
விடியும் முன்….!
அத்தியாயம் 01
கத்தி கத்தி அழுத தன் தோழியை பார்க்கையில் அவளுக்கு எரிச்சல் தான்.
ஆனாலும், என்ன தான் செய்திட…?
“ப்ரியா..அழாதடி எரிச்சலா இருக்கு..” சொன்னவளின் குரலில் உச்சபட்ச எரிச்சல்.
“நா..நா..அவன எவ்ளோ லவ் பண்ணேன் தெரியுமா..?” கேட்டபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்த அடுத்த கணமே விழிகளில் இருந்து மீண்டும் நீர் வழிந்தது.
“நா அப்போவே சொன்னேன்..அவன பாத்தா சரியான ப்ளே பாய் மாதிரி இருக்கான்னு..நீ கேட்டியா..?ஊர் விட்டு ஊர் வந்து அவன் நல்லவனா இருப்பான்னு நீ மட்டும் தான் மெச்சிக்கனும்”
“நேத்து அவன அவ கூட பாக்குற வர நா நம்பல டி..எவ்ளோ உரிமயா கைய பிடிச்சிகிட்டு நின்னுட்டு இருந்தான்!”
ஏனோ அவளின் கரங்களை இறுகப்பற்றி அவன் நின்றிருந்த தோற்றம் நினைவில் வந்திட இன்னும் அழுகை வந்திற்று.
இதழரோம் ஒளிந்து கொண்டிருந்த அந்த புன்னகை..
விழியோரம் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த துள்ளல்..
முன்னிருந்தவளை விட்டு அகலாது,விழியில் கோர்த்திருந்த அவன் காதல் சூழ் பார்வை..
ஏனோ அந்த கூரிய விழிகளில் முற்றாக கசிந்த காதலும்,அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்த உரிமையுணர்வும், ஏனோ அவளின் மனதை முற்றாக உடைக்கத் தானே செய்தது.
“சரி..விடு..இதுவும் கடந்து போகும்..அந்த ரமேஷுக்கும் லவ்வர் இருக்குன்னு தெரிஞ்சப்றமும் இப்டி தான அழுத..விடு..” தோழியின் குணத்தில் கோபம் கொண்டவளாய் கொஞ்சம் சத்தமாகவே பேசியிருந்தாள்,
அவள்.
கண்டவுடன் விரும்புவதும்..
அதை காதல் என்று நம்புவதும்..
பின் அவன் வேறு பெண்ணை விரும்பவுது தெரிந்து அழுது தீர்ப்பதும்..
பல முறை நடந்தேறிய விடயம் ஆயிற்றே.
ஏனோ தோழியின் கூற்றில் ப்ரியாவுக்கு கோபம் ஏறிற்று.
“அப்போ நா யாரயும் லவ் பண்ணலனு சொல்றியா..?” மூக்கு விடைக்க கேட்டவளின் செயலில் இவளுக்கு எகிறிற்று.
“ஆமா..ஒரு இன்பாக்ஷுவேஷன காதல்னு நம்பி..அது பின்னால சுத்தி..உண்ம தான..” கடுப்புடன் தோழி சொல்ல உறுத்து விழித்த படி நகர்ந்தாள், அவள்.
“இதுவே உண்மயான லவ் ஃபெயிலியரா இருந்தா இப்டிலாம் அடுத்த நிமிஷமே சாப்ட போக மாட்ட ப்ரியா..” தோழியின் அடுத்த கட்ட நடவடிக்கையை உணர்ந்தவளாய் சொல்ல ப்ரியாவின் அனல் பார்வை இவளை தழுவி மீண்டது.
விடுதி அறையின் கதவை அறைந்து சாற்றி விட்டு ப்ரியா வெளியே செல்ல,ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவாறே கட்டிலில் சாய்ந்தவளுக்கு நேற்று இரவு தோழியும் தானும் கண்ட காட்சி தான் நினைவில்.
அவனின் முகத்தை கண்டிருந்தாலும், அவனருகே நின்றிருந்த பெண்ணின் முகத்தை காணவில்லையே.
அதிலும் அந்த விழிகளில் ஓடிய உணர்வுகளைக் கண்ட போது,அவளுக்கான அவனின் காதலில் பொய் இருக்கும் என்கின்ற எண்ணம் துளியும் எழவில்லை.
“அப்டின்னா..அந்த ப்ளே பாய் ஆர்யா..அவள நெஜமா காதலிக்கிறானா..?” அவள் மனசாட்சி கேள்வி எழுப்ப என்ன பதில் சொல்ல அவளும்.
ஆர்யாவின் அட்டகாசங்களை அவளும் கண்டிருக்கிறாளே.
அவனும் அவனுடன் இருக்கும் மற்றையவனும்..
நினைக்கும் போதே கொஞ்சம் அறுவறுப்பும் வெறுப்பும் நெஞ்சில்.
தன் தலையில் அடித்துக் கொண்டு புத்தகத்தில் தன்னை நுழைத்துக் கொண்டாள்,
அவள்.
அவள் கயல்விழி.
●●●●●
வெளியில் சோவென மழை கொட்டிக் கொண்டிருக்க அதை மழையில் தொப்பலாய் நனைந்து இருந்தவனின் சிகையோரம் நீர்த்திவலைகள்.
கீழே அடிவாங்கிக் கிடந்தவனைக் கண்டதும் அவன் முகத்தில் அப்படி ஒரு பழிவெறி.
தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய கோபம் இருக்க அவனின் செயல்களால் முட்டாளாகிய தன் மீதான கோபமும் அடிவாங்கியவனின் மீதே ஆத்திரமாய் வெளிப்பட்டது.
“என்னயே ஏமாத்திட்டல…உனக்கு நா யாருன்னு காட்றேன்டா..” என்ற படி எழுந்து அவனின் தொடையில் ஒரு உதை விட அடி வாங்கியவனுக்கு கொஞ்சமும் திராணியில்லை,
எதிர்த்து நின்றிட..
“எல்லாம் அவளுக்காக தான..” அவன் கேட்டிட விரக்திப் புன்னகையினை சிந்தியவனின் நினைவில் நிழலாடியது,அவன் மனம் கவர்ந்தவளின் முகம் தான்.
ஏனோ அந்த நொடி தான் அவள் மீதான நேசத்தின் ஆழத்தை அவன் முற்றாக புரிந்து கொண்ட உணர்வு.
விழிகளில் கொஞ்சம் நீர் கோர்த்தது.
“உன்..உன்னால எது..எதுவும் பண்ண..பண்ண முடியா..முடியாதுடா..” திக்கித் திக்கித் சொன்னவனின் விழிகளில் பயம் கிஞ்சிற்றும்,இல்லாது போக இதழ்களில் அர்த்தப் புன்னகை.
அதற்கான காரணம் அவனுக்கும் அந்த ஆண்டவனுக்கும் இன்னொருவனுக்கும் மட்டுமே வெளிச்சம்.
“வாட்..ஒன்னுமே பண்ண முடியாதா..க்ரேஸி..” புன்னகையுடன் சொன்னவனின் முகம் அடுத்த நொடி ரௌத்திரமாகிட ஓங்கி உதையொன்று வைத்தான்,அவனின் அடிவயிற்றில்.
விழுந்து கிடந்தவனின் புன்னகை இன்னுமே மறையவில்லை.
ஏனோ, அடித்தவனுக்கு அவன் தன்னைப் பார்த்து எள்ளலாய் நகைப்பது போன்ற எண்ணம்.
“ஆர்யா..சிரிக்காத..” தன் உள்ளத்தில் குமுறும் கோபத்தை அடக்க வழி தெரியாது உறுமினான்,வாசு.
“நீ த..தப்பு பண்ணுன..இப்பவு..இப்..இப்பவும் தப்பு ப..பண்ற வா..வாசு..” என்றவனின் விழிகளில் பல்வேறு அர்த்தங்கள்.
“வாட்…நானா தப்பு பண்ணேன்..நீ தான் பண்ணுன..?” கூறியவாறு தன் கழுத்தை தடவினான்,
வாசுதேவன்.
“நீ ப..பண்..பண்ண சொ..சொன்னது..தா..தான் பெரிய..பெரிய தப்பு..”
“ஆமா..நா சொல்லி நீ செஞ்சது பெரிய தப்பு தான்..பின்ன அது என்ன சின்ன தப்பாவா இருக்கும்..?” என்றவனின் கரமோ அருகே இருந்த இரும்புக் கம்பியை கையில் எடுத்தது.
“வே..வேணா..உன்..கை..கையால எ..என்ன கொ..கொன்னுடாத வாசு..த..தப்பு பண்ற..நீ..நீ..கவல..கவலபடுவ..”
“ஹா..ஹா..உன்ன கொன்னுட்டு நா எதுக்குடா கவலபடனும்..துரோகி..” என்றவாறு அந்த இரும்புக்கம்பியால் ஆர்யாவின் பின்னந்தலையில் ஓங்கி அடித்திருந்தான்,வாசு.
குருதி அருவியாய் ஓட அப்படியே மயங்கிப் போனான்,
ஆர்யா.
தன்னருகே நின்றவனை பார்த்து, ” நீ போய் போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் ஆயிடு இன்னிக்கே..”என்றிட ஆமோதித்தான்,
அவன்.
தன் காரியம் முடிந்த திருப்தியில் சிறு புன்னகையுடன் வாசு கிளம்பிச் செல்ல இத்தனையையும் அருகே நின்று கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகேஷுக்கு ஆர்யாவை அப்படியே விட்டுச் செல்லும் எண்ணமில்லை.
வாசுதேவனின் நம்பிக்கைகுரிய அடியாட்களில் ஒருவன் தான் மகேஷ்.என்ன தான் முதலாளிக்கான விசுவாசம் முன்னிலை வகித்தாலும் மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறதே.
அதிலும் அன்று தன்னைப் பற்றி பாராது அவன் மகளை காப்பாற்றியவன் தானே இந்த ஆர்யா.
அந்த நன்றியில் கொஞ்சமாவது இருக்கத் தானே செய்யும்.
பக்கமெங்கும் ஓடிய குருதி ஆர்யாவின் சட்டையின் முதுகுப்புறத்தை நனைத்திருக்க அவனிடம் சுவாசம் இருக்கத் தான் செய்தது.
அனைவரையும் வெளியேறச் சொல்லி விட்டு ஆர்யாவை அப்படியே அள்ளி தன் தோளில் போட்டுக் கொண்டவனின் விழிகளில் ஒரு வித அடிபட்ட பாவம்.
இத்தனை நாள் இல்லாது முதன் முதலாய் தனது தொழில் கோபம் எழுந்திருக்க தன்னைப் பற்றியே ஒருவித கீழ்மையான எண்ணம் அவன் மனதினில்.
யாரும் அறியாது வேறு வழியின் மூலம் நடந்து அந்த கட்டடத்தின் பின்னே இருக்கும் ஒற்றைவழிப்பாதையின் துவக்கத்துக்கு வந்திட ஆர்யாவின் நேரமோ, என்னவோ ஒரு முச்சக்கர வண்டி வந்தது, அவர்களை நோக்கி.
●●●●●●●
அன்று இரவு நேரம்!
“ஹேய்….திவி…திஸ் ஈஸ் இன்ட்ரஸ்டிங்..”
“யக்கோவ்..மூடிட்டு படு…நடுராத்திரில மனுஷன கடுப்பேத்தாம..”
“இல்ல திவி..இது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு…”
“என்னக்கா..உளறிகிட்டு இருக்க..தூங்க விடுடி..”
என்று தங்கை போர்வையால் தன் முகத்தை மூடிக் கொள்ள,
தமக்கைக்கோ கோபம்.
“போடி..உங்கிட்ட சொல்ல வந்தேன் பாரு..”
நெடித்துக் கொண்ட,
தமக்கையின் ஆதங்கம் அசைத்து பார்த்தது,
தங்கையையும்.
கொட்டாவி விட்ட படி எழுந்தமர்ந்தவள்,
“சரி..சொல்லு கேப்போம்..”
என்க தர்ஷினியின் கண்களில் அத்தனை ஆர்வம்.
“நாம நாளக்கி போகப்போற ஊர் ரணதீரபுறம்..”
“நாம இல்ல நீங்க…”
“ம்ம்ம்..இப்ப இதான் முக்கியம்ம்ம்ம்ம்..”
“சரி..சரி கோச்சுக்காத…மேல சொல்லு..”
“அந்த எடம் பத்தி..
டீடெயில்ஸ் கலெக்ட் பண்ற வேலய பிரிச்சுகிட்டோம்..”
“சரி….”
“இப்போ..இந்து..அவளோட பாட்டி சொன்னதா ஒரு கதய க்ரூப்ல ஷ்யார் பண்ணிருக்கா…”
“பாட்டீஈஈஈஈஈஈஈ”
“ஆமா..பாட்டியோட தாத்தா.. ஐ மீன் அவ பாட்டியோட…அப்பாவோட அப்பா..அங்க தான் வளந்தவருனு சொல்லிருக்கா…”
“மேல சொல்லு..நம்புறதானு யோசிக்கலாம்..”
“அவங்க பாட்டிக்கு அவங்க அப்பா சொன்ன கதய தான்..இங்க சொல்லிருக்கா…”
“சரிஇஇஇஇ”
“ஆனா, என்னோட ஊகம் அது ஒரு கற்பன கதயா தான் இருக்கும்…”
“ஆமா..உண்மயா இருக்குறதுக்கான சான்ஸெஸ் ரொம்ப கம்மி தான்..”
“ம்ம்ம்…”
“சொல்லுக்கா கதய…கத சொல்றேன்னு நடுராத்திரில எழுப்பிட்டு முன்னோட்டமே மூணு மணி நேரமா போய்கிட்டு இருக்கு…”
“………..”
“சரி சரி..மொறக்காத சொல்லு…”
“இந்த ரணதீரபுரத்தோட பேரு முன்னாடி ரணதீரன் கோட்டைனு இருந்திச்சாம்..இப்போ தான் ரணதீர புரம்னு மாத்திட்டாங்களாம்…”
“ம்ம்ம்ம்…”
“ரொம்ப வருஷம் முன்னாடி அந்த எடத்த வஜ்ரன்னு ஒரு அரசர் ஆட்சி செஞ்சுட்டு இருந்தாராம்…அவரோட தளபதி தான் இந்த ரணதீரன்”
“நெனச்சேன்…இதுலே புரில இது கற்பன கத தான்னு…”
“கொஞ்சம் கேளு..அதுக்கப்றம் டிசைட் பண்ணலாம்..”
“சரி..சரி…”
“அவர் பொறந்தது..ஒரு அமாவாச நாள்ல..அதுவும் ஒரு ஸ்பெஷலான டைம்ல…அந்த டைம் ரொம்ப ஸ்பெஷல் தானாம்..”
“அதுக்கென்ன இப்போ..”
“ம்ம்ம்..சொல்றேன் கேளு..”
“சரி..சொல்லு இப்போ..”
“வீரம் விவேகம் கம்பீரம் னு ஆளும இந்த தளபதி கிட்ட நெரம்பி வழிய எல்லாரோட கண்ணும் அவர் மேல தானாம்..”
“முக்கியமா பொண்ணுங்க கண்ணு அதானே..”
“ஆமா..ஆமா…”
“சரி..சரி சொல்லு மேல..நாளக்கி காலேஜ் வேற இருக்கு..”
“ஆனா..அந்த தளபதி எந்த பொண்ணயும் ஏறெடுத்து பாக்க மாட்டாராம்..”
“ஹ்ம்ம்ம்…கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு..”
“ஒரு நாள் அவர் காட்டுக்கு போற டைம் வழியில ஒரு பொண்ண பாத்தாராம்…”
“அந்த பொண்ணு பேரழகி..பாத்தவுடனே லவ் புட்டுகிச்சு..அதானே..”
“அதான் இல்ல..”
“மாறு வேஷத்துல போனதால அந்த பொண்ணுக்கு அவர் தான் தளபதின்னே தெரியாது..அப்போ அவ அவர்கிட்ட சாதாரணமா நடக்க அவருக்கு புடிச்சு போய்டுச்சு..அதானே…”
“அடியேய்…கொஞ்சம் வாய மூடிட்டு கேளுடி…”
“சரி..சரி…சொல்லு…சொல்லு…”
“அந்த பொண்ணுகிட்ட அங்க அருவி பக்கம் போற வழியெதுனு கேட்டாராம்…”
“அந்த பொண்ணும் வழி சொல்ல இவர் கெளம்பி போனாராம்..”
“அப்போ..இது ஹீரோயின் இல்லியா..நாம வேற அவசரப்பட்டுடோமே..”
“அதான் சொன்னேன்ல…பொறுமயா கேளுன்னு..”
“சரி மேல சொல்லு..”
“அப்போ அங்க மரத்தடியில ஒரு பொண்ணு உக்காதிரிந்துச்சாம்..”
“ஐ நம்ம ஹீரோயின்..”
“………..”
“ஐயோ…மொறக்காதடி…சொல்லு..சொல்லு..”
“அப்போ அந்த பொண்ணு..ப்ளூ கலர் கோஸ்டியூம் போட்டிருதிச்சாம்..அத கண்டு தளபதி ஷாக் ஆகிட்டாராம்..”
“ப்ளூ கலர் அவரோட ஃபேவரிட்டோ..அதுக்கா ஷாக் இருக்காரு…”
“அதான் இல்ல..அந்த தளபதிக்கு கண்ணால கலர பாக்க முடியாதாம்..ஒன்லி ப்ளேக் என்ட வைட் தான் பாக்க முடியுமாம்..”
“அப்போ இந்த எடத்துல…”
“தளபதிக்கே ஷாக்காம்…படக்குன்னு கண்ண மூடி திறந்து பாத்தா..யெல்லாம் ப்ளேக் என்ட் வைட்டா திரும்ப தெரிதாம்..”
“ஓஹ்ஹ்ஹ்..”
“ம்ம்ம்…தளபதியோட அம்மா ஒரு விபத்துல எறந்து போய்ட்டாங்களாம்…அவங்கள லாஸ்டா இந்த கலர்ல தான் தளபதி பாத்துருக்க…அவர் மனசு என்னமோ பண்ணுச்சாம்..”
“அது ஏன் அப்டி..?”
“பொறந்ததுல இருந்தே..கலர்ஸ் பாக்க முடியாத தளபதிக்கு இரண்டு தடவ தான் அந்த கலர்ஸ் தெரிஞ்சுருக்கு…
ஒன்னு அவங்க அம்மாவோட யெறப்பு..
ரெண்டாவது இந்த பொண்ணு..”
“ம்ம்ம்ம்ம்…டிபரென்ட் ஆ தான் இருக்கு..”
“அதான்…அதுக்கப்றம் அப்பப்போ அந்த பொண்ண பாக்கும் போது அந்த அவர் மனசு என்னமோ பண்ணுமாம்..”
“வேறென்ன லவ்ஸ் தான்…”
“கரெக்ட்..ஆனா அந்த பொண்ணுக்கு விருப்பம் இருக்கானு தெரியலியே தளபதிக்கு..”
“அப்றம்…”
“ஒரு நாள் டைரக்டா அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்டுடாராம்..”
“ஹேய்ய்ய்ய்ய்..”
“ம்ம்ம்ம்…யெஸ்..காதல்ன்ற பேர் கடல போடாம பொண்ணு கேட்டு வந்த தளபதிய அந்த பொண்ணுக்கும் ரொம்ப புடிச்சுருந்துச்சாம்..”
“அதுக்கப்றம்..”
“அதுக்கப்றம் என்ன…
டும்டும்டும் தான்..”
“ம்ம்ம்…”
“அவங்களுக்கு கல்யாணம் நடந்து மூணு வருஷம் ஆயிருந்த நேரம்..அவங்களுக்கு ஒரு பெண்கொழந்த இருந்துச்சாம்..”
“அது பேர் என்ன..?”
“………..”
“ஏன்டி மொறக்கிற..”
“கதய மட்டும் கேளு..குறுக்க குறுக்க கேக்காத..நான் கன்பியூஸ் ஆயிடுவன்…”
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்…சரி..”
“அப்றம் ஒரு நாள் அடுத்த நாட்டோட யுத்தம் செய்ய போன தளபதி உயிரோட திரும்பி வர்லயாம்…ஆனா அவரொட உயிர் மிஸஸ் ரணதீரன பாத்துகிட்டே பிரிஞ்சு போயிருச்சாம்”
“ஹேய்ய்ய்ய்ய்..”
“அப்றம் தளபதியோட வைப் அத ஏத்துக்க முடியாம தவிச்சு போய் கெடக்க அவங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவங்க மக தானாம்…ஆனா..தளபதி வைஃப்கு தளபதி தன்னோடவே இருக்குறதா ஒரு பிரம்ம..”
“பாவம் அந்த பொண்ணு..”
“ம்ம்ம்ம்.. இரண்டு வருஷம் கழிச்சு ஒரு நாள் தளபதி ரணதீரன கொன்ன அனழேந்தி செத்துட்டான்னு நியூஸ் வந்துச்சாம்..”
“அப்போ..தளபதிய கொன்னவன் பேரு அனழேந்தியா…?”
“ஆமா..”
“அனழேந்தி நல்லவனா..கெட்டவனா…?”
“கெட்டவன் தான்..அவன மிருகம்னு தான் சொல்லுவாங்களாம்”
“அப்றம்…”
“ஆனா…அதிசயம் மாதிரி அனழேந்திய கொன்னுட்டதா எல்லோரும் நெனச்சி கிட்டு இருக்கும் போது அவன் உயிரோட திரும்ப நம்ம தளபதி யோட நாட்டுக்கே திரும்பி வர…”
“ஹேய்ய்ய்…”
“எல்லாருக்கும் செம ஷாக் ஆம்..”
“அவன் வந்ததே,
எல்லாருக்கும் பயம்னு இருக்க வந்தவன் முதல் வேலயா யென்ன பண்ணுனான் தெரியுமா..?”
“என்ன பண்ணான்..?”
“கண்ணீரும் கம்பலயுமா விதவக் கோலத்துல இருந்த தளபதியோட வைஃப் அ அவ புள்ளய கொல பண்ண போறதா மெரட்டி உருட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டான்..”
“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்
..ஒரு வேள தளபதிக்கு முன்னால இந்த அனழேந்தி மிஸஸ்.ரணதீரன விரும்பி இருந்தாரா..?”
“அதான் இல்ல…மண்ணாச பொன்னாச பெண்ணாச னு சுத்திகிட்டு இருந்த அனழேந்தி கு காதல் எப்டி வரும்…?
அதுவும் சாதாரண அழகோட இருக்குற மிஸஸ்.ரணதீரன் மேல வந்திருக்குமா..?
இல்லயே..?”
“அப்போ…”
“சொல்றேன் கேளு…”
“அதுக்கப்றம் தளபதியோட வைப் எத்தனயோ தடவ அவன்கிட்ட இருந்து தப்பிச்சு போக பாக்க அது தான் முடியல..அவங்க பொண்ணு அனழேந்தி கிட்ட அப்பா அப்பானு சொல்லி நல்ல ஒட்டுதலா இருக்க அவங்க எப்டி விட்டுட்டு போவாங்க பொண்ண…”
“அப்போது அனழேந்தி திருந்திட்டானா..?”
“ம்ம்ம்..மிஸஸ்.ரணதீரனுக்கு அப்டி தான் தோணுச்சாம்..ஏன்னா அவங்கள கல்யாணம் பண்ணதுல இருந்து அவன் எந்த அநியாயமும் பண்ணல அவங்களுக்கு..”
“அப்றம்..”
“என்னதான் அவன் நல்லவனா மாறிட்டாலும்…தளபதியோட வைப் இந்த மறுமணத்த ஏத்துக்க முடியாதுனே இருந்தாங்க…பிகோஸ் அவங்க மனசுல ரணதீரன் அவ்ளோ ஆழமா எடம் புடிச்சு இருந்தாரு..”
“ஹ்ம்ம்..”
“இப்டியே..ஒரு வருஷம் போக..ஒரு நாள் அனழேந்தி நான் தான் ரணதீரனு சொல்ல மிஸஸ்.ரணதீரனுக்கு பெரிய ஷாக்…”
“ஹேய்ய்..என்னடி கொழப்புற…”
“சரி..சரி தெளிவா கேளு…”
“ரணதீரன் பொறந்த நாளும் டைமும் ரொம்ப ஸ்பெஷல்…அதுவும் அந்த ஊர் கோயில்ல சாமி சந்நிதில பொறந்திருக்காரு..அப்டி பொறக்குறவங்களுக்கு வரமொன்னு கெடக்குமாம்..”
“இப்போ..”
“வெயிட்..வெயிட்…கன்பியூஸ் ஆகாத…நான் சொல்றேன்..அப்டி பொறக்குறவங்கள யாராவது கொன்னா கொன்னவங்க பாடிக்குள கொன்னவங்க சாகும் போது அவங்க ஆவி வந்துரும்..”
“புரில…”
“இப்போ ரணதீரன கொன்னது அனழேந்தி தானே..
அனழேந்தி சாகும் போது ரணதீரன் ஆவி அனழேந்தி பாடிக்குள்ள புகுந்துரும்..மீள்ஜனனம் மாதிரி..”
“வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்..?”
“ம்ம்ம்..அப்டிதான் சொல்லிருக்கு..”
“அப்போ..அனழேந்தி சாக லேட்டாகி இருந்தா..ரணதீரன் ஆவி நுழைய லேட்டாகி இருக்குமா..?”
“யெஸ்ஸ்ஸ்ஸ்..”
“வெயிட்…வெயிட்..வெயிட்..”
“என்ன..”
“அப்போ..அனழேந்தி ஐ மீன் ரணதீரன் …அப்டின்னா ரணதீரன் ஆவி புகுந்ததால தான் அனழேந்தி பாடிக்கு உயிர் கெடச்சுது..”
“கரெக்ட்..”
“சரி..அப்போ…ரணதீரனுக்கு உடனே உண்மய சொல்லியிருக்கலாம்ல”
“ம்ஹும்..அதுதான் முடியாது..அவங்க அந்த ஒடம்புக்குள்ள போய் முழுசா போய் இருபத்தஞ்சு பக்ஷம் முடிர வர தான் யாருங்குற உண்மய யாருக்கும் சொல்லக் கூடாது..”
“அப்டின்னா..கிட்டத்தட்ட ஒரு வருஷம் சொல்லக் கூடாதா..தன்ன வெளிப்படுத்திக்காம இருக்கனும்..?”
“ஆமா…அதனால தான் ரணதீரனும் சொல்லாம இருந்திருக்காரு…”
“ஹ்ம்ம்..அப்றம்..”
“அப்றம் என்ன…மிஸஸ் ரணதீரன் கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டு ரணதீரன் அவரு நிரூபிக்க….மிஸஸ் ரணதீரன் அவர ஏத்துக்க…அவங்க சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்..”
“சரி..இப்போ இது எதுக்கு..”
“என்னன்னா..ரணதீரனோட வம்சாவழி இன்னும் வாழ்ந்து கிட்டு தான் இருக்காம்..அந்த வம்சத்துல அந்த தலைமுறைல வர்ர முதல் ஆண் கொழந்திக்கு இந்த வரம் தன்னால கெடச்சிடுமாம்..அது எங்க பொறந்தாலும்..”
“அப்டியாஆஆஆஆஆ..”
“ம்ம்..இதுல இன்னொரு ட்விஸ்ட் வேற இருக்கு..”
“என்னக்கா அது..?”
“அத காலைல சொல்றேன்..இப்போ எனக்கு மண்ட ஃபுல்லா எப்டி அங்க போய் டீடெயில்ஸ் கலெக்ட் பண்றதுன்னு தான் கொழப்பமா இருக்கு..”
“ஏன்..சத்யாண்ணா விட மாட்டாரா..?”
“அன்னிக்கி கேட்டதுக்கே அவ்ளோ திட்டு திட்டுச்சு..அதான்..” என்றவளுக்கு நாளை எப்படி ரணதீரபுரம் சென்று அந்த வம்சாவழியைப் பற்றி ஆராய்வது என்கின்ற எண்ணம் மட்டும் தான் சிந்தை முழுவதும்.
●●●●●
அதே நேரம் ரணதீரபுரத்தில்!
அடைமழை பொழிந்து கொண்டிருக்க,அந்த பெரிய பாழடைந்த பங்களாவின் முன்னே கையில் சிகரெட்டுடன் நின்றிருந்தான், ஒருவன்.
கொட்டும் மழை அவனை நனைக்க மேனியெங்கும் நீர்த்திவலைகள் ஓடிட அது அவனுக்கு கொஞ்சமும் கருத்தில் பதியவில்லை.
அவனருகே கைகள் நடுங்க குடையை பிடித்த படி நின்றிருந்தான்,
அவனின் தோழன்.
“விஜய்..இங்கிருந்து போலாம் டா..” குரல் நடுங்க அழைத்தவனின் பார்வை சுற்றும் முற்றும் பார்த்து தம் இருவரைத் தவிர யாரும் இல்லாததை உறுதி செய்திட உள்ளுக்குள் பெரும் பயம்.
“ப்ச்ச்..பேசாம இரு..” என்றவனின் விழிகள் நில்லாது சுழன்று அந்த பாழடைந்த அரண்மனையை ஆராய்ந்து கொண்டிருந்தன.
“இன்னிக்கி நாம இங்க தான் தங்கறோம்..” என்றவனுக்கு துளியும் பயம் இல்லாதிருக்க, அந்த பங்களாவின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தான்,
ஜீவானந்தம்.
பின்னே இந்த இருட்டில் தனியே யார் நிற்பதாம்..?
கதவு திறக்கும் போது பெரும் காற்றொன்று வீசிட அதைக் கண்டு விஜய்யின் புருவங்கள் சுருங்கின.
“இந்த நாதாரியோட ஃப்ரெண்டா இருக்காதன்னு சொன்னத கேட்டுருக்கனும்..” தனக்குள் நொந்து கொண்ட ஜீவாவின் முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது.
தன் அலைபேசியின் டார்ச் வெளிச்சத்தில் அந்த பங்களாவின் இடங்களை பார்த்திட அது மங்கலாகத் தான் தெரிந்தது.
ஜீவா உள்நுழைந்தது தான் தாமதம், படக்கென மூடிக் கொண்ட கதவைக் கண்டதும் அவர்கள் சொன்ன அமானுஷ்யக் கதை உண்மையாய் இருக்குமோ என்கின்ற எண்ணம் எழாமல் இல்லை,
விஜய்யின் மனதில்.
மெதுமெதுவாக அடியெடுத்து வைத்து அந்த பங்களாவின் வலது மூலையை அடைந்திட அங்கு ஒரு அறை இருக்க அதன் கதவு திறந்து வைக்கப்பட்டிருப்பதை கண்டவனுக்கு பெரும் குழப்பமே.
ஜீவா வந்து அவனருகே நின்றிட தோழனின் இதயத்துடிப்பின் சத்தம் இவனுக்கும் கொஞ்சமாய் கேட்டிட தவறு செய்து விட்டோமோ என்கின்ற எண்ணம் தான்.
“ஜீவா வா வெளில போலாம்..” என்றவன் திரும்பி நடக்கப் பார்த்திட அவனின் தோற்பட்டையை எதுவோ நனைத்தது.
விருட்டென தலைதூக்கி மேலே பார்த்திட அங்கு அவனின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தன,
உதிரம் வழியும் இரு கால்கள்.
தொடரும்.
🖋️அதி….!
2024.01.21
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பயங்கர திரில்லிங் கா இருக்கு … அந்த இரணதீரன் கதை அருமை … ஆர்யா க்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கு மோ … சீரிஸ் கிரியேட் பண்ணி எல்லா அத்தியாயங்களும் அதுல ஆட் பண்ணுங்க …
🤩