண்டுமென்றே இந்த பொறுமை.

சட்டை பின்னால் சேறு படிந்திருப்பதாக லிங்கம் சொல்லியிருக்க, கழுட்டி பார்த்தான். அவ்வளவு இல்லை. புல்லின் ஈரம் தான் இருந்தது. ஆங்காங்கே திட்டாய் தெரிந்த சேற்றை வாய்க்கால் தண்ணீர் தொட்டு துடைத்து அணிந்தவன் பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

நாச்சி பொங்கல் வைத்த பானைகளை அடுப்பிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தாள்.

“எல்லா இடமும் வச்சாச்சா அமிழ்தா?”

“ஆச்சு அப்பத்தா” என்ற வீரன், சூரியனை நோக்கி படையல் வைப்பதற்காக, விளக்கு ஏற்றி மஞ்சளால் பிள்ளையார் பிடித்துக் கொண்டிருந்த மீனாளை பார்த்தவாறு லிங்கத்திற்கும் பிரேமுக்கும் இடையில் வந்தமர்ந்தான்.

“என்னண்ணே மஞ்சள் வாசம் இங்குட்டு வர வீசுது?” லிங்கம் பிரேமுக்கு கேட்டிடாது வீரனின் பக்கம் குனிந்து கிசுகிசுக்க…

“எட்டடியில இருக்க மஞ்சள் வாசனை இங்க வாரதுல என்னடே அதிசயம்?” என்றான் வீரன்.

“நான் மீனாகுட்டி கையிலிருக்கும் மஞ்சளை சொல்லலை” என்ற லிங்கம் “அவளோட நெத்தியிலிருக்குமாட்டி” என்று வீரனின் மார்பு பகுதி சட்டையை காண்பித்தான்.

குனிந்து பார்த்த வீரன் அங்கு எப்படி மஞ்சளின் தடம் வந்தது என்பதை நினைத்து மந்தகாசமாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“பாரேன்… மீசையை முறுக்கிட்டு அய்யனார் கணக்கா தோரணையா திரியிற வீரனா இது” என்று லிங்கம் ஆச்சரிய பாவனை காட்டிட…

“அடேய்…” என்று அசடு வழிந்தான் வீரன்.

பிரேம் ஒன்றும் புரியாத போதும்…

“ரெண்டு நாளா உன் முகமே பிரகாசமா இருக்கு மாமா” என்றான்.

“என்னண்ணே நடந்துச்சு?” லிங்கம் கேட்டிட,

“உன் மீனாகுட்டியவே கேளுடே” என்ற வீரன், தன் சட்டையில் பதிந்திருந்த மஞ்சளின் தடத்தில் விரல் வைத்து வருடினான்.

“ரொம்ப முத்திப்போச்சு.” லிங்கம் சற்று உரக்கக் கூறிட,

“இளநீரெல்லாம் முத்திப்போச்சு தான் வீரா. கொலை இறக்கிடலாம் நினைக்குறேன்” என்றார் பாண்டியன்.

“ஆங்… இந்த வாரத்துல இறக்கிடலாம் ஐயா” என்ற வீரன், “செத்த வாப்பெட்டியை மூடிட்டு இருடே” என்று தம்பியை அடக்கினான்.

மகா அங்கையை தன் பக்கத்திலேயே ஏதாவது வேலை ஏவிக்கொண்டு பிடித்து வைத்திருக்க, அவளோ நொடிக்கு ஒரு தரம் லிங்கத்தை பார்த்து வைத்தாள்.

வீரன் கவனியாது போல் கவனித்துவிட்டான்.

அந்நேரம் அவனுக்கு அங்கையின் தோழி ரம்யாவின் அண்ணனின் எண்ணம் வேறு தேவையில்லாது தோன்றியது.

‘அந்த காரக்டர் என்னாச்சுன்னு தெரியலையே! இவ வேற இவனை குறுகுறுன்னு பார்த்து வைக்கிறா(ள்). ஏதும் ஏழரையை கூட்டிடுவாளோ?’

“என்ன மாமா ரோசனை?”

பிரேம் கேட்டிட, தன்னிலிருந்து மீண்ட வீரன் ஒன்றுமில்லையென சமாளித்திருந்தான்.

பூஜைக்கு பூ கட்டிக்கொண்டிருந்த அபிராமி,

“பெரிய கோலமா போட்டு, மத்தியில பிள்ளையாரை வச்சு காமாட்சி விளக்கெடுத்து முன்னுக்கு வை’த்தா மீனாள்” என்றார்.

“இதையும் வீடியோ எடுடா பிரேம். எடிட் பண்ணி பேக்ரவுண்டில் பாட்டோட வீடியோ போட்டா லைக் பிச்சிக்கும்” என்றான் லிங்கம்.

“எதுக்குடா இந்த அலப்பறை?” வீரன் கேட்டிருந்தான்.

“ஆஃபிஸில் என் டீம் மெம்பர்ஸ் எல்லாரும் சிட்டி மாமா. வில்லேஜ் சைட் பொங்கல் எப்படியிருக்கும் தெரியாது வீடியோ எடுத்துட்டு வாங்கன்னு கேட்டிருந்தாய்ங்க. அதான் சும்மா எடுத்தேன். அதுக்குத்தான் லிங்கம் சொல்லிட்டு இருக்கியான்” என்று விளக்கம் கொடுத்தான் பிரேம். அவனின் விழிகளில் கள்ளத்தனம். வீரன் கண்டு கொண்டான்.

“இன்னைக்கு யாருடே பொங்க வச்சது?”

“பாப்பா தான் அண்ணே!” லிங்கம் சொல்லிட, வீரன் பிரேமை அர்த்தமாக ஏறிட… பிரேம் மெல்ல எழுந்து பாண்டியனின் அருகில் சென்று நின்று கொண்டான்.

“அவன் நாச்சியாவை வீடியோ எடுக்கணுன்னு உன் காதுல பூ சுத்தியிருக்கியான். நீயும் நம்பி அவனுக்கு ஐடியா கொடுத்திருக்க” என்ற வீரனின் கேலியில், லிங்கம் பிரேமை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் பார்த்து வைக்க…

“அச்சோ மச்சான். அம் யூவர் பெஸ்ட் ஃபிரண்ட்” என்று அங்கிருந்தே அப்பாவியாக உதடசைத்தான் பிரேம்.

“பொழச்சிப்போடே” என்ற லிங்கம், “இன்னும் பச்சை மண்ணாவே இருக்கிறேண்ணே நானு!” என்க, அவனை ஏறயிறங்க ஒரு மார்க்கமாக பார்த்தான் வீரன்.

“என்னண்ணே! அப்படி பாக்குறீங்க?”

“என்னை மட்டுமே ஆராயாமல் உன்னை சுத்தியும் பாருடே!” என்ற வீரனின் உட்பொருள் நிறைந்த பேச்சு அவனுக்குப் புரியவில்லை.

“என்னமோ சொல்லுற. ஒன்னும் விளங்கலண்ணே!” என்ற லிங்கம், “ஏதும் வில்லங்கமா நடக்குதோ?” எனக் கேட்டான்.

“அது உன் முடிவை பொறுத்து” என்ற வீரன்,

“எல்லோரும் வாங்கடே!” என்ற மீனாட்சியின் குரலில் சூரியனை வணங்கிட தயார் செய்யப்பட்ட இடத்திற்கு எழுந்து சென்றான்.

பிள்ளையார் முன்பு விளக்கு தீபம் சுடர்விட… அவர்களது பண்ணையில் விளையும் அனைத்து பொருள்களும், கரும்பு, தேங்காய், தென்னை பாலை, வாழை வகைகள், மாம்பூ, பால் வைத்திருக்கும் நெற்கதிர், மஞ்சள் கிழங்கு, கொய்யா, சப்போட்டா, மரவள்ளி, கருணை, பூசணி, பறங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி இன்னும் பல காய்கறிகள் பழங்கள் என அனைத்தும் முன் வைக்கப்பட்டு, தலை வாழை இலையில் சக்கரை பொங்கலும், வெண் பொங்கலும் வைக்கப்பட்டிருந்து.

சூரியன் பொங்கல் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது என்பதால், விவசாயத்திற்கு பெரிதும் உதவுவது இயற்கை காரணிகள் என்பதால் தங்களது விளைச்சல் பொருள்கள் யாவற்றையும் வைத்து சாமி கும்பிடுவது வழக்கம்.

“சூடம் ஏத்தி தேங்காய் உடைய்யா மருதா” என்று அப்பத்தா சொல்ல, மருதன் பாண்டியனை பார்த்தார்.

எப்போதும் இது வழமை தான். பாண்டியன் புன்னகையோடு தலையசைக்க, தேங்காய் உடைத்து சூரியனை பார்த்து தீபாராதனை காட்டிட, அங்கை மணி ஆட்டி ஓசை எழுப்பினாள்.

“எங்குலமும், காடும் இதேபோல் செழித்து வளரனுமப்பு. எம்பிள்ளைங்க ஒத்துமை குலையாம பார்த்துக்கப்பு” என்று தலைக்கு மேல் இரு கரம் உயர்த்தி கும்பிட்ட அப்பத்தா தரையில் விழுந்து வணங்கிட, அனைவரும் அவரை பின் பற்றினர்.

“எல்லாருக்கும் தின்னூறு பூசிவிடு அப்பு” என்ற மீனாட்சி மருதனுக்கு பூசிவிட்டு, தானும் இட்டுக்கொண்டார்.

மருதன் எல்லோருக்கும் தீபாராதனை காட்டி திருநீறு பூசிவிட, ஒவ்வொருவராக அப்பத்தாவின் காலில் விழுந்து வணங்கி பணமும், புத்தாடையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக வீரனிடம் வந்த மருதன் எப்போதும் போல் தயங்கிட,

“பூசிவிடும் மாமா” என்றிருந்தான். முகம் முழுக்க புன்னகையாய்.

ஐந்து வருடங்கள் கடந்து மாமா என்று அவர் முகத்திற்கு நேரே அழைத்திருக்கிறான்.

மருதன், அப்பா என்று கேட்பதற்கு முன்பே மாமா என்ற சொல்லை அவன் சொல்ல கேட்டு அகம் மகிழ்ந்தவராயிற்றே!

கண்கள் கலங்கிவிட்டார்.

“அமிழ்தா…”

“இப்போ என்னவாம்?” என்ற வீரன், “வருத்தம் இருக்குதுதேன். அதுக்காக விலகி நின்னா ஆச்சா? எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா சேர்றதுதானே உறவுக்கு நல்லாயிருக்கும்” என்றவனை பாண்டியன் தோளில் தட்டி அணைத்துக்கொண்டார்.

“அப்பு…” மீனாட்சி வீரனின் கன்னம் வழித்து முத்தம் வைக்க…

“என் கட்டை சாஞ்சாலும் நீயி வீராப்பா இருந்திடுவியோன்னு வெசனப்பட்டு கிடந்தேன் அமிழ்தா. இப்போதேன் நிறைவா இருக்கு” என்றார்.

அனைவருக்குமே மகிழ்ச்சி கரை ததும்பியது.

மருதன் மார்போடு தன் மூத்த குழ்ந்தையை தழுவிக்கொண்டார். ஆத்மார்த்தமாக.

உண்மையான அன்புக்கு தண்டனை கொடுத்திட தெரியாதே. காலங்கள் கடந்தாலும், தன் தடத்தை அழுத்தமாக பதித்துவிடும்.

மீனாளுக்கு மற்றவர்களைவிட அதீத சந்தோஷம்.

வீரனும், மருதனும் பாசம் கொண்டு கடந்திட்ட நாட்களுக்கு ரசிகை அவள். மாமன் மருமகன் என்று சொல்ல முடியாதளவிற்கு இருக்கும் அவர்களின் அன்பும், அக்கறையும். மகளாக பொறாமை கொள்வதற்கு பதிலாக, அவர்களை அவர்களது அன்பை கண்டு ஆச்சரியம் கொண்டதுதான் அதிகம்.

அன்று பிரேம் செய்ததினால் மனவருத்தம் மட்டுமே! தன்னை பேசியதால் தான் இருவருக்கும் பிளவு வந்துவிட்டதோ? என்று மீனாள் வருந்தாத நாளில்லை. இக்கணம் அந்த வருத்தங்கள் யாவும் சூரியனிட்ட பனியாய் கரைந்திருந்தது.

மருதனின் அணைப்பிலிருந்தாலும், வீரனின் பார்வை அவனவள் மீதுதான்.

நீர்த்ததும்பும் விழிகளில் தேங்கி நிற்கும் அவளின் மகிழ்விற்காக என்னவும் செய்திடலாமென்று தோன்றியது அவனுக்கு.

சற்று நேரத்துக்கு முன்பு மஞ்சள் செடியை அவளின் கைகளில் அவன் கொடுக்கும்போது அவள் பேசியவை அவனது மனதில் வந்து போனது.

“நீ பேசுனது மறந்து நான் உன்னை கட்டிக்கணும். ஆனால் மகனுக்காக பேசிய ஐயாகிட்ட இன்னமும் விலகி நின்னு உன் கோவத்தை காட்டுவியா மாமா? யாருமேல சரி தப்புங்கிற பஞ்சாயத்துக்கு நான் வரல. ஆனால், ஒரு அப்பாவா அந்த இடத்தில் யார் பக்கம் நிக்க முடியுமோ அங்குட்டு நின்னாரு. நீ மதினிக்கு துணை நின்ன மாறிதானே! ஒருவேளை ஐயாக்கு எந்த சூழ்நிலையிலும் நீயி அவரை சரியா புரிஞ்சிப்பங்கிற எண்ணத்தில் கூட அண்ணேக்கு சப்போர்ட் பண்ணியிருக்கலாம்ல. ஐயா ராத்திரியில நிம்மதியா உறங்கி பல வருசமாச்சு மாமா. உன்னைய பெத்த பிள்ளைகளுக்கு மேல நினைக்கிறாரு. ஒரு சின்ன பேச்சுல உன் பாசத்தை விட்டுக்கொடுத்துபுட்டியே மாமா” என்றிருந்தாள்.

அத்தோடு ‘நீ எட்ட நிற்பது தான் எனக்கு நல்லது’ என்று அவள் சொல்லியது அவனின் உயிரையே வதைத்தது.

ஆசைதீர தன் மருமகனின் முகம் தடவிய மருதன்,

“மனசு நிறைஞ்சு கிடக்குடே. மாமன் தப்பே பண்ணியிருந்தாலும் இம்புட்டு வீம்பு வேணாமடே. நீயி என் ஆணிவேர்டே” என்றவர் வீரனின் நெற்றியில் திருநீறு வைக்க சிரிப்போடு முகம் கவிழ்ந்து வாங்கிக்கொண்டான்.

வீரனுக்கு இன்னமும் மருதனின் மீது கோபம் இருக்கிறதா என்றால் சிறிதுமில்லை. ஆனால் வருத்தம்? நிறையவே இருக்கிறது. அவனாக பலமுறை முயன்றும் அந்த வருத்தத்தால் மருதனை அவனால் நெருங்கிட முடியவில்லை.

இன்று அந்த வருத்தத்தை மறந்தால், தன்னவளுக்கு எத்தனை மகிழ்வை அது கொடுக்கும்… அவளுக்கு மட்டுமா? தனது குடும்பமே எதிர்பார்க்கும் ஒன்றல்லவா! ஆதலால் மருதனிடம் பேசிவிட்டான்.

அனைவரின் முகத்தில் தென்படும் மகிழ்வு… அவனது வருத்தத்தைக்கூட பின்னுக்குத் தள்ளியிருந்தது.

“மனசு நிறைஞ்சு போச்சுய்யா” என்ற அபிராமி, “அப்பத்தாகிட்ட ஆசீ வாங்கிக்கய்யா” என்றார்.

மீனாட்சியின் பாதம் தொட்டு வீரன் வணங்கிட…

அவனது கையில் பணம், மற்றும் ஆடையை கொடுத்தவர்,

“நீயி உசந்துட்டய்யா” என்றார்.

வீரனின் அருகில் வந்து கரம் பற்றிய மகா,

“அந்த மனுசனுக்கு சகலமும் நீயி தான்ய்யா. எம்புட்டு சந்தோஷம் பாரு அவரு மொவத்துல” என்றார்.

வீரன் மருதனை பார்க்க…

என்றுமில்லாது இன்று சிறுவனாக பாண்டியனிடம் அத்தனை நிறைவாக முகம் முழுக்க சிரிப்போடு, உடல்மொழியில் ஒருவித துள்ளலோடு பேசிக்கொண்டிருந்தார்.

“பலநா(ள்)ச்செண்டு இன்னைக்கு நிம்மதியா உறங்குவாறு” என்று மகா பனித்த கண்களை சேலை தலைப்பில் ஒற்றிக்கொண்டார்.

வீரன் தன்னிடம் பேசுவதில்லை என்பதை எத்தனை நாள் இரவு வலியோடு அவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பார். அந்த வேதனை நீங்கியதில் மகாவுக்கு பெரும் நிம்மதி.

“ரொம்ப கஷ்டப்படுதிப்புட்டேனா அத்தை?” பாவம் போல் வினவிய வீரனின் கன்னம் தாங்கியவர்,

“அன்னைக்கு அவர் செய்ததும் தப்புதேன் அமிழ்தா. என்ன நீயி வீம்புக்குன்னு பேசமால் இருந்துட்ட” என்றதோடு, “எல்லாம் சரியாப்போச்சே. இனிமே வேறென்ன வேணுமாட்டிக்கு” என்றார்.

மீனாளின் பார்வை முழுக்க வீரனின் மீதுதான்.

மருதனை ஏற்றுக்கொள்ள சொல்ல வேண்டுமென்று அவள் எப்போதும் நினைத்ததில்லை. தனக்கு அவன் மீதிருக்கும் கோபம் தானே அவனுக்கு மருதன் மீது என்கிற தெளிவு அவளிடம். அதனால் இத்தனை வருடத்தில் எல்லோரும் அவனிடம் மருதனிடம் பேசு என்று சொல்லியதைப்போல் எப்போதும் அவள் சொல்லியதே கிடையாது. இன்றும் அந்த எண்ணம் அவளுக்கு இல்லை.

வீரன் கை பிடித்து சுற்றித் திரிந்த காலங்களில் அவனின் அதீத அன்பும் அக்கறையையும் அவளளவிற்கு யாரும் பெற்றிருக்கமாட்டார்கள்.

அவளிடத்தில் வீரன் எப்போதும் போல் தான் இருக்கின்றான். ஆனால் அவள் தான், அவன் மீது காதலை உணர்ந்த நாளே அதனை நெஞ்சின் அடி ஆழம் புதைத்து மறைத்துக்கொண்டாள்.

அவனது அன்றைய வார்த்தைகளே அதற்கு காரணம்.

அவனுக்கும் தன்மீது காதலிருக்குமென்று அவள் ஒருபோதும் நினைத்தது இல்லை. அவள் நன்கு பேசிய நாட்களில் கூட வீரன் ஒரு பார்வை ஒரு வார்த்தை நேசம் கொண்டவன் போல் வெளிக்காட்டியதில்லை.

கோபமாகவே இருந்தாலும் ஒரு நாளும் அவனோ அவளோ ஒருவரையொருவர் தவிர்த்தது கிடையாது. எட்ட நின்றுகொண்டனர். அவ்வளவு தான். அதிலும் அவள் மட்டுமே!

எப்போதும் அதட்டலோடு வலம் வரும் அவன் மனதில், தான் இருப்போமென்று அவள் எண்ணியதில்லை. அதனாலேயே தன்னுடைய காதலை எளிதாக மறைத்து வைத்துக் கொண்டாள்.

வீரனின் வாலட்டில் அவளது புகைப்படத்தை பார்க்காவிட்டால் இன்னமும் அவனது காதல் அவளுக்கு தெரிந்திருக்காது.

அவள் தெரிந்து கொண்டதாலேயே வெளிப்படையாகக் காட்டிடத் துவங்கியிருந்தான். அதனை அவளும் புரிந்து கொண்டாள்.

வீரனது பேச்சு, பார்வை, செயல் என அனைத்திலும் அவன் காதலை காட்டிட, அவள் தான் தவிக்கின்றாள். வேண்டுமென்கிற சமயம் வேண்டாமென்றும் மருகுகிறாள்.

மீனாள் அளவில் இருபக்கமும் அல்லாடும் வேதனை. அவளால் நிலைகொள்ள முடியவில்லை.

வீரன் தள்ளி சென்றால் போதுமென்று இருந்தது அவளுக்கு. அதற்காக மொத்தமாக அவனை அவளால் இழந்திட முடியாது. தன் மனம் அவனை எவ்வித கசப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் வரை விலகியிருந்தால் போதுமென நினைத்தே அவ்வாறு பேசினாள்.

“ஏன் மாமா. எதுக்கு பக்கம் வர. முடியல மாமா. எட்டவே நில்லு. அதுதான் எனக்கு நல்லது.”

அவளுக்கு நல்லது என்று சொல்லிய பின்னரும் அவளை அவன் நெருங்கிடுவானா? அவனுக்கே உரித்தானது.

தன்னை… தன் மனதை புரிய வைக்கவே, மருதனோடு ஒப்பிட்டு அவரின் வலியை கூறியிருந்தாள்.

வீரன் பல முறை முயன்றும் மருதனிடம் அவனால் இயல்பாக முடியாததை பிறர் அறிந்திருந்தனரோ இல்லையோ, அவள் அறிந்திருந்தாள். அதனாலேயே அவனால் முடியாததைக் கூறி அவனை எட்ட நிற்க வைக்க நினைத்தாள்.

ஆனால் வீரன் அவளுக்காக தன்னால் மனதால் முடியாததையும் முடித்து காட்டுவானென்று அவளே எதிர்பார்க்கவில்லை.

மருதனிடம் அனைத்தையும் மறந்து பேசிவிட்டான். அவளுக்காக பேசிவிட்டான்.

இனி அவளால் அவனை தள்ளி நிறுத்திட முடியுமா?

வாக்குவாதத்திற்கு காரணமானவர்களே இணைந்த பின்னர் அவளால் தான் தள்ளி நின்றிட முடியுமா?

அவன் வீசிய வார்த்தைகளை கடந்திடுவாளா?

“என்னக்கா உண்காம அங்கனவே பார்த்துக்கிட்டு இருக்க. சீக்கிரம் சாப்பிடு. படத்துக்கு போறோம்” என்ற அங்கையின் பேச்சிலே தன் பார்வையை அகற்றினாள் மீனாள்.

“அப்படி என்னண்ணே நடந்துச்சு. மீனாகுட்டி உன்னையவே வச்ச கண்ணு எடுக்காம பாக்குது” என்று மீண்டும் ஆரம்பித்த லிங்கத்தின் வாயிலேயே பொங்கலை அடைத்து வாய் மூடச் செய்தான் வீரன்.

“தேன்க்ஸ் மாமா!”

“யாருப்பா அது?”

வீரனுக்கு அடுத்தபக்கமிருந்த பிரேம் நன்றி சொல்லிட எதுக்கு எனும் விதமாக வீரன் பார்த்திட, லிங்கம் குரல் கொடுத்தான்.

“எனக்காக, ராத்திரி நான் சொன்னேன்னு ஐயாகிட்ட பேசினதுக்கு” என்ற பிரேமிடம் அப்படியிருக்காது எனும் சிரிப்பு.

“உனக்காக இருக்காதுன்னு உனக்கே தெரியுதுல. பொறவு என்னவாம்… நன்றி நவிழ்ற?”

லிங்கம் கேலி செய்ய,

“இல்லைன்னாலும் பரவாயில்லை. எனக்காகன்னு பொய்யாவது சொல்லு மாமா. அவன் மூக்கை உடைக்கணும்” என்றான் பிரேம்.

“உனக்காவும் தான். எல்லாருக்காகவும் தான்” என்று வீரன் சொல்ல… அவன் முன் வந்த மருதன், கையிலிருந்த பொங்கலை வீரனின் வாயருகே நீட்டினார்.

எவ்வித தயக்கமுமின்றி வாங்கிக்கொண்ட வீரனது விழிகள் மட்டுமல்லாது மருதனின் கண்களும் ஆனந்தத்தில் துளிர்த்தது.

இருவருமே பிறர் அறியாது சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டனர்.

“என்ன கோவமிருந்தாலும் தள்ளி நின்னுடாதப்பு. எல்லாரும் இருந்தாலும், நீயி பக்கட்டு இல்லைன்னா ஒத்தையில நிக்குறமாட்டிக்கு இருக்கு” என்றவரை,

“மாமா” என்று தாவி அணைத்திருந்தான் வீரன்.

“இது போதுமாட்டிக்கு அப்பு. இது போதும்” என்றவர் வீரனின் முகம் பற்றி கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைக்க…

“எனக்கு, எனக்கு” என்று லிங்கமும், பிரேமும் போட்டிப்போட…

“பெரிய மனுச தோரணையில் நடந்துக்குங்க. பொறவு கொடுக்குறேன்” என்று பாண்டியனிடம் சென்றுவிட்டார்.

“இனி நானெல்லாம் என் மாமன் கண்ணுக்கு தெரியமாட்டனே!” பாண்டியன் விளையாட்டாய் முறுக்கிக்கொள்ள…

“புள்ளை மேல பொறாமை புடிக்காதடே” என்று பாண்டியனின் கன்னத்திலே இடித்திருந்தார் மருதன்.

“ரொம்ப சந்தோஷமா இருக்குது மாமா. உம் மொவம் இப்போதேன் பளிச்சுன்னு இருக்குதாக்கும்” என்ற பாண்டியனின் முகமுமே அத்தனை ஒளியாய் இருந்தது.

அனைவரும் பொங்கல் உண்டு முடித்து சற்று இளைப்பாறுதலாக அமர்ந்திருந்தனர்.

“அப்பத்தா ஆலைக்கு வந்தின்னா, வேலையாளுவளுக்கு பொங்கக்காசும் துணியும் கொடுத்துப்புடலாம்” என்றான் வீரன்.

நேரம் காலை ஏழு மணி தான் ஆகியிருந்தது.

“செத்த நேரம் செண்டு போவோம் அமிழ்தா” என்று அப்பத்தா சொல்ல…

“ஹோட்டலுக்கு போறியாடே?” என லிங்கத்தைக் கேட்டார் அபிராமி.

“இல்லம்மா. படத்துக்கு போறோம்” என்றான்.

“நீயுமா வீரா?” அபி.

“இல்லம்மா!”

“படம் எப்போடே முடியும்?”

“பதினோரு மணி தொடக்கம். ரெண்டு ரெண்டரை ஆகிப்போவும்மா!” என்ற லிங்கம் “என்னத்துக்கு விசாரிக்குற?” எனக் கேட்டான்.

“சுபா வராடே! எட்டு மணிக்கு பஸ் ஏறுறா(ள்). பன்னெண்டு மணிக்கு மருத வந்திடுவாளே! அந்நேரம் செண்டு கூட்டியாரனும்” என்றார்.

“ஏன் மருதயல இருந்து பஸ் பிடிச்சு வர தெரியாதாக்கும்?” என்ற லிங்கம், “உன் அண்ணாரு காரில் அனுப்பலையோ?” எனக் கேட்டான்.

சுபாவதி, அபிராமியின் அண்ணன் மகள். சேலத்தில் இருந்து வருகிறாள்.

“அவள் மட்டுந்தேன் வராடே! ட்ரைவர் கொண்டு போய் விடுவாருன்னதுக்கு பஸ்லே போயிக்கிறேன் சொல்லிட்டாளாம்!” என்ற அபிராமி, “நீயி போயி கூட்டியார முடியுமா அமிழ்தா?” என்றார்.

“பன்னெண்டு மணிக்குத்தானே! நான் கூட்டியாந்துடுறேன்” என்ற வீரன், மீனாளின் கண்களில் முறைப்பு தெரிந்ததோ என்று எண்ணினான்.

அபிராமி கேட்டதற்கு வீரன் சரியென்றதுமே அவனை முறைத்தவள் தான், அவன் பார்த்ததும் பார்வையை மாற்றிக் கொண்டிருந்தாளே!

விலக வேண்டுமென நினைப்பவள் காரணமே தெரியாது அவனை நெருங்கவும் நினைக்கிறாள்.

“வருசா வருசம் கோடை லீவுக்கு தானே வருவாள்?” மீனாட்சி கேள்வியாய் இழுக்க,

“வேலையில அழுத்தமாம். மன மாறுதலுக்காக அனுப்பி வைக்கிறேன்னு அண்ணே சொன்னாக அத்தை” என்றார் அபிராமி.

“படத்துக்கு நீயி வரலையாண்ணே? உனக்கும் சேர்த்திதான் டிக்கெட் போட்டிருக்கு” என்றாள் நாச்சி.

“சோலி கெடக்கு நாச்சிம்மா. நீங்க போயிட்டு வாங்க” என்றவன்,

“நான் ஆலைக்கு போவுறேன். அப்பத்தாவா கூட்டிகிட்டு வந்து சேரும் ஐயா” என்றதோடு, “வர்றீயா மாமா?” என மருதனிடம் கேட்டிருந்தான்.

அவர் சிறுவனாக துள்ளி குதித்து அவனது வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்து, அவனின் தோளினை பற்றிக்கொண்டார்.

“இந்த அலப்பறை தான் இல்லாம இருந்துச்சு. இனி ஆலைக்கும், வீட்டுக்குமா ரோடு தேயும்” என்று சடைத்துக் கொள்வது போல் அப்பத்தா அவர்களின் முன் பழக்கம் மீண்டும் தொடர்வதை எண்ணி மகிழ்வாகவே கூறினார்.

இருவரும் சிரித்துக்கொண்டே வண்டியை கிளப்பிக்கொண்டு செல்ல…

மீனாளுக்கு அவர்கள் இருவரும் வண்டியில் சுற்றிய நிகழ்வுகள் ஊர்வலம் வந்து கண்களை கரிக்கச் செய்தது.

“பத்து மணி பக்கம் வீட்டுக்கு வந்திடு மீனாகுட்டி. தியேட்டருக்கு போவ சரியா இருக்கும்” என்று லிங்கம் சொல்ல வெறுமென தலையாட்டி வைத்தாள்.

“எம் மேல கோவம் போயிடுச்சா அப்பு?”

மருதன் இவ்வாறு கேட்பாரென்று வீரன் எதிர்பார்த்தானோ?

“நடந்ததையே மறக்க முயற்சி செய்யுறேன் மாமா” என்றான்.

மறந்துவிட்டேன் என்று பொய் கூறாது, முயற்சிக்கிறேன் என்று உண்மையை சொல்லியதே மருதனுக்கு போதுமானதாக தெரிந்தது.

“வூட்டுக்கு போயிட்டு போவோம் மாமா” என்ற வீரன் வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தி உள் செல்ல… மருதன் வழக்கம்போல் திண்ணையில் அமர்ந்தார்.

நின்று திரும்பியவன்,

“பழி வாங்குறியா மாமா?” எனக் கேட்டது தான், அவனை இடித்துக்கொண்டு வேகமாக உள் வந்தவர் முற்றம் இருக்கையில் கால் மேல் காலிட்டு தோரணையாக அமர்ந்தார்.

“அது” என்ற வீரன் தனதறைக்கு சென்று இரண்டு நிமிடத்தில் கீழ் வந்தான். சட்டையை மாற்றியிருந்தான்.

“அந்த சட்டையே நல்லாயிருந்துச்சே அமிழ்தா!”

“ஆஹான்” என்றவன் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை. இனி அந்த சட்டை அவனுக்கு பொக்கிஷமாயிற்றே! தன்னவளின் வாசம் பரவிய ஆடையில் அவனது ஜீவன் குடிகொண்டது.

அடுத்த மூன்று மணி நேரம் இறக்கை கட்டி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இவர்கள் ஆலைக்கு சென்று சேர்ந்த பத்து நிமிடங்களில் பாண்டியன் மீனாட்சியை அழைத்து வர, அங்கு வேலை செய்யும் அனைத்து ஆட்களுக்கும் பணம், புதிய ஆடைகளென கொடுத்து இல்லம் வர பத்துக்கு மேலாகியது.

“என்னடே இன்னுமாட்டி கெளம்பாம இருக்கீங்க?” வீரன் வண்டியை நிறுத்தியபடி திண்ணையில் அமர்ந்திருந்த பிரேமிடம் வினவ,

“இந்த லிங்கம் உள்ள என்ன செய்யுறான்னே தெரியல மாமா” என்றதோடு, “நாச்சியாவும், அங்கையும் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்றான்.

“நீங்க ரெண்டேறும் உண்கலையோ?”

என்ற வீரன் அந்த பெரிய திண்ணையில் பிரேமின் ஒரு பக்கம் மீனாள் அமர்ந்திருக்க மற்றொரு பக்கம் சென்று குதித்து அமர்ந்தான்.

“அதெல்லாம் ஆச்சு” என்ற பிரேம், “ஐயா, மாமா, அப்பத்தாலாம் அரை மணி முன்னவே வந்துட்டாய்ங்க. நீயி இப்போதேன் வார?” எனக் கேட்டான்.

“கொஞ்சம் கணக்கு வேலை இருந்துச்சு” என்றான்.

“அதான் வேலையெல்லாம் முடிஞ்சுதே! நீயும் வாயேன் மாமா?”

“இல்லைடே… நாளைக்கு கட்ட மாடுகளுக்கு புது கயிறு, பெயிண்ட்டெல்லாம் வாங்கணும்” என்று வீரன் மறுத்தான்.

“படம் முடிஞ்சு வரும் போது வாங்கிக்கலாம் மாமா!”

“அண்ணே அவிங்களுக்கு முக்கியமான ஆளை கூட்டியாற சோலி கெடக்கு நீயியேன் வம்படியா கூட்டிட்டு இருக்க?” என்று மீனாள் சொல்லியதும்,

பிரேம் “மறந்துட்டேன் மீனு” என்க, வீரனோ அவளை அர்த்தமாக பார்த்தான்.

“இவிங்க இன்னும் என்ன பண்ணுறாய்ங்க தெரியல. நான் பார்த்துட்டு வாரேன்” என்று பிரேம் எழுந்து செல்ல… வீரன் தன் பார்வையை நேர்கொண்டு வைத்தான். வாய்க்காலில் ஓடும் நீரின் தடதடப்பு போல் தான் அவனின் ஆழ் மனமும் தடதடத்தது.

‘நான் கிட்ட வந்தாக்க வலி சொன்ன நீயி இப்போ பாக்குற பார்வை, பேச்சுக்கு அர்த்தம் விளங்க மாட்டேங்குதுடி. என்னதேன் என்கிட்ட எதிர்பார்க்குற?’ மனதோடு வினவியவனுக்கு பதில் தான் கிட்டவில்லை.

“எதுல போறீங்க?”

பதில் சொல்லாது அவளை ஏறிட்டான்.

“உங்க மாமன் மகளை கூட்டியாற எதுல போறீங்கன்னு கேட்டேன்” என்றாள்.

இவள் அமைதியான அவனது தங்கப்பொண்ணு இல்லையென்று புரிந்த கணம் அவளது உள்ளுக்குள் உண்டான உரிமை உணர்வு போராட்டமும் வீரனுக்கு புரிந்தது.

போனமுறை சுபா வந்திருந்த போது அவளை இருசக்கர வாகனத்தின் பின்னால் கூட்டிச்சென்ற அடுத்த நாள் வண்டி திடீரென ஓட்டவே முடியாதளவுக்கு பழுதாகியதன் காரணம் இப்போது பிடிபட்டது.

மௌனமாக சிரித்துக்கொண்டான்.

‘நான் வேணாமாம். நானா விலகிப் போவனுமாம். ஆனா இந்த பொஸஸிவ்னெஸ்க்கு குறைச்சலில்லை’ என நினைத்தவன் எந்தவொரு பதிலும் சொல்லவில்லை.

“இப்படி வாப்பெட்டியை திறக்கலன்னா என்ன அர்த்தம்? என்னைய மட்டும் காலையில பதில் சொல்லுன்னு அதட்டுனீங்க?” என்றாள்.

“உனக்கு வலியாகுமே!” என்றானேத் தவிர, அவளுக்கான பதிலை அவன் கொடுக்கவில்லை.

வீரன் சொல்லியதில் அவள் தான் தன் மனமே தனக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து நெஞ்சம் துடிக்கத் தன்னவனை பார்த்திருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
31
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. வீரன் புல் ஃபார்ம்ல லவ்வோட இருக்கான் … ஒரு காதல் என்ன செய்யும் … காலம் தந்த காயங்களை ஆற்றும் … காதலுக்காக எதையும் செய்ய சொல்லும் … வீரா மீனா காதல் குடும்பத்தையே மறுபடியும் சந்தோஷமா மாத்திடுச்சு … புதுசு புதுசா கேரக்டர் வர்றாங்க … போட்டிக்கு நிறைய ஆள் இருக்கு போல …

    இந்த வட்டார பேச்சு வழக்கு தான் கதைக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் … அத அழகா எழுதியிருக்கீங்க … அது கதைக்கு இன்னும் நெருக்கமா ஃபீல் பண்ண வைக்குது 👏🏻👏🏻👏🏻

  2. பொத்தி வைத்து காத்திருக்கும் அவனின் காதல் – அழகான கவிதை…

    1. Author

      மனமார்ந்த நன்றி அக்கா ❤️

    2. அவளாகவே கை சேர வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ள வீரனின் மனதை வதைக்க அப்படி என்ன சொல்லி சென்றிருப்பாள் மீனாள்?

      மீனாளின் மஞ்சள் வாசம் மாமன் மேல் வீசுதோ! 😍😍

      யாரு என்ன அலப்பறைய கூட்டுவாங்கனு எந்நேரமும் பீதியோடையே சுத்த விடுறாங்க வீரன.

      லிங்கம் இப்படி பச்சமண்ணா இருக்கியேபா! எந்நேரமும் அண்ணனையே நோட்டம் விடாம கொஞ்சம் அக்கம் பக்கமும் பாரு.

      மருதனின் மூத்த குழந்தையின் வாயிலிருந்து முத்தாய்பாக “மாமா” என்ற வார்த்தை கேட்க பெற்றாயிற்று. மகிழ்ச்சி ❤️

      மகளுக்கு மாமனிடம் இருக்கும் அதே போன்றதொரு கோபம் தானே மாமனிடம் அவர் மருமகனுக்கும். இருவரும் அதனை மறக்க முயற்சிக்கலாம்.

      அவன் வேண்டாம் அவனாக விலகி போக வேண்டும் என்று இவள்.

      அவள் வேண்டும் அவளாகவே வர வேண்டும் என்று இவன்.

      1. Author

        எல்லாம் விரைந்து சரியாகிவிடும் சிஸ்… மிக்க நன்றி