
அத்தியாயம் – 5
ஊதா நிறப் பட்டுப் புடவையில், மிதமான அலங்காரத்துடன் நித்திலா ஒரு தேவதை போலவே காட்சியளித்தாள். முதல் இரவிற்காக சுமித்ராவும் ஊர்மிளாவும் இணைந்து அவளை அலங்கரித்திருந்தனர், சாந்தி முகூர்த்தம் என்ற வார்த்தைகளைக் கேட்ட அந்த நொடியிலிருந்து நித்திலாவிற்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்திருந்தது…
பெண் பார்க்க வந்தபின், நித்திலா விக்ராந்த்தைச் சந்திக்கவே இல்லை. நிச்சயதார்த்தம் எதுவும் இல்லாமல், நேரடியாகத் திருமணத்தை வைத்ததால் சந்திப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. இன்று அவன் அவளுடன் மேடையில் அமர்ந்திருந்த போதும் சரி, கழுத்தில் தாலி கட்டிய போதும் சரி, அவள் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதை நாணம் என்பதைவிட, பயம், தயக்கம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
பெண் பார்க்க வந்த அன்று அவன் சொன்னதையும் மீறி பிடித்திருக்கு என்று சம்மதம் சொல்லிவிட்டோமே, அதற்காக அவன் இன்று தன்னை என்ன செய்யப் போகிறானோ என்ற பயம் மட்டுமே அவளுக்குள் நிரந்தரமாக இருந்தது.
அவனை பற்றிய யோசனையில் நின்றவள்.. ”நித்திலா… நித்திலா… ஹேய் நித்தி!” சுமித்ராவின் அழைப்பில் நடைமுறைக்கு வந்தவள், “ஹாங்?” என்று விழித்தாள்.
”எந்த உலகத்துல இருக்க நீ?” எனச் சிரித்த சுமித்ரா, “என்ன முழிச்சிட்டு இருக்கும் போதே கனவா? கனவுல யார்? விக்ராந்த் தானே?” என்று அவளின் நிலை அறியாமல் கேலி செய்தாள்.
நித்திலா தனது மன வலியை மறைத்து, வலியச் சிரமப்பட்டுப் புன்னகைக்க, அப்போது அங்கு மரகதப் பாட்டி… “என்னமா தயார் தானே?” என்று பெண்களிடன் பரிவுடன் வினவ, பாட்டியைப் பார்த்ததும் நித்திலா இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.
”என் ராசாத்தி… எவ்வளவு அழகு என் பேரன் பொண்டாட்டி!” பாட்டி பாச மிகுதியால் அவள் முகத்தை வழித்து திரிஷ்டி கழித்தார். மெலிதாகப் புன்னகைத்தவள் அவரது காலைத் தொட்டு வணங்கினாள்…
”தீர்க்க சுமங்கலியா இருமா… பதினாறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!” என மனம் நிறைய ஆசீர்வதித்தார். பின்னர் ஊர்மிளா தான் கொண்டுவந்த பால் செம்பை நித்திலாவிடம் நீட்ட, சிறு தயக்கத்துடன் அதனை வாங்கிக் கொண்டாள் அவள், அடுத்த ஓரிரு நிமிடங்களில் எல்லாம் நித்திலா விக்ராந்தின் அறை வாசலில் நின்றாள்.
”இதுக்கு மேல என்னால வர முடியாது நித்தி, ஆல் தி பெஸ்ட்!” ஒரு பரீட்சைக்கு அனுப்புவது போல் சொல்லிவிட்டு, அவளை அறைக்குள் தள்ளி, கதவைச் சாத்திவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள் சுமித்ரா.
அறைக்குள் சென்ற நித்திலா மெல்ல தலையை உயர்த்தி தயக்கத்துடன் அறையைச் சுற்றி நோட்டமிட்டாள். விசாலமான பெரிய அறையாக இருந்தது. இடது பக்கம் மேஜையுடன் கூடிய நாற்காலி போடப்பட்டிருந்தது, அதன் மீது சில கோப்புகளும், ஒரு மேசை விளக்கும் இருந்தன. அங்கிருந்த இடது பக்க சுவரில் விக்ராந்தின் புகைப்படம் ஒன்று ஆளுயரத்திற்கு மாட்டப்பட்டிருந்தது. பெண் பார்க்க வந்த அன்று இறுக்கத்துடன் இருந்த முகம், புகைப்படத்தில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தது.
வலது பக்க மூலையில் இருந்த ஒரு கதவு பாத்ரூம் என்றும், அதற்குச் சற்று தள்ளித் திறந்திருந்த இன்னொரு கதவு பால்கனிக்குச் செல்லும் வழி என்றும் அவள் புரிந்துகொண்டாள், அறைக்குள்ளேயே குளிர்பதனப் பெட்டியும் இருந்தது.
அனைத்தையும் பார்த்தவளின் பார்வை இறுதியாகக் கட்டிலின் மீது நிலைத்தது. முதலிரவிற்க்காக நறுமணம் வீசும் பூக்களால் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த அந்தக் கட்டிலைப் பார்த்தபின், அவளுக்குள் இருந்த பதற்றம் பல மடங்கு அதிகரித்தது.
அந்த அறையில் அவன் இருப்பதற்கான அறிகுறி இல்லாமல் போகவே, இப்போது தான் என்ன செய்வது என்பது புரியாமல் சிலை போல் அப்படியே நின்றிருந்தாள்.
சரியாக அந்த நொடியில், பால்கனியிலிருந்து கருப்பு நிற ட்ராக் பேண்ட் மற்றும் வெள்ளை நிற முழுக்கை டி-ஷர்ட்டுடன், கையில் டின்னில் அடைக்கப்பட்ட கோக்கைப் பருகியபடி அறைக்குள் வந்தவன், நித்திலாவைக் கண்டுகொண்டான்…
ஊதா நிறப் பூவைப் போல, மருண்ட விழிகளுடன் நின்றிருந்த அவளை அவன் பார்வை வருடியது. தற்செயலாகத் திரும்பியவள், அவன் நிற்பதையும், தன்னையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு உடலில் உதறல் ஏற்பட, தலை தாழ்த்திக்கொண்டாள்…
அவனோ உதட்டில் பூத்த புன்னகையுடன்… ”வாங்க மிஸஸ் விக்ராந்த், ஏன் அங்கேயே நின்னுட்டீங்க?” அவனது இந்தச் சொற்கள் அவளுக்கு ஏதோ தவறாக உணர்த்த, அவனை ஏற்று பார்த்தாள் தயக்கத்துடன். அவனது பார்வையில் எகத்தாளம் தெரிந்தது.
”அட… உங்களைத் தான்!” என்றவன் அவளை மெல்ல நெருங்கி வந்தான். அவளுக்கோ பயத்தில் உடலெல்லாம் வியர்த்து கொட்டியது.
சற்று தள்ளி நின்று அவளை ஆராய்ந்தவன், “என்ன வியர்வைலேயே குளிச்சிடுவீங்க போல” என்றவன், பால்கனி கதவைச் சாத்திவிட்டு வந்து ஏ.சி-யை இயக்கினான்.
பதட்டத்துடன் நின்றிருந்தவள்,.. ”எவ்வளவு நேரம் தான் நிற்பீங்க? வாங்க, அப்படி உட்கார்ந்து பேசலாம்.” அவன் மெத்தையைக் பார்வையால் காட்ட, அவன் பேசுவதும், நடப்பதும் ஒருவித பயத்தையே உண்டு பண்ணியது அவளுக்கு…
அவள் சிலை போல் நிற்கவும்,.. ”கை பிடிச்சு அழைச்சிட்டுப் போனா தான் வருவீங்களா? இல்ல, கையில ஏந்திக்கிட்டுப் போனா தான் வருவீங்களா?” அவன் இதழோரச் சிரிப்புடன் வினவ, அதில் மேலும் பயந்துபோனவள், வேகமாக மெத்தையின் ஓரத்தில் வந்து அமர்ந்துவிட்டாள்…
”ம்ம்… குட்,” என்றவன், அவளை நெருங்கி வர… தலை தாழ்த்தி அமர்ந்திருந்தாலும் அவன் வருவதை உணர்ந்தவள், கட்டிலோடு சேர்ந்து ஒன்றிக் கொண்டாள்.
”அந்தச் செம்பை அங்கே வச்சிடலாம்ல? ஏதோ அது தான் உன் புருஷன் மாதிரி அப்படி இறுக்கி பிடிச்சிட்டு இருக்க.” அவன் சொல்லியதில் செய்வதறியாது விழித்தவள், மெதுவாகத் தன் அருகில் இருந்த மேஜையில் அதனை வைத்தாள்.
”தட்ஸ் மை கேர்ள்!” என்று மெலிதாகச் சிரித்தவன், “இப்போ நான் சொன்னதை டக்கு டக்குனு பண்ணுன நீங்க, அன்னைக்கு ஏன் நான் சொன்னதைச் சொல்லாம, வேற மாதிரி சொன்னீங்க?” அவன் மரியாதையாகக் கேட்டாலும், அவன் குரலில் ஒரு இறுக்கம் தெரிந்தது.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் தன் கரங்களைப் பிசைந்தபடி, தலை குனிந்து அமர்ந்திருக்க, அவளின் புஜத்தை வன்மையாகப் பற்றி தன் பக்கம் இழுத்தவன், “கேட்டதுக்குப் பதில் வரணும். இப்படி அமைதியா இருந்தா எனக்குச் சுத்தமா பிடிக்காது!” அவன் கண்களில் தெரிந்த கோபத்தைக் கண்டு அவளின் கண்கள் கலங்கின.
அவளின் கலங்கிய கண்களைப் பார்த்து, “ச்சே!” என அவளை உதறித் தள்ளியவளின் செயலில் அவள் மெத்தையில் போய் விழுந்தாள்…
”உன்கிட்ட அவ்வளவு தெளிவா சொன்னேன். ஆனா நீ நான் சொன்னதை கொஞ்சம்கூட மதிக்காம அன்னைக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லி, இப்போ என் ரூம் வரைக்கும் வந்து நிக்கிற. உன்னை என்ன செய்யணும்?” அவன் கர்ஜிக்க, அவனிடம் என்ன சொல்வது, எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது எனத் தெரியாமல், அமர்ந்த நிலையில் மௌனமாக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் நித்திலா.
அவளது அழுகை அவனின் கோபத்தை பல மடங்காக்கியது. “இப்போ அழுகையை நிறுத்தல, உன்னை கொன்னுடுவேன்!” அவனின் உறுமலில் நடுங்கிப்போனவள், மூச்சை உள்ளிழுத்து அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றாள்.
”சொல்லு… ஏன் அப்படிப் பண்ண?” அவன் அதட்டலுடன் கேட்க… பேசாமலிருந்தால் இன்னும் கோபம் கொள்வான் என ஓரளவு அவனைப் புரிந்துகொண்டவள், “வந்து… நான்… எனக்கு பிடிச்சிருந்தது, அதான்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்திவிட்டாள்.
அவனிடமிருந்து சில நிமிடம் சத்தமேயில்லை. தலை கவிழ்ந்திருந்தவள், ‘நான் சொன்னது பொய்னு தெரிஞ்சிடுச்சா’ என அவன் முகத்தைப் பார்க்க முடியாமலேயே கையைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தாள். அப்போதே அவள் அவனது முகத்தைப் பார்த்திருந்தால் அவனின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டிருப்பாளோ என்னவோ!
அவன் தான் சொல்லியதை நம்பவில்லை போலும், அதனால் தான் அமைதியாக இருக்கிறான் என்று நினைத்தவள், உண்மையைச் சொல்லிவிடலாம் என்று, “உங்க அப்பா… உங்க அப்பா சொல்லித் தான் நான் இப்படிச் செய்தேன்,” அத்தனை நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்தவள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
நரம்புகள் புடைக்க, விவரிக்க முடியாத அளவிற்கு அவன் முகத்தில் கோபம் தெரிந்தது. அதைப் பார்த்துப் பயந்து பின்வாங்கினாள் அவள்.
அவனோ.. ”அப்படினா என் அப்பாவுக்காகத் தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட ரைட்?” அவன் முக இறுக்கத்துடன் வினவ… அவனைப் பார்த்தவாறே ‘ஆம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள் அவள்.
”என் அப்பா சொன்னதுக்காக இப்போ என்னைக் கட்டிக்கிட்ட சரி, நாளைக்கே அவர் வேற ஒருத்தனை இன்னொரு தடவை கட்டிக்க சொன்னா, மேடம் அதையும் செய்வீங்களோ?” அவன் இளக்காரமாய்க் கேட்க, அவளுக்கு அவனின் இந்தக் கேள்வி அழுகையை வரவழைத்தது.
”சொல்லு… என் அப்பா கை காட்டுற ஆண்களை எல்லாம் நீ கல்யாணம் பண்ணிப்பியா? அது எத்தனை பேரா இருந்தாலும் செய்வியா நீ?” என்றவன்… அவள் பதில் சொல்லும் முன்னரே, “நீ செய்வன்னு தான் தோணுது,” என்றான்.
அவன் சொல்ல வரும் அர்த்தம் புரிந்து, அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியாமல் அவள்.. “போதும் நிறுத்துங்க!” என குரலை உயர்த்தி சொன்னவள்,.. ”என்னை பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது? நீங்க சொல்றதுக்கான அர்த்தம் என்னனு புரியுதா உங்களுக்கு? நீங்களும் பொண்டாட்டி குழந்தைகளோட சந்தோஷமா வாழணும்னு நினைச்சு என்னை உங்களைக் கட்டிக்க சம்மதம் சொல்லச் சொன்னாரு உங்க அப்பா. நானும் ‘முடியாது’ன்னு எவ்வளவோ சொன்னேன். ஆனா அவர் தான்…” என நிறுத்தியவள், மூச்சை இழுத்து விட்டு,.. “ஒரு பெரிய மனுஷன் என்கிட்ட அவ்வளவு தூரம் வேண்டி கேட்ட பிறகு என்னால அவர் வார்த்தையைத் தட்ட முடியல. அதனால தான் இதுக்கு ஒத்துகிட்டேன்!” அத்தனையையும் சொல்லி முடித்தவள், அவனை ஏற்று பார்த்தாள். முன்னே இருந்ததைவிட இப்போது அவன் முகத்தில் கோபம் அதிகமாகவே தெரிந்தது.
தன் பக்கம் உள்ள நியாயத்தைச் சொன்ன பிறகாவது, கொஞ்சமாவது தன்னைப் புரிந்து கொள்வான் என்று நினைத்திருந்தவளுக்கு அவனின் கோபம் கிலியை உண்டு பண்ணியது.
”என் விருப்பம் இல்லாம, எப்படி நீ என் லைஃப்குள்ள வரலாம்?” அவன் உறும… “பிடிக்கலன்னா உங்க அப்பாட்ட நேரடியா சொல்லிருக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு என்னைப் மிரட்டுறீங்க!” என்றாள் அவள் அடாவடியாக.
”என்னையே எதிர்த்துப் பேசுறியா?” அவன் தன் கரத்தினால் அவள் கழுத்தை நெறிக்க வர… பயந்து பின்வாங்கியவளைக் கண்டு எரிச்சலுடன் கையை கீழிறக்கினான்.
விக்ராந்த் அவளை விட்டுத் தள்ளிச் சென்று அங்கிருந்த மேஜையின் பக்கம் செல்ல அப்போது தான் மூச்சு சீரானது நித்திலாவிற்கு. அதுவும் சில நொடிகள் தான். போன வேகத்தில் கையில் ஒரு கோப்புடன் வந்து, அதனை அவள் மீது வீசினான்.
அவள் ‘இது என்ன’ என்று புரியாமல் பார்க்க, “ஓபன் பண்ணி படி!” அவன் அதட்டலுக்குப் பயந்து அதனைத் திறந்து படித்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது.
காரணம், அது விவாகரத்து பத்திரம், அவளுக்கும் அவள் கணவனுக்கும் உண்டான விவாகரத்துப் பத்திரம்!
”இது தான் நான் உனக்குத் தர்ற கல்யாணப் பரிசு. இன்னையிலருந்து அடுத்த ஆறு மாசத்துக்கு மட்டும் தான் நீ எனக்குப் பொண்டாட்டி. ஆறு மாசத்துக்குப் பிறகு நீ யாரோ நான் யாரோ. இந்த ஆறு மாசமும் என் மனைவியா, நான் என்ன சொல்றேனோ அதுபடி மட்டும் தான் கேட்டு நடக்கணும். என் பொண்டாட்டிக்கு உண்டான உரிமைக்கு எந்தக் குறையும் இல்லாம மகாராணி மாதிரி நீ இங்கே இருக்கலாம். ஆனா, ஆறு மாசத்துக்கு அப்புறம் இங்கிருந்து ஒரு குண்டூசி கூட நீ எடுத்துட்டுப் போகக் கூடாது. இன்னைக்கு எப்படி என் வீட்டுக்குள்ள வந்தியோ, அப்படியே தான் திரும்பிப் போகணும். இது எல்லாமே அதுல எழுதி இருக்கு. படிச்சிருப்பனு நினைக்கிறேன். இந்தா சைன் போட்டு கொடு!” எனப் பேனாவை அவளிடம் நீட்டினான்.
நித்திலா இவன் இப்படி ஒரு செயலில் இறங்குவான் என கனவிலும் நினைத்து பார்த்திருக்கவில்லை. அவனது பேச்சை மீறியதால் சிறிது காலம் முறைத்துவிட்டு திட்டலோடு முடித்துக்கொள்வான், பிறகு வாழ்க்கையைத் தன்னுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிடுவான் என்ற கணிப்பில் தான் இருந்தாள். ஆனால் விவாகரத்து வரைக்கும் அவன் போவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
கல்யாணம் ஆன முதல் இரவில் பல கனவுகளுடன் பெண் என்பவள் கணவனின் அறைக்குள் நுழைவாள். ஆனால் நித்திலாவிற்கு தன் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே இருண்டு போனது.
அவளது கைகள் நடுங்க, தன் கையில் இருந்த ஃபைலைக் கீழே தவறவிட்டாள். அது கீழே விழாமல் பிடித்துக் கொண்ட விக்ரம்..
”எவ்வளவு முக்கியமான ஃபைல் இது, இப்படித் தவறவிடுற?” சற்று கடினமான குரலில் சொன்னவன்.. “சைன் பண்ணி கொடு. ஐம் ஆல்சோ வெரி டையர்ட்,” எனப் பேனாவையும் ஃபைலையும் அவளிடம் நீட்டினான்.
அவள் வாங்காமல் கண்ணீர் வடிய நிற்க, “ப்ச்… என் டைமை வேஸ்ட் பண்ணாத, குயிக்!” அவன் சொல்ல, “என்னால சைன் பண்ண முடியாது!” என்றாள் உறுதியான குரலில்.
”உன்கிட்ட நான் ரிக்வஸ்ட் பண்ணல. நீ சைன் பண்ணித் தான் ஆகணும்னு ஆர்டர் பண்ணுறேன்,” அவன் கறாரான குரலில் சொல்ல, “நீங்க என்ன சொன்னாலும் சரி, நான் இதுக்கு ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன். என் வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே கருகிப் போச்சுன்னு என் தாத்தா பாட்டிக்குத் தெரிஞ்சா, அவங்க உயிரையே விட்டுடுவாங்க. இல்லை… நான்… நான் சைன் பண்ண மாட்டேன்!” என்றாள் நலிந்த ஆனால் உறுதியான குரலில்.
”ப்ச்… என்னமா நீ இப்படிப் புரிஞ்சிக்காம நடந்துக்கிற? நீ இப்போ சைன் பண்ணா, ஆறு மாசம் என் கூட என் பொண்டாட்டியா இருக்கலாம். இதைப்பத்தி உன்னையும் என்னையும் தவிர இந்த ஆறு மாசத்துக்கு யாருக்கும் தெரியப் போறதில்லை. அப்புறம் என்ன கவலை உனக்கு?”
”இதே நீ சைன் பண்ண மாட்டேன்னு பிடிவாதம் பண்ணேன்னு வையேன்… நேரா உன் தாத்தா பாட்டி கிட்ட போய், ‘எனக்கு உங்க பேத்தியைப் பிடிக்கல. இதைப்பத்தி கல்யாணத்துக்கு முன்னாடியே அவ கிட்ட சொன்னேன். ஆனா அவ தான் நான் சொன்னதையும் மீறி என்னைக் கட்டிக்கிட்டா. இதுல என் மேல எந்தத் தப்பும் இல்லை’னு சொல்லிட்டு, இந்த டிவோர்ஸ் பேப்பர்ஸை உன் தாத்தா பாட்டி கிட்ட கொடுத்து, உங்க பேத்தி கிட்ட நீங்களே சைன் வாங்கி கொடுங்கன்னு சொல்லிடுவேன். இது உனக்கு ஓகேன்னா சொல்லு, இப்படியே பண்ணிடலாம்.” அவன் கூலாகச் சொல்ல, “இல்ல… இல்ல… அப்படி எதுவும் பண்ணிடாதீங்க!” என்றாள் கண்ணீர் வடிய.
”ஓகே… அப்போ இப்போதே நீயே சைன் பண்ணிக் கொடு. உனக்கு ரெண்டு சாய்ஸ் கொடுத்திருக்கேன். நீயே முடிவு பண்ணிக்கோ. ரெண்டு நிமிஷம் உனக்கு டைம்” என்றுவிட்டு மெத்தையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தவன் தன் போனை உயிர்ப்பித்து அதில் பார்வையை பதித்துக் கொண்டான்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவன் சொன்ன சொல்லையும் மீறி திருமணத்திற்கு சம்மதம் சொன்ன கோவம் விக்ராந்துக்கு.
தன் அனுமதி இல்லாமல் தன் வாழ்வில் எதுவும் நிகழ கூடாது என்று நினைப்பவன் தனது தந்தையின் வற்புறுத்தலில் நித்திலா இந்த திருமணத்தை செய்து கொண்டதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.
ஒருவேளை தான் விரும்பியதால் தான் திருமணம் நடந்தது என்று சொல்லிய போது அவனது ஈகோ அடங்கி இருந்து இருக்குமோ? 🤔 இவள் தான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்டாளோ?
தன்னிடம் முயன்று தோற்ற தனது தந்தை குறுக்கு வழியில் நித்திலா மூலமாக அவர் விருப்பத்தை நிறைவேற்றி கொண்டுள்ளார் என்கின்ற கோவம்.
தான் நினைத்ததை நடத்த என்னமும் செய்வான் போல. பார்ப்போம்.
அடேங்கப்பா நித்திலாவுக்கு விக்ராந்த் தான் பெரிய வில்லனா இருப்பான் போலயே … பேசியே பயமுறுத்துறான் …