Loading

அத்தியாயம் 14

     வடிவேலுவின் பிள்ளைகள் நால்வருக்கும் தனித்தனியே இருசக்கர வாகனமும் உண்டு, நான்கு சக்கர வாகனமும் உண்டு. இருசக்கர வாகனம் அவர்கள் உழைப்பு. நான்கு சக்கர வாகனம் அவர்கள் தந்தையின் பரிசு.

     வருங்காலத் துணைவிகளோடு வெளியே செல்கிறோம் என்று மற்ற மூவரும் அவரவர் காரில் செல்லத் தீர்மானிக்க, தெய்வா மட்டும் தன்னுடைய புல்லட்டை நோக்கிச் சென்றான்.

     இயல்பிலேயே ஆசை அதிகம் கொண்டவன். தந்தையே அனுமதி கொடுத்த பிறகு அவனைக் கேட்கவும் வேண்டுமோ. ஆனால் அவன் மட்டும் ஆசை கொண்டால் போதாது என்று அந்தப் பேராசைக்காரனுக்குத் தெரியவில்லை.

     மற்ற ஜோடிகள் கிளம்பிச் சென்று சில நிமிடங்கள் கடந்த பின்னரும் தெய்வாவின் புல்லட்டில் ஏறவே மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் ருக்கு. அடம் என்றால் வாயைத் திறந்து சண்டையிடவில்லை. அப்படிச் செய்திருந்தால் கூட அவன் மனம் ஆறி இருக்குமோ என்னவோ.

     தான் சொல்லும் சமாதானங்கள் அனைத்திற்கும்  மென்மையான எதிர்ப்பை தலையசைப்பில் கொடுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை பறந்து கொண்டிருந்தது தெய்வாவிற்கு.

     “ருக்கு ஏன் இப்படிக் குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறீங்க. நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன். அப்பா போற வேகத்தைப் பார்த்தா இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எப்படியும் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுவார். அப்பவும் இப்படித்தான் வரமாட்டேன்னு அடம் பிடிப்பீங்களா?

     நான் தானேங்க, என்னோட பைக்கில் வருவது தப்பு கிடையாது. வெளிய வந்து பாருங்க உங்க வயசுப் பொண்ணுங்க எப்படியெல்லாம் இருக்காங்கன்னு. நீங்க மட்டும் ஏன்பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க.” அவள் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற மறுக்கிறாள் என்னும் கடுப்பில் இவன் சொல்லிவிட, அவளோ அழத் தயாராகிவிட்டாள்.

     “நீங்க என்னை ரொம்பத் திட்டுறீங்க. நான் இப்படித்தான்னு மாமா சொன்னதுக்கு அப்புறம் தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்க. இப்பவே இப்படித் திட்டுறீங்களே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படித் திட்டுவீங்க. போங்க நான் உங்க கூட எங்கேயும் வர மாட்டேன், நான் மாமாகிட்ட போறேன்.” லேசான அழுகையுடன் சொல்லிவிட்டு வடிவேலுவைத் தேடி உள்ளே ஓடும் ருக்குவைப் பார்த்தால், அம்மா அடித்தவுடன் அப்பாவிடம் புகார் சொல்ல ஓடும் குழந்தையைப் போல் தோன்றியது அவனுக்கு.

     “ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவும், குணமும் வளரவே இல்லை.” என்று நினைத்தவன் தானும் அவள் பின்னே ஓடினான்.

     அவள் பிள்ளைக் கால்களால் நான்கடி எடுத்து வைப்பதற்கும், இவன் நீண்ட கால்களால் இரண்டடி எடுத்து வைப்பதற்கும் சரியாக இருக்க, மிக விரைவாகவே அவளை அடைந்துவிட்டான்.

     ருக்கு சரியாக வடிவேலுவின் அறைக் கதவைத் தட்ட முயலும் வேளையில், அவள் கையைப் பிடித்தவன் சைகையில் சத்தம் போடாதே என்று சொல்லி வெளியே அழைத்து வந்தான்.

     அவளுக்கு அழுகை போய், கோபம் வர அவன் முகத்தைப் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டாள். அடக்கடவுளே, இவங்களை ரொம்பவே மாத்தணும் போலவே தனக்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டான் தெய்வா.

     “இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை ருக்கு, பேச்சு பேச்சா இருக்கும் போது எதுக்காக அப்பாகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணப் போனீங்க.” என்றான்.

     “என்னை உங்க இஷ்டத்துக்கு வளைக்கப் பார்க்கிறீங்க. நான் தான் கல்யாணம் முடிந்ததும் பைக்கில் வரேன். அதுக்கு முன்னாடி காரில் போகலாம் னு சொல்றேனே. உங்க காரில் என்னைக் கூட்டிக்கிட்டு போக முடியாதுன்னா ஆட்டோவில் கூடப் போகலாம். ஆனா இது என்னால் முடியாது.” திட்டவட்டமாகச் சொன்னாள்.

     அவனுக்கு சில ஆசைகள் இருந்தால், அவளுக்கும் சில விருப்பங்களும், கட்டுப்பாடுகளும் இருக்கும். அவனுடைய ஆசை சரி, அவளுடைய கட்டுப்பாடுகள் தவறு என்று சொல்லமுடியாது, சொல்லக்கூடாது என்பதை சற்றே தாமதமாகப் புரிந்துகொண்டான்.

     பதிலுக்குப் பதில் பேசி சின்னப் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். நம் ஆசையை நிறைவேற்ற காலம் முழுவதும் நேரம் இருக்கிறது. இப்போது உன்னை நம்பி உன்னோடு வரும் பெண்ணின் சௌகர்யம் முக்கியம் அதனால் அவள் வழிக்கே போய் விடு என்று மனசாட்சி சொல்ல பைக்கை ஏக்கமாகப் பார்த்து பெருமூச்சுவிட்டு காரைத் தேடினான்.

     அவன் சுருங்கிப் போன முகத்தைப் பார்த்ததும் ருக்குவிற்கு என்னவோ போல் ஆனது. சற்று நேரம் முன்னர் தமக்கை லீலா சொன்ன வார்த்தைகளை நினைவு படுத்திப் பார்த்தான்.

     ஜாகிங் முடித்து வந்த தெய்வா அவள் கரம் பிடித்ததும், உள்ளுக்கள் வெடித்த எரிமலையின் தாக்கத்தில் ஓடிச் சென்று அக்காவைக் கட்டிக்கொண்டவள் சின்னதாய் விசும்பவும் செய்ய லீலாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

     “ருக்கு என்னது இது. எதுக்கு எடுத்தாலும் அழுறதுக்கும், வந்து வந்து புகார் சொல்றதுக்கும் நீ ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை. வளர்ந்த ஒரு முழு மனுஷி. அவர் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறவர்.

     நீயும், அவரைப் பிடிச்சிருக்கு அவர்கிட்ட இருந்தா பாதுகாப்பான உணர்வு வருதுன்னு சொன்ன. இப்ப வந்து கையைப் பிடிச்சாருன்னு அழுகிற. சின்னச்சின்னத் தொடுகை எல்லாம் தப்புன்னு நினைச்சா எப்படி.” என்க, தேவகி அமைதியாக இருக்க ஊர்மிளா சிரித்தே விட்டாள்.

     “ஊர்மி சிரிக்காத டி.” ருக்கு பதற, “உன்னைக் கட்டிக்கிட்டு போலீஸ் மாமா என்ன பாடுபடப் போறாரோ தெரியல. சரியான தொட்டாச்சிணுங்கி” கிண்டல் செய்ய, லீலாவுக்கும் அந்த எண்ணம் வந்ததோ என்னவோ தங்கைக்கு வேப்பிலை அடிக்க ஆரம்பித்தாள்.

     நால்வருக்கும் ஒரே வயது தான் என்றாலும், மற்ற பெண்களுக்கும் அவர்கள் சேர்ந்து வாழும் அந்தக் குடும்பத்துக்கும் அவள் தானே மூத்தவள். தங்கைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் அவளுக்குத் தானே இருக்கிறது. அதனால் மாணவனைச் சீர்திருத்தும் வாத்தியாராக பிரம்பைக் கையில் எடுத்தாள்.

     “ருக்கு, நமக்கு குடும்பம், தாம்பத்யம் எல்லாத்தையும் நம்ம அத்தை பக்குவமா எடுத்துச் சொல்லி இருக்காங்க. எப்பவோ நடந்ததை நினைச்சு, இப்படித் தொட்டதுக்கெல்லாம் அழுதா அவர் உன்னைப் பத்தி என்ன நினைப்பாரு சொல்லு.” என்க, அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

     “உனக்கு என்னைப் பிடிக்கும், நான் தொட்டா நீ அழ மாட்ட. உனக்குள்ள தோன்றும் சின்ன உணர்வா இருந்தாலும், அதை என்கிட்ட சொல்ல நீ தயங்கியது இல்லை.

     இனிமேல் என்னை மாதிரி தான் அவரும் உனக்கு. என்கிட்ட நீ எப்படி இருக்கியோ அப்படித்தான் அவரோட இருக்கணும். சொல்லப்போனா என்னை விடவும் அவர் உனக்கு உயர்வான, உரிமையான உறவு.

     அவரோட பேசு, உன்னோட பயத்தைப் போக்கிக்க முயற்சி பண்ணு. எல்லா நேரமும் உனக்குத் தைரியத்தைக் கொடுப்பதற்காக யாராவது ஒருத்தர் உன் பக்கத்திலேயே நிற்க முடியாது. சில இடத்தில் நீ தான் தைரியமா இருக்கக் கத்துக்கணும்.” என்க, விசும்பல் அதிகரித்து அழுகை வந்துவிட்டது அவளுக்கு.

     “ருக்கு ஒருவிஷயத்தை மனசில் ஆழமாப் பதிய வைச்சிக்கோ. அவரு தான் உனக்குப் புருஷனா வரப்போறவரு. அவரு தான் உன்னைக் கடைசி வரைக்கும் சந்தோஷமாப் பார்த்துக்கப் போறவரு.

     அவர் தானா உன்கிட்ட பேச, பழக முயற்சி பண்ணும் போது, அவரை அவமானப்படுத்துற மாதிரி, உதாசீனப்படுத்துற மாதிரி நீ விலகுறது நல்லா இல்ல.” என்க, அதிர்ந்து போய் தமக்கையை நிமிர்ந்து பார்த்தாள் ருக்கு.

     “உங்க உறவை முன்னேற்ற நீ முயற்சி எடுக்க மாட்டேங்கிற. சரி உனக்கு ஆயிரம் உணர்வுகள், காரணங்கள், பயங்கள் இருக்கலாம். ஆனால் அதைச் செய்யும் மனுஷனுக்கு நீ கொஞ்சம் ஒத்துழைக்கணும். அப்பதான் உங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதல் ஏற்படும். அந்தப் புரிதல் ஒரு இணைப்பை ஏற்படுத்தும்.” எனத் தொடங்கி லீலா சொன்ன அனைத்திற்கும் தலையைத் தலையை ஆட்டி வைத்தது நினைவு வர பெருமூச்சுவிட்டு தெய்வாவைப் பார்த்தாள்.

     அவன் இன்னமும் பஞ்சுமிட்டாயைத் தொலைத்த சிறுவனாய் நின்றிருக்க, “நான் உங்களைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண ஒன்னும் மாமாவைத் தேடிப் போகல. உங்ககூட வெளியே போகலன்னு சொல்லத் தான் நினைச்சேன்.” தயக்கத்துடன் சொன்னாள்.

     சும்மாக்கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல், தன்னைத் தானே சமாளித்து ஏமாற்றத்தைக் குறைத்துக் கொண்டிருந்த தெய்வாவை தன் வார்த்தைகளால் உசுப்பி விட்டிருந்தாள் ருக்மணி.

     “அப்ப என்கூட வெளியே வரக்கூடாது, கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க அப்படித்தானே.” அதே கோபத்துடன் கேட்டான்.

     உடல் அதிறப் பதறியவள், “நான் எப்ப அப்படிச் சொன்னேன்.” என்றாள்.

     “சொல்லல, ஆனா நீங்க பண்றதுக்கு அது தான் அர்த்தம்.”

     பெருமூச்சுவிட்டவள், “இப்ப என்ன, மாமா என்ன சொன்னாரு ஒருத்தருக்கு ஒருத்தர் மனசு விட்டுப் பேசிக்கச் சொன்னார். அதை வெளியே போய் தான் பேசனும் னு இல்லையே. இங்கேயே வீட்டிலே அமைதியான ஒரு இடத்தில் இருந்துக்கிட்டே மணிக்கணக்கா பேசுவோம். போக வர எடுக்கும் நேரத்தில் கூடுதலாக் கொஞ்சம் பேசலாமே.” என்க, “பேசலாமே” என்று தலையை ஆட்டி சிரித்துக்கொண்டே சொன்னான் தெய்வா. பிடித்தவர்களிடத்தில் அவ்வளவு தான் அவன் கோபம்.

     “எங்க போகலாம்” காரைச் செலுத்திக்கொண்டே கேட்டான் செல்வா. “நான் இந்த ஊருக்குப் புதுசு. அதனால நீங்களே ஏதாவது ஒரு நல்ல இடத்தை செலக்ட் பண்ணுங்க.” மென்மையானவனுக்குப் பதில் மென்மையாகவே சொன்னாள் அந்த மென்னகையாள்.

     தங்கைக்கு அவளுடைய உறவை முன்னோக்கிக் கொண்டு செல்ல அத்தனை அறிவுரை சொன்னவள் அதைத் தான் வாழ்வில் கடைபிடிக்க மாட்டாளா என்ன. தயக்கத்துடன் என்றாலும் கடைபிடிக்க முயற்சிக்கிறாள்.

     “இங்க பக்கத்தில் ஒரு அம்மன் கோவில் இருக்கு. மன அமைதிக்கும், நிம்மதிக்கும் பெயர் பெற்ற இடம். அங்க போகலாமா. கோவிலுக்குப் போறதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே.” மருத்துவன் தான் இருந்தாலும் முதன்முறையாகப் பழகும் பெண்ணிடம் எப்படிக் கேட்பது என தயங்கித் தயங்கி பேசினான்.

     “முதன் முதலா வெளில போறோம். அது கோவிலா இருக்கிறது ரொம்ப நல்லது தான்.” என்றாள். தயங்கித் தயங்கி தயக்கங்களை உடைக்கப் பிரம்மப்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.

     “தேவகி இறங்குங்க.” கார் கதவைத் திறந்துவிட்டபடி சொன்னான் தர்மா.

     “என்ன இடம் இது.” சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே கேட்டாள் அவள்.

     “பார்த்தா தெரியலையா, ஐஸ்கீரிம் பார்லர். உங்களை முதன் முதலா பார்க்கிறப்ப ஐஸ்கீரிம் சாப்பிடலாமான்னு கேட்டேனே. அன்னைக்கு எங்க அப்பா நடுவில் புகுந்து குட்டையை குழப்பிட்டார். இன்னைக்கு அப்படி யாரும் நமக்கு நடுவில் வர முடியாது. வாங்க ஜில்லுன்னு ஐஸ்கீரிம் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம், பழகலாம்.” தர்மா சொல்ல தேவகிக்கு லேசாக சிரிப்பு வந்தது. அவனின் எளிமையான அணுகுமுறை சொன்னது. இவனைச் சமாளிப்பது எளிது என்று. அந்த வகையில் தேவகிக்குச் சற்று சந்தோஷமே.

     “என்னைப் பொறுத்தவரைக்கும் நம்மளோட சின்னச்சின்ன ஆசைகளைக் கூட விட்டுடக்கூடாது. நிராசை இல்லாத வாழ்க்கை தான் சொர்க்கம். எனக்கு எப்பவும் சொர்க்கம் தான் பிடிக்கும்.” என்றவனை சுவாரசியமாய் பார்த்தாள் தேவகி.

     பதின்வயது பிள்ளைகளுக்கு அவர்களின் மனநிலை அறிந்து பாடம் எடுப்பவன், தான் மணக்க இருக்கும் பெண்ணின் நடவடிக்கையைப் புரிந்து அதற்கு ஏற்ப தானும் நடந்துகொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக தேவகியின் மனதைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தான் அந்த வாத்தி.

     “ஹலோ மகாராணிக்கு கதவைத் திறந்துவிட்டாத் தான் இறங்குவீங்களோ.” அமர்க்களமாகத் தான் பேச்சுவார்த்தை துவங்கியது நாகா, ஊர்மி தம்பதியருக்கு.

     “இது என்ன இடம், நாம எதுக்காக இங்க வந்திருக்கோம்.” பல மாடிகள் கொண்ட கண்ணாடி மாளிகையைக் கண்டு குழப்பமாகக் கேட்டாள் ஊர்மி.

     “ஷாப்பிங் வந்திருக்கோம், என்னோட ட்ரஸ்ஸஸ் கொஞ்சம் பழசாகிடுச்சு. சோ மொத்தமா அன்பு நிலையத்துக்கு கொடுத்துட்டு, புதுசா எடுக்கலாம் னு வந்திருக்கேன்.” எனத் தோள்களைக் குலுக்கினான்.

     “பரவாயில்லையே பழைய துணியை அநாதை ஆசிரமங்களுக்கு கொடுக்கிற நல்ல பழக்கம் எல்லாம் உங்ககிட்ட இருக்கா, நைஸ்.” நிஜமாகவே மனதாரத் தான் பாராட்டினாள்.

     “நமக்குத் தேவையில்லைன்னு நாம தூக்கிப் போடுறது இன்னொருத்தங்களுக்குப் பயன்படும் என்றால் கொடுப்பதில் தப்பில்லையே.” என்றுவிட்டுத் தன்போக்கில் அவன் முன்னடக்க,

     “இந்த தேவாங்குக்குள்ளேயும் நல்ல மனசு இருக்கு பாரேன். பரவாயில்லை ஊர்மி, உன் வாழ்க்கை அடிதடியிலே போயிடுமோன்னு நினைச்சேன். பரவாயில்லை கொஞ்சம் நல்லாவும் போகும் போல.” எனத் தனக்குள் நினைத்துக்கொண்டாள் ஊர்மி.

     நேரே அந்த மாலின் நான்காம் தளத்திற்குச் சென்றவன், அடிக்கடி வருபவன் போல், எது எது எங்கு இருக்கும் என்பது தெரிந்தவன் போல், எங்கும் தாமதிக்காமல் வேகவேகமாக நடந்தான். அவன் பின்னால் தன் சின்னக் கால்களைக் கொண்டு நடக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடினாள் ஊர்மிளா.

     “இந்த ட்ரஸ் ஓகே, இந்த டீசெர்ட் ஓகே, இது ஓகே, ஆங் இது சூப்பரா இருக்கே, கலர் நல்லா இருக்கு.” என்று நான்கைந்து துணிகளை கையில் எடுத்தவன், “மேடம் கொஞ்சம் கை நீட்டுங்க.” என்று ஊர்மிளாவின் கையில் மொத்தத்தையும் வைத்தான்.

     அவன் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, அவள் கையில் ஆரம்பித்து தலை மறைந்தது. ஆனால் அவன் இன்னமும் எடுத்து முடிக்கவில்லை. இதைக் கவனித்த சேல்ஸ் கேர்ள் ஒருவள் வந்து ஊர்மிளாவிற்கு உதவி செய்து, அவள் கையில் இருந்த அனைத்தையும் ஒரு ட்ராலியில் போட்டுக்கொடுக்க அதைத் தள்ளிக் கொண்டே அவன் பின்னால் பாவமாய் அலைந்தாள் ஊர்மி.

     “ஓகே இப்போதைக்கு இது போதும்.” ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நாகா நிமிர, “அப்பாடா போதுமா ரொம்பச் சந்தோஷம்.” மனதோடு சந்தோஷப்பட்டாள் ஊர்மி.

     உன்னை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுவேனா என நினைத்த நாகா அடுத்ததாகச் சென்றது ஆண்கள் அழகு சாதனங்கள் இருக்கும் இடம். வளர்ப்பவன் பின்னால் ஓடும் நாய்க்குட்டியைப் போல் தன்னால் அவன் பின்னால் நடந்தாள் ஊர்மி. ஆனால் உள்ளம் முழுக்க அடுப்பில் வைக்கும் எண்ணையாய் காய்ந்து கொண்டிருந்தது. எதைப்போட்டாலும் வெடிக்கும் நிலையில் இருந்தாள் அவள்.

     தலைக்கு ஆயில், ஜெல், ஷேம்பு, கண்டிஷனர், பர்பியூம் எனக் கண்டதையும் ட்ராலியில் தூக்கிப் போட்டவன் புது ஷு, ஸ்போர்ட் ஷு, ரப் யூஸ் செப்பல் என அனைத்தையும் வாங்கிக்கொண்டு பில் போட வந்தான். அவன் மீது ஏக கடுப்பில் இருந்தவள் பில் தொகை எழுபதாயிரம் என்று வரவும் இன்னும் கடுப்பானாள்.

     கடை ஊழியர்கள் அனைத்தையும் அவனுடைய காரில் கொண்டு வந்து வைக்க சிரித்த முகத்தோடு ஐநூறு ரூபாய் டிப்ஸ் கொடுத்தான். அதுவேறு இவளுக்கு இன்னும் கோபத்தைத் தூண்டியது.

     “நீங்க எப்பவுமே இப்படித்தான் கண்டபடிச் செலவு பண்ணுவீங்களா?” பல்லிடுக்கில் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள் ஊர்மி.

     “இந்த மால் இப்படித்தான். ஒரு ட்ரஸ் எப்படியும் ஐந்தாயிரத்துக்கு குறையாம இருக்கும். அப்படி இருக்க, இவ்வளவு வாங்கினா இவ்வளவு பில் வரத்தான் செய்யும்.

     அறுபதாயிரம் எல்லாம் எனக்கு விஷயமே இல்லை. உனக்கு ஒன்னு தெரியுமா? ஒருதடவை இதே மாலில் ஒன்றரை இலட்சம் பில் கட்டி இருக்கேன்.” என்றவன் சற்றே நிதானித்து ஊர்மியின் முகத்தை ஊன்றிக் கவனித்துப் பின் தொடர்ந்தான்.

     “உங்களால் எல்லாம் என்னை மாதிரி செலவு பண்ண முடியாது இல்ல. நீங்க வழக்கமா கட்டுவீங்களே ஒரு சேரி, அது ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமா. நான் வீட்டுக்குள்ள போட்டுக்கிறதுக்காக வாங்கி இருக்கிற செப்பல் கூட அதை விட விலை அதிகம்.

     பட் நீங்க கவலைப்பட வேண்டாம். என்னையும் என் கூடப்பிறந்தவங்களையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நாங்க செலவு பண்ற மாதிரி நீங்களும் உங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணலாம், நல்லா ப்ராண்டட் ட்ரஸ் எடுக்கலாம், நிறைய நகை வாங்கலாம், வண்ண வண்ணமா ஹேண்ட்பேக்ஸ், செப்பல்ஸ் எக்ஸ்டட்ரா எக்ஸ்டட்ரா.” இதழ்களைக் கோணலாக வளைத்துக்கொண்டே பேசினான் நாகா.

    “நீங்க பேசுறது தப்பா இருக்கு.” கோபம் மற்றும் அழுகை கலந்த குரலில் பேசினாள் ஊர்மிளா. கோபமாகப் பேசினால் அவளும் கோபமாகப் பதில் சொல்வாள். ஏளனத்திற்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

     “அக்கா, தங்கச்சிங்க நீங்க நாலு பேர் பண்றதை விடவா, என் பேச்சு தப்பா இருக்கு.” பட்டென்று கேட்டான் நாகா.

     சுவாமி தரிசனம் முடித்து பிரகாரம் சுற்றி வந்த பின்னர் நிம்மதியாக ஓர் இடத்தில் அமர்ந்தனர் செல்வா, லீலா இருவரும்.

     “லீலா நான் உங்ககிட்ட சில விஷயங்களை தெளிவு படுத்தணும்.” இவ்வளவு நேரமாக இப்படிச் சொல்லலாமா, அப்படிச் சொல்லாமா என்று உள்ளுக்குள் உருட்டிக்கொண்டிருந்த விஷயத்தை மெதுவாக ஆரம்பித்தான் செல்வா.

     “சொல்லுங்க” என்க, “எனக்குக் கல்யாணத்து மேல பெருசா ஆர்வம் இருந்தது இல்ல. எப்படியும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கத் தானே போறோம். அது ஏன் நீங்களா இருக்கக் கூடாதுன்னு நினைச்சு தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்க என் அப்பா பார்த்த பொண்ணு, அந்த ஒரு காரணம் போதும் நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டதுக்கு.

     ஆனா நீங்க அப்படி இல்ல. ஒரு பொண்ணா உங்களோட வருங்காலக் கணவர் இப்படியெல்லாம் இருக்கணும், அவர் உங்ககிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கணும் என்று உங்களுக்குள்ள பல ஆசைகள், கனவுகள் இருக்கலாம்.” என்க, புன்னகைத்தாள் லீலா.

     அவளுக்கும் திருமணம் என்பதையே நம்ப முடியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள் அவள். இதில் எங்கிருந்து திருமணக் கனவுகள் காண.

     “உங்க ஆசைகள், விருப்பங்களுக்கு ஏத்த மாதிரி மொத்தமா மாற முடியுமான்னு கேட்டா கஷ்டம் தான். ஆனா உங்களோட நியாயமான ஆசைகள் எல்லாம் எந்தத் தடையும் இல்லாமல் நிறைவேறும்.

     ஆனா, எனக்கு உங்களை ஏத்துக்கிறதுக்கு, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிறதுக்கு கொஞ்ச டைம் தேவைப்படும். பெரிய மனசு பண்ணி எனக்கு நீங்க அந்த டைம் கொடுக்கணும்.” அத்தனை மென்மையாகச் சொன்னான் செல்வா.

      “இந்த அளவுக்கு மரியாதையான ஒருத்தரை நான் கடந்து வந்த இத்தனை வருஷத்தில் பார்த்தது இல்ல.” தயக்கமின்றி முத்துச் சிப்பி போன்ற தன் இதழ்களைத் திறந்து லீலா உதிர்த்த சொற்களைக் கேட்பதற்குப் பெருமையாக இருந்தது செல்வாவிற்கு.

     “நீங்க என்னோட வாழ்க்கைத்துணையா வரப்போறவங்க உங்ககிட்ட நான் ஒருவிஷயத்தை மறைச்சு, அது வேற யார் மூலமாவோ உங்களுக்குத் தெரிய வந்தா அது நல்லா இருக்காது இல்லையா அதனால என்னைப் பத்தி முழுசா நான் சொல்லிடுறேன்.

     நான் காலேஜ் படிக்கும் போது ஒரு பொண்ணை விரும்பினேன், அவளும் என்னை விரும்பினா. ரொம்ப நல்ல பொண்ணு, ரொம்ப மார்டன், ஊர்சுத்திப் பறவை மாதிரி அத்தனை உற்றாகம் இருக்கும் அவகிட்ட. சாகுறதுக்குள்ள உலகத்தை ஒருமுறையாச்சும் சுத்தி வரனும் னு அவளுக்குத் தீராத ஆசை.

     காலேஜ் முடிக்கிற வரைக்கும் எங்களோட காதல் நல்லா தான் இருந்தது. நாங்க தனித்தனியா எம்டி படிக்கப் போன நேரத்தில் என்ன நடந்ததோ, வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா.

     நானும் என்னால அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வர வேண்டாம் னு ஒதுங்கிட்டேன். அவளை, அவளோட பழகிய நாள்களை மறக்க, என்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தேன். ஓரளவு மறந்துட்டேன்னு தான் நினைக்கிறேன்.

     முன்னாடி எல்லாம் அவளை நினைச்சா இப்படி ஆகிடுச்சேன்னு வருத்தமா இருக்கும். ஆனா இப்ப அப்படி இல்ல. அவ சந்தோஷமா நிம்மதியா இருக்கான்னு மனசு சந்தோஷப்படுறதோட நிறுத்திக்கிறேன். இதை உங்ககிட்ட இருந்து மறைக்கக் கூடாதுன்னு தோணுச்சு அதான் சொல்லிட்டேன்.” மனதை மறையாமல் சொல்லும் செல்வா தனக்குக் கணவனாகக் கிடைக்கப்போகிறான் என்று ஒருபக்கம் பெருமையாக இருந்தால், இன்னொரு பக்கம் மிகப்பெரிய உண்மையை மறைத்து அவனை ஏமாற்றிக்கொண்டிருக்கும் தன்னை நினைத்து அசிங்கமாக இருந்தது லீலாவிற்கு.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அய்யோ ஒருநாளைக்கே இப்படி மூச்சு வாங்குது … இவங்க கல்யாண கதை அதுக்கு அப்புறம் கதை எல்லாம் பயங்கரமா இருக்கும் போல … தெய்வா லவ்வர் பாய் டெரர் பாயா மாறல … சமாதானம் ஆகிடுறான் … செல்வா சமத்து பையன் தான் போல … லீலா சொன்ன பொய் தான் பிரச்சனை போல … தேவா ஜாலி டைப்… அவங்க ரெண்டு பேரும் ஜாலியா இருப்பாங்க போல … இந்தா நாகா தான் பயங்கரமான ஆளா இருக்கான் … ச்சீ இவ்வளவு கேவலமா நடந்துக்கிறான் … பேசுறான் … ஊர்மி வாயைவே அடச்சுட்டான்… அழ விட்டுட்டான்… எனக்கே அழுகை வந்திடும் போல … உண்மையை அண்ணனுங்க கிட்ட சொல்லிடுவானோ…