Loading

     புருவ முடிச்சோடு யோசித்த மாலினி  காஞ்சனாவிடம்,

   “சாரிம்மா நான் தான் மறந்துட்டேன், நான் இன்னும் கிளம்பலையா அதோட எங்க சைடுல ஹெவி டிராபிக், அது தான் ஆபீஸ் வர்றதுக்கு லேட் ஆகும்னு சொல்றதுக்காக தான் கூப்பிட்டேன். சரிம்மா நான் அவளோட மொபைலுக்கே கூப்பிட்டுக்கிறேன்.”

   என்று அழைப்பை துண்டித்தவளோ, நிலாவின் அலைபேசிக்கு முயற்சித்தாள் . இரண்டு மூன்று முறை முழு அழைப்பு சென்று கட்டாக, நான்காவது முறை போனை எடுத்த நிலா,

    “மாலு இன்னைக்கு நான் ஆபீஸ் வர்றதுக்கு  நேரமாகும். வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு, சரி நான் அப்பறம் கூப்பிடறேன் பை.”

   என்று அவசரமாக பேசியவள், மாலினி பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல்  உடனே போனை வைத்து விட்டாள்.

    அப்போது வாயில் வந்த பொய்யை கூறி மாலினியை சமாளித்த நிலா அறியவில்லை, அவள் கூறிய இந்த பொய்கள் ஒருநாள் அவளுக்கே பாதகமாக கூடும் என்று, தெரிந்திருந்தால் உண்மையை கூறி இருப்பாளோ என்னவோ!

    அது ஒரு நார்த் இந்தியன் தாபா,   ஆங்காங்கே இருந்த குடில்களுக்குள் இருந்த டேபிள்களில், ஆட்கள் அமர்ந்து உணவுண்டு கொண்டிருக்க, இவளும் குறிப்பிட்ட டேபிள் நம்பரில் போய் அமர்ந்தாள்.

   காற்றோட்டமாக அமைக்கப்பட்ட அந்த குடிலையும், அதன் இயற்கை அலங்காரங்களையும் ரசித்துக் கொண்டிருந்தவள், தன் அருகே நிழலாட திரும்பி பார்த்தாள்.

   அங்கே புன்னகை முகத்தோடு நின்றிருந்தவன் குட் மார்னிங் என்று கூறியபடியே, அவள் முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

    அவனைக் கண்டவுடன் அவள் எழுந்து நிற்க, மீண்டும் ஒரு புன்னகையை சிந்தியவன் கைநீட்டி, அவளை அமருமாறு சைகை செய்தான். தன்னை ஈஸ்வர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினான்.

    “மிஸ் நிலா நான் நேரடியா விஷயத்துக்கே வரேன், உங்க பிரண்டு ரிதன்யா எனக்கு ஃபேமிலி பிரிண்ட்.

   என்னோட பிரச்சனையை அவங்ககிட்ட சொன்ன போது, உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு சொன்னாங்க.

   அதனால தான் உங்களை சந்திக்கணும்னு நினைச்சேன், ஐ அம் சாரி. உங்க ஆபீஸ்க்கு என்னால வர முடியல, நான் இங்க வந்திருக்கறது யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான், இப்படி ஒரு இடத்துல உங்களை சந்திக்க ஏற்பாடு பண்ணினேன்.”

    “பரவால்ல சார் நீங்க விஷயத்தை சொல்லுங்க, என்னால முடிஞ்சா கண்டிப்பா நான் ஹெல்ப் பண்றேன்.”

    “உங்களால முடியும் நிலா, அதனால தான் நான் உங்களை தேடி வந்திருக்கேன்.

   எனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சே ஆகனும்னு வீட்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க. ஆனா எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.”

   நெற்றியில் முடிச்சோடு அவனை பார்த்தவள்,

    “சார் உங்க வீட்ல பார்த்திருக்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா? இல்ல இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா? இல்ல எப்பவுமே கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா?”

    பளிச்சென்று முத்துப் பற்கள் மின்ன சிரித்தவனின் கண்கள், சிரிக்கும் போது இன்னும் அழகாக மாறி அவளை ஈர்த்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனது விழி ஊடுருவளை புரிந்து கொண்டு, சட்டென்று தனது முகத்தை மாற்றிக் கொண்டாள்.

    “யூ ஆர் ரைட், எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே இஷ்டமில்ல, என்ன காரணம்னு கேட்காதீங்க ப்ளீஸ், அது என்னோட பர்சனல்.

    என் வீட்ல இருக்கிறவங்க என் நிலைமை புரியாம, இப்போ செய்யலைன்னா ஜாதகப்படி, இனி எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு சொல்லி, இதுல ரொம்ப தீவிரமா இருக்காங்க.

   அதோட ஆளாளுக்கு அவங்க சொந்தத்துல இருந்து பொண்ணை கொண்டு வர ஆரம்பிச்சிட்டாங்க.

    என்னோடது ஜாயின் பேமிலி, சித்தப்பா பெரியப்பா அத்தை மாமா ஒன்னு விட்ட தம்பி, அது இதுன்னு சொந்தங்கள் ஜாஸ்தி.

   முதல்ல எனக்கு பொண்ணு பார்க்கறதுல பிஸியா இருந்தவங்க, கொஞ்ச நாளிலேயே,  எப்படிடா அடுத்தவங்க கொண்டு வர்ற பொண்ணை, தட்டி கழிக்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சாங்க.

   இதுனால வர்ற வரன்கள் தட்டி போய் கிட்டே இருந்தது, சோ நானும் இனி எப்படியும் கல்யாணம் நடக்காதுங்கற எண்ணத்துல அதை பத்தி அதிகமா கண்டுக்கல.

    இப்போ கடைசியா எல்லாரும் சேர்ந்து ஒரு பொண்ணை, என் தலையில கட்டி வைக்க முடிவு பண்ணிட்டாங்க.

   பட் இதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல. எங்கம்மா இதுல சம்பந்தப்பட்டிருக்கிறதுனால என்னால எதுவுமே பண்ணவும் முடியல.
   
   அதுனால தான் நான் உங்க உதவியை நாடி வந்திருக்கேன்.”

     “இந்த விஷயத்துல நான் என்ன ஹெல்ப் பண்ண முடியும்னு நினைக்கறீங்க? பிகாஸ் கப்பிள்ஸ்ல யாராவது ஒருத்தர் லவ் பண்ணி இருந்தா, மேரேஜ் நடக்க கூடாதுன்னு அதை நிறுத்தி இருக்கோம்.

   இல்லாட்டி அந்த பையனோ  பொண்ணோ தப்பான கேரக்டரா இருந்தா, அவங்ககிட்ட இருந்து இவங்களை காப்பாத்தறதுக்காக, கல்யாணத்தை நிறுத்தி இருக்கோம். பட் நீங்க கல்யாணமே வேணாம்னு இல்ல சொல்லறீங்க…

   நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியுதா…? அந்த பொண்ணை பத்தி தப்பா பேசினா, அது ஃபியூச்சர்ல அவங்களோட வாழ்க்கையவே பாதிக்கும்.

   மேபி அவங்க கல்யாண வாழ்க்கை, கூட இதனால் தடை படலாம்.”

    “ஆமா அதனால தான் என்னை பத்தி தப்பா சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்தச் சொல்லறேன்.

    அதோட எங்க வீட்ல ஊரறிய ஆடம்பரமா கல்யாணம் பண்ண மாட்டேன், கோயில்ல வச்சு சிம்பிளா தான் பண்ணுவேன்னு சொல்லி இருக்கேன்.”

   நிலா குழப்பமாக அவனை பார்க்க,

    “நான் பேசறது முன்னுக்கு பின் முரணா இருக்கா? நானே தெளிவு படுத்துறேன்.

    அதாவது நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுகிட்ட, என்னோட  சிச்சுவேசனை முதல்லயே சொல்லிட்டேன். எனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னு, ஆனா அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க.

    ஒருவேளை என்னோட மனசை விட  என்னோட ஐடென்டிட்டி, அதாவது ஒரு  தொழிலதிபரோட மனைவிங்கிற போஸ்ட், அவங்களை அப்படி ஒரு
முடிவை எடுக்க வச்சிருக்கலாம்.

   என்னோட உறவுகள் கிட்டயும் என்னால வெளிப்படையா சொல்ல முடியல. நம்மளோட கருத்தை ஸ்ட்ராங்கா எடுத்து சொன்னாலும், வளர்ந்துட்டேன்கிற திமிருல பேசுறதா தான் நினைக்கறாங்க.

    அதனால தான் நான் ஒரு முடிவு எடுத்துட்டேன். என்னை  இவங்க கிட்டயெல்லாம் கெட்டவனா கட்டிக்கிட்டா, இனி அவங்க என்கிட்ட நெருங்க மாட்டாங்க இல்லையா?

   அதோட இந்த கல்யாண விஷயத்தை எடுத்துகிட்டு, இனி யாரும் என்னை தொல்லை செய்யவும் மாட்டாங்க இல்லையா?

     என் கல்யாணத்தன்னைக்கு நான் இன்னொரு பொண்ணோட ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி, அவளை கைவிட்டுட்டதா சொல்லி, அந்த பொண்ணு வந்து என் உறவினர்கள் முன்னாடி நின்னா, என்னுடைய கேரக்டர் சரியில்லைன்னு புரிஞ்சுகிட்டு, அந்த கல்யாணத்தையே நிறுத்திடுவாங்க.”

   “சரி தான், ஆனா…இதனால உங்களுடைய இமேஜ் பாதிக்கப்படாதா? அதாவது வெளிவட்டாரத்துல?”

   “இல்ல ஏன்னா எனக்கு கல்யாணம் நடக்க போறது, இன்னும் வெளியே யாருக்கும் தெரியாது. இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த முக்கியமான உறவுகள் முன்னாடி, மேரேஜ் வச்சுகிட்டு  ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு, வெளிய அபிஷியலா அனௌன்ஸ் பண்ணலாம்னு நான் சொல்லி வச்சிருக்கேன்.

   அதனால அன்னைக்கு ஏதாவது தப்பா நடந்தாலும், என் உறவுகள் மத்தியில் மட்டும் தான், எனக்கு இந்த பேர் ஏற்படும்.”

    “அதுவும் உங்களுக்கு கெட்ட பேரைத் தானே ஏற்படுத்தும், அந்த உறவுகள்கிட்ட இருந்து நீங்க விலக வேண்டி இருக்குமே? உண்மையான உறவுகள்கிட்ட பொய் சொல்றது தப்பு சார், சாரி சார் நான் அதிகமா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க, என்னால இதை சொல்லாம இருக்க முடியல.”

    “சரி தான் நிலா, ஆனா நம்மளோட சிச்சுவேஷனை புரிஞ்சுக்காம, தன் போக்குல முடிவெடுத்து பேசுறவங்க கிட்ட, நாம எது செஞ்சாலும் தப்பா தான் தெரியும், அதுக்கு  என்ன பண்ண முடியும்.”

   “ சரி இதுல நான் என்ன உதவி பண்ணும்னு, நீங்க எதிர்பார்க்கிறீங்க?”

  மீண்டும் சிரித்தவன்,

   “அது தான் உங்க சுகந்தா  இருக்காங்களே, பெண் வேஷம் போட,  என் கல்யாணத்தப்ப வந்து நான் ஒரு கெட்டவன்னும், என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லச் சொல்லுங்க, அதுக்கப்பறம் மத்ததை நான் பாத்துக்கறேன்.

     கண்டிப்பா இதனால உங்க பிரண்டுக்கு எந்த பிரச்சினையும் வராது, அதுக்கு நான் கேரன்டி.”

    “ஓகே சார் ஆனா, அதுக்கு நீங்களும் அவனும் சேர்ந்து இருப்பது போல, மூணு நாலு போட்டோஸ் எடுக்க வேண்டி இருக்கும்.

  அதோட ஒரு வீடியோ ஆதாரமும்  தேவைப்படும், இல்லாட்டி இதெல்லாம் கிராபிக்ஸ்னு சொல்லிடுவாங்க.”

    “கரெக்டு தான், ஆனா அது தேவைப்படாதுன்னு தான் நினைக்கிறேன். ஏன்னா உங்க பிரண்டு லேடி வேஷம் போட்டு வந்து, நான் ஏமாத்திட்டதா சொல்லும் போது, நானும் கூட சேர்ந்து, ஆமான்னு தானே தலை ஆட்டப் போறேன்.”

     கலகலவென்று சிரித்தவள்,

    “ அப்போ உங்களுக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு, உங்க ரிலேஷன் எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்துட்டா?”

    “இல்ல கண்டிப்பா எனக்கு அவங்களைப் பத்தி தெரியும், இந்த காதல் விவகாரத்தை எப்படியும் அவங்க ஏத்துக்க மாட்டாங்க, அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா, அதை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு.

   வெளியாட்கள்  மூலமா ஏதாவது பிரச்சனைனா, என்னால தயவு தாட்சண்யம் இல்லாம தண்டனை கொடுக்கவும், அதை சமாளிக்கவும் முடியும். ஆனா உறவுகள்னு வரும் போது…

   அம்மாவுக்காக பார்க்க வேண்டியதா இருக்கு, மூஞ்சியில அடிச்ச மாதிரி சொன்னா, அது உறவுகளுக்குள்ள நிறைய விரிசல்களை ஏற்படுத்திடும். அதனால தான் நான் உங்களோட ஹெல்ப் கேட்டு வந்திருக்கேன்.”

    “ஓகே சார் உங்க கல்யாணம் எப்போ?”

     “இன்னும் ஏழு நாள்ல, சுப்பிரமணியர் கோயில்ல அதிகாலை ஆறு மணிக்கு முகூர்த்தம்.”

  “ வாட் ஏழு நாள் தானா? ம்ம்ம்…சரி சார் நான் என்னோட பார்ட்னர்கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

    “உங்க பார்ட்னர்கிட்ட பேசறது ஓகே தான். பட் இந்த விஷயம் வெளியே எங்கேயும் கசியக் கூடாது. நான் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு புரியுது இல்லையா? என் கல்யாண மேட்டர்  வெளியே தெரிஞ்சாலே, என்னோட கம்பெனில ரொம்ப பெரிய இஸ்யூ ஆயிடும்.

   பிகாஸ்  என் உறவுகளும் அதுல சேர் ஹோல்டர்ஸ்.”

   “ஓகே சார் முடிஞ்ச அளவு சுகந்தாகிட்ட மட்டும், இதை சொல்ல பார்க்கறேன். “

    “நான் இன்னைக்கு நைட் எயிட்டோ கிளாக்கு உங்களுக்கு போன் பண்ணறேன், உங்களோட ஐடியா என்ன, அதுக்கு நான் எந்த மாதிரி தயாரா இருக்கனும், அதை மட்டும் எனக்கு  சொல்லிருங்க. இந்த டைம் போதுமா இல்ல…?”

   “இல்ல இன்னைக்கே நீங்க கூப்பிடுங்க, நான் அதுக்குள்ள தெளிவான ஒரு பிளானை யோசிச்சு வைக்கிறேன்.”

    “அப்புறம் நிலா உங்க பீஸ்? “

    “நான் எப்பவும் காரியத்தை முடிச்சிட்டு தான் பீஸ் வாங்குவேன் சார், உங்க கல்யாணம் நின்னு போனதுக்கு ட்ரீட்டா நீங்க வைக்கப் போற விருந்துல,   எனக்கான அமௌன்ட்டை செட்டில் பண்ணிடுங்க.”

    “ஓகே கண்டிப்பா.”

    “அப்ப சரி சார் நான் கிளம்புறேன். “

     “என்ன அவசரம் நிலா, உங்களை பார்க்க வந்த அவசரத்தில், நான் இன்னும் ஒரு காபி கூட குடிக்கல.

   நீங்களும் இவ்வளவு இயர்லியரா சாப்பிட்டு இருக்க சான்ஸ் இல்ல, எனக்கு கம்பெனி கொடுங்களேன்.

  நான் வரும் போதே ஆர்டர் குடுத்துட்டு தான் வந்தேன். எனக்காக நீங்க  சாப்பிட்டுட்டு தான் போகணும்.”

    மறுக்க முடியாமல் அவனோடு உணவை முடித்துக் கொண்டு, ஒரு கைக் குலுக்களோடு அவனிடம் இருந்து விடைப் பெற்றுக் கொண்டாள் நிலா.

   ஆனால் அவள் அறியாதது, இவனோடு அவள் பேசி சிரித்தபடி உண்டதையும், கைக் குலுக்கியதையும் ஒரு கேமரா அழகான போட்டோக்களாக, எடுத்துக் கொண்டிருந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. நிலாவை யாரு போட்டோ எடுத்தது … என்னமோ பெருசா நடக்க போகுது … நிலா சூழ்ச்சியில சிக்க போறாளா… இல்ல ஈஸ்வருக்கு விரிச்ச சூழ்ச்சியில இவ சிக்க போறாளா தெரியலையே

  2. ஈஸ்வர்க்கு நிலா மேல் என்ன கோபம்? ஏன் இப்படி போட்டோ எடுக்கனும்…