

அழகியே 5
மறுநாள் காலை செழியன் கண்விழிக்க, அவனின் கைவளைவில் தலை வைத்து மழலை போல் உதட்டை பிதுக்கிக்கொண்டு உறங்குபவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு.அதையும் மீறி அவளின் வதனத்தில் ஒரு வலி, தன்னால் தானோ என்று நினைத்தவனுக்கு அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.
தலையில் இன்னும் கட்டு பிரிக்கப்படாமல் இருக்க, அவளை மெதுவாக தன் கைவளைவில் இருந்து நகர்த்தியவன், அவளை தலையணையில் படுக்க வைத்து விட்டு வெளியே செல்ல, அப்போதுதான் எழுந்த தேவ், “குட் மார்னிங் டா” என்றவாறே வந்தவன் செழியனின் அருகில் அமர்ந்தான்.
தேவ், “ஏன்டா நைட் தூங்கலையா? கொசு அதிகமா இருந்துருக்கும் இல்லை. உனக்கு ஏசி ல தூங்கி பழகிட்டு அது இல்லாம தூங்காம கஷ்டமா இருக்கும் இல்லை” என்று கேட்க, அவனோ, “ச்ச ச்ச அதெல்லாம் இல்லைடா” என்றவனுக்கு அவளின் நினைவு.
இரவெல்லாம் தூங்காமல் புரண்டுகொண்டே இருந்தாள். அவனோ வலியால் தூங்காமல் தவிக்கிறாள் என்று நினைத்தவனுக்கு ‘ஒரு வேலை அவளுக்கும் ஏசி இல்லாம தூக்கம் வரலையோ, வசதியா வளர்ந்தவளா இருப்பாளோ, நான் அவளை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்’ என்று அவனின் எண்ண அலைகள் எங்கெங்கோ சென்று வந்தது.
அவனின் முன் சொடக்கிட்ட தேவோ, “என்னடா நான் கூப்பிடறது கூட கேக்கலையா உனக்கு? அப்படியென்ன யோசனை” என்று கேட்க, ஒன்றுமில்லை என்று தலையாட்டி மறுத்தவனோ, “நேத்தே சொன்னேன்ல வீடு பாக்கணும். எனக்கு வேலை வேணும்” என்று கூற அவனோ, “அதுக்கு இப்போ என்ன அவசரம், இங்க நான் மட்டும் தான இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க” என்றான்.
அவனோ, “இல்லடா அது சரிவராது. உன் அப்பா அம்மா எப்போ வேணாலும் இங்க வருவாங்க. நாங்க இங்க இருக்கறது அவங்களுக்கு சங்கடமா இருக்கும். அதுவும் ஒருவேளை நான் இங்க இருந்தா நம்ம பேரெண்ட்ஸ் இடைல ப்ரோப்ளம் வரும்” என்று கூறி மறுத்தான்.
இவர்களை போலவே தேவின் அப்பாவும், செழியனின் அப்பாவும் சிறுவயதில் இருந்தே உயிர்த்தோழர்கள். செழியன் அதை மனதில் வைத்தே கூறினான். தேவ் ஒரு துணிப்பையை எடுத்து செழியனின் முன் நீட்டியவனோ, “இதுல டிரஸ் இருக்கு கொண்டு போய் அந்த பொண்ணுகிட்ட குடு” என்று கூறியவனை திகைப்புடன் பார்த்தான்.
அவனோ, “இது நேத்து தாலி வாங்கும்போதே வாங்கிட்டேண்டா, நீ வாரத்துல ரெண்டு நாள் இங்கதான் தங்குவ. சோ உன்னோட ட்ரெஸ் இங்க ஒரு கபோர்ட் முழுசும் இருக்கு. அந்த பொண்ணு போட்டுக்க துணி வேணும்ல அதான் வாங்குனேன்” என்று கூறியவனை அணைத்து விடுத்தவன் அறைக்குள் நுழைந்தான்.
அவளோ பாத்ரூமுக்குள் இருக்க, அங்கே சென்றவனோ, “வேதா உனக்கு ட்ரெஸ் இங்க வச்சிருக்கேன். குளிச்சுட்டு மாத்திக்கோங்க நான் வெளியேருக்கேன்” என்றவன் வெளியேறி ஹாலுக்கு வந்துவிட்டான்.
அவள் குளித்து முடித்து வெளியே வரவும், தேவ் பாலுடன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவனின் கையில் பாலை பார்த்தவளோ, “அண்ணா நான் வேணா டீ போடவா” என்று கேட்க, செழியன், “உனக்கு டீ போட தெரியுமா” என்று கேட்டவனிடம், “தெரியும்னு தான் நினைக்குறேன். ட்ரை பண்றேன்” என்றாள்.
தேவ், “என்னது ட்ரை பண்றியா? ஏம்மா இப்படி வேணாம் தெய்வமே! நான் போய் போடறேன். காலைலயே எதுக்கு விஷபரீட்சை” என்று கூற, அதில் அவள் முகம் சுருங்கி போக, அது தாங்க முடியாத செழியனோ தேவின் கையில் இருந்தா பாலை பிடிங்கியவன் அவளின் கையில் கொடுத்து, “நீயே போய் போடு” என்று அவளிடம் கொடுக்க, அதில் மகிழ்ந்தவளோ வேகமாக சமையலறைக்கு சென்றாள்.
தேவ், “ஏன்டா” என்று கேட்க, “உட்காருடா” என்று அவனின் தோளில் கைவைத்து அமர்த்தி கொண்டான்.
ஐந்தே நிமிடத்தில் மூவருக்கும் டீ போட்டு எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர, தேவோ, “டீ போட்டியா அதுக்குள்ள, பால் நல்லா காச்சுனியா, சுகர் போட்டியா, டீ பவுடர் நல்லா கொதிக்க விட்டியா?” என்று கேள்வியாய் கேட்க, அவளோ அவனை முறைத்து பார்க்க, செழியனோ வாய் விட்டு சிரித்தவன், “ஏன்டா இவ்ளோ கொஸ்டின் கேக்குற.. டீ எடுத்து குடி” என்றவன் அமைதியாய் டீயை குடிக்க, தேவ் டீயை கையில் எடுத்தவன் செழியனின் முகபாவனைகளை ஆராய, அவனோ தன்னவளின் கரங்களால் அருந்தும் முதல் டீ அல்லவா அவளையும் ரசித்து டீயை ருசித்து கொண்டிருந்தான்.
தேவ் அவனைக்கண்டு தலையில் அடித்துக்கொண்டவன் டீயை குடிக்க, அவன் கண்களும் விரிந்து கொண்டது அந்த பானத்தின் சுவையில். டீயை சப்புகொட்டி குடித்த தேவோ, “ஏன் தங்கச்சி அப்போ உனக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்க, அவளோ, “தெரியலையே” என்று பாவமாக கூற, செழியன்தான் அவனை முறைத்துக்கொண்டு இருந்தான்.
அவனோ இப்போ நாம என்ன கேட்டோம் நம்மள இப்படி பாசமா பார்க்குறான் என்று நினைத்தவன், “சரி மச்சான் வாவா வீடு பாக்கணும்னு சொன்னல்ல, இங்க ஒரு நாலு தெரு தள்ளி வீடு ஒன்னு காலியா இருக்குன்னு சொன்னாங்க. போய் பார்க்கலாமா? ஆனா ரொம்ப சின்னவீடுதானாம், பக்கத்து வீட்டு அங்கிள் கிட்ட கேட்டேன், அவர்தான் சொன்னாரு. அவர் பிரண்ட் வீடுதானாம். அவர் வெளியூர்ல இருக்காரு. அவரோட அப்பா அம்மா வயசானவங்க அவங்கதான் பக்கத்து வீட்டுல இருக்காங்களாம். தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்லுங்கன்னு சொன்னாங்க போல” என்று தயக்கமாக கூறியவனிடம், “அதுக்கு நீ ஏன்டா இப்படி தயங்குற, போய் பார்க்கலாம். நாங்க ரெண்டு பேர்தான போதும் போகலாம்” என்றவன் வேதாவை திரும்பி பார்த்தான்.
தேவ், “தங்கச்சிமா நீ இங்கயே இரு, நாங்க போனதும் வந்துடுறோம்” என்று கூற, அவளுக்கு யாரும் இல்லாமல் தனியாக இருக்க பயமாகவே இருக்க, அவர்களிடம் அதை கூறவும் வேறு தயக்கம் கொண்டவள் செழியனை பார்க்க அவனோ, “இல்லடா அவளும் வரட்டும். தனியா இருக்க வேண்டாம். இந்நேரம் கல்யாணம் முடிஞ்சுருக்கும். உன் அம்மா அப்பா இங்கதான் வருவாங்க. அப்பா எல்லாத்தையும் அங்கிள்கிட்ட சொல்லிருப்பாங்க. அவங்க ஏதாச்சும் பேசி வச்சுட்டா வேணாம்” என்று கூறியவனுக்கு அவனின் தாயை பற்றி நன்கு தெரியுமே, மூவருமே அங்கிருந்து கிளம்பினர்.
அவனின் பெற்றோர் காஞ்சிபுரத்தில் தனியாக இருக்கின்றனர். இவன் படிப்பிற்காக சென்னையில் அவர்களின் வீட்டில் வசிக்கிறான்.
மூவரும் தேவ் சொன்ன வீட்டுக்கு வர, அந்த வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டு வாசலில் ஒரு பெரியவர் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். தேவ் அவர் அருகில் சென்று, “பெரியவரே இந்த வீடு வாடகைக்கு விடுராங்கன்னு தெரிஞ்சவர் சொன்னாரு. இந்த வீட்டு சொந்தக்காரங்க யாரு எங்கருக்காங்கன்னு தெரியுமா?” என்று கேட்க, அவரோ கண்ணாடியை கழட்டியவாரு எழுந்தவர், “நம்ம வீடுதான் தம்பி. நீங்க தனியா இருக்கீங்க. தனி ஆளுக்கு வீடு தரதில்லையே?” என்றார்.
அவனோ, “வீடு எனக்கில்லைங்க, இவன் என் பிரண்ட். இது இவனோட வைப். இவங்களுக்கு தான் வீடு” என்று கூற, அப்போது உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி “யாரு தம்பி நீங்க?” என்று கேட்க, அந்த பெரியவரோ தன் மனைவியிடம், “வீடு கேட்டு வந்துருக்காங்க அன்னம், புதுசா கல்யாணம் ஆனவங்க போல” என்று கூறினார்.
அவர்கள் புறம் திரும்பியவருக்கோ வெயிலில் வியர்த்து வழிந்து தலையில் கட்டுடன் குழந்தை முகத்துடன் செழியனின் கைகளை பற்றிக்கொண்டு நின்று இருந்த வேதாவை கண்டு பிடித்துப்போக அவளருகில் வந்தவர், “வா தாயி. இப்படி வந்து உட்காரு. ஏ கூறு கெட்ட மனுஷா.. இப்படி உடம்பு சரி இல்லாத புள்ளைய நிக்க வச்சு பேசிட்டு இருக்கியே.. உமக்கு மண்டைல ஏதாச்சும் இருக்கா இல்லையா?” என்று கடிந்து கொண்டவர். “வாங்க உள்ள வந்து உட்காருங்க” என்று மூவரையும் உள்ளே அழைத்து சென்று அமரவைத்தவர், நீர் கொடுக்க செழியனுக்கோ முன்பின் தெரியாதவர்க்கு உதவும் அவரை பார்க்க வியப்புதான்.
வேதாவிடம் அமர்ந்தவர், “ஏன் தாயி காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா? வீட்டுல ஏத்துக்கிடலையா? ஒன்னும் விசனப்படாதீய எல்லாம் கொஞ்ச நாளைக்கித்தேன், நாளாப்பின்ன ஒரு புள்ளைக்குட்டி ஆச்சுதுன்னா வந்து ஒட்டிக்கிருவாக” என்று வெள்ளந்தியாய் பேசி ஆறுதல் கூறினார் அந்த கிராமத்து பெண்மணி.
வேதா திகைப்பாக செழியனை பார்க்க, அதற்குள் உள்ளே வந்த பெரியவரோ, “இப்போதான் என்ற மகன் போன் போட்டான். உங்க பக்கத்து வீட்டுக்காரக சொன்னாவலாமா.. வாங்க அப்பு வீட்ட பாத்துட்டு வந்துரலாம்” என்று அழைக்க, அந்த பெண்ணிடம், “ரொம்ப தேங்க்ஸ்ங்க”
என்றவாறே எழ அவரோ, “எதுக்கு ராசா இந்த தண்ணி குடுத்ததுக்கா.. அட வாயா ஊட்ட பாக்கலாம்” என்றவாறே அழைத்து சென்றார்.
வீடு ஒரு அறை, சமையலறை, ஒரு ஹால் முன்புறம் வாசல், பின்வாசலில் டாய்லெட் என்று இருவருக்கு சரியான அளவில் இருந்தது. செழியனுக்கு அந்த வீட்டை மிகவும் பிடித்துவிட்டது. வீட்டை மட்டுமல்ல கள்ளம் கபடமில்லாமல் பழகும் அந்த இரு வயதான பெரியவர்களையும்.
தேவ், “வேணாம் மச்சான். இந்த வீடு உனக்கு சரி வராது. வேற பாக்கலாம் ரொம்ப சின்னதா இருக்கு. அதுவும் இல்லாம ரொம்ப தூரமா இருக்கு” என்று கூற, அவனோ, “இல்லடா இதுவே போதும், நாங்க இங்கயே இருந்துக்குறோம். நான் யாரையும் பார்க்க விரும்பல. நான் என்னோட இடத்துல இருந்து நான் செஞ்சதா நியாயப்படுத்தனாலும் அது தப்புதான். நான் எல்லாத்தையும் விட்டு விலகி இருக்கலாம்னு நினைக்குறேன்” என்றவன் அவர்களிடம் பேச சென்றுவிட்டான்.
அவர்களோ, “வீட்டுக்கு எதுவும் முன்பணம் வேணாம்யா, வீட்ட சுத்த பத்தமா வெச்சுக்கிட்டா போதும். வாடகை மாசம் மூவாயிரம். கரண்டுக்கு தண்ணிக்கு எல்லாம் இதுலயே பாத்துக்கலாம்” என்று கூறி விட, செழியனுக்கோ அதுவரை வீட்டுக்கு அட்வான்ஸ் என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருந்தவனுக்கு அத்தனை நிம்மதி.
வீடு சுத்தமாக துடைத்து நீட்டாக இருந்தது. செழியன் அவர்களிடம், “நாங்க இன்னிக்கே குடி வந்துடுறோம்ங்க ரொம்ப தேங்க்ஸ்” என்று கூற, பெரியவரோ, “எதுக்குயா நன்றியெல்லாம். இனி இங்கதான இருக்க போறிங்க. தாத்தா, பாட்டினே கூப்பிடுங்க” என்றனர்.
செழியன் வேதாவை அங்கேயே இருக்குமாறு கூறியவன் தேவ்வை அழைத்துக்கொண்டு சென்றவன், வீட்டுக்கு தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி கொண்டு வந்திருந்தான்.
தேவ் அவனை திட்டிக்கொண்டே வந்தான். “இப்போ எதுக்குடா கழுத்துல போட்ருந்த செயின வித்த நான்தான் பணம் தரேன்னு சொன்னேன்ல” என்றவனை செழியன் சமாளித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தவனுக்கு வேதாவின், “நான் எப்படி இங்கே வந்தேன்” என்ற கேள்வியில் அதிர்ந்து தன்னிலை இழந்து நின்றான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செழியன் தனக்காக கூட யோசிக்காமல் அவளுக்காக மட்டுமே யோசிக்கின்றான்.
சூழ்நிலை காரணமாக செய்தாலும் தான் செய்த தவறை நியாயப்படுத்தாமல் குடும்பத்தினரிடம் இருந்து விலகி நிற்க எண்ணுகிறான்.
வேதாவிற்காக யோசிப்பவன் அவளது குடும்பத்தை பற்றியும் சிறிது யோசித்து பார்க்கலாம். இவளை இழந்து அவர்கள் தவிப்பார்களே என்று.
வேதா இவனுடனே இருக்க வேண்டும் என்ற சுயநலமும் கலந்து வெளிப்படுகிறது.
யார் என்றே தெரியாதவர்கள் காட்டும் அனுசரணை அருமை.
வேதாவின் நிலை என்னவோ?